
‘துப்பறியும் நிபுணர்’ கதாப்பாத்திரம் புகைபிடிப்பதால், நானும் புகைபிடிக்க வேண்டியிருந்தது. எனவே அந்தக் கோடை காலத்தில், எனது வெறிச்சோடிய பங்களாவில் கம்பளியாலான கோட் அணிந்தபடி சுற்றிக்கொண்டும், புகைத்துக்கொண்டும் இருந்தேன். என் பூட்ஸ்களுக்கடியில் படிந்திருந்த பனிச்சேறையும், ‘டாரிடவுனின்’ குளிர்ந்த, ஈரமான வாசனையையும் கற்பனை செய்தபடி குளியலறைக் கண்ணாடியில் எனது முகபாவனைகளை பயிற்சி செய்துகொண்டு இருந்தேன். ப்ளூமேரியா (Plumeria) மற்றும் காகிதப்பூ மலர்களையும், தேன் சிட்டு (hummingbird) பறவைகளையும், எலுமிச்சை மரங்களையும் பார்த்தபடி, இல்லாத பனியையும், உறைந்துபோன இரத்தத்தையும் நினைப்பது விநோதமாக இருந்தது. டேட்டிங் செல்ல வேண்டும் என்று கூட எனக்குத் தோன்றவில்லை. என் மொத்த கவனமும் நான் பணிபுரியும் திரைப்படத்தின் மீதே இருந்தது. அதன் பெயர் ‘டெரர் இன் டாரிடவுன்’ (Terror in Tarrytown).
ஒரு நாள் இரவு, பெவர்லி ஹில்ஸில் (கலிபோர்னியா) நான் முன்பு நடித்த ‘Moving Onward’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரது இல்லத்தில் நடந்த கேளிக்கை விருந்துக்குச் சென்றிருந்தேன். ‘Moving Onward’ படப்பிடிப்பு முடிந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன, ஆனால் அப்படத்தில் நான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் தோற்றம் இப்போது என்னிடம் கொஞ்சமும் ஒத்திருக்கவில்லை. ஸ்டேக் மற்றும் டோனட்ஸ் சாப்பிட்டதால் பன்னிரண்டு பவுண்டுகள் எடை கூடிவிட்டேன். அதி வேகமாக பேச முயன்றதாலும், தொடர்ச்சியாக Chesterfield சிகரெட்டை புகைத்ததாலும் என் முகம் இறுகிப் போய் கோணலாக மாறியிருந்தது. யாருடனும் பேச விரும்பாத சற்றே விலகிய மனநிலையில் இருந்ததோடு, விருந்திற்கு பொருத்தமில்லாத உடையும் அணிந்திருந்தேன். ‘Moving Onward’ இயக்குநர் வெள்ளை நிற சூட் அணிந்து, பார்ப்பதற்கு பதி்மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை அணைத்தபடி நின்றுகொண்டிருந்தார். ‘இனி அவருடன் சேர்ந்து வேலை செய்யக் கூடாது’ என்று நினைத்ததும், அடுத்த நொடியே வேறு யாருடனும் சேர்ந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதி இருக்காதோ என பதற்றமடைந்ததும் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு சிகரெட்டை பற்றவைத்து பச்சிசாண்ட்ரா புதருக்குப் பின்னால் புகைத்துக்கொண்டிருந்தேன்.
“என் பெயர் எலிசபெத்”.
மதுக்கூடத்திற்குத் திரும்பும் வழியில் என்னை சந்தித்த அவள், இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் சொன்ன விதம், நான் அவளை முன்பே கவனிக்காவிட்டாலும், இரவு முழுவதும் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தது போலவும், அதை சொல்வதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போலவும் இருந்தது. அவள் என்னிடம் பேச வராமல் இருந்திருந்தால் நான் அவளை கவனித்திருக்கவே மாட்டேன். அவளுக்கு வயது இருபத்தி மூன்று, எனக்கு இருபத்தி நான்கு. அவளுடன் கை குலுக்கிய மறுகணமே அவள் பெயரை மறந்துவிட்டேன். ‘Moving Onward’ படத்தில் ஆடை வடிவமைப்பாளரிடம் உதவியாளராகப் பணியாற்றியிருந்ததாக என்னிடம் தெரிவித்தாள். “உங்களுடைய கால் சட்டையை தைத்ததே நான் தான். அவை மிக நீளமாக இருந்தன, அதனால் அரை அங்குலம் அளவிற்கு ஓரத்தில் உள் மடித்துத் தைத்தேன். அரை அங்குலம், அவ்வளவு தான் தேவைப்பட்டது” என்றாள். அவள் பேசியது எனக்கு மிகவும் சலிப்பூட்டியது.
“நன்றி. கால் சட்டை எனக்கு கச்சிதமாக பொருந்தியது” என்றேன்.
“இதைக் கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றாள்.
உண்மையில், அவள் எந்த கால் சட்டையைப் பற்றி பேசிக்கோண்டிருக்கிறாள் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. ‘Moving Onward’ திரைப்படத்தில், போரினால் பாதிக்கப்பட்ட குடிகாரத் தந்தையின் தனிமையான மகன் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில், தந்தையின் செவிலிப்பெண்ணுடன் காதல் கொள்வது போல் கதை இருக்கும். படப்பிடிப்பில் முழு நேரமும் கால் சட்டை அணிந்திருந்தேன், ஆனால் அவள் கூறிய இந்த விஷயங்களை நான் ஒரு போதும் கவனிக்கவில்லை. அதுதான் ஒரு நல்ல கால்சட்டையின் அடையாளம் என்று நினைக்கிறேன். ‘Moving Onward’ படப்பிடிப்பில் முக்கியமில்லாத எதைப் பற்றியும் நான் நினைக்கவில்லை, கால் சட்டை மட்டுமல்ல, நிச்சயமாக பெண்கள் குறித்தும். எனது திரை உலகிற்கான நுழைவாயிலாக இத்திரைப்படம் தான் இருக்கப்போகிறது என்று எனக்குத்தெரியும். அதனால் என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியிருந்தது.
அவள் இன்னும் எனது கால் சட்டையை பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். அவளது தலைமுடி செம்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருந்தது. அவளுடைய முகம் அகன்று, கன்னத்தின் எலும்புகள் முஷ்டி போலவும், பெரிய நீல நிற கண்களையும் கொண்டிருந்தது. நான் அவளிடம் ஈர்க்கப்பட்டேன், ஆனால் விருந்தின் சங்கடமான சூழ்நிலையிலிருந்து அவள் என்னைக் காப்பாற்றிக்கொண்டிருந்தாள் என்பதால் மட்டுமே. அவள் அழகாக இருக்கிறாளா என்று என்னால் கூற முடியவில்லை. “படப்பிடிப்பில் நீங்கள் மிகவும் தொழில் நேர்த்தியுடன் நடந்து கொண்டீர்கள்” என்று கூறினாள். அது என்னை நெகிழச் செய்தது. இருந்தாலும் நான் அங்கிருந்து நகர்ந்து மதுக்கூடத்திற்கு செல்லத் தயாராக இருந்தேன். அவள் தான் எனக்கான வழித்துணை என்று நான் இன்னும் உணரவில்லை. எனக்கான வழித்துணையை நான் காணும் தருணமானது, என்னை திகைக்க வைக்கும் என்று ஊகித்திருந்தேன்.
“நன்றி. நீங்கள் கூறியது எனக்கு மனநிறைவாக உள்ளது, உண்மையிலேயே” என்றேன்.
நான் உண்மையாகவே படப்பிடிப்பில் தொழில் நேர்த்தியுடன் தான் நடந்து கொண்டேன். செவிலிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை என்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாள். அவளிடம் கோபப்படாமல் இருப்பதற்கு எனக்கு மிகுந்த கட்டுப்பாடு தேவைப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்திற்குத் தான் மிகப்பொருத்தமானவள் என்பது அவள் எண்ணம், ஒருவேளை அது உண்மையாகக்கூட இருக்கலாம். அவளுக்கு பெரிதாக எந்த சுவாரஸ்யமான வசனங்களும் இல்லை. பெரும்பாலும் அவள் குனிந்து தந்தைக்கு சூப் கொடுக்கும் லாங் ஷாட்களும் (long shot), என்னுடனான சலிப்புத்தட்டும் முத்தக் காட்சிகளும் தான் இருந்தன. ஆனால் அவள் திரையில் மனதை ஈர்த்தாள். தனது வசீகரத்தாலும், கண் அசைவுகளாலுமே அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டினாள். அவள் ஒரு திறமையான பெண் என்பதில் சந்தேகமில்லை. அன்றைய இரவு விருந்திற்கு அந்த செவிலிப்பெண் வந்தாளா என்று கூட எனக்கு நினைவில்லை. வந்திருந்தாலும், அவள் என்னை தவிர்த்திருக்கிறாள். அதுவும் ஒருவகையில் நல்லதாயிற்று. ஏனெனில், எலிசபெத் அவளைக்கண்டு மிரண்டு ஓடியிருப்பாள். செவிலிப்பெண் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். உண்மையில், அவளை விட ஓர் அழகியை நான் பார்த்ததே இல்லை. சில மாதங்கள் கழித்து, ‘Moving Onward’ வெளியீட்டு விழாவில் அப்படத்தை நான் பார்த்த போது மிகுந்த வேதனையாக இருந்தது. ஏனெனில், என்னுடைய பெரும்பாலான சிறந்த காட்சிகள் வெட்டி வீசப்பட்டிருந்தன. எனது பின்னணிக்குரல் கூட செயற்கையாக இருந்தது. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அது ஒரு நல்ல படம் இல்லை தான். ஆனால் அதன் மூலம் எனக்கு எலிசபெத் கிடைத்திருந்தாள்.
நாங்கள் கால் சட்டையைப் பற்றி பேசிய பிறகு, உரையாடலைத் தொடர அவளைப் பற்றிய சில சுயவிவர கேள்விகளைக் கேட்டேன். ஏனெனில் ஒரு குழு நடனமாடத் தொடங்கியிருந்தது, அதில் எனக்கு பெரிதும் ஈடுபாடில்லை. எனக்கு நடனம் என்றால் சுத்தமாகப் பிடிக்காது. என்னைப்பொறுத்தவரையில் அது அவமானத்திற்குரிய விஷயம். நடனம் ஆடுவதை விட, பார்வையாளர்கள் முன்னிலையில் கழிப்பறையை பயன்படுத்துவது கூட எனக்கு எவ்வளவோ மேல். எலிசபெத் மெலிந்த தோற்றத்தில் இருந்தாள். ஒரு வித உறுதியோடு நிமிர்ந்தபடி, அவ்வப்போது தன் முழங்கைகளை தன் கைகளால் பற்றியவாறு நின்றுகொண்டிருந்தாள். முன்பு ஒருமுறை மசாஜ் செய்யும் பெண் ஒருவர், தொடுதலின் அறிவியலைப் பற்றி எனக்கு விளக்கியது நினைவுக்கு வந்தது “ஆற்றல் என்பது நமக்குள் இருக்கிறது. சில நேரங்களில் அது உயிரோட்டமாக, பசியோடு இருக்கும். சில சமயம் அது உயிரற்று இருக்கும். அது வெறுமையாக தோன்றும்.” எலிசபெத் அப்படித்தான் இருந்தாள். நம்முடைய தனியுரிமையைப் பாதுகாத்து, அதே நேரம் வெளிச்சத்தை தடுக்காத மெல்லிய ஜன்னல் திரைச்சீலை போல அவளுடைய அண்மையும் ஏதோ இருந்தும் இல்லாமல் இருந்தது. அவள் புத்தி மந்தமானவள் என்று சொல்லிவிட முடியாது. உண்மையில் அவள் மிகவும் புத்தி கூர்மையானவள். ஒஹாயோவின் ஒரு சிற்றூரில் அவளுடைய பெற்றோர் சலவை நிலையம் நடத்தி வருவதாக கூறினாள். நடனம் வேகமெடுத்துக்கொண்டிருந்தது, நாங்கள் எங்களுடைய மிகச்சாதாரணமான துவக்க வாழ்வைப்பற்றிய சில உண்மைகளை பகிர்ந்து கொண்டோம். அத்தோடு அமைதியானதொரு பகுதிக்கு நகர்ந்தோம். அதற்குள், எனது பானத்தை மீண்டும் நிரப்பும் எண்ணத்தை நான் கைவிட்டிருந்தேன். நடனமாடுபவர்களை கடக்காமல், மதுக்கூடத்தை என்னால் அடைய முடியவில்லை.
“எனது சொந்த ஊர் மிகவும் சிறியது. அங்கே ஒரு வினோதமான விதி இருந்தது. நீங்கள் யாரைப்பற்றியாவது கிசுகிசுத்தால், அந்த நபர் பத்து வினாடிகளுக்குள் அந்த இடத்திற்கு வந்துவிடுவார். அது உண்மையாக நிகழ்ந்தது. ஒவ்வொரு முறையும்.” என்றாள் எலிசபெத்.
“என்னுடைய ஊரில் யாருக்கும் யாரையும் தெரியும் என்று எனக்குத்தோன்றவில்லை. அனைவரும் அவரவர் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை” என்று கூறினேன்.
“உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை நீங்கள் பார்த்ததே இல்லையா?”
ஏதோ ஒரு வித உணர்வை என் மனம் தேடிக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் யோசிக்காமல் நான் பேச ஆரம்பித்தேன். என்னுடைய முந்தைய வாழ்க்கையின் ஒரு பகுதியை வெளிச்சத்தில் கசியவிட்டேன். “என்னை யாரும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் என் அப்பா மிகவும் கோபக்காரர் மற்றும் வன்முறையானவர். அவர் சத்தமிடுவது சுற்றுவட்டாரம் முழுவதும் கேட்கும்” என்றேன். என்னைப் பற்றி எலிசபெத்திடம் மனம்விட்டுப் பேசுவதற்கு எளிதாக இருந்தது. அது எப்படி என்று என்னால் விளக்க முடியாது. என்னுள் இருந்த ஏதோவொரு சிக்கலை உடைத்து, சிதறிய துண்டுகளைப் பெருக்கி எறிவது போலிருந்தது. நான் பேசும்போது வெட்கப்படவில்லை; கண் சிமிட்டவில்லை; வேறு எதுவும் செய்யவில்லை. இதுவரை நான் சொல்லாத விஷயங்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்குள் எந்த உணர்வும் ஏற்படவில்லை. அதுதான் எலிசபெத்தின் சக்தி. அதுதான் அவளது மாயம். அவளுடைய அருகாமையில் நான் வெறு எதையுமே உணரவில்லை. “அக்கம் பக்கத்தினரால் என்னைப் பார்க்கவே முடியவில்லை. ஏனெனில், அவர்கள் என் மீது இரக்கப்பட்டார்கள். ஆனால் என் விஷயத்தில் அவர்கள் எதுவும் செய்யவுமில்லை. அதற்காக அவர்கள் வெட்கப்பட்டார்கள்” என்றேன்.
“கிட்டத்தட்ட திரைப்படத்தில் வருவது போல் இருக்கிறதே. ‘Moving Onward’ இல் வருவது போல” என்று எலிசபெத் கூறினாள்.
நான் அவள் மீது காதல் வயப்பட ஆரம்பித்த தருணம் இது தான்.
“ஆமாம்” என்றேன். “நீ அதை கவனித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அந்த கதாபாத்திரத்திற்குள் என் வாழ்வின் பெரும் பகுதியை நான் கொண்டு வந்தேன்.”
“உங்கள் தந்தையை நீங்கள் எவ்வளவு நேசித்தீர்களோ, அவ்வளவு அதிகமாக வெறுத்தீர்கள் என்று நான் உண்மையிலேயே நினைத்திருந்தேன்”
“அது தான் எனது முக்கிய குறிக்கோளாக இருந்தது, அந்த இருமையில் வசிப்பது”.
“பல நடிகர்கள் தங்களின் கவர்ச்சியையே நம்புகிறார்கள். ஆனால் நீங்கள் மிகவும் வெளிப்படையாக இருப்பது எனக்கு பிடித்திருந்தது.”
“நன்றி”
‘எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்’ என்பதை நன்கு அறிந்தவள் போல அவள் சிக்கனமாகவும், திறம்படவும் பேசினாள். ஆனால் அவள் சிகரெட்டை பிடிக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. பெரும்பாலானவர்களைப் போல ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் வைக்காமல், நடுவிரலுக்கும் மோதிர விரலுக்கும் இடையில் சிகரெட்டை வைத்து புகைத்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை சிகரெட்டை உள்ளிழுக்கும் போதும், அவள் தனது முகத்திற்கு முன்பாக கைகளை அசைப்பது போலிருந்தது—தன் முகபாவனையை மறைப்பது போல. அவள் தனது கரங்களை அசைத்த விதம், ஒரு நூல்பாவையை எனக்கு நினைவூட்டியது.
தயாரிப்பாளரின் வீட்டிலிருந்து நாங்கள் இருவரும் ஒன்றாக வெளியே வந்தபோது, அவள் தனது கண்களில் ஒட்டியிருந்த செயற்கையான கண் இமை முடிகளை மெதுவாக உரித்தெடுத்தாள். எவரும் கையசைத்து விடைகொடுக்கவில்லை, யாரும் அதை பொருட்படுத்தவும் இல்லை. பின்னணியில் இசை மெதுவாக தேய்ந்து மறைந்தது.
சாலையில் ஒரு வளைவின் அருகே தெரு விளக்கின் கீழ், எனது வண்டியை நிறுத்தியிருந்தேன். எங்கள் காலணி சத்தம், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் கை பற்றியிருந்த அவளது கை, நீரைப் போல லேசாக இருந்தது. அந்தச் சாலைகள் இன்னும் இயற்கைக்குச் சொந்தமானவை என்பது போல, மலைகள் வினோதமான அமைதியுடன் இருந்தன. நான் என் அம்மாவின் பழைய ஃபோர்டு ரான்ச் வேகன் (Ford Ranch Wagon) காரை ஓட்டிச் சென்றேன். அதன் தரைதளத்தில் ஓட்டைகள் இருந்தன. ஒரு முறை பின் இருக்கைக்கு அடியில் எலிவளை இருந்ததைக் கண்டேன். எலிசபெத்தைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று அப்போது எனக்குத் தெரிந்துவிட்டது.
“நான் திருமணங்களை வெறுக்கிறேன்,” என்று அவளிடம் கூறினேன்.
அது இப்போதும் உண்மை தான். “யாருக்காவது இந்த திருமணத்தில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்” என்று அவர்கள் சொல்வதை வெறுக்கிறேன். நான் எப்போதுமே எழுந்து நின்று, “இதுவே உங்கள் இருவரின் முடிவாகிவிடும்! விண்மீன்கள் மோதும் போது, அவை ஒரு கருந்துளையை உருவாக்குகின்றன!” என்று கத்த வேண்டும் என நினைப்பேன். இந்த தகவலை நான் எங்கிருந்து எடுத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை பத்திரிக்கையாக இருக்கலாம்.
“அவை அப்படியொன்றும் காதல் மயமானவை அல்ல. இல்லையா” என்றாள் எலிசபெத்.
நாங்கள் பர்பாங்க் நகரில் இருந்த ஒரு பழைய ஒதுக்குப்புறமான உணவகத்தில் இனிப்பு அப்பம் (Pie) சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்தினோம்.
நான் திருமணம் செய்துகொண்ட எலிசபெத் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானவளாக இருந்திருந்தால், என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் நான் ஏன் அவளைத் தேர்ந்தெடுத்தேன் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும். பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டது போல, அவள் உண்மையில் என் கையில் ஒரு “பளபளக்கும் வெற்றுப் பொருள்” போலத்தான் இருந்தாள். அவள் பெரிதாக பளபளக்கவில்லை. கவனச்சிதறலாகவும் இருக்கவில்லை. என்னைச் சுற்றி ஒரு சுத்தமான இடம் தேவை என்பதையும், எனது எதிரொலியைக் கேட்கக்கூடிய அளவுக்கான ஒரு வெற்றிடம் எனக்குத் தேவை என்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.
அது தான் எலிசபெத்: அவள் தான் என் வெறுமை.
000
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.