பகலில் உதிக்கும் விண்மீன் : வைரவன் லெ.ரா

பரங்கிமலை தேவாலய மலைக்குன்றிலிருந்து காண்கையில் நெளிந்தபடி செல்லும் வெள்ளை நாக மெட்ரோ இரயிலையும், கரும்சாலையில் எறும்புகள் போல ஊரும் வாகனங்களையும், சதா அங்குமிங்கும் ஓடிக் கொண்டேயிருக்கும் பூச்சி மனிதர்களையும், இந்நகரத்தையும் முறைத்தபடி, ஆமாம் அப்படித்தான் நின்றிருந்தேன். என்னருகே யாருமேயில்லை. அப்போதைக்கு தூரமாக ஒரு வயதான காவலாளி நாளிதழ் கொண்டு சிரத்தையோடு விசிறிக் கொண்டே என்னை வெறித்தபடி அமர்ந்திருப்பது மட்டுமே எனக்கான துணையும் ஆசுவாசமும். மனிதர்களின் இருப்பு கண் காணக் கூடிய தொலைவில் இல்லையேல் பதற்றம் அதிகரிக்கும் விசித்திர நோய் பீடித்திருந்த காலம். கை நடுக்கம் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது. மனதிற்குள் ஒரே கேள்வி  புதிய விண்மீன் இந்நேரம் வானில் உதித்திருக்குமா? பகலிலும் விண்மீன்கள் தெரியும்தானே! வானில் விமானம் காற்றை விலக்கிப் பறக்கும் ஓசை கேட்டதும் தலை இன்னொரு பக்கம் திரும்ப, விமானம் அருகிலே பெரிதாகி வானில் சிறியதாகி போக்குக் காட்டியது. வெண்ணொளி படர, கரும்மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த இம்மழை நேரப் பகலில் ,பன்னிரெண்டு மணிக்கு முன்னரே, தாய்த் தமிழ்நாட்டில் குடிகாரர்கள் இருக்கும் போது ஏன் விண்மீன்கள் தெரியக் கூடாது. ஆதம்பாக்கம் அறைக்கு வந்த புதிதில் விபின் காலை ஆறரை மணிக்கு நூற்றைம்பது ரூபாய் குவார்ட்டர் வாங்க கக்கன் பாலம் அருகே ஏரிக்கரை மதுக்கடைக்கு அழைத்துச் சென்ற போது, காலையிலே கடை திறந்திருக்கிறார்கள் என்று ஆச்சர்யத்தால் வாய் பிளந்தால், அடைத்தால் தானே திறக்க என வெடித்துச் சிரித்தது ஞாபகம் வருகிறது. “இந்தியாவுல முன்னோடி நாமதானாம்ல மக்ளே. ஒண்ணாம் நம்பரு சிவிக் சொசைட்டியாம் கேட்டியா. நீயுஸ் பிடிக்கவன் இப்போ நல்லத மட்டும் போடுகியான். இந்தா கடைக்க சீர கண்டா. ஒன்னுக்கும் பீயும். குடிக்கியவன் காசு வேணுமாம். நீட்டா வைக்காண்டாமா. பின்ன இவனுகளுக்கு உள்ள ரோட்டையும் நீட்டா வைக்க தெரியாது. கவெர்மென்ட் மட்டும் இல்ல, சிவிக் சொசைட்டி ஆளுங்களும் அப்படித்தாம்டே. தற்பெருமை சொசைட்டி.” விபின் சொல்லிச் சிரித்தது காதில் சன்னமாக ஒலிக்க, சுத்தமான நகரத்தின் காற்றை சுவாசித்தேன்.

நகரத்தில் வேலை தேடி அலைந்த நாட்களில் நமக்கெல்லாம் வேலை கிடைக்காதது சாதாரண ஒன்று தானே எனக் கடந்து கொண்டேயிருந்தேன். தகவல் தொழில் நுட்ப வேலைக்காக நாகர்கோயிலில் இருந்து கிளம்பி வந்தவனின் ஆங்கிலம் அவ்வளவு லட்சணமாக இருந்ததும், நகர இளைஞர்களின் நுனிநாக்கு ஆங்கிலமும் அதனுடைய காரணங்களில் ஒன்று. எப்படி வேலை கிடைக்கச் செய்வது! எங்களை போன்றவர்களுக்கு ஒரே உத்வேகமான ஊரில் இருந்து சென்னையில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரியும் அண்ணன்களையும், மாமாக்களையும் போய் பார்த்து வருவது, உண்மையில் இது ஒரு சடங்கு. அசாதாரணப் பயணம். ஜாவா, சிஸ்கோ, நெட்ஒர்கிங், கிளவுட், பைத்தான், எ.டபிள்யூ.எஸ், ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் என ஒவ்வொருவரிடம் இருந்தும் விதவிதமான தொழில்நுட்பம் பற்றிய பொழிப்புரைகளும், அறிவுரைகளும் பொங்கி வழிந்து செவியை நிறைக்கும். அதன் பிறகு சிலர் ஒரு டீயோடோ, ஒரு நேர உணவோடோ வழியனுப்பி விடுவதும் உண்டு. வெகு சிலரே இரவு தங்கிப் போகச் சொல்லி, அதிலும் அதிர்ஷ்டம் இருந்தால் மதுவருந்தவும் அழைத்துச் செல்வார்கள். இதிலும் அவர்களுடைய புராணங்களே நிரம்பி தரையில் குதியாட்டம் போடும். ஒரு வருட காலத்தில் இதற்கெல்லாம் பழகிவிட்டேன். ஆனாலும் எந்த வேலையும் கிடைத்தப் பாடில்லை. ஆறு மாதம் முன்பு முன்னணி நிறுவனம் ஒன்றில் தேர்வாகி இன்னும் இரண்டு நாட்களில் பணி நியமன கடிதம் அனுப்புகிறோம் எனச் சொல்லியனுப்பி இன்னும் வந்தபாடில்லை. இப்படியே இரண்டு நிறுவனங்கள் ஒரு நாளை மகிழ்ச்சியாக்கின. என்ன புண்ணியம்! அப்பா இனிமேல் டீக்கடை வேலைக்குச் செல்ல வேண்டாம். பாயிலர் வெந்நீர் பட்டு கையிரண்டும் வெந்து வெள்ளைப் பூத்து இருந்தன. அம்மா இனிமேல் நெசவுக்குச் செல்ல வேண்டாம். அவளது இடதுகால் ஒருப்பக்கமாக இறங்கியே விட்டது.

வாழ்க்கை தான் அதிசயங்கள் நிறைந்ததே, எப்போதாவது பணி நியமன கடிதம் மின்னஞ்சலில் வரலாம் என கைகள் அலைபேசியை நோண்டிக் கொண்டேயிருந்தன. அதிசயங்கள் எல்லோருக்குமானது அல்ல எனப் புரிந்து கொள்ள வெகுநாட்களானது. கழுத்தில் மாட்டியபடி அங்குமிங்கும் ஆடும் நிறுவனத்தின் அடையாள அட்டை மேல் அப்படியொரு பிரியம். வெளியே அதை மாட்டிக் கொண்டு எங்கும் செல்லலாம். வாழ்க்கையில் ஜெயித்துவிட்டான் எனும் குறைந்தப் பட்ச நம்பிக்கை கிட்டும். நாட்கள் செல்ல செல்ல அதை மாட்டிக் கொண்டு யாரவது எதிரே தென்பட்டால் ஓடிச் சென்று பிய்த்தெறிய தோன்றும். விபின் தினமும் குடிப்பான். நானும் அவனோடு இணைந்துகொண்டேன். “குடிக்கத  ரொமான்டிசைஸ் பண்ணக் கூடாது.” குடியைப் பற்றி ஏதாவது உயர்த்திச் சொன்னால் விபின் சொல்லும் ஒரே வார்த்தை.

ஆதம்பாக்கத்தில் தங்கியிருப்பதில் ஒரே சௌகரியம், நினைத்தப் பொழுதில் நடந்தே பரங்கிமலை குன்றில் இருக்கும் தேவாலயத்திற்கு வந்துவிடலாம். புனித தாமஸின் பழமையான தேவாலயம். அங்கே நகரம் என்னை விட்டு விலகி சென்றதைப் போலொரு சித்திரம் கிட்டும். ஊரிலும் தேவாலயங்கள் அதிகம் இருந்த பகுதிகளில் தான் என்னுடைய வீடும் பள்ளியும் இருந்தன. ஒவ்வொரு மணிக்கும் தேவாலய மணிக்கூண்டில் ஒலிக்கும் வேத வசனத்தோடு இயேசுவும் நெருக்கமானார். பரங்கிமலையிலிருந்து ஜனத்திரள் நம்பும் உத்தியோகஸ்தர்களால் ஆன நகரம் தூரமாக அந்தரத்தில் தொங்கும். இங்கோ மற்றவரிடம் இரஞ்சுபவர்கள், உடலின் ஏதாவது ஒரு அங்கம் இழந்தவர்கள், எதுவும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாதவர்கள் மட்டுமே நிறைந்து இருப்பார்கள். இந்நேரங்களில் சிலுவையில் தொங்கும் தேவக் குமாரன் தான் அபயம். ஆனாலும் உணவிற்கு அலைவதில் நிறுத்தப்பாடு வந்ததேயில்லை. இங்கிருக்கும் ஏகதேச அம்மா உணவகங்களின் சாம்பாரின் தனி ருசியை பிரித்தறியும் அளவிற்கு நா பழகி விட்டது. இரவுகளில் மரங்கள் நிறைந்த ஜோதி தியேட்டர் பக்கமாக நடை சென்று விபினோடு பேசுவதும் எனக்கிருந்த ஒரே ஆசுவாசம். விபின் தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகத்தில் எல்லா வேலைகளையும் செய்யும் ஒருவனாக பணி புரிந்து வந்தான். அவன் மூலமே தமிழ் இலக்கியப் பரீச்சயம் கிடைத்தது. அவனுக்கு கவிதையில் தான் நாட்டம் இருந்தது. எவ்வளவு குடித்திருந்தாலும் கவிதைகளைப் பற்றி உரையாடும் போதெல்லாம் அவனுடைய கண்கள் பிரகாசிக்கும். ஒரு ஞானியைப் போல அவனுடைய உடல் மினுங்கும். ஜவ்வாதின் மணம் வீசும்.

“கவிதங்கிறது மௌனமா நம்மக்கிட்ட பேசுறது போல மக்ளே. செலப்பம் கவித மனசுலாகாது. அறிவ அப்ப காட்டி சண்டப் பிடிக்க கூடாது. நம்மக் கிட்ட எப்போ பேசணும்ண்ணு அதுக்கறியும். ஒரு நல்ல கவித ஒன்னு அமைதியாக்கும் இல்ல அமைதிய கொழைக்கும். ஏதோ ஒன்னு நீ இருக்கிற நெலைல இருந்து இன்னொரு நெலைக்கு ஒன்ன மாத்ததும்லாடே அது மாதிரி.  a state of mankind can be changed by an poem.”  கோடைக் காலத்தின் இரவில், தெளிந்த வானம் எங்களுடைய தலை மேல் படர்ந்திருந்த நாள் ஒன்றில் அவன் சொல்லிய வார்த்தைகள் தான் கவிதைகள் பற்றிய என்னுடைய ஒரே புரிதல். எத்தனையோ கவிதைத் தொகுப்புகள் அறைக்குள் நிறைந்திருக்கும். அது போக பிடித்தமான கவிதைகள் கைபட எழுதப்பட்டிருக்கும் டைரி ஒன்றும் அவனிடம் உண்டு. பாரதியில் தொடங்கி சதீஷ்குமார் ஸ்ரீனிவாசன் வரை எல்லோரையும் பற்றி பேசுவான். பதிப்பகத்தில் பணி புரியும் முன்னே தமிழின் முன்னணி வணிக நாளிதழ் ஒன்றில் பணி செய்தான். ஆனால் ஓரிரு வருடங்களிலேயே வேலையை உதறிவிட்டு வந்ததாக அறிந்திருந்தேன். அதைப் பற்றி கேட்டாலே, “அன்னைக்கு அந்த தேவகுமாரன்கள அடிக்காம வந்ததே பெருசு மக்ளே. பெரிய லட்சியவாத கனவுலயாக்கும் அங்க வேலைக்கு சேந்தேன். சொந்த அரிப்புக்குலாம் தலையங்கமும் நியூசும் போடுவானுக. கொறஞ்ச பட்ச எத்திக்ஸ் வேண்டாடமா! நடுநிலைமைன்னு ஒன்னு தமிழ்நாட்டுல கெடையாது. அறிவியக்கவாதின்னி ஒருத்தன் இங்க ஏலியன் கணக்கா தான் வாழனும். எவன் சொன்னா இவனுக கேப்பான் தெரியுமா? சினிமாகாரன் இல்ல அரசியல்வாதி. அவனுக மேடைலயும் சினிமாலயும் ஒருத்தனுக்கு ஒருத்தன் நின்னு பெகலம் வைப்பான். ஒன்னு அந்தப் பக்கம் நில்லு, இல்ல இந்தப் பக்கம் வானின்னு. எல்லாத்தையும் ரெண்டு பக்கமா, எதிரெதிரா வைக்கது. இவன் நல்லவன், அவன் பொல்லாத்தவன். யோசி ஒருவேள ஒருபக்கம் போயி நின்னுட்டேன்னு வையி. அவன் உன் வாயில மோண்டாலும் ருசிக்கணும்.” பதில் பேசாமல் அமைதியாக நடக்கவே வேலை காரியங்கள் பற்றி பேச ஆரம்பித்தான். “எனக்கெல்லாம் ஐ.டி வேலை கெடைக்கும்ன்னு நம்பிக்கை போச்சி. பேசாம நீயே ஒரு வேலை பாத்து தாயேன். என்னோட பாதையும் இப்போ லட்சியத்தை நோக்கி,” சொல்லிவிட்டு நின்றேன். திரும்பிப் பார்த்தவன், “லட்சியவாதக் கனவெல்லாம் தொண்ணூருகளிலேயே நின்னுட்டுன்னி தோணக்கம் இப்போ எனக்குண்டு. ஒன்னு ரெண்டு இப்போ தப்பி பெழைக்கு. இப்போ உள்ள காலம் வேற. உள்பிரக்ஞைலாம் அத்து, மேல இருக்கவன் என்ன சொல்லுகாணோ அத கேட்டு நடக்கிற ஜோம்பி ஆயிட்டோம். இது பெரிய நெட்ஒர்க் மக்ளே.”

“அப்போ நீ லட்சியவாதி இல்லையா?”

“லட்சியவாதிக்கு தந்திரமும் சாதுரியமும் வேணும்ன்னி நெனைக்கேன். என்கிட்ட அது உண்டா? கெடையாது. அப்படிப்பட்ட லட்சியவாதி தோப்பான். சோ கால்டு கான்டெம்பரரி சிவிக் சொசைட்டி அவன ஜெயிக்க உடாது. தேவை இல்லாம செதையிற வழிய நோக்கி நடக்காண்டாம். நாளைக்கே ஒழுங்கா உக்காந்து பிரிபேர் பண்ணி இன்டெர்வியூ போய் நல்ல வேலைய எடுக்க வழிய பாரு. அம்மைக்க அப்பனுக்க கஷ்டத்த தீரு. சும்மா குடிச்சுட்டு பேசிட்டு திரியாத. இவனொரு லட்சியவாதி.” விபினின் வார்த்தைகள் மெல்ல தடிக்க ஆரம்பித்தன. பின்னர் அதனை நிறுத்துவது அவ்வளவு எளிதல்ல. மெதுவாக கவிதைகளை நோக்கி மடை மாற்றினேன்.

“அன்னைக்கி அந்த கர்ச்சீப் கவித பத்தி சொன்னேலா. அருமையான கவிதையாக்கும் கேட்டியா.”

“மதாருக்க கவித அது. தலைல கட்டிருக்க கர்சீப்பு எதிர்காத்துல பறந்து போவு. நின்னு யோசிக்கான். இத்தற நாளு தலைல கட்டி வைச்சது ஒரு பறவையையா!” நெஞ்சை கைகளால் கட்டிக் கொண்டு மெல்ல சிரித்தான்.  “கவிஞன் பாக்குற ஒலகமும் நாம வாழுற ஒலகமும் ஒன்னு கெடையாது. அது ஏகாந்தம். இது நரகம். ஏதாக்கும் எந்த தருணமாக்கும் ஒரு சாதாரணத் துணி, பறக்கிற பறவையாகு. அது பறக்கும் போதா! எப்படி பறந்து அது!” கண்களை இறுக்க மூடிக் கொண்டான். “கவித எழுதுறது அருளாக்கும். மனுசனோட உட்சப்பட்ச கற்பனாவாத சக்தில ஒன்னு. எல்லா சாத்தியமும் அதுக்குள்ள அடக்கம்.” அதன் பிறகு நவீன கவிஞர்கள் எல்லோரையும் பற்றி பேசினான். ஒரே ஒரு கவிதை எழுதியிருந்தாலும் அவனுக்கு பிடிக்கும் பட்சத்தில் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுவான். விபினின் ஒரு குணம் மாத்திரம் எப்போதும் ஆச்சர்யமளிக்கும். எல்லோரையும் முன்னரே தெரிந்தவர்கள் போல நண்பர்களாக்கிப் பேசுவான். ஒருமுறை அவன் வியந்தோதிய கவிஞர் ஒருவரிடம் கவிதைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் போது அவர் அவனை பலவிடங்களில் மட்டம் தட்டிப் பேசினார். நான் சூடாகி அவரிடம் சண்டையிட ஆரம்பித்தேன். என்னை அங்கிருந்து தூர அழைத்துச் சென்று, எனக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டான். “லட்சுமி மணிவண்ணனுக்க ஒரு கவித உண்டு, ‘என்னை எப்போது எங்கு சந்தித்தீர்கள்’ன்னி. இது இவர சந்திக்கக் கூடாத நேரமா இருக்கும். செலவன மாரி சுத்தி ஆளு நின்னா, நான்தான் மயிருன்னி பேசுவான்லா அவனுக்க சென்னிய நானே வீக்குவேன். இவரு சொல்லது யோசிக்க வேண்டிய வெஷயம்.”

விபினின் எண்ணங்களெல்லாம் என்னையும் வாரிச் சுருட்டிக் கொண்ட காலமது. நாவல்கள் தான் என்னை அதிகம் ஈர்த்தன. அதுவும் பெருநாவல்களாக இருக்க வேண்டும். தஸ்தாவெய்சிகியும் தால்ஸ்தாயும் என்னோடு அறையைப் பகிர்ந்த நாட்கள். எதற்காக சென்னை வந்தேன் என்பதையே மறந்து போனேன். இலக்கிய விழாக்களுக்கு சென்று, விரும்பிய எல்லா எழுத்தாளர்களின் உரையையும் கேட்டு மகிழ்ந்தேன். ஒருவிதத்தில் விபின் விரும்பாத லட்சியவாதியாக என்னை எண்ணிக் கொண்டேன். முகநூலில் அப்பட்டமாக தோன்றும் எண்ணங்களையும் பகிர்ந்தேன். இளம்எழுத்தாளர்களோடும் நண்பர்கள் ஆனேன். உள்பெட்டியில் அரசியல் கலை இத்யாதி இத்யாதி எல்லாம் பேசினோம். அறிவுஜீவியாக நகரில் உலா வந்தேன். அன்றைக்கு விபின் உடல் வியர்க்க அறைக்குள் வந்தான். பதட்டமாக இருக்கிறான் என உணர்ந்தேன், “என்னாச்சி?”, “பிரான்சிஸ் எறந்துட்டாரு, பத்தினிப்பாற போனும். ஓன்ட்ட ஏதாச்சும் கைல காசு இருக்கா?” கேட்டவுடனே தவறு எதையோ செய்தவன் போல “சரி தின்னியா?” உடனே கேட்டான். இரவு உணவருந்தவில்லை. மதியம் அறைக்கு வந்த இளம்எழுத்தாளரோடு நெஞ்சு நிறையுமளவுக்கு குடித்திருந்தேன். ஆமாம் என்பது போல தலையை அசைத்தேன். சரி என தலையை ஆட்டி, அவன் டைரியை கையில் எடுத்துக் கொண்டு உடுத்தியிருந்த உடையோடு பக்கங்களைப் புரட்டி அமைதியாக அமர்ந்தான். இதில் இரண்டு ஆச்சர்யங்கள். அறைக்குள் நுழைந்தாலே கழிவறை சென்று மேல் கழுவி வருபவன் இன்றைக்கு உடை மாற்றாமலே கவிதை வாசிக்கிறான். இன்னொன்று குடிக்கவில்லை.

“லேய், இந்த மகா கவிஞனுக்க கவிதைய கேளு.” அன்றைக்கு அவனுடைய ஆன்மா வாசித்த அக்கவிதைக்கு அவன் இட்டிருந்த தலைப்பு குடிகார விண்மீன். இருமுறை நிதானமாக மெல்லிய குரலில் வாசித்தான். இருளும் சிலந்திவலைகளும் படர்ந்த வீட்டு உத்திரம் மெல்ல ஒளிவீசி நட்சத்திரக் குவியலாய் மினுங்க, ஒவ்வொரு நட்சத்திரமும் தான் இன்னார் என அறிமுகம் செய்துகொண்டது. அவன் கவிதையை வாசித்து முடிக்கும் போது அழுதுக் கொண்டிருந்தான். பிரான்சிஸின் கன்னி நாவலை சென்னை புத்தக கண்காட்சியில் அதற்கு முந்தைய வருடம் தான் அலைந்து திரிந்து வாங்கியதாகச் சொன்னான். “இந்த வருஷம் பாரு மக்ளே. எல்லாவனும் கன்னிய விப்பான். ரெண்டு வருஷம் முன்ன எனக்கா ஃபிரென்ட் ஆன்லைன்ல கன்னிய ஆர்டர் போட்டான்  இருவது நாளு கழிஞ்சு புக் வந்து கேட்டியா, டேமேஜ்ட் காப்பி. அதயும் வர வைக்கதுக்குள்ள அவளோ பெகலம்.  எத்தறையோ பேரு இந்த வருஷம் புக்க ரிபிரிண்ட் பண்ணுவானுக. வியாவாரிய விட்டுருவேன். அது பொழப்பு. ஆனா தமிழ் இலக்கியத்த காப்பாத்துகேன்னு செல வேறு வேஷம் கட்டுகானுகன். அவனுக மேல தான் எரிச்சல்.”  இரவு முழுக்க அவருடைய கவிதைகளிலே லயித்தான்.  காலை நான் விழித்ததும், “பிரான்சிஸ் செத்து வேறொன்னா பொறந்துட்டாரு. எல்லாவனும் அவருக்க கன்னி நாவல இனிமேலுக்கும் வாசிச்சு அவர ரிசரக்ஸன் செய்வானுக.” சிரித்துக் கொண்டே, “உறங்கலையா கண்ணு எரியி. ரெண்டு புக் புரூப் ரீடிங் செய்யணும். கொஞ்சம் ஒறங்கிட்டு வாரேன்” எழுந்து சென்றான். சட்டென்று அவனை நிறுத்தி, “விபினு மறுநீரு வேணும். எழுவத்திஞ்சு ரூவா இருக்குமா?” தயங்கியபடியே கேட்டேன், “மக்ளே, குவார்ட்டர் கட்டிங் வாங்கி குடிக்கணுமா? எனக்கு கில்டிய கொடுக்காத. இன்டெர்வியூ போறதயே நிப்பாட்டிட்டடே. யோசிச்சு பாரு,” சொல்லிக்கொண்டே கையில் நூறு ரூபாயை திணித்தான்.

மாதங்கள் கடந்து விட்டன. வீட்டில் இருந்து என்னை அழைப்பதும் குறைந்துவிட்டது. தினமும் உணவருந்தினேனா? நன்றாக உறங்கினேனா? எனும் கேள்விகள் இல்லாமல் போய்விட்டது. லௌகீகம் எனும் கனவு என்னை தூர நிறுத்தி கைவிட்டதும், லட்சியவாதம் அதனுடைய கைகளால் தாங்கிக் கொண்டது. நான் யார் இங்கே? இதோ உங்களின் முன் தோற்றுப் போனவனாய் நிற்கும் நான் யார் இங்கே? குடிகாரனா! காலையிலே குடிக்க ஆரம்பித்தேன். கவிதைகள் நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் மதிப்புரைகள் நேர்காணல்கள் எல்லாவற்றையும் வாசித்தேன். புதியஎழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து உடனுக்குடன் மறுமொழி செய்தேன். படைப்பின் போதாமைகளை எடுத்துரைத்தேன். முகநூலிலும் என்னுடைய வாசிப்பு, கருத்துருவாக்கங்களை பதிவிட்டேன். அலைபேசியில் தீர்க்கமான காத்திரமான உரையாடல்களை நிகழ்த்தினேன். என்னுடைய இவ்வறிவு ஒரு கவசமானது. விபின் என்னை பார்க்கும்தோறும், “மக்ளே, போக்கு சரியில்ல கேட்டியாடே!” என்பான். ஆனாலும் இரவுகளில் குடிக்கும் போது தமிழ் இலக்கியம் பற்றி பேசி தீர்ப்போம். “மக்ளே சொல்லுகேன்னு தெற்றா எடுக்காத. இலக்கியம் தேவை தான். ஆனா நீ வந்த காரியம் இது கெடையாது. போயி நல்ல வேலைய எடு. அப்புறம் இலக்கியம் வாசி, ஏன் எழுது. யாரு வேண்டாம்ன்னி சொல்லுகா.” “விபினு. நீ தோத்தேன்னு எல்லாவணும் தோப்பான்னி நெனைக்காத. என்னோட பாதை இதுதான்.” விபின் மறுப்பேதும் சொல்லவில்லை. வழக்கம் போல எனக்கு குடி வாங்கிக் கொடுக்கும் இளம்எழுத்தாளரோடு நவீனத்துவத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் பிறகான ஒரு துவத்தைப் பற்றி அலைபேசியில் உரையாடலை தொடர்ந்தேன்.

ஒன்றறை வருடம் கடந்துவிட்டது. பதிப்பகம் ஒன்றில் விபினின் உதவியால் வேலை கிடைத்தது. இந்நாட்களில் விபினும் நானும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. கண்களின் இரப்பைகள் கொஞ்சம் கீழே இறங்கிவிட்டன. மெலிந்த தேகம் பூசலானது போலாகி விட்டது.  இதற்குள் தமிழில் நான்கு சிறுகதைகள் எழுதிவிட்டேன். நான் விரும்பிய எழுத்தாளர் அதைப் பற்றி இலக்கிய விழா ஒன்றில் குறிப்பிட்டதில் மகிழ்ந்து போனேன். சில புத்தகங்களுக்கு மதிப்புரையும் எழுதினேன்.  வீட்டில் அம்மாவோடும் அப்பாவோடும் பேசிக் கொள்வது ஏகதேசம் வாரத்திற்கு ஒருமுறையானது. இப்போதெல்லாம் அவர்கள் என்னிடம் புலம்ப மட்டுமே செய்கிறார்கள். ஒரு லட்சியவாதியின் தாய் தந்தையருக்கு மெய்மையின் பாதை தெரியுமா! இடையே விபின் பணிபுரியும் பதிப்பகத்தில் இருந்தும் வேலையை விட்டான். “இவனுக போக்கு சரியில்ல. வர வர போடுற தொகுப்புலாம் ஒரே ஐடியலாஜிய இருக்கு. அதுதான் ஆட்சிலயும் இருக்கு. அத தப்புன்னி சொல்லல. ஒரு நிமிர்வு நமக்குண்டு கேட்டியாடே. புக் போட வேண்டியது. எங்கிட்ட தனியா இருக்கும்போ அந்தாளுகள பத்தி தப்பு தப்பா பேச வேண்டியது. நேர்மை கொறைய ஆரம்பிச்ச எடத்துல நா எதுக்கு மக்ளே. நேத்தைக்கு ஒரு பெகலம். எப்போ போலயும் குடிக்கும் போது தான். மொதயே சொல்லிருந்தேன், குடிக்கும் போது அந்தக் கதைய பேசாதீங்கன்னி. அவனுகளும் விடல. ஜஸ்டிபை பண்ணி என்னையும் அது சரின்னி சொல்ல வைக்க போராட்டம் நடக்கு.  நம்ம வாயி சும்மா இருக்குமா? அவங்கள ஊம்புனது போதும்ன்னி சொல்லிட்டேன்.” “யார சொன்ன?” “ஓனரத் தான். அப்புறம் பட்டிய போல வெரட்டி விட்டானுக. போங்கல தேவிடியா பயக்களான்னு வந்துட்டேன். வரலாறும் எலக்கியவாதி கைல இருக்கு மக்ளே. வரலாறே புனைவுதான். புனைவெல்லாமே வரலாறுதானே. நேர்மை இல்லாமா அடுத்தவன சப்புறவன் கொடுக்கிற காசு பீக்கு சமானம்.” ஒரு வருடம் சென்னையிலே வேலையில்லாமல் என்னோடு தங்கியிருந்தான். எந்நேரமும் குடித்தான். அவன் விரும்பி போற்றிய எல்லா இலக்கியவாதிகளையும் ஏசினான். கவிதைகளை நிராகரித்தான், அவையும் ஏற்கனவே வியந்து பேசியவை. அத்தொடர்ச்சி என்னுடைய விருப்பப் பட்டியலுக்கு வரும் போது எனக்கும் அவனுக்கும் சண்டையே வந்தது.  அறைக்குள் இலக்கிய கலகக் காரர்கள் நுழைய ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு எதையும் எதிர்க்கும் திராணியும், நொடிதோறும் மாறும் இலக்கியக் கோட்பாடுகளும் இருந்தன. விபினின் உடலும் மெலிய ஆரம்பித்தது. ஒருமுறை இரண்டு நாட்கள் உணவருந்தாமல் ஒரு குழுவோடு  சதா குடித்தபடி இருந்தான். அடுத்தநாள் கழிவறையில் மயங்கிக் கிடந்தான். அருகிலிருந்த மருத்துவமனையில் ஒரு நாள் முழுக்க குளுகோஸ் அடைக்கவே கொஞ்சம் போதம் வந்தது, “செத்துட்டேனின்னி நெனைச்சேன் மக்ளே. இனிமேலுக்கும் ரூமுக்குள்ள  யாரையும் விடாதே. நானே கேட்டாலும் விடாதே. என்ன அடிக்கவும் செய்யி, என்ன கன்ற்றோல் பண்ண என்னால முடியல.” தெவங்கி அழுதான்.

“சாக்குப் போக்கு தான். பொலிஞ்சி பொங்கி நெறஞ்சேன். இப்போ செதைஞ்சி அழிய ஆரம்பிச்சிருக்கேன். லட்சியவாதம் கடைசி என்ன நம்பிக்கையின்மையை நோக்கி தள்ளிட்டு. நா சந்திச்ச, நல்லவன்னி நம்புன எல்லாவனும் ஏதோ ஒரு சூழ்நிலைல ஏமாத்துகான் மக்ளே. எழுதது வேற வாழது வேற. இலட்சியாவாதம் புழு அரிச்ச மூளைல எங்க இருக்கும்.” அப்படியே தொடர்ந்து எனக்கு குடி வாங்கிக் கொடுக்கும் இளம்எழுத்தாளருக்கு வரும் போது, “அந்த புண்டாமவன் பெண்ணியம் ஆணாதிக்கம் மயிறுனு பேசுகான் எழுதுகான். ஆனா முதுகுக்கு பின்னாடி எப்படி வழிஞ்சி விழுவான் தெரிவான். அதுலாம் சொல்லக் கூடாது. ஏற்கனவே நான் பெரிய ஆணாதிக்கவாதி. இதுல இந்த நாய போயி அடிச்சி என்ன மயித்துக்கு. இவனுக்குலாம் கொறஞ்ச பட்ச எத்திக்ஸ் வேண்டாமா! அழகியல் தன்மைன்னி பாவனையை எழுதது நியாயமா! டெக்ஸ்ட் சொல்லும் அவன் யாருன்னி. போலியான எழுத்தாளன் அவன். இப்போ எதுக்கு அந்த மூத்த எழுத்தாளனுக்க மூத்திரத்த குடிக்கான். அவன் தானே முன்ன அவர கிறுக்கு கூதிமொவன்னி சொன்னான்,”

“ஒரு படைப்புக்கு அவன மாத்துற சாத்தியம் இருக்குல்லா! ஏன் அவனோட எண்ணவோட்டம் மாரி இருக்கக் கூடாது? தன்னோட ஸ்டாண்ட்ட தப்புன்னி நெனச்சிருக்கக் கூடாது. நீயும் சில நேரம் ஜட்ஜ்மெண்டலா தான இருக்க!”

“மக்ளே. நீ சொன்ன அந்த எளம் எழுத்தாளன் எழுதுன எல்லா எளவையும் படிச்சிட்டு தான் பேசுகேன்.  அவன் மாஸ்டர்ஸ் பண்ணுன ஒன்னுல இருந்து அப்படியே உருவி, அதையே வேற மாரி காப்பி பண்ணுவான். இப்போ என்னனா அந்த ஆளு கூடயே போயி எல்லா எலக்கிய விழாலயும் பல்லு இளிக்கான். முன்னாடி எங்கிட்டயே தலைவரு என்ன என்ன பேசினான் தெரியுமா? அப்படிப்பட்டவன் இப்போ பண்ணுறது சந்தர்ப்பவாதம் இல்லையா. இனி  தமிழோட முன்னணி எலக்கியவாதியா மாறுவான். ஏன் அவனே எலக்கிய மையமா மாறுவான். ஆனா அவனால நல்ல ஒரு டெக்ஸ்ட எழுத முடியாது. நல்ல டெக்ஸ்ட்க்கு  எக்ஸ்பையரி கெடையாது. அவன் கூட சேந்து, அவன மாரிதான் நீயும் ஆயிட்டே இருக்க,” சொல்லி முடிக்கும் முன்னே அவனை அறைந்தேன். என்னுடைய குற்றஉணர்ச்சி விஸ்தாரித்து என்னை அழுத்தியது. அழுகை முட்டியது. பற்களை கடித்தேன்.

“மக்ளே, நீ எழுதனதுல ஒன்னு நல்ல சிறுகதை. அதுனால ஒன்ன நா மதிக்கேன். நீ என்ன அடிக்கலாம். வாங்கிகிடுகேன். என்னால எழுத முடியாதுலா,” விபின் அப்படியே உறங்கிப் போனான்.

அடுத்த நாள் நான் விழிக்கும் முன்னே விபின் சென்னையை விட்டு கிளம்பியதை அறிந்தேன். அலைபேசியிலும் அவனை அழைக்கத் தோன்றவில்லை. அடுத்தநாளே சொந்த ஊர் திருவட்டாருக்கு சென்றுவிட்டான் என்ற செய்தியை குறுந்தகவல் மூலம் அனுப்பியிருந்தான். நாங்கள் இருவரும் கடைசியாக நேரில் சந்தித்துக்கொண்ட தருணம் நாங்கள் விரும்பியிராத ஒன்று. தனியனாய் அறையில் இருக்கும் போதும் விபினின் சொற்கள் சதா ஒலித்துக்கொண்டிருந்தன. ஏதோ ஒருவகையில் என்னை அசைத்துக் கொண்டிருந்த சொற்கள் அவனுடையவை. அதனாலயே அறையை காலி செய்து வேலை செய்த பதிப்பகம் எங்களுக்கென்று ஒதுக்கிய அறையில் தஞ்சம் புகுந்தேன். நான் செய்திருக்க கூடாத செயல் எதுவென்றால் அங்கே தங்கியதுதான். இரவானாலே யாரோ ஒரு புண்ணியவான் தோன்றுவார். மது கிடைக்கும், உணவு கிடைக்கும். இலக்கியம் இலக்கியம் சர்வமும் இலக்கியம்.

மூன்று மாதங்கள் கடக்க, தலையைக் கூட தூக்க இயலாமல் சுருண்டு படுத்துக் கிடந்த நாள் ஒன்றில் தான் என்னுடைய அம்மா இறந்தாள். கையில் ஒரு ரூபாய் இல்லை. யார் யார் கொடுத்தார் என்பதும் ஞாபகம் இல்லை. எப்படியோ கோயம்பேடு வந்தேன். கண் விழிக்கும் போது திருநெல்வேலி வந்தடைந்திருந்தேன். அலைபேசியில் விடுபட்ட அழைப்புகள் பல. அதில் அப்பாவுடையதும், விபினுடையதும் என்னை உறுத்தின. அப்பாவை அழைத்தேன், அவர் என்னிடம் தகனம் செய்வதற்குரிய பணம் இருக்கிறதா! என்பதைப் பற்றி வினவினார். வீட்டைப் பற்றி சிந்திப்பதையே நிறுத்தியிருந்தேன். இறக்கும் தருவாயில் அம்மா என்னை நினைத்தாவது பாத்திருப்பாளா! விபினை அழைத்தேன். அவன் ஏற்கனவே வீட்டிற்கே வந்துவிட்டதாகச் சொன்னான். நான் வருவதற்குள் அப்பாவிடம் பேசி சுடுகாட்டிற்குத் தகவல் சொல்லி, மீதமிருந்த எரிப்புக்குரிய வேலைகளையும் ஆரம்பித்திருந்தான். எல்லா செலவுகளையும் அவனே செய்தான். என்னிடம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேலில்லை. அதனாலயே அவனிடம் செலவைப் பற்றி எதுவும் பேசவில்லை. முதல் நாள் குழியில் இறக்கி, அன்றைக்கு இரவு குடித்து, உண்டு உறங்கி, அடுத்த நாள் காடாத்து முடிக்கும் வரையிலும் உடனிருந்தான். இருவருமே ஏனோ இலக்கியத்தை தவிர்த்தோம். அப்பா அவராக இல்லை. சொந்தங்கள் எல்லாமே எங்களை கைவிட்டது அவ்விரு நாட்களில் தான் புரிந்தது. காண்கையில் விபின் மிகவும் ஒடிந்து போயிருந்ததாகத் தோன்றியது. குடியை குறைத்து விட்டதாகக் கூறினான். ஆனால் புதிதாய் கஞ்சாவுக்கு பழகியிருந்தான். எங்கே கிடைக்கிறது என்று கேட்டதற்கு, ஏற்கனவே அறிந்த வெடிச் சிரிப்பில் “கன்னியாரில எங்கன்னாலும் கெடைக்கும் மக்ளே. டெய்லி நியூஸ் பேப்பருக்காக அவனுகளே சொல்லி வச்ச மாரி ஒருத்தன பிடிப்பானுக. ஏன் மக்ளே, தாய்த் தமிழ்நாட்டுல பாக்கும் போயிலையும் தடை. ஆனா எங்க கெடைக்காதின்னி சொல்லு. இப்போ உள்ள ஸ்கூல் பிள்ளைகளு மேத்ஸ் பீரியடுக்கும் சயின்ஸ் பீரியடுக்கும் உறக்கம் வராம இருக்க கூல் லிப்ப வாயில வச்சிட்டு இருக்கானுக.மெயின் ஸ்டீரிம் மீடியா பேசுமா இத. எலக்கியவாதி இதையும் பேசணும். நீ ஒரு சிறுகதை எழுதேன் இத வச்சி. அப்படியே நானும் வர மாதிரி,” சொல்லிவிட்டு மீண்டும் வெடித்துச் சிரித்தான். கடைசியாக வீட்டை விட்டு புறப்படுகையில் என் கைகளைப் பற்றிக்கொண்டு,

“கைல நாலு பைசாவோ நல்ல வேலையோ, இல்ல பூர்விக சொத்தோ இல்லாதவன் குடிக்கக் கூடாது. அதுலயும் எலக்கியம் பக்கம் வந்திர கூடாது. ஆனா அரசாங்கமும் எலக்கியமும் அதத்தான் விரும்புகு. தேனுக்காண்டி தேனீ அழையற மாதிரி தான். லட்சியவாதமும் கெடையாது. அப்படிப்பட்ட கடைசி லட்சியவாதி தேவிடியாபையன் நானாதான் இருக்கணும். நீ தப்பிச்சுரு.” வெம்பியாவாறே சொன்னான்.

ஒரு வாரம் ஊரில் இருந்தேன். சென்னை கிளம்பியதும் ஏனோ மனம் எதிலும் நிலைகொள்ளவில்லை. மீண்டும் வேலை தேடலாம் என்றெண்ணிய போது, படித்துமுடித்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. விபினின் இந்நிலை வேறு என்னை அரித்துக் கொண்டிருந்தது. இரவானாலே கைகள் நடுங்கும். தலை வின்வின்னென்று வலிக்கும். மனிதர்கள் அலையும் பகுதிக்கு ஓடி விடுவேன். குடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இரவு பெரும் சாபமானது. ஒவ்வொரு இரவும் கடினமான கல் ஒன்றை விழுங்குவது போல தொண்டை கனக்கும். இருந்தும் புத்தகங்களை வாசித்தேன். அறிவுஜீவி எனும் அகங்காரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கினேன், கடினமான ஒன்று. இலக்கியம் வேறொரு முகத்தை காட்ட ஆரம்பித்தது. எல்லாமே விலகி நான் இல்லாமல் ஆகும் போது, அதொரு இலகுவான இறகைப் போல ஆனது. எல்லா நேர்முகத்தேர்வுக்கும் சென்றேன். அவமானப்பட்டேன். மதுக்கடையை நோக்கிச் செல்ல கால்கள் பரபரக்கும். தஸ்தாவெய்சிகியின் மிஸ்கினும் லெபதேவும் காப்பாற்றினர். கடைசியாக நம்பிக்கையை மொத்தமாக இழக்க ஆரம்பித்திருந்த காலக்கட்டத்தில் கால்சென்டர் ஒன்றில் வேலை கிடைத்துவிடும் என்றொரு நம்பிக்கை எச்.ஆர் பேசியதும் கிடைத்தது. அன்றைய இரவு விபின் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தான். சில நிமிடங்களிலே அலைபேசியிலும் அழைத்தான். அதுவரையிலும் அவன் எதுவும் தமிழில் எழுதியிருக்கவில்லை.

‘யாரும் விழித்திடாத இரவு ஒன்றில்

யாரும் கண்டிராத காணவும் கூடாத

ஒளி நிரம்பித்ததும்பும் ஒரு நட்சத்திரம் மின்னும் போது,

யாரும் சென்றிராத அடர்வனம் ஒன்றில்

யாரும் நுகர்ந்திடாத நுகரவும் கூடாத

சுகந்தமாய் மணக்கும் ஒரு மலர் பூக்கும் போது,

யாரும் நுழைந்திடாத நீலசமுத்திரம் ஒன்றில்

யாரும் எடுத்திடாத எடுக்க வியலாத

சொலிக்கும் சிப்பியினுள் ஒரு வெண்முத்து பிறக்கும் போது,

யாவரும் அறிந்த அறிந்திருக்கக் கூடிய

கையாலகதவனோ கைவிடப்பட்டவனோ

எல்லாவகையிலும் நீங்கியிருப்பான்.’

“இதுல ஒரு கவித்துவ தருணம் இருக்கு, ஆனா கவிதையாகல்ல. இத இன்னும் வேற மாரி எழுத பாரு.”

“என்னால இதுக்கு மேல முடியாது மக்ளே. இத ஒனக்கு அனுப்பணும்ன்னி தோணிச்சு.”

“சரி. எனக்கும் நாளைக்கு ஒரு வேலை கிடைச்சிடும்ன்னு நம்பிக்கை இருக்கு. நீயும் சென்னை வரலாம்ல.”

“இல்ல, இனிமேலுக்கு அங்க வந்தா சரி வராது. என்னன்னலாமோ யாருட்டலாமோ பேசிட்டேன். இப்போ யோசிச்சா, எல்லாமே தோத்தவுடனே அத ஒத்துக்காம நம்மள காப்பாதிக்க நாம உருவாக்குற சொந்த அகங்காரம் மாதிரி தான் இதெல்லாமோன்னி தோணுகு.” அதிக நேரம் பேசினோம். இறுதியாக நான் தான் போதும் என சொல்ல வேண்டியதாக ஆயிற்று. விபினும் இன்றைக்கு நான் இருக்கும் நிலைக்கு ஏதோ ஒருவகையில் காரணம். அன்றைக்கு கண் அயர்ந்தவுடனே கனவிலும் அவனே என்முன் வந்தான், பேசினான், சிரித்தான், ஏசினான், கோவித்தான், அழுதான். காலை எழுந்ததும் பரங்கிமலை செல்ல தோன்றியது. தனியாக இருக்கையில் ஒருவித பயம் பீடித்திருந்தது உண்மைதான். அப்பாவை அழைத்துப் பேசினேன். விபின் அனுப்பிய குறுந்தகவல்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன். அவனிடம் பேசத் தோன்றியது. பரங்கிமலைக்கு நடக்க ஆரம்பித்தேன். வேகமான நகரமும் மனிதர்களும் கொஞ்சம் ஆசுவாசத்தை அளித்தார்கள். மலை ஏறி தேவக்குமாரனை தரிசித்து நிம்மதியை உணர்ந்ததும், குன்றின் முனையில் நின்றபடி நகரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். விபினிடம் பேசலாம் என்றெண்ணவும், தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பை ஏற்கவும் கனத்த குரலில்,

“திருவட்டாரு ஸ்டேசன்ல இருந்து ஏட்டு பேசுகேன். பேரு பௌதி பெருமாளா?”

அவர் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் அளித்தேன் என ஓர்மையில்லை. அலைபேசியை மறுபடியும் பாக்கெட்டில் நுழைத்து வானை கூர்ந்து நோக்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரம் கடந்திருக்குமோ சட்டென்று ஜொலித்தபடி விண்மீன் ஒன்று வானில் உதிக்க ஆரம்பித்தது. அடுத்த சிறுகதையும் வார்த்தைகளாக என்னுள் நிரம்ப ஆரம்பித்தன.

‘பகலில் உதிக்கும் விண்மீன்’

௦௦௦

வைரவன் லெ.ரா

வைரவன் லெ.ரா நாகர்கோயிலைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments உரையாடலுக்கு

  1. இது ஒரு அனுபவக் கட்டுரை. சிறுகதை எனச் சொன்னீர்கள் என்றால், பேசுவதற்கு ஒன்றுமில்லை. வர வர சிறுகதைகள் எனும் வகையில் அனுபவக்குறிப்புகளையே பிரசுரிக்கிறீர்கள்.

  2. அலட்டலாக ஆரம்பிக்கும் கதை அலட்டிக் கொண்டே சென்று அம்மாவின் இறப்பில் வாசகனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி மீண்டும் அலட்டி நிறைகிறது. ஈழத்தில் ஒரு மூத்த எழுத்தாளரும் விபினைப் போலவே அலைகிறார். அவரை நினைவு படுத்தியதைத் தவிர இச்சிறுகதை வேறு ஒன்றையும் ஏற்படுத்தவதில்லை. இது என் நியாயமான பார்வை. நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop