
மித்தி ஆறு
அந்தக் குட்டிச்சுவற்றிலிருந்து
இறங்கி வா, நண்பா.
மித்தி ஆறு உன்னை மூழ்கடிக்காது
உன்னை நீச்சலடிக்கவும் விடாது.
மித்தி ஆறு உன்னை
சாக்கடலுக்கு
குப்பைகளாலான தெப்பத்தில் சுமந்துசெல்லும்.
நண்பா, இறங்கிவா.
இருக்கும்படி அது இருக்கட்டும்.
(மித்தி – சென்னையில் உள்ள கூவத்தைப் போல மும்பையின் குப்பைகளால் பாழான சிற்றாறு)
குயில்
குயிலே உன் கதறல்களை நிறுத்து.
இந்தக் காலையில் இதையெல்லாம்
நான் ஏற்க முடியாது.
உன்னுடைய துயரக் கூப்பாட்டில்
காட்டுப் புறாக்களும் சேர்ந்துகொள்கின்றன.
பார்!
இலைகள் பச்சைப் பசேலென்று மின்னுகின்றன
வானமோ நீலத்தில் சுடர்விடுகிறது
கடலிலிருந்து கூட சில்லென்று மாருதம்.
நாம் எப்படியும் தப்பிப் பிழைத்திருப்போம்.
குயிலே, உன் கதறல்களை நிறுத்து.
ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான நேரம் இது
பரஸ்பரம் அமைதியாக இருப்பதற்கு
ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான நேரம் இது.
ஆசிரியர் ஓய்வு அறைகளிலும்
கல்லூரி வளாகங்களிலும்
உணவகங்களிலும்
முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கிறது
எனது அர்த்தமற்ற ஆரவாரம்.
நீ என்னுடன் இல்லாதபோது
எனது தலைக்குள்
உரையாடல்களைச் சுமக்கிறேன்.
இந்தக் கவிதையில்கூட
48 வார்த்தைகள்
கூடுதல்தான்.
ஜூஹு கடற்கரை
ஆம்
நடிகராக இருக்கும் நண்பரை
அவரது கடற்கரை வீட்டில் சந்திக்கிறேன்.
அது புறம்போக்கு நிலத்தில்
அமைந்த ஐந்துக்கு மூன்றடி வீடு.
எனது நண்பரால் அந்த வீட்டில் எழுந்து நிற்க இயலாது.
நம்மால் சுவாசிக்க இயலாத வீடு.
நான் எனது சிகரெட்டை ஒரு மணல் மூட்டையின் மேல்
சுண்டி எறிந்தேன்.
அண்டைவீட்டுக்காரன் ராமா
மதியச் சாப்பாட்டைத் தயாரித்தான்.
அவன் சர்க்கஸில் கோமாளியாக இருந்தவன்
ஆனால் அடிகள், மிரட்டல்கள், சம்பளக்குறைவு
தாங்காமல்
அங்கிருந்து ஓடிவந்துவிட்டான்.
கதவின் இடைவெளித் துளைகள் வழியாக
அலை உள்ளே வருவதை நான் கவனிக்கிறேன்.
நானும் நடிக நண்பரும் இதே இடத்துக்கு
அருகே உட்கார்ந்திருந்திருக்கிறோம்.
ஒரு தெரு நாய் எங்களைத் தத்தெடுத்துக்கொண்டது
கடந்து செல்பவர்களைப் பார்த்து குரைத்தது.
அது எனது பிறந்தநாள்.
நாயும் எனது நண்பரும்
நானும்
பைனாப்பிள் க்ரீம் கேக்குகளைச் சாப்பிட்டு
விருந்து கழித்தோம்.
000
இந்தக் கவிதைகளில் எனது வாழ்க்கையைப் பார்க்க வேண்டாம்
இடிபாடுகளிலிருந்து தொலைவில்
ஒழுங்குடன்
பைத்தியக்காரத்தனமற்று
அழகுடன்
கவிதைகள் இருக்க இயலும்.
இதை நான் அனுபவித்த வலிகளிலிருந்து
அறிந்துகொண்டேன்.
அதனால் எனக்குத் தெரியும்
அப்படியான கவிதைகளை
நான் செய்யவே முடியாது.
000
அன்பே, உன்னை மணம் செய்யவேண்டாமென்று தீர்மானித்தது நான்தான்
அன்பே
நான்தான் உன்னை மணம் செய்யவேண்டாமென்றுத் தீர்மானித்தது
என் நாக்கில் நஞ்சுள்ளது.
நான் குதறுவேன்
பாறை ஆவேன்.
மீண்டும் விலா எலும்பாகவும்.
நான் உலகைத் தொடுகிறேன்.
நட்சத்திரங்கள் கருந்துளைகளாக மாறுகின்றன.
000
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
