/

கவிதை இயந்திரம்- மேத்யூ ஸேப்ருடர்

தமிழில்- நவீன் சங்கு

நான் என் இருபதுகளில் கவிதைகள்  எழுத ஆரம்பித்தபோது  எனக்கு கவிதைகள் பற்றிய பெரிய புரிதல் இல்லை. கல்லூரியில் ஆங்கிலம் என் முதன்மை பாடமாகவும் இல்லை, அமெரிக்க கவிதைகளை அவ்வளவாக  வாசித்திருக்கவில்லை.  கவிதையெழுத்து  ஒரே நேரத்தில் ஆச்சர்யத்தையும், நிலைகுலைவையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதில் நிச்சயம் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பதை உள்ளூர உணர முடிந்தது. ஆனாலும் என் உணர்வுகள் குறித்து சந்தேகம் இருந்தது , நான் தவறான இடத்தில் தேடுகிறேனோ? மிக முக்கியமான ஒன்றை தவற விடுகிறேனோ? 

கவிஞர்கள் பிரதானமான  எண்ணங்களையும், கருத்துக்களையும்  கவிதையின் மொழியையும் பிற  நுட்பங்களையும் பயன்படுத்தி  அவற்றை  உரைநடையைவிட அழகாகவும் சிக்கலாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்துகிறார்கள் என்ற  மங்கலான மனப்பதிவு அந்த காலகட்டத்தில் எனக்கு இருந்தது. அதாவது மொழியின் அழகு, சிக்கல் அல்லது அதன்  உயர்ந்த பண்புகள் இவைதான்  எழுத்திற்கு   கவிதை என்ற அந்தஸ்தை அளிக்கிறது , அதை உரைநடையிலிருந்து  வேறுபடுத்திக்காட்டுகிறது என்று  எண்ணியிருந்தேன்.

நிறைய கவிதைகளை  எழுதவும் வாசிக்கவும் ஆரம்பித்த பிறகுதான் ‘கவிதை மொழி’ (Poetic language) என்றொரு விஷயம் உண்மையில் இல்லை என்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது. கவிதையில் புழங்கும் சொற்கள் பெரும்பாலும் எங்கும் காணக்கூடிய சொற்களே. கவிதை நமக்கு தெரிந்த, நாம் அடையாளம்காணக்கூடிய மொழியை புதுப்பிக்கிறது, அதை மீண்டும் உயிர்த்தெழச்செய்கிறது. கவிதையின் முதன்மையான ஆற்றலே இதுதான்.

நான் கவனித்த வரையில் கவிதையில் நிச்சயமாக சிந்தனைகள் உள்ளன. அவை சில நேரங்களில் முக்கியமாகவும் , முக்கியமற்றதாகவும் அல்லது குறைந்தபட்சம்  அதிக முக்கியத்துவம் இல்லாமலும் உள்ளது. கவிதையை நாம் விளக்க முற்படும்போது  அதில் வெளிப்பட்டுள்ள சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தால் அல்லது அதன் பேசுபொருளை விரிவாக விவரித்தால்  அதை  கவிதையின் மிகமிக முக்கியமான அம்சத்தை தவிர்த்துவிட்ட  குறுகலான  பார்வை என்றுதான் சொல்லமுடியும்.  கவிதை  முற்றிலும் வேறானது.  அது மனிதனில் புது விதமான அனுபவத்தை அல்லது மனநிலையை அல்லது சிந்திக்கும் விதத்தை உருவாக்குகிறது.

நினைவில் கொள்க, கவிதை என்னதான் தகவல்களால் கோர்வை செய்யப்பட்ட மொழியில் இருந்தாலும், அது தகவல்களை சொல்வதற்கான மொழி விளையாட்டு அல்ல.” என்கிறார் விட்ஜென்ஸ்டைன். கவிதை வெறுமனே கருத்துகளையும் , அனுபவங்களையும்,  உணர்வுகளையும் அழகான மொழியில் சொல்வது அல்ல. அந்த வேலையை அதே அழகுடன் உரைநடை செய்துவிடும்.

தகவல் சொல்வது கவிதையின் நோக்கம் இல்லையெனில் , கவிதையின் நோக்கம்தான் என்ன? அது உரைநடை செய்யாத எதை செய்கிறது? எதற்காக வாசகர்களும், எழுத்தாளர்களும் கவிதையை பேண முற்படுகிறோம்?

பலர்  கவிதை , நாவல் அல்லது நாடகம் என ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மட்டும் வெளிப்படுதல் படைப்பு சாத்தியத்தை குறுக்குவதாக  நினைக்கிறார்கள். எல்லா வடிவங்களும் கலந்து எழுதுவது சமகால இலக்கியத்தின் போக்காக உள்ளது.  இருந்தாலும் கவிதை என்று வரும் போது அதை தனித்த ஒன்றாக அணுகுவதே சரியானது,  குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது.  ஏனெனில் ஒரு படைப்பின் வடிவம் என்பது அதன்  நோக்கம் சார்ந்தது. ஒரு படைப்பாளி ஏன் குறிப்பிட்ட வடிவத்தை தேர்வு செய்கிறான்? ஒரு  இலக்கியப்படைப்பை  நாம் வாசிக்கும் வழிமுறையை அந்த  படைப்பாளி தேர்வுசெய்த வடிவம்  எவ்வாறு பாதிக்கிறது?

சாதாரணமாக ஒரு படைப்பை ஏன் வாசிக்கின்றோம் என நாம் சிந்திக்க தேவையில்லை. அதை வாசிக்கும்போது உடனடியாக உருவாகக்கூடிய உள்ளுணர்வு அது எப்படிப்பட்ட எழுத்து, அதை எவ்வாறு அணுக வேண்டும் என சொல்லிவிடுகிறது.  எந்த விளக்கமும் இல்லாமலே ஒரு செய்தித்தாள் வாசிப்பதற்கும் , நாவல் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். நாவல்  கதாபாத்திரங்களையும் , சூழலையும் வைத்து  ஒரு கதையை சொல்கிறது.  தகவல்களை பகிர்வதற்கு பத்திரிக்கைகள் இருக்கின்றன. ‘கட்டுரை’ என்ற வடிவத்தை  ஒரு குறிப்பிட்ட  சிந்தனையை ஆழமாக ஆராயும், நம்மால் எளிதில் வகைப்படுத்திவிடமுடியாத முயற்சி என்று சொல்லலாம்.. தலையங்கம் அல்லது பிரசங்கம் நாம் எதை நம்ப வேண்டும், எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது  என அறிவுறுத்தும் இயல்பு கொண்டது.  

கவிதை ஏன் எழுதப்படுகிறது? அது ஏன் இவ்வளவு புதிர்த்தன்மையுடன் உள்ளது? நாம் கவிதையில் என்ன எதிர்பார்க்க வேண்டும்? சந்தம், வடிவம், உருவகம், படிமம் இவையெல்லாம் ஏன் கவிதையில் பயன்படுத்தப்படுகிறது? ஒருவேளை இவையெல்லாம் கவிதையை அழகு படுத்துவதற்காகவா? கவிதை சொல்ல விரும்பும்  கருத்தை வாசகரிடம் இன்னும் வலுவாகவும், இன்னும் அழகாகவும் உணர்த்துவதற்காகவா? கவிதையின் நோக்கம்தான் என்ன? போன்ற கேள்விகளுக்கு யாரும் திட்ட வட்டமான பதிலை சொன்னதாக தெரியவில்லை.

என்னிடம் இது போன்ற கேள்விகள் கேட்கப்படும் போது, பால் வலேரி ( Paul Valéry 1871 – 1945) தனது “Poetry and Abstract Thought” என்ற நூலில் எழுதியது தான் நினைவுக்கு வரும். “கவிதை என்பது மொழி வழியாக  நம்மில் கவித்துவமான  மனநிலையை ஏற்படுத்தக்கூடிய  ஒரு வகையான இயந்திரம்”. வலேரியின் இந்த விளக்கம்தான் இதுவரை கவிதை பற்றி எழுதியவற்றில் மிகச் சரியான விளக்கமாக எனக்கு தோன்றுகிறது. வலேரியின் விளக்கம்:

கவிதையை இயந்திரத்துடன் ஒப்பிடுவது, என்னுடைய இயந்திரத்தனமான அணுகுமுறைஉங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். கவனியுங்கள்ஒரு எளிய கவிதை தன்னை உருவாக்கிக்கொள்ள வருடங்களை எடுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் வாசக மனதில் சில நிமிடங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. பல மாதங்களின் ஆராய்ச்சியால், பொறுமையால், பொறுமையின்மையால் திரண்டுவந்த கண்டடைதல்களை, தொடர்புகளை, உணர்வுநிலைகளை வாசகன் சில கணங்களில் அதிர்வுடன் பெற்றுக்கொள்கிறான். கவிதையனுபவம் கவிஞனின், வாசகனின் உள்ளத்தில் நிகழ்கிறதுமுதலில் கவிஞனில் அது நிகழ்கிறது. எழுதும்போது  அவன் அதை ஏதோ ஒன்றாக, சிறிய  இயந்திரமாக ஆக்குகிறான். அந்த இயந்திரம் வாசகனிடம் கண்டடைதல்களையும் , தொடர்புகளையும் , உணர்வுநிலைகளையும்  உருவாக்குகிறதுகவிதை எதை நிகழ்த்தினாலும் அதை மீண்டும் மீண்டும் எத்தனைமுறை வேண்டுமானாலும் வாசகனிடம் நிகழ்த்த முடியும்

கவிதை உருவாக்ககூடிய இந்த ‘கவித்துவ  மனநிலை‘ கண்விழித்தபடியே காணும் கனவுநிலைக்கு நிகரானது. நம் பிரக்ஞை  இன்னும்  விழிப்பாக, இன்னும் மேலானதாக,  இன்னும் வெளிப்படையானதாக, உணர்வுப்பூர்வமானதாக இருக்கும் நிலை என்று அந்த மனநிலையை சொல்லலாம். வாசகன் கவிதையை வாசிக்கும்போது அல்லது கேட்கும்போது அதன் கண்டடைதல்களை, தொடர்புகளை, உணர்வுநிலைகளை வாசகமனதுடன்  ஒத்திசையவைப்பதன்  வழியாக  கவிதை கவித்துவமனநிலையை  அவனில் உருவாக்குகிறது.  

எமிலி டிக்கின்சன் கவிதை பற்றி தனது கடிதத்தில், “ஒரு புத்தக வாசிப்பனுபவம் எந்த நெருப்பாலும் அணைக்க முடியாத அளவுக்கு என் உடலில் உறைகுளிரை ஏற்படுத்தினால், எனக்கு தெரியும் அது கவிதை என.”  நேரடியாக என்னுடைய தலை துண்டாகக்கூடிய உணர்வை ஏற்படுத்தினால் அது கவிதை.  இந்த விதத்தில்தான் என்னால் கவிதையை புரிந்து கொள்ள முடிகிறது, அப்படி அல்லாத வேறேதும் வழிகள் உண்டா என்ன?

எனக்கு இந்த பதிலும் பிடித்திருக்கிறது. ஏனெனில் வலேரியின் விளக்கம் போலவே கவிதைக்கு மற்ற எழுத்துவடிவங்களுக்குமான வித்தியாசமாக சாதாரணமாக  சொல்லப்படும்- வரிகளை துண்டித்து எழுதுவது, சந்தம், படிமம் அல்லது  உருவகங்களை  பயன்படுத்துவது என்று சொல்லாமல், கவிதை உருவாக்ககூடிய தாக்கத்தைப் பற்றி பேசுகிறது. இந்த பதில் ஆர்வமூட்டுவதாகவும், யதார்த்தமான தனி அனுபவமாகவும் உள்ளது. 

டிக்கின்சன் ,வலேரி இருவரும் படைப்பு உருவாக்க கூடிய தாக்கத்திலிருந்து தான், அது கவிதையா இல்லையா என சொல்ல முடியும் என்கின்றனர். கவிதை எவ்வாறு “கவித்துவ மன நிலையை” உருவாக்குகிறது என்பதே இந்த புத்தகத்தின் மையக் கேள்வி.  அது கவிதையின் வடிவத்தின் மூலம் நிகழ்கிறது, அதுவே வாசகனின் மனதை வழிநடத்துகிறது. அது தொடர்புறுத்தல்களின் பாய்ச்சல்கள் மூலம் நிகழ்கிறது. மேலும் கவிதை, மொழியின் அடிப்படையான இயல்புகளையே  ஊடுருவி  அதை உயிர்த்தெழச் செய்து அதனுடன் விளையாடும் போது அது நிகழ்கிறது. 

கவிதையின் இருப்பே மொழியின் பல்வேறு சாத்தியங்களுக்கு இடமளிப்பது தான். இந்த பண்புதான் கவிதையை மற்ற வடிவங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. கவிதைகள் மொழியின் உள்ளார்ந்த தற்காலிகத்தை, நிச்சயமின்மையை, நழுவல்களை அனுமதிக்கின்றன. மொழி  அர்த்தங்களை உருவாக்க  அது ஒலிக்கும் விதம், அதன் தோற்றம், உச்சரிக்கப்படும்போது அது உருவாக்கும் உணர்வு போன்ற  புறவயமான அம்சங்களுக்கும் கவிதை இடமளிக்கிறது.

மேலும், கவிதைகள் நாம் அவ்வளவாக பொருட்படுத்தப்படாத ஒரு விஷயத்தை நினைவூட்டுகின்றன: அவை நாம் மொழியின் அற்புதமான, அதே சமயம் நொய்மையானதன்மை வழியாகத்தான்  நாம் பிறருடனும், இந்த  உலகுடனும் தொடர்பு கொள்கிறோம்  என்பதை நினைவூட்டுகின்றன.  சாதாரண உரையாடலில் நம் தேவைக்காக  மொழியின் வசப்படாத தன்மையை, அதன் கணநேர மாற்றங்களை, அதன் தற்காலிகத்தன்மையை மட்டுப்படுத்துகிறோம். 

மொழி கவிதையில் தன்னை வெளிப்படுவதற்காக காத்திருக்கிறது. மொழியின்  உள்ளார்ந்த ஆற்றலையும் சாத்தியங்களையும் கவிதை செயல்வடிவமாக ஆக்குகிறது. அர்த்த-உருவாக்கம் என்ற செயல்முறையில் உள்ள முரண்பாடுகளும், சாத்தியங்களும் முன்னிறுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றன, பிற எழுத்துவடிவங்களில் மற்ற நோக்கங்களுக்காக இந்த கூறு வெளிப்படுத்தமுடியாமல் திசைதிருப்பப்படுகிறது.

மற்ற எழுத்து முறைகளுக்கு மாறாக , கவிதை தனது முதன்மை பணியாக சொல்லுக்கும் அது சுட்டும் பொருளுக்கும் இடையே உள்ள சிக்கலான உறவை வலியுறுத்தவும், நம்பவும், கொண்டாடவும் செய்கிறது. சாதாரணமாக கருத்துக்களை தெரியப்படுத்துவதற்கும், கதை சொல்வதற்கும் மொழியை  பயன்படுத்தும் போது அடைய முடியாத உண்மையை, நாம் மொழியின் அழகு மற்றும் அதன் அநிச்சய தன்மையை பின்பற்றும்போது அடைய முடியும்.

எவ்வளவு தான் முயற்சித்தாலும் சொற்களுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள உறவு துல்லியமற்றதாகவே உள்ளது. கவிதை மொழியின் இந்த வரம்பினை எடுத்துக்கொண்டு ஒரு சீர்மையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. ஆச்சர்யப்படுத்தும் வகையில் எப்படியோ நாம் சீரற்ற மொழியின் மூலம் தொடர்பு கொண்டு அர்த்தப் படுத்திக் கொள்கிறோம். கவிதையுடன் மொழிக்கும் அர்த்தத்துக்கும் இடையேயான உறவு தற்காலிகமான, மெலிதான, ஆர்வமூட்டும், உடையக்கூடிய, சீரற்ற  ஆனாலும் அதீத இன்பம் தரக்கூடியதாகவும் உள்ளது.  நமக்கும் மொழிக்குமான உறவிற்கான, நமக்கும் இவ்வுலகத்திற்குமான உறவிற்கான  உருவகமாக  கவிதைக்கும்  மொழிக்குமான உறவை, அது வழியாக மொழிக்கும் அர்த்தத்திற்கான உறவை சொல்லலாம். 

மனித இருப்பின்  இந்த நிலையை  நாம் ஒரேசமயம் உவகையாகவும், துக்கமாகவும் உணர்கிறோம்.  நாம் உள்ளுணர்வால் உணர்ந்த, ஆனால் முழுமையாக சொல்ல இயலாத நிலைக்கும் கவிதைக்குமான  உறவு, கவிதையெழுத்தை  ஒரு பிரார்த்தனையாக ஆக்குகிறது. இறைத்தன்மையை  முழுமையாக அறிந்துவிட முடியும் அல்லது தெரிந்து கொள்ள முடியும் என்ற தற்பாவனை இல்லாமலேயே, ஒருவரை  இறைத்தன்மையை நோக்கி  செலுத்தும்  குறையாத விசைதான் பிரார்த்தனை. 

கவிதையில் வெளிப்பட்டிருக்கும்  மொழியை கூர்ந்து வாசிக்கும் போது நம்  அன்றாட அறிதலுக்கு சிக்காத இவ்வுலகின்  யதார்த்தத்தை, முரண்பாட்டை, சிக்கலை, உறுதியின்மையை காண ஆரம்பிக்கிறோம். அந்த கணத்தில்  கவிதையில் உள்ள சொற்களும் எண்ணங்களும் தளர்ந்து விடுபட்டு, அவற்றை நாம்  புத்தம் புதிதாக அனுபவிக்கிறோம். 

கவிதையெழுத்தில் கதை சொல்வது , நீண்ட விளக்கங்களை எழுதுவது, தன்னை மறுக்கமுடியாதவனாக நிலைநிறுத்துவது  போன்ற பிற செயல்பாடுகளில்  தன்னை மூழ்கடித்துக்கொள்ளாத கவிஞனால் மட்டும்தான்  மொழியின் முழு ஆற்றலையும் கவிதையில் உயிர்த்தெழச்செய்ய முடியும். ஒரு எல்லைவரை கவிஞர்கள் அந்த செயல்பாடுகளை  செய்கிறார்கள், ஆனால் அவர்களால் கையாளமுடியும் எல்லைவரைதான் இது சாத்தியம். ஒருகட்டத்தில் கவிஞர்கள் அவற்றை துறக்க எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். அசலான  ஒவ்வொரு கவிதையிலும்  அந்த துறத்திலின் சுதந்திரம் எங்காவது இருப்பதை காணலாம். மொழியை வெறும் பயன்பாட்டிலிருந்து விடுவித்து அதன் சாத்தியங்களை அடையும் பொருட்டு, மொழியின் வேறந்த நோக்கத்தையும்  நிராகரிக்க தயாராக இருக்கும் எழுத்தாளரே கவிஞராக மாறுகிறார்.

மூலக்கட்டுரை: https://www.powells.com/post/original-essays/the-machine-of-poetry

மேத்யு ஸேப்ருடர்
நவீன் சங்கு

சொந்த ஊர் சிவகங்கை. தற்போது கோவையில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். இலக்கியம் தவிர தத்துவத்திலும், நுண்கலைகளிலும் ஆர்வம் உண்டு.

1 Comment

  1. மிகச் சிறப்பான முறையில் கூறியுள்ளார்

உரையாடலுக்கு

Your email address will not be published.