/

திரை மறைவில் இருள் : சபரிநாதன்

ஷாபுரா ஹவேலி

திருமணமான புதிதில் தம்பதி சமேதராய் ராஜஸ்தானத்திற்கு சுற்றுலா சென்றிருந்தோம். ஜெய்பூரில் உள்ள உயர்தரவிடுதி ஒன்றில் அறை பதிவுசெய்திருந்தார் மனைவி. அது ஒரு பிரபலமான இடம். அங்குதான் ஜெய்பூர் இலக்கிய விழா வழக்கமாக நடைபெறும். 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஹோட்டல் அடிப்படையில் ஒரு ராஜஸ்தானிய சிற்றரசரின் அரண்மனை. அதை ஒரு தனியார் நிறுவனம் விலைக்கு வாங்கி நட்சத்திர விடுதியாக மாற்றி நடத்திக்கொண்டிருக்கிறது. இது ஓர் உத்தரவாதம் மிக்க உத்தியாகவே இன்று விருந்தோம்பல் துறையில் (ஹாஸ்பிடாலிட்டி) பார்க்கப்படுகிறது. பல பழைய அரண்மனைகளும், காலனிய கால கட்டடங்களும் புணரமைக்கப்பட்டு தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அருங்காட்சியகமாக மாறுவதுதான் இருக்கும் ஒரே மாற்று வழி. அதனோடு ஒப்பிட்டால் இவ்வேற்பாடு எவ்வளவோ லாபகரமானது.

பழம்பொருட்களைப் போலவே பாரம்பர்யத்திற்கும், வரலாற்று மதிப்புடன் சந்தை மதிப்பும் இருக்கிறது. மனிதர்களுக்கு பழமை மேல் ஒரு சடப்பித்து(Fetishness) உள்ளது. ஏனெனில் காலம் கடந்து நீடிப்பதற்கு முன், மற்றனைத்து மனிதக்காரியங்களும் சிறுத்துப்போகின்றன. எனவே காலரேகைக்கு ஒரு பெறுமானம் உள்ளது. இன்னொரு முக்கியமான காரணம் மன்னராட்சியின் மீதும், அதன் அதிகாரப் பெருமிதம் மீதும் நமக்குள்ள ரகசிய மோகம். யோசித்துப் பாருங்கள் நட்சத்திர விடுதிகளில் நடப்பது என்ன. நமது வாகனத்தின் கதவை ஒருவர் திறந்துவிடுகிறார். வாயில் காப்பாளர் குனிந்து வணக்கம் செய்கிறார். நமது பயணச்சுமைகளை யாரவது எடுத்துக்கொள்கின்றனர். ஒரு அழைப்பு போதும் சேவகர் வந்து கவனிக்க,தேவைகளை உடன் பூர்த்தி செய்ய. பட்சண பதார்த்தங்களிலும் குறைவில்லை. பேச்சு வழக்கில் சொல்வதானால் ‘ராஜ மரியாதை’ வழங்கப்படுகிறது. ஒரு நாள், ஓர் இரவு அரச வாழ்விற்குள் புகுந்து வரலாம் எவரும். ஒருகாலத்தில் பிறப்பின் அடிப்படையில் வம்சாவளியாக பாத்தியப்பட்ட ராஜவாழ்க்கை இன்று பணம் படைத்த எவருக்கும் சாத்தியம். 

விடுதியின் மேலாளர் அடையாறில் வசித்துவந்த மலையாளி. காலை ஆகாரத்தின் போது அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். பாலிவுட்டின் பெரும்பாலான படங்களின் கதைகள் அல்லது கதைக்களன் ராஜஸ்தானிய ராஜபுத்திர வாழ்க்கைதான் என்று. ராஜபுத்திர வம்ச வழக்காறுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பாலிவுட்டின் கதைப்பஞ்சம் தெரியும் என்றார். மேலும் இந்திய சுற்றுலா துறையில் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் பிரதான இடம் வகிக்கும் மாநிலம் ராஜஸ்தான் தான் என்றார். ராஜஸ்தானத்து அந்தபுரங்கள் நூலில் ராகுல் சாங்கிருத்யாயன் சொல்கிறார்: கடந்த நூற்றாண்டுகளின் கலாச்சாரத்திற்கும் பண்டைய பழக்க வழக்கங்களுக்கும் ராஜஸ்தானம் ஒரு நல்ல காட்சி சாலையாக விளங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் என்கிற அடைமொழி விளம்பரப்படுத்துவது அதைத்தான். சுற்றுலா ஆர்வலர்களைக் கவர்ந்திழுப்பது ராஜஸ்தானிய வண்ணங்களின் உலகம் என்றால் இந்நூல் அப்பிரதேசத்தின் மறைவிட இருளைக் காட்டுகிறது.

நாவலுக்கான இலக்கணங்கள் உடையதில்லை என்றாலும் உண்மை நிகழ்ச்சிகளைப் பாரபட்சமின்றி எடுத்துக்காட்டும் ஒரு புதுவகை வரலாற்று நாவல் என்கிறார் முன்னுரையில் ஆசிரியர். 1900 இல் இருந்து 1950 வரையான காலகட்டத்தில் வாழ்ந்த கௌரி என்ற ராஜஸ்தானத்து அரச வம்சத்தைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை விவரிப்பதாக அமைந்துள்ள இந்நூலின் ஊடே சிற்றரசு ஒன்று தேய்ந்து முடிவுறும் சித்திரம் தீட்டப்பட்டுள்ளது.

ஸலமிய வம்சத்து ராஜ குடும்பத்தைச் சேர்ந்த கௌரி சிறுவயதிலேயே தந்தையை இழந்த பின் சற்று பரந்த மனப்பான்மையுடைய பெரியப்பாவான ஈஸ்வர் சிங்கின் பராமரிப்பில் வளர்கிறாள். இயல்பிலேயே சூட்டிப்பான நற்பண்பினள் அவள். அம்மா, பாட்டி பெரியப்பா தமக்கை என எல்லோராலும் செல்லாமாக வளர்க்கப்படுகிறாள். பல ராஜ குடும்பத்து பெண் பிள்ளைகளுக்கு சிற்சில சோஸ்திர பாடல்கள் மட்டுமே படிக்கத்தெரிந்த நிலையில் கௌரிக்கு முறையான கல்வியும் சங்கீத படிப்பும் கற்றுத்தரப்படுகிறது. பதினேழு வயதானவுடன் அவளுக்கு கலபா சமஸ்தானத்து யுவராஜனான ஸ்ரீமான்சிங்குடன் விவாகம் செய்விக்கப்படுகிறது. அவன் புத்திசாலித்த்தானமற்ற ஓர் அப்பாவி. அதேநேரம் ராஜபுத்திர ஆண்களுக்கு உரிய கேளிக்கை வெறியும் ஊதாறித்தனமும் கொண்டவன். வருடங்கள் ஆகியும் கௌரிக்கு குழந்தை பிறக்காகததைத் தொடர்ந்து, ஸ்ரீமான்சிங், சுரமா என்ற கெடுபுத்தி கொண்ட வில்லங்கமான முதிர்கன்னியை கல்யாணம் செய்கிறான். ஸாநி சேட் என்ற கயவனது தொடர்பினால் கொஞ்சம் கொஞ்சமாக கௌரிக்கும் அவரது கணவருக்குமான உறவில் விரிசல் விழுகிறது. அவனது நடத்தையும் மனப்போக்கும் நாட்பட மோசமகிட ராஜ்ஜியத்தின் நிர்வாகமும் களஞ்சியமும் அந்திம தசையை அடைகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் எல்லா சுதேசி சமஸ்தானங்களைப் போலவே அந்த குட்டியரசும் சுதந்திர இந்தியாவிற்குள் இணைக்கப்படவுள்ளது. 

இந்நூலைப் படிக்கும் ஒருவர் சந்திக்கும் முதல் ஆச்சர்யம் அந்தப்புரம் பற்றியது. முடிவில் அவர் வந்தடையும் எண்ணம் ராஜபுத்திர அந்தப்புரம் என்பது ஒருவிதமான சிறைக்கூடமாக இருந்திருக்கலாம் என்பதுதான். ராணிகள் உண்மையில் வீட்டுக்கைதிகள் போல வாழ்ந்துள்ளனர். ஒப்பீட்டில் மற்ற பெண்கள், ராணிகளாய் வாழ்ந்தனர் போல. அதுவும் உயர்குடி சாராத பெண்கள் இன்னும் சுதந்திரமாக வாழ்ந்திருக்கக்கூடும். அம்பாரமாய் ஆபரணங்கள் இருந்தாலும் அவற்றை அணிந்துகொண்டு நகர்வலமா போகமுடியும்? பல அடுக்கிலான படுதாக்கள், முக்காடு, திரைகள், மூடுதிரைகள், கதவு, காவல் என அந்தபுரவாசிகள் ஓர் அழுகும் ரகசியம் போல வாழ்ந்து முடிந்துள்ளனர். அந்தபுரத்தில் பெரும்பாலானோர் காசநோயாளிகளாகவும், சயரோகிகளாகவும், இருந்துள்ளனர் என்பதை வாசிக்கும்போது நம் கண் முன்னே எழுந்துநிற்பது அரண்மனை என்ற காற்றோட்டமும் வெளிச்சமுமற்ற குகைமூலைகளே.

திக்கி மாளிகை, ஜெய்பூர்.

கலைகளும் நுண்ணறிவும் கணிகையருக்கு மட்டும் கற்றுத்தரப்பட்டுள்ளது. அந்தபுரத்தில் இதற்கென்றே கலைச்செல்விகள் என்றொரு வகைமாதிரியினர் வாழ்ந்ததாக இந்நூலில் குறிப்பிடப்படுகிறது. வேசிகளுக்கு இருக்கும் மதிப்பு கூட நமக்கு இல்லையே என்று கௌரி ஓரிடத்தில் வருந்துகிறாள். குறைந்தது அவர்களுக்கு வாழ்வதற்கும் சுகிப்பதற்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ராணியருக்கு அதுவும் இல்லை. அழகு, சுகம், நேசம் இவையெல்லாம் கணிகையரிடமே பெறமுடிபவை எனில் மனைவி என்பவள்தான் யார்? குருதித்தூய்மையினைப் பேணி, சொத்துரிமையைத் தக்கவைக்கும் பொருட்டு வாரிசுகளைப் பெற்றுத்தர வேண்டியவள் தானோ. அதிலும் கௌரி போல பல ராணிகளுக்கு குழந்தைப்பேறு இருப்பதில்லை. இந்நூலில் ஓரிடத்தில், மலட்டுத்தன்மைக்கு கூட அந்தபுரங்களின் மூடுண்ட வெளிகளிலேயே அடைந்துகிடப்பது காரணமாய் இருக்கலாம் என்று சொல்லப்படுக்கிறது. ராஜகுடும்பத்து பெண்களுக்கு சமையலும் தெரியாதாம். அப்புறம் செய்வதற்கு என்ன இருக்கிறது? மாமியார் கணவன், சக்களத்திகள், வேலைக்காரிகள் என இவர்களால் இயக்கம் பெறும் வீட்டதிகாரத்தின் நகர்வுகளில் சிக்கித்தவிப்பது ஒன்றே எஞ்சியிருக்கும் வேலை. சுகபோகமும் செயலின்மையும் அரச குடும்பங்களில் அதிகமாகக் நேர்படும் துர்நிகழ்வுகளுக்குக் கூட ஒரு காரணியாய் இருக்கலாம். சொத்தும் சுகமும் ஈணும் நோய்கள். 

மாமி கொலு என்றொரு அத்யாயம் உள்ளது. சாதாரண மாமியாரையே தாங்கமுடியாது அதிலும் பட்டத்து ராணி என்றால் கேட்க வேண்டுமா? மாமியார் என்பது ஒரு பதவி. அடிபட்டு மிதிபட்டு பாடுபட்டு பணிஉயர்வுகள் பெற்று அடையக்கிடைத்த இடம். அந்த பதவி எந்த பெண்ணையும் கரைபடியச்செய்துவிடும் போல. ராஜபுதானத்து குடும்பங்களில் பெரிய ராணிக்கு அளிக்க வேண்டிய கௌரவத்திற்கும் அதன் சடங்கசைவுகளுக்கும் முடிவே இல்லை. அப்படி கஷ்டப்படும் மாட்டுப்பெண் நாளை மாமியாரானால் அதையேதான் செய்வாள். இது பாலினம் சம்பந்தப்பட்டதன்று, சரிதவறு பற்றியதுமன்று. இது அதிகாரம் தொடர்பானது. அதை இழக்க யாரும் விரும்பமாட்டார்கள். அதேபோல மனைவி என்பதும் ஒரு பதவியே. கணவன் தன்னை நேசிக்கிறானோ இச்சிக்கிறானோ பேசுகிறானோ அதுவொரு விஷயமில்லை.

கனவரான மான்சிங் இறந்த தருவாயில் கௌரி ’என்ன சுகத்தைக் கண்டேன், எதற்காக நான் அழவேண்டும்’ என்று வெளிப்படையாகவே தனக்குள் கேட்டுக்கொள்கிறாள். கைம்மை நோன்பு அங்கும் மிகக்கடுமையானது. சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் கொலையுண்டு கிடக்க, கதறியழும் கண்ணகி தன் கனவனைக் குறித்தோ தம் காதல் வாழ்வைக் குறித்தோ புலம்பவில்லை. மாறாக கடுமையான கைம்மை நோன்பிருக்க வேண்டுமே என்றுதான் அழுகிறாள். கௌரி ஒருபடி மேலே போய் அந்தப்புரச் சிறைக்கூடத்தை விட சதியேறுவது மேல் என்கிறாள். மீராபாய் போன்ற ராஜபுதானியப் பெண் அரண்மனை வாழ்வை விட்டு வெளியேறுவதை இந்தப் பின்னணியிலும் நாம் புரிந்துகொள்ளலாம். இவ்வளவு பழமையான விமரிசையான பழஞ்சடங்குகளும் வண்ணமிக்க ஆழ்ந்த நம்பிக்கைகளும் கௌரியின் திருமணத்தைக் காப்பாற்றவில்லை என்ற அறிதலுடன் பின்னோக்கிக் காண்கையில் அத்தனை ராஜரீக சடங்காசாரங்கள் படாடோபம் எல்லாம் அபத்தமாகத் தெரிகின்றன.

இப்போது நடக்கும் பெரும்பாலான பணக்கார இந்திய திருமணங்கள் அல்லது அழைப்புநிகழ்ச்சிகள் ராஜபுத்திர பாரம்பர்ய பாணியில்தான் நடைபெறுகின்றன. குறைந்தபட்சம் உடை மற்றும் அலங்காரமாவது அந்த பாணியைப் பின்பற்றி செய்யப்படுகிறது. விரிவான சடங்குகள், ஆடல் பாடல்கள், மதுவும் கேளிக்கைகளும் என சில மாதங்களுக்கு இத்தகைய ராஜமணங்கள் நிகழ்ந்தேறி இருக்கும் எனத்தெரிகிறது இந்நூலைப் படிக்கிறபோது. விவாக காரியங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சம்பிரதாய கீதங்கள் உண்டு. மாப்பிள்ளை அழைப்பு, மறுவீடு, கறிவிருந்து, வழியனுப்பல், என வழி முழுக்க ஆடலும் பாடலும்தான். இப்போதெல்லாம் சாதாரண கல்யாண பத்திரிக்கைகளில் கூட பின்புறத்தில் இத்தகைய ராஜதானத்து திருமண அணிவரிசை  கார்டூன் ஓவியமாக அச்சடிக்கப்படுவதைப் பார்க்கலாம். மதுவும் மாமிசமும் மங்கல வஸ்துகளாக கருதப்பட்டுள்ளன அங்கே. பெண்கள் குடிப்பது சகஜம் என்பது மட்டுமன்று வருகிறவர் போகிறவர் கோரி குடிப்பதற்கு மதுத்தொட்டிகள் கூட இருந்துள்ளன வீடுகளில். பெருங்குடி மன்னர்களுக்குப் பெயர்போனது ராஜஸ்தானம்தான் என்கிறார் நூலாசிரியர்.

கலைச்செல்விகளுக்கும் பர்தா கட்டுப்பாடுகள் இருந்துள்ளன. ஆசிரியார்கள் ஒருபுறம் மாணவியர் ஒருபுறம் என பர்தா மறைவிலேயே கலைப்பயிற்சிகள் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளன. கௌரிக்கும் திரைமறைவில்தான் இசைப்பயிற்சி அளிக்கப்பட்டது. புஷ்கரின் பெண்கள் படித்துறையில், முதலை காலை கவ்வும் போது காப்பாற்றக் கூட ஆண்கள் வரமுடியாத நிலை, வயிற்றில் ஆண்மகவு இருக்கக்கூடும் என்ற காரணத்தால் அந்தப்புரத்திற்குள் கர்ப்பிணிகளை உள்ளே விட மறுப்பது என அந்தப்புரப்பெண்கள் எல்லாம் ஆண்கள் வாசமே அண்டாது வாழ்ந்தனரோ என்ற எண்ணம் வருகிறது.

ஆங்கிலக்கல்வி கற்றதால் இறந்துபோன ரூட்சிங், பேயாய் வேலை செய்யும் ரூப்விலாஸ், கணவனுடன் சண்டையிட்டதால் பிடிவாதமாய் வாழ்நாள் முழுக்க பிரிந்துவாழ்ந்து இறுதியில் அவர் இறந்ததும் உடன்கட்டை ஏறிய  ஸலமியா ராஜகுமாரி போன்ற சுவாரஸ்யமான பாத்திரங்கள் இப்பனுவலை ரசிக்கும்படியானதாக்குகிறது. வந்தினிக்கும் கௌரிக்குமான போட்டி, கிழட்டுராணியின் யானைச்சவாரி ஆசை போன்ற நினைவுக்குறிப்புகள் அழகிய சிறுகதைகள் போல உள்ளன. கூடவே உபகதைகளாகச் சொல்லப்படும் நிறைய நாட்டார்கதைகள் ருசிகரமானவை. வானம் உயரே போனது பற்றி பல  வழக்காற்றுக் கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். தீட்டுப்பட்டதாலேயே வானம் தள்ளிப்போய்விட்டது என்ற கற்பனை இம்மண்ணிற்கும் மட்டுமே உரித்தானதாக இருக்கும்.

முற்காலத்திய கடிமணங்களின் எச்சமாக நிகழ்த்தப்படும் கோட்டையைக் கைப்பற்றுவது, கணவன் வாளால் தட்டுகளைப் பிரித்துச் செல்வதும் மனைவி அவற்றைச் சேர்த்து வைப்பது போன்ற சடங்குகளும், அந்தக்காலத்தில் ஹோலி பண்டிகை ஆபாசமாகக் கொண்டாடப்பட்டது, டாகுர்களும் மதக்குருக்களும் காந்தியை வெறுப்பது போன்ற எதார்த்த உண்மைகளும் விரவிக்கிடப்பதால் இப்பிரதி ஒரு கலாச்சாரத்தின் ஒரு காலகட்டச் சமூகத்தின் ஸ்னாப்ஷாட் ஆகிவிடுகிறது.

ராகுல் சாங்கிருத்யாயன்

ராஜபுத்திரக் குடும்பங்களின் வீரதீரக்கதைகள் பெரிதாக இடம்பெறவில்லை, அவர்களைப் பற்றிய கட்டுக்கதைகள் கூட கேலி தோனிக்கவே சொல்லப்படுகிறது. ஓர் ஆசிரியராக அந்த இனக்குழுவிற்கு வெளியில் நின்றபடி விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே ஆசிரியர் எடுத்துரைக்கிறார். அது அப்போது எழுந்துவந்த ஜனநாயக மாண்பில் ஊறிய முற்போக்கு கண்ணோட்டம். எனவே விவேகமின்மையாலும் அமித போகத்தினாலும் மூழ்கி மடியும் ஒரு குட்டி ஜமீனின் கடைக்கால வாழ்க்கையே இந்நாவலில் காணக்கிடைக்கிறது. கூடவே சேட்டுகள் எனப்படும் மார்வாடிகளின் எழுச்சியும். அதாவது அப்போது உருவாகிக் கொண்டிருந்த முதலாளித்துவ சமூகத்தைக் கைப்பற்றத்தக்க வணிக வானிப இனங்கள் அன்றைய ராஜபரம்பைகளை முந்திச்செல்வதும் பதிவாகியுள்ளது. இன்னோரிடத்தில் ஒட்டகம் மேய்ப்பவர் விருத்தியடைந்து டாகூர் பட்டம் போட்டுக்கொள்ளும் உதாரணமும் சுட்டப்பெறுகிறது. 

சதியேறும் வழக்கம் அக்காலத்திய ராஜபுதானத்து குடும்பங்களில் ஒருவகை பெருமிதமாகக் கருதப்பட்டுள்ளது. இந்நூலில் வருகிற சதிப்பெண்களின் மருதாணிக்கைத்தடங்களை, சில ராஜஸ்தானிய பெருங்கோட்டைகளில் இன்றும் காணமுடியும். கௌரியின் திருமணத்திற்கு முதல்நாள் இரவுச்சடங்கில் இதே போல செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்தெடுத்த அவள் உள்ளங்கை சுவற்றில் பதியப்படுகிறது. அப்படியென்றால் உடன்கட்டை ஏறுவதிலும் மணமேடை ஏறுவதிலும் ஒப்புமை புனையப்பட்டுள்ளது எனப் புரிந்துகொள்ளலாம். வாசித்துமுடிக்கையில் இந்நூலும் அத்தகைய ஒரு சதிக்கைத்தடம்  எனவே தோன்றுகிறது. 

ராகுல்ஜியின் நூல்களுக்கே உரிய நிறைய பண்பாட்டு நுண் தகவல்கள் இந்நாவலிலும் இடம்பெற்றுள்ளன. கால ஓட்டத்தில் மறைந்திருக்கக் கூடிய அவை இங்கு ஆவணப்படுத்தலாக பதியப்பட்டிருக்கலாம். ஆனால் பண்பாட்டார்வம் உடைய வாசகர்களுக்கு அவை மிகுந்த ருசிகரத்தை அளிக்கக்கூடியவை. நாவலுக்கான பாத்திரவார்ப்பு எல்லாம் இல்லை. ஒரு கதையை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் வரலாற்று நாவலுக்கான நாயகத்தனமோ சுவாரஸ்யமோ உடையதல்ல கதை. எனவே வரலாற்று சித்திரம் என்ற அளவிலேயே வாசிக்கமுடிகிறது. 

ராஜஸ்தானத்து பேரரசர்களைப் போலவே குறுநில மன்னர்களும், டாகுர்களும், ஜாகிர்தார்களும் கேளிக்கை வாழ்வில் மனம்போனபடி திளைப்பவர்கள். ராஜபுத்திர குடும்பங்கள் அதிலும் குறிப்பாக அவற்றின் கீர்த்திமிக்க பெண்மணிகளைப் பற்றிய பரவலான பொதுப்பிம்பத்திற்கு மாறான சித்திரம் இதில் உள்ளது. இனச்செருக்கு, வீரம், மானம், நெஞ்சுறுதி போன்ற குணங்கள் இப்பொதுபிம்பத்தின் கூறுகளாகும். நாவலின் இன்னொரு இடத்தில் இப்படியொரு வரியும் வருகிறது: இவர்கள் ஆட்சிக்காலத்தில் எந்த அழகிய பெண்ணும் கற்போடு வாழமுடியாது. இதை பொதுமைப்படுத்தலாகச் சொல்லவில்லை. ஒருவேளை இது தனிப்பட்ட ஒரு ராஜபுதானத்து சிற்றரச சூழலைக் குறிப்பதாகவும் இருக்கலாம். அப்படிப்பார்த்தால் ஜனரஞ்சக கலைவடிவங்களால் தோற்றவிக்கப்பட்ட பிம்பங்களும் பொதுமைப்படுத்தல்தான். அவரவர்க்கு வேண்டிய மொழிபை அவரவர் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்க்கு கதை சொல்கிறோமா அல்லது  நமக்கு நாமே கதைவிடுகிறோமா என்பதுதான் வித்தியாசம். கதை சொல்வதற்கும் கதை விடுவதற்கும் கதை போடுவதற்கும் இடையில் மெல்லிய வேறுபாடுகளே உள்ளன. அவர்கள் அவர்களைப் பற்றிச் சொல்லும் கதை, இவர்கள் அவர்களைப் பற்றி சொல்லும் கதை, இந்தியா பாகிஸ்தானைப் பற்றிச் சொல்லும் கதை, பாகிஸ்தான் இந்தியாவைப் பற்றிச்சொல்லும் கதை, இவர்களைப் பற்றி மேலைத்தேயர்கள் சொல்லும் கதை, அதைக் கட்டுடைத்து கீழைத்தேயர்கள் சொல்லும் கதை. சிந்தித்தால் எதார்த்தம் என்பது ஒன்றில்லை; அது நாம் நம்ப விரும்புவதைக் காட்டிலும் அகவயமானது. சார்புடையதது. எதார்த்தம் என்பது ஒன்றாக இல்லாவிடில், வரலாறு மட்டும் எப்படி ஒன்றாக இருக்கும். அதனாலேயே அறிவுத்துறைகளிலும் கலையிலும் சமநிலையும் புறவயநோக்கும் மெச்சத்தக்கதாகின்றன. 

மனிதர்களின் வாழ்க்கை கதைகளாக எஞ்சுகிறது. திரிக்கப்பட்டோ, சிதைக்கப்பட்டோ எஞ்சுபவை கதை தான். தலைமுறைகள் கடந்தகாலத்தை தங்களுக்கு சுவாரஸ்யம் மிக்கதான கதையாக மாற்றிக்கொள்கின்றனர். உண்மையில் நடந்தது என்ன என்பதும், அந்த மனிதர் நிஜத்தில் எப்படிப்பட்டவர் என்பதும் இறுதிவரை புதிர்தான். கீழைச்சமூகங்கள், ஒருவகையில் அது அவசியமில்லை என்றுகூட நினைப்பதாகக் கருதுகிறேன். அவற்றுக்குத்தேவை ஒரு நல்ல கதை. எனவே வாழ்வில் இருந்து வடிவான பகுதியை கத்தரித்து எடுத்து, வேலைப்பாடுகள் செய்து கதையென வைத்துக்கொள்கின்றனர். ஏசுவோ காந்தியோ யார் என்ன என்று எவர் அறிவார். காலக்கிரமத்தில் மனிதர் தங்களுக்கு வேண்டிய பதுமைகளைச் செய்துகொள்கின்றனர். வாழ்க்கை மறைந்துவிடுகிறது கதை எஞ்சுகிறது. இப்படியாகத்தான் கலை வாழ்க்கையை விட மேலானதாகி விடுகிறது. ஏனெனில் உள்ளூற வாழ்வு கலையாக விரும்புகிறது.

சபரிநாதன்

சபரிநாதன். கவிதைகள், விமர்சனத் திறனாய்வு ஆகிய துறைகளில் தீவிரமாக ஈடுபடுகிறவர். "களம் காலம் ஆட்டம்", "வால்" என்று இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். விகடன் விருது, விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது, யுவபுரஸ்கார் விருது ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.