சாகித்திய அகாடெமி விண்ணப்ப முறை மாற்றம் – கருத்துப் பதிவுகள்

“இவ்வருடம் சாகித்திய அகாடெமியின் விண்ணப்ப முறையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார்கள். இந்த வருடம் முதல் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் தாங்களே விருதுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்கள். இம்மாற்றம் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. மூத்த எழுத்தாளர்கள் கூட தாமே விண்ணப்பிக்க வேண்டுமா; இது அமைப்புகளின் ஆதரவு கொண்டவர்கள் கூடுதல் அனுகூலத்தை வழங்காதா என்று ஒரு சாரர் எண்ணுகிறார்கள். இது விருது முறையை மேலும் ஜனநாயகப்படுத்தவே செய்யும் என்றும் ஒரு தரப்பு உள்ளது.எனவே இது பற்றிய கருத்துக்களை, வெவ்வேறு எழுத்தாளர்களிடம் இருந்தும், பதிப்பாளர்களிடம் இருந்தும் பெற்று இங்கு தொகுத்துள்ளோம். கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டோருக்கு நன்றி “
அகழ்

விண்ணப்பித்து விருது பெறலாமா? : பெருமாள்முருகன்

சாகித்திய அகாதமி விருதுத் தேர்வு முறையில் இதுவரை வெளிப்படைத்தன்மை இல்லை. யார் யாரிடம் பரிந்துரை பெறுகிறார்கள், பரிந்துரைகளிலிருந்து இறுதிப் பட்டியல் எப்படித் தயாராகிறது என்பனவெல்லாம் மர்மக்குகை ரகசியம் போலிருந்தன. இப்போது எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் நலம் விரும்பிகள், பதிப்பாளர்கள் ஆகியோர் ஒருநூலைப் பரிந்துரை செய்து நூல் பிரதியை அனுப்பி வைக்கலாம் என்று சாகித்திய அகாதமி அறிவித்துள்ளது.

இதில் ‘நலம் விரும்பிகள்’ என்பதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. எழுத்தாளரின் குடும்பத்தினரா, வாசகர்களா? யார் வேண்டுமானாலும் அனுப்பலாமா? தெளிவில்லை. ஒரு விண்ணப்பப் படிவத்துடன் நூலின் படி ஒன்றை அனுப்பச் சொல்கிறார்கள். ஒருபக்கப் படிவம் ஒன்று சாகித்திய அகாதமி இணையத் தளத்தில் உள்ளது. அதில் நூலின் பெயர், மொழி, எழுத்தாளர் பெயர், புத்தகம் வெளியான ஆண்டு, இலக்கிய வகைமை, பக்க எண்ணிக்கை, எழுத்தாளரின் முகவரி உள்ளிட்ட விவரங்கள், பதிப்பாளர் விவரங்கள் ஆகியவை கேட்கப்பட்டுள்ளன. அதன் கீழ் ஒரு உறுதிமொழி உள்ளது. ‘மேலே கொடுக்கப்பட்ட விவரங்கள் உண்மையானவை எனச் சான்றளிக்கிறேன், அவை தவறானவை என அறிய வந்தால் எந்த நிலையிலும் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்’ என்று அது கூறுகிறது.

இது எழுத்தாளர் கொடுக்க வேண்டிய உறுதிமொழி போலத்தான் இருக்கிறது. பெயரளவுக்குப் பதிப்பாளர், நலம் விரும்பிகள் என்று கூறியிருந்தாலும் எழுத்தாளர் விண்ணப்பித்தால்தான் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமோ என்னும் ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. கருத்துரிமை சார்ந்த பிரச்சினைகள் உருவான போது, எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தாம் பெற்ற சாகித்திய அகாதமி விருதைத் திருப்பிக் கொடுப்பதாகப் பல எழுத்தாளர்கள் அறிவித்தனர். அது அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. அத்தகைய நிலை இனி உருவாகக் கூடாது என்பதற்கான தந்திர நடவடிக்கையோ இது என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒருவர் விண்ணப்பித்தாலே அவ்விருதுக்குரிய விதிகளை எல்லாம் ஏற்றுக் கொள்கிறார் என்றுதான் பொருள். விண்ணப்பித்துப் பெற்ற விருதைத் திருப்பிக் கொடுக்கும் உரிமை இருக்குமா? திருப்பிக் கொடுத்தால் அது எழுத்தாளருக்குத் தானே அவமானமாகப் போகும்? மேலும் எந்தெந்த நூல்கள் வந்தன என்னும் பட்டியலை வெளியிடுவார்களா, அடுத்தடுத்த பட்டியல்களைத் தயார் செய்ய எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்பவற்றைப் பற்றி ஏதும் தெளிவில்லை. அவை வழக்கம் போல ரகசியமாகத்தான் இருக்குமோ?

விருது பெறத் தம் நூலைத் தாமே அனுப்பும் நடைமுறையைப் பெரும்பாலான எழுத்தாளர்கள் விரும்ப மாட்டார்கள். அப்படி அனுப்பி விருது வேண்டி நிற்பதை மதிப்புக் குறைவாகவே பலரும் கருதுவார்கள். தம்மைத் தாமே முன்னிறுத்திக்கொள்வது இலக்கியம் சார்ந்த விழுமியங்களுக்குப் புறம்பானது என்றே நான் கருதுகிறேன். அரசுக்கு இணக்கமானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கக் கூடும். அதை எதிர்பார்த்துத்தான் இந்த நடைமுறை மாற்றம் வருகிறதோ என்று ஐயுறுகிறேன்.
ஒருவரது சாதனையை மதிப்பிட சமூகம் வேறு அளவுகோல்களைத்தான் வைக்க வேண்டும். அத்துறை சார்ந்த வல்லுநர்கள், படைப்பாளர்கள் உள்ளிட்ட மதிப்பீட்டுக் குழுக்கள் மூலம் (அது எத்தனை குறைபாடு கொண்டதாக இருப்பினும்) ஒருவரைத் தேர்வு செய்வதே பொருத்தமான நடைமுறை. அதில் இருக்கும் குறைபாடுகளைக் களைய உலக அளவிலான விருது நடைமுறைகளை எல்லாம் ஆய்வு செய்து இன்னும் விரிவான தளத்தில் விவாதித்து மாற்றம் செய்ய வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் ‘விண்ணப்பித்தலைச்’ செயல்படுத்துவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

௦௦௦

இது என்ன புதுப்பழக்கம்? : விக்கிரமாதித்யன்

இது என்ன புதுப்பழக்கம்? இவ்வளவு காலமாக இல்லாத ஒரு பழக்கம். படைப்பிலக்கியவாதிகள் பொதுவாகவே கூச்ச சுபாவம் உடையவர்கள். விருதுக்காகவோ, பரிசுக்காகவோ தங்கள் நூலை அந்தந்த நிறுவனத்துக்கு அனுப்பிவைக்க உள்ளம் ஒப்பாதவர்கள். அவர்கள் மீது இப்படி ஒரு புதிய விதியைச் சுமத்துவது சரியல்ல. படைப்பாளிகள் இதைப் பற்றி பேசவும் மாட்டார்கள். சாகித்ய அகாடமி துவங்கப்பட்ட காலத்திலிருந்து தமிழில் தேர்வுக் குழுவினர் எவர் எவரோ அவர்களுடைய எண்ணம் சார்ந்துதான் விருதாளர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் கல்வியாளர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். அடுத்து புகழ்பெற்ற இலக்கியவாதிகள் அந்த திருப்பணியைச் செய்து வந்திருக்கிறார்கள். முற்போக்காளர்கள் ஆக்கிரமிப்பு செய்த காலமும் உண்டு. ஆனால் இதற்காக நாம் சாகித்ய அகாடமியைக் குறைசொல்லிவிட முடியாது. தமிழில் மட்டும்தான் இப்படி நடக்கிறது என்று விமர்சிக்கப்பட்டிருக்கிறது. சாகித்ய அகாடமி விருதுக்கு தகுதியாக, கடந்த மூன்றாண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட நூலாக இருக்கவேண்டுமென்பதும் ஒரு விதி. இந்த விதி எந்தக் காலத்தில் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, இதனாலேயே சுந்தர ராமசாமி, நகுலன், ப. சிங்காரம், ஜி. நாகராஜன் முதலிய படைப்பாளிகள் சாகித்ய அகாதமி விருதைப் பெறாமலேயே மறைந்துவிட்டார்கள். இன்னொரு மிகப்பெரிய கொடுமையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ந. பிச்சமூர்த்தியிலிருந்து தேவதேவன், தேவதச்சன் வரையிலான நவீன கவிஞர்கள் யாருமே சாகித்ய அகாதமி விருது பெறாததற்கு தமிழ் இலக்கிய உலகம் வெட்கப்பட வேண்டும். கவிஞனும் கவிதையும் இல்லாமல் அது என்ன சாகித்ய அகாதமி விருது? நம்முடைய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்களா என்ன? நவீன கவிஞனுக்கு விருது வழங்கக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? வேதனையோடுதான் கேட்க வேண்டியிருக்கிறது. நம்முடைய தேர்வுக் குழுவினர் நேர்மையாக இருந்தால் உண்மையாக நடந்தால் எந்த அநீதியும் நிகழமுடியாது.

௦௦௦

மக்களின் நம்பிக்கையை வெல்லும் நடைமுறை வேண்டும் : ஆர். அபிலாஷ்

சாகித்ய அகாடெமியின் புதிய அறிவிப்பின்படி படைப்பாளிகளே தமது படைப்புகளை நீள்பட்டியலில் பரிந்துரைக்கலாம்: “2025 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதுக்காக இந்திய எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் நலன் விரும்பிகள், பதிப்பாளர் ஆகியோரிடமிருந்து புத்தகங்களைச் சாகித்திய அகாதெமி வருவிக்கிறது. 2019, 2020, 2021 2022 2023 ஆகிய ஆண்டுகளில் முதன்முதலில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் (அதாவது, ஜனவரி 1, 2019 முதல் 31 டிசம்பர் 2023 வரை) 2025 ஆம் ஆண்டுக்கான விருதிற்குப் பரிசீலிக்கப்படும்.”

இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதைப் பேசுமுன் பொதுவாக முன்பிருந்த நடைமுறையை, இன்னும் முழுமையாக மாறாத அதன் போதாமைகளைக் குறிப்பிடுகிறேன். பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், இலக்கிய அமைப்பினர் சேர்ந்து தமது விருப்பத்துக்குரிய நூலைப் பரிந்துரைப்பார்கள். இதுவே நெடும்பட்டியல். அடுத்து இவர்களில் ஒரு தேர்வுக்குழு உருவாக்கப்பட்டு (இதில் முந்தின ஆண்டு பரிசு பெற்ற எழுத்தாளரும் தமிழ்ப் பேராசிரியர்களும் இருப்பர்.) அவர்கள் குறும்பட்டியலைத் தயாரிப்பார்கள். இதற்கு அடுத்தே குறும்பட்டியலில் இருந்து இறுதிக்கட்ட தேர்வுக்குழுவின் முடிவுப்படி ஒரு நூல் விருதுக்குரியதாக தேர்வாகும். அதற்கே சாகித்ய அகாடெமி விருது. ஆனால் இதில் ஒரு ‘ஓட்டையை’ வைத்திருக்கிறார்கள். அதாவது, இறுதியான முடிவெடுக்கும் தேர்வுக்குழுவினர் நினைத்தால் நெடும்பட்டியலில் ஒரு புதிய நூலை தம் விருப்பப்படி சேர்க்கலாம். குறும்பட்டியலிலும் சேர்க்கலாம். ஊழல் செய்ய ரொம்ப வசதியான நடைமுறை இது. அவர்கல் விரும்பினால் தமக்கு வேண்டியவர்களை நெடும்பட்டியலுக்குள்ளோ குறும்பட்டியலுக்குள்ளோ கொண்டு வந்து அங்கிருந்து பிக்பாஸில் “டிக்கெட் டு பைனல்” என ஒரு சாத்தியம் இருக்கிறது அல்லவா அவ்வாறு ஒருவரை விருதாளர் ஆக்க முடியும். அப்படி விருது கிடைத்தவர் தமக்குப் பெற்றுத் தந்தவருக்கு நன்றியுடன் இருக்க விரும்பினால் இது முடிவற்று சுற்றுப்பாதையாக வளர்ந்துகொண்டே போகும். மனிதர்களின் சுயநலம், பலவீனம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அவற்றுக்கு இடம்விடாத ஒரு நடைமுறையை சாகித்ய அகாடெமி உருவாக்க வேண்டும்.

இப்போது கூடுதலாகக் கொண்டு வந்துள்ள வழிமுறையானது எழுத்தாளர்கள் தம் நூல்களை நெடும்பட்டியல் பரிசீலனைக்கு அனுப்ப மட்டுமே உதவும். ஆனால் தகுதிப்படி மட்டுமே அது தேர்வாகும் / நிராகரிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சும்மா ஒரு ஆறுதலுக்காக அனுப்பலாம். சிலநேரங்களில் குறும்பட்டியலில் நூல் வருவதே எழுத்தாளருக்கு ஆறுதலாக, சமூக அந்தஸ்தாக இருக்கலாம். (அல்லது அவருக்கு ஏமாற்றமளித்து நிம்மதியிழக்கவும் வைக்கலாம்.)

இதுவரை தேர்வான புத்தகங்களை மொத்தமாக கேள்விக்குள்ளாக்குவது என் நோக்கமல்ல (எந்த அரசியலும் செய்யும் சாமர்த்தியமில்லாத, ஆர்வமில்லாத ‘தத்தியான’ நானே சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்கார் வாங்கியிருக்கிறேனே). கடந்த பத்தாண்டாக தமிழில் விருதுபெற்றவர்கள் முக்கியமானவர்களே. இந்த முக்கியமானவர்கள் இடையிலும் கூட முழுக்கத் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஒருவர் தேர்வாவதில்லை எனும் முணுமுணுப்பு பரவலாக உள்ளது. பொதுவாக, தேர்வு நடைமுறையில் சில சிக்கல்கள் உள்ளதையும் நாம் ஏற்கவே வேண்டும். இதைச் சரிசெய்ய முந்தின வருட விருதாளரையும் தமிழ்ப் பேராசிரியர்களையும் இறுதித் தேர்வுக்குழுவில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும். அவர்களுக்குப் பதிலாக முக்கியமான தமிழ் இலக்கிய பத்திரிகைகளைப் பட்டியலிட்டு அவற்றில் தொடர்ந்து விமர்சனம் எழுதுவோர், கடந்த முப்பதாண்டுகளாக விமர்சகர்களாக தமிழில் பரவலாக அறியப்பட்டோரில் இருவரை கட்டாயமாக சேர்க்க வேண்டும். அடுத்து, வேற்று மொழியைச் சேர்ந்த (உள்ளூர் / வெளிநாட்டு) முக்கியமான விமர்சகர் / எழுத்தாளரையும் சேர்க்க வேண்டும். இன்று சாட்ஜிபிடியைக் கொண்டோ மொழிபெயர்ப்பாளரை வைத்தோ சுலபத்தில் இறுதிப்பட்டியலில் சேரும் நூல்களின் மொழிபெயர்ப்புகளைத் தயாரிக்க முடியும். அதேபோல இறுதிப் பட்டியலை சில மாதங்களுக்கு முன்பே ஊடகங்களில் வெளியிட்டு விமர்சகர்களின், வாசகர்களின் கருத்துக்களையும் வாக்குகளையும் கோர வேண்டும். இப்படி மூன்று தரப்புகளையும் (அறியப்பட்ட விமர்சகர்-அயல்மொழிப் படைப்பாளி-வாசகர் கருத்துக்கள்) கருதியே இறுதித் தேர்வைச் செய்ய வேண்டும். இப்படி ஒரு நடைமுறை வந்தால் அதில் ஊழல் செய்ய வாய்ப்பு மிகமிகக் குறைவாக இருக்கும். சாகித்ய அகாடெமி விருதுகள் அறிவிக்கப்படும்போதெல்லாம் சர்ச்சையும் தோன்றாது.

கடைசியாக ஒன்று, குறிப்பிட்ட ஐந்தாண்டுகளில் வந்த சிறந்த படைப்புக்கு விருதென்று சாகித்ய அகாடெமி சொன்னாலும் 20-30 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் படைப்பாளிகளுக்கே அளிக்க வேண்டும் எனும் புரிந்துணர்வு விருதுக்குழுவிடம் உள்ளது (அதனாலே சிலநேரங்களில் நல்ல படைப்பாளியின் அண்மையில் வெளியான சுமாரான நூலுக்கோ பழைய நூலின் மேம்படுத்தப்ப்பட்ட புதிய பதிப்புக்கோ கொடுக்கும் அபத்தம் நேர்கிறது). இதையும் மாற்ற வேண்டும். விதிமுறைப்படி ஐந்தாண்டுகளின் சிறந்த நூலுக்கே (அது இளைஞர் எழுதியதாக இருந்தாலும்) விருதுக்குப் பரிசீலிக்க வேண்டும். இன்னொரு பக்கம், வாழ்நாள் சாதனைக்கான தனி விருதொன்றையும் சாகித்ய அகாடெமி அறிவிக்க வேண்டும்.

௦௦௦

மோசமான நடைமுறைக்கு செல்கிறோமோ? : சுனில் கிருஷ்ணன்

சமீபத்தில் சாகித்ய அகாதமி விருதுக்கான தேர்வுமுறை மாற்றப்பட்டது குறித்து அறிந்து கொண்டேன். நடுவர்கள் நியமிக்கப்பட்டு விருதுக்குரிய படைப்புகள் தேர்வு செய்யப்படுவதே வழக்கம். சாகித்ய அகாதமி விருது நடைமுறையில் எழுத்தாளருக்கு வழங்கப்படுவது என்றாலும் தேர்வு படைப்புகளின் அடிப்படையில் தான். இதன் காரணமாகவே பல சமயங்களில் முக்கியமான எழுத்தாளர்களின் முக்கியமில்லாத படைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாகித்ய அகாதமி விருதுக்கு பரிந்துரைகளை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளரே அனுப்பலாம் அல்லது வாசகர்கள், பதிப்பாளர்கள் தங்களது பிரியத்திற்குரிய எழுத்தாளரை பரிந்துரை செய்து புத்தக பிரதியுடன் சேர்த்து இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை எப்படி பார்ப்பது?

யுவ புரஸ்கார் விருதுக்கு இம்மாதிரி பிரதிகளை வரவேற்கும் வழக்கம் உண்டு. எனினும் அவற்றை இறுதியாக கொள்வதில்லை என்றும் எண்ணுகிறேன். சாகித்ய அகாதமி சிலரிடம் பரிந்துரைகளை கேட்டு பட்டியல் தயாரிப்பது உண்டு. இப்போது சாகித்ய அகாதமி விருதுக்கும் இதே நடைமுறை கடைபிடிக்க முடியுமா என்பதில் தெளிவில்லை. சாதக அம்சம் என்று யோசித்தால், எனக்கு பிடித்த, தகுதி வாய்ந்த ஆனால், ஒருபோதும் விருதின் இறுதிப் பட்டியலைச் சென்றடையாத எழுத்தாளர்களை பரிந்துரைக்கும் வாய்ப்பு அமைகிறது. மறுபக்கம் இந்த விருது பரிந்துரையின் எண்ணிக்கை படி தீர்மானிக்கப்படுமா என்றொரு குழப்பமும் உள்ளது. அமேசான் கிண்டில் போட்டி இங்கே வாசக வாக்கெடுப்பின் படி நடத்தப்பட்ட போது என்ன நிகழ்ந்தது என்பதை நினைவுகூர வேண்டும். குழுவாக செயல்பட்டு பரிசுகளை வென்றார்கள். சாகித்ய அகாதமி என்பது தமிழ் எழுத்தாளர்களுக்கு இன்று வெறும் ஒரு லட்சம் ரூபாய் உள்ள விருதும் கவுரவமும் மட்டுமல்ல. தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வழங்கப்படுவதால், இந்த விருதின் மதிப்பு பன்மடங்கு பெருகிவிட்டது. நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் தங்களை முன்வைப்பதில் எப்போதும் தயங்குபவர்கள். இந்த கூச்சமும் தயக்கமும் சரி என்று நான் நம்புகிறேன். ஆனால், இந்த புதிய தேர்வுமுறை வலுவான குரலுடையவர்களுக்கும், சமூக இருப்பு உடையவர்களுக்கும் சாதகமாக முடியும் என்று ஐயுறுகிறேன். இலக்கிய தகுதி என்பது பின்னுக்கு சென்று வாசக நல் உறவு என்பது முதன்மையான அளவுகோலாக மாறிவிடலாம். சராசரிகளே முனைப்புடன் தொடர்புகளை பேணி விருதை மொத்தமாக வசப்படுத்திவிடுவார்கள்.

சாகித்ய அகாதமி விருது தேர்வுமுறை இன்னும் வெளிப்படையானதாக மாற வேண்டியது கட்டாயம். முழுக்க மக்கள் மயப்படுத்துவது இலக்கியம் போன்ற நுண்ணிய ரசனை தேவைப்படும் துறைக்கு சிக்கலாக முடியும். வலுவான வாசிப்பு பின்புலம் உள்ள நடுவர்கள் நியமிக்கப்படுவது முக்கியம். பரிந்துரைகளின் வழி குறைவாக பிரதிநித படுத்தப்படும் ஆக்கங்களை/ எழுத்தாளர்களை அல்லது இடம்பெறாத எழுத்தாளர்களை சேர்க்கும் உரிமை நடுவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். வெள்ளையறிக்கை போல பரிந்துரைக்கு வந்த புத்தகங்களின் பட்டியலும் குறும்பட்டியல் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதும், பரிசுக்குரிய ஆக்கம் குறித்த நடுவர்களின் பார்வையும் இடம்பெற வேண்டும். நடுவர்களின் நம்பகத்தன்மை மீதான ஐயத்தால் நாம் இப்போது உள்ள நடைமுறை காட்டிலும் மோசமான நடைமுறைக்கு செல்கிறோமோ எனும் அச்சமே மேலிடுகிறது.

௦௦௦

உள்ளார்ந்த சிக்கல்களைப் புரிந்து கொள்ள மேலும் காலம் தேவை : நரன், சால்ட் பதிப்பகம்

இந்த அறிவிப்பின் மூலம் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை உடனடியாக கணித்து கூற முடியாது. எப்போதும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் போதெல்லாம், அதன் தாக்கங்களை நாமும் பிறரும் அனுபவம் வாயிலாகத் தான் உணர முடியும்.

தற்போதைய அறிவிப்பில் வெளிப்படையாக நேர்மறையான அம்சங்கள் தென்படுகின்றன. இருப்பினும் மத்திய அரசு தற்போது நடைமுறையை மாற்ற முயற்சிக்கின்றது என்பதால், மத்திய அரசின் மீது ஏற்கனவே நிலவும் அவநம்பிக்கை காரணமாக, இதைப்பற்றி மேலும் தீவிரமாக யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எழுத்தாளரும், பதிப்பாளரும் நேரடியாக விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு, வெளிப்படைத்தன்மையைக் காட்டுகிறது. இது முதலில் பார்ப்பதற்கு வரவேற்கத்தக்கதாகத் தோன்றினாலும், இதன் உள்ளார்ந்த சிக்கல்களைப் புரிந்து கொள்ள மேலும் காலம் தேவைப்படும். அனுபவம் வாயிலாக மட்டுமே அதன் உண்மையான தாக்கங்களை அறிந்து கொள்ள முடியும்.

மாநில அரசு சாகித்திய விருது பெற்றவர்களுக்கு வீடு மற்றும் பிற சலுகைகளை வழங்கத் தொடங்கிய பிறகே, இவ்விருது அதிக கவனத்திற்கு வந்தது. பல எழுத்தாளர்கள் இவ்விருதைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பதும் கேள்விப்பட்ட விஷயமே. நம் சமூகத்தில் பல தகுதியான மூத்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் எதிர்காலத்தில் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கிறது.

இதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், அரசுக்கு நெருக்கமானவர்களுக்கே விருதுகள் வழங்கப்படும் நிலையை உருவாக்குமா, அல்லது தொடர்பு வழியாக விருதுகளைப் பெறும் முயற்சிகளை ஊக்குவிக்குமா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இந்த புதிய நடைமுறையின் உண்மையான தாக்கங்களை நம் அனைவரும் ஒருவருடம் கழித்து தான் மதிப்பீடு செய்ய முடியும்.

௦௦௦

விண்ணப்பிப்பதில் அனுகூலம் உண்டு : ஜீவகரிகாலன் , யாவரும் பதிப்பகம்

கலைத்துறையில் உலகம் முழுக்க இருக்கின்ற பல விருதுகள், விண்ணப்பித்தால் மட்டுமே கிடைக்கும் என்பதால் விருதிற்கென விண்ணப்பிக்கும் முறை எந்த தாழ்வும் அற்றது. மாறாக அது எல்லாவித ஜனநாயகத்தன்மையும் கொண்டதாகிறது. இது சாகித்ய அகாதமியிலும் புதிதானது அல்ல. யுவ புரஸ்கார் விருதிற்கு 2016ல் இருந்து ஒவ்வொரு வருடமும் நூல்கள் அனுப்பி வைக்கிறோம்.

ஆனால், அண்மைகாலங்களில் வெளியிடப்பட்ட யுவபுரஸ்கார் இறுதிப்பட்டியலில், நாம் அனுப்புகின்ற நூல்கள் பார்வைக்காவது சென்றிருக்குமா என்கிற ஐயம் வந்த ஆண்டுகளும் இருக்கிறன.

ஒரு பொது நிகழ்வில் மூத்த படைப்பாளர் (அவரும் சாகித்திய அகாதமிக்கு விண்ணப்பிப்பார் என நம்புகிறேன்) ஒருவர் இளைய படைப்பாளர் ஒருவரிடம், தாம் தேர்வுக் குழுவில் இருப்பதால் இளையவரை ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்தில் நூல் பதிப்பக்கக் கூடாது என சர்வசாதாரணமாக பேசுமளவு பழைய முறையிலேயே நிறைய களைகள் இருக்கவே செய்கின்றன.

கடந்த ஆண்டு ஒரே புத்தகம் யுவபுரஸ்கார் இறுதிப்பட்டியலிலும், பாலபுரஸ்கார் இறுதிப்பட்டியலிலும் இடம்பெற்றிருந்தது.. விண்ணப்பிப்பதில் இருக்கும் அனுகூலம் இது என்றும் சொல்லலாம். இப்போதிருக்கும் அகாதமியின் குழு மீது நல்ல நம்பிக்கை இருக்கிறது.

ஆகவே விண்ணப்பித்தலால், இத்தொழிலுக்கு ஒரு இழுக்கும் வந்துவிடப்போதவில்லை.

௦௦௦

இது முழுமையான மாற்றம் அல்ல : மு. வேடியப்பன் : டிஸ்கவரி புக் பேலஸ்

சாகித்திய அகாடமி இவ்வாறு எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அனுப்பக் கோருவது வரவேற்கத்தக்க ஒரு விடயம்தான். இது முழுமையான மாற்றம் அல்ல; ஒரு சிறிய மாற்றம் மட்டுமே. இதுவரை நடுவர் குழுவில் உள்ளவர்கள் தங்களுக்குள் கலந்தாலோசித்து, பல்வேறு வட்டங்களில் உரையாடல் நிகழ்ந்து, இறுதியில் விருதாளரைத் தேர்வு செய்தனர். இப்போது, விருதுக்காக பரிசீலிக்கப்பட வேண்டிய படைப்புகளை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும், நடுவர் குழுவே இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டதாகவே இருக்கும்.

இந்த அறிவிப்பில், அனுப்பப்படும் புத்தகங்களில் இருந்தே விருதுக்கான தேர்வு நடைபெறும் என்று மட்டும் சொல்லப்படவில்லை. “நீங்களும் விண்ணப்பிக்கலாம்” என்ற வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். ஆனால், விண்ணப்பிக்கப்பட்ட படைப்புகளில் தகுதியானவை இல்லை என்று நடுவர் குழு நிராகரித்தால், அவர்கள் தாங்களாகவே பரிந்துரைகள் செய்யும் சுதந்திரமும் அவர்களுக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே, இந்த அறிவிப்பு ஒரு சிறிய மாற்றமேதான். இது பல எழுத்தாளர்களுக்கு விருதுக்கு விண்ணப்பிக்க முன்செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அடிப்படையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை.

இதுவரை நடுவர் குழு எந்த முறையில் தங்களுக்குள் கலந்தாலோசித்து தேர்வு செய்தார்களோ, அச்செயல் முறைதான் இனிமேலும் தொடரப்போகிறது. எனினும், இந்த அறிவிப்பை ஒரு மாற்றத்தின் தொடக்கமாக நம்மால் வரவேற்கலாம். ஆனால், இது மூலம் ஆக்கபூர்வமான மாற்றங்கள், மேலதிக ஜனநாயகத் தன்மை போன்றவை உருவாகும் என நம்ப முடியாது. இதற்கு முன்பும் ஜனநாயகத் தன்மை இல்லை என்று கூற முடியாது; ஏற்கனவே தேர்வுக்கான குழுவும், நடைமுறைகளும் உள்ளன. அதே நடைமுறையில் இனிமேலும் தேர்வுகள் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.

இது வெறும் ஒரு அறிவிப்பு மட்டுமே. ஆனால், இந்த அறிவிப்பால் “நான் விருதுக்கு அனுப்பினேன், ஆனால் கிடைக்கவில்லை” என்ற வருத்தத்தை எழுத்தாளர்களிடையே அதிகரிக்கும் அபாயம் இருக்கலாம்.

எந்தக் காரணத்திற்கும், “இந்த அறிவிப்பை பார்த்துத்தான் விருதுக்கு அனுப்பினேன், அதனால் தான் விருது கிடைத்தது” என்ற நிலை ஏற்படாது என நான் உறுதியாகக் கூறுகிறேன். ஏனெனில், விருதுக்கான தேர்வு பல கட்டங்களில் நடைபெறும் — முதற்கட்டத் தேர்வு, அதன் பின்னர் ஆலோசனை, மறுபடியும் தேர்வு ஆகியவை.

இவ்வாறு இருந்தபோதிலும், தகுதி மட்டுமல்லாது, தகுதியை மீறிய அரசியல் ஆளுகையும் இதில் இடம் பெறும். அது முன்பும் இருந்தது; இப்போதும் இருக்கிறது; இந்த அறிவுப்பின் பின்னாலும் இருக்கும் என நான் நம்புகிறேன்.

000

1 Comment

  1. ஓர் சிறந்த படைப்பாளி விருதுகளையம் விண்ணப்பிகளையும் தேடுவது என்பது ஓர் அரக்கத் தனம். சாகித்ய அக்கடமி என்பது ஓர் இலக்கிய சாவுத்திய அக்கடமிதான்.

Leave a Reply to 0000 Cancel reply

Your email address will not be published.