/

சுதந்திர நேரம் : சபரிநாதன்

ஓவியம் : வான்கா

அலுவலக ஆய்விற்கு வந்த உயர் அதிகாரி என்னைக் குறிப்பிட்டுப்பார்த்து, ‘செய்யும் தொழிலே தெய்வம், என்ன புரியுதா?’ என்றார். எனக்கு அப்போதுதான் புரிந்தது எமக்குத் தொழில் கவிதை என்ற வரி எது மாதிரியான சந்தர்ப்பங்களை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் என்று. நான் ஊழியர்களுக்கே உரித்தான பாவனையில் தலையாட்டி வைத்தேன். அவர் முகத்தில் மறைஞானம் போதித்துவிட்ட திருப்தி. முன்பொருமுறை இன்னொரு பெரிய அதிகாரி என்னிடம் கேட்டிருந்தார் ‘இந்த வேலைதானே உனக்குக் கஞ்சி ஊத்துது’ என்று. அவர் சொல்ல வந்ததும் அதேதான். அதாவது, எது நமக்குக் கஞ்சி ஊற்றுகிறதோ, அதுவே தெய்வம். ஆனால் எழுதுவதோ வாசிப்பதோ எப்போதும் வேலை போன்ற உணர்வை உண்டாக்குவதில்லை. வேலை போன்று எண்ணச்செய்யும் எதுவும் தெய்வம் இல்லை. அப்படியென்றால் தொழில் வேறு வேலை வேறு என்று பிரித்துக்கொள்ளலாம் இல்லையா. தெய்வம் என ஒன்றிருந்தால் அது வேலை என்ற மனநிலைக்கு எதிரானதாகத்தான் இருக்கும்.    

ஜெர்மன் சித்தாந்தம் நூலில், கம்யூனிஸ சமூகத்தில் ஒருவர் காலையில் மீன்பிடித்துவிட்டு மாலையில் ஆடு மேய்த்துவிட்டு இரவுணவிற்கு பிறகு  விமர்சனம் செய்பவராக வாழ வாய்ப்பிருக்கும் என்றார் மார்க்ஸ். சென்ற நூற்றாண்டின் முக்கிய முதலாளித்துவப் பொருளியலாளர்களில் ஒருவரான மேனார்ட் கேயின்ஸ், இன்னும் நூறு வருடங்களில் மனிதர்கள் வாரத்திற்கு பதினைந்து மணிநேரம் அல்லது தினசரி மூன்று மணி நேரம் உழைத்தால் போதும் என்ற நிலை வரும் என ஊகித்தார். துரதிர்ஷ்டவசமாக இரு தரப்புக் கணிப்புகளுமே பொய்யாயின. அல்லது இன்னும் பலிக்கவில்லை என்று நப்பாசைக்கு இப்போதைக்கு சொல்லிவைப்போம்.

தத்துவவியலாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலால் எழுதப்பட்ட ‘In praise of Idleness’ என்ற புகழ்பெற்ற கட்டுரையில் இப்பிரச்சனை முழுமையான பார்வையில் விவரிக்கப்படுகிறது : உற்பத்தியின் நவீன கால வடிவங்கள், நமக்கு ஆசுவாசமாய் இருப்பதற்கான வாய்ப்பையும் எல்லோருக்குமான பாதுகாப்பையும் வழங்கியுள்ளன. மாறாக நாம் மிகையுழைப்பைச் செலுத்தவும் மற்ற பலரை பட்டினி போடவுமே விரும்புகிறோம் என்று அவர் சொல்லியும் நூறாண்டாகப் போகிறது.

எதர்த்த நிலைமையோ தலைகீழானது. வரலாற்றில் முன்னெப்போதும் உடல்  அளவிலும் மனதளவிலும் மனிதர்கள் இத்தனை களைத்துச் சோர்ந்திருந்தார்களா என்பது சந்தேகம். மேலை நாடுகளில் மட்டுமின்றி ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளிலும் கூட மிகை உழைப்பு என்பது  ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதைக் காண்கிறோம். இந்தியா போன்ற நாடுகளின்  நிலைமை வேறு. இங்கு பெரும்பகுதியான உழைப்புச் சந்தை முறைசாரா தொழிலாளர்களை உள்ளடக்கியது. தவிர வேலையின்மை, குறைந்தபட்ச ஊதியம் போன்ற பிரதான பிரச்சனைகளே இன்னும் தீராத பாட்டில் நாம் வேலைக்கலாச்சாரத்தில் உள்ள இது போன்ற சிக்கல்களை பெரிதாகக் கருதுவதில்லை. ஆனால் தொன்னூறுகளுக்குப் பிறகு உருவான தனியார்துறை வளர்ச்சியினால் வேலைச்சந்தைக்குள் நுழைந்த தலைமுறை இதை ஒரு பிரச்சனையாக உணர்கிறது என்பது நிதர்சனம். ஆச்சர்யம் என்னவென்றால் இதுவோர் நல்ல விஷயம்.  

ஒரு நவீன மனிதனின் வேலை வெறுப்பு என்பது அவனது உணர்திறனின் ஆரோக்கியத்தின் அறிகுறி என்பேன். அத்தகையவர்தான் தான் ஒரு பூரண மனிதனாக இல்லை என்ற போதாமையை அறியக்கூடிய இடத்தில் இருக்கிறார். தான் ஏன் இப்படி உணர்கிறோம்?, இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளை எழுப்புபவராக உள்ளார். ஏனெனில் சமகால வேலைச்சந்தையில் பெரும்பான்மையான வேலைகள் உள்ளீடற்றவை, கூலியுழைப்பை நகலெடுப்பவை. அது வண்ணமயமான வருவாயை அளிக்கும் காரணத்தாலேயே அதில் மூழ்கி வணங்கி வேலை செய்யும் ஒருவரை நவீன அடிமையுணர்வை உடையவர் என்றே கருதமுடியும். இப்படிச் சொல்வது காட்டமானதாகத் தோன்றலாம். ஆனாலும் இக்கூற்றில் ஓரளவு உண்மை இருக்கத்தானே செய்கிறது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

இவ்விடத்தில் நாம் எல்லாப் பணிகளையுமே அப்படி வரையறுப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். பணியாளர்களின் சுயவெளிப்பாட்டை அனுமதிக்கும், அத்தகைய திறன்களைக் கோரும் பணிகள் இருக்கவே செய்கின்றன. அத்தகைய துறைகளில் பெருவிருப்பத்துடன் உற்சாகமாய் பணியாற்றும் இளைஞர்கள் நம்மிடையே ஏராளம் உண்டு. ஆனால் அது ஒரு பொதுப்போக்கு என்று கூறவியலாது. அது, சரியான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான திட்டமிடல், அதற்கான சாத்தியங்களை நல்கும் சமூக குடும்ப பின்புலம், கொஞ்சம் அதிர்ஷ்டம் நிறைய போன ஜென்ம புண்ணியம் போன்ற பல்வேறு காரணிகளால் சிலருக்கு வாய்ப்பது. மற்றபடி அது பொதுநிலைமை அன்று என்பதை நாம் நன்கறிவோம்.

காஃப்காவின் விசாரணை நாவலின் தொடக்கத்தில், உறக்கத்தில் இருந்து எழுந்து கட்டிலில் அமர்ந்தபடி சாப்பாட்டுக்காகக் காத்திருக்கும் கே யின் காதில் விழும் கதவு தட்டும் ஓசை நினைவிருக்கிறதா? அது நமது அலுவலகத்தின் அழைப்பேதான்.

புலமையும் வறுமையும்

இத்தகைய தற்கால நிலைமை  யாருக்கு வருத்தம் அளிக்கிறதோ இல்லையோ கலைஞர்களுக்கு கவிஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். இது ஒரு பொதுமைப்படுத்தலாக இருக்கலாம். இருந்தாலும் யோசித்துப் பார்ப்போம். வேலையில் உழைப்பு என்கிற லட்சியத்திற்கும் கலைஞர்களுக்கும் எப்போதும் ஒத்துப்போனதில்லை. அதை ஒரு நுகத்தடியாகவோ அல்லது வாழ்வை வீணாக்கும் வழிமுறைகளில் ஒன்றாகவோ தான் அவர்கள் கருதியுள்ளனர். அதேபோல கலை இலக்கியம்  என்பது சமூகப்பொருளியளியலில் விலைபோகாத பண்டமாகவே பெரும்பாலும் விளங்கிவந்துள்ளது. அதற்கென்று சந்தை மதிப்பு இருந்ததில்லை. பணியாகக் கருதப்படாத பணி. பண்டமாகக் கணக்கெடுக்கப்படாத ஒன்றின் உற்பத்தி. வெகுஜன கலைவடிவங்களையும் அரசவை புலவர்களையும் கழித்துவிட்டால் எப்போதும் ஏறத்தாழ இதுதான் நிலைமை.

இலக்கியம் நேரடி உபயோகமற்ற ஒன்றாகவே  இருந்தாலும் கூட, அது எல்லா சமூகங்களிலும் ஏதோவொரு வகையில் நீடித்து நிலைத்திருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம். பெருமைக்குரியவையாக கருதப்பட்டனவல்ல என்றாலும் அதையும் ஒரு தொழிலாகவே சமூகங்கள் கருதி வந்துள்ளன. உரிய பரிசிலும் மரியாதையும் இல்லையெனினும் இத்தைகய ஜீவிதங்களைச் சமூகங்கள் சகிப்புத்தன்மையுடன் அனுமதித்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. அதேபோல அத்தகைய தொழில்களில் தீராவேட்கையுடன் ஈடுபடும் அப்படிப்பட்ட ஜீவன்கள் சிலவும் எப்போதும் திரிந்துள்ளன.

படைப்பாளிகள் தமது பணியை மேற்கொள்வதற்கு, அதிகார அமைப்புகளின் அல்லது புரவலர்களின் அரவணைப்பு வளையத்திற்குள் அண்டி வாழ்ந்துள்ளதை வரலாறு முழுக்கக் காணலாம். சங்க இலக்கியத்தில், தமக்கு ஆதரவளிக்கும் அரசர்களின் புகழ்பாடும் படைப்புகள் கணிசம். புரவலர் இல்லாத புலவர் என்று ஒருவர் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. அப்படி நிலையான புரவலர் இல்லாத புலவர்கள் நாடு நாடாய் நடந்து திரிந்ததையும் காணமுடிகிறது. ஆற்றுப்படை என்ற இலக்கிய வகைமையின் பாத்திரங்களே அத்தகைய அநாதைப் புலவர்களும் இளகிய மனங்கொண்ட வள்ளல்களும் தாம். இந்த புலவர்-புரவலர் உறவானது தமிழில் மட்டுமல்ல உலகமெங்கும் கலை இலக்கியத் தொடர்ச்சிக்கு இன்றியமையாத பங்காற்றியுள்ளது.

ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலத்திய கலையெழுச்சியானது மெடிச்சி என்ற செல்வந்தக் குடும்பம் இன்றி சாத்தியப்பட்டிருக்காது என்கின்றனர். எனவே படைப்புத் தொழிலானது வாழ்வாதாரத்தைத் தக்கவைப்பதற்கான வருவாயைக் கூட திரட்ட இயலாததாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது. சல்லிப்பைசா கையில் இல்லாமல் வெளிநாட்டில் சிக்கிக்கொண்டு தவித்த தாஸ்தயேவஸ்கி, அவசர கால நிதியுதவிக்காக பதிப்பாளரிடம் வேண்டிக்கொண்டு, நெருக்கடி நிலையில் எழுதிய நிரந்தரக் கனவன் கதையின் பிரதியை அனுப்புவதற்கான தபால்செலவிற்கு வழியில்லாது நின்றது சமீபத்திய ஒர் உதாரணம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாபெரும் தமிழ்க்கவிஞராக அறியப்பட்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக இருந்தும் கூட, வீட்டு மளிகைத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலையில்தான் இருந்தார் என்பதையும் உவேசா வழி அறியமுடிகிறது.

கிட்டத்தட்ட பொற்காலம் என்று நம்மவரால் நம்பப்படும் சங்ககாலத்திலும் புலவர்கள் கிழிந்த கந்தல் துணியுடன் சென்று, தன் குடும்பம் பசியால் துன்புற்று அழியாமல் இருக்க உதவுமாறு கோரியுள்ளனர். சங்கப்பாடல்களில் காணும் கொடும் வறுமையின் சித்திரங்களில் பெரும்பாலானவை புலவனுடையது பாணனுடையது என்பது எத்தனை வெட்ககரமானது. அத்தகைய எழுத்தாளர்களின் படைப்புகள் வழி வார்த்தெடுக்கப்பட்டதுதானே  தமிழ் நாகரிகத்தின் வரலாறும் அடையாளமும். பால் வற்றி வதங்கிய மார்பகங்களைச் சுட்டிக்காட்டாத பரிசிலுக்குக் காத்திருக்கும் கவிஞர் பழங்காலத்தில் காணக்கிடைக்கவில்லை. புகழ்ந்து புகழ்ந்து பாடியும் பரிசு தராது காத்திருக்கச் செய்த மன்னனை பழியாது வாழ்த்திவிட்டுச் சென்ற பாணர்கள் நடந்த மண் இது. புறநாணூற்றில் காணக்கிடைப்பது தமிழர்தம் வீரமும் வெற்றியும் மட்டுமல்ல கலைஞர்களின் வீட்டு வறுமையும் அவர்தம் தொல்பசியும் கூடத்தான்.

அத்தகைய வறுமைக் கோரிக்கைகளில் தோன்றியவையே பாதி பாடாண் திணைப் பாடல்கள். அவற்றில் இருந்து ஒருவர் இச்சமூகத்தின் அதீத நாயக வழிபாட்டின் நீட்சியைச் சிந்தித்து பார்க்கலாம். புலவர்களின் உலகியல் வறுமையே மன்னர்களின் வானளாவிய புகழுரைகளாக பிறப்பெடுத்திருக்கிறது. சிற்றிலக்கியங்களில் கணிசமானவை சிற்றரசர்களைத் திருப்தி செய்யும் நோக்கில் எழுதப்பட்டவை. இத்தகைய சூழ்நிலையில் கவிஞர்களுக்கு முழுமையான படைப்புச்சுதந்திரம் இருந்திருக்காதுதான். புரவலர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற எச்சரிக்கை எப்போதும் அவர்கள் மனக்கண் முன் ஆடியிருக்கும்தான். இந்நிலைமை இங்கு மட்டுமல்ல. இலக்கிய பாரம்பர்யம் உடைய எல்லா மொழிகளிலும் இதுதான் நிலைமை. கவிஞன் கலைஞன் என்ற ஆகிருதி மத்திய காலங்களில் இருந்துள்ளதா என்பதே சந்தேகம் என்று நினைக்கிறேன்.

மேற்குலகில், மறுமலர்ச்சி கால மானுடவாதத்துடன் திரண்டெழுந்த தனிநபர்வாதத்தின் விளைச்சல்தான் கலைஞன் என்கிற ஆகிருதி. அதற்கு முன்பு ஓவியர்கள் கலைஞர்கள் ஆகிய அனைவரும் கைவினைஞர்களாகவே கருதப்பட்டுவந்துள்ளனர். தனிநபர்வாதத்துடன் தோன்றிய திறமை, மேதமை பற்றிய கருத்துக்கள் வழியாகவே டாவின்சி போன்றோர் மேலைக்கலையின் நாயகர்களாக உருவாகின்றனர்(கோவில் கட்டடக்கலையின் பெரும் களஞ்சியமாகத் திகழும் நம் நாட்டிலும் பெயர் குறிக்கப்பட்ட சிற்பிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் பணிக்குழுவாகவே அடையாளப்படுத்தப்பட்டனர். அங்கீகரிக்கப்பட்டனர்). அக்காலத்திற்குப் பின்னரே தனிப்பட்ட கவிஞர்கள் நாடகாசிரியர்கள் தமது திறமையின் தனித்துவத்தால் பெயர் எடுத்து பேசுபொருளாகின்றனர்.

இங்கே நமது மறுமலர்ச்சியானது காலனியகாலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. அவ்விதத்தில்  அறிமுகமான ஜனநாயகத்தின் வருகையோடு, முன்னர் இங்கிருந்த ஆதரவு அமைப்புகள் இல்லாது போக, கவிஞர்கள் மெல்ல மெல்ல ஆசிரியர், பத்திரிக்கையாளர் போன்ற துறைப்பணிகளில் சென்று சேர்கின்றனர். வறுமை, மற்றவரை அண்டி வாழ்வது போன்ற எத்தனை இருந்தாலும் முன்பு  முழுநேரமாய் தான் விரும்பிய எழுத்துப்பணியில் மட்டும் ஈடுபட்டு வாழ்ந்தவர்கள் இப்போது ஏனையோரைப் போல எதாவதொரு வேலையில் போய் அடைய வேண்டி வந்தது. அவ்வகையில் முழுமையான படைப்புச்சுதந்திரத்தை அடைவதுடன் அதற்கான விலையையும் செலுத்த வேண்டியவர்களாயினர். காலையில் சீசருக்கு வரிசெலுத்திவிட்டு மீந்த நேரத்தில் இலக்கியப்பணி என்பது வழமையாகிறது. அதற்குப் பிறகு எழுத்து என்பது தொழில் என்கிற அந்தஸ்தில் இருந்து இறங்கி, பொழுதுபோக்குக்கான பொழுதைப் போக்குவதற்கான காரியமாக மாறிவிடுகிறது. வாசிப்பது எழுதுவது எல்லாம் ஹாபி என்றுதானே பொதுத்தளத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. என்ன, பிறகு எழுத்தாளன் என்ற அடையாளம் இழக்கப்பட்டு அது மஃப்டியில் மேற்கொள்ளப்படும் ஒரு ரகசிய உளவுப்பணியாகி விடுகிறது. தன் வீட்டாருக்கே தெரியாத வெற்றிகரமான ஒற்றர்கள் நம்மில் உண்டுதானே.

முக்கியமான காரணம், இலக்கியத்திற்கு பயன்மதிப்பு என்று ஒன்று இல்லை என்ற நம்பிக்கை சமூகத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. இது ஓரளவு உண்மையும் கூட. இப்போது மட்டுமல்ல எப்போதுமே இது இப்படித்தான் இருந்து வந்தது என்பதை முந்தய சான்றுகளில் இருந்து நாம் அறியலாம். எனவேதான் துறவியைப் போலவே கலைஞனும் சமூகவாழ்வில் ஒரு விந்தையான பாத்திரத்தை ஏற்றிருக்கிறான் என்று நினைக்கிறேன். அவர்கள் ஒரு காலை சமூக வட்டத்திற்கு உள்ளும் மற்றொரு காலை அதற்கு வெளியிலும் ஊன்றி நிற்கிறார்கள். ஒரேநேரம் மக்கள்திரளை முன்நகர்த்துபவர்களாகவும் புறநடையாளர்களாகவும் திகழ்கிறார்கள். இது ஒரு ஆச்சர்யமூட்டும் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்கிறது. ஆகவே அது ஒரு வரம் மற்றும் சாபம்.

அவர்கள் சமூகத்திற்கோ அதன் பொருளியல் மேம்பாட்டிற்கோ நேரடியான பங்களிப்பை செலுத்தவில்லை எனினும் அச்சமூகத்திற்கு ஒரு நிலைத்த மதிப்பை உண்டாக்கித் தருகின்றனர். பாரதி அவர் காலத்தில் அயலாரால் ஊராரால் கோட்டி என்றும் வீணர் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் காலவோட்டத்தில் அச்சமூகத்தின் கலாச்சார முகமாக அவர் ஆவதை அவர்களால் தடுக்கமுடியவில்லை. ஏனெனில் படைப்பிற்கு பயன்மதிப்பு இல்லையென்றாலும் நிலைமதிப்பு உண்டு. அது எல்லோருக்குமே உள்ளூரத் தெரியும். அதனாலேயே அத்தகையோரை பொறுக்கி என்றும் உதவாக்கரை என்று கருதினாலும் சமூகங்கள் காலந்தோறும் அத்தகைய தொழிலாளர்களை பொறுத்துக்கொண்டு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். வாழ்நாள் முழுக்க வறுமையில் உழன்ற கலைஞர்களின் ஓவியங்கள் அவர்கள் காலத்திற்குப் பிறகு அபரிமிதமான தொகைக்கு விற்கப்பட்டு யாரோ ஒரு செல்வந்தரின் சுவற்றில் தொங்குவதை வேறெப்படி புரிந்துகொள்ளமுடியும்.  

கவிஞன் என்பவன் ரிஷி, ஞானப்பால் குடித்தவர் என்பதெல்லாம் இருக்கட்டும். அவர்கள் அப்படி நடத்தப்படவில்லை அவர்களும் அப்படி  நடந்துகொண்டதில்லை என்றுதான் தோன்றுகிறது. அத்தகைய கதைகள் எல்லாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு அச்சமூகம் அவர்கள் அளித்துச்சென்ற நிலைமதிப்பைக் கண்டு பின்னர் உருவாக்கிக்கொண்ட புனிதமொழிபுகளாக இருக்கவேண்டும். ஆனால் இது இப்படித்தான் இருக்கமுடியும். சமூகமானது உடனடியான இக்கட்டுகளோடு மோதியபடி அன்றாட அத்தியாவசிய வாழ்வைச் சுற்றியே யோசிக்க முடியும். உடனடியான பயன்மதிப்பை மையமிட்டே இயங்கமுடியும். அவ்வகையில் அது புரிந்துகொள்ளக்கூடியதும் நியாயமானதும் கூட. எதிரிகள் புடைசூழ வந்துநிற்கையில் அரசன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தி நாட்டைக் காக்கிறான். செல்வந்தன் ஒருவன் கொடை வழங்கி மக்களை மீட்கிறான். அவ்வூரைச் சேர்ந்த ஓவியன் ஒருவன் தீட்டிக்கொண்டிருக்கும் ஓவியம் சிறுபிள்ளை விளையாட்டகவோ அல்லது பொருத்தப்பாடற்ற அற்ப காரியமாகவோ தான் அச்சமயம் காணப்படும். ஆனால் காலவோட்டத்தில் அந்த ஒற்றை ஓவியம் அச்சமூகத்திற்கே பெருமையையும் பெயரையும் வழங்கக்கூடும் இல்லையா. இயற்றப்படுகையில் எந்த பயன்மதிப்பும் அற்ற ஒரு காரியம் பிற்பாடு பெரிய நிலைத்த மதிப்பை பெற்றுத்தரச் சாத்தியம் உடையதாகிறது. இது கலைச்செயல்பாட்டின் அடிப்படை பண்புகளில் ஒன்று. இதுபற்றி மற்றவர்களுக்கே உள்ளூரத் தெரியும் எனும்போது அதை மேற்கொள்வோருக்குக் கேட்கவா வேண்டும். எனவேதான்

கடமை புரிவார் இன்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்!
கடமை அறியோம்! தொழில் அறியோம்!
கட்டென்பதனை வெட்டென்போம்!
மடமை, சிறுமை, துன்பம், பொய்,
வருத்தம், நோவு மற்றிவை போல்,
கடமை நினைவும் தொலைத்திங்கு
களியுற்றென்றும் வாழ்குவமே.

என்று கவிஞன் கட்டளை இடுகிறான். இதைப் பாடிவிட்டு பாரதி அட்டகாசமாக வாய் விட்டுச் சிரித்திருப்பார் என்று நினைக்கிறேன். கடமை புரிந்து இன்புறுவதை பண்டைக்கதை என்று சரியாகவே அடையாளம் காணும் ஒருவரால் மடமை, சிறுமை, துன்பம், பொய், வருத்தம், நோவு இந்த வரிசையில் ஒன்றாகத் தான் கடமை நினைவைக் கருத முடியுமே தவிர தெய்வமாக அன்று. இது எழுதப்பட்டு கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்குப் பின் இன்னொரு கவிஞன் அளிக்கும் வாக்குமூலம் இது:

குடிப்பதற்கு ஓரளவு மதுவும்
கடிப்பதற்கு ஒரு துண்டு இறைச்சியும் கிடைத்துவிட்டால்
புணர்ச்சிக்கு வீடு திரும்பிவிடுகிறான் கவிஞன்

Schole

மனிதனின் மிக முக்கியமான சாதனைகள், அது கலை இலக்கியமாகட்டும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான முதற்பொறிகள் ஆகட்டும், தத்துவக் கருத்தாக்கங்களாகட்டும் அவை பெரும்பாலும் அவனது ஓய்வுநேரத்தின் விளைச்சலாகவே இருக்கும் என்கின்றனர். சுமையற்ற சிந்தனையின் தருணங்களில், பிரபஞ்சத்துடன் அகவிழிப்பில் தனித்திருக்கும் சமயங்களில், அன்றாட பணிமனைகளின் சந்தடிக்கு வெளியே மனிதனுக்குக் கிடைத்த மிச்சசொச்ச நேரங்களில் முளைவிட்டவையே நாகரிகத்தின் பெருமை மிகு சின்னங்கள் என்று கூறலாம்.

உற்பத்தி பீடிப்புடைய நவீன யுகத்தில், ஓய்வுநேரம் என்ற விஷயமே மனிதனுக்கு தேவையற்ற உபரியாக, பணக்காரர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் மட்டுமே வாய்த்த பகட்டு அலங்காரமாக எண்ணப்படுகிறது. வேலை, உழைப்பு போன்ற வார்த்தைகளுக்கு நாம் வழங்கும் அதீத மரியாதையும், அவற்றை உச்சரிக்கையில் நாம் அளிக்கும் கூடுதல் அழுத்தமும், மனிதன் ஒரு செயல்பாட்டுக் கருவியாகச் சுருக்கப்படுகிறான் என்ற உண்மையை மறக்கச்செய்கின்றன. அவனது பெறுமானம், பணியாற்றுகையாலும் அதன் பலனாக அவன் பெறும் ஊதியத்தினாலுமே தீர்மானிக்கப்படும் ஒன்றாகி விடுகிறது. இது அவனை ஒற்றைப் பரிமாண உயிரியாக அலுவலகச் சுவர்களிடையே மிஞ்ச வைக்கிறது. எந்திரங்கள் மனிதனாகும் காலம் இது என்கின்றனர். ஆனால் மனிதன் எந்திரமாகி ரொம்ப நாளாகிறது.

நவீன முதலாளித்துவம் கட்டமைத்த பணம் மற்றும் வெற்றியின் வழிபாடு இன்று மிக மோசமான தீவிரவாத முகங்களை வடிவமைத்துள்ளது. விளைவாக, நாம் இன்னும் உழைக்குமாறு கோரப்படுகிறோம், இதைவிடச் சிறப்பாக செயல்புரிய உன்னால் முடியும், எனவே இன்னும் உற்பத்தி செய் என்ற ஆணைக்கு இணங்குகிறோம். இது உன்னிடம்  இல்லை எனவே வாங்கிக்கொள்ளேன் என்று தூண்டப்படுகிறோம். இது போதாது இன்னும் கூடுதலான ஊதியத்தைப் பெறமுடியும் உன்னால், இன்னும் முயற்சி செய் என்று சதா ஊக்கமூட்டத்திற்கு உள்ளாகிறோம். அதனால் அவ்வப்போது ஊசி போட்ட கோழி போலவும் பெரும்பாலும் மழையில் நனைந்த கோழி போலவும் நகர்வீதிகளில் நாம் திரிந்துகொண்டிருக்கிறோம்.

பண்டைய கிரேக்கர்கள் Schole  என்றொரு தத்துவக் கருத்தைக் கையாண்டுள்ளனர். இது பொதுவாக ஓய்வுநேரம்(leisure) என்று பொருளில் மொழிபெயர்க்கப்படுகிறது. அதாவது ஒரு மனிதனது சுதந்திரம் அவன் கையில் இருக்கும் நேரம் என்று சொல்லலாம். அப்படியாக, அவன் தான் நினைத்ததைச் செய்வது, அவனது நேரம் அவனது கட்டுப்பாட்டில் இருப்பது, ஓய்வு நேரத்தைத் தீர்மானிப்பது, அவ்வமயம் கற்பதற்கோ சிந்திப்பதற்கோ அதைக் குறித்து நண்பர்களுடன் உரையாடவோ வாய்ப்பிருப்பது என்ற வளமான பற்பல அர்த்தங்களில் Schole   என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வேர்ச்சொல்லில் இருந்து வந்ததுதான் ‘School’ என்ற வார்த்தை.

Schole – இல் தான் அரசியலில் இருந்து ஆன்மிகம் வரையான எல்லாவித தத்துவங்களும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. அன்றைய கிரேக்கத்தில் அரசியலோ சிந்தனையோ சுதந்திர மனிதர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. அடிமைகளுக்கு அதில் ஈடுபட உரிமை இல்லை. ஏனெனில் அடிப்படையில் அவர்கள் கையில் ஓய்வு நேரம் வழங்கப்படவில்லை. அவ்வகையில் ஓய்வுநேரம் என்பது நல்வாழ்வின் பிரிக்கமுடியாத அங்கமாக மட்டுமின்றி சுதந்திர மனிதனின் அடையாளமாகவும் கிரேக்கத்தில் பார்க்கப்பட்டுள்ளது. சுதந்திர வாழ்க்கையே உயர்ரகமானதாகக் கருதப்பட்டது. ஆக கற்றலுக்கும் சிந்தித்தலுக்கும் படைப்புச்செயல்பாட்டிற்குமான பொது அர்த்தத்தில் பயன்பட்ட ஒரு வார்த்தை, தற்போது தலைகீழாய் ஒருவகை விரயமாகவும் குற்றவுணர்ச்சியூட்டும் ஒன்றாகவும்  மாறியுள்ளது என்பது எத்தனை பெரிய அவலம். அத்தகைய கிரேக்க நாகரிகத்தில் இருந்து ஊற்றெடுத்ததாகச் சொல்லப்படும் மேலைக்கலாச்சாரம் அமெரிக்க மதிப்பீடுகளின் தாக்குறவால் இப்போது ‘தள்ளுமுள்ளு கலாச்சாரத்தில்’ சிக்கியிருப்பது ஒரு கசப்பான முரண்பாடு.  

ஓவியம் : ஜான் பூஹ்

ஓய்வுநேரம் என்ற வார்த்தை, வேலைக்கிடையில் ஓய்வெடுத்தலுக்காகக் கிடைக்கும் நேரம் என்ற பொருளைச் சரியாகவே குறிப்புணர்த்துகிறது. இதில் வாழ்க்கை என்பதே வேலை போலவும் அதற்கிடையில் கிடைக்கும் இடைவேளை, அதாவது மறுநாள்  வாழ அதாவது பணிக்குத் திரும்பத் தேவையான ஓய்வினைப் பெறுவதற்கான சிறுபொழுதே ஓய்வுநேரம் என்றும்  அர்த்தமாகிறது. ஒருவகையில் பார்த்தால் இது அப்பட்டமான உண்மை. இன்னொரு வகையில் ஓய்வுநேரமே உண்மையில் நாம் வாழும் நேரமாக உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. வேலையில் மனிதனது சுயம் வெளிப்படவோ நிறைவுறவோ இல்லையெனில் மார்க்ஸ் நம்பியதைப் போல ஓய்வுநேரத்திலேயே அதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதால், அதுவே நம் பொழுது என்று சொல்லத்தக்க நேரமாகிறது. அதை ஓய்வுநேரம் என்பதைக் காட்டிலும் சுயநேரம் என்றோ சுதந்திர நேரம் என்றோ அழைப்பதே பொருத்தமானது.  

தேவை மற்றும் சாமான்ய பிரச்சனைகளால் தீர்மானிக்கப்படும் உழைப்பு முடிகிற இடத்தில்தான் சுதந்திரத்தின் உண்மையான பிரதேசம் தொடங்குகிறது என்று கூறும் மார்க்ஸ் வேலைநாளைக் குறைப்பது என்பது அதற்கு அடிப்படையான முற்தேவை என்கிறார். சுதந்திர நேரத்தை மார்க்ஸ் தனிமனிதனின் பரிபூரண வளர்ச்சிக்கான நேரம் என்றார். அது சும்மா இருத்தலுக்கான நேரம் மட்டுமல்ல உயர் செயல்பாடுகளுக்கான நேரமும் கூட என்கிறார். இந்த வெளிச்சத்தில் சுய நேரத்தின் தேவையும், சுயநேரத்தின் தேவைகளும் மிகுந்த முக்கியத்துவம் கொள்கின்றன. மேலும் மார்க்ஸின் பிரசித்தி பெற்ற கூற்றான, பட்டுப்பூச்சி பட்டிழையை உருவாக்குவது போல மில்டன் இழந்த சொர்க்கத்தை தன் சுயவியல்பின் தூண்டுதலால் எழுதினார் என்பது மனிதனின் இறுதி நோக்கம் ஏதோவொரு வகையில் கலைஞன் ஆவதுதான் என்பதைச் சுட்டுகிறது. ஆனால் சோவியத்  யூனியனில் எழுத்தாளர்களை ‘உழைக்காமல் உண்ணும் ஒட்டுண்ணிகள்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் நாடுகடத்தியது இன்னொரு கசப்பான முரண்பாடு.

ஓர் உயிரினமாக மனிதன் தொடர்ந்து செயலாற்றவும் வளர்ச்சி பெறவும் விரும்புபவன். தன் எல்லைகளை விரித்துக்கொண்டு செல்ல விரும்பும் குழந்தை வளர்கையில் அதையே பல்வேறு வடிவங்களில் நிகழ்த்துவதாக இதை எடுத்துக்கொள்ளலாம். இந்த அடிப்படை உள்ளூக்கத்தை மந்தப்படுத்துவது நம் நோக்கமல்ல. மாறாக அதைப் பொருளுடைய திசையில் குறிப்பாக அவனுக்கு நிறைவளிக்கும் நடவடிக்கைகளில் செலவழிக்கும் வகையான ஏற்பாட்டை முயற்சிக்கவேண்டும். அவ்வகையான ஏற்பாட்டின் கீழ், அந்த உள்ளூக்கமானது இன்னும் வலுப்பெற்று பெரும் செயலூக்கத்திற்கு வழிவகுக்கும் என்றுதான் படுகிறது.

தற்போதைய நவீன தொழிற்சமூகத்தில் நிறைவளிக்கும் ஆர்வமூட்டும் பணிகள் குறைவு. அதற்காக அவற்றை விலக்கிவிடமுடியாது. இது ஒரு தவிர்க்க இயலாத முரண். யோசித்துப் பார்த்தால் அந்தப்பணிகள் அபத்தமானவையாகக் கூடப் படலாம். ஆனால் அவை அத்தியாவசியமானவையாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு மின் தூக்கி இயக்குபவர் பணியை எடுத்துக்கொள்ளுங்கள். அது அவசியமானது. அதற்காக அப்பணியில் ஒரு மனிதன் எவ்வளவு நேரம் அமர்ந்திருக்க முடியும்? அதைக் குறித்து நாம் யோசிக்கத்தான் வேண்டும் இல்லையா. அப்படி வேலைநேரத்தைக் குறைக்கத் தோன்றாவிட்டால் கூட பரவாயில்லை. அவனிடம் போய் நீங்கள் இந்தச் சமூகத்திற்குத் தன்னிகரற்ற சேவை ஆற்றி வருகிறீர்கள் என்றோ இந்த வேலைதான் தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் உணவளிக்கிறது எனவே நீங்கள் பயபக்தியுடன் இதில் குன்றாத ஊக்கத்துடன் பணியாற்றவேண்டும் என்றோ உபதேசிக்கமால் இருக்கலாம். ஆனால் கவிஞன் சொல்கிறான் இதயத்தைப் பழுது பார்ப்பது ஒன்றே எனது வேலை என்று.

இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுதின் இடைவேளையில் திரையில் தோன்றும் ஈலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு முழுவீச்சில் வளர்ந்ததற்குப் பின்னர் மனிதர்கள் வேலை செய்யவேண்டிய அவசியம் இருக்காது என்கிறார். இதை எப்படி நம்புவது ஈலான்? எதற்கும் ஒரு நூறு வருடம் கழித்து நிலைமை என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்.    

மழை கேட்டல்

காற்றோட்டமான மொழிக்கும், தெள்ளிய படிமங்களுக்கும் பேர் போனவை சீனக்கவிதைகள். பிரக்ஞை, பிரபஞ்சம், மொழி ஆகியவற்றின் இசைவொருமையால் இயற்றப்பட்டவை. சித்தரிப்புகளில் விவரணைகளில் ஆர்வமற்றவை. அவை எதார்த்தத்தைத் தீட்டிக்காட்ட விரும்புவதில்லை. அக்கணத்திய மனத்தின் நிலையைக் கவனித்து, அதைச் சுருக்கமாக சிக்கனமான மொழியில் எடுத்துச்சொல்பவை. கன்பூசிய அறவியல், தாவோயிச மறையியல், சூன்யவாத பௌத்தம் ஆகிய கீழைக் கருத்துக்களின் மெய்யியலால் உந்தப்பட்டவை எனினும் அக்கவிதைகள் வெளிப்படையாக மதச்சார்பற்றதாகவும் அதேநேரம் ஆழ்ந்த ஆன்மிகத்தன்மை கொண்டதாகவும் உள்ளன. அதனாலேயே அது உலகம் முழுக்க நவீனக் கவிஞர்களுக்கு உவப்பானதாக விளங்குவதுடன்  நவீனக்கவிதைக்கே தொடக்க கால முன்னோடி மாதிரிகளில் ஒன்றாகவும் திகழ்ந்தது. சீனக்கவிதைகளில் வரும் கவிஞன் விடுதலை அடைந்தவனாகவோ அல்லது விடுதலையின் தேடலில் இருப்பவனாகவோ தென்படுகிறான். ஒளியூடுருபவனாக, காற்றுக்கு அசைபவனாக உள்ளான். ஏனெனில் அவனிடம் நேரம் இருக்கிறது.அவனது சுதந்திர நேரம்.தொனியின் ஒத்திசைவு, சில படிமங்கள், ஒரு மனநிலை, இது போதும் அவனுக்கு. யங் வான் லீ என்ற கவிஞரின் கவிதை இது:

முழுமையான வெற்றுத் தெளிவுடன் பள்ளத்தாக்கின் ஆறு. மழை அடித்து வீசுகிறது.
இரவின் ஆழத்தில் தொடங்குகின்றன குளிர்ந்த காற்றின் முணுமுணுப்புகள்.
பத்தாயிரம் முத்துக்கள் தட்டில் விழுந்து சத்தமிடுகின்றன
ஒவ்வொன்றின் ஒலியிலும் என் எலும்புகளைத் துளைக்கும் பூரணத் தெளிவு
கனவில் நானென் தலையைச் சொறிகிறேன், பிறகு எழுந்து விடியல் வரை செவியுறுகிறேன்
ஒவ்வொரு சப்தமும் தோன்றுவதை மறைவதை
என் வாழ்நாள் முழுக்க நான் மழையைக் கேட்டுவந்துள்ளேன். தலை நரைத்துவிட்டது இப்போது
ஆனால் இன்னும் நான் அறியேன் வசந்தகால நதியில் பெய்யும் ராத்திரி மழையை.

மழை கேட்டல் என்ற செயல் அல்லது நிலை மீள மீள சீனக் கவிதைகளில் வருவதைக் காணலாம். மனிதர்கள், விலங்குகள் போல மழையில் நனைவதில்லை. வீடு கட்டத்தெரிந்த மிருகம் என்பதால், நாம் அதற்குள் அடைந்த பிறகு மழையைக் காண்பதும் குறைந்துவிட்டது. ஆனால் எங்கிருந்தாலும் மழை நம் காதில் விழுகிறது. மழையைக் கேட்க முடியும், அதற்கான மனமும் புலனும் இருந்தால். கவிதைக்கு அது இருக்கிறது. அது எதையும் சொல்லாமல் இதையெல்லாம் போதிக்கிறது. அதே போல நிலவு காண்பது, ஒயின் அருந்துவது, வெறுமனே வேடிக்கை பார்ப்பது இவையெல்லாம் சீனக்கவிதைகளில் வரும் மிகமுக்கிய நிகழ்வுகள். பூமி வழங்கும் பரிசுகள், வாழ்வின் மேலான இன்பங்கள். ஆம் இவை போன்றன தவிர பெரிதாக வேறெதுவும் நிகழ்வதில்லை அக்கவிதைகளில். மற்றபடி உலக நடப்பு எல்லாம் அத்தனை முக்கியத்துவம் அற்றவை என அக்கவிஞர்கள் கருதியிருக்க வேண்டும்.

நிகழ்வுகளின் பெருக்கம் அன்று மாறாக தணிவு. இந்தத் தணிவு என்ற பொருள் தரும் சமத்தா என்ற வார்த்தை புத்த தியான மரபில் முக்கியமானது. நிகழ்வுகளின், செயல்களின், எண்ண ஓட்டத்தின் தணிவு போன்றவை ஆன்மிக உணர்த்தெழுதலின் முற்தேவை என அது வகுப்பதால், சீனக்கவிதைகளில் சும்மா இருத்தல் என்ற பண்பு தத்துவார்த்த முக்கியத்துவம் உடையதாகிறது. Hsien என்ற வார்த்தையால் அதைக் குறிக்கின்றனர். இது தாவோயிசக் கருத்தான ஊஏ விற்கு நெருக்கமானது. செயலற்று இருத்தல் என்பது தன் இருப்பு பற்றியும் பொதுவான மேலான விஷயங்களைப் பற்றியும் சிந்திப்பதற்கான அவதானிப்பதற்கான அவகாசத்தையும் வாய்ப்பையும் அளிக்கிறது. நடவடிக்கைகளின் சவகாசம் ஓய்கையில் மனவொருமை வாய்க்கிறது. பத்தாயிரம் வஸ்துக்களை வெறும்மனம் பளிங்குத்தெளிவுடன் காண்கிறது. அங்கு பார்வையே ஓர் ஆன்மிகச் செய்கை ஆகிவிடுகிறது. இந்தத் தன்மைதான் சீனக்கவிதைகளுக்கு துல்லிய படிமத்தெளிவினை அளிக்கிறது எனச் சொல்லலாம். கூடுதலாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் அலாதியான சாவகாசம். பழஞ்சீனக்கவிதைகளில் வரும் கவிஞர்கள்தாம் எத்தனை  சாவதானமாய் தோற்றமளிக்கின்றனர். யூ சுவாஞ்சி என்ற பெண்கவிஞரின் கவிதை இது:

மூடுபனியில் ஒரு மாடம்
கோடை மலர்களும் இலையுதிர்கால நிலவும்
இந்த வரிகளுக்குள் நுழைகின்றன
பிரகாசமான பகல்களும் தெளிந்த இரவுகளும்
மரணமற்ற துறவிகளுக்கு உகந்தவை
ஒருமுறை நான் சும்மா திரைச்சீலையை விலக்கினேன்
பிறகு  அதை மூடவேயில்லை
பதிலுக்கு,படுக்கையை நகர்த்திக்கொண்டேன்
மலைகளை நோக்கியபடி உறங்குவதற்கு

மற்றொரு கசப்பான முரண்பாட்டை இங்கே குறிப்பிட வேண்டும். சுதந்திர நேரத்தின் அருமையையும், முனைப்பற்ற செயல்பாடு எனும் மெய்ஞானத்தையும் கையளித்த கலாச்சாரத்தின் தேசம் இன்று வேலை,உற்பத்தி, தொழில்மயம் என்ற புதிய விழுமியங்களின் கீழ் உலகின் தொழிற்சாலை என்று பேர் எடுத்து வைத்திருக்கிறது. ஆனால் வண்டியை முடுக்கிக் கிளம்பும் செயல் வீரர்களுக்கு ஞானப்பழம் கிடைப்பதில்லை.

மாறாக சீனக்கவிதைகளில் வரும் கவிஞனோ சுதந்திர நேரத்தில் முழுமையான சுதந்திரத்தில் அமர்ந்திருக்கிறான். உலகியல் விலங்குகளில் இருந்து மட்டுமல்ல தனது சொந்த சுயத்தின் பிடியில் இருந்தும் கிடைத்த சுதந்திரத்தில். இங்கு Schole இல் இருந்து Hsien இக்கு ஒரு பாதை இருப்பதை நாம் காணமுடியும். அவிழ்க்கவியலாத இருத்தலின் மகத்தான புதிர் முன்னில் நீளும் அதுவும் ஒரு பட்டுப்பாதைதான். இசைப்படைப்பில் மௌனம். ஓவியத்தில் வெட்டவெளி. வாழ்வில் வெறும் கணம். கணக்கற்ற தகவல்களின் முடிவற்ற கவனச்சிதறல்களின் நம் காலத்தில் சீனக்கவிதைகள் வேறொரு வாழ்க்கையைப் பற்றி சப்தமின்றி பேசுகின்றன. அது ஒரு வழி, அதாவது மார்க்கம்.

ஓவியம் : விக்டோரியா கர்சென்கோ

உட்டோப்பியா

இதுதான் முக்கியக் கேள்வி, ஒருவர் தன் ஒய்வுநேரத்தை எந்த நடவடிக்கையைக் கொண்டு நிரப்புவது? இப்படி கேட்டவர் அரிஸ்ட்டாட்டில். நாம் இப்போது எப்படி நிரப்பிக் கொண்டிருக்கிறோம்?

மாக்ஸின் கார்கியின் தாய் நாவலில் இப்படியொரு வரி வரும் : அவர்கள் குடிப்பார்கள், சண்டையிடுவார்கள், குடிப்பார்கள், சண்டையிடுவார்கள், பிறகு வேலைக்குத் திரும்புவார்கள். அக்காலத்தில் பொழுதுபோக்கு என்பது இப்போது போல ஒரு தொழில்துறையாக வளரவில்லை. அதனால்தான் அப்படி சண்டையிட்டிருக்கிறார்கள் போல. இப்போது அப்படி இல்லை. வேலைப்பளுவின் அதிகரிப்பும் நுகர்வின் வெள்ளமும் இணைநிகழ்வுகள் என்று கூறலாம். ஒன்று உயர இன்னொன்றின் நீர்மட்டமும் உயர்கிறது. இரண்டுமே முடிவில் செல்வத்தை உற்பத்தி செய்வதால் இந்தப் போக்கு சந்தைக்கு மிக உகந்ததாகப்படுகிறது. எனவே இரண்டுமே சமூகத்தில் ஊக்குவிக்கப்படுகின்றன. ஒரு பக்கம் மூளையை முடக்கும் உழைப்பு, மறுபக்கம் மரத்துப் போகச்செய்யும் நுகர்வு. ஆனால் இதில் தொழிலாளிகள் பாவம். அவர்களைக் குறை சொல்ல ஒன்றுமே இல்லை. வேலைநாளின் பெருத்த சுமைக்குப் பிறகு அவன் ஒரு பெருநாவலையோ தத்துவநூலையோ படிப்பான் என்றோ செவ்வியல் இசை கேட்பான் என்றோ எதிர்பார்க்கக் கூடாது. அவன் தனக்கு வாய்த்த அந்த குறைந்த இடைவெளியில் எது உடனடியான விரைவான இன்பத்தை அளிக்கிறதோ அதிலேயே ஈடுபடுவான். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் நமது சுயநேரத்தை மூலதனமாகக் கொண்டு பல தொழிற்துறைகளே இயங்குகின்றன என்பதுதான். அதாவது, அத்தகைய நேரத்தில் நம்மை கட்டற்ற திரைநுகர்விலும் காலிக்கேளிக்கைகளிலும் ஊறப்போடுவதன் வாயிலாக, செயலற்ற பார்வையாளர்களும் குருட்டு வாடிக்கையாளர்களும் கூடிய ஒரு மந்தையைத் தக்கவைக்க முனைகின்றன தொழில்நுடப் பெருநிறுவனங்கள்.

செயற்கைத் தூண்டல்களால் உருவாக்கப்படும் உளத்தேவைகள், மீளாவேட்கையைத் ஏற்படுத்தும் பொழுதுபோக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று நம் சுயநேரத்தில் தம் விளம்பரக் குப்பைகளைக் கொண்டு வந்து நிரப்பும் பாரவண்டிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால், இத்தகைய வேலைக்கலாச்சாரத்தில் பொருளீட்டி வெல்வோரும், நுகர்வில் மற்றையோரைத் தாண்டிக் குதித்துக் குவித்துத் திளைப்போரும் சமூகத்திற்கு வெற்றிகரமான முன்மாதிரிகளாக நம்மிடம் காட்டப்படுகின்றனர். சமூகத்தின் மாடல்கள்தான் சமூகத்தின் உள்திசையை நிர்மாணிப்பவர்கள். அத்தகைய மதிப்பீடுகளின் கீழ் வாழ்ந்துகொண்டு நாம் செய்யும் இதுகுறித்தான அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்பூச்சு வேலைகளாகவே முடியும். யோசித்துப் பார்த்தால் எல்லா புதிய விஷயங்களையுமே ஒன்று சம்பிரதாயம் ஆக்குகிறோம் அல்லது அதில் இருந்து ஒரு தொழில்துறையை உருவாக்குகிறோம். இரண்டுமே விளையாட்டையும் உற்சாகத்தையும் உட்பொருளையும் இழக்கச்செய்வது. விளைவாக சுதந்திர நேரத்திலும் நாம் சுதந்திரமாக இல்லை என்பதுதான் உண்மை.

உழைப்பின் உற்பத்தி சாதனைகளும், தொழில்நுட்பமும் வளர்கையில் மனிதனது பூரண வளர்ச்சி வெளிப்பாட்டிற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கும் வாய்ப்பு மட்டும் அதிகரிக்கவில்லை. அவனது தேவைகளும் அதிகரித்தன. தொழில்நுட்ப வளர்ச்சியால் உற்பத்தி பல்கிய பெருகிய சென்ற நூற்றாண்டின் மத்தியிலேயே இரண்டு வழிகள் நம்முன்னே நீட்டப்பட்டன. ஒன்று வேலைநேரத்தைக் குறைத்துக்கொண்டு கூடுதல் சுதந்திர நேரத்தைப் பெற்றுக்கொள்வது. இன்னொன்று  உற்பத்தி போட்டியில் ஈடுபட்டு வெற்றி கண்டு, அதைவிட அதிகமான பொருட்களை வாங்கி நுகர்வது.ஒரு சமூகமாக மனிதன் எதைத் தேர்வு செய்தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை நமக்கு. சந்தைக்கோ இதில் தேர்வே இல்லை.

மாற்று வாழ்வியலை,மாற்று மதிப்பீடுகளை உருவாக்க முடியாமையின் தோல்விதான் இத்தகைய அதிதீவிர விளைவுகளை உருவாக்குகிறது என்று சொல்லலாம். அவ்வளவு ஏன், மனிதனுக்கு நிறைவளிப்பது தன்னிறைவும் சுதந்திரமுமே தவிர பொருளியல் வெற்றியோ புகழோ அல்ல என்பது போன்ற எளிய நீதிமொழிகளைக் கூட முன்வைக்க முடியாத சூழல்தான் இது. ரஸ்ஸல் தனது கட்டுரையில் கேட்கும் கேள்விகள் இன்றும் பொருளுடையவையாய் ஒலிக்கின்றன:  நமது உற்பத்தியைக் குறைத்தால், பூமியின் வளங்கள் குறைகிற வேகம் மட்டுப்படும் என்றால், அதன் மூலம் சமூகத்தின் மனவளம் அதிகரிக்கும் என்றால் அது நல்லதில்லையா. நாம் ஏன் அதைச் செய்யக்கூடாது? அதை விட முக்கியமாக கலை அறிவியல் போன்ற படைப்பூக்கமிக்க துறைகளில், சூழலுக்கோ நமக்கோ பாதகமற்ற முறைகளில் நமது உழைப்பைச் செலவழிக்கலாம் இல்லையா. ரசனையும் அமைதியும் சூழ நம் அகவாழ்வை மேம்படுத்தலாம் இல்லையா? பிறகேன் நாம் இந்த மாற்றங்களை ஏற்படுத்த கூடாது? நிறைய கேள்விகள். ஒருவேளை சுதந்திர நேரத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே நாம் வேலை என்ற ஒன்றைக் கண்டுபிடித்தமோ என்னவோ. இவ்விடத்தில் நினைவு வருகிற இன்னொரு விஷயம்:

பெரிய அடிப்படையான கேள்விகள் எழுப்புவதை நாம் மறந்துவிட்டோம். அவை கேலிக்குரியவையாக மாறியுள்ளன.பின்நவீனத்துவம் பெருங்கதையாடல்கள் என்று அவற்றை ஒதுக்கித் தள்ளிய பிறகு அதிகாரப் போட்டியைத் தவிர வேறெந்த கேள்வியும் நமது அக்கறைக்கு தகுதியற்றவை என்று கருதப்படுகிறது. ஆனால் ஆதாரமான அந்தக் கேள்விகள் அப்படியே உயிரோடு இமையாது நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, நாம் எதற்காக வாழ்கின்றோம்? நமக்கு என்னதான் வேண்டும்?அவள் ஏன் என்னைக் காதலிக்கவில்லை?

வேலை என்பதன் நோக்கம் என்ன? அடிப்படையில் உயிர்வாழ்வைத் தக்கவைப்பதுதானே. உணவு உறைவிடம் இனப்பெருக்கம் என நமது அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்வதுதானே. ஆனால் சுயநேரத்தின் நோக்கமானது வாழ்வின் பிற அம்சங்களை, நம்மை மனிதனாக்கிய தனித்துவமான கூறுகளை பேணுவதாகவும் வளர்த்தெடுப்பதாகவும் அமையவேண்டும். அதற்கு முக்கியமான தொடக்கம் ஓய்வுநேரத்தை நம் பொழுதாக நாம் கருதவேண்டும். சுயநேரம் பற்றியும் சும்மா இருப்பது பற்றியும் கொள்ளும் குற்றவுணர்ச்சியைக் களைய வேண்டும். சோவியத் மார்க்சியர்கள் சொன்னது போல அது பூர்ஷ்வாக்களின் கலாச்சாரம் என்று கண்டிப்பதோ அல்லது முதலாளித்துவ ஊக்குவிப்பாளர்கள் போல சமூகமுன்னேற்றத்தில் பங்களிப்பு செய்யாத சோம்பேறிகள் என்று நிந்திக்கவோ தேவையில்லை. ஏனெனில் அல்லும் பகலும் கனிமங்களை வெட்டி எரித்து சொகுசு காரில் பயணிப்பதை விட சும்மா இருத்தல் எவ்வளவோ மேலான காரியம்.

சுதந்திர நேரம் என்பது ஆன்மாவின் பசியாறும் நேரம். ரசனையை, திறமையை, உறவுகளை, உடலை, அறிவை, ஆன்மா என ஒன்றிருந்தால் அதனை மேம்படுத்துவதற்காக அந்நேரத்தைப் பயன்படுத்தலாம். அவைதானே நம்மை மனிதனாக்கின. அப்படி செய்ய முடிந்தால் காலப்போக்கில் நீங்கள் யார் என்ற கேள்விக்கான பதில் நாம் பணிபுரியும் வேலையில் இருந்து தருவிக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் நமது சுதந்திர நேரத்தில் நாம் ஈடுபடும் தொழிலில் இருந்து வெளிப்பட்ட ஒன்றாக அமையலாம். அது அச்சு அசலாக ஒரு எழுத்தாளனின் கலைஞனின் பதில் போலவே ஒலிக்கும். இரைப்பையையும், சட்டைப்பையையும் மட்டும் நிரப்புவது தெய்வம் அன்று மனதையும் அறிவையும் நிறைவிப்பதே தெய்வம்.

யவனிகா ஸ்ரீராம்

இப்படியாக உறங்கா நகரங்களின் ராஜ்ஜியத்தில் ஓய்வு ஓர் எதிர்ச்செயல்பாடாக மாறுகிறது. உற்பத்திக்கு உடன்பட மறுப்பது எதிர்க்கலாச்சார செய்கையாகவும் ஆன்மிக சமிக்ஞையாகவும் உருக்கொள்கிறது. சும்மா இருப்பது, பயன்பாட்டிற்கு அப்பால் இருப்பது,விலைபோகாதிருப்பது, விலைமதிப்பற்றதாக இருப்பது: கவிதையில் இருந்து கற்பதற்குத்தான் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. களிப்புற்று என்றும் வாழ்குவமே என ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இணைந்துகொண்ட யவனிகா ஸ்ரீராமின் கவிதை:

கடவுளின் நிறுவனம்

குடிப்பதற்கு ஓரளவு மதுவும்
கடிப்பதற்கு ஒரு துண்டு இறைச்சியும் கிடைத்துவிட்டால்
புணர்ச்சிக்கு வீடு திரும்பிவிடுகிறான் கவிஞன்
சமைப்பதற்கும் உறங்குவதற்கும்
சொந்தமற்ற நான்கு சுவர்களைக் கொண்டிருக்குமவன்
அதிலிருந்து வெளியேறும் நீண்ட கால்களால்
உலகத்தை விரித்துக் கொண்டு போகிறான்
அவன் கண்கள் செல்வச் செழிப்புள்ள
கருவூலங்களை ஊடுருவிச் சென்று
அப்பாலுள்ள நிலவை இலவசமாய்ப் பகிர்ந்து நிற்கிறது
கவிஞன் கரை மீது நடக்கும்போது
பசித்தவர்களின் பேரோசைகளையே கற்பிதம் செய்கிறான்
விளிம்பில் நின்று நிலத்தை அதட்டும் அவன் குரலால்
மிச்சமான பண்டங்கள் யாவும்
வெளியில் தெறித்து விழுகின்றன
அவன் சிரித்துக் கொள்கிறான்
இந்தக் கடவுளின் நிறுவனத்தில்
வேலை மறுத்தும் விசுவாசமற்றும் அவன் திரிவது
வேடிக்கையானது மட்டுமல்ல விபரீதமானதும்தான்
உழைப்பவர்கள் தங்கள் வயிற்றைக் காட்டும்போது
அந்தப் பைத்தியக்காரன் தற்கொலை செய்துகொள்ளும்படி
அவர்களுக்கு ஒரு ஆழ்ந்த பள்ளத்தாக்கை அல்லவா
முன்மொழிகிறான்
அப்படித்தான் இரண்டு கை நிறைய
புளியவிதைகளைக் கொடுத்துவிட்டு
ஒரு இறக்குமதி பானத்தைக் கேட்டு அடம்பிடித்ததும்
சற்றே ஏமாற்றுக்காரனைப் போல் தென்படும் அவனுக்கு
நீங்கள் ஏதேனும் அறிவுரை கூற முயலும்போது
உங்களிடம் ஓரளவு மதுவும்
ஒரு துண்டு இறைச்சியும்
உபரியாக இருந்தால் தொலைத்துவிட்டுப் பேசுவதுதான்
சிறந்த உபாயம்
பிறகு அவனிடம்
உதவாக்கரைகளுக்காக
கடவுள் தன் நிறுவனத்தை திறந்து போடுவாரா
என்று கேளுங்கள்
போடமாட்டார் என ஒப்புக்கொள்வான்.

சபரிநாதன்

சபரிநாதன். கவிதைகள், விமர்சனத் திறனாய்வு ஆகிய துறைகளில் தீவிரமாக ஈடுபடுகிறவர். "களம் காலம் ஆட்டம்", "வால்" என்று இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். விகடன் விருது, விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது, யுவபுரஸ்கார் விருது ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

3 Comments

  1. உபரி மேலாண்மை என்பதே ஒரு கலைதான் போலும். Art of Managing surplus என்று எங்கோ படித்தது நினைவில் எழுகிறது. உபரி என்பது ஸ்தூல வடிவம் கொண்டது மட்டுமல்ல, அருவமான நேரமும் தான் என்பதை நுட்பமாக சுட்டிக் காண்பிக்கிறது இக்கட்டுரை.

  2. இன்றைய சூழ்நிலை ஓய்வு / உபரி / சுய முன்னேற்ற நேரத்தை குறி வைத்து உங்களை மேலும் சந்தைக்கு அடிமை படுத்துவதாக உள்ளது

  3. மிகவும் அருமையான கவிதை மொழிபெயர்ப்பு …

உரையாடலுக்கு

Your email address will not be published.