
(1)
“இதோ இந்தப் பொம்மைகளை நெடுக்குவாக்கில் வெட்டி இந்த நதியில் போட்டால் உங்கள் வலதும் இடதும் வாங்கிக் கொள்ளும். வெட்டிப் போட்ட உங்கள் துண்டங்கள் கடல் அடைவதற்குள் உங்கள் உயிர் பறிபோயிருக்கும். பார்க்கிறீர்களா? இல்லை என் கால் பணிந்து எனக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறீர்களா?” என்று கேட்டான் அந்தச் சூனியக்காரன். மக்கள் பயந்து போயிருந்தார்கள். பில்லி சூனியம் ஏவல் வித்தைகளில் அவன் கை தேர்ந்தவன். அம்மக்கள் ஒவ்வொருவருக்கும் அவனுடன் ஒரு அனுபவம் இருந்தது. அம்மக்கள் ஒவ்வொருவருடைய முடியும் சீப்பும் விரல் நகமும் அவனிடம் இருந்தது. அதை வைத்து அவன் ஒவ்வொருவரோடும் விளையாடியிருக்கிறான். அவர்களின் அன்றாட வாழ்க்கை நிறையவே பாதித்திருக்கிறான். பயிருக்கு நீர் விடும் வேலையைப் பார்க்கும் விவசாயி கருக்கலில் முன்னரே எழுந்துகொண்டு வயலுக்கு போகாமல் அமர்ந்திருப்பார். அவருக்கு, ‘அதான் வயலுக்குச் சென்று முன்னரே நீர் இறைத்துவிட்டோமே’ என்று தோன்றிக்கொண்டிருக்கும். ஒரு வியாபாரிக்கோ, முன்னரே சென்று சந்தையில் பேரம் பேசிவிட்டோமே என்று தோன்றிக்கொண்டிருக்கும். இவை எல்லாம் அவன் வைத்த சூனியம். ஒரு செயலைச் செய்யப் போகிறவருக்கு அச்செயலை முன்னரே செய்துவிட்டதாக பிரமையூட்டப்பட்டுக்கொண்டே இருந்து அச்செயலை அவர் மேற்கொண்டு செய்யவிடாமல் தடுத்து நிறுத்திவிடும். இப்படி அவ்வூரில் விவசாயமும் வியாபாரமும் நொடித்துப் போனது. அதனால் அம்மக்கள் அவனுக்கு அஞ்சி அஞ்சி தான் வாழ வேண்டியிருந்தது. ஆனால் இன்று என்னவோ அவனுக்கு அவர்களை மொத்தமாகக் காவு வாங்கும் அளவுக்கு மூர்க்கம் ஏறிவிட்டது. உருவில் அவர்களைப் போலவே இருக்கும், கரிய நிறக் கருங்குரங்கின் மயிர்களடர்ந்த பொம்மைகளை அவன் செய்து வைத்து மிரட்டிக் கொண்டிருந்தான்.
பிறகு ஒருநாள் ஊராரை ஒன்றுத்திரட்டி தன் செயலைத் துவங்கியிருந்தான். சிலர் அவனுக்கு அஞ்சி வீட்டுக்குள்ளாகவே தாழடைத்துக் கொண்டு இருந்தார்கள். சிலர் அவனிடம் கெஞ்சிக்கூத்தாடிக் கொண்டிருந்தார்கள். சிலரது பொம்மைகளை அவன் பாக்கு வெட்டி போன்ற ஒரு இயந்திரத்தால் இரு துண்டங்களாக்கி வெட்டி வெட்டிப் போட்டுக்கொண்டிருந்தான். அப்படி வெட்டிப்போடப்பட்டவர்களில் சிலர் பரிசலோடு ஆற்றில் இறங்கி மிதந்து செல்லும் தத்தமது பொம்மைகளைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். சிறிது தூரத்திலேயே நதி இரண்டாகப் பிரிந்தது. இப்போது வலப்பக்கம் செல்வதா இடப்பக்கம் செல்வதா என்று அவர்கள் குழம்பினார்கள். மேலும் அவன் வெட்டிப் போட்ட பொம்மையுருக்களின் வலப்பக்கத் துண்டங்கள் சரியாக நதியின் வலப்பக்கக்கிளையிலும் இடத்துண்டங்கள் சரியாக இடப்பக்கக் கிளையிலும் பிரிந்துச் சென்று கொண்டிருந்தததைப் பார்த்தார்கள். அவர்களுக்கு இனி வேறு வழி தெரியவில்லை. பரிசலைத் திருப்பிக் கொண்டு கரை ஏறினார்கள். அப்போது அச்சூனியக்காரன் அவ்வூர்காரர்களின் அனைத்து பொம்மைகளையும் வெட்டிப் போட்டு முடித்திருந்தான். அங்கு முன்பே திரண்டிருந்தவர்களும் சரி பரிசலில் இருந்து கரையேறியவர்களும் சரி அவன் காலடியில் விழுந்து இறைஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவன் அவர்களை எல்லாம் பொருட்படுத்தாமல், “இனி உங்கள் விதி என் கையில் இல்லை. ஒருமுறை ஏவிய பிறகு அந்த ஏவலை என்னால் கூட ஏதும் செய்ய முடியாது.” என்று கூறி தாழ்ந்துக் கிடந்த அவர்களின் உடல் மேல் ஏறி மிதித்துச் சென்று கொண்டிருந்தான். இருள் கவிந்தது. அவர்கள் அங்கேயே அழுது துவண்டுக் கிடந்தார்கள். மறுநாள் விடியலில் விழித்துக்கொண்டார்கள். ஆனால் அவன் சொன்னது போல அவர்களது இடப்பக்கமும் வலப்பக்கமும் வாங்கிக் கொள்ளவில்லை. அவர்களுக்கு பெரிதாக எதுவுமே ஆகவில்லை.
அன்று மாலை ஊருக்குள் நுழைந்த வழிப்போக்கன் ஒருவன் அவர்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்தான். அவன் அருகிலிருக்கும் வனப்பகுதி வழியாக அவ்வூருக்குள் நுழைந்திருந்தான். அங்கே காட்டுக்குள் ஓரிடத்தில் நதிக்கரையோரத்தில் கருங்குரங்கு முடிகளால் ஆன பொம்மைகள் கொத்துக் கொத்தாகக் கரையொதுங்கியிருப்பதைப் பார்த்துவிட்டு பதட்டம் அடைந்து அவசர அவசரமாக ஓடி வந்திருப்பதாகச் சொன்னான். பிறகு அவன் அங்கிருந்தவர்களை காட்டுக்குள் கூட்டிச் சென்றுக் காண்பித்தான். பல காத தூரம் நடக்க வேண்டியிருந்தது. இவர்கள் எவரும் அந்தப் பகுதிக்காட்டையே அறிந்து வைத்திருக்கவில்லை. அங்கே அந்த இடத்தில் அவன் சொன்னது போல அவர்கள் அக்கருங்குரங்கு பொம்மைகளைக் கண்டார்கள். ஆனால் வெட்டிப்போட்டத் துண்டங்கள் எல்லாம் தத்தம் துண்டங்களோடு சரியாக இணைந்து முழு உருவாகவே இருந்தன. என்ன இது? அவன் வெட்டிப் போடவே இல்லையா? நன்றாகக் கண்ணால் பார்த்திருந்தோமே அதை. இதுவும் அவன் வைத்த சூனியங்களில் ஒன்றா? அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றில் இறங்கி அவரவர்களது பொம்மைகளை தேடி எடுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்றே புரியவில்லை. வெட்டிப் போட்டது எப்படி இணைந்தது? இரண்டும் இருவேறு நதிகளில் பிரிந்து சென்றனவே? மேலும், ஒரு துண்டம் எப்படி அத்தனைச் சரியாக தன் மறுபகுதி துண்டத்துடன் சேர முடியும்? எல்லாருமே பதில் தெரியாத ஆச்சரியத்தில் சிறிது தினங்கள் இருந்தார்கள். அவர்களது அன்றாடங்கள் எல்லாம் மீண்டும் ஒழுங்குக்குள் வந்தன. சூனியக்காரனும் ஊரில் இல்லை. எந்த ஊரின் குடியைக் கெடுக்கச் சென்றிருக்கிறானோ? அவனுக்கு இந்த விஷயம் போய்ச் சேர்ந்திருக்குமா?
சில தினங்கள் கழித்து அவர்களது ஊருக்குள் ஒருவர் நுழைந்தார். பார்க்க வயது முதியவராக பரிச்சயமற்ற முகச் சாயலுடன் ரொம்பவே எளிமையானவராகத் தோன்றினார். தன்னை அவர் இங்கு தான் அருகில் உள்ள வனப்பகுதியில், தான் தங்கியிருப்பதாகவும், கையிருப்பு தானியங்கள் குறைந்துவிட்டதால் இரவல் கேட்க ஊருக்குள் வந்திருப்பதாகவும் கூறினார். ஊர்மக்கள் அவருக்கு வேண்டிய தானியங்களைக் கொடுத்தார்கள். பிறகு அவர்கள், “எவ்வளவு நாட்களாக உள்ளீர்கள் இங்கே? எங்கிருந்து வருகிறீர்கள்? காட்டுக்குள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, நான் மதினாவில் இருந்து வந்தவன். கடந்த ஒரு மாதகாலமாகத்தான் இங்கு தங்கிக் கொண்டிருக்கிறேன். காட்டுக்குள்ளே ஓர் அருவிக்கரை மேட்டில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார். அவர்கள் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு காட்டில் அப்படி ஒரு அருவிக்கரை இருப்பது கூட தெரியவில்லை. ஆனால் வந்தவருக்கு தெரிந்திருந்தது. அவர் அவர்களிடம் நான் இனி இங்கே தான் நிரந்தரமாகத் தங்கி தியானிக்கப் போகிறேன் என்றார். அவர்களில் சிலர் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அவரும் இன்முகத்துடன் தன் இருப்பிடத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். வெளியில் இருந்து வந்தவருக்கு அக்காடு அவ்வளவு பரிச்சயமானதாக இருந்ததை போகும் வழியெல்லாம் அவர்கள் கண்டுகொண்டார்கள். மூங்கில்கழிகள் கட்டிய ஓர் மிதவைப்படகை ஒரு கரையில் இருந்து இன்னொரு கரைக்கு துடுப்பிட்டு மாற்றி மாற்றி இயக்கி அவர் அவர்களை ஆற்றைக் கடந்து கூட்டிச் சென்றார். பிறகு ஓரிடத்தில் நின்று, தூரத்தில் இருந்தபடியே அவர்களுக்கு இரு அருவிக்கரைகளைக் காண்பித்தார். “உங்கள் ஊரில் ஓடுகிற ஆறு ஓரிடத்தில் இரண்டாகப் பிரிகிறதல்லவா? அது ஏற்படுத்தும் இரு அருவிக்கரைகள் இவை. நான் இவற்றில் அந்த இடப்பக்க அருவிக்கரையின் முடியில் தான் தங்கியுள்ளேன். வாருங்கள்” என்று தொடர்ந்து அழைத்துச் சென்றார். அந்த இடப்பக்க அருவிக்கரையின் முடியை எட்டி அவரது இருப்பிடத்தைப் பார்த்தார்கள். பொங்கப் பொங்கப் ஆர்ப்பரித்து விழுந்து கொண்டிருந்த அருவி முடிக்கு அருகே ஓர் எளிய குடில் அமைத்திருந்தார். குடிலுக்கு எதிரிலேயே விழும் அருவியைப் பார்த்திருந்த மாதிரி ஒரு சிறு கல் மேடை. “இதில் தான் அமர்ந்து தியானம் செய்வேன்” என்றார். கூட்டத்தில் இருந்த ஒருவர் ஏதோ தோன்றி, சில நாட்களுக்கு முன்னர் இந்த அருவிக்கரையில் அடித்துக்கொண்டு போன கருங்குரங்கு பொம்மைகளை நீங்கள் கண்டீர்களா என்று கேட்க, அவர் வெறுமே அண்ணாந்து வானத்தைப் பார்த்து நகைத்தார். அவர்கள் அனைவரும் ஒரு சேர குத்துகாலிட்டு அவர் முன் அமர்ந்தார்கள். அவர் இன்முகத்துடன் அவர்களிடம் “எழுந்து கொள்ளுங்கள் எழுந்து கொள்ளுங்கள். நான் எதுவுமே செய்யவில்லை. யாவற்றையும் மீறி இங்கே சர்வ வல்லமை படைத்த இயற்கை உறைந்துள்ளது. அது தான் உங்களை அந்தக் கொடும் இன்னலில் இருந்து காத்துள்ளது” என்றார். பிறகு அவர் அவர்களைத் தொடர்ந்து அக்காட்டில் வழி நடத்திக் கூட்டிச் சென்று காண்பித்தார்.
“இதோ பாருங்கள் உங்கள் ஊருக்கு அருகே பிரியும் நதி இதோ இங்கே இந்த இடத்தில் மீண்டும் சேர்கிறது. இரண்டாகப் பிரிந்து இருவேறு அருவிக்கரைகளாக விழுந்து விட்டதனைத்தையும் மீண்டும் பிடித்துவிட்டு, சேர்ந்து ஓடுகிறது பாருங்கள் உங்கள் நதி.”
வந்திருந்தவர்கள் அனைவரும் ஒன்றைக் கொண்டு ஒன்றைக் கொடுத்து சலனமற்றுக் கலந்து கிழக்கே ஊர்ந்து செல்லும் நதியைக் கண்டார்கள். கண்கலங்கி அவர் முன் நின்று கொண்டிருந்தார்கள்.
பிறகு அவர் இருந்தவரை எந்தத் தீயச் சக்தியும் அவர்களை நெருங்கவில்லை. எந்த பயமும் இல்லாமல் அவர்கள் அங்கே வாழ்வாங்கு வாழ்ந்தார்கள். அவர் அங்கேயே தங்கி தியானித்து உயிர் துறந்த பிறகு அந்த மக்கள் எல்லாம் சேர்ந்து அவருக்கு அங்கே ஒரு சமாதியை எழுப்பினார்கள். இப்போது அங்கே, கும்பாட்டம் எல்லாம் எழும்பி ஒரு தர்கா அமைந்துள்ளது. அந்த சூஃபி ஞானியின் பெயர் ஹஸ்ரத் மர்தான் ஈ காயப். அந்தப் பெயரிலேயே தான் அந்த தர்காவும் அமைந்திருக்கிறது. அந்த தர்கா அமைந்த அந்த அருவிக்கரையின் பெயர் – ககனச்சுக்கி. அந்த இரு அருவிக்கரைகள் – ககனச்சுக்கி, பாரச்சுக்கி. அந்த ஊரின் பெயர் – சிவனசமுத்திரம். தன்னைப் பிரிந்து பல காத தூரங்கள் ஓடி மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டு ஓடும் அந்நதியின் பெயர் – காவிரி.
(2)
“ரங்கம்” என்றால் மேடை, திட்டு. ஒரே நதி பிரிந்து மீண்டும் சேரும் போது, இடைப்பட்ட நிலப்பகுதியை இப்படிச் சொல்கிறார்கள். ரங்கத்தில் உறைபவன், ரங்கநாதன்.
நாம் கை கூப்பி வணங்கும் போது இருகைகளும் மணிக்கட்டுகளுக்கு மேலே பிரிந்துச் சென்று சேர்கிறது அல்லவா? அது போல இயற்கையாகவே இருபக்கங்களிலும் நதியை அரணாகக் கொண்ட நிலப்பகுதி.
ஒரு நதி கிளை பிரிகிறது. அது மீண்டும் சேர எத்தனைச் சாத்தியக்கூறுகள் உள்ளன? மாட்டுத்தலையிலிருந்து முளைத்து விலகிச் சென்ற கொம்புகள் மீண்டும் கூடி வருவது எதற்கு? போலவே யானையின் தந்தங்கள். ஒரு தந்தத்தின் கூர்முனை இன்னொரு தந்தத்தின் கூர்முனையைச் சரியாகத் தொட்டு உரசி விட விழைகிறது தானே? வெப்பாலையின் ஜோடிக் காய்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவை எல்லாமே அந்த லட்சியச் சந்திப்புப் புள்ளியை எதிர்நோக்கிப் பயணிக்கின்றன. அப்புள்ளியில் அவை இணைந்து காணப்படுவதென்பது அரிதினும் அரிது. பார்த்திருக்கவே முடியாது. லட்சியத் திருவுரு. அப்படித் தொட்டுக்கொள்ள முடியாவிட்டாலும் இனி தொட்டுக்கொண்டுவிடலாம் என்கிற ஒரு குறைந்த பட்ச நம்பிக்கையையாவது அவை நமக்களிக்கிறது தானே. நதி, அதை – அந்த நம்பிக்கையை – நிகழ்த்தியே காட்டிவிடுகிறது.
ஓரிடத்தில் பிரிய நிர்பந்திந்து மீண்டும் சேர வேண்டும் என்கிற எதிர்-நிர்பந்தம் எப்படி உருவாகி வருகிறது? விட்டதைப் பிடிக்க வேண்டி எது நிர்பந்திக்கிறது? சரியாக உருவாகி வந்துவிடும் அந்த எதிர்-நிர்பந்தம் ஓர் ஆச்சரியம் தான் இல்லையா? எல்லா நதியையும் இயக்கும் ஒரே நியதி – மேட்டில் இருந்து பள்ளத்துக்குப் பாய்தல். அதை மீறி வேறெந்த நியதியும் நிர்பந்தமும் அதற்கு இருக்கவேண்டியத் தேவையில்லை அல்லவா? அந்த ஒற்றை நியதியே கடல் சேர்க்கப் போதுமானது. இருந்தும் இது போன்ற ரங்கங்களை அமைத்து அமைத்து ஏன் ஒரு நதி ஓட வேண்டும்?
காவிரி மூன்று இடங்களில் ரங்கங்களை அமைத்திருக்கிறது. ஆதி ரங்கமாக, கர்நாடகத்தின் ஸ்ரீரங்கப்பட்டினம். அந்த்ய ரங்கமாக தமிழகத்தில் – முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் இணைகின்ற – ஸ்ரீரங்கம். இவற்றுக்கு இடையே மத்ய ரங்கமாக விளங்குகிறது, சிவனசமுத்திரம். அங்கே மத்ய ரங்கநாத ஸ்வாமி கோயிலும் உண்டு.
(3)
குப்பைகள் நிறைந்த அந்த இடத்தில் நின்று, வேலிக்கம்பி இடைவெளிக்குள் கையை விட்டுக்கொண்டு தூரத்தில் தெரிந்த ககனச்சுக்கி அருவியின் பொழிவையும் பொலிவையும் ஒருசேர என் அலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்தேன். மாற்றி மாற்றி பல்வேறு கோணங்களில் படம் பிடித்துப் பார்த்தேன். நான் நின்றுகொண்டிருந்த இடத்தின் குப்பைகள் நிறைந்த மலினப் பின்னணி தெரியக்கூடாதென, நீள்கிற தூரம் வரை கையை வெளியே நீட்டி எடுத்துக்கொண்டிருந்தேன். வேலியைத் தாண்டி கீழே எல்லாம் ஒரே காலி ஊதுபத்திக் கவர் குப்பைகள் குவியலாகக் கிடந்தது. அருகில் உள்ள தர்காவுக்கு வருகிறவர்களெல்லாம் அப்படி அப்படியே விட்டெறிந்துவிட்டுப் போய்விடுகிறார்கள் போல. ஒருவழியாக சமாளித்து மேட்டிலிருந்து ஆர்ப்பரித்து விழுந்த அருவி நீரையும் பாறையடிப்பட்டு எழுந்த நீர்ப்புகையையும் பதிவு செய்தேன். உச்சி வெயில் நேரம். பசி மயக்கம் வேறு. உடலில் உஷ்ணம் எடுத்து பிசுபிசுக்க ஆரம்பித்திருந்தது. வந்த காரிலேயே ஏசி போட்டுக்கொண்டு அமர்ந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சுற்றியும் ஜன சந்தடி. போதும் எடுத்தது என்றுவிட்டு அலைபேசியை அணைத்து கால்சராயில் சொருகிக் கொண்டு பின்னால் திரும்பினேன். பின்னால் இவர்களைக் காணோம். நான், மனைவி, குழந்தை, மாமியார், என் அக்கா, மருமகன் என்று அனைவருமாகத் தான் அங்கே வந்திருந்தோம். அக்காவும் மருமகனும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்தார்கள். பொதுவாக இரு மாதம் இங்கு வந்து தங்குவார்கள். விடுமுறை மாதங்கள் இவை அவர்களுக்கு. ஒரு வாரம் எங்களுடன் தங்கிச் செல்ல வேண்டி சென்னையில் இருந்து பெங்களூர் வந்திருந்தார்கள். அவர்கள் வந்ததைச் சாக்காகக் கொண்டு, அந்த வார இறுதியில் சிவனசமுத்திரத்துக்கு ஒருநாள் பயணம் எனத் திட்டமிட்டு ஊபர் ஆப்பில் அவுட்ஸ்டேஷன் ரைடுக்காக 6 சீட்டர் எர்டிகாவைப் பதிவு செய்து வைத்து அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கிளம்பி வந்திருந்தோம். சுமார் மூன்று மணி நேரப் பயணம். முதலிலேயே ரங்க நிலப்பகுதிக்குள் நுழைந்து மத்ய ரங்கநாதர் ஆலயம், பாரச்சுக்கி அருவிக்கரை யாவற்றையும் பார்த்திருந்தோம். இப்போது ககனக்சுக்கி அருவியைப் பார்க்க வந்திருக்கிறோம்.
இங்கு வந்து இறங்கிய போதே எங்கள் அனைவருக்கும் பசி மயக்கம். பாவம் குழந்தைக்கும் இருக்கும். இங்கு நல்ல சைவ ஹோட்டல்களே இல்லை. எல்லாம் ரங்க நிலப்பகுதிக்கு வெளியே கொள்ளேகால் பிரதான சாலையில் இருந்தன. வரும் போதே கவனித்தேன். இங்கே உள்ளே ஒரே அசைவ ஹோட்டல்கள் தான். மீன் கடைகள் வழி நெடுக நிறையத் தென்பட்டன. பாரச்சுக்கியை முடித்துக்கொண்டுவிட்டு விசாரித்ததில் அங்கே ஒரு அரை கிமீ தொலைவில் இருந்த ஒரு சைவ ஹோட்டலைச் சொன்னார்கள். அங்கு சென்று பார்த்தோம். இங்கு அது ஒன்று தான் இருக்கிறது போல. ஓரளவுக்கு நல்ல ஹோட்டல் தான். ஆனால் காலியாக இருந்தது போலிருந்தது. வண்டியிலிருந்து நான் மட்டும் இறங்கிச் சென்று உள்ளே போய் கேட்டுவிட்டு வந்தேன். அவர்கள் எத்தனை பேர் என்று கேட்டார்கள். டிரைவரைச் சேர்த்து மொத்தம் ஆறு பேர் என்றேன். இருவது பேராவது இருந்தால் தான் உலையில் அரிசியே போடுவோம். இன்னும் எதுவுமே ஆரம்பிக்கவில்லை. கொஞ்சம் பொறுங்கள். ஆட்கள் சேர்வார்கள். குறைந்தது ஒன்று – ஒன்றரை மணி நேரமாவது காத்திருக்கும்படி இருக்க வேண்டிவரும் என்றார்கள். நான் வேண்டாம் என்றுவிட்டு திரும்ப வந்து வண்டியில் ஏறினேன். திரும்பும் வழியிலேயே தான் ககனச்சுக்கியும் உள்ளது என்று தெரிந்தது. சரி மொத்தமாக முடித்துக்கொண்டு போய் சாப்பிட்டுக்கொள்ளலாம். வெளியே சென்றுவிட்டு மீண்டுமெல்லாம் திரும்பி வர முடியாது என்று இங்கே வந்து இறங்கினோம்.
அங்கேயே நின்று கொஞ்ச நேரம் காத்துப் பார்த்தேன். கூட்டத்தில் இவர்கள் எவர் முகமும் தென்படவில்லை. ஒரு வயதுக் குழந்தையை வைத்துக்கொண்டு இவர்கள் எங்கே சென்றார்கள்? நான் எங்கள் கார் நிறுத்திய இடத்திற்கு வந்தேன். அங்கேயும் அவர்கள் இல்லை. காரும் பூட்டப்பட்டிருந்தது. டிரைவரையும் காணவில்லை. டிரைவர் எண்ணுக்கு போனடிக்கலாம் என்று பார்த்தேன். காலையில் இருந்து டிரைவர் எண்ணை வாங்கிக் கொள்ளவே இல்லை. அவரும் என்னிடம் தந்து செல்லவில்லை. ஊபர் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு பெறலாம் என்று தோன்றி அவர்களுக்கு அழைத்துப் பார்த்தேன். அவர்கள் நான் சொல்வதைப் புரிந்து கொண்ட மாதிரியே தெரியவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது அந்த வாடிக்கையாளர் சேவை நிரல். என் மனைவிக்கு போனடித்தேன். ரிங்க் போய்க்கொண்டே இருந்ததேவொழிய அவளும் எடுக்கவில்லை. அங்கேயே மேலும் காத்து நின்றேன்.
இன்னும் இவர்களையும் காணோம். இந்த டிரைவரையும் காணோம். பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது. பிறகு சும்மா காரைச் சுற்றி மும்முறை வலம் வந்தேன். காரின் பின் கண்ணாடியில் ஒரு தொலைபேசி எண் எழுதியிருந்தது. அதற்கு அடித்தேன். நல்லவேளை மறுமுனையில் எடுத்துவிட்டார்கள். பதில் வந்தது. எங்கள் டிரைவர் நம்பர் தான் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு உடைந்த ஹிந்தியில், “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
“இங்கு நாங்கள் ரொம்ப நேரம் காத்துக் கொண்டிருக்கிறோம்”
“சார் வந்துவிடுகிறேன். அருகில் தான். சாப்பிட வந்தேன். ஒரு பதினைந்து நிமிடம்”
“நாங்களும் சாப்பிட வேண்டும். உங்களுக்கும் அது தெரியும் தானே. இப்படி எங்களுக்கு முன்னர் சென்று நீங்கள் சாப்பிட்டால் சரியா? இதான் உங்களை நம்பி வந்தவர்களை நடத்தும் விதமா? சாப்பிடப் போகிறேன் என்று எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டும் போகவில்லை. தொலைபேசி எண்ணையும் தரவில்லை. ஜாலியாகப் போய்விட்டீர்கள். இங்கே இந்த இடமும் நன்றாக இல்லை. ஒரே பேப்பர் பிளாஸ்டிக் குப்பை. புழுதி. உட்கார கூட இடமில்லை. ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு ஐந்து பேர் இங்கு நின்றுகொண்டிருக்கிறோம். இப்படி நீங்கள் எங்களை அம்போவெனத் தவிக்க விட்டுப்போனால் எப்படி?”
“சார் சார் இதோ வந்துவிடுகிறேன். பொறுங்கள்”
அந்த டிரைவர் சின்னப் பையன் தான். 25 வயதிற்குள் இருக்கும். மூன்று வருடங்களாக கார் ஓட்டுவதாகச் சொல்லிக்கொண்டு வந்தான் வரும் போது. நான் அந்த வயதின் அலட்சிய மனநிலை என்று எண்ணினேன்.
தூரத்தில் அழுத குழந்தையை சமாதானப்படுத்தியபடி என் மனைவி வருவது தெரிந்தது. அவள் பின்னாடியே மாமியாரும் வந்தார்கள். அவள் அருகே வந்ததும், “எங்க போய் தொலைஞ்சீங்க? இவ்ளோ நேரமா?” என்று எரிந்து விழுந்தபடிக் கேட்டேன்.
“ஒனக்கு என்ன தெரியும்? நீ பாட்டுக்கு அங்க போட்டோ எடுத்துட்டு நின்னுட்டிருந்த. இவன் அழ ஆரம்பிச்சுட்டான் தெரியுமா? அம்மாவும் அக்காவும் ப்ரணவுமா மாத்தி மாத்தி தூக்கி வச்சு சமாதானப்படுத்திப் பார்த்தோம். அடங்கவே மாட்டேன்னுட்டான் தெரியுமா? எங்கப்பாத்தாலும் ஒரே கூட்டம். ஒக்கார கூட இடம் இல்லை. படு சுமாரான இடம். பாரச்சுக்கி கூட பரவாயில்லை. நிழல்ல நாலு கல்பெஞ்சு போட்டு இருந்தது. இங்க ஒரே குப்பை. இருந்தும் ஒரு இடத்தை தேடிப்பிடிச்சு இவனுக்கு வாழைப்பழ மெஷ்ஷை ஊட்டிவிட்டா மொத்தத்தையும் அப்படியே கக்கிப்புட்டான். நீ ஜாலியா போட்டோ எடுத்துக்கிட்டு இருந்த. இவன் பண்ண அலப்பறைல அம்மா கைப்பையில மேலாப்பல வச்சிருந்த பர்ஸ் காணாம போயிடுத்து. அதை தேடிட்டு வர்றோம்.”
பின்னாடியே அக்காவும் ப்ரணவும் வந்தார்கள். அவர்களும் எங்கேயும் கிடைக்கவில்லை என்றார்கள். பிறகு நான் அவர்கள் காட்டிய இடங்களில் எல்லாம் ஒரு சுற்று தேடிவிட்டு வந்தேன். எங்கே போனதோ தெரியவில்லை. எவராவது அடித்துவிட்டார்களா? இல்லை எங்கேனும் விழுந்து மிஸ் ஆகியிருக்குமா? திரும்ப அவர்களிடம் வந்தேன். மாமியார், “பரவாயில்லை. விடுங்கோ. போனா போறது. இங்க வந்து இப்படிப் போகணுன்னு எழுதி இருந்தா யார் என்ன பண்ண முடியும்? எல்லாரும் கார்ல ஏறுவோம்” என்றார்கள்.
நான் “எத்தனைப் பணம் மாமி?” என்றேன்.
“கேக்காதீங்கோ அதை. இருக்கும் ஐநூறு ஐநூறு ரூபாயா 5000 லேந்து 10000க்குள்ள. ஆத்திரம் அவசரம்ன்னா எடுத்து செலவு பண்ண போட்டு வச்சிருந்த பணம்”
எனக்கு எரிச்சலாக வந்தது. இது அவருக்கு முதல் முறையும் அல்ல. பலமுறை இப்படி ஆகியிருக்கிறது.. நான் என் மனைவியைப் பார்த்தேன். அவளுக்கு என் பார்வை புரிந்தது. குழந்தைச் சிணுங்கிச் சிணுங்கி அழ வாயெடுத்தது.
“இந்தக் கார்காரன் எங்க? தேவுடு காத்துண்டு இங்க இப்படி நின்னுண்டு இருக்கோமே. அவனுக்கு முதல்ல போன் போடு”
“சாப்பிட போயிருக்கானாம்”
அவன் என்னிடம் சொல்லியே அரை மணி நேரம் ஆகியிருந்தது. மீண்டும் அவனுக்கு போனடித்தேன். உடனேயே எடுத்தான்.
“சார் கடையிலும் கூட்டம். இப்போது தான் உணவு வந்திருக்கிறது. ஒரு பத்து நிமிடம் கொடுங்கள். வந்துவிடுகிறேன்” என்றான்.
எனக்கு கோபம் உச்சத்துக்குச் சென்றது. “குழந்தையை வைத்துக்கொண்டு நிற்கிறோம் என்கிறேன். இன்னும் முடிக்கவில்லையா? நீங்கள் செய்வது அநியாயம்” என்று சத்தம் போட்டேன்.
இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் உள்ளே பொறுமிக்கொண்டே நின்று கொண்டிருந்தேன். சட்டென காரிலிருந்து கார் சாவி ரிமோட்டால் கதவுகள் திறக்கப்படும் சீழ்க்கை ஒலி கேட்டது. கூட்டத்தில் இருந்து அவன் துலங்கி வந்தான். குழந்தை அழுது அழுது மயக்க நிலையில் இருந்தது. உள்ளே ஏறிக்கொண்டு மனைவி அவனை மடியில் போட்டுக் கொண்டு தூங்கப் பண்ணினாள். கதவை சாத்தி கார் ஏசியை போட்டுக்கொண்டோம். நான் டிரைவருக்கு அடுத்த சீட்டில் அமர்ந்து கொண்டேன். ஏசிக்காற்றை வாங்கியபடி முகத்தைத் துடைத்துக்கொண்டேன்.
“சார் ஜ்யாதா டென்சன் ஹோ கயா. சாரி சார்”
“நீங்கள் இப்படி எங்களைத் தவிக்க விட்டுவிட்டுச் சென்றிருக்கக் கூடாது. மேலும் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு சென்றிருக்க வேண்டும். நாங்களும் சாப்பிட வில்லை தானே. அதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். நாங்கள் சாப்பிடும் இடத்தில் நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளக் கூடாதா? அடுத்து அதற்கு தானே செல்வதாக இருக்கிறோம்”
“சார் நீங்கள் சாப்பிடும் இடங்களில் எல்லாம் எனக்கு கட்டுபடி ஆகுமா தெரியவில்லை. அதனால் தான் சார்” என்றான்.
எனக்கு மேற்கொண்டு பேச நா எழவில்லை.
“நாங்கள் வாங்கிக் கொடுத்திருப்போம்” என்று சொல்லி முடித்துக்கொண்டேன்.
அவன் வண்டியை எடுத்தான். சாலையில் எதிர்சாரியில் கார்களாக நின்று கொண்டிருந்தன. ஒரே வாகன நெரிசல். சாலையின் அகலமும் ஒன்றரைக் கார் அகலம் தான் இருக்கும். எதிர் வந்த கார்களுக்கு வழிவிட்டபடி ஒரு பக்கக் காரை மண் ரோட்டில் இறக்கி ஓட்டிக்கொண்டு போனான். இரண்டு மூன்று கிலோமீட்டர் வரை வரிசையாக கார்கள். வண்டியில் ஏறியே அரை மணி நேரம் ஆகியிருந்தது. இன்னும் அந்த இடத்தை முழுதாகக் கடக்கவில்லை. நான் கொஞ்சம் தணிந்து, “சாரி. நானும் கத்திவிட்டேன். குழந்தை அழுது கொண்டிருந்தது. சமாளிக்க முடியவில்லை. போதாக் குறைக்கு எங்கள் பர்ஸையும் தொலைத்துவிட்டோம். அதான் எல்லாம் சேர்ந்து கொண்டு ஒரே டென்ஷன்.”
நான் யதேச்சையாகத் தான் அதை அவனிடம் சொன்னேன்.
“சார், என்ன சொல்கிறீர்கள்? பர்ஸை காணோமா? எவருடையது?”
“என் மாமியாருடையது.”
“சார், நான் உண்ணச் சென்ற இடம், உங்களை விட்டேன் இல்லையா, அதற்குப் பின்புறம். அங்கு ஒரு தர்கா உள்ளது. அந்த தர்காவின் வாசல் தெருக்கடையொன்றில் உட்கார்ந்து தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தர்காவின் ஒலிப்பெருக்கியில் இருந்து ஒரு அறிவிப்பு ஒலித்தது. எங்களிடம் ஒரு பர்ஸ் கிடைத்துள்ளது. எவராவது காணோம் என்றால் வந்துப் பெற்றுச் செல்லலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது உங்களுடையது தானா?” என்றான்.
அட என்பது போல நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பிறகு நான் அவனிடம் “இருக்கலாம்” என்றேன்.
“சார் அதை ஏறும்போதே சொல்லியிருந்தால் அப்போதே கேட்டு வாங்கி வந்திருக்கலாம். என்ன சார் நீங்கள்?”
“எனக்கு அப்போது சொல்லத் தோன்றவில்லையே” என்றேன்.
“பரவாயில்லை சார். இப்போதாவது சொன்னீர்களே. பெங்களூரு சென்றுவிட்ட பின்னர் சொல்லியிருந்தால் என்னாலும் எதுவும் செய்திருக்க முடியாது”
“..”
“சரி, வண்டியைத் திருப்புகிறேன் சார். மதியம் சில மணி நேரம் வரைக்கும் தான் தர்கா திறந்திருப்பார்கள்.”
அவன் காரைத் திருப்பினான். அந்தச் சாலையில் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. வந்த போது நின்ற எதிர் வரிசைக் கார்கள் இன்னும் நகரவே இல்லை.
“சார் இறங்கி நடந்துவிடலாம்”
வண்டியை ஒடித்து சாலையில் இருந்து இறக்கி உள்ளே ஒரு மரத்தடிக்கு அருகே ஓரங்கட்டினான். பின்பக்கத்தில் பள்ளத்தாக்கில் நதி சென்றுகொண்டிருக்கும் போல. அதன் ஆர்பரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மாமியாரால் திரும்ப அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்பதால் நான் மட்டும் வருகிறேன் என்றேன் அவனிடம். இருவரும் வேகவேகமாக நடந்தோம்.
“சார் நல்லவேளை நான் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்ததனால் தான் அந்த அறிவிப்பை காதில் வாங்க முடிந்தது.”
“நான் எந்த மொழியில் அறிவித்தார்கள்” என்றேன்.
அவன் “கன்னடா” என்றான்.
இருவரும் நடந்து அரை மணி நேரத்தில் அந்த தர்கா இருக்கும் தெருவுக்குள் நுழைந்து விட்டிருந்தோம். ரொம்பவே குறுகிய தெரு. இருபக்கமும் மீன் கடைகள். ஒவ்வொரு கடைகளிலும் அத்தனைப் பெரிய தோசைக்கல்லில் படுத்த வாக்கில் மீன்கள் அடுக்கியிருந்து ஊற்றப்பட்டிருந்த எண்ணெய்யில் பொரிந்து கொண்டிருந்தன. தோசைக்கல்லில் இருந்து ஆவி எழுந்து என் நாசியை அடைந்தது. சாதாரணமாக வந்திருந்தால் இந்நேரம் நாற்றம் குடலைப் பிரட்டி இருக்கும். ஆனால் மனம் சூடிக்கொண்ட அந்நேரத்துப் பதட்டம் அதைத் தெரிவித்துக்கொள்ளவில்லை. கடைசியில் அறிவிப்பு வந்த அலுவலகம் போலிருந்த இடத்தில் சென்று கேட்டோம். அவர்கள் ஒருவருக்கு போனடித்துக் கேட்டார்கள்.
அருகே தர்காவுக்குள் தான் இருப்பார்கள். போய் கேளுங்கள் என்றார்கள். தர்காவிலும் கூட்டம். நாங்கள் செருப்பை வாசலில் கழற்றிப் போட்டுவிட்டு படியேறிச் சென்று வரிசையில் நின்றோம். உள்ளே பச்சைத் துணி போர்த்தி அதில் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு ஒருவரது சமாதி இருந்தது. முன் சென்ற மக்கள் எல்லாம் குனிந்து மண்டியிட்டு காணிக்கைச் செலுத்தி அந்தச் சமாதியை வலம் வந்தார்கள். சமாதிக்கு அருகிலேயே மயிற்பீலியை காற்றில் தடவிக் கொடுத்துக்கொண்டு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று விஷயத்தைச் சொன்னோம். அவர் அருகிலிருந்த வேறொருவரைக் கூப்பிட்டுவிட்டார். அவர் தன் கால்சராயிலிருந்து ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்தார். அதில் ஒரு பர்ஸ் இருந்தது. அவர் அந்தக் கவருக்குள் இருந்ததை இன்னும் பிரிக்காமல் தொலைத்த பர்ஸின் அடையாளங்களைச் சொல்லுங்கள் என்றார். எனக்கு முதலில் அந்தப் பர்ஸின் நிறம் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டு அட்ரஸ் அதில் இருக்கும் என்றேன். பிறகு அதை முன்னர் பார்த்திருந்த நினைவு வந்து ஏதோ ஜூவல்லர்ஸ் பெயர் போட்டிருக்கும் என்றேன். அவர் சந்தேகமாகப் பார்த்தார். பிறகு ஒருமுறை என் மனைவிக்கு போனடித்துக் கேட்டேன். “சங்கம் ஜூவல்லர்ஸ்” என்று எழுதியிருக்கும் என்றேன். அவர் கவரை விரித்து எடுத்துப் பார்த்தார். “முழு முகவரியும் சொல்லுங்கள்” என்றார். நான் “சங்கம் ஜூவல்லர்ஸ். ஸ்ரீரங்கம்” என்றேன். அவர் முதலில் அந்தப் பர்ஸின் ஒரு பக்கத்தைப் பார்த்தார். அதில் தமிழில் எழுதியிருந்தது. பிறகு திருப்பி இன்னொரு பக்கம் பார்த்தார். அதில் ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. “என்னவென்று சொன்னீர்கள்?” என்று மீண்டும் கேட்டார். “சங்கம் ஜூவல்லர்ஸ். திருச்சி ஸ்ரீரங்கம்” அவர் ஒருமுறை நெஞ்சில் கைவைத்து “தன்யவாதகலு” என்று கன்னடத்தில் சொல்லிவிட்டு அந்தப் பர்ஸை என்னிடம் அளித்தார். எதிரே கைக்காட்டி தர்கா வாசலருகிலேயே கடைப் போட்டிருந்தவருக்கு ஒரு நன்றியை சொல்லிவிடுங்கள். அவர் தான் இதை எங்களிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார் என்றார். நானும் நெஞ்சில் கைவைத்து தலைத் தாழ்த்தி, “மிக்க நன்றி, மிக்க நன்றி” என்று சொல்லிக்கொண்டு அவரிடமிருந்தும் கீழே அமர்ந்திருந்தவரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டேன். இருவரும் அந்தக் கடைக்காரரிடமும் சென்று சொல்லிக்கொண்டோம். நான் என் பையில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அவரிடம் நீட்டினேன். அவர் வாங்க மறுத்தார். எல்லாம் முடிந்து கொஞ்சம் ஆசுவாசமாக கார் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடந்தோம்.
அந்த டிரைவர் பையன் சொல்லிக்கொண்டு வந்தான். “நீங்கள் என்னிடம் யதேச்சையாக சொல்லப் போய் கிடைத்திருக்கிறது பாருங்கள். தொலையவேண்டும் என்றிருந்திருக்கிறது. தொலைந்திருக்கிறது. கிடைக்கவேண்டும் என்றிருந்திருக்கிறது உடனேயே கிடைத்திருக்கிறது. இல்லையா?”
நான், “ஆம்” என்றேன். மிகச்சரியாக ஒவ்வொன்றும் தொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன்.
000

லோகேஷ் ரகுராமன்
லோகேஷ் ரகுராமன் திருவாரூர் மாவட்டதைச் சேர்ந்தவர். "விஷ்ணு வந்தார்","அரோமா" ஆகிய சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
“மிகச்சரியாக ஒவ்வொன்றும் தொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன்.” எனும் வாக்கியத்தால் கதை நீர்த்துப் போவது உறுதியாகி இருக்கிறது.
கதைக்கான கரு சிறப்பு; கதை சொல்லலில்தான் வறட்சி. இவ்வாண்டின் சிறப்பான சிறுகதையாக வந்திருக்க வேண்டியது, இடம் வலம் எனத் தடுமாறி இடம் வலமாகச் சிதறிக் காணாமல் போய் இருக்கிறது.
சிறப்பான சிறுகதை. நன்றிகள்.