
வாயேஜர்
கைவிடப்பட்ட சிலுவையின்
JCB நீட்டிய பக்கக்கை வழியே
தேவகுமாரன் மீட்கப்படுகிறார்.
உயிரிருப்பைத் தேடும்
JWT தவறிவிடுகிறது
உயிர்ப்பந்தில்
செருகியிருக்கும்
கல்வாரி ‘அன்க்’குகளை.
பரம பிதாவின்
வலதுபுறமும் இடதுபுறமும்
கருந்துளைகள் மறைவாக
திருடிச் செல்கின்றன
பெத்லஹம்மின்
நட்சத்திரங்களை.
வானம் இருண்டு
பூமி பிளந்து
ஓங்கி இடுகிறது
சப்தம்.
வெளவால்கள்
லாவகமாக ஒதுங்கிச்
செல்கின்றன.
குருடர்கள் பார்க்கவும்
செவிடர்கள் கேட்கவும்
அந்த வெளுத்த
நீலப்புள்ளியை
BLDCயின் ஒற்றையென்று
ரிமோட்டை அழுத்திவிட்டு
தூங்குகிறது
ஒரு சாம்பல் மேடு.
000
எக்ஸ்-ரே
நிறைய படங்களை
பள்ளி நாட்களில்
ரெக்கார்டு எழுத
பயன்படுத்தியிருக்கிறேன்.
இன்று மறுதலிக்கிறேன்
இது அந்தக் கருவியின்
கற்பனை.
ஜீனோவும்
கனவு காண்கிறான்தான்
அப்போது அவன்
என்னை நோக்கியும்
நான் அவனை நோக்கியும்
ஓடி வருகிறான்
கையெடுத்து நீவும்
நான் முழுவதுமாகக்
ஒரு கை
இதை மீறிய
எதுவும் இல்லை
அவனுக்கும் தெரியாது
இல்லை,
இல்லை
எனக்கும்.
000
மூக்கு நோண்டி
யாரும் இல்லாத நேரங்கள்
வாய்க்கும்போது தானாகவே
கை விரல் செயல்பட்டுவிடுகிறது
அப்படி வாய்க்காத
நீண்ட நாள் இடைவெளியில்
ஒரு துணுக்குறலும்
குலுங்கியழும் அவசமும்
கடந்தது இன்று.
வருடக்கணக்கில்
பக்கவாதத்தில்
படுக்கையாகக் கிடந்த
மூக்கிற்குள்ளே
நுழைந்த விரலொன்று
காய்ந்த தொப்புள் கொடியின்
மீளும் எச்சமாக
பறிமாற்றமற்ற ஆதி குகையின்
எஞ்சிய ஒரு மிடறு
காற்றையும் விடுவித்து
தனையன் தாயாகி
மாற்றுநிலையில்
ஒரு கிரணம்
துளியாகப் பூத்து
ஓங்காரம்
வேறு நிரலில்
நிகழ்ந்து
முடிகிறது.
000

சாகிப்கிரான்
கவிஞர், எழுத்தாளர். வண்ணச் சிதைவுகள், அரோரா ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புககளின் ஆசிரயர். "அறிவின் பயனின்மையும், அறிவு எரிந்த பிறகே தோன்றும் அழகு குறித்த துக்கமும், எல்லையற்றதின் மீதான திகைப்பும் சாகிப்ரானின் கவிதையில் தென்படுகிறது" என்று கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

அருமை, அருமை,,