சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1.வழி தவறுகிற ஞானம்
.
குழந்தைகளின் கனவில்
வெட்டப்பட்ட தலையுடன் அலைபவன் அறிகிறான்
ஒரு ஞானத்தை

அர்த்தம் தெரியாத
குழந்தைகள் விழித்துக்கொள்கின்றன
வழி தவறுகிறது ஞானம்

அவன்
இது என்ன இடம் என திகைத்து நிற்கிறான்

தினமொரு கனவு
தினமொரு வெளியேற்றம்
முடிவற்ற கயிறில்
இன்னொரு முடிச்சு விழுந்துகொண்டே இருந்தது
.

2.வேறொரு பாடல்
.
மந்தைகளின் பிரபல பாடலது
அதன் வரிகள் பரிச்சயமானவை
அதன் அர்த்தங்கள் எளிமையானவை
அதில் எந்த தத்துவ கோணல்களும் இல்லை
கண்ணியம் நிறைந்த மனிதனைப்போல
நேர்மையானது

அடுக்கப்பட்ட மாம்பழங்களைப்போல
நடக்கின்றன
அப்பாடலைப் பாடும்
மந்தை உடல்கள்

அதில் ஒரு சிறுமி மட்டும்
மந்தை விலகுகிறாள்
வேறொரு பாடல் எங்கோ ஒலிக்கிறது
அது சிக்கலான பாடலும்கூட
அவள் அந்தக் காற்றையே
மேலும் தொடர்ந்து செல்கிறாள்

ஒரு தலைமுறையில்
ஒரே ஒருமுறைதான்
இப்படி
நடக்கும் என சொல்கிறார்கள்
.

3.நாம் சரிவிகித ஒப்பந்தக்காரர்கள்
.
எல்லாவற்றையும் கணக்கில்கொள்ள வேண்டும்
நேர்மாறாக நம்மை மறதி ஆட்கொள்கிறது
வெறுங்கையுடன்
திரும்புவது இன்றும்
நிகழ்கிறது
எங்காவது நுழையும் முன்
இன்னொருமுறை ஒப்பந்தங்களை
மறதிகளுக்கு
தின்னத் தராமலிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
.

    4.தெரிவிக்கப்படாத வருத்தங்கள்
    .
    சற்றுக் கூடுதலாக
    உன்னுடலை எடுத்துக்கொண்டேன்
    நாம் பற்றிக்கொள்ள இருந்த ஒரே கிளைகள் அவை

    அவ்வுடல்கள்
    .
    இருபத்தியோராம் நூற்றாண்டின் பொழுதுகளுக்கு
    பைத்தியம் பிடித்திருக்கிறது
    .
    வெளியேறிவிட்ட கடவுள்களை
    நாம் இப்போது தொந்தரவு செய்ய வேண்டாம்
    .
    பிடிவாதத்தினால்தான் மட்டுமே
    இன்னும் மிச்சமிருக்கும் சில நம்பிக்கைகள்
    .
    நான் சற்றுக்கூடுதலாகவே
    இனிப்பென சொல்லப்பட்டவைகளை
    எடுத்துக்கொண்டேன்
    .
    அழுகிப்போன வேர்களுக்கு
    திரும்பிப் போவதையே
    நான் கனவு காண்கிறேன்
    .
    காதலின் தற்காலிகம்
    .
    புனையப்பட்ட
    நீதி அநீதி
    .
    AI போன்ற கவிதைகள்
    .
    தூரத்தின் மனப்பிறழ்வுகள்
    .
    அருகின் தனிமைகள்
    .
    தெரிவிக்கப்படாத வருத்தங்கள்
    .
    உடல்களின் ரகசியப் பெயர்கள்
    .

    சற்றுக் கூடுதலாக
    உன்னுடலை எடுத்துக்கொண்டேன்
    நான் பற்றிக்கொள்ள இருந்த ஒரே கிளைகள் அவை
    .

    சதீஷ்குமார் சீனிவாசன்

    சதீஷ்குமார் சீனிவாசன் தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். உயிர்மை இணைய இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

    தமிழ் விக்கியில் 


    Discover more from

    Subscribe to get the latest posts sent to your email.

    உரையாடலுக்கு

    Your email address will not be published.

    திரட்டு

    சேகரம்

    Latest Posts

    Go toTop

    Don't Miss