/

டிராகுலாவின் சிரிப்பு : சபரிநாதன்

ஓவியம் : கெர்ரிட் வான் ஹாந்த்ரோஸ்ட்

1.
ல்லைக் காட்டாதே என்றொரு கண்டன வழக்கு உண்டு.தமிழ் ஆசிரியர் ஆகுபெயருக்கு உதாரணமாக அத்தொடரைச் சொன்னபோது,பின்னிருக்கை மாணவர்கள் அத்தொடரில் பல் என்ற சொல்லின் பின்னொட்டாக வேறு சில அந்தரங்க உறுப்புகளைச் சேர்த்து வசைச்சொல்லாய்ச் சொல்லி சிரித்தனர்.அது கேட்ட எங்களுக்கும் சிரிப்பு வந்தது.சிரிப்பு என்பதற்கான பரிணாம ரீதியான விளக்கம் சுவாரஸ்யமானது,எல்லா விளக்கங்களையும் போலவே.ஏனெனில் விளக்கங்கள் நமது அறிவை திருப்திப்படுத்தினால் மட்டும் போதாது, கற்பனையையும் திருப்தி செய்யவேண்டும்.இது முரண் கூற்றாகத் தோன்றலாம்.ஆனால் நேரம் ஒதுக்கி யோசிக்கத்தக்க முன்வைப்பு இது.பழங்குடிகளின் பிரபஞ்சவியக் கதைகளில் இருந்து பிரிவிற்கான காதலர் கருத்துரு வரை, விளக்கங்கள் அந்தந்தக் காலகட்டத்தின் நமது எதிர்பார்ப்பை இவ்விரு விதங்களிலும் நிறைவு செய்வதைக் காணலாம்.தொன்மங்களும் கதைகளும் அப்படியே.அவை காரண அறிவை சமாளிப்பதுடன் அழகியல் ரீதியாகவும் நம்மை திருப்திப்படுத்துவதாக அமையவேண்டும்.அப்படியான ஒரு விளக்கத்தை வி.எஸ்.ராமச்சந்திரனின் நூல் ஒன்றை வாசிக்கையில் காணமுடிந்தது.

’Mirror Neurons’ பற்றிய அந்தப் பகுதி கிட்டத்தட்ட சின்னதொரு கோட்பாடு என்னும் அளவிற்கே விரித்துரைக்கச் சாத்தியமுடையது.அதில் அவர் கலை பற்றிய பரிணாம விளக்கத்தையும் அளிக்க முயற்சித்திருப்பார்.நான் சொல்ல வந்தது சிரிப்பைப் பற்றிய விளக்கம்.’பொய் அபாய மணி’ கொள்கை என அது அழைக்கப்படுகிறது.அதாவது நாம் அனுபவத்தில் இருந்து ஒரு ஆபத்தை அல்லது விபத்தை எதிர்பார்த்திருக்கையில்,அந்த ஆபத்து எந்த தீங்கையும் நிகழ்த்தாது சுமுகமாக கடக்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது. தெருவில் நடந்துகொண்டிருக்கும் ஒருவர் வாழைப்பழத் தோல் வழுக்கி விழுகிறார் என வைத்துக்கொள்வோம்.அவருக்கு அடிபட்டு ரத்தம் வந்தால் யாரும் சிரிக்கமாட்டார்கள்.மாறாக வெறுமனே அவரது வேட்டி அவிழ்ந்து தலைப்பாகை மட்டும் பறந்தால் நமக்கு சிரிப்பு வரும்.வயதாகாதவராய் இருந்தால் அவரும் சிரிப்பார்.அபாயம் இருந்தது.ஆனால் சேதம் நிகழாமல் முடிந்துவிட்டது.அப்போது நாம் எழுப்பும் சிரிப்பொலி நம்மைச்சுற்றியிருக்கும் மனிதக்கூட்டத்திற்கு ’பிரச்சனை ஒன்றும் இல்லை.எல்லாம் ஓகே’எனச் சொல்லும் சமிக்ஞை ஒலி என்கிறார் விஎஸ் ராமச்சந்திரன்.இடுக்கண் வருங்கால் நகுக என்பதை இப்படியும் பொருள் கொள்ளலாம் போல.சிரிப்பும் கண்ணீரும் ஒரே நேர்கோட்டில்தான் அமைந்திருக்கின்றன.அவற்றுக்கிடையுள்ள வெளி அத்தனை தூரம் ஒன்றும் இல்லை.

தெருக்கூத்தில் கட்டியங்காரன் சவுக்கால் அடிக்கப்படுவதும் அவன் பிட்டத்தைத் தடவிக்கொண்டே ஓடுவதும் சிரிப்பு மூட்டும் நோக்கத்தில்தான்.அந்தச் சவுக்கு போலவே மேலைநாட்டு மேடைகளில் பயன்பாட்டில் இருந்த உபகரணத்திற்குப் பேர்தான் ஸ்லாப்ஸ்டிக்.இப்போது வரை நாம் திரையில் பார்த்துக்கொண்டிருக்கும் நகைச்சுசவைக் காட்சிகள் அநேகமும் இதற்குச் சான்று.சாப்ளின் போன்ற ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவை கலைஞர்களின் உலகம் ஆபத்துகள் நிறைந்தது.அவர்களது பாதை, குழிகளும் இடையூறுகளும் நிறைந்திருப்பது.வழுக்கி விழுவது, மோதிக்கொள்வது, ஒருவரிடமோ அல்லது கும்பலிடமோ மாட்டிக்கொள்வது என அடிவாங்குவது என்பது நகைச்சுவையின் பகுதியாகவே இருப்பதை எண்ணிப்பாருங்கள். யாராவது பயில்வான்,பெரிய மனிதன் அல்லது காவலர் அவரைத் துரத்திக்கொண்டே இருப்பார்.இல்லையெனில் கதவு சுவர் என்று எங்காவது தானே சென்று மோதிக்கொண்டிருப்பார்.

’எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்/என் மேல் ஒருமுறை விட்டாள்/மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்’ என்று கவிதை முடிகையில் நமக்கு சிரிப்பு வருவதன் காரணம் கவிஞருக்கு பெரிதாக காயம் பட்டிருக்காது என்ற நம்பிக்கையில்தான்.பெண்கள் சைக்கிள் விடுவதை சிறப்பாகச் சித்தரித்து வரும் கவிதை முடிவில் அதை நகைப்புக்குரியதாய் மாற்றவேண்டியது ஏன் என்றொரு கேள்வியை எழுப்பலாம்.ஆனால் அதே கமலம் ஆக்டிவாவை விட்டிருந்தால் அது கவிதையாகி இருக்காது.செய்தியாகி இருக்கும்.America’s Funniest Videos போன்ற தொலைக்காட்சி தொகுப்பு நிகழ்ச்சிகளில் வரும் பெரும்பாலான காட்சிகளையும் இவ்வகையில் புரிந்துகொள்ளலாம். இது சிரிப்பிற்கான ஒரு விளக்கம்தான்.இன்னும் சொல்லப்போனால் ஒருவகை சிரிப்பிற்கான ஒரு விளக்கம்தான்.எல்லா சிரிப்பையும் இப்படி புரிந்துகொள்ள முடியாது.பி.சாய்நாத் தன் புகழ்பெற்ற புத்தகத்தில், அறிவொளி இயக்கத்தின் விளைவால் பெண்கள் சைக்கிள் ஓட்டப் பழகி அதைப் பயன்படுத்துவதைப் பற்றி மிகச்சிறந்த கட்டுரை ஒன்றை எழுதியிருப்பார்.அதை வாசிக்கையில் நெகிழ்ச்சியுடன் ஒரு புன்னகை மலரும்.அது வேறு சிரிப்பு.கண்ணீரில் மலரும் சிரிப்பு.

இன்னொரு சுவாரஸ்யமான பழைய விளக்கம்: சிரிப்பு என்பது, நான் உன்னைக் கடிக்கப்போவதில்லை என்று அறிவிக்கும் உறுதிமொழி.ஏனெனில் பற்கள் உயிரியல் தளத்தில் ஆயுதமாகவும் செயல்படும் உறுப்பு.நாய் போன்ற விலங்குகள் பற்கள் தெரியும்படி வாயைத் திறந்துகாட்டுவது, மூர்க்கத்திற்கான,தாக்குதல் நோக்கத்திற்கான சமிக்ஞை.ஆனால் பரிணாம வளர்ச்சியில் பாலூட்டிகளின் வரவிலேயே இது மாறிவிடுகிறது என்கின்றனர்.பல்லைக் காட்டுவது இளிப்பதாகிவிடுகிறது.உதாரணத்திற்கு, மோதலில் ஈடுபடும் மனிதக்குரங்கு ஒன்று பல்லைக்காட்டினால் அது எதிராளியிடம் ‘நீ பெரிய ஆள்தான்.ஒத்துக்கொள்கிறேன்’ என்று அடிபணிவதன் செய்கையாக அர்த்தம் பெறுகிறது.சமரசத்தின் கொடியசைப்பு அல்லது பல்லைக் காட்டிக்கொண்டு பின்னால் செல்வது.மனிதச்சிரிப்புமே இத்தகைய அடிபணிதலின் செய்கையாகத் தொடங்கி படிப்படியாக நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக ஆகியிருக்கலாம் என்கின்றனர்.அப்படியென்றால் முகமன் கூறும் முகமாக நாம் சிரிப்பதில் கூட ஓர் உட்பொருள் ஒளிந்திருக்கலாம்:என்னால் உன்னைக் கடிக்க முடியும் ஆனால் கவலைப்படாதே கடிக்க மாட்டேன். அதே போல கைகளை விரித்துக்காட்டுவதும் என்னிடம் ஆயுதம் இல்லை என்ற அறிவிப்புதான்.அப்படி உயர்ந்தவைதான் அபயமுத்திரையும்,நீட்டிய துப்பாக்கிக்கு முன்னர் இரண்டு வெறுங்கைகளும்.ஆனால் மனித அனுபவாக்கத்தை இப்படிக் குறைத்து மதிப்பிடலாமா.வேறு வழியில்லை. மனிதனைக் கடவுளின் பிரதிபிம்பமாக வகுக்காது, அவனை விலங்கு நிலையில் இருந்து தொடங்கிப் புரிந்து கொள்ள முயல்வதே பரிணாமக் கொள்கையின் முதற்கோள்.

பொதுவாக நம்பப்படுவதைப் போல மனிதன் மட்டுமே சிரிக்கத்தெரிந்த விலங்கு அல்ல.பாலூட்டிகள் பலவற்றுக்கும் அச்செயலமைப்பு உள்ளது.அப்படியாக ஒரு தனித்துவமான உடற்கூற்றியல் அசைவிற்கான சாத்தியம் பலரையும் போல அவனுக்கும் வழங்கப்பட்டது.ஆனால் மனிதன் சிரிப்பைக் கண்டுபிடித்தான்.அதில் சந்தேகமே இல்லை.அவனைக் குறைத்தெல்லாம் மதிப்பிட முடியாது.பிறகு அதை பல்வேறு வகைகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலப்பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினான்,கண்ணீரைப் பயன்படுத்துவது போல.

பற்கள் உண்வெடுத்தலுக்கான கருவியும் கூட.ஆனால் ஆயுதங்கள் இன்றி ஆகாரம் இல்லை. கொலை செய்யாது பசி தீராது.இரையின் பார்வையில் உண்ணப்படுவதும் கொல்லப்படுவதும் ஒன்றே. கொடும்பற்கள் நீண்டிருக்குமாறு திறந்த காளியின் வாய் சூன்யத்தின் முடிவிலியாகவும், மண்ணில் துளியும் எஞ்சாதபடி உலகின் எல்லா குருதியையும் துடைத்தழித்த அவளின் சிவந்த நாக்கு விதியின் வாகனமாகவும் வெளிப்படுகிறது.உலகின் பெருமைகளையும் சிறுமைகளையும் கண்டு தோற்றமெடுத்த காலத்தின் சிரிப்பு என்றும் பொருள் கொள்ளலாம் அதை.

சிரிப்பு எதிர்ப்பைக் காட்டவும் பயன்படும் என்பது உண்மை.அதிலும் எதேச்சதிகார நாடுகளில் பல கலைஞர்கள் அவ்வகையில் அதிகாரத்தை எதிர்கொண்டுள்ளனர். காந்தி ஒரு கைக்குழந்தையை ஏந்தியபடி பொக்கை வாயைத் திறந்துகாட்டிச் சிரிக்கும் புகைப்படத்தில் இருந்து, நாம் அஹிம்சை என்னும் கருத்தாக்கத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றி வேறுதிசையில் சிந்திக்கமுடியும். தென்னகத்திலும் முன்பொரு காலம் பெருமான் ஒருவர் சிரித்துப் புரமெரித்துள்ளார் இல்லையா.ஆயினும் பற்கள் வெறுமனே ஆயுதமாக பிரயோகிக்கப்படும் இடங்களும் உண்டு.நாம் நாள்தோறும் அலுவலகங்களிலும் இல்லங்களிலும் அதைப் பார்த்திருக்கிறோம்.மனம் குன்றி வருந்தியிருக்கிறோம்,சீற்றத்தை அடக்கிக்கொண்டு மறுமொழியாகச் சிரித்து வைத்திருக்கிறோம்.அப்படி ஆயுதமாக பிரயோகிக்கப்படும் போதெல்லாம் மனிதப் பற்களுக்கு என்னவாகிறது?.உதாரணமாய், காலவழுவமைதி போன்ற கவிதைகளை இப்போது வாசிக்கையில் சிரிப்பு வருவதில்லை, எரிச்சல்தான் வருகிறது.ஏனெனில் அங்கு பற்கள் சிரிப்பில் ஈடுபவில்லை; எதிர்ப்பிலும் ஈடுபடவில்லை.அவை வெறுமனே கடிக்கருவிகளாக ஆயுதங்களாக மட்டுமே காணப்படுகின்றன.ஆனால் அங்கதச்செய்யுள் என்பதே வசையொடும் நசையொடும் புணர்ந்ததுதானே.

சிரிப்பு ஒரு சமூகப்பயிற்சியாகத் தொடங்கியிருக்கும் என்கிறார் வி.எஸ்.ராமச்சந்திரன்.பரிணாம ரீதியில் அதன் சமூக அர்த்தமே ஆதாரமானது. மொழிக்கு முந்தய தொடர்புறுத்தும் வடிவங்களில் ஒன்று.காட்டுச் சமூகவாழ்வில் நிகழ்த்தப்பட்ட ஓர் அறிவிப்புச்சைகை அது. வரவிருப்பதாய்த் தோன்றிய ஆபத்தின் விலகல். தப்பித்தல்,தணிவு,விடுபடல். மனிதக்குழுவானது அந்த அபாயக் குறியைக் குறித்து அஞ்சவோ தடுப்பு நடவடிக்கைகளில் ஆற்றல் செலவழிக்கவோ தேவையில்லை என்று சொல்லும் நற்சேதி.விளைவாக ஒரு சமூகமாக நாம் உயிர் பிழைத்திருத்தலின் இயங்குமுறைக்கூறுகளில் ஒன்றாக சிரிப்பும் பங்காற்றியது என்கிறார் அவர்.

ஒருவேளை மனிதன் சிரிப்பைக் கண்டுபிடிக்காதிருந்தால்,நாம் சமூகமாக நீடித்திருக்க முடியுமா? அந்நியர்கள் அந்நியர்களாகவே தொடர்ந்திருப்பர்.கிச்சுகிச்சு மூட்டுவதால் கைகலப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.எல்லைகள் எல்லைகளாகவே நிலைத்திருக்கும்.எதுவும் ஆபத்தானதாகத் தோற்றமளித்திருக்கும்.முடிவற்ற ஒரு பெருந்தொற்றுக் காலத்தைப் போல நம்பிக்கையின்மையுடன் திகில் சூழ்ந்திருக்கும்.ஏனெனில் மனித அச்சத்தின் ஆதார ஊற்றுகளில் ஒன்று ‘அறியப்படாதது’.அந்நிய நிலத்தில் இருந்து ’அறியாத இருப்பைச்’ சேர்ந்த ஒருவரின் வருகை, தன்னை நாகரிக சமூகம் என்று கருதிப்பழகிய ஒன்றால் எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கும்?

2.

மேலைக் கலாச்சாரத்தில் உருவாகிய மற்றமையின் மாபெரும் உருவகங்களில் ஒன்று டிராகுலா.ப்ராம் ஸ்டாக்கரது நாவலின் முதன்மைப்பாத்திரமான கவுண்ட் டிராகுலா பூர்வீகத்தில் டிரான்சில்வேனியாவைச் சேர்ந்தவர்.வியாபார நிமித்தமாய் லண்டனில் இருந்து அவரைச் சந்திக்கச் செல்லும் ஜானதன் ஹாக்கர், ஹங்கேரியைக் கடக்கும்போதே தான் மேலைத்தேயத்தை விட்டு கீழைப்பிரதேசத்திற்குள் நுழைவது போல் உணர்வதாகக் கூறுகிறான்.ட்ராகுலா கோட்டையின் சரியான அமைவிடத்தைக் கண்டுபிடிக்க நினைக்கும் அவன் தனது நாட்டின் சர்வே வரைபடங்களைப் போல அந்நிலத்திற்கென வரைபடம் ஏதும் இல்லை என்று குறை பட்டுக்கொள்கிறான். ஏகாதிபத்திய பேரரசுகள் காலனி நாடுகளில் செய்த முதற்பெரும் பணிகளில் ஒன்று வரைபடம் தயாரிப்பது. எனவே ’வரைபடத்திற்கு அப்பால்’ என்பது உருவகப்பொருளில் மட்டுமல்ல ஜானதனின் காலனியாதிக்க மனநிலையின் குரலாகவும் தொனிக்கிறது.மற்றமையை நிறுவிய பிறகே நூல் தொடங்குகிறது எனலாம். அறிமுகம் கொள்ளும் டிராகுலா கூட ஜானதனிடம் ‘இது இங்கிலாந்து அல்ல.எங்களது வழிகள் உங்களது வழிகள் அன்று’ என்கிறார்.

ட்ரான்ஸில்வேனியாவில் உள்ள டிராகுலா லண்டன் மாநகரின் முக்கியமான மையங்களில் சொத்துகளையும் நிலத்தையும் வாங்கிப்போடுவது,இங்கிலாந்தின் ஒளிபொருந்திய தூய்மையான இளம்பெண்களை மயக்கிக் கொல்வது அல்லது தன் மணப்பெண்களாய் ஆக்குவது போன்றவற்றை அக்காலத்திய இங்கிலாந்தின் ஆழமான அச்சங்களின் கூட்டுத்தொகையாகப் பார்க்கமுடியும்.அதை இருபத்தோராம் நூற்றாண்டில் இருந்தபடி இப்போதும் நம்மால் அனுபவப்பூர்வமாகப் புரிந்துகொள்ளமுடிகிறது என்பதே இது மனிதசமூகங்களின் என்றென்றைக்குமான நிரந்தரச் சிக்கல்களில் ஒன்று என்பதற்கான சாட்சியம்.அதாவது நம்மையும் நாம் அல்லாத அவர்களையும் பிரித்து நிறுத்தும் முடிவற்ற கோடு மற்றும் அதன் அழிவின்மை .

ஓவியம் : பிரான்சிஸ்கோ கோயா

பெண்ணுடலைத் தாக்குவது, அவர்களை மதிமயக்கி அடிமையாக்குவது என்பது ஒரு நிலத்தை படையெடுத்து ஆக்கிரமிப்பதன் மாற்றீடாகவே எல்லா சமூகங்களாலும் எடுத்துக்கொள்ளப்பட்டு வந்துள்ளது.தவிர டிராகுலா, தான் கிறித்தவ கடவுளால் வஞ்சிக்கப்பட்டவனாய் தன்னை எண்ணிக்கொள்பவன்.இந்தப் பின்னணியில் பார்த்தால் டிராகுலா மீதான அச்சம் கலாச்சார மாற்றங்களைக் குறித்ததாகவும் தோற்றமளிக்கிறது. டிராகுலாவின் ஆன்மிக அடையாளமும் கலாச்சார அடையாளமும் அப்போதைய விக்டோரிய இங்கிலாந்தின் கூட்டு மனநிலைக்கு எதிரானதாக இருந்திருக்கும்.அந்நிய பண்பாட்டு கூறுகளின் சுதந்திரப் புழக்கத்தை ஒருவித கலாச்சாரத் தற்கொலையாக கருதியோர் அப்போதும் இருந்திருப்பர். அத்தகைய பயங்களின், அச்சமூகத்தின் மறைநிழல்களின் உளவியல் வெளிச்சுமத்தலாக(Projection) புனையப்பட்டுள்ளார் டிராகுலா.அதன் மூலம் நூற்றாண்டுக்கு முன்பே மாபெரும் மாற்றமர்வு (Greater replacement)கோட்பாடின் பண்டைய அதிர்வலைகளை எழுப்புகிறார்.

மற்றவர்களோடு கலந்து வாழ்வதே எதிர்காலம் என்ற பாடம் கடினமானது.நாம் அதில் இன்னும் கற்றுத் தேரவில்லை(இதில் கிழக்கு மேற்கு என்றெல்லாம் இல்லை)எதிரே வரும் அந்நியரை பார்த்துச் சிரிக்க முடிகிற காலம் வரை,அதாவது நான் உன்னைக் கடிக்கமாட்டேன் என்று உறுதியளிக்க முடிகிறவரை, அத்தேர்வில் வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது நமக்கு.டிராகுலா ஒரு ரத்தக்காட்டேரி.காட்டேரிகளின் அரசன்.ஆனால் அவரால் சிரிக்க முடிகிறது.பலவிடங்களில் சிரிக்கவும் செய்கிறார். என்ன, அவரது சிரிப்பு வேறானது.


3.
காட்டேரிகளின் நாட்டார் வழக்காறு, பெருந்தோற்று காலத்தில் நிகழும் பீதியையும் தொடர் மரணங்களையும் விளக்கத் தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.அதேபோல இது, சில ரத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தவறான மனப்பதிவுகளால் உருவாக்கப்பட்ட கற்பனையாகவும் இருக்கலாம் என்று அறிவியல் தரப்பில் விளக்கம் இருக்கிறது.ஆனால் அது நமது கற்பனையைத் திருப்தி செய்யவில்லை.காரண ரீதியிலும் அவ்விளக்கம் நிறைவளிக்கவில்லை. ஏனெனில் இந்த விளக்கம் அளிக்கப்படும் கால அவகாசத்திற்குள் காட்டேரிகள் எதார்த்த உலகில் இருந்து தொன்மங்களின் நிழலுலகிற்குள் வந்துவிட்டன. ஒரு தொன்மம் புற எதார்த்ததில் இருந்து தோன்றி இருந்தாலும், காலத்தின் நீண்ட மணல்வெளியில் ஓடி வந்திருப்பது. பல கோடி மனங்களின் வண்ணங்களையும் தாதுக்களையும் கரைத்து ஏற்றிருப்பது.எனவே ஒற்றை விளக்கத்திற்குள் அடைக்கவியலாதது. மெச்சும்படியான இலக்கியத்தரத்தில் புனையப்பட்டதில்லை எனினும் டிராகுலாவை பாப்புலர் கிளாசிக்காக மாற்றியது இந்த அம்சம்தான்.அதாவது டிராகுலா என்னும் நவீனத்தொன்மத்தின் அறியாப்பிறப்பும் தீராத்தனமும் அந்நூலில் வெற்றிகரமாக ஒப்புருவாக்கம் பெற்றிருப்பதே அதற்குக் காரணம்.

தொற்று பரவுவது டிராகுலாவின் கடியின் மூலம்.கொரோணோவில் இருந்து சாதாரண சளிக்காய்ச்சல் வரை மனிதன் உட்பட பல்வேறு உயிர்கள் வாயிலாகப் பரவக்கூடிய தொற்றுகள் உண்டு.ஒருவகையில் பார்த்தால் இது உயிரின் மறுஉற்பத்தி தொடர்பான ஆதி இச்சையாக இருக்கிறது. இன்னொரு திசையில் இது உயிர்தரித்தலின் தவிர்க்கவியலாத காரியமாக உள்ளது. தாம் உயிர் வாழ மனிதரத்தம் தேவை என்பதாலேயே காட்டேரிகள் மற்றவர்களைத் தாக்குகின்றன.ஆனால் அதன் விளைவாக காட்டேரிகளையும் அவை உற்பத்தி செய்கின்றன.அப்பட்டமாக கிருமிகளின் வாழ்வு இது.டிராகுலா ஒரு காட்டேரியாக இருந்தாலும் அடிப்படையில் அவன் கிருமி. மேலும் எலிகள் போன்ற ஜந்துகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவராகவும் டிராகுலா கூறப்படுகிறார்.எனவே காட்டேரித்தனம் என்பது கொள்ளைநோய்க்கான குறியீடு என்பது நமது அறிவையும் கற்பனையையும் தொந்தரவு செய்யாத விளக்கங்களில் ஒன்றாகத் தொடர்கிறது.

இப்படியாக, காலவோட்டத்தில் கரடுதட்டிப்போன பேரரசின் மக்கட்திறளானது, தன்னில் இருந்து வேறுபட்டிருக்கும் விநோதமான அந்நியனை அஞ்சும்;அது அவனை எதிரியாக மட்டுமல்ல சாத்தானாகவும் காட்டுமிராண்டியாகவும் மிருகமாகவும் ஏன் நோய்க்கிருமியாகவும் கற்பனை செய்துகொள்ளும் என்பதற்கு டிராகுலா நல்ல உதாரணம்.

ஜானதனும் மற்றவர்களும் முன்னோக்கிச் செல்லும் நவீன சமூகத்தின் வளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.அவர்கள் எதிர்காலத்தை நோக்கிச் செல்பவர்கள்.டிராகுலா வேறொரு காலகட்டத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல கடந்தகாலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவரும் கூட.’புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்வது என்னைக் கொன்றுவிடும்’ என்று அஞ்சுபவர். ஏனெனில் பேய் என்பது இறந்த ஒன்று மட்டுமல்ல அது இறந்த காலத்தைச் சேர்ந்த ஒன்றும் கூட.இறந்தும் உயிர் வாழ்வது. ஒருவகையில் நிகழ்காலத்தில் இறந்தகாலம் மேற்கொள்ளும் அச்சுறுத்தும் குறுக்கீடே பேய்நிகழ்வு எனச்சொல்லலாம்.

நமக்கு இரண்டு முரண்பட்ட ஆசைகள் உள்ளன.ஒன்று மரணத்திற்குப் பிறகும் நீளும் வாழ்க்கை அல்லது சாகாவரத்தின் மீதான வேட்கை.இன்னொன்று மரணித்தவை மீண்டும் வாழ்க்கைக்குள் திரும்பி வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை.வாழ்வின் முடிவையும் முடிவின் வாழ்வையும் நாம் விரும்புவதில்லை.இந்த முரண், பேய்கள் மீதான நமது தொடர் மோகத்திற்கான காரணங்களில் ஒன்று எனக்கூறலாம்.வாசிப்பனுபவமோ பார்வையாளனின் அனுபவமோ எதுவாயினும் அது வாழ்வின் நகலனுபவமே என்ற நம்பிக்கை நம்மிடம் உண்டு.அந்த நம்பிக்கை மனத்தின் ஆழத்தில் ஊன்றியிருக்கையில்,படைப்பின் ஊடான பயணத்தில் எதிர்படும் அமானுஷ்யமும் ஆபத்துகளும் சாகச உணர்வை மட்டுமன்றி விசித்திரமான கதகதப்பையும் அளிக்க வல்லதாகி விடுகிறது.வெளியே திகிலூட்டும் பேரபாயங்கள் சூழ்ந்திருக்க உள்ளே பத்திரமாக இருந்தபடி நாமும் அதில் பங்கெடுப்பது ரகசியக் கிளர்ச்சியை உருவாக்குகிறது.நமது பாதுகாப்புணர்வு பற்றிய உத்தரவாதத்தைப் பலப்படுத்துவதுடன்,மேற்சொன்ன நமது முரண்பட்ட ஆசைகளிலும் உரசிச் செல்வதாலேயே நாம் அமானுஷ்யப் படைப்புகளை விரும்புகிறோம் என நினைக்கிறேன்.தவிர, இன்னும் சாத்தியம் உள்ளது, இன்னும் வேறு எதார்த்தங்கள் உள்ளன என்ற கற்பிதத்தையும் அவை வாழவைக்கின்றன. பேய்ப்படைப்புகளை ஒருவகையில்,கடவுள் நம்பிக்கை என்னும் ஓவியம் மேல், ரொம்பநாளாய் படர்ந்துகொண்டிருக்கும் மங்கலைச் சரிக்கட்ட முனையும் சந்தைப் பொருளாதாரத்தின் இருண்ட பிரதிகளாகவும், இன்னொருவகையில் ஆன்மிகத்தேட்டத்தின் தலைகீழ் மார்க்கம் என்றும் குறிப்பிடலாம்.பின்னிரவில் துயில் கலைந்து உறக்கத்திற்குத் திரும்ப முடியாத எவரும் பார்த்திருப்போம், இறந்த நினைவுகள் கூர்நகங்களால் மண்ணைத் துளைத்து ரத்தம் குடிக்க வருவதை.அப்படியெனில் பேய்க்கதைகள் பேய்கள் பற்றியவை அல்ல.நமது அச்சங்கள் பற்றியவை.நமது ஒவ்வொரு அச்சத்தையுமே பேய்க்கதையாக மாற்றிவிடமுடியும்.நமது உயரதிகாரி பற்றிய அச்சத்தை,துணையின் நடத்தை பற்றிய அச்சத்தை,மேடை குறித்த அச்சத்தை,கரப்பான்பூச்சிகள் மீதான அச்சத்தை என ஒவ்வொரு அச்சத்தையும் வைத்து அமானுஷ்யங்களைப் புனையமுடியும். பேய்கள் இல்லாவிடினும் அச்சம் இருக்கும்.கடவுள் இல்லையெனினும் பிரார்த்தனை இருக்கும்.

4.
மனிதன் உருவாக்கும் மற்றமையின் பிம்பத்தில் பெரும்பாலான அம்சங்கள் விலங்குலகில் இருந்து எடுத்தாளப்பட்டிருப்பதைக் காணலாம்.அவை நாகரிகத்திற்கு எதிரான குறியீடாக அமைபவை.தொடக்ககால ரத்தக்காட்டேரிகள் அகோர உடலுடன் அரைமிருக உடற்கூறுகளுடன் கிட்டத்தட்ட மிருகத்தோற்றத்தைக் கொண்டிருந்தன. நவீன உலகிற்குள் வந்து வாழ்ந்து போன டிராகுலாவே கைகளில் ரோமத்துடன் இருப்பதைக் காணமுடிகிறது.அவருக்குப் பின்னால் வந்த காட்டேரிகளோ காட்டில் இருந்து வெகுதூரம் வந்தவிட்டவர்களாத் தோன்றுகின்றனர். டிராக்குலாவின் கடி தாக்குதலாக மட்டுமல்லாது பாலியல் குறியீடாகவும் பார்க்கப்படும் ஒன்று,ஏவாள் ஆப்பிளைக் கடிப்பது போல. ஆன் ரைஸ் போன்ற பிற்கால எழுத்தாளர்களின் நாவல்களில் இந்தக் கடி இன்னும் இன்னும் மென்மைப்பட்டு முத்தம் எனவே மாறிவிடுகிறது.

இப்போது காட்டேரிகளும் விரும்பத்தக்கனவாய் மாறியுள்ளன.சில அதியாற்றல்கள் கொண்ட மர்மமான வசீகரமிக்க புறநடையாளர்களாகப் படைக்கப்படுகின்றன அவை. காடு விட்டுவந்த விலங்குகளாய் அல்லது இடிபாடுகளில் இருந்து பறந்து வரும் வவ்வால்களாகச் சித்தரிக்கப்பட்டவை, மனிதனோடு இருந்து இருந்து சமூக உயிரிகள் போலவே மாறிவிட்டன இன்று.எப்போதோ வனம் நீங்கிய ஓநாய்கள் நமது சோடியம் விளக்கு தெருக்களில் அநாதையாக நடமாடுவதைப் போல, காட்டேரிகள் இன்று டிஜிட்டல் திரைகளில் நடமாடுகின்றன. கேளிக்கையின் வெற்றுக்கூடாகவும் தென்படுகின்றன.

இறுதியில் சென்று உயிர்நீக்க, டிராகுலாவிற்கு டிரான்ஸில்வேனியாவில் கோட்டைவீடு இருந்தது.சமகாலக் காட்டேரிகளுக்கு திரும்ப ஊர் கிடையாது,பூர்வீக வீடு கிடையாது. அவர்கள் வரலாற்றின் புறநகர்ப்புதல்வர்கள். அவர்களுக்கும் காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை எல்லாம் உண்டு.அதில் அன்புக்காகவும் ஏற்புக்காகவும் நித்தமும் ஏங்கவேண்டும். யோசித்துப்பார்த்தால் நித்தியஜீவிகளான அவற்றின் வாயிலாகவே இருத்தலியலின் முழுமையான தனிமைத்துயரையும் சலிப்பையும் அர்த்தமின்மையையும் வெளிப்படுத்தமுடியும் என்று படுகிறது.

இதையெல்லாம் தொடங்கி வைத்தவர் கவுண்ட் டிராகுலா.அவர்தான் காட்டேரிகளிடம் ஒரு நெகிழ்தன்மையை அறிமுகம் செய்தார்.விலங்கு நிலையில் இருந்த அவற்றை கிட்டத்தட்ட ஒரு நவீன மனிதனாக,பெருநகரத்தில் இளம்பெண்ணை ஒருத்தியைச் சினிமாவிற்குக் கூட்டிச் சென்று மடிக்ககூடிய காதலனாக மாற்றிக்காட்டினார்.அப்படியாக நவீன யுகத்தில் காட்டேரிகளுக்கு ஒரு வாழ்வை அமைத்துக்கொடுத்தார்.புன்னகையின் மனிதாய அர்த்தத்தை துடைத்து அதன் ஆதி நிலைக்கு இட்டுச்சென்றார்.சிரிப்பின் பின்னணியில் உள்ள வேட்டைக் குறியீட்டை,நினைவில் பளிச்சிட்டு பதுங்கும் மிருக தரிசனத்தை சில்லிடும் வகையில் எடுத்துக்காட்டியது அவர்தான்.அதோ,அவர் முகமன் கூறுவது போல நகைக்கத் துவங்குகிறார்.அப்போதே, தான் யார், தன் நோக்கம் என்ன என்பதையும் உளப்பூர்வமாக வெளிப்படுத்துகிறார்.அது ஓர் அசாதாரணமான தன்வெளிப்பாடு.பற்களை மீண்டும் ஆயுதமாக்குகிறார்.நகையைக் கட்டுடைக்கிறார்.

இருபத்தோராம் நூற்றாண்டின் இன்றைய தருணத்தில் தனக்குத் தானே சிரித்துக்கொள்ளும் மனிதன் அக்காட்டுநகையாளனிடம் இருந்து வெகுதொலைவிற்கு வந்துவிட்டான் இல்லையா.இல்லை இன்னும் வரவில்லையா.தேவதச்சனின் இந்தக் கவிதையில் வரும் மனிதனுக்கு சிரிப்பு தாங்கவில்லை.அதற்குக் காரணமும் தெரியவில்லை.மேற்சொன்ன எந்த விளக்கமும் அதற்குப் பொருந்தாது.ஏனெனில் இது வேறு சிரிப்பு.

மொழி

எனக்கு சிரிப்பு தாங்கவில்லை
கொண்டாட்டமாக இருக்கிறது
இந்த நிமிஷம் நான்
உயிரோடு இருக்கிறேன்
கண்கள் இல்லாம கண்களால் பார்க்கிறேன்
எல்லாத் தேர்வுகளிலும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்
முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன்
முகத்தைத் தொங்கப்போடுகிறேன்
முகத்தை எங்கே வைப்பது என்று
தெரியாமல் திணறுகிறேன்
வழியில்
விபத்துக்குள்ளான வாகனம் ஒன்றில்
இரும்புச் சிதறல்கள் அதில்
நேற்றைய மழை தேங்கியிருந்தது
ஆனால் நான்
தனியாக இல்லை நல்ல வேளை
என் எண்ணங்கள் எப்போதும்
கூட இருக்கின்றன
ஏனோ
சிரிப்பு தாங்கவில்லை
என் சிரிப்பு
யாருடைய மொழி

சபரிநாதன். கவிதைகள், விமர்சனத் திறனாய்வு ஆகிய துறைகளில் தீவிரமாக ஈடுபடுகிறவர். "களம் காலம் ஆட்டம்", "வால்" என்று இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். விகடன் விருது, விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது, யுவபுரஸ்கார் விருது ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

1 Comment

  1. Euphemistically written. இன்னும் எத்தனையோ முன்னோடிகளின் படைப்புகளை இன்றைய காலகட்டத்தில் நோக்குகையில் எரிச்சல்தான் வருகிறது.எது எதுக்கெல்லாம் துதிபாடிக்களித்தனரோ அவையெல்லாம் மிதிபடும் காலமிது .நீண்ட இடைவெளிக்குப்பிறகு சபரியின் எழுத்தைப் படிப்பது மகிழ்ச்சி.

உரையாடலுக்கு

Your email address will not be published.