திக்குவிஜயம் : கார்த்திக் ராமச்சந்திரன்

முன்பதிவில்லாத ரயில் பெட்டி. உட்கார இடமில்லாமல் கதவருகே பதினைந்து பேர் நெரித்துக் கொண்டிருந்தனர். இன்னும் பலர் பாதையிலும்  கிடைத்த இடங்களிலும் தங்களைச் சிறைப்படுத்தியிருந்தனர். ரயில் சாத்தூரிலிருந்து விருதுநகர் வந்ததும் மேலும் ஆட்கள் முட்டிமோதி ஏறினர். வழியில் அமர்ந்திருந்தவர்களை எழுப்பிவிட்டு நிற்பதற்கே சண்டை போட வேண்டிருந்தது.

‘நாளைக்கு திருவிழா அதா இம்புட்டு கூட்டம், நேத்துலாம் இவ்வளவு இல்ல’ என ஒரு தினசரி ரயில் பயணி, முருகேசனிடமும் அருகில் இருந்தவரிடமும் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். முருகேசன் தரையில் அமரமுடியாமல்  நிற்பதற்கு எழுந்ததும், ஒருவன் அவன் காலருகே வந்து அமர்ந்தான். முருகேசனுக்கும் கடுப்பானது. தன் இடத்தை ஒருவன் பிடித்துவிட்டான் என்ற பதற்றத்தில் ‘ஏய் காலுல வந்து ஒக்கார எந்திரியா’ என்றான். அவன் சட்டை செய்பவனாகவே தெரியவில்லை. ‘லூசுபய சொல்றது கூட கேட்கல டேய் எந்திரிடா’ என்றான் மீண்டும். அவன் பரிதாபமாக முழித்துக் கொண்டிருந்தான். இவன் கையால் சைகை காட்டியதும் எழுந்து கழிவறை அருகே சென்றான். ‘அறிவுகெட்ட சேட்டுக் கூதியானுக’ என முருகேசன் அதே இடத்தில் மீண்டும் கால்களை மடக்கிச் சுருண்டு கொண்டான்.

வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டிருந்தது. மதுரை சென்று சேரும்போது இருட்டியிருக்கும் என நினைத்தவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். நேற்று இரவு முழுக்க தூங்கவிடாமல் மனைவி மாலா தொணதொணத்ததால் முருகேசனுக்கு ரயில் நெருக்கடிக்கு இடையேயும் கண்ணைக்கட்டிகொண்டு வந்தது. தூங்கிக் கழுத்து சாயும் போதெல்லாம் திடுக்கிட்டு முழித்தான். ரயில் கதவின் வழியாக வெக்கைக் காற்று  வியர்த்து வழிந்து கழுத்தில் கத்தியாகக் கீறிச்சென்றது.

ரயில் திருமங்கலம் நெருங்கியபோது போன் வந்தது. யார் அழைக்கிறார் என்பதைப் பார்க்க இயலவில்லை. காலையில் வேலைப் பார்க்கும் போது சட்டையிலிருந்து நழுவி விழுந்ததில் போனின் தொடுதிரையில் கீறல் விட்டது.  போனை எடுக்கவும் போராட வேண்டியிருந்தது. 

‘என்ன போய்ட்டியா?’ என்ற குரல் மாலா தான் என முருகேசனுக்கு உறுதியானது.

‘பக்கத்துல வந்துட்டேன். அரை மணி நேரத்துல மதுர வந்துரும். திருவிழா  நேரத்துல அனுப்பிருக்க ரயில்ல இங்க நிக்கக்கூட யெடமில்ல’ என்றான் கடுப்புடன்.

‘சரி சரி, நமக்கு அவசரமுன்னா நாம தா போவனும். இறங்கிட்டு நேர பாய் வீட்டுக்கு போய்ரு, போறதுக்கு முன்னாடி பாய்க்கு போன் போட்டு, வீட்டு அட்ரஸ் கேட்டுக்கோ. நீ போய்ட்டு துட்டு வாங்கிட்டு உடனே பஸ்ஸுல ஏறி வந்துரு’ என்றாள்.

இரவெல்லாம் இதை தான் சொல்லித் தூங்கவிடாமல் செய்தாள், இப்போதும் போன் செய்து மீண்டும் அதைச் சொன்னதும் இவனுக்கு எரிச்சலாக வந்தது.

‘சரில நா பாத்துக்கிறேன், தொணதொணக்காம போனவைக்கிறியா’ என்றான்.

‘ஒழுங்க காச வாங்கிட்டு வீட்டுக்கு வந்து சேரனும், திரும்பத்திரும்பச் சொல்ல வைக்கக் கூடாது’ என்று போன்னை வைத்தாள்.

வலது கால் ஒரு மணிநேரமாக மடக்கியவாறு இருந்ததில் சூகையேறி இருந்தது. காலை நீட்டவும் முடியவில்லை. திருப்பரங்குன்றம் தாண்டியதும் சற்றுநேரத்தில் இறங்கிவிடலாம் என்ற ஆசுவாசம் வந்தது. மலையை பார்த்து  ‘முருகா’ என வேண்டிக் கொண்டான். மாலை 6:30 மணியாகியும் வெக்கைத் தணியவில்லை. சாத்தூர் வெயிலுக்கு மதுரை பரவாயில்லை என்றே  தோன்றியது.

ரயில் மெல்ல ஊர்ந்து ரயில் நிலையம் வந்தடைந்தது. முருகேசன் மேலே சொருகிவைக்கப்பட்ட தன் பையை எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானான். அவன் சட்டை வியர்வையிலும் வெக்கையிலும் ஒருவிதப் புழுங்கல் வாடை அடித்தது. ரயிலின் முன் இறங்கவிடாமல் பயணிகள் முட்டி மோதிக்கொண்டிருந்தனர். மதுரையில் கால்வாசி பயணிகள் இறங்கக் கூடும் தான் ஆனாலும் நடைமேடையில் நின்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தால் ஊரை விட்டு எல்லோரும் காலிசெய்வது போன்றிருந்தது.

ரயில் நிலைய வளாகம் முழுக்கக் கூட்டம் நிரம்பியிருந்தது. மெல்ல நடந்து டவுன்ஹால் ரோட்டிற்கு வந்தான். மொபைலைச் சரிசெய்யாமல் யார் எண்ணையும் தேடியெடுத்து போன் செய்யமுடியாது என்பதால் சரிசெய்ய வேண்டிக் குடிகாரன் சந்தில் இருந்த மொபைல் சர்வீஸ் கடைகளை நோக்கிச் சென்றான். வீதியின் பெயர் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி ஆனால் தீவிர குடிகாரர்களுக்கும் உள்ளூர் ஆட்களுக்குமே தெரியும் அதன் புழக்கப் பெயர். கடை ஒன்றில் மொபைலை நீட்டி ‘போன் சரி பண்ணனும், ஒன்னு தெரியமாட்டிங்கிது’ என்றான். ‘இது பழய போனு, உள்ள போயி நாலாது கடையில டிஸ்பிளே இருந்தா வாங்கிட்டுவாங்க’ என்றான். நாலாவது கடையில் ஊழியர்களே பத்து பேர்க்கு மேல் இருப்பார்கள் எல்லாம் வடஇந்திய சேட்டுகள். கடையில் பொருள் வாங்க பத்து பதினைந்து பேர் மேல் நின்றுக் கொண்டிருக்கின்றனர். கடையில் இருந்த ஊழியச் சிறுவன் ஒருவன் ‘சொல்லுங்க’ என்றான். இவன் போனைக் காட்டி ‘டிஸ்பிளே’ என்றான்.  ‘ரெண்டு மாடல் இருக்கு, ஒன்னு ஜெவன் ஹன்ரட், ரெண்டாது தவுஜன்’ என்றான். ‘ஜீ பாத்து சொல்லுங்கஜீ இவ்வளவு வெலயா’ என்றான் முருகேசன். ‘இங்க ஒரே ப்ரைஷ்தான்’ எனச் சொல்லிவிட்டு அவன் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றான். முருகேசனுக்கு சுருக்கென இருந்தது. பக்கத்தில் ஒருவன் சொன்ன விலையைக் கொடுத்துப் பொருள்வாங்குவதைப் பார்த்ததும் முருகேசனுக்கும் சரி என பட்டது. அவனை மீண்டும் அழைத்து எழுநூறு ரூபாய் டிஸ்பிளேயை கேட்டுப் பெற்றான். வாங்கிக் கொண்டு சர்வீஸ் செய்யும் இடத்தில் கொடுத்த போது அவன் ‘ஒருமணி நேரமாகும் பக்கத்துல வேல இருந்தா போய்ட்டு வாங்க, சர்வீஸ் சார்ஜ் முந்நூறு ரூவா குடுங்க’ என்றான். ‘என்னாங்க முந்நூறு ரூவாயா’ என்று விசனப்பட்டுக்கொண்டுக் கொடுத்துவிட்டு சந்து முக்கில் நின்றுக் கொண்டிருந்தான். அங்கு கரகரப்பான ஸ்பீக்கரில் பார்வையற்ற தம்பதிகள் இருவர் பாடிக்கொண்டிருந்தனர். இவனுக்கு கால்கள் பரபரத்தவாறே இருந்தது. ஒரு மணிநேரத்தில் விரைவாக ஒரு குவாட்டரை போட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. மாலாவுக்கு தெரிந்தால் வீட்டை இரண்டாக்கிவிடுவாள். ‘வந்த வேலைய விட்டுட்டு எவன் குடுத்தான்னு வாங்கிக் குடிக்கப் போன’ என மாலாவின் குரல் இவனுள் ஒலித்துக் கொண்டிருந்தது. அவளின் முன் குறுகியவாறு நிற்கும் நிலையை நினைத்துக் கொண்டான்.

வேலைக்கூலி இருக்கும் தைரியத்தில் வந்தவனுக்கு செல்போன் காசுகளைப் பறித்துவிட்டது. முருகேசனிடம் பஸ்ஸிற்கு மட்டும் மிக அளவாகவே காசுக் கொடுத்துவிட்டிருந்தாள். இவனிடம் கூடுதலாக காசுக் கொடுத்தால் குடித்துவிட்டு வருவான் என மாலாவுக்கு நன்றாகத் தெரியும். கடந்த சில வருடங்களாகத் தன் போனில் உள்ள எண்கள் பலரிடமும் கடன் வாங்கிக் குடித்துவிட்டான். கடன் என்றால் பெரிய தொகையெல்லாம் இல்லை, நானூறு ஐநூறு தான் இருக்கும். இதில் நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் என யாரும் விடுபடவில்லை. வீட்டிற்காகக் கடன் வாங்குவது அடைப்பது எல்லாம் மாலாவின் வேலை. தற்போது கூட மாலா வீட்டுச்செலவுக்காக பத்தாயிரம் வாங்கவே முருகேசனை அனுப்புயிருக்கிறாள். உள்ளூரில் கடன் வாங்கி சிலவற்றை தாமதமாகத் தந்ததில் பல சிக்கல்கள். உள்ளூரில் கடன் வாங்கி இவர்கள் பின்னே அலைவதற்கு இனி யாரும் தர தயாராக இல்லை. மாலா வேலைப்பார்க்கும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் முன்பணமாக வாங்கிய ஏழாயிரத்தைக் கொண்டே இந்த மாத வீட்டுச் செலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென மூத்தப்பிள்ளைக்கு டைபாய்டு காய்ச்சல் வந்ததால் கையில் இருந்த பணம் மெல்லக் கரைந்தது. அவசர தேவைக்கு கூட பணம் இல்லாமல் ஆனதால் பணம் வாங்க மதுரைக்கு முருகேசனை அனுப்பியிருக்கிறாள்.

முருகேசனும் கட்டட வேலை. டைல்ஸ் பதிப்பதை லாவகமாகச் செய்வான். பொதுவாகக் கட்டடப் பணிகளில் டைல்ஸ் பதிப்பவர்களுக்கு நல்ல சம்பளம். ஆனால், முருகேசன் வாரத்தில் மூன்று நாட்கள் வேலைக்குச் சென்றாலே அதிசயம் தான். தற்போது காண்ட்ராக்ட் வேலையாக சிவகாசியில் தொழிற்சாலைக் கட்டுமானப்பணிக்கும் சென்றுக் கொண்டிருக்கிறான். கட்டுமானப் பணிகளில் முன்பைப்போல உள்ளூர் ஆட்களைப் பணிக்கு  அழைப்பதில்லை என்ற பொது அபிப்ராயம் நிலவுவதால் இருக்கும் வேலையை இழக்க யாருக்கும் துணிவில்லை. வடஇந்தியக் கட்டிடப் பணியாளர்களால் தங்கள் வேலைப் பறிக்கப்படுவதாக உள்ளூர் ஆட்கள் நினைத்துக் கொண்டனர். காண்ட்ராக்டர் மிகவும் கடுமையான ஆள்; பிரபல உள்ளூர் அரசியல்பிரமுகரின் மருமகன். முருகேசன் காண்ட்ராக்டர் பற்றித் தெரியாமல் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். வேலைக்கு வந்த சில நாட்களிலேயே முருகேசனை கான்த்ராக்டர் அறிந்துவிட்டார். ஒருமுறை வேலைப்பார்ப்பவர்களிடையே கைகலப்பான போது கான்ட்ராக்டர் இருவரைப் பிடித்திழுத்து அடித்துவிட்டான்.  அந்த நிகழ்வுக்கு பின்னர் முருகேசன் வேலை நேரத்தில் குடித்துவிட்டுச் செல்வதையோ, விடுப்பு எடுப்பதையோ தவிர்த்தான். அவனுடைய குணத்திற்குத் தொடர்ந்து வேலைக்குச் செல்வதே சாதனைதான். இந்த வேலைக்கு மாலா தன் மேனேஜர் வழியாகச் சேர்த்துவிட்டாள். மாலாவிடம் நூறு ரூபாய் கூட இவனால் வாங்க இயலாது என்பதால் தன் தேவைக்காக வேலைக்குச் சென்றுவந்தான். மற்றபடி வீட்டிற்காகச் செலவுச் செய்யமாட்டான். பிள்ளைகள் பள்ளிக்கூட வாசலில் மாங்காய் வாங்க வேண்டும் என்றாலும் அம்மாவிடம் தான் காசு வாங்கிச்செல்லும்.

குடிகாரன் சந்தில் எல்லாக்கடைகளும் முருகேசனுக்கும் அத்துப்படி. வழக்கமாக இரண்டுக் கடைகளில் மட்டுமே வாடிக்கையாகக் குடிப்பான். முருகேசனுக்கு குடிப்பதற்கான உந்துதல் வளர்ந்தது. வழிநெடுக பார்களும் மதுகோப்பைகளுமாக இருப்பதை பார்த்து மேலும் மேலும் குடி மோகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு சின்ன உந்துதல் வந்தால் போதும் மதுக்குப்பிகள் இவனால் திறக்கப்படும்.

இதனிடையே வரிசையாகச் சுண்டல் வண்டிகள் டவுன்ஹால் ரோடு வழியாகச் சென்று கொண்டிருந்தன. தள்ளுவண்டியில் சுண்டல், கடலை, பப்பாளிக் கீத்துகள், மரவள்ளிக் கிழங்கு, மாங்காய், தர்பூசணிக் கீத்துகள் என அலங்கரிக்கப்பட்ட வண்டிகள் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தன. அம்மனைப் போல் அலங்கரிக்கப்பட்டத் தூங்கி வழிந்துக் கொண்டிருந்த  குழந்தையைத் தூக்கிக் கொண்டு அம்மாவும் பாட்டியும் சென்று கொண்டிருந்தனர். பின்னால் கருப்பசாமி வேடமணிந்த சிறுவன் கையில் அட்டையால் செய்யப்பட்ட அரிவாளுடன் வந்து  கொண்டிருந்தான். சென்று கொண்டிருந்த  தள்ளுவண்டியை மறித்து சிறுவனுக்கு மாங்காய் கீத்துக்களை அவன் அப்பா வாங்கிக் கொடுத்தார். கையிலிருந்த அருவாளைக் கொடுத்துவிட்டு மாங்காயை தின்றவாறு கருப்பசாமி நடந்துக் கொண்டிருந்தார். முருகேசனும் மாலையில் மாசி வீதிகளில் சாமி வீதி உலா வரும் என கேள்விப்பட்டிருக்கிறான். சிறுவயதில் அப்பாவுடன் அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க வந்திருக்கிறான். மற்றபடி மதுரை திருவிழாக்கள் பற்றி அத்தனை பரிச்சயம் இல்லை. கூட்டத்தைப் பார்த்தும் ஆர்வமாகிக் கூட்டத்தைப் பின் தொடர்ந்து டவுன்ஹால் ரோட்டில் நடந்தான். மாசி வீதியில் பெரும் கூட்டம் சாலையின் இருபக்கமும் நின்றுக் கொண்டிருந்தது. சித்திரைத் திருவிழாக்களில் விற்கப்படும் ஜவ்வு மிட்டாய்களைச் சுற்றிப் பெண்களும் சிறுவர்களும் நின்று  கொண்டிருந்தனர். சின்னப்பலகையின் மீது மண்ணெண்ணை விளக்கு வைத்து சிவப்பு, மஞ்சள், பழுப்பு என வெவ்வேறு சுவை தரும் மிட்டாய்கள் ஒற்றைக் கையில் தூக்கிக் கொண்டுத் திருவிழா வியாபாரிகள் அங்குமிங்கும் அழைந்தவாறு உள்ளனர். பள்ளிவாசல் அருகில் இருந்த பைப் கடையின் வாசலின் விசிறிக் கொடுக்கத் துவங்கியதும், விசிறியைப் பிடுங்க கூட்டம் தாறுமாறாகக் குவிந்தது. தூரத்திலிருந்து  கூட்டம் கூடுவதைப் பார்த்த காவலர் ஒருவர் பைப் கடை முன்வந்து விசிறிக் கொடுப்பதை நிறுத்தச் சொன்னார்.  விசிறி கிடைக்கும் என்ற ஆசையில் நின்றுக் கொண்டிருந்தான் முருகேசன், பைப் கடை ஊழியர்கள் சாமி சென்றவுடன் தருவதாகச் சொல்லி அனுப்பிவிட்டனர். சாலையின் இருபுறமுள்ள நடைமேடைகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் அதிகரித்தவாறு இருந்தது. பொதுவாக நடைமேடைகளைக் கடைக்காரர்கள் தங்கள் பொருட்களை வைத்து அடைத்துவிடுவார்கள். திருவிழாக் காலங்களில் நடைமேடைகள் பக்தர்களுக்கு வழிவிடும். இதனிடையே மேலக் கோபுர வீதியில் இருந்து கூட்டம் நேதாஜி சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

திருவிழாக் கூட்டத்தை சமாளிப்பதற்குக் காவல்துறையினர் சில உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். அதில் மிக முக்கியமான சமீபத்தியக் கண்டுபிடிப்பு ஒலிப்பெருக்கிகளைக் கட்டுப்படுத்துவது. பொதுவாக மதுரை வீதிகளில் சாமி வலம் வரும் போது, தேர் வடம் இழுக்கப்படும் போதும் ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் இளைஞர்களை உற்சாகம் கொள்ளச் செய்யும்; குறிப்பிட்ட இடத்தில் கூட்டம் சேர்க்கும். மதுரை திருவிழாக்களுக்கு என பிரத்யேகப் பாடல்கள் உண்டு. கூட்டம் கட்டுக்கடங்காத உற்சாகத்தைப் பாடல்கள் வழி வெளிப்படுத்துவதை உணர்ந்த காவல்துறை ஒலிப்பெருக்கிகளுக்கான அனுமதியை முற்றிலும் ஒழித்துவிட்டனர். அதேபோல் கூட்டம்கூடும் இடங்களில் மேளதாளங்களுக்கும் அனுமதியில்லை.

முருகேசன் நின்றுக் கொண்டிருந்த கடையின் முன் வந்த இரண்டு பெண்களில் ஒருத்தி, ‘சாமி டி.எம்.கோர்ட் தாண்டிருச்சுக்கா, பூக்கொட்ற இடத்துக்குப் போவோம்’ என்றாள். கூட்டம் பெரும்பங்கு அத்திசையை நோக்கிச் சென்றதால் இவனும் உற்சாகமிகுதியில் அவர்கள் பின்னயேச் சென்றான். மேலமாசிவீதி நேதாஜி ரோடு சந்திப்பில் சாலையில் பெரிய பந்தல் அமைத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  பந்தலின் உட்பக்கம் இரண்டு பொம்மைகள் மாலையை பிடித்தவாறு இருந்தன. சாலையின் இருபுறமும் நிற்க இடமில்லை. பெண்கள் இடங்களை முன்னமே ஆக்கிரமித்திருந்தனர். வரிசையாகக் குழந்தைகள் சிறுவர்கள் கடவுள் வேடமிட்டு நடந்து வந்து கொண்டிருந்தனர். பாதையில் நின்ற கூட்டத்தைச் சமாளிக்கக்காவலர்களை இருபுறமும் அழுத்திக் கொண்டுச் சென்றனர். முன்பகுதியில் நின்றவர்கள் பின்னே நகரநகரச் சாலையின் தரை வெளியே தெரிந்தது. முருகேசன் கூட்டத்தில் போக்கில் சென்றான். சாலையில் ஆங்காங்கே புளியோதரைக் கொடுக்கப்படுகிறது. உணவு வழங்கும் இடங்களில் கூட்டம் சேரும் போதெல்லாம் காவலர்கள் சென்று உணவு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தச்சொல்லுவர். இம்முறை கையில் புளியோதரையுடன் முருகேசன் கூட்டத்தை வெற்றி கொண்டான்.

நேரம் ஆகஆக விதவிதமாக ஊர்வலங்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஓதுவார்கள் இசைவாத்தியங்கள் முழங்கச் சென்றதை முருகேசன் புளியோதரையைத் தின்றவாறு பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் நின்றவரிடம் ‘இன்னைக்கு என்ன வாகனத்துல சாமி வரும்’ என்றான். அவர், ‘இன்னைக்கு திக்குவிஜயம்.’ என்றார். ‘அப்ப திருக்கல்யாணம் முடிஞ்சுருச்சா’ என்றான். ‘திக்குவிஜயத்துக்கு முன்னாடி திருக்கல்யாணம் நடக்குமா நாளைக்கு தான் திருக்கல்யாணம்’ என்றான் சலிப்புடன்.

சாமி நெருங்கி வந்துவிட்டது. மீனாட்சிக்கு தனி வாகனம் சொக்கனுக்கு தனி வாகனம். இரண்டிலும்  ஒரு சிறுமி மீனாட்சியாகவும் ஒரு சிறுவன் சொக்கராகவும் அமர்த்தப்பட்டிருந்தார்கள். மீனாட்சிக்கும் சொக்கனுக்கும் இடையிலான திருவிளையாடல் நிகழ்த்திக்காட்டப்படுகின்றது. மீனாட்சி நாற்திசைகளையும் வெற்றிகொண்ட பின், சொக்கனைக் கண்டவுடன் தன் மூன்றாம் மார்பு மறைந்து அவனைக் காதலால் வீழ்த்துவது மதுரை வீதிகளில் நிகழ்த்தப்படுகிறது. இவனுக்கு எதிரே நின்று கொண்டிருந்தப் பெரியவர், “நீல மாமிடற், றால வாயிலான் பால தாயினார், ஞாலம் ஆள்வரே…” என துவங்கும் பதிகத்தைச் சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தார். திருவிழாவின் அத்தனைச் சத்தங்களுக்கு இடையே சன்னமாக ஒலித்த அவரின் பதிகம் அங்குள்ளவர்களைப் பரவசமூட்டியது. திண்டுக்கல் முருகன் கோவில் அருகில் நின்றுக்கொண்டிருந்த சிறுமி தன் கையிலிருந்து நழுவவிட்ட இதயவடிவ கேஸ்பலூன் வானில் மெல்லமெல்ல ஏறிக்கொண்டிருப்பதைப் பக்கத்தில் உள்ள சிறுவனிடம் காட்டிச் சிரிக்கிறாள். பலூன் உயர சென்று கட்டடங்களின் பின் சென்று மறைந்தது.

திக்குவிஜயம் நிகழ்த்தப்பட்டுச் சாமி கடந்து சென்றதும், கூட்டம் நாலாப்புறமும் சிதறிக் கொண்டிருந்தது. இவன் கண்முன் பெரும் நிகழ்வும் நடந்து முடிந்து களைந்துசெல்லும் கூட்டத்தைப் பார்க்க வியப்பாக இருந்தது. விருதுநகர் மாரியம்மன், இருக்கங்குடி மாரியம்மன் என ஊர் ஊராக மாலா அழைத்துச் செல்லும் போதெல்லாம் சென்றவன்தான் இருந்தும் மதுரை வீதிகளில் திருவிழாப் பார்ப்பது இவனை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அலைபேசி ஒலிக்கா விட்டாலும் இவனுக்குள் அவ்வப்போது ஒலி எழுப்பும். அலைப்பேசியை எடுக்க கைத் தன்னிச்சையாக பேண்டைத் துலாவியபோதுதான் சர்வீஸ் கொடுத்தது நினைவுக்கு வந்தது. சர்வீஸ் கடையை நோக்கிச் சென்றான். சர்வீஸ் முடிந்துப் போனின் முன்பகுதி பிரகாசமாக இருந்தது. தொடு திரையும் முன்னைவிட மேம்பட்டிருப்பதாக உணர்ந்தான்.

போனைத் திறந்தால் நான்கு மிஸ்டு கால்கள் மாலாவிடமிருந்து வந்திருந்திருந்தன. இவன் அவளுக்கு அழைத்தான். அவள் எடுத்த உடனே, ‘எங்க போய் குடிச்சுட்டுத் திரியிற, சொன்ன வேலைய விட்டுட்டு வந்த இங்க நடக்குறதே வேற’ என்றாள். ‘ஏன்டீ கிறுக்கச்சி, போன் சர்வீஸ் குடுத்துட்டு சாமி பாக்கப் போய்ட்டேன்டீ’ என்றான். ‘சாமி தான் உன்ன பாக்கனும், இப்படி ஒரு பெறவிய படச்சோமே எப்பிடி வாழுதுன்னு. சரி, இப்ப பாய் வீட்டுக்கு வேமா போ. துட்டுக் குடுப்பாங்க வாங்கிட்டு பஸ்ஸில ஏறி வந்துரு’  என்றாள். இவன் எரிச்சலோடு போனை வைத்துவிட்டு பாய் நம்பருக்கு போன் செய்தான். ‘ஐயா ஹாஜி பாய் இருக்காறா என்னைய மாலா பணம் வாங்கச் சொன்னா’ என்றான். பாய் போனை எடுத்தார். ‘காசு வீட்ல கொடுத்துட்டு வந்துட்டேம்பா. மேலமாசிவீதி பள்ளிவாசல் பக்கத்து சந்துக்கு வாங்க. அங்க வெள்ள பெயிண்ட் அடுச்ச வீட்டுக்கு பக்கத்து வீடு. வீடு முன்னாடி போஸ்ட் கம்பம் இருக்கும். வீட்ல என்னோட சம்சாரம் இருக்கா வாங்கிக்கோங்க’ என்றார்.

இவன் விசிறி வாங்க நின்ற இடத்திற்குப் பக்கத்து சந்தில் தான் வீடு இருப்பதை அறிந்து நடந்தான். வானத்தில் மின்னும் வண்ணப் பொருள் ஒன்று பறந்து மீண்டும் எய்தவன் கைக்கே வந்தது. திருவிழாவின் சிறுவர்கள் விரும்பும் பலப் பொருட்களில் அதுவும் ஒன்று. தன் மகனுக்காக ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கினான். பள்ளிவாசல் செல்லும் வழியின் முன் பத்துச் சிறுவர்கள் கையில் ஒரு பீப்பி ஒன்றைக் கொண்டு மீண்டும் மீண்டும் ‘ப்பா ப்பா’ என்று இரைச்சலோடு ஊதிக்கொண்டிருந்தனர். அந்த சத்தம் கேட்போரை எரிச்சலூட்டியது. திருவிழாவில் ஒலிப்பெருக்கிகள் இல்லாத குறையை இந்த எரிச்சலூட்டும் பீப்பிகள் தான் சரிச்செய்கின்றன போலும்.  பள்ளிவாசல் பக்கத்து சந்தில் வழி நெடுக வாகனங்கள் நிறுத்தப்பட்டு நடக்க வழியில்லாமல் இருந்தது. சாமி சென்று அரை மணிநேரமாகியும் வீதியில் கூட்டம் இருந்து கொண்டிருந்தது. எறும்புகள் ஊர்வது போல வாகன நெரிசலின் ஊடாக மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுக் கொண்டிருக்கின்றனர். முருகேசன் சந்தில் நுழையும் போது பைப் கடையில் மீண்டும் விசிறிக் கொடுக்கத் துவங்கினர். ஆளாய் பறந்து மூன்று விசிறிகளை லாவகமாகப் பறித்துவிட்டு வந்தான். விசிறியில் அவர்கள் கடையில் பெயர் விலாசம் அச்சாகியிருந்தது. மூன்றையும் தன் பைக்குள் வைத்துக் கொண்டான்.

மின்கம்ப அடையாளத்தைக் கொண்டு வீட்டைக் கண்டு உள்ளே சென்றதும் நடுவயது பெண் ஒருவர் அரைமுக்காட்டுடன் வரவேற்றார். ‘சாத்தூர்காரங்களா?’ என்றாள். முருகேசன், ‘வணக்கம் மாமி’ என்றான். ‘வீட்டுக்காரரு வேலையா போய்ருக்காரு, உங்களுக்குத் தரச்சொல்லிக் காசு வைச்சுட்டுப் போய்ருக்காரு’ என கையில் ஐநூறு ரூபாய் தாள்களை மடக்கிக் கொடுத்தாள். எண்ணிப் பார்த்துவிட்டு ‘பத்தாயிரத்தி ஐநூறு இருக்கு’ என்றான். ‘தெரியலயே, அவரு வச்சுட்டுப் போனத அப்படியேக் குடுக்கச் சொன்னாரு’ என்றாள். ‘நீங்க மாலா கூட ஒன்னா படிச்சீங்களா’ எனக் கேட்டான். ‘நா படிச்சது மதுரையில. எங்க வீட்டுக்காரருதான் சாத்தூரு ஸ்சூல்ல படிச்சாரு’ என்றாள். இவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. வீட்டிலிருந்துக் கிளம்பினான்.

இவனுக்குள் ஏதோ மனதில் தோன்றி வளர்ந்துக் கொண்டிருந்தது. செல்லும் வழியில் பணத்தை மடித்து உள்ளே போட்டிருக்கும் டவுசர் பையில் பத்திரமாக வைத்தான். குடிகாரனாக இருந்தாலும் பணத்தைப் பத்திரப்படுத்தும் முன்னெச்சரிக்கையில் முருகேசன் கெட்டிக்காரன். டவுன் ஹால் ரோட்டின் வழியே சென்று குடிகாரன் சந்தில் வழக்கமான பார் ஒன்றில் அமர்ந்தான். அவ்வழியே வரும்போதெல்லாம் அவன் கால்கள் தன்னிச்சையாக பாரினுள் நுழையப் பழகியிருந்தன. ஐநூறு ரூபாயை கொடுத்து  “பிளாக்பேர்ல் குவாட்டர், ரெண்டு கோல்ட் பில்டர், சிக்கன் 65” என்றான்.  பார் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களால் நிரம்பத் துவங்கியது. விசாலமான பார் என்பதால் நிறைய பேர் இருந்தும் கூட்டமாக தெரியவில்லை. பாரின் உட்பக்கம் புகைநெடி கம்மியிருந்தது. பார் வெயிட்டர்கள் அங்கும் இங்கும் பரபரப்புடன் காணப்பட்டனர். இவன் அமர்ந்திருந்த மேசையில் பீயருடன் வெகுநேரமாக ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் மூன்று வகை பழவகைகளுடன் மெதுவாக பீயரை தன்னுள் கடத்திக் கொண்டிருந்தான்.

பத்துப் பதினைந்து நிமிட இடைவெளியில் முருகேசனின் மேசை நிரம்பியிருந்தது. வெயிட்டர், தண்ணீர் பாட்டிலும் பேப்பர்க் கப்பையும் சேர்த்து வைத்துவிட்டு மீதி சில்லரையைக் கொடுத்தான். முருகேசன் அப்போது தான் உயிர் பெற்றவனைப் போல பரபரப்புடன் எடுத்து குடிச்சடங்குகளைச் செய்யத் துவங்கினான்.

கிட்டத்தட்டப் பாட்டில் காலியாகும் நேரத்தில் முருகேசன் மாலாவிற்கு அழைத்தான். எடுத்த உடனே ‘எங்க இருக்கக் கிளம்பிட்டியா? பஸ் ஏறிட்டியா?’ என்றாள். ‘மாலா நா சாகப் போறே; நீ உனக்கு புடிச்சமாதிரி வாழு. உனக்கு நா பிரயோஜனமில்ல; இருந்து உன்னயக் கஷ்டப்படுத்துறதுக்கு நா போய்றேன்’ என அழுதவாறுப் பேசினான். ‘யேய் என்ன ஆச்சு. குடிச்சுகிட்டு இருக்கியா. என்ன புதுசா சாகப் போறேன்னுலாம் பேசுற. இதுலாம் நல்ல பழக்கமே இல்ல. சரி காச என்னாப் பண்ண, திருவுழா கூட்டத்தில தொலச்சுட்டியா’ என்றாள் பதைபதைப்புடன். ‘பத்தாயிரம் அப்படியே இருக்கு’ என்றான். ‘அப்ப என்ன உனக்கு பிரச்சனை கிளம்ப வேண்டிதான’ என்றாள் மாலா கோபத்துடன். ‘இல்ல பத்தாயிரம் கேட்டா ஐநூறு ரூவா கூட இருந்தப்ப பாயம்மா பெருந்தன்மையா கூடக் குடுக்குதுன்னு நெனச்சே. ஆனா, அப்பறந்தாக் கேட்டே உங்கூடக் பள்ளிக்கூடம் படிச்சதானு, அது உங்கூடப் படிக்கலயாமே. பாய் தான் உங்கூடப் படுச்சுருக்காறாமே. வரப்ப கூடத் திருவிழால சாமி பாத்தே, திருவிழாவில விசிறிக் குடுத்தாங்க மூனு கெடச்சுது, தம்பிக்கு ஒரு பறக்குற லைட் வாங்குனே. எல்லா வாங்கிட்டு சந்தோசமா பாய் வீட்டுக்கு போனா பாய் சம்சாரம் உன் பொய்ய காட்டிருச்சு. நான் வேணாம்ல’ என்றான் அழுதவாறு. ‘சமத்து எவ்வளவு பொறுப்பா இருக்க நல்ல பையனாய்ட்ட, சரி போதும் கிளம்பி வா. எந்திரி, நல்ல பொறுப்பான ஆள விட்டுட்டு வேற ஆள் கூட யாரும் போவாங்களா. பாய் எனக்கு அண்ணே மாதிரி. தங்கமான ஆளு. நீ தேவயில்லாம யோசிக்காத. இப்ப நல்ல பிள்ளையா இருக்க வீட்டுக்கு வா’ என்றாள். ‘மலுப்பாத மாலா. நான் ஒன்னு போதையில் பொலம்பல. வாழ்க்கயே வெறுத்துப் போச்சு. நீ இப்படி பொய் பேசுவன்னு எனக்கு தெரியாது, நா எதிர்பாக்கல’ என்றான். ‘யேன் இப்டி பேசுற. வேலைக்குப் போய்ட்டுச் சாப்பிடாமக் கொள்ளாம இப்பதா வீட்டுக்கு வந்தே. யேன் எஞ்சீவன வாங்குற’ என்றாள் அழுகையோடு. ‘நல்லா சாப்டு மாலா, பாய் கூட …’ என்ற பேசிக்கொண்டிருந்தவனை இடைமறித்து, ‘சின்னவயசுல எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருந்த அண்ணே இவரு. இவரு தம்பிதான் எங்கூட அஞ்சாவது வர ஒன்னா படுச்சான். போன வாரம் மார்க்கெட்ல தம்பி வீட்டுக்கு வந்தவர பாத்துப் பேசுனே. அவரு கைமாத்தா காசு தரேன்னுச் சொன்னாரு. உன்ட சொன்னா யாரு என்னன்னு யோசிப்ப, சண்ட போடுவ அதாஞ் சொல்லல’ என்றாள் தழுதழுத்தக் குரலில். மாலா வெகுகாலம் கடந்து முருகேசனுடனானச் சண்டையில் அழுகிறாள். முருகேசனுக்கு வெற்றிப் பெற்ற மகிழ்ச்சி. முருகேசனுக்கு இப்போதைக்கு இது போதும் எனப் பட்டது. போனை அணைத்துவிட்டுப் பாட்டிலில் மீதமிருந்தக் கொஞ்சம் சரக்கை அப்படியே விட்டுவிட்டு பையைத் தூக்கிக்கொண்டு பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கி நகர்ந்தான்.

000

கார்த்திக் ராமச்சந்திரன்

மதுரையில் வசிக்கும் இவர், கல்லூரிப் பருவம் முதலே இலக்கியம் மற்றும் நாடகங்களில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். அமெரிக்கன் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடங்கிய இவர், தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். 2021ஆம் ஆண்டு வெளியான தமிழறம்: நாட்டுப்புறவியல் சிறப்பிதழ் என்ற பிரத்யேக இதழின் ஆசிரியருள் ஒருவராக இருந்தார். தமிழ் ஆய்வாளர்களிடம் மிகுந்த கவனம் பெற்ற இதழாக இது விளங்கியது. சினிமா, பண்பாட்டு ஆய்வு, இலக்கிய திறனாய்வு ஆகிய துறைகளில் இவர் எழுதிய கட்டுரைகள் நீலம், காலச்சுவடு, மணல்வீடு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், மதுரையில் Reader’s Desk என்ற பெயரில் இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments உரையாடலுக்கு

  1. கார்த்திக் ராமச்சந்திரனைப் பற்றிய குறிப்பு விடுபட்டிருக்கிறது. அதை மறவாம்ல் (அவரிடம் கேட்டு வாங்கி) மறக்காமல் இடம்பெறச் செய்யுங்கள் .

  2. திரு.கார்த்திக் உங்கள் கதை சிறப்பாக உள்ளது. இதையே புதினமாக எழுதுங்கள். வாழ்த்துகள்.

    • தங்கள் கருத்திற்கு நன்றி. தங்கள் வார்த்தைகள் தொடர்ந்து எழுத உத்வேகமளிக்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop