/

ஆஹா சாஹித் அலி கவிதைகள்

தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

1. நீ வரும்போது மெழுகுவர்த்தி கூட வேண்டாம்

இருளைச் சேமித்துவைக்க
நமக்கு ஓரிடம் எப்போதும் தேவை

ஆனால் உன் வீட்டிலோ பட்டப்பகலிலும்
எல்லா விளக்குகளும் எரிகின்றன

ப்ளோரசெண்ட் என்று நீ உரைக்கும் விளக்குக் குமிழ்களோ
சவர்க்காரம் போன்றவை
சுவர்களையும் கூரையையும் வெளுத்துவிடுகிறது

உனது எந்திரத் துடைப்பானோ
தரைவிரிப்பில் மிச்சமிருக்கும் நிழல்களை
உறிஞ்சிவிடுகிறது

படிகளில் ஏறும்போது
உனது காலடிச் சத்தங்கள்
மெழுகால் பூசப்பட்டுவிடுகின்றன

உனது வீட்டில் நான் அன்னியனாக மட்டுமே இருக்கமுடியும்.

எனது வீடோ தசாப்தங்களின் நசநசப்போடிருக்கிறது
இருண்ட சூரியன் அங்கே

நான் எனது விளக்குகள் அனைத்தையும் அணைத்தே வைத்திருக்கிறேன்
ஜன்னல் மறைப்புகளையும் பகலில் மூடிவிடுகிறேன்

நீ வரும்போது
ஒரு மெழுகுவர்த்தியைக் கூட கொண்டுவர
வேண்டாம்.

2. ஒரு தவறான திரும்புதல்

எனது கனவில் எப்போதும்
படுகொலைகள் நடந்த நகரத்தில் இருக்கிறேன்
அதன் பெயர் வரைபடங்களிலிருந்து அழிக்கப்பட்டது
வழிகாட்டுப் பலகைகளும் இல்லை.
ஒரு தவறான திரும்புதல்தான்
என்னை இங்கே கொண்டுவந்திருக்கிறது

இங்கே மதியச் சூரியன் மட்டுமே தரித்திருக்கிறது.
ரத்தம் உலர்ந்த கில்லட்டின்கள்
பீடங்களில் கழுத்தறுக்கப்பட்ட கடவுளர்கள்
எலும்புகள் நிரம்பிய வற்றிய கிணறுகள்
ஆவிகளின் மீது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு
நான் தனியாக, கொடூரங்களுக்கு மத்தியில் நடக்கிறேன்.

இந்த மனிதர்கள் எல்லாம் யார்?
அவர்களின் கதையை முடித்தவர் யார்?
புழுதிக்கென்று எழுத்துமுறை இருந்தால்
நான் அதை அறிந்துகொள்ள முடியலாம்.

அந்த நகரத்திலிருந்த
அமானுஷ்யம் படர்ந்த நிலையத்தின்
சவுக்கையில்
ஒட்டடைக்குள்
கையைத் திணித்தேன்
நடைமேடை
பாம்புச்சட்டை படர்ந்த பாறை
துருப்பிடித்த தண்டவாளங்கள்
தொலைந்துபோன ரயிலுக்காகக்
காத்திருக்கின்றன,
பயணச்சீட்டோ இறந்த சிலந்தி
கல்லென கையில் திடமாக.

3. டெல்லி ரயில் நிலையத்தின் வெளியே நடைபாதையில் அமர்ந்திருக்கும் ஜோதிடரின் விதி

“பாருங்கள், வானத்தை உற்றுப் பாருங்கள்”
கடந்து செல்பவர்களிடம் உரக்கக் கத்துகிறார்.
கடந்து செல்லும் ட்ரக் வண்டிகள் கிளப்பும் புழுதி
மண்டுகின்றன.

4. தகனம்

தசைக்கு நாங்கள் தீ வைக்கும்போது
உனது எலும்புகள் பொசுங்க மறுக்கின்றன
மரணத்தில்
நீ திடமாய் இருப்பாயென்று
யாரால் ஊகித்திருக்க இயலும்?    

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

2 Comments

  1. சிறப்பு மிக்க கவிதை மொழிபெயர்ப்பு , வலியும் வலிமை மிகவும் அதில் உள்ளே பொதியப்பட்டிருக்கிறது, அருமை சார்…

உரையாடலுக்கு

Your email address will not be published.