ஆவி ஒழியினும் ஆசை ஒழியா! : இசை

கம்பனின் காதல் கவிதைகள்
புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் உள்ள கம்பன் சிலை


“நமக்குக்  காவியக் காதல்கள் தேவைப்படுகின்றன. அதன் மீது கொஞ்சம் தத்துவமும்  சேர்க்கப்பட்டால் நம்மால் உவப்பில் சுழலாமல் இருக்க முடிவதில்லை. கம்பன் சங்கத்தமிழ் மனதை இன்புறுத்தவே அண்ணலையும் அவளையும் தொடக்கத்திலேயே நோக்கச் செய்கிறான். வான்மீகத்தில் இது நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் அல்ல. காவியகர்த்தாவின் இந்த திருகலின் காரணமாகவே, ‘இம்பர்வாரியின்’ வாசிப்பில் இன்றுவரை மிக அதிகமான பங்கேற்பும் வரவேற்பும் பெற்றிருப்பது ராமன்-சீதை திருமண நிகழ்வு என்று ஊகிக்கிறேன். திருமணம் ‘நாளை’ என்று நற்றவன்  விசுவாமித்திரன் உரைக்கவும்,  மணமக்கள் இருவரும் மணமேடையில் சேரவும் எண்பத்தேழு பாடல்கள் தேவைப்படிருக்கின்றன.” -பார்கவி (இம்பர்வாரி – கம்பராமாயண வாசிப்புக் குழுமம்)

ஆம். காவியத்தில் காதல்சுவை கூட்டத்தான் கம்பன் இராமனையும் சீதையையும் திருமணத்திற்கு முன்பே காதலராக்கி விடுகிறான். திருமணத்திற்குப் பிறகு காதலின் ஆவேசம் குறைந்துவிடுகிறது. ஏக்கத்தின் தேன் வற்றிவிடுகிறது. நாவூறச் செய்யும் ’திருட்டு மாங்காய்’ சட்டென மறைந்து விடுவதாக  காதலித்து மணமுடித்த சிலர் கண்ணீர் வடிக்கக் கண்டிருக்கிறேன். கல்யாணத்திற்குப் பயந்து காதலையும் சேர்த்து கைவிட்டோர் வரிசை ஒன்றும் நம்மிடையே உள்ளது.

பார்கவி இங்கு குறிப்பிட்டிருக்கிற 87 பாடல்களில் காதல் இருக்கிறது.ஆனால் கூடவே திருமண ஏற்பாடுகளாக மிதிலையை அலங்கரிப்பது, மணமக்கள் அலங்கரித்துக் கொள்வது போன்று  வேறு விசயங்களும் கலந்துள்ளன. ஆகவே நாம் தூய காதலைத் தேடி “அண்ணலும் அவளும் நோக்கி”ய தருணத்திற்கு முன்னோக்கிச் செல்லலாம்.

நான் கம்பராமாயணத்தை முற்றோதியவன் அல்ல. முற்றோதியவர்கள் உதவியுடன் கம்பனின் காதல் கவிதைகளை தொகுத்து அணுக முயன்றுள்ளேன். விடுபடல்கள் இருக்கும். இந்தப் பாடல்களின் இனிமை  கம்பனில் மேலும் கொஞ்சம் காதலைத் தேட உங்களை உந்தலாம். காதலில் சுத்தம்,  அசுத்தம் பார்க்கவில்லை. சூர்ப்பணகை என்கிற அசுத்தத்தில் தலைப்பு அமைந்தது சுத்த தெய்வத்தின் அருள்.

“ கண்டதும் காதல்”  என்பதை மாற்றுகுறைந்ததாக,   கேலிக்குரியதாகக்  காண்பதே நமது காலத்தில் அதிகம். ஆனால்  சங்கத்தழிழ் மரபு அதுவே இயற்கை என்கிறது. களவியலின் முதல் காட்சி “ இயற்கை புணர்ச்சி” தான்.  அதாவது கொள்வரும் கொடுப்பாரும் இன்றி ஒத்த தலைவனும் தலைவியும் வினைவலியால் தாமே இணைவது. காமத்துப்பாலின் முதல் காட்சியும் “கண்டதும் காதல்’ தான். “கண்தர வந்த காம ஒள் எரி” என்கிறது குறுந்தொகை. ” நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரையாகும்” என்கிறது தொல்காப்பியம்.

விஸ்வாமித்ரனோடும், இலக்குவனோடும் மிதிலை வழியே நடந்து செல்லும் இராமனும், கன்னிமாடத்தில் நின்று கொண்டிருக்கும் சீதையும் ஒருவரையொருவர் நோக்குகிறார்கள் முதன் முதலாக … கண்டதும் காதல்தான்…

“எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும்,  நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்:  அவளும் நோன்கினாள்.” (514)

கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன. சீதை “எண்ண அரு நலத்தினளாகத் தோன்றுகிறாள். அதாவது எண்ணிப்பார்க்கவும் இயலாத அழகு. கண்கள் முதலில் ஒன்ற, பிறகு உணர்வும் ஒன்றுகிறது. மேற்கோளில் சுட்டியுள்ள படி சங்கத்தமிழ் மனத்தை இன்புறுத்தும் வகையிலான பாடல் என்றும் இதைக் கொள்ளலாம். கம்பன் அடுத்த பாடலை காமத்துப்பாலின் இரண்டாம் பாடலின் சாயலோடே அமைத்துள்ளான். இரண்டிலும் “ நோக்கிய நோக்கும், தாக்கும் அணங்கும்” வருகின்றன.

முதன்முதலாக  வாசிக்கையில் அதன் தாளக்கட்டில் மெய்மறந்து உவந்து பிறகு அருகில் சென்று ஆழ்ந்து காண்கையில் ஏமாற்றம் அளித்த பாடல் ஒன்று எனக்கு கம்பனில் உண்டு.  புகழ்பெற்ற பாடல் தான்.. ரஜினிகாந்த் கூட  இந்தப் பாடலைப் பாடம்  எடுத்துள்ளார்..

“மருங்கிலா நங்கையும், வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர்……”( 517)

துளியும் குற்றம் காணமுடியாத இராமனுக்குப் பக்கதில் நிற்பவள், சின்னஞ்சிறு இடையோடு கூடிய சீதை. வெறும் உடல் வர்ணனை.  “வசை இல் ஐயனோடு” ஒப்பிகையில் ”மருங்கில் நங்கை”  எங்கோ பாதாளத்தில் கிடக்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. ஆம்..இதை எழுதுவது நான் தான்.. எனக்கே இப்படித் தோன்றியதெனில் பெண்ணியவாதிகளுக்கு, நன்னெறிக் கழகத்தார்க்கு என்ன தோன்றியிருக்கும்? பெரிதாக ஒன்றும் தோன்றியிருக்காது என்று நினைக்கிறேன்.  ஒரு  மகாகவி அவ்வளவு எளிதாக அவனுக்கு எதிராக நம்மைச் சிந்திக்க விட்டுவிடுவதில்லை. இந்தப் பாடலின் தாளா மாட்டாத இனிமையைத் தாண்டி  தர்க்கத்திற்கு நகர்வது அவ்வளவு எளிதல்ல.

கம்பனை “ மிகையில்  நின்றுயர் நாயகன்” என்று முன்பு எழுதியிருந்தேன்.  “மிகைபடக் கூறல் “நமக்குத்தான் குற்றம். ஆனால் அவனது மிகைகள்  அப்படி ஜொலிக்கின்றன!  கவிகளின் நெஞ்சில் அழுக்காறை அலையடிக்கச் செய்பவை அவை. அப்போதெல்லாம் ஒரு ‘வன்வசை’யால் அவனை அணைத்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. 

உண்மையில் ஒவ்வொரு பாடலாக எழுதலாம்.சம்மணம் போட்டு அமர்ந்து பாடிப் பாடிப் இன்புறலாம். ஆனால் தனி நூலில்தான் அப்படி செய்ய முடியும். இச்சிறிய கட்டுரைக்குள்  பல பாடல்களை எழுதாமல் கடந்துவிட  திட சித்தம் கொள்ள வேண்டியிருந்தது.

 சீதையையும் இராமனையும் ஒருவரையொருவர் காண வைத்து  நான்கே பாடல்களில் அவர்களை பிரித்தும் வைத்து விடுகிறான் கம்பன். பின் வருவதெல்லாம் பிரிவேக்கப் பாடல்கள் தான்.  ஒரு பாடல்… காதல் நோய் முற்ற வருந்துகிறாள் சீதை..

“மால் உற வருதலும், மனமும் மெய்யும், தன்
நூல் உறு மருங்குல் போல், நுடங்குவாள் ( 520)

சீதை எவ்வளவு வருந்தினாள் என்று சொல்ல வேண்டும் அல்லவா? நான் என்றால் கடைவாயில் கை கூட்டி,  வானத்தைப் பார்த்துக் கொண்டு  நெடுநேரம் அமர்ந்திருப்பேன். கம்பன் அவளைச் சொல்ல அவளிடமே உவமை பிடிக்கிறான்.. “ நூல் உறு மருங்குல் போல..” அதாவது அவள் நூலிடை எப்படி மெலிந்துள்ளதோ அவ்வளவு மெலிகிறதாம் அவள் உள்ளம்.

இந்த இடத்தில் உங்கள் யாருக்கும் கேட்காமல் ஒரு ‘வன்வசை ‘ஒலிக்கிறது. 

சில பாடல்கள் அதன் திரண்ட பொருளாக சாதாரணமானவை. ஆனால் அவற்றையும் ஆகச்சிறந்தவை போல் காட்டுவது அதன் இசைத் தன்மை. இதற்கா இவ்வளவு மயங்கினோம் ?என்று இறுதியில் தோன்றினாலும் மயங்கினோம் என்பது உண்மை. 

“நெருக்கி உள் புகுந்து, அரு
நிறையும் பெண்மையும்
உருக்கி, என் உயிரொடு
உண்டு போனவன்
பொருப்பு உறழ் தோள்
புணர் புண்ணியத்தது
கருப்பு  வில் அன்று; அவன்
காமன் அல்லனே!”( 533)

“ நாள் அறா நறு மலர்” என்கிறான் ஓர் இடத்தில்.  அன்றலர்ந்த மலரைத்தான் அப்படிச் சொல்கிறான். ஆனால்  இந்தச்  சொற்றொடருள்  நாளின் கால்கள் எனக்குத் தெளிவாகத் தெரிகின்றன. சீதையின் காதல் நோயைத்  தணிக்க தோழியர் அவளை  மலர்படுக்கையில் கிடத்தினால் அந்த மலர்கள்  ஆற்றுவதற்குப் பதிலாக சுறுக்கென்று குத்துகின்றன. அவள் உடலின் வெம்மை தணிய  சந்தனக் கலவைகளை அள்ளிப் பூசினால்  அவை பொரிந்து  தீப்பொறிகள் போலச்  சிதறுகின்றன

“ சொரிந்தன நறுமலர் சுறுக் கொண்டு ஏறின; பொரிந்தன கலவைகள், பொரியின் சிந்தின…..”( 529)

வெறுமனே இரண்டு நிமிடம் நோக்கி விட்டுப் போனதற்கே இந்த நிலைமை. 

“இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்;
சுந்தர மணி வரைத் தோளுமே. அல; 
முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!” ( 536)

தன் உயிரை இப்படி நிலைகுலைய வைத்தது அவனிடம்  உள்ள எது? என்று யோசிக்கிறாள். அவனது சிகையும், வதனமும், தாழ்ந்த கைகளும் , மலை போன்ற தோள்களும் நினைவில் எழுகின்றன. ஆயினும், இவையல்ல? பின் அவள் உயிரை உண்ட அது எது? “ முந்தி , என் உயிரை அம்முறுவல் உண்டதே !” எனக் கேவி அழிகிறாள். 

முறுவல் அழகானது. முறுவலிப்பவரை பொலியச் செய்வது. அவ்வளவு அழகான ஒன்று , கிட்டாத போது  அவ்வளவு துயரமானதாக மாறி விடுகிறது. பெரும்பாலும் நாம்  எங்கு நின்று சிரித்தோமோ,  அங்கு நின்றுதான் அழுகிறோம் .ஆயினும் எளிய உயிர்களால் முறுவலுக்கு முகம் திருப்பி விட முடிகிறதா என்ன? 

ஏற்கனவே பிரிவுத் துயரில் வருந்திக் கொண்டிருக்கையில் அந்தி வேறு கவிகிறது.

“அரியவட்கு அனல் தரும் அந்திமாலையாம்
கரு நிறச் செம்மயிர்க் காலன் தோன்றினான்”

கருமையும் செம்மையும் கலந்த  அந்தியின்  வண்ணத்தாலான   தலைமயிரோடு காலன் வருகிறான். மாறன் நிறுத்தாமல் மலர்கணைகளை எறிகிறான். “எய்வான் ஒருவன் கை ஓயான்; உயிரும் ஒன்றே; இனி இல்லை”( 545)

இரவு நீண்டு கொண்டே போய் துயரைப் பெருக்குகிறது. தனிமை,  தீராத இருளாய் விரவிக் கிடக்கிறது.

“ஆலம் உலகில் பரந்ததுவோ?
ஆழி கிளர்ந்ததோ? அவர்தம்
நீல நிறத்தை எல்லோரும்
நினைக்க, அதுவாய் நிரம்பியதோ?
காலன் நிறத்தை அஞ்சனத்தில்
கலந்து குழைத்து, காயத்தின்
மேலும் நிலத்தும், மெழுகியதோ?-
விளைக்கும் இருளாய் விளைந்ததுவே!” ( 546)

ஆலகாலம் உலகெங்கும் பரவி விட்டதோ?  கடல் கிளர்ந்தெழுந்து ஆடுகிறதோ? இராமனின் கருநீல நிறத்தை எல்லோரும் எண்ணியுறுக அதுவே எங்கும் நிறைந்து விட்டதோ? காலனின் கருமையை மையின் கருமையோடு கலந்து குழைத்து  ஆகாயத்தின் மீதும் பூமியின் மீதும்  மெழுகிவிட்டு விட்டார்களோ என்னவோ?

இப்பாடலை வாசிக்கையில்’ ஒப்பிலா மணிப்புலவ’ரின் புகழ்பெற்ற பாடலான “அரவம் கரந்ததோ?அச்சுமரம்  இற்றுப் புரவி கயிறுருவிப் போச்சசோ..?” என்கிற பாடல் நினைவுக்கு வந்தது. கம்பனை போன்ற ஒரு மகாகவியை வாசிக்கையில் இன்னொரு சின்னக் கவி நினைவில் வருவானெனில் அவன் எப்படி சின்னக்கவி? ’ஒப்பிலா மணி’தான் அவன்.

Courtesy : Ramana Peram

சீதையைப் போன்றே இராமனும் பிரிவில் உழல்கிறான்.. அதாவது அந்த இரண்டு நிமிடச் சந்திப்பிற்கு பின் நிகழ்ந்த பிரிவில். அவள்  விழிகளில் வெள்ளைப் பாற்கடல் அலையடிப்பதாகச் சொல்கிறான். முற்றிய ஏக்கத்தால் அவளை “ வெள்ளை வண்ண விடம்” என்றும் கூறி வருந்துகிறான். அசையும் அசையாப் பொருள் அனைத்திலும் அவள் பொன் உருவே தெரிகிறது அவனுக்கு. அவள் முலையழுந்தும் பேறில்லாத தன் மார்பை ” ஏண் இல் ஆகம்” என்று நோகிறான்.  அதாவது ஒரு பெருமையுமற்ற மார்பு.

“வண்ண மேகலைத் தேர் ஒன்று, வாள் நெடுங்
கண் இரண்டு,  கதிர் முலைதாம் இரண்டு,
உள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டால்;
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ? ( 623)

இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும்.  ஆனால் என்  கூற்றைப் பாருங்கள்…  எவ்வளவு படைகளைத்  திரட்டிக் கொண்டு என் மீது வருகிறது!

இராமனுக்கு , தான் மாடத்தில் கண்டவள் கன்னி தானா என்று திடீரென ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. அதற்கான பதிலையும் அவனே சொல்லிக் கொள்கிறான்.

“ஆகும் நல்வழி: அல்வழி என் மனம் ஆகுமோ?”  

நல்வழி அல்லாது அல்வழியில் என் மனம் போகுமோ? இப்படி என் மனம் அவள் பால் போகிறதென்றால் அவள் கட்டாயம் கன்னிதான் என்று உறுதி கொள்கிறான். 

ஆஹா… !!! நல்வழி அல்லாது அல்வழி காட்டாத மனம் வாய்ப்பது  எவ்வளவு பெரிய பேறு! அது உற்ற நண்பன்! உறு துணை! துரதிர்ஷடவசமாக என் மனதை நம்பி என்னால் ஒரு எட்டுக் கூட எடுத்து வைக்க முடிவதில்லை. 

சீதையும் இராமனும் முதன்முதல் நோக்குகையில் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் ஒருவருள் ஒருவர் புக்கிவிட்டனர். சனகனின் அவையில் விஸ்வமித்ரனின் விழிக்குறிப்பிற்கு இணங்கி வில்லை ஒடித்துவிடுகிறான் இராமன். வில்லை ஒடித்தவன் சனகனின் மகளிற்கு மணாளன் ஆகிறான். . ஒரு வேளை இராமன் கன்னி மாடத்தில் கண்ட பெண்ணும், வில்லொடித்து மணமுடிக்க இருக்கிற பெண்ணும் வேறு வேறாக இருந்திருந்தால் இராமன் என்ன செய்திருப்பான்? என்கிற கேள்வியை சமீபத்தில் கம்பராமாயணத்தை முழுவதும் வாசித்து முடித்திருக்கிற சுதா சீனிவாசனிடம் கேட்டேன். அவர் கொஞ்சம் பதட்டமானார். கம்ப இராமாயணத்துள் குறுக்கும் மறுக்குமாக ஓடினார். கொஞ்ச நேரம் கழித்து ஒரு விடை சொன்னார். கன்னிமாடத்தில் தானே இராமன் சீதையைப் பார்க்கிறான். ஆகவே அவள் தான் அரசிளங்குமரி என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று சொன்னார். ஒரு ஊரில் ஒரே ஒரு கன்னி மாடம் தான் இருக்குமா?  கன்னிமாடம் என்பது இளவரசிகளுக்கு மட்டுமானதா என்கிற துணைக் கேள்விகள் தோன்றின ஆனாலும் நான் அவற்றை கேட்கவில்லை. மறுபடியும் அங்மிங்கும் ஓடி, இருவரும் வேறு வேறாக இருக்கும் பட்சத்தில் சீதையின் நிலை என்னவாக இருக்கும் என்கிற பதிலை கண்டுபிடித்து அனுப்பினார். அவர் அனுப்பிய பாடலில் “ அத்தோன்றலே அவன் ; அல்லனேல், இறப்பேன்” என்று உறுதிபடக் கூறிவிடுகிறாள் சீதை.   காதலரைத்தான் மணமுடிக்கப் போகிறோமா என்கிற சந்தேகமும் வேதனையும்  இருவருள்ளும் எழுகிறது. கம்பன் அதைப் பல பாடல்களில் பேசியுள்ளான்.  ஒரு அரசகுமாரன்  அவையில் வில்லொடித்துவிட்ட மகிழ்ச்சியான செய்தியை சீதையின் தோழியான நீலமாலை ஓடிவந்து அவளிடம் சொல்கிறாள். அவள்தான் இராமன் என்கிற பெயரையும் முதன்முதலாக சீதையிடம் தெரிவிக்கிறாள். சீதைக்கு அவன் தானா இவன் என்கிற் சஞ்சலம்… ‘தம்பியோடும், முனியோடும் வந்தவன், தாமரைக் கண்ணினான்..’ போன்ற குறிப்புகளால் அவனே இவன் என்று ஐயம் தீர்கிறாள்.

இருவரும் வேறாக இருந்தால்  இராமன் என்ன செய்திருப்பான் என்கிற அதே கேள்வியை நான் சீனிவாசனிடமும் கேட்டேன்.  அவர் மென்மையான குரலில் “இருவரையுமே திருமணம் செய்து கொண்டிருப்பான்” என்று சொன்னார்.” உறுதியாகத்தான் சொல்கிறீர்களா”? என்று  கேட்டேன்.  “ உறுதியாகத்தான்” என்று திரும்பவும் சொன்னார். வீட்டிற்கு ’அனுமன் சேனா’வை அனுப்பவா? என்று அச்சுறுத்திய போதும் அவர் தன் கருத்தில்  பின் வாங்கவில்லை. “ எனில் ”இராமசந்திர மூர்த்தி,   இராமச்சந்திர மூர்த்தி இல்லையா?” என்று கேட்டேன் “ யாருமே இராமசந்திர மூர்த்தி இல்லை” என்று  தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்.

 நாளை திருமணம் என்று அறிவித்தவுடன் அந்த இரவைக் கடக்க முடியுமாமல் “ இரவே! கொடியாய், விடியாய்” என்று சீதை வருந்துகிறாள். நாளைகுத் தானே திருமணம் படுத்தால் விடிந்துவிடப் போகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் இது காதல்….அதுவும் காவியக் காதல் அது நமக்குப் புரியாது. ஆகவே நாம் பாடல்களை மட்டும் கவனிப்போம். அந்த இரவில் அவளை வருத்த தென்றலும் சேர்ந்து கொள்கிறது…

“மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்,
மின் தொத்து, நிலா நகை, வீழ் மலயக்
குன்றில்,  குல மா முழையில், குடிவாழ்
தென்றற் புலியே! இரை தேடுதியோ?” (1166)

பாடலில் தென்றல் புலியாகிவிடுகிறது. குளிர்வாசம் தருவதற்குப் பதிலாக அது அனலை உமிழ்கிறது. அந்த இரவின் நிலாக்கற்றைகளையே கொடிய பற்களாக்கிக் கொண்டு  அது அவள் மேல் பாய்கிறது.

 ‘உருவக அலர்ஜி’ உடைய ஆள் நான். உருவகம் என்பது எழுதத் தெரியாதவன் எழுதும் ஒரு வகை என்கிற எண்ணம் எப்படியோ என் மண்டைக்குள் போய் விட்டது. ஆனால் ’ இந்த “தென்றற் புலியை’ நான் முதன்முதலாக சந்தித்த இரவு  இன்றும் நினைவில் இருக்கிறது. அந்த இரவில் அதற்குப் பின் உறங்க முடியவில்லை. ஒரு மகாகவி தொடுகையில் நமக்குப் பிடிக்காததெல்லாம் பிடித்துவிடுகிறது.

“பண்ணோ ஒழியா; பகலோ புகுதாது;
எண்ணோ தவிரா; இரவோ விடியாது;
உள் நோவு ஒழியா; உயிரோ அகலா;
கண்ணோ துயிலா; இதுவோ கடனே?” (1169)

இந்த நள்ளிரவில் உறங்காது விழித்திருக்கும் எனக்கு சின்னச் சின்ன ஓசைகள் கூட தெளிவாகக் கேட்கின்றன. பகற்பொழுதோ இப்போதைக்கு வருவதாக இல்லை. அவனைக் குறித்த எண்ணங்களோ என்னை விடுவதாகவும் இல்லை. இரவோ  விடியவே விடியாது போலிருக்கிறது. உள் நோவும் ஒழியாமல், உயிரும் அகலாமல்  இப்படி வருந்தி, வருந்தி அழியும் நிலைதான் எனக்கு விதிப்பட்டிருக்கிறதா?

ஓரிடத்தில் “ ஆடக வளைக்குயில்” என்று விளிக்கப்படுகிறாள் சீதை. பொன்னாலான வளையல்களை அணிந்த குயில் போன்றவளே! என்கிற சாதாரண விளிதான். ஆனால் அந்த “ ஆடக வளைக்குயிலை” பார்க்க வேண்டும் என்று தோன்றிவிடுகிறது நமக்கு. 

ஆரணிய காண்டம்.. சூர்ப்பணகைப் படலம்.  “ உடன் உறை கடிய நோய்” அன்ன  சூர்ப்பணகை தோன்றுகிறாள். உம்பர்க்கும், இம்பர்க்கும், முனிவர்க்கும்  தன்  வேந்தர்க்கும் இறுதி காட்டக்கூடிய சூர்ப்பணகை இராமனைக் கண்டு அவன் அழகில் மயங்குகிறாள்.

“சிந்தையின் உறைபவற்கு
            உருவம் தீர்ந்ததால்;
இந்திரற்கு ஆயிரம்
            நயனம்;  ஈசற்கு
முந்திய மலர்க்கண்  ஓர் மூன்று;
            நான்கு தோள்,
உந்தியில் உலகு அளித்தாற்கு’
            என்று உன்னுவாள்.”( 2743)

இவன் இந்திரனோ எனில் அவனுக்கு ஆயிரம் கண்ணாயிற்றே? சிவனோ எனில் அவனுக்கு மூன்று கண்கள். உந்தியில் உலகளித்தவனுக்கு நான்கு தோள்கள். மன்மதனோ எனில் அவனுக்கு உருவமே இல்லை. எனில் இவ்வளவு அழகு ததும்பும் இவன் யார் என்று குழம்புகிறாள். 

மன்மதன் உறைவிடம் சிந்தை என்கிறான் கம்பன்.  காமத்தை’ சிந்தை நோய்”  என்றே இன்னொரு இடத்தில் சொல்கிறான்.

இவ்வளவு பெரிய அழகன் இந்தக் காட்டில் வந்து தவம் செய்யுமாறு “தவம் செய்த தவம் என்?” என்று வினவுகிறாள்.

“உடுத்த நீர் ஆடையள், உருவச் செவ்வியள்
பிடித் தரு நடையினள் பெண்மை நன்று; இவன் 
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம்மயிர் 
பொடித்தன போலும், இப்புல் என்று உன்னுவாள்” (2750)

நிலமகள் கடலை உடையாக உடுத்திக் கொண்டிருக்கிறாள். அவள் வடிவோ செம்மை. அவள் நடையோ பெண்  யானையை ஒத்தது.  இராமனின் அடித்தலம் நிலத்தில் பதிய அவளின் மேனி மயிர்கள் சிலிர்த்து எழுந்தது போல  இங்கே புற்கள் எழுந்துள்ளன.  இராமனின் அழகைச் சொல்லும் உச்சமான பாடல்களில் ஒன்று இது.

 கம்பன் சில சமயங்களில் விரைவிலேயே உச்சத்தை தொட்டு விடுகிறான். உச்சத்தை தொட்ட பிறகும் ஒன்றைத்  திரும்பத் திரும்ப பிதற்றும் இடங்கள் என்று  சில உள்ளன.  அங்கு கொஞ்சம் சலிப்பு தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அந்தப் பாடல்களிலும் அவனிடம் உள்ள இசைக்கலைஞன் தோற்பதில்லை.

 இராமனிடம் தன்னை மணமுடித்துக் கொள்ளும் படி இறைஞ்சுகிறாள். அவன் அவளைத்  தவிர்த்துவிட்டு நடக்கிறான். காமத்தீயில்  எரிகிறாள் சூர்ப்பணகை. வழக்கம் போல் மன்மதன் தன் வேலையைத் துவங்குகிறான்

 மதனிடம் மன்றாடும் பல பாடல்களை சங்கத் தலைவியர் பாடியுள்ளனர்.அவனை வசை மொழியும் பாடல்களும் சங்கத்தில் உண்டு. ஆனால் சங்கத் தலைவியர் யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு சூர்ப்பணகைக்கு கிடைக்கிறது. அவள் அரக்கியல்லவா? ஆகவே மாரனை மென்று தின்னத் துணிகிறாள்.

“ வன் சிலையின் மாரனைத் தின்னும் நினைப்பினாள்” என்கிறான் கம்பன்.  அவள் அப்படி நினைக்கிறாள். ஆனாலும் இறுதியில்  வெல்வதென்னவோ மாரன்தான். அவன்  கைப்பிடித்தென்றலை எடுத்து அவள் மீது ஊதி விட்டுவிடுகிறான். 

“பூ எலாம் பொடி ஆக,
            இப் பூமியுள்
கா எலாம் ஒடிப்பென்’
            என, காந்துவாள்;
சேவலோடு உறை செந்
            தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச,
            நடுங்குவாள்.” ( 2807)

 பூக்கள் யாவும் பொடிந்து சிதறும் படி இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு சோலையையும் அழிப்பேன் என்று சினந்தெழுகிறாள். அப்போது சிவந்த தலையுடைய அன்றில் ஒன்று தன் ஆணோடு குலவிக் கூவும்  ஒலி எழுகிறது. அந்த ஒலிக்கு தன் அத்தனை வலிமையும் ஒடுங்க , அஞ்சி நடுங்குகிறாள்

“ஆகக் கொங்கையின், ஐயன்
        என்று, அஞ்சன
மேகத்தைத் தழுவும்;
   அவை வெந்தன
போகக் கண்டு புலம்பும், 
   அப் புன்மையாள்
மோகத்துக்கு  ஓர்  முடிவும் 
உண்டாம் கொலோ?”   (2815)

மை போன்ற கரிய மேகக் கூட்டம்  தவழ்ந்து செல்ல, அதை  இராமன் என எண்ணி தன் கொங்கையழுந்த அணைப்பாள்.  அவளது காமச்சூட்டில் அவை வெந்து போகக் கண்டு அழுவாள். அவளது மோகத்துக்கு ஒரு முடிவு உண்டா என்ன? 

சூர்ப்பணகை சீதையை முதலில் அரக்கி என்று ஏசுகிறாள். உன் உடன் இருப்பவளை நம்பாதே என்கிறாள் இராமனிடம். ” எனக்கும் இராமனுக்கும் இடையே நீ ஏன் வந்தாய்” என்றவளை ஏசுகிறாள். அவளைக் கவர்ந்து கொண்டு போய்  ஒளித்துவிட்டு,  தான் சீதையின் வடிவெடுத்து இராமனுடன் கூட எண்ணுகிறாள். சீதையைக் கவரப் போய் மூக்கும் முலையும் அறுபடுகிறாள்.

சீதையின் அழகைக் கண்டு கண்டு பொறாமையால் குமைகிறாள்.  இவ்வளவு அழகுள்ளவள் அருகில்  இருக்கையில்,  இவன் எப்படி என்னைப் பார்ப்பான்?

“காவியோ, கயலோ,
            எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின்
            செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும்
            கொலோ? ‘ எனும்-
ஆவி  ஓயினும், ஆசையின்
            ஓய்வு இலாள்.”  (2818)

 நீல மலரோ, கயல் மீனோ  என்று கருதத்தக்க கண்களுடைய இவள் திருமகளைக் காட்டிலும் அழகாய் இருக்க , இவன் எப்படி அவளை விடுத்து என்னை நோக்குவான் என்று வருந்துகிறாள் . அவளது ஆவி ஒழிந்தாலும் ஆசை ஒழியாது போலும்? 

‘ஆவி ஓயினும்  ஆசை ஓயாது’ என்கிற வரி வெறுமனே சூர்ப்பணகையைக் குறிக்கும் ஒன்றா என்ன? ஒட்டு மொத்த உயிர்குலத்தின் ஒவ்வொன்றையும் குறித்து நிற்கிறது. 

தான் இலக்குவனால் அறுபட்டதை அவள் இராமனிடம் சொல்லி அழும் பாடல் ஒன்று…

“வந்தானை முகம் நோக்கி,
            வயிறு அலைத்து, மழைக் கண்ணீர்,
செந்தாரைக்  குருதியொடு
            செழு நிலத்தைச்  சேறாக்கி,
அந்தோ!  உன் திருமேனிக்கு
            அன்பிழைத்த  வன் பிழையால்
எந்தாய்!  யான் பட்டபடி
            இது காண்’ என்று,  எதிர் விழுந்தாள்.” ( 2846)

கண்ண்ணீர் மழையும்,   காயத்துக்    குருதியும் சேர்ந்து அந்த நிலத்தை  சேறு போல் ஆக்கிட , வயிற்றில் அடித்துக் கொண்டு அலறுகிறாள். “ உன் அழகிய மேனிக்கு ஆசை கொண்டு நான் பட்ட பாட்டை பாரும் என் தலைவா!”

இந்தப் பாடலின் ஓப்பாரி ஓசை சூர்ப்பணகையை  கொடிய அரக்கி என்பதிலிருந்து எளிய பெண் என்றாக்கி விடுகிறது. நீதி, அநீதி என்கிற இருமைகள் மறைந்து போய், நாமும் அவளோடு சேர்ந்து அழத்துவங்கி விடுகிறோம்.” ஒப்பாரிக்கு முன் ஒன்றும் நிற்காது” என்று பழமொழி ஏதேனும் உள்ளதா?

கெஞ்சிக் கூத்தாடியும் , அழுது புரண்டும் இராமன் தன்னை ஏற்றுக் கொள்ளாத போது சூர்ப்பணகை ஒரு சமரசத்திற்கு வருகிறாள். “உனக்கு மணமாகிவிட்டதாலும்,  சீதையை நீ அளவு கடந்து நேசிப்பதாலும் என்னை வெறுக்கிறாயெனில்  லட்சுமணனையாவது எனக்கு மணமுடித்து வை” என்கிறாள்.  மற்ற  இராமயணங்களில் இப்படி உள்ளதா அல்லது சூர்ப்பணகை பாத்திரத்தை மேலும் இழிவாக்க கம்பன் புனைந்ததா என்று தெரியவில்லை. எப்படியாயினும் அது ஒரு டெக்னிக் என்று விளங்கிக்கொள்ளவே நான் விரும்புகிறேன். அவள் கொண்டது இராமமோகம்தான். இளையவனை மணப்பது இராமனுடன் இருப்பதற்கான ஒரு உபாயம்.’ காலம் கணியும்’   என்று அவள் நம்புகிறாள். பெண்ணே! இங்கு  கனியவே கனியாத  காலங்கள் என்று கோடான கோடிகள் உண்டு.

’ சூர்ப்பணகை சூழ்ச்சிப்  படல’த்தில், இராவணனின் மனதில் சீதை மீது காமம் மிகும் படி அவளது அழகை புகழ்ந்து , புகழ்ந்து வர்ணிக்கிறாள் சூர்ப்பணகை. சீதையை கண்டிராத இராவணனும்  சூர்ப்பணகையின் சொற்கள் வழியாகவே காமத்தின் மூர்க்கத்தில் விழுகிறான்.

“சிற்றிடைச் சீதை  என்னும்
            நாமமும்  சிந்தைதானும்
உற்று,  இரண்டு  ஒன்று ஆய்  நின்றால்,  ஒன்று
            ஒழித்து  ஒன்றை  உன்ன
மற்றொரு   மனமும்  உண்டோ?  மறக்கல்
            ஆம் வழி மற்று  யாதோ?
கற்றவர் ஞானம்  இன்றேல்,
            காமத்தைக் கடத்தல் ஆமோ?” (3150)

ஒருவர் எவ்வளவு கற்றவராயினும் ஞானம் இல்லையெனில் அவரால் காமத்தைக் கடந்துவிட இயலாது என்கிறான் கம்பன். நான் ஞானத்தை முன் பின் கண்டதில்லை. ஆகவே அவரைக் குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அவருமே கூட கொஞ்சம் ஜாக்கிரையாக இருப்பது நல்லது என்பதை அன்போடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

“ஆற்றார் ஆகின், தம்மைக் கொண்டு
            அடங்காரோ? என் ஆர் உயிர்க்குக்
கூற்றாய் நின்ற குலச் சனகி குவளை
            மலர்ந்த  தாமரைக்குத்
தோற்றாய்; அதனால்,  அகம் கரிந்தாய்;
            மெலிந்தாய்;  வெதும்பத்  தொடங்கினாய்,
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால்,
            வெற்றி ஆகவற்று ஆமோ?”( ‘3181)

இராவணனுக்கு  இரவில் பித்து முற்றி விடுகிறது. அப்போது காமத்தைக் கூட்டும் நிலவும் வருகிறது. அவன் அதைப்  பழித்துப் பாடும் பாடல் இது.

என் உயிருக்கு கூற்று போல வந்திருக்கும் சீதையின் வதனத்தின் முன் நீ தோற்றாய். ஆகவே மெலிந்தாய். கரிந்தாய். வெதும்பிக் கொண்டிருக்கிறாய். ஒன்றைத் தன்னால் வெல்ல முடியாது என்று அறிந்து கொண்டால்,  அதன் முன் அடங்கிப் போவதே நல்லது. அதை விடுத்து மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் அமைதி இல்லை,  உயர்வும் இல்லை. சீதையையின் வதனத்தை “ குவளை மலர்ந்த தாமரை” என்கிறான். 

இராவணனுக்கு சிந்தை கலங்கி சீதையின் உருவெளித் தோற்றங்கள் தெரியத் துவங்குகின்றன. காணாத சீதை கண்முன் தோன்றித்  தோன்றி மறைகிறாள். ரசமிக்க இரண்டு பாடல்கள் …. ”நீ சொல்லும் சீதை இவள் தானே என்று  பார்த்து சொல் ” என்று இராவணன்  சூர்ப்பணகையை வினவ, அவள் அங்கு செந்தாமரைக் கண்ணனைக்  கண்டு “அய்யோ இது இராமன்,,,” என்கிறாள்.

“பொய்ந் நின்ற நெஞ்சின்            
கொடியாள் புகுந்தாளை நோக்கி,
நெய்ந் நின்ற கூர் வாளவன், ‘நேர்
உற நோக்கு; நங்காய்!
மைந் நின்ற வாள்-கண் மயில் நின்றென            
வந்து, என் முன்னர்
இந் நின்றவள் ஆம்கொல்,            
இயம்பிய சீதை?’ என்றான்” ( 3214)

“செந்தாமரைக் கண்ணொடும்,
            செங கனி வாயினோடும்,
சந்து ஆர்  தடந்தோளொடும்,
            தாழ் தடக்  கைகளோடும்,
அம் தார் அகலத்தொடும், அஞ்சனக்
            குன்றம் என்ன
வந்தான்  இவன் ஆகும்,  அவ் வல்
            வில் இராமன்’ என்றாள்.” (3215)

காதல் நோயின்  உச்சத்தில் காதலரின் உருவெளித் தோற்றங்கள் தெரிவதை கம்பன் வெவ்வேறு இடங்களில் எழுதியுள்ளான். சீதையும் ஒரு பாடலில்  “ இதோ அவன் இங்குதான்  நிற்கிறான்.. இதோ இப்போது மறைந்து விட்டான்..”  என்று அரற்றுகிறாள்.  “ நின்றனன்  இவண் எனும்; நீங்கினான் எனும்”.

இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் அதுவரை தான் கற்பனையிலிலேயே கண்டுவந்த சீதையை இராவணன் முதன்முதலாக நேரில் காண்கிறான். “ மூவுலகும் இவர் முறையின் ஆள, யான் ஏவல் செய்து உய்குவேன் இனி”  எனச் சரணடைந்து விடுகிறான்.

அந்த அழகைக் காண ஒரு கண் போதாது என்கிற தேய்வழக்குதான் இந்தப் பாடல். தேய்வழக்கையும் மின்னவிடத் தெரியும்  கம்பனுக்கு.

“சேயிதழ்த் தாமரைச் சேக்கை
            தீர்ந்து இவண்
மேயவள் மணி நிற
            மேனி காணுதற்கு,
ஏயுமே இருபது? இங்கு இமைப்பு
            இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை!’ என்று,
            அல்லல் எய்தினான்.” ( 3347)

என் பத்து தலையின் இருபது கண்கள் போதாது. ஆயிரம் கண்கள் இல்லாமல் போய் விட்டதே எனக்கு?  வெறுமனே ஆயிரம் கண்களைக் கேட்கவில்லை. அவள் அழகை இமைத்து மறைக்காத ஆயிரம் கண்களைக்  கேட்கிறான்.

“உளைவுறு துயர் முகத்து  ஒளி
            இது  ஆம்  எனின்,
முளை எயிறு  இலங்கிடும்
            முறுவல்  என்படும்?
தளை அவிழ் குழல்  இவட்
            கண்டு தந்த  என்
இளையவட்கு  அளிப்பென்,  என் அரசு’
            என்று எண்ணினான்”( 3350)

காட்டில் துன்பமுறும் காலத்திலேயே இவ்வளவு அழகு கொள்பவள். மகிழ்ந்து முறுவல் பூத்தால்  எப்படி ஜொலிப்பாள்! இவளை  காட்டித் தந்தமைக்காக என் தங்கைக்கு   அரசபோகம் மொத்தத்தையும்  பரிசளிப்பேன்.

சுந்தர காண்டம்…காட்சிப் படலம். சீதையைக்  கவர்ந்து வந்து சிறை வைத்தவன் தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லி அவளிடம் மன்றாடுகிறான்.

“இன்று  இறந்தன; நாளை இறந்தன;
என் திறம் தரும்தன்மை  இதால்; எனைக்
கொன்று, இறந்தபின்  கூடுதியோ ? – குழை
சென்று,  இறங்கி, மறம் தரு செங் கணாய் !” ( 5171)

  இன்று கிட்டும், நாளை கிட்டும் என்று உன் காதலை வேண்டி ஒவ்வொரு நாளும் நான் காத்துக் கிடக்கிறேன். நீ வரும் முன்னே  எனக்கு மரணமே வந்துவிடும் போல?  ஒரு வேளை என்னைக் கொன்று இறந்தபின் கூடுதியோ?

  காதளவு நீண்ட கண்கள்  என்பதை  “ குழை சென்று இறங்கும்  செங்கண்” என்கிறான். நாம் காணக்காண அந்தக் கண்கள் சென்று இறங்குகின்றன.

“குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி; அருளுதியால்’ எனா,
முடியின் மீது முகிழ்ந்து உயர் கையினன்,
படியின் மேல் விழுந்தான், பழி பார்க்கலான்.”( 5182)

“போயும் போயும் ஒரு பொம்பளைக்காக? “ என்பது சாமானிய ஆண்கள் மத்தியிலும் புழங்கும் ஒரு வசனம். ஆனால் மூவுலகையும் அரசாளும் வேந்தன் என்று போற்றப்படும் இராவணன், தனக்கு  இரங்கச் சொல்லி ,தலைமீது கைகூப்பி   நெடுஞ்சாண் கிடையாக சீதை முன் விழுகிறான்.

“பழி பார்க்கலான்” என்று முடிகிறது பாடல். காதல் வந்து விட்டால் காதலைத் தவிர வேறோன்றையும் பார்க்க முடியாது.

“சொற் சிலம்பம்” என்று குறிப்பிடப்படுவன மீது எனக்குப் பெரிதாக ஆர்வம் எழுவதில்லை. அவை மலினமானவை. உள்ளீடற்றவை. விளையாட்டுப் பையன்களின் கும்மாளம் என்றே எனக்குத் தோன்றும். 

அங்கு கவிஞனுக்கு வேலை இல்லை என்று நினைப்பேன். என் கவியுலகை தொகுத்துக் காண முயலும் கட்டுரைகளில்,  சமயங்களில் காளமேகத்தின் பெயர் இடம் பெறுவதுண்டு. ஆனால் காளமேகம் எனக்கு உவப்பில்லாத கவி.

ஆனால் இந்தப் பாடலை சொற் சிலபத்திற்கு உதாரணம் காட்டினால் தலை வணங்கி ஏற்கலாம்.

“வளர்ந்த தாளினன்; மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன்; அனல் சொரி கண்ணினன்;  ‘இவளைப்
பிளந்து தின்பென்’ என்று  உடன்றனன்;  பெயர்ந்தனன்; பெயரான்;
கிளர்ந்த சீற்றமும், காதலும், எதிர் எதிர் கிடைப்ப.” ( 5206)

சீதையை எவ்வளவு மிரட்டியும், எவ்வளவு கெஞ்சியும் , அடி விழுந்து வணங்கியும் பணிய வைக்க இயலவில்லை. பத்துத் தலை பூண்ட ஆணவம் எவ்வளவு காலம் பொறுக்கும். ஒரு கட்டத்தில் இராவணன் சீதையைப் பிளந்து தின்னும் வெறியுடன் அவளைக் கொல்ல எழுகிறான். 

அவன் வெறி மூண்டு எழுந்ததற்கும், ஆவி அடங்கி அமர்ந்தற்கும் கம்பன் இரண்டு சொற்களை பயன்படுத்தியுள்ளான். “பெயர்ந்தனன்; பெயரான்”. அவ்வளவுதான். திரைக்காட்சி போன்ற சொற்கள். சீற்றம் அவனைப்  பெயர வைக்கிறது. காதல் அவனை அமரவைக்கிறது. 

“ யாமறிந்த புலவரிலே…”  என்று மகாகவி கைகூப்பிய மகாகவி…” உண்மை , வெறும் புகழ்ச்சியில்லை”

 “பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி,  ஐங்கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர்.” ( 7643)

  பெண் என்று தெரிவதெல்லாம் நீ மட்டும் தான். இப்பரந்த உலகம் முழுக்க இன்றெனக்குக் கேட்பதெல்லாம் ஒரே ஒரே பெயர்தான். கண் என்று காண்பதெல்லாம் உன் கண்ணைத்தான்.  மாரனின் எய்தலால் உலகத்து மனிதர் மேல் ஆகும் புண்ணெல்லாம்  எனக்கே ஆக்கி  விபரீதம் செய்து விட்டீர்.

காமவேளின் ஐங்கணைகளாக தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் ஆகிய ஐந்து சுட்டபடுகின்றன.  மல்லிகை  பட்டியலில் இல்லை.  ஒருவேளை   மல்லிகை,  மனிதன் அவனே எடுத்து , அவன் மேல் எய்து கொள்ளும் கணையே என்னவோ?

“என்று உரைத்து, எழுந்து சென்று, அங்கு இருபது என்று
                                      உரைக்கும் நீலக்
குன்று உரைத்தாலும் நேராக் குவவுத் தோள் நிலத்தைக்
                                                   கூட,
மின் திரைத்து, அருக்கன் தன்னை விரித்து, முன் தொகுத்த
                                      போலும்
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான்.” ( 7648)

  இராவணன் இன்னொரு முறை சீதை முன் விழும் காட்சி. இருபது மலைகளை உவமை சொன்னாலும்  ஒப்பாத தோள்கள் நிலத்தில் படிய விழுகிறான். இப்பாடலில் அவன் கீரிடத்தின் ஒளியைத்  துலக்கிக் காட்டுகிறார். கதிரவனும் மின்னலும் கூடி ஒளி வீசும் கிரீடம் சூடியவன். ஆனால்  உள்ளே  இருளண்டிக் கிடக்கும்  ஒருவன். இம்முறை நெடுநேரம் எழாமல் அப்படியே கிடக்கிறான்.

இராவணன் இறந்து கிடப்பது கண்டு மண்டோதரியின் புலம்பல் ஒன்று…

“வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
        திரு மேனி, மேலும் கீழும்
 எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும்
        இடன் நாடி, இழைத்தவாறோ?
 ”கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
     மனச் சிறையில் கரந்த காதல்
 உள் இருக்கும்” எனக் கருதி, உடல் புகுந்து,
          தடவியதோ ஒருவன் வாளி?”(9940)

 இராமனின் அம்புத் திறம் சொல்வது போல் , இராவணக் காதலின் அழியாத வேட்கை  சொல்லப்படுவதாகவே இப்பாடல் எனக்குத் தொனிக்கிறது.. இராமனின் அம்பு எள் இருக்கும் இடம் கூட மிச்சமின்றி இராவணனின் உடலைத் துளைத்து விட்டது.அத்தோடு அதன் பணி முடியவில்லை.  உயிரைக் கொல்வது மட்டுமல்ல, அவன் நெஞ்சில் மூண்டெறியும் அந்தக் காதலைக் கொல்வதுதான் அதற்கு இடப்பட்ட பணி. ஆகவே அந்த அம்பு இராவணனின் இதயத்தைத்  துளைத்து அதில் இன்னும் சீதை இருக்கிறாளா என்று தேடித் தேடிப்பார்க்கிறது.

கட்டுரையின் நீளமும் ஒருமையும் கருதி இங்கு நான் அறிந்தே கம்பனின் ஆகச்சிறந்த மின்னல்கள் சிலவற்றைத் தவற விட்டிருக்கிறேன். நான் அறியாமல் ஒளிந்திருக்கும் காதல்கள் இன்னும் இருக்கக் கூடும். கம்பனை வரி வரியாக வாசிக்கும் ஒருவரால்  இதைவிட இரு மடங்குக் காதலை கண்டு சொல்ல முடியும்.   கம்பனின் பத்தாயிரத்தி சொச்சம் பாடல்களில்  காதல் எங்கு இடைப்படும் என்று முழுமையாக  ஊகிக்க முடிவதில்லை. 

பால காண்டம்…. நகரப்படலம். அயோத்தியை, அதன் மாந்தர்களை விவரிக்கும் படலம். அயோத்தியின் பெண்களைப்  பாடுகிறார்…

“முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந்துயர்
விளைப்பன;  அன்றியும்,  மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண் இடை;  இளைப்ப,  மென்முலை
திளைப்பன.  முத்தொடு செம்பொன் ஆரமே.”( 145)

அவர்களது வதனங்களில் எப்போதும் முறுவல் பூத்து நிற்கும். அம்முறுவல் ஆடவர் நெஞ்சிலே வெந்துயர் விளைவிக்கும். “ வெந்துயர் முறுவல்…” வெறுமனே  வர்ணனையாக  இல்லாமல், ஆண் பெண் உறவின் ஆதாரமான உயிரியல்பை, அதன்கண் விளையும் களிப்பை , கண்ணீரை என  யாவற்றையும்  பேசிவிட்ட  ஒரு வரியாகவே நான் இதை உணர்கிறேன். சங்கத்துத் தலைவன்,  தலைவி துவங்கி நேற்றைய காதலர் கடைசியாக அழுதுமுடித்த கண்ணீர் வரை இந்த வரியில் தேங்கிக் கிடப்பதாகத்  தோன்றுகிறது. என்றேனும் ஒரு நாள் என் காதல் கவிதைகள் தனி நூலாகத் தொகுக்கப்பட்டால்  அதற்கு “ வெந்துயர்முறுவல்” என்றே தலைப்பிட வேண்டும் என்பதே என்  அவா.

இன்னொரு பாடல். இராமன் திருமணத்திற்குத் தயாராகிறான்.  அவனை அலங்கரிப்பது விரிவாகச் சொல்லப்படுகிறது. அவன் சந்தனம் அணிவது, முடி திருத்துவது, மார்பில் ஆபரணங்கள் அணிவது, வீரபட்டமும் திலகமும் அணிவது, கடகம், குஞ்சம், தோள்வளை,உத்தரியம் போன்றவை அணிந்து கொள்வது என  ஒவ்வொன்றும்  தனித் தனிப்பாடலாக எழுதப்பட்டுள்ளன.  இதன் இடையே அவன் குண்டலம் அணியும் சாக்கில் அழகான தூதுப்பாடல் ஒன்றை எழுதிவிடுகிறார் கம்பன். 

“ஏதம் இல் இரு குழை, இரவு,  நன்பகல்.
காதல் கண்டு  உணர்ந்தன, கதிரும்  திங்களும், 
சீதைதன்   கருத்தினைச்  செவியின்  உள்ளுற, 
தூது வந்து  உரைப்பன  போன்று  தோன்றவே.” (1214)

குண்டலங்கள்  இரண்டையும் சந்திர, சூரியர் ஆக்கிவிடுகிறார். சீதை இரவிலும் பகலிலும் பிரிவித்துயரால் படுகிற வேதனைகளுக்கு இவர்கள் இருவருமே சாட்சி. ஆகவே யாருமறியா வண்ணம் சீதையின் நெஞ்சத்தை இராமனின் காதில் உரைக்க வந்தன  போலத் தோன்றும் குண்டலங்களை இராமன் அணிகிறான்.

ஒரு பாடலில் “ அறம் தரும் செல்வம் அன்னீர்!” என்று சீதையை விளிக்கிறான் இராவணன். உண்மையில் ”அறத்தின் மூர்த்தி”  விளித்திருக்க வேண்டிய விளிப்பு. ஆனால் கம்பன் இராவணனை விளிக்க வைக்க என்ன காரணம் இருக்கும்?  உண்மையில் அதற்குச்  சிறப்பாக ஏதேனும் காரணம் இருக்குமா? போகிற போக்கில் வந்து விழுந்துவிட்ட ஒரு வரியா? அல்லது அப்பாடல் எழுந்த நாளில் அறத்தால்  முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருந்தானா கம்பன் ? கும்பி நெருப்பைத்  தாளமாட்டாது,  இதோ… பிள்ளை அம்பிகாபதி  அழப்போகிறான் என்று கலங்கி நிற்கும் தருவாயில்,    சரியாகச் சடையனின் வண்டி வந்து வாசலில்  நின்றுவிட்டதா?

 கம்பனின் ஒரு பாடலை வாசிக்கையில் எனக்கு சித்தம் கலங்கியது போல ஆகிவிட்டது. எவ்வளவு வசைபாடி முடித்தும் உள்ளம் ஆறவில்லை.   மொட்டை மாடிக்கும் அந்தப் பாட்டிற்குமென  பலமுறை ஏறி இறங்கினேன். காதல் நோயால் சீதை வருந்தும் பாடல்தான்…

“பஞ்சு அரங்கு தீயின்  ஆவி
   பற்ற  நீடு  கொற்ற வில்
வெஞ்சரங்கள்  நெஞ்சு அரங்க
   வெய்ய  காமன்   எய்யவே.
சஞ்சலம்  கலந்த போது.
   தையலாரை,   உய்ய வந்து.
“அஞ்சல்! அஞ்சல்!”  என்கிலாத
   ஆண்மை  என்ன  ஆண்மையே?” (714)

 பாடலின் கருத்துக்குப் முன்பே கவிதை கவர்ந்துவிட்டது. காமனின் அம்பிலிருந்து காக்காத ஆண் என்ன ஆண்? என்பது திரண்ட பொருள். பாட்டின்  சொல்லடுக்குகள் பித்தம்  கொள்ள வைத்துவிட்டன. ஆண்மை, பெண்மை  என்கிற இருமைகள் அழிந்து, சொல்லப் போனால் காதல் நோய் என்கிற காரணம் கூட அழிந்து ,   தாளவே முடியாத ஒரு பெண்ணின் அபயக் குரல் மாத்திரமே எனக்குக் கேட்டது. ஏங்கேனும் வாய்விட்டு  அரற்ற வேண்டும் போலிருந்ததால் வண்டியைத் தூக்கிக் கொண்டு சுகுமாரன் சார் வீட்டுக்குப் போனேன்…

“ சார், நெஜமாவே அவன்  ஒரு musician” தான்  இல்லையா?”

அவர் புன்னைகைத்தபடியே …

“ பின்ன…”  என்றார்.

நிஜமாலுமே இவை ஒரு மனிதன் தன் கூரை வீட்டுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து தினசரி எழுதி சேர்த்த பாடல்களா? அல்லது ஒரு தெய்வம் எழுதி தெருவில் வைத்துவிட்டுச் சென்ற நூலா இது?

“தமிழ்க்காதல் “  நூலில் காதல் குறித்த  ஒரு கதை உள்ளது.. “ ஆண் பெண் என்பன படைப்புத் தொடக்கத்து ஒரே பொருளாம் என்றும், தெய்வ சாபத்தால் பிளவுபட்டு,  இரண்டாயின என்றும்,  அன்று முதல் ஒன்றாய் இணையப் பாடுபடுகின்றன  என்று காதலுக்கு விளக்கம் கூறுவர் பிளேட்டோ…”

இரண்டு உயிர்களின் கட்டற்ற ஆவேசத்தைக்  கணக்கிட்டால் இது கதையல்ல,  வரலாறு என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.

௦௦௦

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ‘காவிய முகாமில்’ ஆற்றிய உரையின் விரிவான எழுத்துவடிவம்.

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

4 Comments உரையாடலுக்கு

  1. நீர் ஒரு மகாரசிகனய்யா…. அவன் கவிஞனாகவும் இருப்பதால் இப்படி ஒரு அற்புதமான கட்டுரை எழுந்ததா ??!! அல்லது நற்கவிஞன் ரசிகனாகவும் இருப்பதால் இப்படி ஒரு படைப்பு நிகழ்ந்ததா அறியேன்.
    ரசிகன் வேறு கவிஞன் வேறா? என்று கேள்வி எழும். பிறரின் கவிதையை இவ்வளவு உச்சி முகர்ந்து பார்ப்பவன் ….
    பார்ப்பதோடு அந்த ரகசியத்தைப்
    பகிர்பவன் …….போற்றத் தகுந்தவன் மிகச்சிறப்பு கவிஞரே.
    வேறு.
    நான் ஞானத்தை முன் பின் கண்டதில்லை. ஆகவே அவரைக் குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அவருமே கூட கொஞ்சம் ஜாக்கிரையாக இருப்பது நல்லது என்பதை அன்போடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.👌💐❤️🤣

  2. “மாடிக்கும் அந்தப் பாட்டிற்குமென ஏறிஏறி இறங்கினேன். ”
    இந்தக் கட்டுரைக்குள் ஏறிஏறி இறங்கினேன். நன்றி சார்.

    • அனைத்து பாடல்களும் அதற்கான விளக்கங்களும் படித்து மெய்மறந்து போனேன்.
      சீதை சிரிப்பை தொலைத்த நிகழ்வை குறிக்கும் பாடல் இடம்பெறவில்லை.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss