/

கலையே உளசிகிச்சையாய் (பகுதி 1) : அலான் டி பாட்டன் & ஜான் ஆர்ம்ஸ்டிராங்க்

தமிழில் தென்னவன் சந்துரு

(1)லில்லி குளம் – மோனெ

“கலையே உளசிகிச்சையாய்” (Art as Therapy) எனும் நூல், ஸ்விஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர் , அலான் டி பாட்டன் (Alain de Botton) மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கலை கோட்பாட்டாளர், ஜான் ஆர்ம்ஸ்டிராங்க் (John Armstrong) இருவராலும் இணைந்து எழுதப்பட்டது. ஓவியம், புகைப்படம், சிற்பம் முதலிய நுண்கலைகளை வாழ்வின் பகுதியாக மாற்றுவதன் வழியே அவற்றை உளசிகிச்சைக்காக பயன்படுத்த முடியும் என இந்நூல் ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.  கலையின் பயன்கள் வெவ்வேறு விதங்களில் இந்நூலில் விரித்துரைக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு நம்பிக்கை அளிப்பது கலையின்  முதன்மையான பயன்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்படுகிறது. “நம்பிக்கை” எனும் தலைப்பு கொண்ட அத்தியாயமே கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

-மொழிபெயர்ப்பாளர்

000

கலையில் நெடுங்காலமாக பிரபலமாக இருப்பவை – அழகு, மகிழ்ச்சி, இனிமை ஆகியவற்றை பிரபலிக்கும் படைப்புகளே. வசந்த கால புல்வெளிகள், கோடை நாட்களில் மரங்களின் நிழல், மேய்ச்சல் நிலப்பரப்புகள், சிரிக்கும் குழந்தைகள் போன்ற ஓவியங்களை உதாரணங்களாக சொல்லலாம். ரசனையும் புத்திசாலித்தனமும் உள்ளவர்களுக்கு இது உவப்பற்றதாக தோன்றக்கூடும்.

கண்ணுக்கினிய அழகின் கலையின் மீதான விருப்பமானது பொதுவாக மதிப்பற்றதாகவே கருதப்படுகிறது. இன்னும் கூடுதலாக, மோசமான எதிர்வினையையும் பெறுகிறது. ஆனால் கலையில் அது பரவலாகவும் மேலாதிக்கம் செலுத்துவதாகவும் இருப்பதால் கவனத்திற்குரியதாகவும் இருக்கிறது. கலையின் பிரதான செயல்பாடு பற்றிய முக்கியமான தடயங்களை அது தன்னில் கொண்டிருக்கக்கூடும்.

நாம் அழகான ஒவியங்களை ரசிப்பதன் அடிப்படைக் காரணம்,அவை பிரதிநிதித்துவம் செய்கிற உண்மையான விஷயத்தில் நமக்கும் விருப்பமிருப்பதே ஆகும். உதாரணமாக மோனெ(Monet) வரைந்த நீர் தோட்டங்கள்(1) நமக்கு உள்ளுர மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வகையான கலை, எதை சித்தரிக்கிறதோ அதை தங்கள் வாழ்வில் கொண்டிராத மனிதர்களுக்கு, மிக ஈர்ப்பாக இருக்கிறது எனலாம். இரைச்சலான நகரத்தில் உள்ள ஓர் உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் மறுவுருவாக்கம் செய்யப்படும் இவ்வகையான ஓவியம், நீர் நிலைகளின் திறந்தவெளியின் அமைதியை அங்கே தூண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கலை சார்ந்த கல்வியில்லாத மக்கள், கலை என்பது அழகான விஷயங்களை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணத் தலைப்படுகிறார்கள். உடனே, கலாச்சார மேட்டுக்குடியினர் அது பற்றி பதற்றங்கொள்கின்றனர். அழகு பல காலமாகவே ஐயத்துடன் பார்க்கப்படுகிறது. அழகை பற்றிய கவலைகள் இரண்டு விதங்களிலானாவை. ஒன்று, அழகான ஒவியங்கள் மிகையுணர்ச்சியை (Sentimentality) ஊட்டுவதாகக் கூறப்படுகிறது. சிக்கலான விஷயங்களை எதிர்கொள்ள முடியாத போதாமையின் அறிகுறியாக இவ்வுணர்ச்சி கருதப்படுகிறது. இங்கே சிக்கலானவை என்று ஒருவர் உண்மையில் குறிப்பிடுவது – வாழ்வின் அன்றாட பிரச்சனைகளையே.

வாழ்க்கையை இனிமையாக்க ஒருவர் தன் குடியிருப்பை, பூச்சித்திரங்களால் பிரகாசமாக்கினாலே போதும் என்று அழகான ஓவியங்கள் பரிந்துரைப்பதாக தோன்றுகிறது. இப்படியான ஓர் அழகிய ஒவியத்திடம் உலகின் பிரச்சனை என்னவென்று கேட்டால் “உங்களிடம் போதுமான அளவு ஜப்பானிய நீர் தோட்டங்கள் இல்லை” என்று பதில் சொல்லக்கூடும்.  இந்த பதில் மனிதக் குலம் எதிர்கொள்ளும் எல்லா அவசிய பிரச்சனைகளையும் புறக்கணிப்பது போல் தோன்றும். (முதன்மையாக பொருளாதார பிரச்சனைகள். கூடவே அறம், அரசியல் மற்றும் பாலியல் சார்ந்தவை). இவ்வகை ஒவியத்தில் உள்ள தூய்மையும் எளிமையும், வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் எந்த முயற்சியையும் மூர்க்கமாக எதிர்ப்பதாகவும் எண்ணம் எழும்.

இரண்டாவதாக, அழகு நம்மை மரத்து போகச் செய்து, சுற்றியுள்ள அநீதிகளைப் பற்றி போதுமான விமர்சனத்தையும் விழிப்புணர்வையும் உருவாகாமல் செய்துவிடும் என்ற பயமும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மார்ல்பரோ பிரபுக்களின் வரலாற்று அரியணையான  பிளென்ஹெய்ம் அரண்மனையின்(2) அழகான படம் பதித்த அஞ்சல் அட்டையை ஆக்ஸ்போர்ட்டில் ஒரு கார் தொழிற்சாலை பணியாளர், வாங்கும்போது, அதன் சொந்தரக்காரரான தகுதியற்ற உயர்குடியின் அநீதியை அவர் கவனிக்க தவறலாம்.

(2)ஜான் வான்பிரக் வடிவமைத்த பிளென்ஹெய்ம்  அரண்மனை

இங்கு கவலை என்னவென்றால், நாம் மிக சுலபமாக இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்துவிடுவோம் என்பதும் வாழ்க்கை பற்றியும் உலகம் பற்றியும் போலியான நம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம் என்பதுமேயாகும். சுருக்கமாக, நாம் நியாயமற்ற விதத்தில் மிகையாய் நம்பிக்கை கொண்டுவிடுவோம்.

இந்த கவலைகள் பொதுவாக தவறானவை. மிகையுணர்ச்சி மற்றும் அதீத நம்பிக்கை சார்ந்த பார்வையைக் காட்டிலும், பெரும்பாலான நேரங்களில் நாம் அதிகப்படியான இருண்மையாலேயே பாதிக்கப்படுகிறோம். உலகின் பிரச்சனைகளையும் அநீதிகளையும் மட்டுமே அதிகப்படியாக அறிந்திருப்பதால் அவற்றை எதிர்கொள்ளும்போது சிறியதாகவும் பலவீனமாகவும் உணர்கிறோம்.

உற்சாகம் என்பது ஒரு சாதனையாகும். நம்பிக்கை என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். நாம் ஒரு செயலின்மேல் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதை பொறுத்தே அதன்  விளைவுகள் தீர்மானிக்கப்படுவதால் நம்பிக்கை முக்கியமானது. அது வெற்றியின் ஒரு முக்கிய அங்கம்.  நல்ல வாழ்க்கைக்கு முதன்மையாக தேவைப்படுவது திறமையே என்கிற மேட்டுக்குடித்தனமான பார்வைக்கு முரணானது இது. பல சந்தர்ப்பங்களில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசத்தை தீர்மாணிப்பது, எது சாத்தியம் என்பது பற்றிய நமது உணர்ச்சியும் நமக்குரியதை மற்றவர்களுக்கு புரியவைப்பதற்கு நம்மால் செலவழிக்க முடிந்த ஆற்றலுமேயன்றி வேறில்லை. திறன் குறைப்பாடு நம்மை அழித்துவிடமுடியாது. ஆனால் நம்பிக்கையின்மை அழித்துவிடும். இன்றைக்கு, அரிதாகவே மனிதர்களின் மிகையான நேர்மறை பார்வையால் பிரச்சனைகள் தோன்றுகின்றன. மாறாக உலகின் நெருக்கடிகள் தொடர்ச்சியாக நம் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதால் நம்முடைய நம்பிக்கைகளை இயல்புகளை பாதுகாப்பதற்கே கருவிகள் தேவைப்படுகின்றன.

ஹென்ரி மாட்டீசீன்(Henri Matisse) ஓவியத்தில் உள்ள நடனக் கலைஞர்கள்(3) பூமியின் நெருக்கடிகளை மறுத்துவிடவில்லை. ஆனால் யதார்த்தத்துடனான நம்முடைய சீரற்றதும் பிணக்குக்கூடியதும், அதே நேரம் சாதாரணமானதுமான உறவின் கோணத்திலிருந்து அவர்களுடைய மனநிலையை அறிந்து நாம் ஊக்கம் பெற்றுக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத நிராகரிப்புகள் மற்றும் அவமானங்களை கையாள ஏதுவாக நம்முள்ளிருக்கும் நம்முடைய சந்தோஷமான, கவலையற்ற பகுதிகளோடு அவர்கள் இணையச் செய்கிறார்கள். எப்படி அந்த ஓவியம், உதவிகரமான வட்டத்தில் பெண்கள் வெகு இணக்கமாக இருக்கிறார்கள் என்றோ,  மற்ற பெண்களின் அண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றோ சொல்லவரவில்லையோ அதே போல உலகில் எல்லாமே நல்லபடியாக இருப்பதாகவும் அந்த ஓவியம் சொல்லவில்லை.

(3) ஹென்ரி மாட்டீசின் “நடனம்” ஓவியம்

ஒருவேளை இந்த உலகம் இரக்கம் நிரம்பிய இடமாக இருக்குமேயானால் அழகான கலையாக்கங்களால் நாம் அதிகம் ஈர்க்கப்படாமலோ அல்லது அவை நமக்கு தேவையேப்படாமலோ இருந்திருக்கக்கூடும். கலையனுபவத்தின் விசித்திரமான கூறுகளில் ஒன்று – கண்ணீர் சிந்தவைக்கும் ஆற்றல். ஆனால் வேதனையானதையோ அல்லது அச்சமூட்டக்கூடியதையோ முன்வைக்கும்போது கண்ணீர் உருவாகாமல், இதயத்தையே ஒரு நொடி நொறுங்கச் செய்யும்படியான கருணையையும் லாவண்யத்தையும் முன்வைக்கும் கலையாக்கத்தில் கண்ணீர் ஏற்படுகிறது என்றால், அழகின் மூலம் ஆழமான எதிர்வினைகள் நேரும் இத்தகைய விசேஷ தருணங்களில் நமக்குள் என்ன நடக்கிறது?

வெறும் 41செமீ உயரம் கொண்ட சிறிய ஐவரி நிற மேரி சிலையின்(4) வலிமையான சிறப்பம்சம் என்பது அதன் வரவேற்கும் முகமே. நம்மை சந்திப்பதில் எந்த மனத்தடையும் கொண்டிராமல் பூரண மகிழ்ச்சியை மட்டும் வெளிப்படுத்துகிறவரிடம், நாம் எதிர்நோக்குகிற பார்வை அது. நாமும் அரிதாகவே அத்தகைய புன்னகையை எதிர்கொண்டிருக்கிறோம் அல்லது வெளிப்படுத்தியிருக்கிறோம் என்பதை நினைவூட்டக்கூடியது. வாழ்க்கையின் முழுமையோடு காட்சி தரும் மடோனா,எந்த தருணத்திலும் பெரிதாக மலர காத்திருக்கும் ஆனந்தத்தின் ஆரம்ப வெளிப்பாட்டுடன், கருணையால் நிரம்பியிருக்கிறாள். அதிலிருப்பது இனிய நகை உணர்ச்சி. உங்களை கேலி செய்யாமல் தன்னோடு சேர்த்துக் கொள்ளும் வகைப்பட்டது.

(4) கன்னியும் குழந்தையும்

அவளுடைய அழகு கலவையான உணர்ச்சிகளை ஏற்படுத்தலாம். அந்த சிலை அழகானதாய் இருக்கிறது. ஆனால் அது ஏன் நம்மில் கண்ணீரையும் தளும்பச் செய்கிறது?ஒருபுறம், வாழ்க்கை பொதுவாக எப்படி இருக்க வேண்டும் எனும் விழிப்பால் பரவசம் அடைகிறோம். மறுபுறம் வாழ்க்கை பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை எனும் கூர்மையான அறிதலால் வேதையுறுகிறோம். ஒருவேளை உலகம் இழந்துவிட்ட அனைத்து கள்ளமின்மைகளுக்காகவும் நாம் கனிவின் வலியை உணரக்கூடும். இருப்பின் உண்மையான அவலட்சணத்தை, அழகு மேலும் தாங்கமுடியாததாக மாற்றுகிறது.

நம் வாழ்க்கை எந்த அளவுக்கு கடினமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒரு மலரின் அழகிய சித்தரிப்பு நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடும். நமக்கு கண்ணீர் வருமேயானால், அது அந்த ஓவியம் எவ்வளவு சோகமாக இருக்கிறது எனும் எண்ணுவதால் அல்ல. எவ்வளவு அழகாக இருக்கிறது என்று எண்ணுவதனாலேயே. பூஞ்ஜாடியில்(5) இருக்கும் எளிமையான அழகு பொருந்திய செவ்வந்தி மலர் ஓவியத்தை வரைந்த மனிதர் , அவருடைய சுய உருவப்படம் (Self portrait) அறிவிப்பது போல, இருப்பின் பெருந்துயர் பற்றி ஆழமான விழிப்பு கொண்டவரே. ஒரு தவறான அப்பாவித்தனத்தால் அந்த கலைஞர் ஓர் உற்சாகமான படத்தை வரைந்துவிட்டாரோ என்று எண்ண தேவையில்லை. அந்த கவலைக்கு அவர் சுய உருவப்படமே(6) ஓய்வு கொடுத்துவிடுத்துவிடுகிறது. ஹான்ரி ஃபாண்டன் லடூர்(Henri Fantin Latour) துயரத்தை பற்றி அத்தனையையும் தெரிந்து வைத்திருந்தார். துயரத்துடனான அவர் அணுக்கமே அதன் எதிர்நிலைகளை உயிர்ப்புடன் காண வழி செய்தது.

(5) ஹான்ரி ஃபாண்டன் லடூரின் பூஞ்சாடி

ஒரு குழந்தை, வயதுவந்த ஒரு மனிதரோடு விளையாடுவதற்கும், வயதுவந்த மனிதர் ஒரு குழந்தையோடு விளையாடுவதற்கும் நடுவே உள்ள வேறுபாட்டை எண்ணி பாருங்கள். குழந்தையின் மகிழ்ச்சி கபடமில்லாதது. அதுவொரு இனிமையான விஷயம். ஆனால் வயது வந்த மனிதரின் மகிழ்ச்சியோ இருப்பின் இன்னல்களின் ஞாபகத்துக்கு நடுவே அமைவதால் தாக்கமுடையதாக மாறுகிறது. அதுவே உணர்ச்சிவப்பட வைப்பதாகவும், கண்ணீர்விட வைப்பதாகவும் இருக்கிறது. அழகும் இனிமையும்கூடிய எல்லா கலையையும் மிகையுணர்ச்சி என்றோ போலி சமாதானம் என்றோ நிராகரித்தால் அது இழப்பு. உண்மையில், யதார்த்தம் வழக்கமாக எப்படி இருக்கிறது என்பது நமக்கு தெரிந்ததனாலேயே அத்தகைய ஆக்கம் நம்மை பாதிக்கிறது. அழகிய கலையின் மகிழ்ச்சியானது நிறைவின்மையிலிருந்தே கிளைவிடுகிறது. வாழ்க்கையை நாம் கடினமானதாக உணராவிடில், அழகு தனக்குரிய வசீகரத்தை தக்க வைத்திருக்காது.

(6) ஹான்ரி ஃபாண்டன் லடூரின் சுய உருவப்படம்

அழகை விரும்பக்கூடிய ஓர் எந்திரத்தை உருவாக்கும் திட்டத்தில் நாம் ஈடுபடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே, வெளிப்படையான குரூரமான ஒரு விஷயத்தை செய்ய வேண்டி வரும். அந்த எந்திரத்தால் தன்னையே வெறுக்க முடிவதையும், குழப்பத்தையும் விரக்தியையும் உணர முடிவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். துயருறுவதையும் துயருற வேண்டியதில்லை என்று நம்பிக்கை கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த பின்னனியிலேயே அழகான கலை, வெறுமனே இதமாய் இருப்பதைத் தாண்டி, நமக்கு முக்கியமானதாய் மாறுகிறது. ஆனால் இது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. குறைந்தபட்சம் அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு தேவையான பிரச்சனைகள் நம்மிடையே இருக்கின்றன – அழகிய ஓவியங்கள் நம் மீதான பிடியை இழந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்யும்படிக்கு.

உலக கலைகளில் பலவும் வெறுமனே அழகானவை மட்டும் அல்ல, அவை இன்னும் கூடுதல் விஷயங்களை உள்ளடக்கியவை. முழுமையாக வாழ்வின் லட்சியமயமாக்கத்தை (Idealization) அவை முன்வைக்கின்றன. சமகால நுண்ணுணர்வுகளுக்கு இது மேலும் கவலையளிக்கலாம். இங்கிலாந்து எடின்பர்க் புது நகர் நடுவே, மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரி(7) இருக்கிறது. அந்த கட்டிடம்  எப்படி இயங்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். எடின்பர்க் நகர மருத்துவர்கள் முன்வைக்க வேண்டிய கண்ணியம், அறிவு புலமை, நிதானமான அதிகாரமுடைய தொழில் நிபுணத்துவதுவம் இவை எல்லாம் கலந்த முகத்தையே கட்டிடம் பிரதிநிதித்துவம் செய்கிறது. உலகின் முன்னே மதிப்பையும், பயபக்தியையும் கோரியபடி மகோன்னதமாய் நிற்கிறது, அக்கட்டிடம். லட்சியமயமாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

கலையில் லட்சியமயமாக்கத்திற்கு ஓர் அவப்பெயர் இருக்கிறது. ஒரு மனிதர் அல்லது ஒரு துறை மீது யதார்த்தத்தில் இருக்கக்கூடிய அளவை மீறி, கூடுதலான நற்குணங்களை லட்சியமயமாக்கல் அளித்துவிடுகிறது. எல்லா குறைகளையும் நைச்சியமாக தந்திரத்துடன் பூசி மழுப்பிவிடுகிறது. நவீன பயன்பாட்டில் லட்சியமயமாக்கல் எனும் கருத்தே ஓர் இழிவான குற்றச்சாட்டை சுமக்கிறது – லட்சியமயமாக்கும் கலைஞன், அசௌகர்யமானதையும் தொந்தரவுக்குரியதையும் நீக்கிவிட்டு வெறுமனே நேர்மறையானதை மட்டுமே முன்வைப்பதாக. இங்கே கவலை என்னவென்றால், எளிமைப்படுத்தப்பட்ட பொருட்கள் மீது ஈர்ப்பை வளர்த்து பாராட்டி அதில் இன்பத்தை துய்க்கும்பட்சத்தில் யதார்த்தத்திற்கு அநீதி இழைப்பவர்களாகிறோம்.

(7) ராயல் கல்லூரி

உதாரணத்துக்கு, மகிழ்ச்சியின் பொருட்டு கிராமப்புறத்தை தூய்மையானதாகவும் நேர்த்தியானகாவும் சித்தரிக்கும் ஓவியமானது, அந்த பார்வைக்கு அடியிலுள்ள பொருளாதார யதார்த்தத்தை உள்ளடக்காததற்காக விமர்சிக்கப்படலாம். வைனும் பழமும் கொண்டு வருகிற பணியாட்கள் அந்த ஓவியத்தில் எங்கே? ஓய்வெடுக்கும் உயர்வர்க்கத்தினர் தம் வருமானத்துக்காக சார்ந்துள்ள விவசாயிகள் எங்கே? அந்த ஓவியத்தை ரசிக்கும்போது இருப்பின் ஆதாரக் கூறுகளை புறக்கணித்துவிடுவோம் என்பதே அச்சத்திற்குரியதாக இருக்கிறது. ஒரு அர்த்தத்தில் பணியாட்கள் மற்றும் விவசாயிகள் மேல் நிகழும் சுரண்டலை கண்டிப்பதையும் புறக்கணித்துவிடக் கூடும்.

கூடுதலாக ஒரு தனிமனித சிக்கலையும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. வாழ்வின் சில பகுதிகள் பற்றி லட்சியமயமாக்கப்பட்ட கருத்துருவாக்கத்தை கொண்டிருக்கும் மனிதரால் உண்மையான இருப்பின் சிடுக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். சிறுகுழந்தைகள் எப்போதுமே இனிமையாகவே இருப்பார்கள் என்று தானாய் கற்பனை செய்து கொள்ளும் ஒருவர், குடும்பத்துடன் செலவழிக்கப் போகும் வார இறுதிப் பற்றி, சுலபமாய் நொறுங்கிவிடுகிற உபத்திரவமான எதிர்பார்ப்புகளையே கொண்டிருப்பார். அதனால், குழந்தைகளின் மிக இயல்பான நடவடிக்கையையும் வெறுப்புடன் கண்டு விலகுவதோடு தன்னுடைய மற்றும் பிறருடைய வாரிசுகளிடம் நியாயமில்லாத கோரிக்கைகளை முன்வைப்பார்.

யதார்த்தவாதியாக இருப்பது லட்சியமயமாக்கத்தின் முறிமருந்து போல- முதிர்ச்சியின் அஸ்திவாரமாய் கருதப்படுவதும் அதன் வழியே கலை சார்ந்த பெறுமதிகள் மதிப்பிடப்படுவதும் ஆச்சர்யத்திற்குரியதன்று. நாகரீக நிறுவனங்களின் பின்னுள்ள இருண்மையை (8) இடைவிடாமல் வெளிப்படுத்திய ஜார்ஜ் குரோஸ் (George Grosz), ஆர்காடியன் வாழ்க்கையின் அழகிய சித்திரங்களை (9) வரைந்த ஆஞ்செலிகா காஃப்மனைவிட (Angelica Kauffman) உயர்வாக மதிப்பிடப்படுவது இன்று சகஜமே. குரோஸ் யதார்தத்தை அளிக்கும்போது காஃப்மன் கனவை அளிக்கிறார்.

(8) ஜார்ஜ் குரோஸின் ஓவியம் “சமூகத்தின் தூண்கள்”

எது எப்படியிருந்தாலும், லட்சியமயமாக்கல் வரலாற்றில் நெடுங்காலத்துக்கு கலையின் மைய ஆர்வமாக இருந்திருப்பதன் காரணம் என்ன என்று ஆராய்வதில் பெறுமதி இருக்கிறது. பொருட்களை நிஜ வடிவைக் காட்டிலும் மேம்பட்ட வடிவில் ஓவியர்கள் சித்தரிப்பதன் அர்த்தம், குறைபாடுகளுக்கு அவர்கள் கண்களை மூடிக் கொள்கிறார்கள் என்பதல்ல. ஆஞ்செலிகா காஃப்மனின் ஓவியத்தை பார்க்கும்போது பதினெட்டாம் நூற்றாண்டில் பெண்களின் வாழ்க்கை யதார்த்தங்களை அவர் அறிந்திருக்கவில்லை என்று நாம் நினைக்க கூடாது. ஒத்திசைவுக்கான தன் ஏக்கங்களையும், பலனளிக்கும் முயற்சியையும் வெளிப்படுத்த முற்படுகிறார். தன்னுடைய மற்றும் பிறருடைய தோல்விகளை ஏற்கனவே எதிர்கொண்டிருந்தபடியால் அவருடைய ஏக்கங்கள் மேலும் அழுத்தம் கொள்கின்றன. (1767ல் தன் 26 வயதில் ஸ்டீஷ் சீமானாக வேடமிட்ட ஒரு சமூக விரோதியால் அவள் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டார்)

ஒரு லட்சிய உருவத்தை, உண்மை விஷயங்களின் போலி சித்தரிப்பாக கருதாமலேயே ரசிக்க முடிய வேண்டும். நம்முடைய ஆசைகளை அரிதாகவே வாழ்க்கை பூர்த்திச் செய்கிறது என்பதை அறிந்திருக்கபடியினாலேயே, முழுமையற்றதாயினும், அழகின் தரிசனம், நமக்கு விலைமதிப்பில்லாத ஒன்றாய் இருக்கிறது. இப்போது, எடன்பர்கில் உள்ள ராயல் கல்லூரியின் கட்டிட முகப்புக்கு திரும்பினால், தொழில்சார்ந்த நன்னடத்தை மற்றும் நிபுணத்துவத்தின் அடையாளமாக அதை எண்ணி ரசிக்கலாம். அப்பாவி பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் தந்திரத்தில் பங்கு கொள்வதாக அச்சப்பட வேண்டியதில்லை. அது முன்நிறுத்தும் லட்சியமானது உண்மையிலேயே மேன்மையானது. அதன் உருவாக்கத்துக்கு ஆணை பிறப்பித்த குழுவின் தவறுகளையும் குறைப்பட்ட நோக்கங்களையும் முழுமையாக அறிந்தபடியே அந்த லட்சியத்தை நாம் நேசிக்கவும் செய்யலாம்.

(9) ஆஞ்சலிகா காஃப்மன் ஓவியம்

லட்சிய உருவங்கள் ஏன் முக்கியமானவை என்பதை, லட்சியமயமாக்கலின் வெளிப்படையான எதிர்நிலையான கேலிச் சித்திரத்தின் (Caricature) துணை கொண்டு பல வழிகளில் நாம் கற்றுக்கொள்ள முடியும். அன்றாட அனுபவத்தில் நீர்த்தோ தொலைந்தோ போகிற அரிய நுட்பமான பார்வைகளை , எளிமைப்படுத்துதலும் மிகைப்படுத்துதலும் வெளிக்கொணர முடியும் எனும் கருத்தினை கேலிச் சித்திரம் எடுத்துக்காட்டும்போது இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். இதே முறைமையை லட்சியமயமாக்கப்பட்ட உருவங்களுக்கும் பொருத்தி பார்க்கலாம்.

எது நல்லதோ அதை முன்வைக்கிற திட்டமிடப்பட்ட மிகைப்படுத்துதல்கள் ஓர் அவசியமான செயற்பாட்டை நிகழ்த்த முடியும். வாழ்வின் நெருக்கடிகள் நடுவே ஒரு பாதையை வடிவமைப்பதற்கு தேவையான நம்பிக்கையை வடிகட்டி செறிவுபடுத்தி அளிக்கமுடியும்.

தென்னவன் சந்துரு

வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.