வற்றா இருப்பு : சபரிநாதன்

ஜார்ஜ் எல் ஹார்ட்

கவிஞர் சபரிநாதனின் இக்கட்டுரை ஆய்வறிஞர் ஜார்ஜ்.எல்.ஹார்ட்டின் (1942-) “தமிழ்ச் செவ்வியல்கள்” நூலை அறிமுகப்படுத்துகிறது. தமிழை செம்மொழி என அறிவிக்கக் கோரி ஜார்ஜ்.எல்.ஹார்ட் எழுதிய கடிதம் புகழ்பெற்றது. பழமை, தனித்துவமான இலக்கிய மரபு, செவ்வியல் இலக்கியத் தரம், நவீன இந்தியக் கலாச்சாரத்துக்கான சுயாதீனமான ஊற்று முகமாக இருப்பது முதலிய காரணங்களினால் தமிழ் செம்மொழி என்று அவர் வாதிட்டார். மேலும் சமஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்ட தனித்த பாரம்பரியம் தமிழுக்கு உண்டு என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். இக்கட்டுரை இக்கருத்துக்களை வழியொற்றி அமைந்துள்ளது.

ஆனால் வெறுமனே நூல் அறிமுகமாக இல்லாமல், தமிழ் பண்பாட்டின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை வழங்க சபரிநாதன் இதில் முயன்றுள்ளார். சங்க இலக்கியத்தின் கவிதை அழகியலின் வழியே தமிழ் மரபின் வேர்களை ஆராய்ந்து கடந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு ஒரு கோட்டை வரைய முற்பட்டிருக்கிறார். ஒரு சமூகமாக நம்மை நாமே அறிந்துகொள்ள இத்தகைய எழுத்துக்கள் பெருமளவில் உதவும். வெற்று பெருமிதங்களைக் கடந்து நம்மை மதிப்பிடவும், நம் மேல் திணிக்கப்படும் அதிகாரப் புரட்டுகளை சுய-அடையாளம் பற்றிய போதத்துடன் எதிர்கொள்ளவும் இவை துணை நிற்கும்.

வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், மொழியியல் என நீண்டாலும் இது ஒரு கவிஞர் எழுதிய கட்டுரை என்பது சிறப்பம்சமாகும். கவித்துவ அவதானிப்புகளால் இக்கட்டுரை மிளிர்கிறது. மேலும் கவிதையியல் மூலமாகவே எல்லாவற்றையும் அணுகுகிறது. மேலோட்டமான வாசிப்பு பெருகி வரும் சூழலில், தீவிரமான கவனத்தைக் கோரும் இத்தகைய விரிவான கட்டுரைகளை வெளியிடும்போது ஒரு சிற்றிதழாக “அகழ்” தன் பணியை சீராக மேற்கொள்ளும் நிறைவை அடைகிறது. சீரிய வாசகர்கள், ஆழமான கட்டுரைகளுக்கான ஆர்வத்தையும் நேரத்தையும் வழங்க தவறுவதில்லை என்பது எங்கள் நம்பிக்கை.

“அகழ்” ஆசிரியர் குழு

மணற்பாலைப் பல்லியின் சருமத்தில் கல்லும் மண்ணுமாய் மணற்பாலையே வரையப்பட்டுள்ளது.சருமத்தில் மட்டுமன்று உள்ளும் புறமும் ஒவ்வொரு செல்லிலும் அதன் மூதாதையரின் வாழ்நிலம் வாழ்கிறது.அவர்களும் வாழ்கின்றனர்.ஒவ்வொரு உயிரியும் ஒரு புத்தகம். வருங்கால அறிவியலாளர் ஒருத்தியால் ஓர் உயிரியின் உடலில் இருந்து, ஏன் அதன் ஒற்றை மயிர்த்திசுவில் இருந்து கூட அதன் சூழமைவையும் முழுப் பரிணாம வரலாற்றையும் வாசித்தறியக்கூடும்.தன் சமீபத்திய நூலில் இப்படிக்கூறுவது பிரபல அறிவியல் எழுத்தாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸ்.அவரே தனது புகழ்பெற்ற Selfish Gene புத்தகத்திற்கு Immortal Gene எனப் பெயரிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று எண்ணுவதாக பின்னாளில் கூறினார்.

அழிவற்றது என எதுவுமில்லை.ஆயிரமோ அதற்கும் மேலோ,எத்தனை ஆண்டுகளாயினும் வடிவு எதற்கும் நிரந்தரம் என ஒன்று இருக்க முடியாது.ஆனால் ஒப்பீட்டளவில் பில்லியன் கணக்கான ஆண்டுகள் நிலைப்பேறுடைய வாழ்வினைக் கொண்ட மரபணுக்களை ஒருவகையில் அழிவற்றன என்று கூறலாம்தான்.உயிர்களும் சமூகங்களும் அத்தகைய மரபணுக்களின் வெறும் வாகனங்கள்தாம் என்கிறார் டாக்கின்ஸ்.கோடான கோடி உடல்கள்,உயிர்வாழ்விகள்,புணைகள். மரபணுக்கள் கடந்தகாலத்தின் சேகரங்களாய் மட்டுமல்லாது, உயிர்களின் அசைவுகளையும் அணுகுமுறைகளையும் ஓரெல்லை வரை நிர்ணயிப்பதன் மூலம் எதிர்காலத்தையும் தீட்டுகின்றன.ஒவ்வோர் உடலும் ஒரு நூல் கூடவே ஒரு வரைபடம்.மனம், அது வேறொரு நூல்.அதில் இணைக்கப்பட்டுள்ள வரைபடம் பிறிதோர் அறியாத்தீவினது.

இது ஒப்புமைக்காக தவிர பரிணாமவாதத்தை வேறு துறைகளில் பொருத்தி பேசுவதற்காக அல்ல. இருந்தும் உடலும் மனமும் இணைந்து வெளிப்பாடு கொள்ளும் ஒவ்வொரு சொல்லும் ஒரு நூலகம் என்று கூறத்தக்கதே. நூற்றாண்டுகளாக இந்நூலகங்கள் காலப்பெருநதியில் மிதந்துவந்துள்ளன. காதல் கலை போன்ற சொற்கள் பயணப்படுகின்றன.அல்குல் பசலை போன்றன மூழ்கிப்போயின. கவிஞன் என்ற பெயர்ச்சொல் சம்ஸ்கிருத மூலம் கொண்டது.அந்த அர்த்தத்தில் வெகு சமீபம் வரை தமிழில் வழக்கில் இருந்துவந்த சொல் புலவன் என்பதாகும்.இப்போது அந்தச் சுட்டு எதிர்மறை தொனியில் காலங்கடந்த பழமைப்போக்கை அடையாளப்படுத்துவதாக மாற்றம் அடைந்துள்ளது. தமிழ் நவீனத்துவம், மரபை எதிர்கொண்ட கதையின் ஒரு சிறு கூறு இச்சொற்பொருண்மை மாற்றத்தில் பதிவாகியுள்ளது.புலவர், செய்யுள் போன்றன விமர்சன சொல்லாடலாக மட்டுமே நீடிக்கும் காலம் ஒன்றும் வரலாம்.அதேபோல, தமிழ்வாழ்வில் லட்சியார்த்த பிம்பத்திற்கு வழங்கப்பெற்ற சான்றோன் என்ற அடைமொழி சங்ககாலத்தில் வீரர்களைக் குறித்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.(சங்கத்தொகைகள், சான்றோர் பாடல்கள் என்றே மத்திய காலத்தில் அழைக்கப்பட்டுள்ளன)பின்பு சமண பௌத்த மதங்களின் பாதிப்பால் அச்சொல் நற்பண்புடைய அறிவுடையாரைக் குறிப்பதாக மாறிற்று என்கின்றனர்.

காலந்தோறும் ஒரு சொல் உயிரோடிருக்கையில் காலமெல்லாவற்றையும் உட்கிரகித்து கொள்கிறது.ஒரே நேரம் விதையாகவும் காடாகவும் வாழும் ஒவ்வொரு சொல்லும் ஓர் உயிரியே.சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணி அத்தகையவொரு சொல்.எனில் மொழி என்ற கூட்டுயிரியின் உடலில் எத்தனை வாழ்வும் பண்பாட்டுக்கூறுகளும் பதிவுபட்டிருக்கும்.கடந்த காலம் எதிர்காலம் இரண்டையும் வியாபித்து நிறைப்பதால் அது ஓர் எல்லையற்ற ஆவணம் கூடவே வரிவரியாய் வளரும் ஒரு நிரல்கோவை.

ஒரு படிமம் தான் தோன்றிய கலாச்சாரத்தின் அச்சுகளில் ஒன்றாக மாறக்கூடும். பு.கமலக்கண்ணன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள “ஜார்ஜ் எல் ஹார்ட்”(George L. Hart)-இன் “தமிழ்ச்செவ்வியல்கள்” நூலின் முகப்பட்டையை அலங்கரிக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தின் ஆடல்வல்லான் சிற்பம் அத்தகைய ஒரு படிமம்.ஏதோவொரு ஒற்றைச் சொல்லில் அச்சமூகத்தின் நீண்ட நெடிய நினைவு ஒட்டியிருக்ககூடும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஒலிக்க கேட்கும் தலைவா என்ற வார்த்தை.அது  சங்கத்தொகைகளில், பாடல் பெறும் கதைமாந்தனை குறித்தது.

பொதுவாக சங்கக்கவிதைகள் ஜனநாயகத்தன்மையுடன் பல்வேறுபட்ட மக்களைப் பாடுவதாகக் சொல்லப்பட்டாலும்,உண்மையில் உயர்குடிவகுப்பினரே அதில் கதைமாந்தராய் அமைக்கப்பட்டுள்ளனர்.பல்வேறு திணைகளின் பல்வேறுபட்ட வாழ்வுகள் பதிவாகியிருப்பினும் அந்தந்த நிலங்களுக்குரிய தலைமக்களே கவிதைக்குரிய பாட்டுடையோராய் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இலக்கண ரீதியிலும்  அத்தகையோரின் வாழ்வே பாடத்தக்கதாய் வகுக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு அகம் புறம் ஆகியவற்றின் ஒருமைப்பண்பை எடுத்துக்காட்டிய அறிஞர் “க.கைலாசபதி” தன் பிரசித்தி பெற்ற “தமிழ் வீரநிலைக் கவிதை” நூலில், அகப்பாடல் மற்றும் புறப்பாடல் இரண்டின் நாயகர்களும் அடிப்படையில் ஒருவரே என முன்வைத்தார்.அதாவது காதல் பாடல்களின் தலைவர்களும் அரசர்களே அல்லது உயர்குடியினரே.அப்படி பார்த்தால் நாம் இப்போது தலைவா என்ற அழைப்பிற்கு உத்தேசிக்கும்  இதே இரட்டைப்பொருள் அங்கும் தொனிப்பதைக் காணமுடியும்.  

அகப்பாடலில் நாயகன் பெயரற்ற பிம்பமாகவும்,அவனே புறப்பாடலில் பெரும்பேர் உடைய அரசனாகவும் திகழ்கிறான்.இவ்விருநிலைகளின் மங்கிய குழப்பம் இச்சொற்பிரயோகத்தில் இன்னும் உயிரோடுள்ளது. திரைப்பட நாயகன் ஒருவனை தலைவா எனக்கூறத் தொடங்குவதிலேயே அவர் மன்னராக இருப்பதற்கு பாத்தியதை உடையவர் என்பதும், நம்மை ஆளச் சாத்தியம் உடையவர் என்பதும் ஏற்கப்பட்டுவிடுகிறது. யோசித்துப்பாருங்கள், நாயகன் தலைவனாவது மட்டுமன்று நமக்கு தலைவர்களும் நாயகர்களாக உருமாற வேண்டியுள்ளது இல்லையா.எனவே எல்லா திரைநாயகர்களையும் அதன் ரசிகர்கள் ஒருமித்தவாறு தலைவா என அழைப்பதன் பின்னணி நீண்ட பொருள்மயக்கத்திற்கு ஆட்பட்டது எனலாம்.

இதற்கு நேரெதிராக தொண்டர் என்ற வார்த்தை சுவாரஸ்யமாக பக்தி காலகட்டத்தில் இருந்து வருகிறது.தொடக்ககால பக்திநூல்களில் ஒன்றும் பிற்கால சிற்றிலக்கியங்களுக்கான முன்மாதிரியுமான திருக்கோவையாரில்  அகமும் புறமும் கலந்துகட்டி பாட்டுடைத்தலைவனான சிவன் பெருந்தெய்வமாகவும் காட்சியளிக்கிறார்.கோவை வகைமையின் நோக்கம் புறத்திணை சார்ந்தது,அதாவது தலைவனை சிறப்பித்தல்.அந்நோக்கம் நடந்தேறும் உத்திமுறையாக அகத்திணை சட்டகம்  அமைகிறது.பிற்கால சிற்றிலக்கியங்கள் பலவற்றிலும் கூட அரசனும் தெய்வமும் மாற்றீடுகளாக பயன்படுத்தப்படுகின்றனர்.நாயகன், வேந்தன், தலைவன், தலைவி, பெருங்கடவுள், ஆண், பெண், பக்தன்,தொண்டன்,ஆண்டை,அடியார் என நமது அதிகார உளவெளியின் பாத்திரங்களது பார்வைகளும் இயல்புகளும் நெடிய மரபில் இருந்து நீட்சி கொண்டுள்ளன என்பது நிதர்சனம். அதிகாரத்துடனான தமிழர்களது உறவின் பல்வகைப்பட்ட குணாம்சங்கள் இத்தகைய வரலாற்று கலாச்சார கட்டமைவுகளினால் புனையப்பட்டதாக புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று.

விரும்பாவிட்டாலும், பல நேர்வுகளில் கெடுதல் என அறிவுறுத்தப்பட்டாலும்,  நாம் ஏன் அதிக கலோரி உள்ள உணவுகளை நாடி உண்கிறோம்.இதற்கு மரபியல் ரீதியில் காரணங்கள் உண்டு என்கின்றனர் அறிவியலாளர்கள்.சேகரித்து உண்ணும் வழக்கம் கொண்டிருந்த ஆரம்பகால மனிதர்கள்,உணவு தட்டுப்பாடுள்ள சூழலில் வாழ்ந்தனர். அதிக கலோரி கொண்ட சர்க்கரை மிக்க உணவுகள் குறைவாக கிடைத்திருந்தன.அப்போது உயர் கலோரி கொண்ட உணவு கிட்டுகையில்,அதனை அதிக அளவில் உண்பது உயிர்வாழ்வதற்கு அவசியமாக இருந்தது.அத்தகைய சூழலில், மனிதர்கள் கையில் சிக்கும் உயர் சர்க்கரை உணவுகளை இயன்ற அளவு தின்று தீர்த்திருக்கவேண்டும். இத்தகைய நாட்பட்ட நினைவுப்பதிவுகள் நமது உடல்மனத்தில் ஆழ பதிவுபட்டிருக்க வேண்டும்.எனவேதான் மருத்துவ எச்சரிப்பையும் மீறி நாம் நள்ளிரவுகளில் குளிர்பதனப்பெட்டியை திருட்டுத்தனமாய் காலிசெய்துகொண்டிருக்கிறோம்.நம் முன்னோர்களின் உணவுத்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவான புரதக்கூறுகள் இன்றும் நம் உணவுப்பழக்கத்தில் தாக்கம் செலுத்துகின்றன.அவ்வப்போது உடலும் மனமும் பழைய பரிணாம நிகழ்வுகளுக்கான பதில்களை   வழங்குகின்றன.நாம் இப்போது விண்ணுரசும் அடுக்ககங்களில் உயர் தொழில்நுட்ப கருவிகள் புடை சூழ வாழ்ந்துகொண்டிருக்கலாம்.ஆனால் நமது மரபணுக்கள் தாம் இன்னும் சவானாவில் இருப்பதாகவே எண்ணிக்கொண்டிருக்கலாம்.

சமூகங்களும் கூட ஒரே சமயம் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தபடி உள்ளன.அதன் பார்வைகளும் அணுகுமுறைகளும் எங்கிருந்து கிளம்பி வருகின்றன என்பது குழப்பமூட்டக்கூடிய விடுகதை வெளி.நமது நவீன எதிர்வினையானது நிலவுடைமை காலத்தில் இருந்து புறப்பட்டதாக இருக்கலாம்.நாம் நிலவுடமை மதிப்பீடுகள் என சொல்லிப்பழகியவைக்கு அதைவிட பழைய தோற்றுவாய்கள் இருக்கக்கூடும்.கோயிலை இடிப்பதும் கொள்ளை நோய்களும் மத்தியகால வழக்கம் என்று யார் சொல்லக்கூடும்? எனவே ஒரு சமூகம் தன்னைத் தானே விழிப்புடனும் விமர்சனத்துடனும் பார்த்து புரிந்து கொள்வது மிகுந்த அவசியமானது.

க.கைலாசபதி

இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி எனச் சொல்வது தேய்வழக்காகிவிட்டாலும் அக்கூற்றில் கொஞ்சம் உண்மை இருக்கிறது.குறிப்பாக பழம்படைப்புகள் உட்பட்ட முன்நவீன பிரதிகள் தொடர்பில்.சங்கப்பனுவல்களின் பெரும்பகுதி, அழகியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ் பண்பாட்டின் ஆரம்ப நிலையினையும்,அக்காலத்திய சிந்தனைப்போக்குகளையும் எடுத்துகாட்டும் ஆடியாகத் திகழ்கிறது.ஆனால் அது மட்டும் அன்று. அக்கண்ணாடியின் ஆழத்தில் எங்கோ நீர்ப்பிம்பமென நமது முகமும் அசைந்தபடி காட்சி தருகிறது. அப்படைப்புகளில் இருந்து நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என்று மட்டும் அல்ல, நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதையும் அறிந்துகொள்ள வாய்ப்பமைகிறது.

000

ஒரு சமூகத்தின், கலாச்சாரத்தின், தொடக்க நிலையில் தோன்றி, நீடித்து நிலைத்த தாக்கம் செலுத்தும் படைப்புகள், முதலாதாரப் படைப்புகள் என்று குறிப்பிடப்படுகின்றன. அக்கலாச்சாரங்களின் நினைவாக்கத்திலோ வடிவாக்கத்திலோ அவை பெரும் பங்காற்றி இருக்கும். சில நேர்வுகளில் அவை பைபிள் ,தோரா, வேதம் போல மதநூல்களாக இருக்கலாம்.அல்லது காப்பியங்களாக இருக்கலாம் இலியட்,கில்கமெஷ் போல.

ஏடறிந்த காலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு சமஸ்கிருதத்துடன் உறவு இருந்துவந்ததற்கான தடயங்கள் உள்ளன என்ற போதிலும், தமிழ் நிலத்தை ஒரு தனித்த பண்பாட்டுவெளியாகக் கருத முடியுமெனில், ஆச்சர்யமாக இதன் முதலாதாரப் படைப்புகள் மதநூல்களாகவோ பெருங்காப்பியங்களாகவோ அல்லாமல் சிறிய மற்றும் நீண்ட அளவிலான கவிதைகளைக் கொண்ட கவிதைத்தொகுதிகளாயும் நெடும்பாடல்களாகவும் இருப்பதைக் காணமுடியும். அறியப்பபட்ட பண்பாடுகளில் இதனை சீனக்கலாச்சாரத்தோடும் அதன் அடியொற்றி உருவான  ஜப்பானிய கலாச்சாரத்தோடும் தவிர வேறு எதனோடும் ஒப்பிடமுடியுமா தெரியவில்லை.தமிழ் போலவே சீனமும் பெரும்பழமை கொண்ட செவ்வியல் மொழியாக இருந்ததுடன் இன்னும் வழக்கில் நீடிக்கிறது.மேலும் பழஞ்சீனத்தின் கவிதைகளோடும் ஜப்பானிய கவிதைகளோடும் தமிழின் தொகைப் பாடல்களை ஒப்பிட்டுப் பார்க்க நிறைய சாத்தியம் உண்டு.

சங்க கால இலக்கியம் என அழைத்துப் பழக்கப்பட்ட இப்படைப்புகள் தனித்துவம் கொண்டவை. சமஸ்கிருதமயத்தின் நுழைவு ஆரம்பித்திருந்தாலும் கூட அதன் பாதிப்புகள் வாழ்வியல் கலாச்சாரத்தில் பரவலாகத் தலைகாட்டத் தொடங்குவதற்கு முன்னரே இச்செவ்வியல் படைப்பாக்கம் பதிவாகியுள்ளது. பிற்காலத்திய இலக்கியங்கள் சம்ஸ்கிருத தாக்கத்தை பாடுபொருளிலோ இதர பான்மைகளிலோ அதிகமாய் பெற்றிருக்க,சங்க இலக்கியங்களில் சமஸ்கிருதமயத்தின் தாக்கம் கவனிக்கத்தக்க அளவு இல்லையென்று அல்லது சொற்பம் என்றே கூறத்தக்கதாக உள்ளது. இப்படைப்புகளின் கவிதையியலும் அழகியலும் அக்காலம் வரையான  சமஸ்கிருத இலக்கியத்தில் காணக்கிடைக்காதது.எனவே இப்படைப்புகளை இந்திய பெருநிலப் படைப்பு வெளியில் மாத்திரமின்றி, தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட தனித்துவம் கொண்ட ஒன்று எனக்கூறலாம்.

இவை இப்போதைய வாசிப்பிலும் மிகச்சிறந்த கலைச்சாதனைகளாக நீடிப்பது என்பது உயர்கலைக்கே உரிய அதிசயத்தன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.அதற்கு முதன்மையான காரணம் அதன் அபாரமான அழகியல் உயரம்.அது தோன்றிய காலத்தோடு ஒப்பிடுகையில் இவ்வுயரம் புதிரானது.ஏனெனில் அக்காலத்தில் உலகில் எங்கு எழுதப்பட்ட இலக்கியப்படைப்புகளைக் காட்டிலும் சங்க இலக்கியத்தின் கவித்துவம் நுண்மையானதாகவும் இப்போதைய நமது பார்வையிலும் பிரமிப்பை ஏற்படுத்த வல்லதாகவும் உள்ளது. தொடக்க நிலையிலேயே தமிழ் இலக்கியம் எப்படி இத்தகைய தரத்தையும் நுட்பத்தையும் பெற்றிருந்தது என்பது இன்னும் ஒரு புதிரே.

இப்படைப்புகளின் கவித்துவ விளைவு அதன் மறைக்குறிப்புகளாலும் வாசகக்கற்பனையின் கண்டுபிடிப்புகளாலும் உண்டாக்கப்படுகிறது எனில் இத்தகைய கவிதைகள் யாருக்காக இயற்றப்பட்டிருக்கக்கூடும்? யார் இதன் நுகர்வோராக இருந்தனர்? என்பது எழுப்பியாகவேண்டிய கேள்வி.ஏனெனில் அப்போதுதான் நாம் இலக்கியத்தை ஒரு நிகழ்வாக முழுமையாகப் புரிந்துகொண்டோராவோம்.இவற்றை ரசித்து பழக்கப்பட்ட சுவைஞர் குறுங்குழுக்கள் இருந்திருக்கவேண்டும் என்பது ஏற்கத்தக்க ஊகம்.சங்க இலக்கியங்கள் வாய்மொழியாக்க மரபில் படைக்கப்பட்டவை எனச் சொல்லப்படுகிறது.எழுத்தறிவு அரிதாக இருந்த அக்காலகட்டத்தில் அப்போது எந்த வகையான கலைவெளிப்பாடும் அப்படியாகவே இருந்திருக்க முடியும்.(பழந்தமிழ்நாட்டில் எழுத்தறிவு பரவலாக இருந்திருக்கலாம் எனச்சமீபத்திய ஆய்வுகள்  வழி வாதிடப்படுவது முக்கியமான விஷயம்).ஆனாலும் கூட சங்க இலக்கியங்களை கட்டாயம் வெகுமக்கள் இலக்கியம் என்றோ நாட்டார் இலக்கியம் என்றோ கூறிவிட முடியாது.அதன் அழகியல் ரசனையில் பரிச்சயம் பெற்றிருந்தோர்க்கான ஒருவகை தீவிர இலக்கியமாகவே அது நிகழ்ந்திருக்க வேண்டும்.மறுபுறம் பக்தி இலக்கியம் ஜனரஞ்சக இலக்கியமென நிகழ்ந்திருக்கலாம்.

சங்க இலக்கியத்திற்கும் பக்தி இலக்கிய பாடல்களுக்குமான உறவு சிக்கலானது.ஒரு வாசகனாகப் பார்த்தால் கூட பக்தி இயக்கப்படைப்புகள்  சங்கக்கவிதைகளில் இருந்து மொழித்தளத்திலேயே வேறுபட்டிருப்பதைக் காணமுடியும். என்றாலும் பக்தி இயக்க கவிஞர்கள் சங்க இலக்கிய மரபுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருந்தனர் என்பது தெரிகிறது.எந்த வகையிலும் இரண்டுக்கும் இடையே முழுமுற்றான முறிவை கற்பனை செய்யமுடியாது.உணர்ச்சித்தளத்திலும் உத்திநிலைகளிலும் பக்தி இலக்கியப்பாடல்களை அகத்திணை மரபின் நீட்சியாக கருதமுடிந்தாலும் அடிப்படையில் அவை புறத்திணை மரபோடு நெருக்கமானவை என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.தவிர பழந்தமிழ் இலக்கிய வெளியில் காணக்கிடைக்காத வேதங்களின் துதிப்பாடல் பாணியும் புராணங்களின் புனைவிவரப்பின்புலமும் பக்தி பாடல்களின் மற்றிரு ஆக்கக்கூறு இழைகளாகும்.கூடவே அக்காலத்திய நாட்டார் பாடல் வழக்கின் தாக்குறவையும் பெற்றதன் மூலம் வெகுமக்களை அணிதிரட்டச் சாத்தியமான இயல்பை பக்தி இலக்கியம் பெற்றிருக்ககூடும்.

ஆயினும் பக்தி இலக்கியம் பழந்தமிழ் கவிதை மரபை நீக்கம் செய்துவிடவில்லை.பக்தி காலகட்டத்திற்குப் பின்னரும் சிற்றிலக்கிய மரபு வாயிலாக பழந்தமிழ் கவிதை வெவ்வேறு வடிவங்களில் வளர்த்தெடுக்கப்பட்டது என்றே சொல்லவேண்டும்.காலக்கதியில் பல்வேறு காரணங்களினால் சங்கப்பனுபவல்களின் வாசிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையிருந்த போதிலும், அது தன் கவித்துவச்சாரமான பல்வேறு விஷயங்களை இழந்துவிட்ட நேர்விலும் கூட, சிற்றரசர் அவைகளில் சிருங்கார எலும்புக்கூடுகளாக பழந்தமிழ் இலக்கிய மரபு முன்நவீன காலம் வரை நீடித்திருக்கவே செய்துள்ளது.

பு.கமலக்கண்ணன்

சங்க இலக்கியங்களின் நவீன காலத்து மீள்வருகை  தமிழ்க்கவிதைக்கு தான் அமைக்க விரும்பிய புத்தம் புதிய அழகியலுக்கு அணுக்கமான ஒரு முன்மாதிரியை காட்டித்தந்தது.சுவாரஸ்யமாக நாம் இலக்கியத் தளத்தில் வியக்கும் பல பாடல்கள் அகப்பாடல்களாகவும், பொதுவெளியில் குறிப்பாக வெகுஜன கலை மற்றும் அரசியலில் எடுத்தாளப்படுபவை புறப்பாடல்களாகவும் உள்ளதைக் கவனிக்கலாம்.நவீன கலை இலக்கியம் அகப்பாடல்களின் மறைமொழியையும் அர்த்தச்சாத்தியங்களையும் எடுத்துக்கொள்ள, வெகுஜன அரசியலும் கலையும் புறப்பாடல்களின் மிகைப்படுத்தும் பாங்கையும் வீரம் ஈகை மானம் புகழ் போன்ற பண்டைய விழுமியங்களைப் பேசுவதிலும் ஆர்வம் காட்டியது.

எல்லாவற்றுக்கும் மேலாக சங்க இலக்கியத்தின் புனர்வரவு தமிழர்களுக்கு வரலாற்றுணர்ச்சியை அளித்தது.அவர்களே நம்பமுடியாத பழம்பெருமையயும் தனித்த அடையாளத்தையும் வழங்கியது. அது வழியாக தமிழ் மறுமலர்ச்சி என அழைக்கபடும் சமூக விழிப்பிற்கும் அது வாயிலாக அவர்களுக்கேயான பிரத்யேக குணாம்சங்களைக் கொண்ட பிராந்திய அரசியலையும் கட்டமைப்பதில் தன்னளவிலான பங்காற்றியது. இப்படைப்புகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தவறியிருக்குமாயின் தற்போதைய தமிழ் நிலத்தின் அரசியல் மற்றும் வரலாற்று அடையாளங்கள் வேறாக இருந்திருக்கலாம்.அது வட இந்தியாவைப் போலவே  பின்பேரரசுக் காலத்தின் பண்பாட்டு நீட்சியாகத் தொடர்ந்திருக்கக் கூடும்.

000

முன்னதாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.இது எந்தவகையிலும் மதிப்புரை அல்ல.அத்தகைய தகுதிகளும் புலமையும்  கொண்டவன் அல்லன் இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருப்பது.நான் ஒரு எழுத்தாளன்.சங்க இலக்கியம் தொடர்பான சில மிக முக்கியமான  நூல்களின் கருத்துக்களை தொகுத்துப்பார்த்துக்கொள்ளவும்,அவற்றை பொது இலக்கிய வாசகனுக்கு பகிர்வதுவுமே இதன் நோக்கமாகும்.தவிர நாம் ஏன் இப்படி இருக்கிறோம் ,நமது இலக்கியத்தின் ஊற்றுக்கண்கள் எவை, அதைவிட முக்கியமாக தமிழ்க் கவிதையின் அழகியலை எப்படி வரையறுப்பது என்பன போன்ற எனக்கு விருப்பமான அடிப்படை கேள்விகளின் பகுதியாகவே இக்கட்டுரையில் உள்ள தேட்டமும் எண்ணங்களும் அமைகின்றன:

கமில் ஸ்வலபிள் (Kamil Vaclav Zvelebil) தனது ”முருகனின் புன்னகை” நூலில் இந்தியாவில், வரலாற்றுச் சான்றளிக்கப்பட்ட தற்சார்புடைய செவ்வியல் பண்பாடுகள் இரண்டு மட்டுமே இருந்துள்ளதாகக் கூறுகிறார்:ஒன்று சமஸ்கிருதத்தினது  மற்றொன்று தமிழினது.   

வடமொழியல்லாத  மற்ற இந்திய மொழிகளில், எழுத்திலக்கியமானது சமஸ்கிருத படைப்புகளின் தூண்டுகையினாலேயே தொடங்கியுள்ளது. அவற்றின் முதல் இலக்கிய ஆக்கங்கள் சமஸ்கிருத மாதிரிகளின் தழுவல்களாகவோ, போலச்செய்தல்களாகவோ இருந்தன.உதராணத்திற்கு தெலுங்கு இலக்கியத்தின் முதற்படைப்பான நன்னயரின் ஆந்திர மகாபாரதம்,சமஸ்கிருத பாரதத்தின் மறுமொழிவு.கன்னடத்தின் முதற்பெரும் கவிஞராகக் கருதப்படும் பம்பாவும் பாரதத்தை இயற்றியுள்ளார்.கன்னடத்தின் முதல் உரைநடை நூலான வட்டாராதனை சமண முனிகளின் பௌராணிக வாழ்க்கைத் தருணங்களைக் கூறுவது.நிருபதுங்கரின் இலக்கண நூலான கவிராஜமார்கா தண்டியின் காவியதரிசனத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.இப்படியாக பாடுபொருளிலோ, அடிக்கருத்துகளிலோ, யாப்பிலோ, கவிதையியலிலோ, வடமொழியின் தாக்கம் இவ்விலக்கியக்கங்களின் ஊற்றுமுகமாய் செயல்பட்டுள்ளது.

மாறாக,தமிழின் முதல் இலக்கியங்கள் முன்மாதிரியற்றவை. சமஸ்கிருதத்தில் அதற்கான மூலப்படிவங்கள் இல்லை.அவை இம்மண்ணின் சுதந்திர விளைச்சல்கள் எனலாம்.ஆரிய வருகைக்கு முற்பட்ட மூலத்திராவிட இலக்கிய மரபுகளின் தடயங்கள் வேறெந்த மொழியிலும் இப்படி பதிவாகவில்லை என்கின்றனர்.எல்லா மொழிகளிலும் வாய்மொழி இலக்கியங்கள் இருந்திருக்கும் எனினும், அது தமிழில் போல செவ்வியலாக்கம் பெற்று படைப்பிலக்கியமாக உருப்பெறவில்லை. சமஸ்கிருதமயத்திற்கு பின்னரே அவற்றில் எழுத்திலக்கிய நிகழ்வு நடந்துள்ளது.யோசித்துப்பாருங்கள், கம்பராமாயணத்தில் இருந்து தமிழ் இலக்கியம் தொடங்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும்.அப்படி தொடங்கவில்லை என்பது தமிழிலக்கியத்தின் உச்சமாக கருதப்படும் கம்பராமயணத்தின் மேன்மைக்கும், அது எழுதப்பட்ட மொழிக்கு ஆயிரம் வருட இலக்கிய மரபும் கொள்கைகளும் உண்டென்பதற்கான சான்றும் ஆகும்.

தமிழ் இலக்கிய மரபின், வடமொழிக்கு அப்பாற்பட்ட இச்சுதந்திர தொடக்கம் ஆய்வுப்பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்துவருவது. புதிரவிழ்க்க இயலாமையாலும் சான்றாதாரங்களின் அருமையினாலும்  பல்வேறு சிக்கல்களுக்கு வித்திட்டுள்ள இவ்விடயம் ஒருபக்கம் பெருமிதத்திற்கு காரணமாகியுள்ளது எனில் மறுபக்கம் பிடிவாதமான மறுப்பிற்கு ஆளாகியுள்ளது. இரண்டின் அதிதீவிர நிலைப்பாட்டு தலத்திலும் அரசியல் கலக்கும்படியானது வியப்பக்குரியதன்று.எல்லா அதிதீவிரநிலைகளும் வேறுவழியின்றி தேசியவாதங்களையே உருவாக்கும் போல. சமஸ்கிருதத்தின் அடியொற்றியே இந்நிலத்தின் அனைத்து பண்பாட்டுருவாக்கமும் நேர்ந்ததெனக் கூறுவதும்,தமிழ் எந்த மொழியினோடும் தொடர்பற்ற கலப்பற்ற தூய தொடக்கங்களைக் கொண்டது என்பதும் தீவிர தரப்புகள் எனில், கடவுள்களுக்கு புரியும் ஒரே தேவ பாஷை என்பதும்,இந்தியாவின் கலாச்சாரப்படைப்புகள் யாவும் சமஸ்கிருதமயத்தின் உற்பத்திகள் என்பதும், தமிழ் உலகின் ஆதிமொழி என்பதும்  தம்மை தாமே ஏமாற்றிக்கொள்வதற்கும், மந்தைகளை வரிசையில் நிறுத்துவதற்குமான வசனங்கள் மட்டுமே.

சமகாலத்தின் முக்கிய சமஸ்கிருத அறிஞர்களில் ஒருவரான  ஷெல்டன் போலக்(Sheldon Pollock) தனது புகழ்பெற்ற ’மனிதர் உலகில் கடவுளர் மொழி’ நூலில் சமஸ்கிருதம் எவ்விதம் ஒரு வட்டாரம் கடந்த அகில மொழியாக ஆனது என்பதையும், பொதுயுகத்தின் மத்தியவாக்கில் சமஸ்கிருதத்தின் இடத்தை எப்படி இதர பிராந்திய மொழிகள் கைப்பற்றின என்பதைக் குறித்தும் மிக விரிவாக ஆய்ந்துரைத்துள்ளார்.

கமில் ஸ்வலபிள்

தெற்காசிய பரப்பில் அதுவரை சமூக அரசியல் கலாச்சாரப்புலங்களில் ஆளுகை செலுத்திவந்த சமஸ்கிருதத்தின் இடத்தை அந்தந்த பிராந்திய மொழிகள் கைக்கொள்வதை வழக்குமொழிமயம்(Vernacularization) எனக்குறிப்பிடும் அவர் குப்த பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு பிராந்திய அரசுகள் தங்களது அதிகாரத்தை திரட்டித் தொகுத்துக்கொண்டதில் இருந்து தொடங்கிய இப்போக்கு முதலாயிரமாண்டுவாக்கில் பல்வேறு பிராந்தியங்களில் ஒரு சமூக மாற்றமாக நடைபெற்றதை விளக்குகிறார்.பேரரசு வடிவத்தின் அரசியல் அழகியலிற்கு சமஸ்கிருதம் வாகனமாக இருந்தது போல, பிராந்திய  அரசுகளின் அதிகார அழகியலானது, வெகுதொலைவு பயணிக்கத் தேவையிராத பிரதேச மொழிகளால் கட்டமைக்கப்பட்டது.இது இரண்டு வகையில் நடந்தேறியது. ஒன்று எழுத்தாக்கம்(literization) மற்றது இலக்கியவாக்கம்(literarization,).

எழுத்தாக்கம் மற்றும் இலக்கியவாக்கம் ஆகியவற்றுக்கான ஆற்றல்களை பிராந்திய மொழிகளுக்கு சமஸ்கிருதமே அளித்ததாகவும், பிரதேச எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மொழியான சமஸ்கிருதத்தின் மாதிரிகளை ஒட்டி, அது வழங்கிய  பாடுபொருட்களை பெற்றுக்கொண்டு, அதன் அழகியல் மற்றும் கருத்தியல் தடத்திலேயே இலக்கியவாக்கம் நிகழ்ந்ததன் வாயிலாக இவ்வழக்குமொழிமயம் முழுமையடைந்தது என்கிறார் ஷெல்டன் போலக்.இத்தகைய சமூக கலாச்சார மாற்றமே அனைத்து தெற்காசிய மொழிகளிலும் நடைபெற்றதாக அவர் வாதிடுகிறார்,தமிழ் உட்பட.

இதர இந்திய மொழிகளுக்கு இக்கோட்பாட்டாக்கம் பெருமொழிபாகவே செல்லுபடியாகக் கூடும் எனினும் தமிழைப் பொருத்தளவில் அதன் வரலாற்று தொடக்கமும் நீண்ட இடையறாத இலக்கிய உற்பத்தியும் இவ்வெடுத்துரைப்பிற்குள் பொருத்தச் சாத்தியமற்றதெனக்  கருதப்படுகிறது. உரையாசிரிய மரபு பிற்கால இலக்கண நூன்மரபு போன்ற பிற்கால இலக்கிய போக்கில் சமஸ்கிருதத்தை அடியொற்றிய வழக்குமொழிமயத்தை அடையாளம் காணமுடிகிறது.உதாரணமாக தமிழ் இலக்கியங்களை சமஸ்கிருத அடிப்படையில் விளக்கவேண்டி எழுந்த தேவைக்கிணங்க இருவேறுபட்ட கலாச்சார அறிவு மரபுகளை உரைக்காரர்கள் லாவகமாக ஒன்றிணைத்து, தமிழ்ச்சிந்தனை வளர்ச்சியை ஒருங்கிணைந்த சமஸ்கிருத சிந்தைப்போக்கின் ஒரு வளர்ச்சிநிலையாக மாற்ற முனைந்தனர்.போலவே பிற்கால இலக்கண மரபிலும் இதை போக்கை காணலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தனது கருத்துருவ மாதிரியில் தமிழ் மொழி கால ரீதியான குந்தகத்தை விளைவிக்கிறது என ஒப்புக்கொண்டாலும் போலக்,தொகைப்பாடல்கள் தொகுக்கப்பட்ட காலமாய் கருதப்படும் எட்டாம் நூற்றாண்டு அளவிலேயே தமிழின் இலக்கியத்தொடக்கங்கள் நிகழ்ந்ததாகக் கொண்டு தனது கருத்துருவ மாதிரியின் சார்பினை உறுதிசெய்கிறார்.இதே காலகட்டத்தில்தான் சங்க  இலக்கியம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஹெர்மன் டீக்கன் போன்ற ஆய்வாளர்களும்  முன்வைக்கின்றனர்

புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர்களில் ஒருவரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ”சமஸ்கிருதத்தின் மந்திரக்கோல் தொடுகையினாலேயே இத்திராவிட மொழிகள் தம் வட்டாரத் தன்மையில் இருந்து விலகி இலக்கிய நிலைக்கு உயர்வடைந்துள்ளன” என்று கூறுவதிலும் இத்தகைய குரலையே நாம் கேட்கிறோம்.இதர பிராந்திய மொழிகளில் நிலைமை இதுதான் எனினும் ’இத்திராவிட மொழிகள்’ என்ற அழைப்பிற்குள் தமிழையும் சேர்த்து குறிப்பிடுகிறார் என்பது எதார்த்தமாகவே மறுப்பிற்கு காரணமாகிறது. ஜார்ஜ் ஹார்ட்டின் தமிழ்ச்செவ்வியல்கள் நூல், இம்மேற்கோளினை தமிழ்மொழியின் பின்புலத்தில் இருந்து மறுக்கும் அல்லது பரந்துபட்ட சான்றாதாரங்களின் அடிப்படையில்,வடமொழி தமிழ் இரண்டின் இலக்கியங்களையும் ஒப்புநோக்கில் வாசிப்புக்குட்படுத்தி புறவயமாக பரிசீலிக்கும் முகமாய் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு எனக்கூறலாம்.சமஸ்கிருத பேராசிரியாரக தன் பணியைத் தொடங்கிய ஜார்ஜ் எல். ஹார்ட் தமிழைச் செம்மொழி என அறிவிக்ககோரி இந்திய அரசுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதத்தில் இவ்வாய்வு முடிவுகளை ஒட்டிய கருத்துகளே மையமாக இடம்பெற்றிருந்தன.

சமஸ்கிருத இலக்கியங்களுக்கு கடன்பட்டு, ஆரியம் ஆரியமல்லாத கூறுகள் என பிரிக்கமுடியாதபடி கலந்துவிட்ட நிலையையே நாம் சங்க இலக்கியங்களில் காண்பதாக நீலகண்ட சாஸ்திரி போன்றோர் கருதுகையில் , ஹார்ட் பழந்தமிழ் இலக்கியங்களில் சமஸ்கிருத கூறுகள் மிகக் குறைவாக இடம்பெற்றுள்ளன என்றும்,அக்காலத்தில் வைதீக சமயமும் அதற்கு முன்பே சமண பௌத்தமும் நுழைந்துவிட்ட போதிலும் கூட பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் பண்பாட்டு வெளியானது ஆரிய இந்திய பண்பாட்டில் இருந்து வேறான தனித்துவம் கொண்டதாக விளங்குகிறது என்றும் கூறுகிறார்.சொல்லப்போனால் ஒட்டுமொத்த  இந்தியப்பெரு நிலப்பரப்பில் ஆரியப்பண்பாட்டிற்கு முந்தய மக்கட்திறளின் சுயாதீன பண்பாட்டையும் வாழ்வியலையும் அறிந்துகொள்வதற்கான பெரும் சாளரமாகவே பேராசிரிய ஹார்ட் பழந்தமிழ் இலக்கியங்களை காண்கிறார்.

000

சங்கப்பாடல்களை வாசிக்கும் நவீன வாசகர்கள் ஒருவிஷயத்தை கவனித்திருக்கலாம்: அதன் மீபொருண்மையின்மை. பொருண்மொழிக்காஞ்சி துறையில் உள்ள புகழ்பெற்ற பாடல்களைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் (அப்பாடல்களும் ஆசீவகம்,பௌத்தம்,சமணம் போன்ற வட இந்திய மதங்களின் கொள்கைநிலை கொண்டவை எனச் சொல்லப்படுகிறது), மறுமை பற்றிய குறிப்புகள் அங்கங்கு தென்பட்டாலும் விண்ணகத்திலோ அருவமான தத்துவார்த்த கருத்துக்களிலோ தமக்கு பெரிய ஆர்வம் இல்லை என்றே பழந்தமிழ் பாடல்கள் தெரிவிக்கின்றன.அவை சித்தரித்துக் காட்டும் பண்பாட்டிலோ, இம்பர் உலகில் ஈகை செய்து இசைபட வாழ்ந்து போரில் களிறெறிந்து பெயர்ந்து மார்பில் புண்ணுற்று மரணித்து நடுகல்லாகி வீரதுறக்கம் அடைவதே லட்சியமாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.’மண்ணவர்’ உலகது. ஒருவகையில் சங்கப்படைப்புகள் மதச்சார்பற்ற இலக்கியம் என்று சொல்லப்படுவதன் நீட்சியாக இதை கொள்ளலாம்தான்.ஆயினும் முற்றிலும் மீபொருண்மைத்தளம் இல்லாத கலைவெளி என்பது வியப்பூட்டக்கூடியதே. அவ்வகையில் சங்க இலக்கியம் நாட்டர் அழகியல் மரபை நினைவூட்டுகிறது என்றே சொல்லவேண்டும்.

ஆனால் கவிதையின் அழகியலே ஒருவகையில் அதன் மீபொருண்மைத்தளமாகவும் மாறமுடியும் என்பது சங்க இலக்கியத்தில் சாத்தியப்பட்டுள்ளது.அதாவது மறுமை இல்லை இம்மை மட்டுமே எனும்போது கவிதையியலின் நுண்மையும் மறைமையுமே மறுமையாக மாறிவிடுகிறது. கடந்த நிற்கும் ஒன்றல்லாது உள்ளுறைந்த ஒன்று கவித்துவ விளைவின் கருவாகிறது. கூடவே, பண்பாடுகளின் தொடக்க நிலையில் காணக்கூடிய காமம் குறித்த அதீத பிரக்ஞை.அப்போது காதல் வாழ்வானது மூடிமறைத்துச் சொல்லவேண்டிய ஒன்றாக கருதப்படத் தொடங்கியிருக்க வேண்டும் (இப்போதும் அப்படித்தானே). காமம்/காதல் தொடர்பான அனுபவங்கள் வெளிப்படையாக சொல்ல முடியாததாகவும் கூடாததாகவும் கருதபட்டமையால், அந்தரங்க வாழ்வு குறித்த பாடல்கள் பூடகக் குறிப்புணர்த்தலையும் இலைமறை காய்மறையாகச் சொல்லவேண்டிய எதிர்பார்ப்புகளையும் சந்தித்திருக்கும். இவ்விதம் ஒன்றைச் சொல்லி இன்னொன்றை உணர்த்துவது, அதுவும் அனைவரும் அறிந்த காட்சிகள் வழியே மறையுலகான அக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது போன்ற சங்கேத மொழி நுகர்வோரிடம் கண்டுபிடிப்பின் ரகசிய ஆனந்தத்தையும் கற்பனையின் இனிய செயலையும் கிளர்த்தியிருக்கும். இவ்வித வளர்ச்சிப்போக்கிலேயே, அகக்கவிதைகள் உள்ளுறை உவமம், இறைச்சி போன்ற உருவியல் மொழியை கிட்டத்தட்ட பொதுக்கவிமொழியாக பயன்படுத்தும் நிலை எட்டப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.குறிப்பாக பெண்களின் மண்டலத்தோடு நெருங்கி நோக்கத்தக்க அகக்கவிதைகளில் இப்பண்பு மேலோங்கியிருப்பதும் கூடுதல் கவனத்திற்குரியது.

ஷெல்டன் போலக்

மொத்தத்தில்,அகம் புறவெளிக்கு வருவதன் தேவையின் பாற்பட்டு இத்தகு உட்பொருள் உத்திநயங்கள்(Techniques of suggestion) உருவாகி இருக்க வேண்டும் எனலாம். நாட்டார் கலை வெளியில் இத்தனை மறைப்பும் இங்கிதமும் தேவையிருந்திருக்காது என்பதை எந்த கிராமிய கலைநிகழ்ச்சிகளில்  இருந்தும் நம்மால் அறியமுடியும்.மாறாக இது வேறுபட்ட உயர்வகுப்பினர் சார்ந்த சிற்றரங்கு அல்லது அரசவையில் நிகழ்த்தப்பட்ட கலை வெளிப்பாடுகளாக இருந்திருக்கக்கூடும்.காப்பிய காலத்திற்கு பின்னான நூற்றாண்டுகளில் குறுநில மன்னர்களின் அரசவைகளுக்காய் எழுத்தப்பட்ட சிற்றிலக்கிய படைப்புகளில் காணப்படும் அதீத மறைபொருட்தன்மையையும் இரட்டுற மொழிதலையும் சிருங்கார ரசத்தையும் இதனோடு பொருத்திப்பார்க்கலாம். சங்க இலக்கியம் ‘அரசவைக்கவிதைகள்’ என்று சிலரால் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகையாக ஒரு இலக்கியத்திற்கான மீபொருண்மைத்தளத்தை அப்பண்பாட்டின் பருண்மையான எதார்த்தமல்லாது கவிதையியலே உருவாக்கியளிக்க நேர்ந்தமை,சங்கப்படைப்புகளின் அழகியல் உயரத்திற்கான காரணங்களில் ஒன்றாக  இருக்கலாம்.

000

ஒவ்வொரு சமூகத்திலும் தாதுநிலையில் இருந்தே உலகநோக்கு என்றும் வாழ்க்கைப்பார்வை என்றும் ஒன்று உருவாகி இயக்கி வருகிறது.வளர்சிதை மாற்றத்திற்கும் உரிய இது பழங்குடி சமூகங்களில் இருந்து உயர்தொழில்நுட்ப மெய்நிகர் சதித்திட்ட குழாம்கள் வரை தொழிற்படுகிறது.சமூகத்தின் உள்ளார்ந்த நம்பிக்கைகள், ஆதாரமான அச்சங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடுகள் மூலம் இப்பார்வைக்கென ஓர் உரு வந்தமைகிறது.சமயம், சமூகத்தின் அப்படியான ஒரு முக்கிய அவதார முகம்.

சடங்கு, கருத்தியல், புனைவு போன்ற மேல்தளங்களுங்குக் கீழே சமயமானது ஒருவகை மீ அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. ருடால்ஃப் ஆட்டோ அதை ”Mysterium tremendum et fascinans” என்கிறார். புராதன சமூகங்களில் கடவுள் என்னும் கருத்தாக்கம் அச்சம் அபயம் என இரண்டு முகங்களைக் கொண்டதாய் தொடங்குகிறது.அருள் மற்றும் பயங்கரம் என இரண்டு கைகள் கொண்ட வசீகர மர்மம்.மிர்ச்சா எலியாடேயின் வார்த்தைகளில் சொல்வதானால் புனிதத்துவம் தன்னைத் தானே வெளிப்படுத்துகையில்தான், எதார்த்ததின் திரை விலகி, உலகம் தோன்றுகிறது.இது போன்ற மதங்களின்-தத்துவம் சார்ந்த சிந்தனைக்கோணத்தில் இருந்து பேராசிரியர் ஹார்ட் பண்டைய தமிழ்நாட்டில் இருந்த சமய நம்பிக்கைகளின் மூலநிலை மற்றும் அதன் தோற்றுவாய் குறித்து சங்க இலக்கியங்கள் வாயிலாக ஆராய்கிறார்.இது தமிழரின் சமய நம்பிக்கைகள் பற்றி மட்டுமின்றி  ஆரியப் பண்பாட்டிற்கு முற்பட்ட இந்தியாவின்’நாட்டு பண்பாட்டினையும்’ அறிந்து கொள்ள  வாய்ப்பளிக்கும் என அவர் நம்புகிறார்.

இயற்கையில் புனிதம் என ஒன்று இல்லை.குழந்தைகளுக்கு கற்பிப்பதில் உள்ள மிகப்பெரிய சவால் அவர்களுக்கு சுத்தம் அசுத்தம் பற்றிய பேதத்தை உணரச்செய்வது.விலங்குகளுக்கு அப்படியொரு கல்வி இருப்பதாக தெரியவில்லை.ஆனால் எல்லா கலாச்சாரத்திலும் புனிதம் என்கிற கருத்தாக்கத்தின் முதற்ச்செயல்பாடாக உள்ளது இயற்கையின்  மேல் மானுட அர்த்தத்தை ஏற்றிவைப்பது.அதாவது பூமி எல்லா இடத்திலும் ஒன்றேயாக இருப்பதில்லை.வெளியும் அப்படித்தான்.ஏதோவொரு மலைக்குகை வேறானதாக உள்ளது,ஒரு வெந்நீர் ஊற்று,மலையுச்சி,ஒரு முதுமரம் பிற இடங்களில் இருந்து மாறுபாடு கொண்டதாக உள்ளது. அங்கு தெய்வமோ அமானுஷ்ய ஆவியோ குடிகொண்டுள்ளதாக நம்பிக்கை கருக்கொள்கிறது. அந்த இடம்/வெளி புனிதத்துவம் கொண்டதாக மாறுகிறது. இப்போதும் பார்க்கலாம் புனிதத்தலங்களை ஒட்டி வெவ்வேறு மதங்கள் தங்களது வழிபாட்டு மையங்களை நிறுத்தியிருப்பதை.ஏனெனில் அத்தகைய இடங்களின் புனிதத்துவத்தை மதங்கள் தம்மால் இயன்ற அளவு பகிர்ந்துகொள்ள முயல்கின்றன.பல்வேறு முக்கிய வழிபாட்டிங்கள் ’அத்தலத்தின்’ புனிதத்துவத்தில் இருந்து முளைவிட்டதாக இருக்கும்.நிறைய புராதன மனித வாழ்விடங்களில் அந்தந்த பகுதி மக்கள் தமக்குத் தெரிந்த சாமிகளை அருகே ஏற்படுத்திக்கொள்வது தற்செயலானது அல்ல.

வைதீக மதங்கள் நிலைபெற்ற பின்னரும், அம்மதங்களின் தெய்வங்களால் இத்தகைய இடம் குறித்த புனிதத்துவ நம்பிக்கையை நீக்க முடியவில்லை.மாறாக அவை, ஒவ்வொரு ஊரிலும் அதற்கென தனித்தனி மூலவர் பெயர் கொண்டு அவ்விடத்தின் புனிதத்துவத்தையும் தக்கவைத்துக்கொண்டதையே பார்க்கிறோம்.பக்தி இயக்கத்தில் இத்தலங்களை/பதிகளை தங்களது பாதப்பயணத்தாலும் பாடல்களாலும் சமயக்குரவர்களும் ஆழ்வார்களும் இணைத்து இணைத்து ஒரு புனித நிலவியல் வரைபடைத்தை உருவாக்குகின்றனர்.பின்னர் மத்தியகாலத்தில் இருந்து முன்நவீன காலம் வரை தலபுராணம் என்ற வகைமை வாயிலாக இப்புனித வரைபடம் விஸ்தரிப்பிற்கும் புராணமயத்தின் விளைவால் இந்திய பெருநில வரைபடத்திற்குள் அடைபட்டு மீள்வரைதல்களுக்கும் ஆட்படுகிறது.

இவ்விடத்தில் தமிழ்நாட்டின் பிரதேசவாத பண்பின் மீதான பற்றுதலும் பீடிப்பும் நினைவிற்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.கூடவே லெமூரியா கண்டம்,தனித்தமிழ்நாடு.. ஊரின் பெயரை தனது பெயரின் பகுதியாக வைத்துக்கொள்வது சங்ககாலத்தில் இருந்து சமீபம் வரை நீடித்திருந்த வழக்கம் தானே.தென்னிந்தியாவின் நிலவியலுக்கும் காலநிலைக்கும் அதன் விளைவான உற்பத்தி முறைகளுக்கும் இத்தகைய பண்புநலன்களுக்கும் சிந்தனைகளுக்கும் தொடர்பிருக்க வேண்டும்.இதையே இயல்புணர்ந்தோர் முதலெனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனச் சொல்லினர் போல.

சங்கக்கவிதையின் அழகியல், வெளியின் இலக்கணம் மீது கட்டப்பட்டது என்கிறார் ஏகே ராமானுஜன். பழந்தமிழ் சிந்தனையில் அதி முக்கியத்துவம் உடையது வெளி. அதற்கடுத்த முதன்மைத்துவம் பருவகாலத்திற்கு (காலத்திற்கு அல்ல). எளிமைப்படுத்த கூடுமெனில் அகம் புறம் என்ற இருப்பியல் வகைப்பாட்டு முறையானது வெளியினை உள்ளே வெளியே எனப்பிரிப்பதுதான்.இடம் என்பது வெளியின் தூலமான பகுப்படையாளம்.கலாச்சாரம் இயற்கை, நாம் அவர்கள், வீடு சமூகம் ,சுயம் மற்றமை என இருத்தலில் எல்லா புள்ளியிலும் ஒரு உள்ளே வெளியே உருவாகிறது.எனவே திணைக் கோட்பாட்டினை வெளி மற்றும் பொழுது பற்றிய அறிவார்ந்த கற்பனையின் விளைபொருள் என்று கூறலாம்.மானுட வாழ்வும் சரித்திரமும் இம்முதற்பொருட்களின் பின்னணியில் தோன்றி மறையும் குமிழ்நடனங்கள் என்ற அறிதலும் அதில் உள்ளது.

எல்லா நிலத்திலும் கூடல் உண்டு பிரிவு உண்டு. அகமும் புறமும் ஊடிக்கலப்பன. இது அறியாதவர் அல்லர் அக்காலத்திய கவிஞரும் இலக்கண அறிஞரும்.அவர்கள் கவிதையியலைப் பொறுத்தளவில் திணைவகைப்பாட்டை உரிப்பொருளுக்கான செயல்புலமாகவும், உணர்சிகரத்தை தீவரப்படுத்தவும் துலக்கிக்காட்டவுமான ஒரு படிம வெளி பகுப்பாகவுமே கருதினர். கடல் முன்னில் ஒரு இளம்பெண்ணின் தனிமை அனந்த மடங்கு பெருகுகிறது, ஓயாத அலைக்கழிப்பும்,தீராத காற்றும் கண்ணுக்கெட்டிய தூரம் ஆளற்ற வறக்காட்சியும்..அவளது தாகம் கண்முன் விரிந்து கிடக்கும் இப்பெரிய உலகால் தணியாதது.ஒவ்வொரு அலையிலும் அவன் முகம் தேடும் அவளுக்கு எதுவும் நிச்சயமற்றதாக உப்புகரிப்பதாக உள்ளது.கல்லில் மோதி உடையும் நீர்த்துமிகளாய் அகப்பொருள் புறக்கரையில் பட்டுத் தெறிக்கிறது. எங்கெல்லாம் ஒரு பெண் வருந்தி அழுகிறாளோ அங்கு கடல் கொந்தளிக்கிறது. பிரிவு எங்கு  நேரினும் அங்கொரு பாலை படர்கிறது.வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் வேணாத வெயிலில் கொடுஞ்சுரத்தைக் கடக்கின்றனர் இன்றும் தென்கோடியில் குமரு ஒருத்தி கடல்பார்த்து காத்திருக்கிறாள்.  

000

பழந்தமிழரின் பூர்விக சமய அனுபவம் இத்தகைய இயற்கை ஆற்றல்களை அடிப்படையாக கொண்டது என்கிறார் ஹார்ட். அவ்வகையில் கடவுளாக்கம் பெறாத இயற்கை ஆற்றல்களின் வடிவமாக சங்கப்பாடல்களில் காணப்படும் அணங்கு என்ற ஆற்றலை முதன்மையானதாக காண்கிறார்.அது இன்னும் தெய்வநிலையாக்கத்திற்குள் கொண்டுவரப்படாத தீங்கு விளைவிக்கத்தக்க அச்சமூட்டும் ஓர் இயற்கை ஆற்றல். இவற்றில் இருந்து காலக்கதியில் பரிணாம வளர்ச்சியுற்று வெவ்வேறு நிலைகளில் கடவுளாக்கங்கள் நிகழ்ந்துள்ளன.அத்தகைய இயற்கை ஆற்றல்களை வழிபடக்கூடிய ஒருவகையான ஆன்மவாதம் (Animism) பழந்தமிழகத்தில் பின்பற்றப்பட்டதாக கருதலாம் (சிறுதெய்வ வழிபாட்டு மரபினை ஒத்த தன்மையுடையது). வடமரபில் சமயம் என்பது தனித்தனி கடவுளர்களையும் அவர் குறித்த விரிவான புராணக்கதைபரப்பையும் மையமாக கொண்டிருக்க, இங்கு அது சில பொருட்களில் சில மனிதர்களில் உறைகிற மாற்றத்திற்கு உட்படுகிற ஆற்றலை அடிப்படையாக கொண்டிருந்தது.

பண்டைய தமிழ் நம்பிக்கை அமைப்பின் மையத்தில் இருப்பது புனித ஆற்றல் இரண்டு நிலைகளில் இருப்பு கொள்கிறது என்னும் கருத்து: ஒன்று கட்டுபாட்டில் உள்ள அருள்தரும் ஆற்றல் மற்றொன்று கட்டுப்படுத்தப்படாத தீய ஆற்றல். முன்னதை சமூக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலாகவும், பின்னதை கட்டுப்படுத்தப்படாத காட்டு இயற்கையின் சக்தியாகவும் புரிந்துகொள்ளலாம்.சமூகம்,இரண்டாம் நிலையிலுள்ள ஆற்றலை அஞ்சுவதுடன் அதனை தணிவித்து சொல்கேட்கும் முதல்நிலை ஆற்றலாக மாற்ற முனைகிறது.ஏனெனில் கவனமாக கையாளப்பட்டு முறைப்படுத்தப்படாத எல்லா ஆற்றலும் ஆபத்தானது.எனவே இத்தகைய அபாய சக்திகளை முறைப்படுத்தும்  பணியை பலவேறு சமூக நிறுவனங்கள் மேற்கொண்டன.அதில் முதன்மையான நிறுவனமாக ஹார்ட் அடையாளம் காட்டும் நிறுவனம் : அரசன்.

ஏ.கே.ராமானுஜன்

பண்டைத்தமிழ்ச்சமூகத்தில் மன்னனே புனித ஆற்றல்களின் மையமாக விளங்கினான். அதாவது இயற்கையில் இருந்து வேறுபட்டு அமைந்து நிற்கும் கலாச்சாரத்தின் மையமாக. அவ்வாற்றல் நல்லபடி பராமரிக்கப்பட்டால் நாடு செழிப்புற்று விளங்கும்,கட்டுப்பாட்டை இழந்தால் வறட்சியோ தோல்வியோ நேரும் என நம்பப்பட்டது. மன்னன் தெய்வமாக வழிபடப்படவில்லை.ஆனால் இயற்கையான புனித ஆற்றல் நிரம்பியவனாகக் வணங்கபட்டான் அஞ்சப்பட்டான் (நாயகனாக?).போரில் ரத்தக்களறி செய்யும் அவனது தயையின்மையும் வலிமையும் போற்றப்பட்டது.முக்கியமாக ஹார்ட் முன்வைப்பது பிராமணர்களின் வருகைக்கு முன்பு தமிழகத்தில் பூசாரக நிலை அரச நிலைக்கு மேலானதாக கருதப்படவில்லை என்பது.

நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

என்பதுதான் பொதுநியதியாக நிலவியுள்ளது.இதற்கு மாறாக ஆரியமரபில் புனித ஆற்றல்களின் பராமரிப்பும் உற்பத்தியும் பிராமணர்கள் கையில் இருந்துள்ளது.சமஸ்கிருதத்தில் ‘தேவா’ என்னும் கடவுளைக் குறிக்க தோன்றிய சொல் பிற்பாடு மன்னனைக் குறிக்க பயன்பட்டது என்றும் தமிழில் இச்செயல்முறை தலைகீழாக மன்னனைக் குறித்த ‘இறைவன்’ என்ற பதம் பிறகு பெருந்தெய்வத்தைக் குறிப்பதாக மாறிற்று என்றும் ஹார்ட் சொல்கிறார்.இது தமிழ் மரபின் மண்சார்ந்த தொடக்கத்தினையும் ஆரியமரபின் அப்பாலைத் தொடக்கத்தினையும் தொட்டுக்காட்டுகிறது எனலாம்.

அரசன்,தீய ஆற்றல்களை பராமரிப்பிற்குள் கொண்டுவரும் மாபெரும் ஆற்றல் மாற்றியாக மட்டுமின்றி புனித ஆற்றல்களின் உறைவிடமாகவும் கருதப்பட்டான். அவனது உடைமைகளான செங்கோல்,முரசு, கடிமரம்,குடை ஆகியவை அவனது ஆற்றலை பகிர்ந்துகொள்ளும் அரும்பொருட்களாக இருந்தன.மேலும் இச்சின்னங்களில் முறிவு ஏற்பட்டால் அது தீய சகுனமாக பார்க்கப்பட்டது.அதே போல போரில் வெற்றி பெறும் மன்னர்கள் எதிரி அரசனின் காவல்மரத்தை வெட்டிச்சாய்ப்பது,அதில் தனது யானையைக் கட்டிப்போடுவது,அதில் இருந்து தனக்கான முரசினைச் செய்துகொள்வது போன்ற செயல்கள் அவனை வீழ்த்தியதற்கு அடையாளமாக மட்டுமின்றி அவனது குறியீட்டு சக்தியை அழிப்பதாகவும் அமைந்தது.அச்சின்னங்களில் தெய்வம் இருப்பதாகவும் நம்பப்பட்டுள்ளது.முரசில் உறையும் தெய்வத்திற்கு குருதிப்பலியும் கொடைமதுவும் தந்து பூசை செய்யப்பட்டுள்ளது.

காவல் மரத்தைப் பற்றி எழுதுகையில் ஆசிரியர் ”மன்னனது மரத்தின் செயலாக வானத்தையும் பூமியையும் இணைக்கும் பிரபஞ்ச மரத்தை பிரதிபலிப்பது அமைகின்றது.சைபீரிய பூசகர்கள் தமது முரசுகளுக்கு பிரபஞ்ச மரத்தைப் பயன்படுத்தியதைப் போலவே இங்கும் காவல்மரம் முரசு செய்ய பயன்பட்டுள்ளது” என்று எழுதுகிறார். அரச சின்னங்கள் குறித்து இத்தகைய மானுடவியல் பார்வையில் சிந்திப்பது படைப்பூக்கம் மிக்கதாகவும் செழிப்பான சாத்தியங்களைக் கொண்டதாகவும் படுகிறது,சிலவிடங்களில் இப்பிரயோகம் அதீதமாகத் தோன்றினாலும் கூட.மனிதன் குறியீட்டு வாழ்வு கொண்ட விலங்கு.பொருளியல் பார்வை மட்டும் கொண்டு அவனது கதையை முழுக்க விளங்கிக்கொள்ள முடியாது.இத்தகைய தொன்ம குறியீட்டு வாசிப்பு திறந்துகாட்டும் அறிவுகளும் அவனது கதையின் உள்மடிப்புகளைப் புரிந்துகொள்ள அவசியம் என்று நினைக்கிறேன்.

மன்னனுக்கும் புனித ஆற்றலுக்குமான உறவை விவரிக்கும் நோக்கில், தற்கொலைச் சடங்குகள் குறித்து நூலில் விரிவாகப் பேசப்படுகிறது. உதாரணத்திற்கு வடக்கிருத்தல் என்ற சடங்கு.கோப்பெருஞ்சோழன், நெடுஞ்சேரலாதன் போன்ற மன்னர்கள் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவெடுக்கின்றனர்.வடக்கிருத்தல் என்னும் உண்ணாது உயிர்விடுதல், சமணசமய சல்லேகனை கோட்பாடு தொடர்புடையதாக கருதப்படுகிறது(அப்படி இல்லை என்ற கருத்தும் உண்டு).அதிலும் கோப்பெருஞ்சோழன் தனது வீரர்களையும் தன்னோடு உண்ணாநிலை மரணம் சேர வேண்டுகையில் அவன் ஆற்றும் உரை கிட்டத்தட்ட சமண சமயக்கருத்துக்கள் போன்றே தொனிக்கின்றன.ஆயினும் ஹார்ட் பண்டைத்தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படும் இச்சடங்கு அடிப்படையில் உள்நாட்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்கிறார்.காரணம் இவ்வரசர்கள் வடக்கிருத்தலை மேற்கொள்வது சமண கோட்பாடுகள் மேல் உள்ள ஈர்ப்பினால் என்பதை விட தங்களது இக வாழ்வில் அடைந்த அவமானம் கருதியே.சேரலாதன் வடக்கிருப்பது முதுகில் காயம் பெற்றமைக்காக.கோப்பெருஞ்சோழனின் முடிவு தனது மைந்தர்களே தனக்கு எதிராய் போர் தொடுப்பதன் பின்னணியில் எடுக்கப்படுகிறது.இங்கு வடக்கிருத்தல் என்ற வடிவம் வடமரபிற்கு உரியதாக இருந்தால் கூட, இச்சடங்கின்  உள்ளடக்க நோக்கம் மானம் புகழ் பழி நாணம் நட்பு போன்ற பழந்தமிழ் மரபுக்கூறுகள் தொடர்புடையது என்கிறார்.

நீதி பிழைப்பட்டு செங்கோல் வளைந்தவுடன் பராமரிப்பில் இருந்த ஆற்றல் கட்டுப்பாட்டை இழந்து தீமை இழைக்கும் ஆற்றலாக மாறி மன்னனை கொல்கிறது. அதுவரை காத்து வந்த அரசனது ஆற்றலின் பாதுகாப்பை நாடு இழந்து நிற்க, தலைநகர் எரிக்கிறையாகிறது.இச்சிலப்பதிகார சம்பவத்தில் இன்னொரு புனித ஆற்றல் மாற்றியின் பங்களிப்பும் உள்ளது.அது கண்ணகி.நல்லாட்சி நடந்தால் மாதம் மும்மாரி பொழியும் என்பது போலவே தெய்வம் தொழாது கொழுநன் தொழுதெழுபவள் சொன்னாலும் அது பொழியும் அல்லவா.

000

மன்னனைப் போலவே பெண்ணும் பழந்தமிழ்ச் சமூகத்தில் புனித சக்தியின் உற்பத்தியாளராக கருதப்பட்டாள்.கற்பு என்னும் கருத்தாக்கம் இப்புனித ஆற்றலை பராமரிக்கும் பொருட்டே கற்பிதம் செய்யப்பட்டுள்ளது.(அடிப்படையில் இயற்கையின் சக்தியோடு ஒப்புமை செய்யப்படும் பெண்ணின் பாலியல்பையே இப்படி கூறுகிறார் என ஒருவர் வாதிடமுடியும்).கட்டுப்பட்டுத்தப்பட்ட நிலையில் அது கணவனை காக்கும் சக்தியாகிறது(கடைசிக்காட்சி வரை தாலியால் காக்கப்படும் வில்லன்கள் நமக்கு புதியவரல்லர்). கட்டுப்பாட்டை மீறிச் செல்கையில் இவ்வாற்றல் தீய விளைவுகளை ஏற்படுத்தும் விசையாக இயங்குகிறது.ஹார்ட் இவ்விடத்தில் தகழியின் செம்மீன் நாவலை உதாரணம் காட்டுவதில் இருந்து இந்நம்பிக்கை எத்தனை ஆழமாக வேரோடிய ஒன்று என்பதை அறியமுடியும்.

கணவன் இறக்கும்போது இவ்வாற்றல் மீண்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டியதாகிவிடுகிறது.முடிமழித்தலில் இருந்து கண்ணகி அஞ்சிய கைம்மை நோன்பு வரை விதவைகள் மீது சுமத்தப்பட்ட சடங்குகள் யாவும் இவ்வாற்றலை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான உத்திகளாய் எண்ணப்பட்டிருக்கும் என்கிறார் ஹார்ட். பெண்ணிடம் உறைந்துள்ள புனித ஆற்றல் பெரும்பாலும் அவளது மார்பில் தங்குவதாக கருதப்பட்டுள்ளது.எனவே அது அணங்குடை வன முலை எனப்பட்டது.கண்ணகி கைம்மை நோன்பை மறுத்து முலை திருகி எரிந்த போது அணங்கை ஏவினாள் என்று கூறலாம் போல.இப்படியாக நேர்நிலையிலும் எதிர்நிலையிலும் இப்பண்பாட்டின் குவிமையங்களில் ஒன்றாக பெண் அமைந்துவிடுகிறாள்.

காப்பியங்களிலும் நீதி நூல்களிலும் கற்பொழுக்கம் கிட்டத்தட்ட ஒரு சட்டப்பிரிவு போலவும் அட்டசித்திகளில் ஒன்று போலவும் அழுத்தம் தரப்படுகையில் சங்கப்பாடல்களில் அது இல்லறத்திற்கான நடைமுறை நெறி என்ற அளவிலேயே இருப்பதாகப்படுகிறது.இது தொடர்பில் பிற்கால நூல்களில் காணப்பெறும் கண்டிப்பையும் நெறிமூர்க்கத்தையும் அவற்றில் காணமுடிவதில்லை.

பெண்ணின் கற்புத்திறன் குறித்த கருத்தாக்கத்திற்கு வேத கால இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே முதன்மை தரப்பட்டது என்கிறார் ஹார்ட். மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கற்பு குறித்த பார்வை தமிழ்ப்பாடல்களைக் காட்டிலும் வேதகாலச்செய்யுட்களை ஒத்ததாகவே இருப்பதாகவும், வடக்கில் பொதுயுகத்தின் தொடக்கம் வரை வழக்கில் இருந்த நியோக மணமுறை விதவை மணம் போன்றவை அதற்கு பின்னரே விலக்கப்பட்டன என்றும் கூறுகிறார்.தவிர மகாபாரதத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் உள்ள கற்புத்திறத்தை வலியுறுத்தும் செய்யுட்கள் பிற்காலகட்டத்தில் எழுதப்பட்டவை  என்கிறார்.

இதன் மூலம் பெண்மீது சுமத்தப்படும் புனித நம்பிக்கையும் இதர கெடுபிடிகளும் முதலில் பழந்தமிழ் இலக்கியங்களில்தான் காணக்கிடைக்கின்றன என அறியமுடிகிறது.இங்கிருந்தே இக்கூறுகள் சமஸ்கிருத கலாச்சாரத்திற்குள் நுழைந்திருக்கும் என்ற ஊகத்தை ஹார்ட் முன்வைக்கிறார்.இன்னொரு இடத்தில் இத்தைகைய நம்பிக்கைகள் தென்னிந்தியாவில் செழித்திருந்த பெருங்கற்கால தக்காண நாகரித்திற்கு உரியதென்றும் கிமு மூன்றாம் நூற்றாண்டளவில் தொடங்கி ஆரிய இந்தியாவை நோக்கி இவை பயணிக்கத் தொடங்கின என்றும் விளக்குகிறார்.எப்படியோ ஹார்ட்டின் பார்வையில் சமஸ்கிருதத்தில் காப்பிய காலத்தில் இருந்தே இத்தகைய கூறுகளுக்கு அழுத்தம் தரப்பட ஆரம்பிக்கப்படுகிறது(ராமாயணம்?).அதற்கு பிறகே அனுசுயா தேவி மும்மூர்த்திகளை கைக்குழந்தைகளாக மாற்றும் ஆற்றலையும் சாவித்திரி சத்தியவானை எமனிடம் இருந்து மீட்கும் திறமையையும் பெறுகின்றனர்.சதபத பிரமாணத்தில் ஒரு சடங்கியல் நிகழ்வின் பகுதியாக பூசாரகர் யாகம் செய்பவரின் மனைவியிடம் “உனக்கு எத்தனை காதலர்கள் உள்ளனர்..”எனக்கேட்பதாக இருக்க,எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்கந்தபுராணத்திலோ “விதவையே புனிதமற்ற எல்லா பொருட்களைக் காட்டிலும் புனிதமற்றவள்” என்று அறிவிக்கப்படுகிறது.

இதைப்போலவே ’சதி’ வழக்கத்தையும் புனித ஆற்றல் கொள்கையின் பின்னணியில் விளக்கி காட்டும் ஹார்ட் இராமாயணத்தில் சதி பற்றிய குறிப்புகள் இல்லை,மகாபாரத்தில் காணக்கிடைத்தாலும்(இது பிற்காலத்தில் செருகப்பட்டவையாக இருக்கலாம் என்பது விண்டர்நீட்ஸ் கருத்து) அது பழந்தமிழ் இலக்கியங்கள் போல முன்னரே பதிவுபெற்றவை அல்ல என்று கருதுகிறார்.எனவே அதுவும் முற்திராவிட தக்காணப் பண்பாட்டில் தோற்றம் பெற்று பிற்காலத்தில் ஆரிய சமூகத்தால் இன்னும் மூர்க்கமாக தழுவிக்கொள்ளப்பட்ட கூறாக இருக்கவேண்டும் என்பது அவரது வாதம்.

000

சங்க இலக்கியத்தில் சாதி என்ற பேசுபொருள் சர்ச்சைக்குரிய ஒன்று. ஹார்ட் சங்ககால சமூகத்தில் சாதி என்ற அமைப்பு இருந்ததாகவும் அது வர்ணாசிரம முறையில் இருந்து வேறுபட்டதாகவும் குறிப்பிடுகிறார். இடைக்காலத்தில் போல அதிக எண்ணிக்கையிலான பிரிவுகளைக் கொண்டிருக்கவில்லை, அப்பிரிவுகள் இறுக்கமாக பின்பற்றப்படவில்லை என்றாலும் புனிதம் புனிதக்கேடு போன்ற கருத்தாக்கங்களும் உயர்ந்தோர் இழிந்தோர் போன்ற பொதுமையான பிரிவுகளும் இருந்தமையை தொல்காப்பியத்திலும் தொகைப்பாடல்களிலும் காணமுடிகிறது.இடைக்காலத்தில் சாதியம் சிக்கலான கடுமை கொண்ட அமைப்பானதற்கு காரணமாக ஹார்ட் கைகாட்டும் இரண்டு காரணிகள்.ஒன்று பொருளிய வளர்ச்சியின் பாற்பட்ட நகர்மயமாதல் மற்றொன்று பிராமணர்களின் மேலாதிக்கம்.

ஹார்ட் தனது அதே கருதுகோளைப் பயன்படுத்தி இயற்கையான புனித ஆற்றலைக் கட்டுக்குள் கொண்டுவந்து கையாளுபவர்கள் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர் என்று முன்வைக்கிறார். பழந்தமிழ்நாட்டின் பெரும்பாலான தெய்வங்கள் ஏற்கனவே குறித்தது போல தீங்கிழைக்கும் சாத்தியம்  கொண்டவை என்பதால் அதன் பராமரிப்பாளர்களான பூர்வீக பூசாரகர்களும் அஞ்சப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களது இந்த அபாயமான பணிநிமித்தம் தீய ஆற்றலின் தாக்கத்தில் இருந்து விலகியிருக்க இதரர் எண்ணியிருப்பர் என்றும் ஹார்ட் தனது கருத்துருவாக்கத்தை நீட்டிக்கிறார்.

மேலும் முரசறைபவர் வெறியாடுபவர் போன்ற புனித ஆற்றலோடு தொடர்புடைய சடங்குகளை தொழிலாகச் செய்யும் மக்களும் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்.அதாவது கட்டுபடுத்தப்படாத நிலையில் இருக்கும் ஆற்றலை கட்டுக்குள் கொண்டு வந்து அரசன் போன்ற இதர சமூக நிறுவனங்களின் ஆளுகையின் கீழ் ஒப்படைத்தல் “தாழ்த்தப்பட்ட” பிரிவினரின் பணியாக இருந்திருக்கும் என்பது அவரது முன்வைப்பு.புலையன் இழிசினன் போன்ற அடையாள மொழிகளை ஆராயும் அவர் இப்பகுப்பிற்குள் வேலன் கடம்பன் போன்ற சடங்கியல் பணி செய்தோரை மட்டுமின்றி பாணர் போன்ற நிகழ்த்துக்கலைஞர்களையும் சலவைத்தொழிலாளர் ஈமச்சடங்கு செய்வோர் போன்ற இதர தொழிற்பிரிவினரையும் உள்ளடக்குகிறார்.

இது நவீன கால எதார்த்ததின் பார்வையில் ஏற்கத்தக்கதாய் இருக்கிறது. விழாக்கொடைக்கு வரும் கிராமிய கலைஞர்களையும் சாவுக்கு வரச்சொன்ன வெட்டியான்களையும் ஒரு ஊர் நடத்துகிற விதத்தை இப்போதும் நாம் பார்க்கிறோம்.ஆனாலும் சங்க இலக்கியத்தின் பின்னணயில் ஹார்ட்டின் வாதம் முழுக்க ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றா என்பது விவாதத்திற்குள்ளானது. பாணன்,வேலன்,பறையன் போன்ற பெயர்கள் அவர்களது செய்தொழிலின் பாற்பட்ட அடையாள மொழிகளாக ஏன் இருக்கக்கூடாது.அவர்களது நிலையை அவர்தம் பணியின் பொருளியல் இடமாக ஏன் கருதக்கூடாது?மேலும் அவை பிறப்பின் அடிப்படையில் தீர்மாணிக்கப்பட்டவை என்பதற்கான சான்றுகள் என்ன என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.பேராசிரியர் விஸ் ராஜம் தனது ”சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்னபிற” நூலில் புலையன் போன்ற வார்த்தைகளின் பொருள் கொள்ளலியே பிழை இருப்பதாகவும், இவர்கள் எவரும் கீழ்நிலையில் வைத்து நடத்தப்படவில்லை என்றும் தீண்டாமை போன்ற நடைமுறைகள் சங்ககாலத்தில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்றும் மறுத்துரைக்கிறார்.சமூகவெளியில் இவர்களுக்கு தடைகளோ கட்டுப்பாடுகளோ இருந்திருக்குமா என்பது சந்தேகமே.தொழிலைக் குறிப்பிட்டு சுட்ட பயன்பட்ட இவ்விளிகளில் சில பிற்பாடு தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பெயர்களாயின, அப்படியே தற்போதும் நீடிக்கின்றன என்பது உண்மை.டிடி கோசாம்பி ஓரிடத்தில் பண்டைய இந்தியாவை புரிந்துகொள்ள நமக்கிருக்கும் மிகப்பெரிய சான்றாதாரம் இன்றைய இந்தியா என்ற தொனியில் கூறிய ஞாபகம்.அது சரியென்றே படுகிறது.ஆயினும் நமது கால எதார்த்ததின் அனுபவ அறிதல்களைக் கொண்டு சங்க இலக்கிய சமூக எதார்த்ததை முழுமையாகப் புரிந்துகொள்வதில் இடைவெளிகள் இருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

புலவர் என்போர் ஏனைய நிகழ்த்துக்கலைஞர்களிடம் இருந்து வேறுபட்ட பிரிவினர் என்கிறார்.வரிவடிவம் அறிமுகமாகி எழுத்தறிவு வளர்ந்த பிறகு உருவாகிவந்த புதிய பிரிவினரான இவர்களால்தான் சங்க இலக்கியம் எழுதப்பட்டுள்ளது. பாணர்களின் கூற்றாகப் புலவர்கள் இயற்றிய நிறைய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உண்டு.ஆயினும் பாணர்களால் சங்கப்பாடல்கள் எழுதப்படவில்லை.பிற நிகழ்த்துக்கலைஞர்களினும் புலவர்கள் உயர்ந்த நிலையில் வைத்து நடத்தப்பட்டனர். அரசர்களுக்கு ஆலோசனை வழங்கும் இடத்திலும் அவர்களை இடித்துரைக்கும்  உரிமை பெற்றிருந்ததையும் காண்கிறோம்.அதே நேரம் இதரக் கலைஞர்களைப் போல அவர்களுக்கும் அடிப்படையில் பரிசில் வாழ்க்கையே வாய்த்துள்ளது.

ஒருவகையில் புனித ஆற்றல் கருதுகோள் அடிப்படையிலான இந்த ஆய்வு வழியாக ஹார்ட் பழந்தமிழ் சமூகத்தின் கலாச்சார உருவாக்கம் பற்றிய ஒரு பெருங்கதையாடல் எடுத்துரைப்பைச் செய்திருக்கிறார்.இது ஆய்வுப்புலத்தில் எப்படி அணுகப்படுகிறதோ தெரியாது ஆனால் ஓர் எழுத்தாளனாக இலக்கிய வாசகனாக இத்தகைய அணுகுமுறை சங்க இலக்கியப் படைப்புலகிற்கு கூடுதலான குறியீட்டு ஆழத்தை வழங்குவதுடன், மானுடவியல் சாந்த கோணங்களில் பண்பாட்டை விரித்து பேசுவதற்கும் இன்னும் சுதந்திரமான படைப்பூக்கத்துடன் பழந்தமிழ் இலக்கிய வெளியை புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பமைத்து தருகிறது என்றே எண்ணுகிறேன்.எல்லா பண்டைய சமூகங்களைப் போலவே பழந்தமிழ் சமூகத்திலும் புராதன சமூகக்கூறுகள் கணிசமாகக் கலந்திருந்தன என்பதை சங்க இலக்கியம் மூலம் அறியமுடிகிறது.அத்தகைய புராதன சமூகக் கூறுகளைக் குறித்து சிந்திக்க, பண்பாட்டு அமைப்புகளின் தோற்றுவாய்களை கண்டடைய மானிடவியல் குறியீட்டியல் போன்ற துறைசார் கருவிகளும் நிகழ்வியல் பொருள்கோளியல் போன்ற கவித்துவ அணுகுமுறைகளும் உதவிகரமானவை.ஏனெனில் எலியாடே கூறுவது போல அக்காலத்திய மனிதர்களைப் புரிந்துகொள்ள அவர்கள் உலகைப் புரிந்துகொண்ட விதத்தை புரிந்துகொள்வது அவசியமானது.

000

அகவுலகம் மற்றும் புறஎதார்த்தம் இவற்றிக்கிடையான இயைபின்மை சங்க அழகியல் கருத்தியலின் முக்கியமான முடிச்சு.அக உணர்ச்சிநிலைகளின் எதிரொளிகளை புறக்காட்சிகளில் காண்பதன் மூலமும், புற எதார்த்தத்தை அதன் அமானுஷ்ய அந்நியத்தன்மையில் இருந்து விடுவித்து அவற்றுக்கு மனிதாயப் பொருளேற்றி அகவெளியில் இடமளிப்பதன் மூலமூம் இச்செயல்பாடு பிரக்ஞை மற்றும் பொருண்மை உலகிற்கு இடையான இயைபின்மையை அல்லது வேறுபாட்டை தணிக்கிறது. இயற்கையின் அழகினோடு சேர்த்து அதன் பயங்கரத்திற்குள் இருந்தபடி வாழ்க்கை நடத்திய ஒரு சமூகத்தின் மனத்தில் இது  எந்தவிதமான  விளைவை ஏற்படுத்தி இருக்கும் என ஊகிக்கமுடியும்.

அகப்பாடல்களின் மையம் உரிப்பொருள்.அதாவது உணர்ச்சிநிலை வகைமை.அதுவே அதன் உந்துவிசை.புறத்திற்கு எண்ணம் இல்லை.புறம் இன்றி அகத்தின் எண்ணம் வெளிப்பட வழி இல்லை.மொழி என்பது அடிப்படையில் புறம்தான்.அகத்தில் வளிமண்டலம். புறம் தன்னளவில் ஒரு மாபெரும் ஊமை உயிரென விழித்துள்ளது(சொல்லின்மை மொழியின்மை அன்று).அகம் மொழியின்றி தத்தளிக்கிறது.இரண்டும் சந்திக்கையில் இரண்டுமே வெளிப்பாடு கொள்கிறது.பக்தி வழியே தன்னிலையும் பரநிலையும் வெளிப்படுவது போல. உணர்சிகரத்தை ஏந்தி நிற்கும் கவிஞர் ஒருத்தி புறவுலகைக் காண்கிறாள்.தனது உணர்ச்சிகளுக்கு அனுபவத்திற்கு மொழியாக மாறும்படி புறவுலகப்பொருட்களை உயிர்த்தெழுப்புகிறாள்.அகமும் புறமும் தொட்டிலங்கும் கரையில் சொற்கள் விளைகிறது.மொழி என்பது இவ்விதம் அனுபவத்திற்கு பெயரிடுவதில் இருந்து தொடங்குகிறது.சங்க கவிதைகள் முழுக்க புறவுலகச்சித்திரிப்பு நிறைந்துள்ளதைக் காண்கையில் அது அகம் தன் உணர்ச்சிக்கு,தனது நிலைக்கு,வேண்டலுக்கு பெயரிடும் பெருவிருப்பில் பொங்கி நிறையும் வெள்ளம் என்று சொல்லத்தோன்றுகிறது.அதானாலேயே சங்கப்பாடல்களின் படிம மொழி இன்னும் குறியீடுகளாக மாறாத நிலையில் மூலநிலையிலேயே தொழிற்படுகிறது.அதில் வரும் புலி குறியீடு அல்ல எதார்த்தம் மற்றும் படிமம்.நமக்கு, புலி ஓர் உருவகம் மற்றும் குறியீடு.

தொகைப்பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் அகவற்பாவில் பாடப்பட்டது.இவ்வடிவம் பிற்காலத்தில் ஆசிரியப்பா என பெயர்பெற்றது.இடைக்கால நூல்களின் வழி கவிஞன், கருத்துகள் கூறும் பணியை ஏற்றுக்கொண்டதையே இது காட்டுகிறது.ஆனால் தொடக்கத்தில் கவிஞனின் பணி அழைப்பதாகவே இருந்துள்ளது. கல்லில் ஆற்றில் குகையில் என புனித இடங்களில் உறையும் தெய்வங்களை அழைப்பதாக இது தொடங்கியிருக்க வேண்டும். அகவல், பட்சி அழைப்பையும் குறிக்க பயன்பட்டது(பறவையின் அழைப்பு யாருக்கானது எதற்கானது?) அவ்வழைப்பு வருவதுரைக்கும் வாகனமாகவும் பார்க்கப்பட்டது எனில் அப்படியொரு உள்ளமைப் பொருளும் கவிதையின் சாரத்தில் ஒளிந்திருக்க வேண்டும்.எனவே சங்க கவிதையியலின் மூலக்கூறு நிலையில் அழைத்தலும் பெயரிடுதலும் ஆன இரு பணிகள் முதன்மையானவை எனக் கருதலாம்.

சங்கப்பாடல்களின் அழகியல் எனப் பொதுமைபடுத்தி ஒன்றை பேசுமுடியாது.தொகைநூல்களுக்கு உள்ளேயே கூட பலவான வகைமைகள் உள்ளன.மரபின் கட்டுறுத்திக்குள் இயற்றப்பட்டிருந்தாலும் அவை பல நூற்றாண்டுகளின் காலவெளியில் படைக்கப்பட்டவை.புறக்கவிதைகளுக்கும் அகக்கவிதைகளுக்கும் இடையே நோக்கத்திலும் கவித்துவ விளைவாக்கத்திலும் வேறுபாடுகள் உள்ளன.இவை படைத்தளிக்கப்பட்ட வெளியே கூட வேறுவேறாக இருக்கக்கூடும்.என்னளவில் அகக் கவிதைகள் செல்வாக்குடைய உயர்வகுப்பினைச் சேர்ந்த அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் மனைவெளிகளில் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.புறப்பாடல்கள் போர்க்களம் தொடங்கி அரசவை வரையான அரசியல் அரங்கில் பாடப்பட்டிருக்கலாம்.தவிர யாதும் ஊரே பாடலைப் போன்றது அல்ல கலித்தொகையில் உள்ள நீண்ட விவரணைக்கவிதைகள்.பரிபாடல் பாடுவதற்கென்றே இயற்றப்பட்டவை போல பண்ணும் சேர்த்து அடிக்குறிப்பளிக்கப்பட்டுள்ளது.நெடும்பாடல்களின் நோக்கமும் தன்மையும் வேறானது.எனவே சங்ககாலக் கவிதைகளின் அழகியலை வரையறுக்க முனைகையில் அதன் பன்மைத்தன்மை கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

*

சங்க இலக்கிய படைப்புருவாக்கத்தில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன. ஒன்று அதன் நாட்டார் மரபு மற்றது செவ்வியலாக்கத்தின் அம்சம்.சங்க இலக்கியத்தை வாய்மொழி இலக்கியம் என்று சொல்லும் ஆய்வாளர்களும் இருக்கின்றனர்.அதை மறுப்பவர்களும் உண்டு.ஆயினும் இக்கருதுகோளின் வளர்ச்சிப் போக்கை சற்று பார்க்கலாம். முதன்முதலில் இக்கருத்து விரிவான சான்றாதாரங்களுடன் ஆய்வுப்பூர்வமாக க.கைலாசபதி அவர்களால் தனது வீரயுகக் கவிதை நூலில் முன்வைக்கப்பட்டது. தமிழ் ஆய்வுலகிற்கு பல புதிய திறப்புகளையும் எல்லைகளையும் அறிமுகப்படுத்தியது என்று அறிஞர்களால் சுட்டப்படும் ஆய்வேடு அது.  

கைலாசபதியின் வாதத்தை இப்படி சுருக்கமாக தொகுக்கலாம்: ஹோமரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்த மில்மன் பாரியும் லார்டும் அவை முன்னர் எண்ணியிருந்தது போல எழுத்திலக்கியங்கள் அல்ல மாறாக பாடற்கலைஞர்களால் பாடப்பட்ட வாய்மொழி இலக்கியங்கள் என்ற புரட்சிகரமான கருத்தை முன்வைத்தனர்.அதை இலக்கிய பிரதியாக அல்லாமல் நிகழ்த்து கலை சார்ந்த வாய்மொழி படைப்பாக கருதுமாறு அது ஆய்வாளர்களையும் இலக்கிய விமர்சகர்களையும் கோரியது. வாய்மொழிப் படைப்பாக்க முறையின் முக்கிய கூறாக கூறியது கூறல் பண்பைச் சுட்டிக்காட்டும் அவர்கள் மீள மீள வரும் அடைமொழிகள்(Epithet), சொற்றொடர்கள் போன்ற செய்யுள் அமைப்பின் விதிகளுக்கு பொருந்துமாறு அல்லது பாடலின் இசைமைக்கு ஏற்ப அமையப்பெறும் ஆயத்த சொற்பிரயோகங்களை வாய்ப்பாடுகள்(formula) என்றனர்.இதுதவிர வாய்மொழி ஆக்கங்களில் அடிக்கருத்துக்களும்(Themes) திரும்ப திரும்ப வரும் இயல்புடையவை. இத்தகைய வாய்மொழிமரபின் வாய்ப்பாட்டு கூறுகள் நிறைந்து காணப்படுவதால் கிரேக்க தொல் இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று அவர்கள் அடையாளப்படுத்தினர்.

கைலாசபதியின் வீரயுகக் கவிதை நூல் அடிப்படையில் ஓர் ஒப்பியல் ஆய்வு ஆகும்.கிரேக்க படைப்புகளோடு சங்க இலக்கியத்தை ஒப்பிட்டு சங்கத்தொகை பாடல்களும் வாய்ப்பாட்டு மரபுக்கூறுகளை கொண்டிருப்பதால் வாய்மொழி இலக்கியங்களாகப் படைக்கப்பட்டனவே என்ற முடிவிற்கு வருகிறது அவ்வாய்வு.சங்க இலக்கிய நூல்களை படிக்கும் எவரும் அதில் பல அடைமொழிகள் சொற்றொடர்கள் மீள மீள பல்வேறு பாடல்களில் பயின்றுவருவதை கவனித்திருக்கலாம்.உரையாசிரியகள் இத்தகைய இடங்களில் அவை வேறெந்தெந்த பாடல்களில் வருகின்றன என்ற தகவல்களை அடிக்குறிப்புகளாக தந்திருப்பதைக் கண்டிருக்கலாம்.உதாரணத்திற்கு ’நனந்தலை உலகம்’ ’சிறு புன் மாலை’ போன்ற அடைமொழிகள் வெவ்வேறு தொகைநூல்களில் பலவிடங்களில் இடம்பெற்றுள்ளன.மேலும் கைவளை கழல்தல்,பசலை படர்தல் போன்ற நிகழ்வுகளும் வழக்கமானவை.இத்தகையவற்றை அவர் வாய்ப்பாட்டு கூறுமுறைக்கு உதாரணங்களாக அடுக்குகிறார். துறைப்பகுப்புகளை பொதுவான ஆயத்த நிலை அடிக்கருத்துக்களுக்கு உதாரணங்களாக கொள்கிறார். அரசனின் போர் வெற்றியை பாடுவதில் இருந்து தலைவியின் கூந்தலை வர்ணிப்பது வரை இது பல்வேறு திட்டவட்ட பாடுபொருள் அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

பல தலைமுறை வாய்மொழி பாடகர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இத்தகைய ஆயத்த அடிக்கருத்துகளாலும், மரபுநிலைப்படுத்தப்பட்ட செய்யுளாக்க முறைமைகளாலும் ஒரு வாய்மொழிப்பாடகருக்கு,அதாவது பாணருக்கு, பாடல்களை புனைவதற்கு பெரியளவில் பிரக்ஞைபூர்வமான உழைப்பை செலுத்த வேண்டியிராத நிலை அமைகிறது.மேலும் அறிந்த பாடல்களை எளிதில் மனத்தில் வைப்பதற்கான வசதியையும் இது உருவாக்கி அளிக்கிறது.எனவே மேடைகளில் புதிய பாடல்களை பாடுவதற்கும்,அரங்கில் விரைவாக ஆசுகவியாய் புனைவதற்கும் அவர்களுக்கு இவை ஏதுவான துணைக்கருவிகளாக கைவசம் இருந்திருக்கும்.இவை ஒரு பயிற்சிநிலை பாடத்திட்டமாக பயிலப்பட்டிருக்கலாம் என்றும் கைலாசபதி கருதுகிறார்.

அவரது இன்னொரு முக்கிய முன்வைப்பு இப்படைப்புகள் காட்டும் காலம், பண்டைய கிரேக்க இலக்கியங்களின் காலம் போன்றதான வீரயுகக் காலம். வீரயுகம் என்பது மௌரிஸ் பௌரா, சாட்விக்  போன்ற ஆய்வறிஞர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு கருதுகோள்.ஒவ்வொரு சமூகமும் தனது பரிணாம வளர்ச்சியின் ஏதோவொரு காலத்தில் வீரயுகம் என்ற கட்டத்தை கடந்துவந்திருக்கும். வீரர்கள்,அரசர்கள் நாயகர்களாக மையநிலை பெற்றிருந்ததுடன் அவர்களுக்கான விழுமியங்கள் சமூகத்தில் பெருமளவு ஏற்புடையவையாக எண்ணப்பட்டிருந்த ஒரு காலகட்டம் என்று அதனை விளக்கலாம்.அத்தகைய காலகட்டங்களில் படைக்கப்பட்டதே இலியட், ஒடிசீ, ஐஸ்லாந்திய சாகாக்கள், பேயுல்ஃப் போன்றவை. சங்க பாடல்களும் அத்தகைய காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் படைப்பிலக்கியமே என்பது கைலாசபதியின் வாதம்.

ஹார்ட் இவற்றுள் முதல் கருதுகோளான சங்க இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்கள் என்ற வாதத்தை மறுக்கிறார். அதற்கு அவர் குறிப்பிடும் காரணங்கள்:ஒன்று, லார்டு பாரி ஆகியோரின் விதிகளின்படி கிரேக்க வாய்மொழி பழம்பாடல்கள் யாவும் காப்பிய பாடல்கள்(Epic Poetry).ஒரு பெருங்கதையை பல கிளைக்கதைகளுடன் விரித்து விவரிக்கும் செய்யுள் வகைமையவை.ஆனால் சங்க பாடல்கள் பெரும்பாலும் சிறியனவாகவும் நூறு அடிகளுக்கு மிகாமல் உள்ள கவிதைகளாகவும் உள்ளன.எத்தகைய பெருங்கதை விவரிப்பும் இல்லாத இவற்றை, பாடல்கலைகளைஞர்களால் பல பணி நேரத்திற்கு நாட்கணக்கில் பாடப்பட்ட இலியட் போன்ற காப்பிய பாடல் வகைப்பாட்டிற்குள் பொருத்த இயலாது.

இரண்டாவது,சங்கக்கவிதைகளின் சிக்கற்பாடு(Complexity).வாய்மொழி இலக்கியம் சிறிய ‘சீரற்ற இடைவெளியில் அடிகடந்து நீளும் வாக்கியங்களால்(Non–periodic Enjambment)’ ஆன எளிய நடையைக் கொண்டவை.சிறிய சிறிய வாக்கியங்களை சேர்த்து கோர்த்தபடியான தாளகதி கொண்ட நடை அது.மாறாக சங்கப்பாடல்கள் எழுத்திலக்கிய நடையான ‘சீரான இடைவெளியில் அடிகடந்து நீளும் வாக்கியங்களால் (Periodic Enjambment)’ ஆனதாக உள்ளன.சில இடங்களில் இருபது முப்பது வரிகளுக்கு மேலாக நீண்டு செல்லும் வாக்கியங்களை உடையதாகவும், சிறிய பாடல்களே கூட எளிதில் புரியாதபடி குறியீட்டு தளங்கள் கொண்டவையாகவும் உள்ளன. அதனாலேயே இப்பாடல்கள் அவையோர்களின் கற்பனையில் வளர இடமளிக்கும் பொருட்டு, பரதநாட்டிய, சாஸ்திரீய சங்கீத அரங்குகளில் நிகழ்த்தப்படுபவை போல வரிவரியாக மீண்டும் மீண்டும் பாடப்பட்டதுடன் நடனத்தோடு நாடகப்பாடல்களாகவும் நிகழ்த்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது .

இப்பொருள் தொடர்பில் ஹார்ட் வந்துசேரும் முடிபு இதுதான்:பாணர் உள்ளிட்ட பழைய பாடல்மரபின் நிகழ்த்துக்கலைஞர்களிடம் பல்லாண்டு பயன்பாட்டில் இருந்துவந்த வாய்மொழி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு, எழுத்தறிவு பெற்ற புலமையாளர்களால் (அரசரில் இருந்து பல்வகைப்பட்ட மக்கள் தரப்பைச் சேர்ந்தவர்களும் உண்டு இதில்)செவ்வியல் மரபு ஒன்று உருவாக்கப்பட்டு அதனை அடியொற்றி இயற்றுப்பட்டதுதான் சங்க தொகைப்பாடல்கள்.

000

தமிழ்ச்செவ்வியல்கள் நூலின் இரண்டாவது பகுதி பழந்தமிழ் இலக்கியங்களை அதற்கு இணையான இந்தோ ஆரிய இலக்கியங்களோடு ஒரு ஒப்பீட்டு வாசிப்பை நிகழ்த்துகிறது.இது உட்பொருள் உத்தி, யாப்பியல் வகைகள், கவிதையியல் மற்றும் பண்பாட்டு கூறுகள் ஆகிய மூன்று பொருண்மைகளைக் கொண்டு செய்யப்படுகிறது.

இதில் ஹார்ட் முன்வைக்கும் அடிப்படையான கருதுகோள்:பொதுயுகத்திற்கு வெகுகாலம் முன்னரே தென்னிந்தியாவில் தனித்தன்மை கொண்ட முற்திராவிட அடித்தளம் கொண்ட மூலத் தக்காண பண்பாடு ஒன்று இருந்தது.அப்பண்பாடே இன்று காணப்படும் பெருங்கற்பண்பாட்டை உருவாக்கியது.இதுவே பழந்தமிழ் பண்பாட்டையும் தோற்றுவித்தது. மகாராஷ்டிரியம் போன்ற மத்திய இந்திய பகுதிகளில் இதுவே ஆரிய பண்பாட்டுடன் கலந்து வேறொரு செல்நெறியான வட இந்திய பண்பாட்டினையும் உருவாக்கிற்று.ஒரு பண்பாட்டில் இருந்து இன்னொன்றுக்கு நேரடியாக பரிமாற்றங்கள் நடந்தன என்பதை விட இரு பண்பாட்டின் ஆதாரங்களும் ஒற்றை மூலப்பண்பாடாக இருக்கக் கூடும் என்பது அவரது ஊகம்.

உள்ளுறை உவமம்,இறைச்சி,படிமம்,குறியீடு போன்ற கவிதையியல் உட்பொருள் உத்திகள்(Technique of suggestion) எப்படி தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் செயல்பட்டுள்ளன என்பதை உதாரணங்களோடு எடுத்துரைக்கையில் பழந்தமிழ் கவிதைகளில் இதன் பயன்பாடு மிக சிறப்பாக அமைந்துள்ளதாக கூறுகிறார்.மாறாக சமஸ்கிருத காப்பியங்களில் உட்பொருள் உத்திகள் அரிதாக தென்படுகின்றன என்றும் .மகாபாரத்தில் அப்படி இடம்பெறும் படிமவியல் பிரயோகங்களும் எளிய நேரடியான ஒப்புமைகளாகவே உள்ளன என்றும் சங்க பாடல்களில் உள்ளது போல் சிக்கலானதாகவும் சிந்திக்கும் தோறும் வளர்வதாகவும் வாசகக் கற்பனையை வேலை வாங்குவதாகவும் இல்லை என்றும் கூறுகிறார்.

சத்தசஈ பாடல்களில் இந்த உத்திக்கூறுகள் இடம்பெற்றிருந்தாலும்,காளிதாசரின் படைப்புகள் வழியாகவே இவை சமஸ்கிருதத்தில் முழுச்சிறப்பை அடைகின்றன என்று கருதுபவர் அந்த அடிப்படையில் இக்கவிதையியல் உட்பொருள் உத்திகள் தெற்கில் இருந்து சமஸ்கிருத மரபிற்கு சென்றிருக்கக் கூடும் என்று ஊகிக்கிறார்.தனது பேசுபொருள்களில் ஒன்றாக கற்பு கொள்கைகையை நிறுத்துவதால்  திராவிட கூறுகளின் தாக்கம் கூடுதலாக உள்ள சமஸ்கிருத காப்பியமாக கருதும் வால்மீகி ராமயாணத்தில் ஒப்பிட்டளவில் இக்கூறுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன என்பதும் இக்காரணம் கருதியே ராமாயணம் ஆதிகாவியம் எனப் பெயர் பெற்றது என்பது அவரது வாதம்.ஏனெனில் இந்து புராணிக மொழிபின் படி திரேதா யுகத்தில் ராமயணமும் துவாபர யுகத்தில் மகாபாரதமும் நடப்பதாக சொல்லப்பட்டாலும் மகாபாரதமே இரண்டில் பழைய நூலாக கருதப்படுகிறது.இதற்கு பின்னான அஸ்வகோஷரின் புத்தசரிதத்தில் இக்கவிதையியல்கூறுகள் இன்னும் விரிவாக இடம்பெறுகின்றன.ஆனால் இவை எல்லாமே சங்க இலக்கியம் போலன்றி கதையோட்டத்தை நோக்கமாகக் கொண்ட காப்பிய ஆக்கங்கள்.

ஹார்ட் கூற்றுப்படி மூலத்தக்காண பண்பாட்டில் இருந்து முளைவிட்ட முதற்பெரும் கவிதை வெளிப்பாடுகள் இரண்டு.ஒன்று சங்க இலக்கியம் மற்றது சத்தசஈ என அழைக்கப்படும்,காஹா சத்தசஈ. சத்தசஈ(எழுநூறு) ஏறத்தாழ சங்க இலக்கியம் எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் அகப்பாடல் தொகைநூல். தென்கோடி பிராகிருதமான மகாராஷ்ட்ரீயத்தில் இயற்றப்பட்டுள்ள நூலான இதனை வாசிக்கும் தமிழ் இலக்கிய வாசகர் உடனடியாக சங்க இலக்கியத்தோடு ஒப்புமை படுத்த தூண்டப்படுவதுடன், சங்க படைப்புகள் எவ்வளவு உயரத்தில் உள்ளன என்பதையும் உணர முடியும்.

சத்தசஈ கவிதைகள் ஒரு படிமத்தையோ அனுபவத்தின் ஒரு கீற்றையோ வீசுவதாக இருக்க,சங்க கவிதைகளின் கவித்துவ விளைவு பொருள்விரிவையும் ஆழத்தையும் இலக்காக கொண்டிருக்கிறது.அதாவது சங்கப்பாடல்களில் வெளி இருக்கிறது. கவித்துவ வெளியின் ஒவ்வொரு கணுவும் அதிர்வுகளின் கற்பனைக்கான பொத்தான் ஆகிவிடுகிறது. அது வாசிப்பிற்கு ஏற்ப விரிந்து செல்லும் தன்மையையும், நுண்விவரனைகளில் எந்த இடமும் கவித்துவ படிமமாகிவிடும் சாத்தியத்தையும் வழங்குகிறது.படிமங்களின் வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கை எதிரெதிர் ஆடிகளின் பிரதிபலிப்பு போல முடிவற்றதாய் தொட,ர பிராகிருத கவிதைகள் பெரும்பாலும் சிறியதாகவும் ஒரு புனைந்துரை, ஒரு சேதி அல்லது நவீன சித்தரிப்பு கவிதைகளின் ஈற்றடி முடிச்சு போல ஒரு சொடுக்கினை மட்டுமே கொண்டுள்ளன. தமிழில் இவை பல்லாண்டுகளாய் மெருகேற்றப்பட்டு, மரபுக்கருவிகள் என மாறும் வண்ணம் செவ்வியலாக்கம் நடைபெற்றிக்க வேண்டும்.எனவே தொகைப்பாடல்களோடு ஒப்பிடுகையில் சத்தசஈ பாடல்கள் நாட்டார் மரபோடு நெருக்கமான படைப்புகளாக உள்ளதை ஒருவர் அறியமுடியும்.

சத்தசஈ சங்கப்பாடல்கள் போலவே சாமான்ய வாழ்வுநோக்கில் அன்றாட வாழ்வியல் செய்திகளைக் கொண்டதாகவும் கூற்றுகளாகவும் இயற்றப்பட்டுள்ளன ஆனால் வெளிப்படையான கூற்றுகளாக. சத்தசாயியல் காணப்படும் மனைவியின் கூடாவொழுக்கம், ஆண்களின் பலதாரமணம்,புனிதநீக்கம் பெற்ற இச்சை சார்ந்த விடயங்கள் சங்கப்பாடல்களில் இல்லாதவை.சுபாஷித வகைமையைச் சேர்ந்த பிற்காலச் சமஸ்கிருத தொகுப்புகளிலும் இத்தகைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தவிர பொதுவாகவே பாலியல் வாழ்வு பற்றியும் இச்சையின் விளையாட்டு பற்றியும் வெளிப்படையான பேச்சுகளை சமஸ்கிருத தன்னுணர்ச்சி பாடல் மரபில் காணமுடிகிறது.போலவே வேடிக்கை கூற்றுகள்,உபதேசங்கள் நகைச்சுவைகள்,சீண்டல்கள் போன்றவற்றையும்.தமிழில் இத்தகையவற்றை பிற்காலத் தனிப்பாடல் திரட்டில்தான் பார்க்கமுடிகிறது.இந்த வேறுபாட்டிற்கும், ஹார்ட் கூறுவது போல இரு கலாச்சாரங்களுக்கும் இடையில் பெண் பற்றிய நம்பிக்கையில் உள்ள வேறுபாட்டிற்கும் அவற்றின் நாட்டார் மரபுச்சார்பிற்கும் தொடர்பு இருக்கலாம்.(தமிழ் கிராமிய கலைகளிலும் பாலியலை வெளிப்படையாக பேசும் வழக்கம் இருக்கிறது.ஆனால் அவை ஏன் தமிழின் எழுத்திலக்கியத்திற்குள் பதிவாகாது போயின)சமஸ்கிருத கவிதை மரபில் உள்ள அகவாழ்வைப் பற்றி வெளிப்படையாகப் பேசும் இந்த பாங்கு அக்கவிதைகள் உட்பொருள் உத்திகளை பெரிதும் சார்ந்திருக்க தேவையிராத நிலையை ஏற்படுத்தி இருக்கும் எனக்கூறலாம்.

பிராகிருத சத்தசஈ வழியே அறிமுகம் கொண்ட இவ்வுட்பொருள் உத்திகள் காளிதாசரின் வருகையோடு சமஸ்கிருதத்தில் முழுவளர்ச்சி பெறுகிறது.தமிழ்,சத்தசஈ இரண்டும் அல்லாத சமஸ்கிருத காவிய மரபுகளின் தொடர்ச்சியாகவே காளிதாசர் எழுதினார் எனினும்,அவர் பிராகிருதம் உட்பட்ட சமஸ்கிருதமல்லாத மரபுகளை அறிந்தவராக இருந்துள்ளார்.எனவே அவரிடம் இருவேறு மரபுகளான ஆரிய திராவிட இலக்கிய பாரம்பர்யங்களின் ஒருங்கிணைப்பு கலவை நிகழ்கிறது என்று கூறும் ஹார்ட்,வடக்கு தெற்கு என்று பிரித்தறியமுடியாதபடிக்கு தனக்கேயான ஒரு கவிதையைக் கண்டுபிடித்தது அவரது மேதமைக்கான சாட்சியங்களில் ஒன்று என்கிறார்.கம்பனிலும் இது உள்ளதாகக் கூறப்படுவது.

000

கீழடி

இவ்விரண்டு இலக்கிய மரபுகளும் ஒரே ஆதாரமான தக்காண பண்பாட்டில் இருந்து கிளைத்திருந்தாலும் எப்படி உட்பொருள் உத்தி முறைகளில் வேறுபடுகின்றன என்பதை ஹார்ட் இன்னும் நுணுக்கமான ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்கிறார்.அதற்கான காரணம் மொழியின் கட்டமைப்பு அளவிலேயே இருக்கக் கூடும் என்ற முடிவிற்கு வருகிறார்.தமிழ் தனது மொழியமைப்பில் உள்ள சில தனித்தன்மைகள் காரணமாக இலக்கியப் பயன்பாட்டுத்தளத்தில் பிரத்யேக விதங்களில் வரம்புக்குட்படுகிறது எல்லா மொழியையும் போலவே(உ.பெயரெச்சத்திற்கும் பெயருக்கும் இடையில் இறுக்கமான உறவு அமையாமை).இத்தகைய காரணங்களால் எளிய விளக்கமுறைப்பாடல்கள் ஆங்கிலத்திலோ சமஸ்கிருதத்திலோ இருப்பதைக் காட்டிலும் தமிழில் அரிதாகவே காணமுடிகிறது என்கிறார்.சமஸ்கிருத பாடல் பொதுவாக அதன் சுருக்கத்தாலும் எடுத்துரைப்பு முறையாலும் திளைப்பைத் தருவது போன்று தமிழ்ப்பாடல்கள் தருவதில்லை என்றும் அவற்றின் கவிதை விளைவு வேறானது என்றும் எடுத்துரைக்கிறார்.சமஸ்கிருதத்தில் செய்யுளின் ஒவ்வொரு பகுதியையும் புரிந்து ஒன்றிணைத்து பார்த்த உடனே வாசகரால் அதன் கருத்தை உணர்ந்துகொள்ளமுடிகிறது.பழந்தமிழில் இன்னும் காலமெடுத்து அதைச் சிந்தை செய்யவேண்டியவாரக இருக்கிறார் வாசகர்.

அதே போல தமிழ் அளவிற்கு உட்பொருள் அமைந்த கவிதைகளை சமஸ்கிருதம் அதிகம் பயன்படுத்தாமைக்கு அம்மொழியமைப்பில் உள்ள இலக்கணத்தால் உருவான நுட்பத்தையும் கச்சிதத்தையும் காரணமாகக் காட்டுகிறார். சமஸ்கிருத கவிதையில் நிகழ்வது ஒரு மின்னல்வெட்டு எனில் சங்கத்தொகைக்கவிதையில் இருப்பது சிறிது வெளிச்சம்.அதுவும் வளர்ந்துதேய்வது, கானக இரவில் ஒளிப்பூச்சிகளைப் பின்தொடரும் பயணம் போல.ஹார்ட்டின் வார்த்தைகளில் சொல்வதானால் சமஸ்கிருத கவிதைகளின் அழகு அதன் தெளிவிலும் நளினத்திலும் சிக்கனத்திலும் இருக்க, சங்கக்கவிதையின் சிறப்பு அதன் அர்த்தப்பன்மையிலும் மூட்டமான உட்பொருள் அதிர்விலும் உள்ளது.

சமஸ்கிருதத்திலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்படுகையில் தமிழ்க்கவிதைகள் அர்த்தச்சாத்தியங்கள் குறைந்த எளிய எடுத்துரைப்புகளாக மாறுவதைக்  குறிப்பிட்டு  மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களைப்பேசும் இடமும் முக்கியமானது.

இவ்விரண்டு இலக்கியங்களும் வேறுபட்டிருக்க இன்னொரு காரணமாக ஹார்ட் கருதுவது இவ்விரு நிலப்பரப்புகளிலும் நிலவிவந்த மதங்களின் தனித்தன்மை.சமஸ்கிருத இந்தியாவின் மதம் என்பது பரந்த புராணிகக் கதைகள் கொண்ட மீவியல்பு கடவுளர்களும் அவர்களோடு சிறப்பு தொடர்பை பேணும் யாகமுறைச் சடங்குகளும் கொண்டதாகும்.எனவே அத்தகைய கலாச்சாரத்தை சேர்ந்த சமஸ்கிருதத்தில் பெரும்பாலும் பௌராணிக கதாமரபை ஒட்டி காவிய நூல்கள் படைக்கப்பட்டிருக்க, பழந்தமிழ் இலக்கியமோ இகவாழ்வின் சுகதுக்கம் பற்றிய தன்னுணர்வு பாடல்களாக காணப்படுகிறது. பண்டைய தமிழகத்தின் கவிஞர்கள் பொருட்களின் இடங்களில் நிகழ்வுகளில் வெளிப்படும் புனித ஆற்றலை குறித்த போதமுள்ள ஒரு சூழமைவில் வாழ்ந்துள்ளனர்.எனவே மேல்தளத்தைத் தாண்டி பார்வை செலுத்தி உட்பொருள் பொதிந்த உலகின் தலைசிறந்த கவிதைகளை இயற்றினர் என்கிறார் ஹார்ட்.

தமிழில் கடவுளர் பற்றிய தொன்மக் கதைகள் இல்லையா அல்லது வடமரபுகளால் அவை தன்வயப்படுத்துப்பட்டுவிட்டனவா என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது இங்கு. ஏனெனில் வைதீகம் இந்தியாவெங்கும் செல்வாக்கு பெற்றமைக்கு மிக முக்கியமானதொரு காரணம், காப்பியங்கள் புராணங்கள் என அது விரித்த அபாரமான கதைவலை.இக்கதைப் போட்டியில் வட இந்தியாவின் வைதீக அவைதீக தரப்புகள் இரண்டுமே மும்முரம் காட்டின என்றாலும் இயல்பாகவே வைதீகம் வெற்றி கண்டது.ஆனால் அதே வைதீக சமயங்கள் தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் வாயிலாக ஏற்பு பெறுதற்கு கதைமரபை காட்டிலும் இங்குள்ள பாடல்மரபையே பயன்படுத்தியமை கவனிக்கத்தக்கது.

பிற்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் உட்பொருள் தன்மை குன்றியமைக்கு காரணம் வட இந்திய கூறுகளின் தாக்கத்தை தமிழ் ஏற்றுக்கொண்டமையே என்று கூறினாலும் அதை வீழ்ச்சியாக ஹார்ட் கருதவில்லை. சங்கப்படைப்புகளிலேயே உட்பொருள் உத்திகள் உச்சம் தொட்டு முழுமை பெற்றுவிட்டன,சிலப்பதிகாரம் வாயிலாக காப்பிய வகைமையின் வருகை நிகழ்ந்தது தமிழின் நற்பேறு என்று சரியாகவே  குறிப்பிடுகிறார் (சிலப்பதிகார அவல நாடகத்தின் முடிச்சுத்தருணமான கானல் வரி காதையில் ஊழின் தரிசனமாக வெளிப்படுவது அதே உட்பொருள் அர்த்தமாக்கலில் உள்ள மெல்லிய மாறுபாடுதான் இல்லையா). தமிழிலக்கியம் பின்னர் பக்தி இலக்கியம் கம்பராமாயணம் சிற்றிலக்கியங்கள் என வெவ்வேறு களங்களுக்கு விரிவடைந்ததையும் நாம் அப்படியே கருதலாம். 

இந்நூல் வெளிவந்து அரைநூற்றாண்டுக்கு பிறகு இப்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முன்னுரையில் பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்கள் கூறுவது போல் இந்நீண்ட கால இடைவெளியில் கீழடி கொடுமணல் என பல்வேறு அகழ்வாய்வுகள் வழியாக கிடைக்கப்பெற்ற தொல்லியல் தரவுகளை இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டு அடிப்படைகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வுகளை மேலெடுத்துச் செல்லவதற்கான திறப்புகளை இளம் ஆய்வாளர்களுக்கு இந்நூல் அளிக்ககூடும்.(முதன்மைச் சான்றுகளான தொல்லியல் கண்டுபிடிப்புகள் சமீபத்தில் மெய்யான பெரும் முன்னடிவைப்புகளாக அமையப்பெற்றதுடன் பொதுக்கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)இதே வரிசையில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய பல நூல்களும் இருக்கலாம்.எனக்குத் தெரிந்தவரை கமில் ஸ்வலபிள்,டேவிட் ஷுல்மன் போன்றோரின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியவை.ஏகே ராமானுஜனின் கட்டுரைகள் கூட தமிழில் நூலக்கம் பெற்றதாகத் தெரியவில்லை.இந்நிலையில் தமிழ்ச்செவ்வியல்கள் நூலை மட்டுமின்றி ஹார்டின்  வேறு சில கட்டுரைகளையும் சரளமான நடையில் மொழிபெயர்த்துத் தந்துள்ள பு.கமலக்கணணன் மிகுந்த பாராட்டிற்குரியவர்.இது ஒரு ஆய்வு நூல்.எனவே பெருமளவில் தகவல்களையும் கல்விப்புல சான்றுகளையும் அடுக்கிக்கூறுவது. பொதுவாசகருக்கு வாசிப்பில் சலிப்பையும் சவால்களையும் அளிக்கக்கூடியதே எனினும் இத்தகைய நூல்கள் ஆர்வமுடைய பொதுவாசிப்பிற்குள் செல்லவேண்டும்.ஏனெனில் இந்நூல்களில் உள்ள புறவயமான பார்வையும் உலகம் நம்மைப் பற்றி நினைப்பது என்ன என்ற புறப்பார்வையின் எதார்த்தமும் நவீன இளம் வாசகர்களுக்கு ஒரு விசாலத்தையும் பல்வேறு புதிய பார்வைக்கோணங்களையும் அளிக்கும் என நினைக்கிறேன். எதிர்காலத்திற்கான சமநிலையையும்.

000

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி பெட்டியின் முன்னில் அடிக்கடி வாய்க்கப்பெறும், கண்கள் திறந்தபடியே கனவும் நனவும் இல்லாத ஒரு அரையுயிர் நிலையில் டிவி ரிமோட்டின் பொத்தானை தன்னிஷ்டத்துக்கு அழுத்திக்கொண்டிருந்தபோது, நடிகர் மனோஜ் பாஜ்பாய் கண்டிப்பான முகபாவனையுடன் தீர்க்கமாக பேசிக்கொண்டிருந்தார்.திடீரென க்ளேடியட்டர் படத்தில் வருவது மாதிரியான ஒரு ரதத்தில் அவர் நின்றபடி சுற்றினார்.நிகழ்ச்சியின் பெயர் சினௌலியின் ரகசியங்கள். சமீப காலத்தில் வட இந்தியாவில் மிக முக்கியமான அகழ்வாய்வாக பேசப்பட்ட சினௌலி கண்டுபிடிப்புகள் பற்றிய ஒரு ஆவண நிகழ்ச்சி.உள்ளபடியே மிகுந்த முக்கியத்துவம் உடைய ஆராய்ச்சி என்பதில் சந்தேகமில்லை.ஹரப்பா நாகரிகத்தின் தொடர்ச்சியே வேதகால பண்பாடு,இரண்டுமே இங்கு பூர்வ காலமாய் வாழ்ந்துவரும் மக்களின் படைப்பு, ஆரியர்கள் ஈரானில் இருந்து வந்தனர் என்பது ஒரு காலனிய புரட்டு.இதைத் திருத்தி எழுதுவதற்கான பொற்காலம் வந்துவிட்டது என்ற பாணியில் பலரும் உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.அங்கு கண்டுபிடிக்கப்பட்டது ரதம் அல்ல காளைமாடுகள் பூட்டி ஓட்டப்பட்ட வண்டிதான் என்றும் இவ்வாய்வின் முடிவுகள் ஆரிய வருகை கொள்கையை மேலும் உறுதிபடுத்தவே செய்கிறது என்றும் அஸ்கொ பர்போலா உள்ளிட்ட அறிஞர்கள் கூறிக்கொண்டிருந்தாலும், விஷயம் அதற்குள் ஓடிடி வரை வந்துவிட்டதைப் பார்க்கமுடிந்தது.இன்னும் சில காலத்திற்குள் பின்புறப்பதாகை ரதத்தில் பிடிரிமயிர் சிலிர்க்கும் வெண்புரவிகளை பூட்டி மனோஜ் பாஜ்பாய் பேசிக் கொண்டிருக்கலாம்.அதற்குள் அக்‌ஷய் குமார் நடிப்பில் சினௌலி என்றொரு பாலிவுட் படம் வந்தாலும் அது தேசியவிருது பெற்றாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

சினௌலி

இன்னொரு தேசிய செய்தி,தற்சமயம் இந்தியாவில்,கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டவை என ஏறத்தாழ 50 மசூதிகள் மீது என வழக்கு உள்ளதாகத் தெரிவிக்கிறது.இரண்டு செய்திகளும் ஒரே எடுத்துரைப்பின் வெவ்வேறு பகுதிகள் எனலாம்.வலதுசாரிகளின் அரசியல் எடுத்துரைப்பு, அடிப்படையில் வரலாற்று எடுத்துரைப்பின் மீது கட்டப்பட்டது.அவர்களது அரசியலின் சட்டகம் அந்த வெள்ளெலும்புக்கூடுதான்.வெகுஜன புத்தகங்கள், யூடியுப் சேனல்கள், பாடநூல்கள், திரைப்படங்கள்,டிவி தொடர்கள், வாட்சப் வரலாறு என அந்த எடுத்துரைப்பு அன்றாடம் வீட்டு விநியோகம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.அதனால்தான் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பற்றிய சமீபத்திய கேரவன் இதழை வாசிக்கையில் நம்பகத்துக்குரியதும் நம்பிக்கைக்குரியதும் எதுவெதுவென கேள்வி எழுந்தது.கூடவே உண்மை பிரச்சாரத்திற்கு உரியதல்ல என்றும் தோன்றியது. ஆம் உண்மை நின்றிட வேண்டும்.அதேநேரம் அது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் கேள்வியைச் சந்திக்குந்தோறும் அது வளர்கிறது.

’நான் யார்’ என்ற கேள்வியின் அளவிற்கு எழுப்பப்படவில்லை எனினும் நாம் யார் என்ற கேள்வியும்  இந்தியாவில் அதிசிரமமானது.ஏனெனில் இங்கு வரலாறு ஒரு சண்டைக்களம். மேற்கு நாடுகளில் அப்படி இல்லை.பன்னெடுங்காலமாய் வெவ்வேறு மக்களும் பண்பாடுகளும் நம்பிக்கையும் வாழ்ந்துவரும் நிலப்பரப்பு என்பதால் இப்படி உள்ளதா?அல்லது நமது அடையாளங்கள் அனைத்திற்கும் இடையறாத நீட்சி இருப்பதான கற்பனைதான் இதற்கு காரணமா?அளவுக்கு மிக மிக அதிமாக சரித்திரம் வாய்த்திருப்பது நமது பிரச்சனையா?நான் யார் என்பதற்கு எத்தனை எத்தனை தவறான பதில்கள்?

எல்லோருமே வரலாற்றிடம் இருந்து ஒப்புகையையும் அங்கீகாரத்தையும் எதிர்ப்பார்க்கிறோம்,மைந்தர் தந்தையரிடம் எதிர்பார்ப்பது போல.ஆனால் ஒரு கவிஞனாக வரலாற்றை விட எனக்கு காலத்தின் ஓட்டமும் அதனூடான மாற்றமும் அதைக் கடந்த எல்லையின்மையும்  முக்கியம், அதை விட பருவகாலம் முக்கியம் அதைவிட இந்நீண்ட இரவு முக்கியம், அதனினும் முக்கியம் வரவிருக்கும் வாரக்கடைசி.எல்லா எழுதுகையும் கனவு காண்பதுதான் என்று சொன்ன திரு.போர்ஹேயின் கவிதை இது:

இரவின் வரலாறு

தலைமுறை தலைமுறையாக
மனிதர்கள் இரவை உண்டாக்கினர்.
முதலில் அவள் அந்தகமாய்
வெறுங்கால்களைக் கீறிய முட்களாய்,
ஓநாய்கள் பற்றிய பயமாய் இருந்தாள்
இரண்டு கருக்கல்களைப் பிரிக்கும்
நிழலின் இடைவெளிக்கு
அந்த சொல்லை வடித்துக்கொடுத்தது யார் என நாம் அறியோம்;
எந்த யுகத்தில் அது நட்சத்திர வேளையைக் குறிக்கத் தொடங்கிற்று எனவும் அறியோம்
மற்றவர்கள் தொன்மத்தை உருவாக்கினர். அவர்கள்
அவளை நமது ஊழை பிண்ணிக்கொண்டிருக்கும்
கலக்கமற்ற விதிகன்னியரின் தாயாக்கினர்
அவளுக்கு கருங்கிடாரிகளைப் பலியிட்டனர்,
தன் சொந்த மரணத்தை தானே கூவும் சேவலையும்.
கல்தேயர்கள் அவளுக்கு பன்னிரண்டு வீடுகளை ஒப்படைத்தனர்
ஸீனோவுக்கோ, முடிவில்லாத சொற்களை.
அவள் லத்தீன் அறுசீர் அடிகளிலிருந்தும்
பஸ்காலின் பயத்திலிருந்தும் வடிவம் பெற்றாள்.
லூயி டி லியோன், அவளிடம்
தன் துன்புற்ற ஆன்மாவின் தாயகத்தைக் கண்டார்.
இப்போது நாம் அவளை
ஒரு தொல்மதுவைப் போல
வற்றாதவளாக உணர்கிறோம்.
யாரும் அவளை தலைசுற்றாமல் பார்க்க முடியாது
காலம் அவளுக்கு நித்தியத்துவத்தை சுமத்தியுள்ளது.மேலும்,
எண்ணிப்பாருங்கள் அந்த நொய்மை கருவிகளான கண்கள் மட்டும்
இல்லையென்றால் அவள் இருந்திருக்கமாட்டாள்.

சபரிநாதன்

சபரிநாதன். கவிதைகள், விமர்சனத் திறனாய்வு ஆகிய துறைகளில் தீவிரமாக ஈடுபடுகிறவர். "களம் காலம் ஆட்டம்", "வால்" என்று இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். விகடன் விருது, விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது, யுவபுரஸ்கார் விருது ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. சரித்திரம், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதே அச்ச மேகங்களை விரித்திருக்கும் வேளையில் ‘நாம் யார்?’ என்ற கேள்வி அசாதாரணமானதும், மேலும் மேலும் சிக்கலாக்குவதும்தான். மிக நுண்மையான கட்டுரை. சபரிக்கு வாழ்த்து.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss