/

கலையே உளசிகிச்சையாய் (பகுதி 2) : அலான் டி பாட்டன் & ஜான் ஆர்ம்ஸ்டிராங்க்

தமிழில் : தென்னவன் சந்துரு

(1) பெர்னாண்டோ பெசோவா – ரிச்சர்ட் செர்ரா

கலையே உளசிகிச்சையாய் (பகுதி 1)

கலை நமக்காகச் செய்யக்கூடிய எதிர்பாராத முக்கியமான விஷயங்களில் ஒன்று, நாம் எப்படி இன்னும் வெற்றிகரமாக வேதனையுறலாம் என்பதைக் கற்றுக்கொடுப்பது. ரிச்சர்ட் செர்ராவின்(Richard Serra) பெர்னாண்டோ பெசோவாவை(Fernando Pessoa) கவனியுங்கள். அது துயரத்துடனான ஆழ்ந்த ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது.

வழக்கமாக, சமூகத்தின் பொதுவெளி உரையாடல் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவுமே இருக்கும். நம் பிரச்சனையை யாராவது ஒருவரிடம் சொன்னால், உடனடியாக நமக்கு ஒரு தீர்வைத் தேடிவிடுவார்கள். நம்மை பிரகாசமான திசையில் வழிநடத்த முனைவார்கள். ஆனால் செர்ராவின் படைப்பு, நம் பிரச்சனைகளை மறுப்பதில்லை; அது நம்மை உற்சாகப்படவும் சொல்லவில்லை. வாழ்க்கையின் ஒப்பந்தத்திலேயே, துயரம் எழுதப்பட்டுள்ளது என்றே சொல்கிறது. பிரம்மாண்டத்தையும் பட்டவர்த்தனமான நிரந்தரத்தன்மையினையும் வெளிப்படுத்துகிற இந்த ஆக்கத்தின் குணாதிசயம், துயரத்தின் இயல்பை பிரகடனப்படுத்துகிறது.

லண்டன் ட்ரஃபல்கர் சதுக்கத்தின் மையத்தில் உள்ள நெல்சனின் தூண், தன்னால் கடற்படையின் வீரத்தின் முக்கியத்துவத்தை நாம் உனர்ந்துகொள்வோம் என்று நம்புவதைப் போலவே, செர்ராவின் படைப்பும் செயல்படுகிறது. துயரம் பற்றி நன்கு அறிந்த போர்த்துகீசிய கவிஞரின் பெயர் சூட்டப்பட்ட (“ஓ உப்புக் கடலே, உன் உப்பில் எவ்வளவு பங்கு போர்ச்சுகலின் கண்ணீரால் ஆனது”), செர்ராவின் “பெர்னாண்டோ பெசோவா” ஆக்கம், இருண்மையானதும் புனிதமானதுமான உணர்ச்சிகளை நம்மால் ஓர் இடத்தில் அடையாளம் காணவும் எதிர்வினையாற்றவும் முடியும் என்று நம்புகிறது.

(2) நெல்சன் தூண்

துயரத்தின் இத்தகைய மனநிலைகளோடு ஒருவர் தனித்திருக்க வேண்டியதில்லை. அவை வாழ்க்கையின் மைய அம்சங்கள் என்றும் உலகப் பொதுவானவை என்றும் கலை பிரகடனப்படுத்துகிறது. மிக முக்கியமாக, செர்ராவின் படைப்பு துயரத்தை கண்ணியமான முறையில் முன்வைக்கிறது. அது உள்விவரங்களுக்குச் செல்வதில்லை; துன்பத்திற்கான எந்த குறிப்பிட்ட காரணத்தையும் ஆய்வு செய்வதுமில்லை.  மாறாக, அது துயரத்தை பிரம்மாண்டமானதாகவும் எங்கும் நிறைந்த உணர்ச்சியாகவும் முன்வைக்கிறது.

சாரமாக அது அறிவிப்பது இதுதான் “துயரமாக உணரும்போது, நீங்கள் ஒரு மரியாதைக்குரிய அனுபவத்தில் பங்கேற்கிறீர்கள். அதற்கு நான் இந்த நினைவுச்சின்னத்தை அர்ப்பணிக்கிறேன். சுய போதாமையின் வருத்தத்தாலும் விரக்தியடைந்த நம்பிக்கைகளாலும், இழப்புணர்வையும் ஏமாற்றத்தையும் உணரும்போது,  அது உங்களை ஒரு தீவிர நிலைக்கு உயர்த்தும். அந்த துயரத்தை நீங்கள் பொருட்படுத்தாமல் இருக்கவோ தூக்கி எறியவோ தேவையில்லை”.

கலைச் சாதனையின் பெரும்பகுதியை, கலைஞனிடத்தே ‘உன்னதமாக்கப்பட்ட’ துயரங்களில் காணலாம். போலவே அதை உள்வாங்கும்போது பார்வையாளர்களிடையேயும் காணலாம். உன்னதமாக்கல் (sublimation) என்ற கருத்தாக்கம் அடிப்படையில் வேதியியலில் இருந்து வந்தது. ஒரு திடப்பொருள் திரவமாக மாறாமல் நேரடியாக வாயுவாக மாறும் செயலையே வேதியியலில் அப்பெயர் குறிக்கிறது. கலையில், உன்னதமாக்கல் என்பது உருமாற்றத்தின் உளவியல் செயல்பாட்டைக்  குறிக்கிறது. சாதாரண அடிப்படை அனுபவங்கள், மேன்மையானவையாக, உன்னதமானவையாக மாற்றப்படுகின்றன. அதாவது துக்கம் கலையை சந்திக்கும் போது எது நடக்க வேண்டுமோ அது நடக்கிறது.

பல துயரங்கள் மோசமானவையாக எஞ்சக் காரணம், துயரத்தில் நாம் தனித்திருப்பதாக உணர்வது தான். நமது பிரச்சனையை ஒரு சாபமாகவோ அல்லது நமது மோசமான சீரழிந்த குணத்தை வெளிப்படுத்தும் விஷயமாகவோத்தான் அறிகிறோம். அதனாலேயே நம் துயரங்கள் கண்ணியமற்றவையாகவும், நம் பிறழ்வுத் தன்மையால் மட்டுமே நிகழ்பவையாகவும் தோன்றுகின்றன. உண்மையில் நமது மோசமான அனுபவங்கள் சிலவற்றில் மரியாதையைக் கண்டறிவதற்கு உதவி தேவைப்படுகிறது. கலை அவற்றுக்கு சமூக வெளிப்பாட்டைக் கொடுக்கிறது.

(3) என் கண்ணாடியில் சியோபன் – நான் கோல்டின் புகைப்படம்

சமீப காலத்திற்கு முன்பு வரை, ஓரினச்சேர்க்கை கலைக்கு வெளியேதான் பெரும்பாலும் இருந்து வந்தது. நேன் கோல்டினின் (Nan Goldin’s) படைப்புகளிலோ, அது மையக் கருப்பொருட்களில் ஒன்றாக, மீட்சியாக உள்ளது. கோல்டினின் கலைப்படைப்புகள் தம் மையப் பாத்திரங்களின் வாழ்க்கையைப் பற்றி அதிகபட்ச கவனத்துடன் உள்ளன. அவர் புகைப்படத்தை பார்க்கும்போது, நாம்கூட முதலில் அதைப் பற்றி கவனமில்லாமல் இருக்கலாம். ஆனால் தன்பால் ஈர்ப்பாளரான ஓர் இளம் பெண் தன்னை கண்ணாடியில் உற்று நோக்குவது அதிகபட்ச அக்கறையுடன் புகைப்படமாக்க பட்டிருக்கிறது.

பிரதிபலித்து அறியும் திறனே இங்கு முக்கியமானது. அந்த அறையில் அந்த பெண்ணே குவிமையத்துக்கு வெளியேதான் இருக்கிறார். நாம் அவரை நேரடி கோணத்தில் பார்க்கவில்லை. அவருடைய முகத்தின் ஒரு பகுதியும், ஒரு கையும் மட்டுமே மங்கலாக தெரிகின்றன. அவள் பயன்படுத்தும் ஒப்பனை சாதனங்களே துல்லியமாக காண்பிக்கப்பட்டுள்ளன. கண்ணாடியில்கூட நாம் அவளை, அவள் தன்னை பார்க்க விரும்பும் விதத்திலேயே பார்க்கிறோம்: தனித்துவமாகவும் அழகாகவும். அவளுடைய கை மென்மையாகவும் அசைவு நயம் மிக்கதாகவும் இருக்கின்றன.

“நீங்கள் உங்களை எப்படி காண விரும்புகிறீர்களோ அப்படியே நானும் காண்கிறேன். உங்களை அன்பிற்கு உரியவராக கருதுகிறேன்” என்று கூறும் ஒரு கனிவான குரலாகவே கலைப் படைப்புகள் செயல்படுகின்றன. ஒருவர் தன்னை மெருகூட்டி நேர்த்தியானவராக மாற்றிக்கொள்ள நினைப்பதன் ஏக்கத்தை இப்புகைப்படம் புரிந்துகொள்கிறது. இது எல்லோருக்கும் புலப்படுகிற ஒரு நியாயமான விருப்பமாகத் தெரிந்தாலும், பல நூற்றாண்டுகளாக இது வெளிக்கொணரப்படவே இல்லை- கோல்டின்கள் இல்லாததனால்.

கலை நமது துயரமான நிலையை ஆய்வு செய்ய தீவிரமான வாய்ப்பை வழங்க முடியும். குறிப்பாக நட்சத்திரங்களையும் ஆழ்க்கடல்களையும் மலைச் தொடர்களையும் பெரும் நில பள்ளத்தாக்குகளையும் சித்தரிக்கிற கற்பனாவாத ‘உன்னதமாக்கப்பட்ட’ (sublime) கலைப்படைப்புகளில் அது உண்மையெனவே ஆகிறது. இந்தப் படைப்புகள் நமது முக்கியத்துவமற்ற அற்பமான நிலையை நமக்கே உணர்த்துகின்றன. நம் வாழ்வின் பயங்கரங்களை உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன. வாழ்வின் நித்தியமான வழிகளுடன் ஒப்பிடுகையில் மனிதனின் பேரழிவுகள் எவ்வளவு சிறியவை என்பதை உணர்த்தி, ஒவ்வொரு வாழ்வும் உள்ளடக்கியுள்ள விளக்க முடியாத துயரங்களுக்கு தலைவணங்க நம்மை கொஞ்சம் தயார்படுத்துகின்றன.

இந்த இடத்தில், நம் சாதாரண எரிச்சல்களும் கவலைகளும்  சமநிலைக் கொள்கின்றன. நம் இருப்பின் முக்கியமின்மையை வலியுறுத்தி  அவமதிப்புகளை தீர்த்துவைப்பதற்கு பதிலாக, ஒரு கலைப்படைப்பின் மூலம், அடிப்படையான சூனியத்தன்மையினை கண்டறியவும், பாராட்டவும் முயற்சி செய்யலாம்.

நம் அன்றாட வாழ்வில் குறைவான தருணங்களிலேயே உன்னதத்தை(sublime) அறிகிறோம். பொதுவாக அது தற்செயலாகவே நிகழ்கிறது. சில நேரம், நெடுஞ்சாலையில் தொலைதூர மலை மீது மழை மேகங்களை உடைத்து வெளிவரும் சூரிய ஒளியை காண்கிறோம். சில நேரம் வான் பயனத்தின்போது விமான பொழுதுபோக்குகளிலிருந்து விலகி, பெர்னீஸ் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களையோ (Bernese Alps), சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்(Singapore Strait) முழுதும் உள்ள எண்ணெய் லாரிகளின் விளக்குகளையோ கவனிக்கிறோம். அப்போது உன்னதத்தை அறிகிறோம். கலை இந்த தற்செயல் நிகழ்வுகளின் வாய்ப்பை அதிகரிக்கிறது. துயரத்திலிருந்து மேலே எழுவதற்கான முயற்சிகளின்போது, தொடர்ந்து அணுக முடிகிறபடியான நம்பகமான பயனுள்ள அனுபவங்களை உருவாக்கும் கருவிகளை கலை வழங்குகிறது.

காஸ்பர் டேவிட் ஃபிரெட்ரிச்(Caspar David Friedrich) தன் படைப்புகளில் பயன்படுத்துகிற துண்டுப்பட்ட பாறை உருவங்களும், தனியான கடற்கரை  விரிவும், பிரகாசமான தொடுவானமும், தொலைதூர மேகங்களும் மற்றும் வெளிர்ந்த வானமும் ஒரு குறிப்பிட்ட மனநிலைக்கு நம்மை கொண்டு செல்கின்றன.

(4) காஸ்பர் டேவிட் ஃபிரெட்ரிச் ஓவியம்

ஒரு தூக்கமற்ற இரவுக்குப் பிறகான அதிகாலைப் பொழுதில், இருண்ட கடல்முனையில், மனித தொடர்புக்கு அப்பால், இயற்கையின் அடிப்படை சக்திகளுடன் தனியாக நடப்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். சாம்பல் கடலால் முடிவில்லாமல் அடித்துச் செல்லப்படும் தீவுப் பாறைகள் ஒவ்வொன்றும், ஒரு காலத்தில் சற்று தள்ளியுள்ள ராட்சச உருவமைப்புகள் போல வியத்தகு வகையில் பலமாய் தோற்றம் அளித்தவையே. மெதுவாக நகரும் காலத்தின் நீண்ட வழியில் ஒரு நாள் அவையும் கலைந்துவிடும்.

அந்த வானத்தின் முதல் பகுதி வடிவில்லாமல் இருக்கிறது. வெறுமையாய் இருக்கிறது. தூய்மையான வெள்ளி நிறத்தில் சூன்யமாய் இருக்கிறது. ஆனால் மேலே மேகங்கள் இருக்கின்றன. தம் பக்கவாட்டுகளில் ஒளியை சிறைபிடித்திருக்கின்றன. நம் கவலைகள் எதையும் பொருட்படுத்தாமல் தற்செயலான வழிகளில் சீரற்று அலைகின்றன. இந்த படம் நேரடியாக நமது உறவுச் சிக்கல்களையோ அல்லது நமது அன்றாட வாழ்வின் மன அழுத்தங்கள் மற்றும் இன்னல்களையோ குறிக்கவில்லை. அதன் நோக்கம் நம்மை கால,வெளியின் பிரம்மாண்டத்தை பற்றிய தீவிர விழிப்புள்ள மனநிலைக்கு வழிவகுப்பதேயாகும்.

இந்த படைப்பு துயரைச் சொல்லவில்லை. அமைதியாக இருக்கிறது. அதே நேரத்தில் அவநம்பிக்கை இல்லாமலும் இருக்கிறது. அந்த மனநிலையில் -இன்னும் கற்பனாவாத தன்மையில் சொல்வதானால், அந்த ஆன்ம நிலையில்- நாம் எப்போதும் கலைப் படைப்புகளுடன், நம் முன் இருக்கும் தீவிரமான, தீர்க்க முடியாத மற்றும் குறிப்பிட்ட துயரங்களைச் சமாளிக்க, மேம்பட்ட முறையில் தயாராக இருக்கிறோம்.

தென்னவன் சந்துரு

வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.