/

அகழ் : நூல் அறிமுகங்கள்

பன்னீர்ப்பூக்கள் – பாவண்ணன்

இவ்வாண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய நூல்களில் உளம் நிறைவான வாசிப்பை அளித்த நூல்களில் ஒன்று எழுத்தாளர் திரு பாவண்ணன் அவர்களின் பன்னீர்ப்பூக்கள் எனும் அனுபவ கட்டுரை தொகுப்பு. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வகையான அனுபவ கட்டுரை எழுத்துகள் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆரம்பம் தொட்டே எழுதப்பட்டு நமக்கு கிடைப்பது தான். வாழ்க்கை சித்திரங்களை சிறுகதைகளாக, புனைவெழுத்தாக மாற்றாமல் அப்படியே இவ்வகையான அனுபவ கட்டுரைகளாக எழுத வேண்டிய தேவை என்ன? இக்கேள்வியை இந்நூலாசிரியர் திரு பாவண்ணன் அவர்களிடமே நேரில் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. “இவ்வகையான எழுத்துகளில் ரத்தமும் சதையுமான மனிதர்கள் மூச்சுவிட்டபடியே இருக்கிறார்கள். கலைநேர்த்தி கூடினும், கூடாவிடினும் மெய்யான அனுபவம் எனும் உயிர்ப்பு இதில் இருக்கிறது. இதுவரையிலான என் பார்வையின் தரிசனங்களுக்கு சாட்சியாக, கலப்பில்லாத உண்மை எனும் நஞ்சு இதில் நிறைந்திருக்கிறது” என்று மிக பொருத்தமான பதில் ஒன்றைச் சொன்னார்.

இந்நூலின் முதன்மை ஈர்ப்பு என்பது இதில் விரவிக்கிடக்கும் விதவிதமான எளிய மனிதர்கள் தான். அடுத்து, அவ்வெளிய மானுட மனங்கள் நிகழ்த்திக் கொண்டே இருக்கும் தீராத ஆச்சரியங்கள் தான். நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அதே மனிதர்கள் தான் அதே நிகழ்வுகள் தான். ஆனால் ஒரு படைப்பாளியின் பார்வையில் மீளவும் அந்நிகழ்வுகளும் அம்மனிதர்களும், நாமறியாத தரிசனங்களில் மினுங்குகிறார்கள், புத்தம் புதிய நிகர் அனுபவங்களை நமக்கு கொடுத்துச் செல்கிறார்கள்.

மூளை வளர்ச்சியில்லாத இளைஞனோடு மாநகரப் பேருந்தில் ஏறுவதற்கு, அவன் தாய் படும் சிரமங்களுக்கு இடையில், அவன் அடம் பிடித்து வாங்கிய குச்சி பஞ்மிட்டாயை சாப்பிட்டு “அம்மா, என் நாக்கு நிறம் மாறிப் போச்சு “ என்று சொல்லி சிரிப்பதும், அவனை பத்திரமாக பேருந்தில் கொண்டு சேர்த்த இந்நூலாசிரியருக்கு அவன் கையசைத்து விடை கொடுத்ததும், கவிதையின் கணங்கள் அன்றி வேறென்ன?

“ஆகாஷவாணி…செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி…” இச்செய்தி வாசிப்பாளரின் குரல் கேட்டு கேட்டு தன் வாசிப்பு திறனை அழுத்தம் திருத்தமாய் வளர்த்துக் கொண்ட ஏழாம் வகுப்பு மாணவனாய் இருந்த இந்நூலாசிரியரை வகுப்பிலும் பள்ளியிலும் தயக்கமின்றி முன்னே நிறுத்தும் வகுப்பாசிரியர் ராமிசாமி அவரகளை எல்லா காலங்களிலும் எல்லா பள்ளிகளிலும் நம்முடன் இருப்பதையும் காண்கிறோம் இல்லையா?

நீர்வளம் குறைவான எங்கள் வட தமிழக மாவட்ட கிராமங்களில் இன்றும் கூட போர் குழாய் போடுவதும் அதில் முதல் நீர் பீறிட்டு எழுவதும் ஒரு திருவிழா தான் எங்களுக்கு. குடும்ப பெண்மணிகளுக்கு அஃதொரு பரவச நிலையும் கூட. அப்படி இந்நூலாசிரியரின் பள்ளி பருவத்தில் போர் குழாய் போடும் போர்செட்காரர், வேடிக்கை பார்க்கும் சிறுவர்களிடம் “படிச்சி என்ன வேலைக்குப் போகப் போறே?” என்று வழக்கமாக கேட்கும் கேள்விக்கு ஒரு சிறுவன் கொஞ்சமும் யோசிக்காமல் “ஸ்டேஷன் மாஸ்டர் என்று உற்சாகத்தோடு பதில் சொல்வதும், அதற்கான காரணமாய் “ எவ்ளோ நீளமான ரயிலானாலும் சரி, ஒரு கொடியை அசைச்சி ஓட வைக்கலாம், இன்னொரு கொடியை அசைச்சி நிறுத்தி வைக்கலாம். ஒரொரு ரயிலும் பொட்டிப் பாம்பா அடங்கி ஓடுறத பார்க்கிறதுக்கே ஆனந்தமா இருக்கும்” என்று சொல்லும் இந்த பதில்கள் கவித்துவ தருணம் தானே?

கலைஞனின் வாழ்வு எப்போதுமே புயல் காற்றில் எதிர்நிற்கும் ஒற்றைத் தளிரிலைதான். தெருக்கூத்து ஆசிரியரான செங்கேணி வாத்தியாரும் அவர் வழியில் அவர் மகன் ஆறுமுகமும் கலையின் சுடருக்கு திரியாகிறார்கள். பிரபஞ்ச ஊழ் அவர்களை அணைத்துக் கொள்ளும் விதம் மிக விசித்திரமானது. சாலை விபத்தில் மகன் இறந்துவிட, அந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்துவிட, சில மாதங்களில் செங்கேணி வாத்தியாரும் மாட்டு கொட்டகையில் தூக்குபோட்டு இறந்து போகிறார். இப்பிரபஞ்ச பெருங்கருணையின் வண்ணங்கள் முழுதாய் நாம் அறியாதது. அவ்வண்ணத்தின் ஓர் கீற்றினை அறிய நேர்கையில் நாம் அனைவரும் சிலைத்து போய் நிற்கிறோம்.

“என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனைக்காதடா. ஒரு காலத்துல நானும், இப்படித்தான் ம்னு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் கெளம்பிப் போய் இப்படிஉ ஆயிட்டேன். உனக்கும் அந்த மாதிரி ஒரு நிலைமை வந்துடக் கூடாது. சொல்லு, என்ன நடந்திச்சி?” ஒரு இளஞனை இப்படி எச்சரிக்கும் ஒருவர் விடுதலை அடைந்தவர் தானா? விடுதலை என்பது எல்லோருக்கும் உரியது அல்ல எனும் மெய்மையை உணர்ந்திருப்பவரா? நமச்சிவாயம் சாமியார் இந்நூலாசிரியரை மன அழுத்தத்திலிருந்து விடுவிப்பதும், மின்சார கம்பத்தில் சிக்கிய புறா ஒன்றினை மின்வாரிய ஊழியர்கள் விடுவிப்பதும் அடுத்தடுத்து நிகழ்வது எதேச்சையான நிகழ்வுகளா என்ன? சில பொழுதுகளில் விடுதலையின் ஊற்று எல்லோரையும் ஈரப்படுத்திவிடுகிறது போலும். நாமும் கொஞ்சம் பள்ளி சிறுவர்களாக மீள முடிந்தால் நமக்கான நமச்சிவாய தாத்தாக்களும் இறங்கி வரத்தான் செய்வார்கள் என்று மனம் உறுதியாய் நம்புகிறது

இத்தொகுப்பில் உள்ள 25 அனுபவ சித்திரங்களிலும் எந்த நிகழ்வுகளும் அசாதாரணமானது இல்லை . இதில் ஊடாடும் மனிதர்களில் எவரும் அசாதாரணமானவர்கள் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாடங்களில் காணும் சாதாரண மனிதர்கள், சாதாரண நிகழ்வுகள் தான். உங்களின் அனுபவங்களையும் மிக லகுவாய் இத்தொகுப்பின் தடத்தில் பொருத்தி பார்த்துக் கொள்ளவும் முடியும். இத்தொகுப்பினை வாசித்த பிறகு சக மனிதர்களின் முகங்களில் உங்களின் பார்வை, இன்னும் இன்னும் அழுத்தமாகவும், அக்கறையோடும் பதியும் என்பதே இந்நூலுக்கான வெற்றி

இந்த அன்றாடத்தின் சாதாரணத்திலிருந்து தன் தனித்துவ பார்வையினூடாக மிக அசாதாரண அனுபங்களை எழுப்பி, வாசிக்கும் நம் எல்லோருக்கும் மாயம் நிகழ்த்திக் காட்டுகிறார் திரு பாவண்ணன். இம்மாயத்தினால் இந்நூல் நிறைவான இலக்கிய படைப்பாக மிளிர்கிறது. இலக்கிய வாசகர்கள் நம்பிக்கையோடு இந்நூலினை வாசிக்கலாம்.

அதியமான்
கட்டுரையாளர்

சீமுர்க் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் அவர்களின் ‘சீமுர்க்’ சிறுகதை தொகுப்பின் தலைப்புக் கதையான ‘சீமுர்க்’ பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட சிறப்பான கதை. இன்றிலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் பின்னே சென்று செங்கிஸ்கான் மங்கோலிய படையெடுப்புகளை விவரித்து விட்டு மீண்டும் சமகாலத்துக்கு தாவி, Non linear வடிவத்தில் காலப்பயணம் செய்தாலும், இக்கதை மிகச்செறிவாகவும், சாமர்த்தியமாகவும் எழுதப்பட்டு நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது.

படைப்பாளி, படைப்பு, வாசகர் என்ற வழக்கமான மூன்று இணைப்பு சங்கிலி உத்தியை உடைத்து நொறுக்கி, இந்த கதையில் எத்தனை கதைசொல்லிகள் வருகிறார்கள் என்று எண்ணுவதே ஒரு சுவாரசியமான அம்சம். சமகாலத்தில் கதையை துவங்குகின்ற கதைசொல்லி, முற்காலத்தில் கஸ்வீனீ, சாயம் பூச வந்தவன், சந்தை தொழிலாளிகள், சீமூர்க் பறவை, கதையை வாசிக்கும் வாசகர் என கதைசொல்லிகளும், கதைகளின் எண்ணிக்கையும், கதைக்குள் கதையென விரிந்து கொண்டே செல்கிறது. தமிழ் சிறுகதை உலகம் இது போன்ற புதுமைகளை அவசியம் வரவேற்று, பாராட்டி, கொண்டாட வேண்டும்.

போர்க்களத்தில் பிணங்களின் நடுவே பெண்களை வன்புணரும் மங்கோலிய படைகள், ஓட்டகத்தின் உடம்பிலிருந்து முளைத்தெழும் விதைகள், ஜின் பூதங்களை விலைக்கு வாங்கிட பேரம் பேசுதல் என ஆயிரம் வருடம் முந்தைய மரபுகளை, நிலப்பரப்பு காட்சிகளை மிக நுணுக்கமாக சித்தரித்ததில் வெற்றி பெறுகிறார் ஆசிரியர். சாமானிய தளத்தில் மானுட வாழ்வின் அவலங்களையும், விசேஷ தளத்தில் அறிவின் இடத்தையும் அலசுகிறது கதை. பாரசீக நிலத்தில் நிகழ்ந்த மங்கோலிய படையெடுப்புகளை விவரித்து பின் மீண்டும் சமகால ரஷ்ய உக்ரைன் போர்களை சொல்லி, வாழ்வின் முட்டு சந்துகளில் சிக்கிக் கொள்கையில் எழுகின்ற கேள்விகளை முன் வைக்கிறது. அறிவு பற்றிய தத்துவ விசாரணைகளில், அறிவுக்காக உயிரை கொடுப்பவர்களையும், அறிவை அதிகாரம் என்றும், அறிவென்பது ‘நினைவுகள் சொல்கின்ற கதை’ என அறிவின் பல கோணங்களை காண்பிக்கிறது. மிக சிக்கலான சுழல் பாதைகள் கொண்ட இக்கதையை சிடுக்குகள் இன்றி தீட்டியுள்ளார் ஆசிரியர்.

Writer’s block என்பது ஒன்றிற்கு மேற்பட்ட பொருளை தரக்கூடிய பதம். ஒரு படைப்பாளி எதையுமே எழுத முடியாமல் தடை பட்டு தவிப்பது என்றும் சொல்லலாம், அல்லது ‘படைப்பாளியின் பொருள்’ எனவும் கூறலாம். இக்கதையில் ‘சீமுர்க்’ பறவை
படைப்பாளியின் பொருளாக (Writer’s block க்காக) எழுந்து , படைப்பாளியின் தடையை (Writer’s block க்கை) உடைத்தெறிகிறது.

கதைசொல்லி ‘சீமுர்க்’ பறவையின் ஓவியத்தை வரைந்து முடித்ததும், அது கனவுக்கும் நனவுக்கும் பாலமாக, முக்காலத்துக்கும் இணைப்பாக, படைப்பாளிக்கும் வாசகருக்கும் நடுவில் படைப்பாக, பல்வேறு பரிமாணங்களை காண்பித்து, பறந்து திரிந்து அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாக அமைவது சிறப்பு. ‘சீமுர்க்’ என்பது ஒரு தொன்மையான பறவை மட்டுமல்ல, அது ஒரு கதையாக, விதையாக வாசிப்பவர் மனதில் முளைத்தெழுந்து பறந்து நம்பிக்கை தருகின்றது.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் தற்சமயம் தமிழகத்தில் வசிக்கிறார். ‘கனவு மிருகம்’, ‘துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதை’, ‘நள்ளிரவின் சொற்கள்’ இவரது மற்ற படைப்புகள். சென்ற வருடம் அரூ இணைய இதழ் நடத்திய அறிவியல் புனைவு போட்டியில் இவர் நடுவராக பங்கேற்று சிறுகதைகளை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. ‘சீமுர்க்’ சிறுகதை தொகுப்பு யாவரும் பதிப்பக வெளியீடாக கிடைக்கின்றது.

வெற்றி ராஜா
கட்டுரையாளர்

கதையாகாதச் செய்திகள்

தமிழ் இலக்கியச் சூலலில் சர்ச்சைகளின் ஊடாக பிரபலாகும் கதைகள், கவிதைகள் நாவல்கள் எப்போதுமே உண்டு. சில படைப்புகள் அதன் பேசுபொருள் சொல்முறை உள்ளடக்கம் காரணமாக சர்ச்சைகளையும் தாண்டி நின்றுவிடுவதுண்டு. சில பிரதிகளின் மீது வைக்கப்படும் விமர்சனம் உண்மையானதாகவே இருந்தாலும், அந்த விமர்சனத்தை சர்ச்சையாக்கி, அதை இலக்கியச் சூழலில் ஒரு பேசுபொருளாக்கி விமர்சனத்தை தனிப்பட்ட காழ்ப்பாக உருமாற்றி வெற்றிப் பெற்றவர்களும் இங்கு உண்டு. அதே சமயம் பிரதியின் மீதும், எழுத்தாளரின் மீதும் கொண்ட தனிப்பட்ட காழ்ப்பை விமர்சனம் என்ற பெயரில் கொட்டி எழுத்தாளனை ஓடவிட்டவர்களும் உண்டு. அவ்வாறு சமீபத்தில் பேசு பொருளானது எழுத்தாளர் ஷோபாசக்தியின் “மரச் சிற்பம்” சிறுகதை.

பாரிஸில் நடந்த 51வது இலக்கிய சந்திப்பின் ஒரு நிகழ்வாக “இமிழ்” இன்றைய ஈழ – புலம்பெயர் சிறுகதைகள் என்ற தொகுதி வெளிவந்துள்ளது. அதில் கடைசிக் கதையாக எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்களின் “மரச் சிற்பம்” கதை.

மரண தண்டனைக் குறித்த விவாதமாக எழுதப்பட்டுள்ள இக்கதை குறித்து புதுவையைச் சேர்ந்த ஆய்வாளர் எம்.கண்ணன் அவர்கள் தன் விமர்சனத்தை முன்வைக்க, அதற்கு எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் தனது எதிர்வினையை பதிவு செய்துள்ளார். வாழ்வனுபம் தான் கதையாக வேண்டும் போன்ற எம்.கண்ணன் அவர்களின் கருத்தையும் அதற்கு எழுத்தாளர் ஆற்றியுள்ள எதிர்வினையையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு “மரச் சிற்பம்” கதை முதலில் கதையாகியதா அல்லது ஒரு செய்து குறிப்பாக மட்டுமே எஞ்சியதா என்று பார்க்கலாம்.

கதையில் எழுத்தாளர் “மரச் சிற்பம்” என்று சொல்லப்படுகின்ற கில்லட்டின் கருவியை ஒவ்வொரு தெருவிலும் நிறுத்த வேண்டும் என்று ஒரு ப்ரெஞ்சு அரசியவாதி பேசியதாக வந்த செய்தியை வாசித்து சித்தம் கலங்குகிறார்(அவரது சொற்களில்). அதன் பிறகு சில கில்லட்டின் பற்றிய செய்திகள் ப்ரெஞ்சு புரட்சி, வரலாறு, இலக்கியம் என பல தகவல்களுக்குப் பிறகு பாருக்கு குடிக்கச் சென்ற இடத்தில் ஒரு அம்மையாரை சந்திக்கிறார். அவருடனான சில சந்திப்புகளுக்குப் பிறகு வெகு சமீபத்தில் 1977ஆம் ஆண்டு கில்லட்டின் பயன்படுத்தப்பட்டது என்ற தகவலையும் அதன் பின் கதையையும் விவரிக்கிறார். இறுதியாக கதை நிறைவு பெறும் போது எந்தவிதமான உணர்வையும் கதைக் கடத்தவில்லையென்பதே நிஜம். பின் கதையாக சொல்லப்பட்டது அனைத்துமே அதீத நாடகத்தனமாகவே இருந்ததே தவிர, தலைத் துண்டக்கப்பட்டு ஒருவன் இறந்து கிடக்கிறான் என்ற பரிதவிப்பை ஏற்படுத்தவேயில்லை. எம். கண்ணன் அவர்களின் விமர்சனத்திற்கு எழுத்தாளர் ஷோபாசக்தி ஆற்றியுள்ள எதிவினையில் உள்ளது போன்ற மரண தண்டனைப் பற்றிய எந்தவிதமான பதற்றத்தையும் கேள்வியையும் அது வாசகனிடத்தில் உண்டாக்கியதாக தெரியவில்லை. இந்த கதையில் எழுத்தாளர் பதற்றமடைந்த அளவிற்கு, சித்தம் கலங்கிய அளவிற்கு வாசகனத்திடத்தில் ஏதாவது ஏற்பட்டதா என்றும் தெரியவில்லை.

உண்மையில் ஏன் அந்த மரண தண்டனைக்கு எழுத்தாளர் இவ்வளவு பதற்றமடைகிறார் என்று தெரியவில்லை. 1977ஆம் ஆண்டு கில்லட்டின் பயன்படுத்தப்பட்டது என்றதும் அவர் அவ்வளவு அதிர்கிறார். அவரது அதிர்ச்சிக்கு காரணம் கில்லட்டினா அல்லது மரணமா? கில்லட்டின் தான் காரணமென்றால் அப்போது வேறு வகையாக மரண தண்டனைகளும், போர்க் கொலைகளும் ஏற்ப்புடையதா? கில்லட்டினைவிட பல மடங்கு கொடுமையான வகையில் மக்கள் கொல்லப்பட்டனர், கொல்லப்படுகின்றனர். அதைப்பற்றியெல்லாம் கேட்டும்போது கில்லட்டின் எவ்வளவோ பரவாயில்லை தோன்றுகிறது. ஒருநொடி மரணம். இது மரண தண்டனைக்கு ஆதரவான கருத்தாகச் சொல்லவில்லை. அதேசமயம் கில்லட்டின் குறித்தான இக்கதையில் உருவாக்கப்படும் போலியான அதிர்ச்சியை சுட்டிக்காட்டவே சொல்லப்பட்டது. இந்தவொரு கள யதார்த்தம்தான் இக்கதையின் மூலப் பிரச்சனையென்று தோன்றுகிறது.

மேலும், இந்த இடத்தில் ஆய்வாளர் எம். கண்ணன் அவர்கள் எழுப்பிய கேள்வியையே நானும் இங்கு எழுப்புகிறேன். கொல்லப்பட்ட அப்பெண்ணிற்கான நியாயம் என்ன? அவளுக்கான இடத்தை எழுத்தாளர் ஏன் கொடுக்கவில்லை. கதையை சொல்லும் அம்மையாருக்கு தண்டனைப் பெற்ற துனிஷியா நாட்டைச் சேர்ந்தவன் வேண்டப்பட்டவன் என்பதால் அவள் ஒற்றை பரிமானத்தில் அதைச் சொல்கிறாள். அதை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் நியாயமாகுமா?

ஒரு வாழ்வனுபவம் தான் கதையாக வேண்டுமென்று எந்தவொரு அவசியமும் இல்லை. ஒரு தேர்ந்த எழுத்தாளன் சிறந்த வாழ்வனுபவத்தை தனது எழுத்தின் மூலம் வாசகனிடத்தில் உருவாக்க முடியும். அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உணடு. எதிர்வினையாக எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் எழுதிய கட்டுரையிலேயே பல உதாரணங்களைச் சொல்லிச் செல்கிறார். அதை முழுவதுமாக ஏற்கிறேன். ஆனால், அதே சமயம் “மரச் சிற்பம்” கதையாக மாறாமல் ஒரு செய்தி ஏற்படுத்தக்கூடிய சிறிய அளவு சலனத்தையே ஏற்படுத்துகிறது. ஒருவேளை இதுகூட அதீதமாக இருக்கலாம். மரண தண்டனைக் குறித்தான எந்தவிதமான அதிர்வையும் இக்கதை ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம்.

அரிசங்கர்
எழுத்தாளர்

உரையாடலுக்கு

Your email address will not be published.