உலகின் கடைசி இரவு : ரே பிராட்பரி

தமிழில் : ஜி.ஏ. கௌதம்

“இதுதான் உலகின் கடைசி இரவு என்று உனக்குத் தெரிந்திருந்தால் என்ன செய்வாய்?”

“நான் என்ன செய்வேன்? உண்மையாகவே கேட்கிறாயா, என்ன?”

“ஆமாம். உண்மையாகத்தான்.”

“எனக்குத் தெரியவில்லை. நான் அதுபற்றி சிந்தித்ததே இல்லை”.

அவர் கொஞ்சம் காபியை ஊற்றினார். பின்னணியில் பச்சை நிற லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் வரவேற்பறை விரிப்பில் பெண் குழந்தைகள் இருவரும்  கட்டைகளை அடுக்கி விளையாடிக்கொண்டிருந்தனர். மாலை நேரக் காற்றில் புதிதாகத் தயாரித்த காபியின் தூய நறுமணம் மிதந்து வந்தது.

“சரி, இதைப்பற்றி யோசிக்கத்துவங்கிவிடுவது நல்லது,” என்றான்.

“நீ விளையாட்டுக்காகச் சொல்லவில்லையே?”

அவன் தலையாட்டினான்.

“யுத்தமா?”

அவன் தலையசைத்து மறுத்தான்.

“ஹைட்ரஜன் குண்டு அல்லது அணு குண்டு – அதுவும் இல்லையா?”

“இல்லை”

“ஒரு வேளை கிருமி யுத்தமா?”

”இவை எதுவுமே இல்லை,” காப்பியை மெல்லக் கலக்கியபடி கூறினான். ”ஆனால் ஒரு விதமான முடிவு என்று சொல்லலாம்.”

“எனக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை..”

”இல்லை, உண்மையில் எனக்கும் புரியவில்லை. இது வெறும் உணர்வு மட்டுமே. சிலசமயம் இது என்னை பயமுறுத்தும். சிலசமயம் நான் பயப்படுவதில்லை. மாறாக, சாந்தமாக இருப்பேன்.” பெண் குழந்தைகளை திரும்பிப் பார்த்தான். அவர்களின் தங்க நிற கூந்தல் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது  ”நான் இதுவரை உன்னிடம் எதுவும் கூறவில்லை. சுமார் நான்கு இரவுகளுக்கு முன்பு தான் இது முதன்முதலாக நிகழ்ந்தது.”

“எது?”

“நான் கண்ட ஒரு கனவு. எல்லாமே முடிவுக்கு வரப்போகிறது என்பது போன்ற ஒரு கனவு கண்டேன். ஒரு குரல் அப்படிக் கூறியது. என் நினைவுக்கு வரக்கூடிய பரிச்சயமான குரல் அல்ல. ஆனாலும் நிச்சயமாக ஒரு குரல் தான். நம் பூமியில் அனைத்து நிகழ்வுகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று அது கூறியது. அடுத்த நாள் அதைப்பற்றி நான் பெரிதும் சிந்திக்கவில்லை. ஆனால் வழக்கம்போல் அலுவலகம் சென்றேன். மதிய இடைவேளையின் போது ஸ்டான் வில்லிஸ் ஜன்னல் வழியே எங்கோ பார்த்தபடி நிற்பது என் கண்ணில்பட்டது. அவனிடம் சென்று, ”என்ன சிந்தனை?” என்று கேட்டேன். நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் என்றான். அந்தக் கனவைப்பற்றி அவன் சொல்வதற்கு முன்பே அது என்னவென்று எனக்குத் தெரிந்துவிட்டது. நான் அவனிடம் அதைக் கூறியிருக்கலாம். ஆனால் அவன் சொல்வதால், நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.”

“இதுவும் அதே கனவா?”

“அதே தான். நானும் அந்த கனவு கண்டதாக ஸ்டானிடம் கூறினேன். அவன் ஆச்சரியப்பட்டதாகத்  தெரியவில்லை. உண்மையில் ஆசுவாசமடைந்தான் என்று சொல்லலாம். அதன் பின்னர் கால் போன போக்கில் அலுவலகம் முழுவதும் சுற்றத் தொடங்கினோம். இது எதேச்சையாக நிகழ்ந்தது. ‘ஒரு சுற்று நடந்துவிட்டு வரலாம்’ என்று நாங்கள் பேசிவைத்துக் கொள்ளவில்லை. அவரவர் மனம் போன போக்கில் நடந்தோம். சென்ற இடமெல்லாம் மக்கள் தங்கள் மேசைகளையோ, கைகளையோ அல்லது ஜன்னல்களுக்கு வெளியிலோ பார்த்தபடி இருந்தார்கள். சிலரிடம் நான் பேச்சுக் கொடுத்தேன். அப்படியே ஸ்டானும்.”

”அவர்கள் எல்லோரும் கனவு கண்டிருந்தார்களா?”

“ஆம். அனைவருக்கும் அதே கனவு. எந்த வேறுபாடும் இல்லை.”

“அதை நீ நம்புகிறாயா?”

“ஆம். இதற்குமுன்பு நான் எப்போதும் இவ்வளவு உறுதியாக இருந்ததில்லை.”

“சரி, இது எப்போது முடிவுக்கு வரும் என்று நினைக்கிறாய்? அதாவது, இந்த உலகம்.”

“நமக்கு இரவுப் பொழுதில். பின் உலகின் மற்ற பகுதிகளை நோக்கி இரவு செல்லச் செல்ல, அங்கும் நிகழும். உலகம் மொத்தமாக முடிவு பெற 24 மணி நேரம் ஆகும்.”

இருவரும் தங்கள் காபியைத் தொடாமல் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். பின்னர் கோப்பையை மெல்ல கையில் எடுத்துக்கொண்டு, ஒருவரையொருவர் பார்த்தபடி அருந்தினார்கள்.

“நமக்கு இப்படியெல்லாம் நிகழ வேண்டுமா?” அவள் கேட்டாள்.

“நிகழ வேண்டுமா என்பது விஷயமல்ல. எதுவும் சரியாக அமையவில்லை, அவ்வளவு தான். இதைப்பற்றி நீ எதுவும் வாதிக்கக்கூட இல்லை என்பதை நான் கவனித்தேன். ஏன்?”

“அதற்கு என்னிடம் காரணம் உள்ளது என்று நினைக்கிறேன்,” என்றாள்.

”அலுவலகத்தில் அனைவரிடமும் இருந்த அதே காரணமா?”

அவள் மெதுவாக தலையாட்டினாள். “நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நேற்றிரவு அது நடந்தது. அத்தோடு அக்கம்பக்கத்தில் இருந்த பெண்கள், இன்று தங்களுக்குள் அதைப்பற்றி பேசிக்கொண்டார்கள்.  அவர்களும் கனவு கண்டிருக்கிறார்கள். இது வெறும் தற்செயலான நிகழ்வு தான் என்று நான் நினைத்தேன்.” அவள் மாலை செய்தித்தாளை எடுத்துப்பார்த்தாள். “செய்தித்தாளில் அதைப்பற்றி எதுவும் இல்லை” என்றாள்.

”எல்லோருக்கும் தெரியும். ஆகவே அதற்கு அவசியமில்லை.”

அவன் தனது நாற்காலியில் சாய்ந்துகொண்டு அவளைப் பார்த்தான். ”பயமாக இருக்கிறதா?”

“இல்லை. பயப்படுவேன் என்றுதான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பயமாக இல்லை.”

“அவர்கள் அதிகம் பேசும் தற்காப்பு என்று சொல்லப்படும் உணர்வு எங்கே போனது?”

எனக்குத்தெரியவில்லை. சில விஷயங்கள் தர்க்கரீதியாக இருப்பதை உணரும் போது நாம் பெரிதாக ஆச்சரியப்படுவதில்லை. இது தர்க்கரீதியானது. நாம் வாழ்ந்து வந்த முறையை வைத்துப்பார்த்தால், இதைத்தவிர வேறு எதுவும் நடந்திருக்க முடியாது.

“நாம் அப்படி மோசமான வாழ்க்கை நடத்தினோமா, என்ன?”

“இல்லை, அதே சமயம், மிக நல்ல நிலையிலும் இல்லை. அது தான் பிரச்சனை என்று நினைக்கிறேன் — நாம் நாமாகவே இருந்தோம்  என்பதைத் தவிர வேறு பெரிதாக எதையும் செய்யவில்லை. ஆனால் மறுபுறம், உலகின் ஒரு பெரும் பகுதி மிகவும் மோசமான பல செயல்களில் முனைப்பாக ஈடுபட்டிருந்தது.”

பெண் குழந்தைகள் இருவரும் வரவேற்பறையில் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“இது போன்ற நேரத்தில் மக்கள் தெருக்களுக்கு ஓடி வந்து கூச்சலிட்டுவார்கள்  என்று தான்  நான் எப்போதும் நினைத்திருந்தேன்.”

“எனக்கு அப்படித் தோன்றவில்லை. நிஜமான நிகழ்வுகளின் போது இப்படியெல்லாம் அலறமாட்டார்கள்.”

“உனக்குத்தெரியுமா, உன்னையும் குழந்தைகளையும் தவிர வேறு எதையும் நான் எண்ணி ஏங்கமாட்டேன். உங்கள் மூவரையும் தவிர நகர வாழ்க்கையையோ, எனது வேலையையோ அல்லது வேறு எதையோ நான் ஒரு போதும் விரும்பியதேயில்லை. ஒரு வேளை வானிலையில் மாற்றம், வெப்பமான நாளில் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் ஆகியவற்றைத் தவிர எதையும் எண்ணி ஏங்கப் போவதில்லை.. தூக்கத்துக்காக வேண்டுமானால் ஏங்கலாம். நாம் எப்படி இங்கே அமர்ந்து இப்படி ஒரு உரையாடலை நிகழ்த்த முடியும்?”

“ஏனெனில் செய்வதற்கு வேறு வேலை ஒன்றும் இல்லை.”

“அதென்னவோ சரி தான். அப்படி ஏதாவது இருந்திருந்தால், அதைத்தான் செய்துகொண்டிருப்போம். இரவு நேரத்தில் அவரவர் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்திருப்பது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.”

“மற்ற அனைவரும் இன்று மாலை, அடுத்த சில மணிநேரங்களுக்கு என்ன செய்வார்கள் என்று நான் சிந்திக்கிறேன்.”

“வேறென்ன… ஏதேனும் நிகழ்ச்சிக்குச் செல்வார்கள், வானொலி கேட்பார்கள், தொலைக்காட்சி பார்ப்பார்கள், சீட்டு விளையாடுவார்கள், குழந்தைகளைப் படுக்கையில் கிடத்துவார்கள், வழக்கம்போல அவர்களும் படுக்கச் செல்வார்கள்.”

“ஒரு வகையில் அது பெருமைப்படத்தக்க விஷயம்—வழக்கம் போல.”

அவர்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். அதன் பின்னர் அவன் தனக்கு இன்னும் ஒரு காப்பி ஊற்றிக்கொண்டான். “ஏன் இன்று இரவு நிகழும் என்று நினைக்கிறாய்?”.

“ஏனென்றால்”

“கடந்த நூற்றாண்டிலோ, ஐந்து அல்லது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்போ வேறு ஏதாவது ஓர் இரவாக ஏன் இருந்திருக்கக் கூடாது?”

“ஒரு வேளை அக்டோபர் 19, 1969 என்ற நாள் வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை என்பதால் இருக்கலாம். அது இப்போது இருக்கிறது, அவ்வளவுதான்; இந்த நாள் வேறு எந்த நாளையும் விட அர்த்தமுள்ளது; ஏனென்றால் இந்த ஆண்டில் தான் உலகம் முழுவதும் சம்பவங்கள் ஒன்று போல நிகழ்கின்றன. அதனால்தான் இது முடிவாக அமைந்துள்ளது.”

“இன்றிரவு பெருங்கடலின் குறுக்காக இரு திசைகளிலும் குண்டு வீச்சு விமானங்கள் தரை தொடாமல் செயல்படத் தயாராக உள்ளன.”

“அது தான் ஏன் என்பதற்கான காரணத்தின் ஒரு பகுதி”

“சரி,” என்றான் அவன், எழுந்தவாறே. “இனி என்ன? பாத்திரங்களைக் கழுவலாமா?” என்றான்.

அவர்கள் பாத்திரங்களைக் கழுவி, மிகுந்த நேர்த்தியுடன் அடுக்கி வைத்தனர். இரவு 8:30 மணிக்கு குழந்தைகளைப் படுக்கச்செய்து, இரவு வணக்கம் சொல்லி முத்தமிட்டனர். அவர்களின் படுக்கைகளுக்கு அருகில் உள்ள சிறிய விளக்குகளை ஏற்றிவிட்டு, கதவைக் சற்றே திறந்து வைத்தார்கள்.

”நான் சிந்திக்கிறேன்,” என்றான் அந்தக் கணவன். படுக்கையறையிலிருந்து வெளியே வந்து, திரும்பிப் பார்த்தபடி புகைக்குழலோடு ஒரு கணம் நின்றான்.

“என்ன?”

“அறைக்கதவை முழுவதுமாக மூடிவைக்கலாமா, அல்லது வெளிச்சம் வருவதற்காக இன்னும் சற்றே திறந்து வைக்கலாமா?”

“இவையனைத்தும் குழந்தைகளுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.”

”இல்லை. நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.”

அவர்கள் அமர்ந்துகொண்டு, செய்தித்தாள்களைப் படித்தார்கள். பேசிக் கொண்டார்கள். கொஞ்சம் வானொலி இசை கேட்டார்கள். பின் கணப்பின் அருகே தீக்கங்குகளைப் பார்த்தபடி ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். கடிகாரம் 10:30, 11:00, 11:30 என அலாரம் அடித்தபடி இருந்தது. தங்கள் மாலைப் பொழுதை ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட விதத்தில் கழித்திருந்த மற்ற உலக மக்கள் அனைவரைப் பற்றியும் அவர்கள் சிந்தித்தனர்.

“சரி”, என்றான், இறுதியாக.

நீண்ட நேரம் தனது மனைவியை முத்தமிட்டான் “எப்படிப் பார்த்தாலும், நாம் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்திருக்கிறோம்.”

“உனக்கு அழ வேண்டும் போலிருக்கிறதா” என்று கேட்டான்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.”

அவர்கள் வீடு முழுவதும் சென்று, விளக்குகளை அணைத்துவிட்டு, தங்கள் படுக்கையறையை அடைந்தார்கள். இரவின் குளிர்ந்த இருளில் நின்றபடி ஆடைகளைக் களைந்துவிட்டு போர்வைகளை விலக்கினார்கள்.. “விரிப்புகள் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கின்றன”.

“நான் களைப்பாக இருக்கிறேன்.”

“நாம் அனைவரும் களைப்பாகத்தான் இருக்கிறோம்.”

அவர்கள் தங்கள் படுக்கையில் சாய்ந்து படுத்துக் கொண்டனர்.

“ஒரு நிமிடம்,” என்றாள் அவள்.

அவள் படுக்கையிலிருந்து எழுந்து சமையலறைக்குள் செல்வது அவனுக்குக் கேட்டது. சிறிது நேரம் கழித்து அவள் திரும்பி வந்தாள். “சமையலறைத் தொட்டியில் தண்ணீரைத் திறந்தபடி விட்டுவிட்டேன்,” என்றாள்.

இதில் ஏதோ மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது, அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தான் செய்த வேடிக்கையான காரியம் என்னவென்று அறிந்ததில் அவளும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள். இறுதியில் அவர்கள் சிரிப்பதை நிறுத்திவிட்டு, தங்களது குளிர்ந்த இரவுப் படுக்கையில் கைகோர்த்துக் கொண்டு, தலைகளை அருகருகே வைத்துக் கொண்டு படுத்தார்கள்.

“குட் நைட்” என்றான், ஒரு கணம் கழித்து.

அவளும், “குட் நைட்” என்றாள்.

ரே பிராட்பரி

ரே பிராட்பரி (1920-2012): அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர். ஏறக்குறைய 600 சிறுகதைகள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டார்க் கார்னிவல்’ 1947-ல் வெளிவந்தது. 1950-களில் இவரது பல கதைகள் ‘ஈ.சி. காமிக்ஸ்’ நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன.

‘எ சவுண்ட் ஆஃப் தண்டர்’, ‘தி வெல்ட்’, ‘ஆல் சம்மர் டே’ ஆகிய சிறுகதைகள் பிரபலமானவை. 1953-ல் வெளியான இவரது ‘ஃபாரன்ஹீட் 451’ புதினம் உலகப்புகழ் பெற்றது. ‘தி மார்ஷியன் குரோனிகல்ஸ்’, ‘தி இல்லஸ்ட்ரேட்டட் மேன்’, ‘சம்திங் விக்கட் திஸ் வே கம்ஸ்’ ஆகியவையும் குறிப்பிடத்தக்க படைப்புகள்.

இவரது பல கதைகள் திரைப்படங்களாக, தொலைக்காட்சிப் படங்களாக, தொடர்களாகத் தயாரிக்கப்பட்டு மேலும் புகழ்பெற்றன. செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரையிறங்கிய இடத்துக்கு ‘பிராட்பரி லேண்டிங்’ என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜி.ஏ. கௌதம்

திரைப்படத் தொகுப்பாளர், எழுத்தாளர், மற்றும் மொழிபெயர்ப்பாளர். காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலைப் படிப்பை நிறைவு செய்தவர். ‘டக்கர்’, 'மரகத நாணயம்’, ‘மின்னல் முரளி’ உட்பட பல்வேறு திரைப்படங்களிலும், குறும்படங்கள், இணையத் தொடர்கள், ஆவணப்படங்கள், மற்றும் விளம்பரப் படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளையும், திரைப்பட தயாரிப்பு முறை குறித்த நுணுக்கமான ஆய்வுகளையும், சமகாலப் பிரச்சனைகள் குறித்த அபுனைவுகளையும், தமிழ் மற்றும் ஆங்கில முன்னணி இதழ்களில் எழுதி வருகிறார்.

மரியோ வர்காஸ் யோசா, ஒடெசா மோஷ்ஃபெக், வீயத் தான் நவென், தாரா கேம்பெல், ஜுனோட் டயஸ், பென் ஓக்ரி உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளையும், கட்டுரைகளையும், பேட்டிகளையும் தமிழில் மொழியாக்கம் செய்துவருகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss