போர்வை : க.கலாமோகன்

நான் ஒருபோதுமே வேலை செய்ததில்லை. எனது பணத்திலேயே அகதியானேன் எனச் சொல்லமாட்டேன். எனது அம்மாவும் அப்பாவும் சிரமப்பட்டுக்  கடன் எடுத்தனர். அதன் பின்பே  பிரான்சிற்கு வந்தேன்.

என்னை இங்கு கொண்டு வந்த ஏஜென்சி ஓர் வீட்டில் நுழைத்துவிட்டு மறைந்து விட்டார்.

அந்த வீட்டில் ஓர் பெண்ணும், பல ஆண்களும் இருந்ததைக் கண்டேன். அவர்களில் எந்த ஆண் அந்தப் பெண்ணின் கணவராக இருப்பார் என்பது எனக்குத் தெரியவில்லை. 

சில நிமிடங்களில் “தம்பி!” எனும் குரல் எனது காதிற்குள் வந்து விழுந்தது.

நான் திரும்பினேன்.

ஓர் வயதுபோன ஆண் என்முன்.

“தம்பி, இது எனது வீடு. இங்கே உள்ள தமிழர்கள் யாவரும் அகதிகள்.” என்றார். 

அவர் சொன்னதைக் கேட்டு எனது மனது நெகிழ்ந்தது. இவரது வீடு அகதிகளது வீடாகவும் உள்ளது என அறியும்போது எனது இதயம் கனியாமல் இருக்க முடியுமா?

பெண் வந்து எனக்குத் தேத்தண்ணியைத் தந்து மறைந்தார். மிகவும் அழகிய இளம் பெண். தாகம் இருந்ததால் தேநீர் உடனடியாகவே எனது வயிற்றுக்குள் நுழைந்தது.

“தம்பி, வாடகை 200 பிராங்க்.” என ஆண்,  அந்த இளம்  பெண்ணின் கணவர் சொன்னார்.

“வாடகையா?”

“ஆம், தம்பி. வாடகைதான்.”

“அண்ணா, என்னிடம் ஓர் பணமும் இல்லையே!”

“இங்குள்ள ஆண்கள் அகதிகள். இவர்கள் வாடகை கட்டித்தான் இங்கு வாழ்கின்றனர். உன்னிடம் பணம் இல்லாது இருப்பின் நீ வெளியே போ.” என அதட்டலாகச் சொன்னார். 

உடனடியாகவே நான் வெளியில்.

***

அது குளிர் காலம். அந்தக் காலத்தின் உடுப்பு என்னிடம் இல்லாதிருந்தது. நடுங்கியது எனது உடல். நிலத்தில் எரிந்தபடி கிடந்த  சிகரெட்டை எடுத்துச்  சூடு தரும் எனப்  புகைத்தேன். சில இழுவைகளால் அது நிலத்தில் வீழ்ந்து மரணித்தது. 

நான் நடுங்கி நடுங்கி நடந்தபோது வீதியில் பலர் மொத்தமான உடைகளுடன் மிடுக்காக நடந்து சென்றனர். கொடூரமான குளிர். செத்துவிடுவேனோ என்றும் பயம் வந்தது. பசி வேறு. 

“ஏன் இங்கு வந்தேன்?” எனும் கேள்வி என்னைப் பல தடவைகள் கடித்தது. 

எனக்கு அப்போது பிரெஞ்சு தெரியாது. பல வீதிகளில் நடந்து தமிழர்களைத் தேடினேன்.

ஒருவர் தென்பட்டார். 

“வணக்கம் அண்ணா.” என்றேன்.

என்னை விசித்திரமாகப் பார்த்தார். பின்பு அவர் பேசினார். விளங்கவில்லை. தமிழர் வடிவில் இருந்த அவர் தமிழர் இல்லை என அறிந்து கொண்டேன்.

குளிரோ குளிர்.

அங்கு நான் மெல்லிய குளிரைக் கண்டது மார்கழியில்தான். வேறு மாதங்கள் சூடானவையே. தலையைச் சுட்டாலும், மரங்களது நிழல்கள் எமக்கு எப்போதும் முத்தங்களையே தரும். 

அது சூடு நாடு. குளிர் நாடு இது. 

***

நான் முழுமையான இரவில் நடுங்கியபடி. ஓர் சில்லறையும் இல்லாமல். நேரம் எதுவென்றும் எனக்குத் தெரியாது. காலையில் உயிருடன் இருந்தால் குளிர் போய்விடுமா? 

சில வீதிகளில் கிடந்தனர். இவர்களது உடல்கள் நடுங்காது இருந்ததைக் கண்டு நான் வியப்புற்றேன். அவர்களது அருகில் வெறுமையான வைன் போத்தல்கள் இருந்தன. 

ஓர் கிழவன் ஆடி ஆடி ஓர் போத்தலுடன் வந்து என்முன் சிரித்தார். பின்பு தனது போத்தலைத் தந்தார். பின் மறைந்தார். 

அவர் தந்த போத்தலில் காவாசி வைன்தான் இருந்தது. குடித்தேன். உடலுக்குள் சூடு ஏறியது. அப்போது நான் புதிதாகப் பிறந்தது போல உணர்ந்தேன்.

எனது நடையில் ஓர் வேகம் வந்தது. பசியும்தான். சாண்ட்விச் கிரேக் கடைகளில் இருந்து வந்த வாசம் எனது நாக்கில் பசி வெறியைத் தந்தது. உடலில் ஏறிய சூடு இறங்கியதை உணர்ந்தேன். குளிர் என்னுள் நுழைந்தது.

பசி, ஆம் பசி. குளிர், ஆம் குளிர். 

ஓர் இளம்பெண் குப்பைக் கூடத்துள் சதுரப் பெட்டியை எறிந்தாள். அவள் மறைந்ததும் அந்தக் கூடத்தின் முன் சென்றேன். வாசம் வந்தது. அவள் எறிந்த பெட்டியை எடுத்தேன். 

திறந்தேன். 

அதனுள் ஓர் பாதிப் பிஸா சிறு சூடாக இருந்தது. கடவுளை நம்பாத நான் கடவுளிற்கு நன்றி சொல்லிப்  பிஸாவைக் கடித்தேன். உறைத்தது. அவள் உறைப்புச் சோஸை அதிகம் கலந்திருக்கலாம். அது எனது நாவிற்கு மிகவும் சுவையைத் தந்தது. 

எனது உடலைச் சூடாக்கியது பாதிப் பிஸா.

நான் அகதி என்பதை மறந்து நடந்தேன். தூக்கம் என்னைத் தட்டியது. 

அனைத்துக் கட்டிடங்களின் கதவுகளைப் பார்த்துத்  திறக்க முயன்றேன். கோட் இல்லாமல் எப்படித் திறப்பது?. 

ஒருவர் ஓர் கதவைத் திறந்தார். நான் உள்ளே போக முனையும்போது என்னை ஓர் அந்நியனாகப் பார்த்துக் கதவை மூடினார். 

இந்த வேளையில் “தம்பி!” எனும் குரல் என் பின் விழுந்தது.

திரும்பினேன்.

ஓர் வயோதிபத் தமிழர். நடுங்கும் உடலுடன். 

“தம்பி, நான் சில மாதங்களாக வீதியில்தான் வாழ்கின்றேன். இப்போது குளிர் அதிகம். உங்களது வீட்டிற்கு நீங்கள் அழைத்துச் செல்வீர்களா?”

அவரது விழிகளில் இருந்து கண்ணீர்கள் பெருகின. எனது அப்பாவின் வயது அவருக்கு இருக்கலாம்.

“அண்ணா, நானும் வீதியில்தான் இன்று. எனக்கு றூமும் இல்லை வீடும் இல்லை, குளிரைத் தடுக்கும் மொத்தமான உடுப்பும் இல்லை. உங்களைப்போலவே நான்… உங்களது நிலைமை எனக்கு வருத்தத்தைத் தருகின்றது.”

“தம்பி, கவலைப்படவேண்டாம். எல்லோரது வாழ்வும் ஒன்றல்ல. பலருக்கு வீடுகள். சிலருக்கு வீதிகளே.” 

அந்த வேளையில் ஓர் வயோதிபப் பெண் குப்பைக் கூடத்துள் ஓர் பிளாஸ்ட்டிக் பாய்க்கைப் போட்டாள். 

நான் விரைந்தேன். 

அந்த பாய்க்கினைத் திறந்தேன். அதனுள் கசங்கிய நிலையில் ஓர் மொத்தமான போர்வை இருந்தது. 

அதனை வயோதிபரிடம் கொடுத்தேன்.

“தம்பி, இது உங்களிற்கானது.”

“இல்லை, உங்களுக்கானது.”

போர்வையால் அவரது குளிர் உடலை மறைத்தேன்.

“நன்றி”

நான் அவர் முன் மறைந்தேன்.

000

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

1 Comment

  1. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மனிதர்கள் வேற்று மண்ணில் அகதிகளாக வாழ்கிறார்கள். அந்த அகதிகள் படும் பெரும் துன்பத்தை இந்தக்கதை ஒரு சிறு காட்சி மூலம்
    இதயத்தில் சேர்த்து விட்டது.

உரையாடலுக்கு

Your email address will not be published.