ம. நவீன் மலேசியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர். அவரது முதல் நாவலான ‘பேய்ச்சி’க்குப் பிறகு, 2021ல் அவர் எழுதிய இரண்டாவது நாவல் ‘சிகண்டி’. இந்த நாவலின் பெயர் மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். முதற்பிறவியில் பெண்ணாக, அம்பையாகப் பிறந்து, அடுத்தப் பிறவியில் ஆணாக, சிகண்டியாகப் போரிடும் கதாபாத்திரம் அது. பொதுவாக, ஆண் உடலோடு இருக்கும் சிகண்டி, கடந்தகால அம்பையாகிய பெண்ணின் கூறுகளையும் கொண்டிருக்கிறார் என்ற புரிதல் உள்ளது. அதனால்தான், ஆண் உடலில் உள்ள பெண் மனம் என்று சிகண்டியைத் திருநங்கையாக அடையாளப்படுத்துவது வழக்கம்.
நாவலைக் கையில் எடுப்பதற்கு முதல் ஈர்ப்பு ஒரு பெரிய களத்தில் இதுவரை அவ்வளவாக பேசப்படாத கண்டுகொள்ளப்படாத மக்களைப் பற்றிப் பேசுவதே. ம. நவீன், பண்பாட்டு இலக்கியத்தில் உள்ள இந்தக் கூற்றைச் சார்ந்தும் விரித்தும், திருநங்கையரைக் கதாபாத்திரங்களாக்கி நாவலாகக் கொண்டுவந்திருக்கிறார். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு வாசகராக, ‘சிகண்டி’யின் மலேசியப் புறக்களம் ஓர் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ‘சௌவாட்’ என்ற இடப் பெயரை ஆரம்பத்தில் படிக்கும்போது, அது ‘சவுவாட்’ என்றே மனம் இயல்பாக வாசித்தது. ஆனால் சில பக்கங்களில், ஒருவேளை அது ‘செ-ள-வாட்’டாக இருக்குமோ என்ற சிறு குழப்பம் உண்டானதை மறுக்க முடியாது. பின்னர் இணைய வரைபடங்களின் மூலம் அது ‘சௌ’ என்ற ஒற்றை எழுத்துதான் எனத் தெரிந்தது. ‘சௌக்கிட்’ என்ற கோலாலம்பூர் அருகில் உள்ள ஊர்தான் ‘சௌவாட்’டாக இருக்க வேண்டும் என யூகித்து வாசிப்பதைத் தொடர்ந்தேன்.
நாவலில் இரண்டு காலச் சரடுகள் ஓடுகின்றன. முதற் சரட்டில் நிகழ்காலத்தில் தீபன் என்ற இளைஞனின் பார்வையில் மலேசியாவைக் காண்கிறோம். கோலாலம்பூரைச் சுற்றியுள்ள சிற்றூர்கள், சௌவாட், போர்ட் கிள்ளாங், பிந்தாங், புக்கிட், லூனாஸ் என்ற ஊர், அதே பெயரில் உள்ள ஆறு – இவையெல்லாம் நவீன வசதிகளுக்குள் வந்திருக்கும் அல்லது வந்துகொண்டிருக்கும் இடங்கள். சில ஊர்கள் நெருக்கமான அடுக்குமாடி குடியுருப்புகளும், பெட்டிபெட்டியான கடைகளும் கொண்டவை. படிப்படியாக வளர்ந்து வரும் இந்த ஊர்களின் உச்சமாக, அதிநவீன நகரமான கோலாலம்பூர் இருக்கிறது. இங்கு இரட்டை கோபுரங்கள், மசாஜ் சென்டர்கள், எப்போதும் விழித்திருக்கும் ஒளிவிளக்குகள் என விரிகிறது. கதை நடக்கும் இடம், பல்பொருள் அங்காடிகள் இருக்கும் ஒரு கடைவீதி. கதையில் வரும் மனிதர்களோ போதை, அடியாள் அமைப்பு, இரவு நேர பைக் ரேஸ் எனப் புரள்கிறார்கள்.
இரண்டாவது சரடு, நிகழ்காலத்துக்கு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கிறது. அங்கு நாம் காண்பது ரப்பர் தோட்டமும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் அவர்களுடைய வசிப்பிடங்களும். இந்தக் கதை மூன்றாம் நபர் பார்வையில் அமைந்துள்ளது. இது முதற்சரட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வந்து, நாவலின் பாதிக்குப் பிறகே ஒரு புள்ளியில் நிகழ்காலத்தோடு இணைகிறது. இந்தக் கதையில், எவ்வாறு ரப்பர் தோட்டமும் அதைச் சுற்றியுள்ள வாழ்விடங்களும் பெருநகரின் இணைப்புகளாக உருப்பெறுகின்றன என்ற சித்திரத்தைக் காணலாம். நிலம் எப்படி வெவ்வேறு இனத்தவருக்குக் கைமாறுகிறது என்பதையும் உணர்கிறோம். வாசிக்கும்போது மும்பையின் தாராவியும் மனத்தில் தோன்றலாம்.

நாவலை வாசி்க்கும்போது, மொழி எந்தத் தடையும் இல்லாமல் செல்கிறது. ஆரம்பத்தில், மேலே சொன்ன இரண்டு சரடுகளை மாற்றி மாற்றி உள்வாங்க சிறிது நேரம் பிடிக்கலாம்; ஆற்றின் கரையில் ஒரு கால் நிலத்திலும் ஒரு கால் நீரிலும் வைத்துக்கொண்டு நடப்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது. ஆனால், தீபன் கதாபாத்திரத்தின் அலைக்கழிப்பும், அவன் செல்லும் இடங்களும், அவன் சந்திக்கும் மனிதர்களும் பொதுவாக நமக்குத் தெரியாத உலகங்களிலிருந்து வருவதால் சோர்வடையாமல் வாசித்தேன். போதை, கொலை போன்றவற்றை வணிகக் கதைகள் வேகத்துக்காகவும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் எடுத்துக்கொள்ளும்போது, ம. நவீன் அவற்றை ஒரு மனிதனின் அக உணர்வுகளோடு தொடர்புபடுத்திச் செல்வதால், இலக்கியத்துக்கான உள்ளமைதி சாத்தியமாகிறது. மேலும், தெய்வங்கள் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை நாவலின் கதாபாத்திரங்களோடு இணைத்து வாசிக்கச் சாத்தியப்படுவது, நாவலுக்கு கூடுதல் வலுசேர்க்கிறது.
கதாபாத்திரங்கள்
எந்த வடிவக் கதையையும் வாசகர் மனதில் தங்கவைப்பவை அதன் கதாபாத்திரங்களே. கற்பனைவாத நாவல்களாக இருந்தாலும், தீவிர இலக்கிய நாவல்களாக இருந்தாலும் இது பொருந்தும். ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் பெரிய பழுவேட்டரையரையோ நந்தினியையோ கொண்டுதான் காட்சிகளை நினைவுவைத்திருப்போம். போலவே, ‘அம்மா வந்தாள்’ நாவலை மீட்டெடுக்க, அலங்காரத்தம்மாளின் வலிமையான பாத்திரப்படைப்பும், அவரது உரையாடல்களும், முடிவுகளுமே முன்வந்து நிற்கும். அவ்வாறான கதாபாத்திரங்களே இந்நாவலில் ஈபுவும் சராவும்.
ஈபு சென்ற தலைமுறைப் பெண். புதியதாக ஒன்றை ஒற்றை மனிதராகத் தோற்றுவிக்கும்போது, தன் மொத்த சக்தியையும் உழைப்பையும் அர்ப்பணித்தே அதைச் செய்ய முடியும். அவ்வாறான ஒரு மனிதர் ஈபு. தன்னைத் திருநங்கை என அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு கதாபாத்திரம் வரும் தமிழ் நாவல்களில், இந்த நாவல் அடுத்த பல பத்தாண்டுகளில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். பிறப்பின்போது, ஆண் என்ற உடற்சதையின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை, பத்து வயதிலேயே தான் ஒரு பெண் என கண்டறிகிறது. இயல்பிலேயே மூர்க்கம் சிறிதும் இல்லாத, அன்பு வழியும் சிறுமியாக இருக்கிறாள். மற்றவர்கள் தொடர்ந்து அவளைச் சிறுவன் என்றோ ‘அடா’ என்றோ கூப்பிடும்போது, ஏதோ ஒரு தருணத்திற்குப் பிறகு, கோபம் கொள்வாள் என்றே நினைத்தேன். ஆனால், அவளது அன்பும் சிரிப்பும் வற்றவேயில்லை. நில உரிமைகள் மாறும்போது தமிழ் மக்கள் அவர்களது வாழ்விடத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள்; அவளும் விரட்டியடிக்கப்படுகிறாள். அதேசமயம், தனது பாலினத் தேர்வினாலும், பகுச்சரா மாதா எனப்படும் குஜராத்தியக் கடவுளை வழிபடுவதாலும் தமிழ் மக்களாலேயே ஒதுக்கப்படுகிறாள். அந்தத் தருணத்திலிருந்து பெருங்கருணையின் மறுபக்கமான முழு ஆக்ரோஷத்தையும் கூடக் கைகொள்கிறாள். ஒவ்வொரு துகளாக மண் சேர்த்து, நீரூற்றி, சுட்டெடுத்த செங்கலைக் கொண்டு கட்டும் வீட்டைப் போல, தன்னைத்தானே கட்டியெழுப்பி, ஆதரவின்றி கைவிடப்பட்டிருக்கும் எல்லா திருநங்கைகளுக்கும் தானே அடைக்கலமாக ஆகிறார்.
சரா நிகழ்காலத் தலைமுறைப் பெண். தன் உயிரியல் தாயால் விரட்டப்பட்டு, ஈபுவைத் தன் தாயாகக் கண்டறிகிறாள். இலட்சியப் பெண் போன்று வளர்ந்து, மனத்தளவில் ஒவ்வொரு கணமுமே பெண்ணாகத்தான் இருக்கிறாள். புறத்தில் உடலில் வீணாக வளர்ந்த சிறுபாகம் மட்டுமே, உலகத்தாரால் அவளை ஆண் எனச் சொல்ல வைக்கிறது. அதையும் உதறியெறிவதற்காக “அறுவடை” நாளுக்குக் காத்திருக்கிறாள். இந்த நாளை எல்லா திருநங்கையரும் ஒரு வயதடையும் நாளாகவே பார்க்கின்றனர். அதற்கு முன்னரும் மனத்தில் பெண்ணாகத்தான் உணர்கின்றனர், அதற்குப் பின்னரும் அவ்வாறே. ஆனால் ஏன் அந்த நாள் முக்கியமாகிறது? எது மாற்றம் அடைகிறது? பிறர் சுட்டும் பெண்மை, தான் உணரும் பெண்மையை வந்து சந்திக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்களா? அல்லது, வளர்ந்த நகம் எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் நான் அதை வெட்டி எறிகிறேன், நீ என்ன நினைத்தால் எனக்கென்ன என்று நினைக்கிறார்களா? அந்த நாளை சரா அவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறாளா என்று கேட்டால், இல்லை என்றும் கூறிவிட முடியும். ஏனென்றால், அவளுடைய சஞ்சாரம் வேறு ஒரு தளத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இளமையிலிருந்தே நடனமங்கையாகத் தன்னை வளர்த்தெடுத்துக்கொள்கிறாள் சரா. பரதத்தைப் பயில்கிறாள். அதில் தன்னை மறக்கிறாள். காலத்தின் பின்னால் சென்று பயிலும் மாய நடனம் போல, அப்சரர்களின் நடனத்தை அங்க்கோர் வாட்டில் கண்டறிகிறாள். அங்குள்ள ஒவ்வொரு நடனச் சிற்பத்திலிருந்தும் அசைவைக் கற்றுணர்கிறாள். அல்லது, அவளுள் ஏற்கனவே இருந்த அப்சர நடனத்தைப் புறவடிவில் கண்டதும், தானே அதை மீட்டெடுக்கிறாள் எனலாம். இந்த உலகமாவது, ஆண்களாவது, பெண்களாவது என பரதத்தையும் அப்சரத்தையும் இணைத்து புதிய உலகிற்குள் பறக்கிறாள், புதிய உலகத்தை உண்டாக்குகிறாள். அந்த உலகத்தில் தன் காதலன் தீபன் இல்லை, ஏன் அம்மா ஈபுவும் கூட இல்லை. ஆனால், அந்த உச்ச உலகத்திலிருந்து இறங்கி இந்த உலகிற்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது. தாயுறவும் காதலுறவும் கணவனும் வேண்டியிருக்கின்றன; அவற்றுடன் உடன்வருவது உலகியற் துன்பங்கள்.
இருபது வயதான ஆணான தீபன், நம் கண்களாக வலம்வருகிறான். எங்கு செல்கிறோம் என்ற குறிக்கோள் இல்லாத கால்கள். இதுவா நான், அதுவா நான்; அவன் செய்வது போல் நாமும் செய்து பார்ப்போமா; அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதை நானும் அடைய வேண்டும்; அவரைப் பார்த்து எல்லோரும் அஞ்சுகிறார்கள், என்னைப் பார்த்தும் எல்லாரும் அவ்வாறு இருக்க வேண்டும் என எல்லாச் சுவர்களிலும் முட்டி மோதிப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் அவன். வயதுவந்த பருவத்தில் நண்பனின் தங்கையிடம் நடந்தது, பின்னர் பாலியல் தொழிலாளர் ஒருவரிடம் நடந்தது எனத் தொடர்ந்து மனம்சார்ந்து பாதிப்படைந்து, அது உடல்சார்ந்தும் பாதிக்கும் ஒரு கதாபாத்திரம். விரைப்புக்கொண்டாலே மலவாடை வரும் மனம், அதனால் எல்லைக்குப்போய் அது நடவாமலேயே இருக்கும் உடல். இந்த நாவலின் பயண இழையாக, தீபனின் இந்தப் பிரச்னையைத்தான், அல்லது அவன் பிரச்னை என நினைப்பதைத்தான், நாம் தொடர்கிறோம். இடையில் அவன் சந்திக்க நேரும் தேவதையாக சரா என்கிற அப்சரா வருகிறாள். தான் விரும்பும் பெண் கூறுகள் உள்ள பெண் என அவளை நினைத்து, தன்னை அவளிடம் ஒப்படைக்கத் தயாராகிறான். ஆனால், தனக்கு விருப்பமானதைப் பெற முடியாது என்று உணர்ந்தவுடன் தள்ளிப்போகிறான். தள்ளிப்போயிருக்க வேண்டும். ஆனால், அவனுள் அவன் கண்டுகொண்டே வரும் குரூரம், அவனைத் துண்டிக்க விடாமல் செய்கிறது. ஒருவேளை, முழுதாகத் தன்னைச் சராவிடம் ஒப்படைத்திருந்தால், சுவர்களில் முட்டியிருப்பது நின்று அவன் அவளுடன் பறந்திருக்க இயலும். இயற்கை தன் ஈர்ப்பு சார்ந்து விதித்ததை அவனால் கடக்க முடியவில்லை – யாரால்தான் முடியும்?
உடைக்கும் வலிமை
மற்ற உறவுகளால் புறணிக்கப்பட்ட திருநங்கையர், தாங்களே தங்களுக்கு பல்வேறு உறவுகளாக உள்ளனர். தாய், மகள், அக்கா, தங்கை என தங்கள் வயதிற்கும் குணத்திற்கும் ஏற்றவாறு தாங்களே தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்கள் தான். அப்பனோ அண்ணனோ தம்பியோ யாருமில்லை. காதலன் உண்டு. ஆனால் பெரும்பாலான ஆண்கள் காதலித்து பின்னர் கைவிட்டுவிடுவதால் அந்த உறவிலும்கூட அவர்களால் எப்போதுமே கண்காணிப்புத்தன்மையோடேதான் இருக்கமுடிகிறது. ஒரு கடுஞ்சொல் எங்கே காதலனிடமிருந்து வந்துவிடுமோ என ரேடார் மனத்தோடு வாழ்வது பெருந்துன்பமன்றி வேறில்லை.
சராவுக்கும் தீபனுக்குமான உறவின் பயணம் இந்த நாவலின் முக்கிய இழைகளில் ஒன்று. முதலில், தன் விருப்பக் கூறுகளோடுள்ள பெண் என்று நினைத்து சராவைக் காதலிக்கிறான். அவ்வாறு நினைக்கிறான் என்று சராவுக்குத் தெரிந்ததும் அதிர்ச்சி. ஆனாலும் அவன் விலக முடியாமல் இருக்கிறான். ஒவ்வொரு கட்டமாக அதிலிருந்து வெளிவர முயல்கிறான். குழந்தை வேண்டும் என்கிறான். தத்தெடுத்துக்கொள்ளலாம் என்கிறாள். ‘என் ரத்தத்திலாலான குழந்தை வேண்டும்’ என்கிறான். படிப்படியாக அவனுடைய குரூரம் அதிகரிக்கிறது. மற்றொரு நாள், அவளிடம் ‘நீ என் கேர்ள் ஃபிரெண்டா, பாய் ஃபிரெண்டா?’ எனக் கேட்கிறான். உடல் மூலமாக அவளும் ஆண் தான் என நிரூபிக்க முற்படுகிறான். அவள் உடைகிறாள். மனத்தளவில் அப்பொழுதே இறக்கிறாள். இந்தக் குரூரம் அதிகரித்து, முடிவில் அவள் இறப்பில் சென்று சேர்கிறது. தன்னைப் பிடிக்காத, தன்னை இன்னும் ஆணென்று கருதும் ஒருவனுடன் (மனத்தில் ஏதோ ஒரு மூலையில் மட்டுமே இருந்தாலும் கூட) ஏன் திருநங்கை நட்பும் உறவும் பாராட்ட வேண்டும்? சுமூகமான ‘பிரேக்கப்’ என்ற ஒன்று, ஏன் இந்த நாவலில் காட்டப்படும் திருநங்கையரின் வாழ்வில் இல்லை? யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ, அவரே பிரிவைத் தொடங்க முடியும். சமூகத்திலோ, உறவுகளிலோ எந்த அதிகாரமும் இல்லாத திருநங்கையரை, தனக்குப் பிடித்த ஆணுடனான ஓர் உறவைச் சுய விருப்பத்துடன் துண்டித்துக்கொள்ள எதிர்பார்க்க முடியாது. அது வன்முறையே.
மூன்று தெய்வங்கள்
மலேசியா என்றவுடன் தமிழர்களின் ஞாபகத்துற்கு வருவது வானுயர்ந்து நிற்கும் முருகன். மக்களின் அகத்தை இணைக்க புறத்தை உருவாக்குகிறோம். பெருந்தெய்வ முருகன் அவ்வாறு தென்கிழக்காசியாவில் வாழும் தமிழர்களுக்கு ஓர் இணைப்பு. சடங்குகளும் பூசைகளும் புனித நாட்களும் அமைத்து மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் ஒரு கடவுள். நாவலிலும் மக்கள் தைப்பூசத்திற்கு பத்துமலை முருகன் கோயிலுக்கு செல்லக் காத்திருக்கிறார்கள். ஆனால், தொழிலாளர்களிடம் மதுரை வீரன் இருக்கிறார். முதல் தெய்வமாக, ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கென மதுரை வீரனையே எடுத்துவருகிறார்கள். தங்கள் ஊரில் கோயில் கட்டுகிறார்கள். சுவர்களில் வரைகிறார்கள். அந்த இடத்தி்லிருந்து அவர்கள் விரட்டப்படும்போது மதுரை வீரனையும் எடுத்துச் செல்கிறார்கள். ஒருவேளை அடுத்த ஐநூறு ஆண்டுகளில் மலேசியாவில் மதுரை என்ற நகரம் கூட உருவாகலாம்.
இரண்டாவது தெய்வம், குஜராத்தி தெய்வமான பகுச்சரா மாதா என்கிற பெண் தெய்வம். எந்த மக்கள் கூட்டமும் இந்தத் தெய்வத்தை எடுத்து வரவில்லை. ஒரு மனிதர், ஒரு சிறுமி, தன்னைச் ‘சிகண்டி’ என அறிவித்துக்கொள்ளும் சிறுமியிடமிருந்து இந்தத் தெய்வம் எழுந்து வருகிறது. தன் தாய்வழி தெய்வத்தை, தான் சிறு வயதில் தன் மனத்தில் நிறுத்தி வைத்துள்ள தெய்வத்தை, புறத்தில் சுவரில் வரையப்பட்ட கடவுளாக ஆக்குகிறாள். அவளுக்கேயான தெய்வம் அது, மற்றவர்கள் யாரும் கும்பிடுவதில்லை. வெளியேற்றப்படும்போது அந்தச் சுவரையே பெயர்த்துக்கொண்டு வருகிறாள். (இந்தக் காட்சி நாவலில் அற்புதமான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. சிறுமி சிகண்டிக்கு உதவ, ஒருவர் பெயர்த்தெடுத்த சுவரையே தன் முதுகில் தாங்குகிறார், அட்லஸ் போல, மதுரை வீரன் போல) . இந்தப் பகுச்சரா மாதா, ஒருவர் கட்டியெழுப்பிய மதம் போல, சிகண்டியில் ஊற்றெடுத்து எல்லா திருநங்கைகளுக்கும் தெய்வமாகி்றாள்.
புத்த மதத் தெய்வமானவர், அவலோகிடேசுவரர். அவர் ‘மகாகருணையாளர்’ என நிற்பவர். தனிப்பெருங்கருணை என எல்லையற்ற ஒளிபொருந்தியவர். இந்த ஆண் தெய்வம் இந்தியா, திபெத்திலிருந்து தென்கிழக்காசியாவுக்கும் கிழக்காசியாவுக்கும் சென்றபோது, அங்கு குவான்-யின் என ஒரு பெண் தெய்வமாகிறார். அது மட்டுமல்லாமல், குவான்-யின்னுக்குப் பல உள்ளூர் கதைகள் உருவாகி, நாட்டுப்புற தெய்வமாகவும் ஆகிறார். ஒரு பெருமதத்தில் உருவான தெய்வம், உலகின் மற்றொரு மூலைக்குச் சென்று தன் உடலையும், பாலினத்தையும் மாற்றிக்கொண்டு, தனக்கு உண்டான கதைகளையும் மாற்றிக்கொண்டு வாழ்கிறது. ஆனால், ஒன்று மட்டும் மாறவில்லை. குவான்-யின், அவலோகிடேசுவரர் போன்றே கருணை வற்றாத தெய்வம், ஒளி வழங்கும் பெண். தன் மனத்தையும் உடலையும் மாற்றினால், “நான்” என்ற ஆதார உணர்வு அகலுமா என்ன? ஆண் என வகுக்கப்பட்டதிலிருந்து, பெண் எனத் தன்னைத் தேர்வுசெய்துகொண்டால், தன்னுள் பொதிந்திருக்கும் கருணைதான் வற்றுமா? நாவலில் ஆசிரியர் ஒரு சீன மேடை நாடகம் பற்றி எழுதும் இடம் ஒன்று உண்டு. குவான்-யின்னின் நாட்டுப்புறக் கதை அரங்கேறும்போது தீபனும் சராவும் அதைக் காண்கிறார்கள். நாடகத்தில் ஆயிரம் கைகளுடனும், ஆயிரம் கண்களுடனும் குவான்-யின் பேருருவம் கொள்ளும் காட்சியில் தீபன் சராவைக் கண்டுகொள்கிறான். ஒளியைப் பெற்றுக்கொள்ள கண்களைத் திறந்திருப்பதும், அல்லது மூடியிருப்பதும் அவன் விழைவிலும் திட்பத்திலுமே உள்ளது.
கால மாற்றம், பால், பாலீர்ப்பு
நாவல் என்ற வடிவத்தின் முக்கியக்கூறுகளில் ஒன்று, கால மாற்றத்தை நாம் தெளிவாக உணர முடியும் என்பது. இந்த நாவல், இரண்டு கதையோட்டங்களில் இரண்டு காலங்களைக் காட்டுகிறது. ஒரே நிலம், இரண்டு காலங்கள். காடு அழிக்கப்பட்டு, ரப்பர் வருகிறது, பின்னர் அது அழிந்து கட்டிடங்கள் எழுகின்றன. மக்கள் கூட்டம் வருகிறது, கரைகிறது. பல்வேறு இனங்கள் இங்குமங்கும் நகர்கின்றன. மானுடப் பண்பாட்டின் கடந்த பத்தாயிரம் ஆண்டுகாலச் செயல்பாடுகள் இவை. மனித மனங்களின் இயல்புகளைத் தெய்வக்கூறுகளோடு இணைத்துச் சொல்லும் ஆசிரியர், அதோடு மட்டும் நிற்காமல், மனிதச் சமூகத்தின் புறச் செயல்பாடுகளையும், அவற்றினால் ஏற்படும் நில மாற்றங்களையும் காட்டியிருப்பது, நாவலுக்குப் பெரும் பலம் சேர்க்கிறது. கால மாற்றத்தோடேயே நிகழும் தொழில்நுட்ப மாற்றத்தையும், அதனால் நிகழும் வேலைவாய்ப்பின் நிலைகுலைவையும் இந்த நாவல் காட்டாமல் இல்லை. கையால் போஸ்டர் வரைந்து தொழில் நடத்திக்கொண்டிருக்கும் தீபனின் மாமா, டிஜிட்டல் வினைல் ஃப்ளெக்ஸ் பேனர்களின் வருகையால் முற்றிலும் பாதிப்படைகிறார்.
சமூகத்தில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றிய கதை புனையும்போது, கவனம் மிகத் தேவை. வழக்கமான இழிவான பார்வையையும் தரக்கூடாது, அதேநேரம் இன்னொரு நுனிக்குச் சென்று வீண் புகழும் தரக்கூடாது. இலக்கியத்தின் இன்றியமையாத கூறு, (ஏறத்தாழ) சமநிலை பேணுவது. அதாவது, பல பக்கங்களில் சென்று ஒன்றைக் காண்பதும், அதைக் கண்டறிவதும். இவ்விதத்தில், இந்த நாவல் வெற்றியையே கண்டுள்ளது. பெண்மையும் தாய்மையும் ஒளிமையும், பிறந்த உடல் சார்ந்ததல்ல என்று கூறுகிறது எனலாம். தன் மனத்திற்கேற்ப உடலை மாற்றிக்கொள்ளலாம் – இதை அடையவே உலகின் பல இடங்களில் இன்னமும் திருநர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த இலக்கிய ஆக்கத்தில் இது பேசப்படும்போது வந்துள்ள ஆபத்து, உடல் கூறுகளையும், மனக் கூறுகளையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி அதன் மறுபக்கத்தைப் பேசாமல் இருப்பது. உதாரணமாக, தன் உடலை மாற்றிக்கொண்டால் மட்டுமே பெண் என முழுமையாக உணர முடியுமா? ஆண் உடலை மாற்றாமல் திருநங்கையாக வாழ முடியாதா?
நாவலில் திருநங்கைகள் பற்றிக் குறிப்பிடும்போது சரியாக ‘-ள்’ விகுதி பயன்படுத்தப்படுகிறது. சராவுக்கும்கூட அவள் தன்னுடைய ஓர் உடல்பாகத்தை மாற்றாமல் இருக்கும்போதுகூட ‘-ள்’ என்றே வருகிறது. தீபனும் கூட கதைசொல்லியாக அவளை ‘அவள்’ என்றே குறிப்பிடுகிறான். இது மிகவும் வரவேற்கத்தக்கது. ‘அது’ என்றோ ‘அவன்’ என்றோ, ஆசிரியர் கூற்றாக, தவறாகக் குறிப்பிடாதது மிகவும் வரவேற்கத்தக்கது. (இது வெறும் அரசியல் சரிநிலை அன்று. இதுவே அறச் சரிநிலை.) நாவலில் வரும் கடந்தகாலக் கதையில், ஈபு சிறுமியாக இருக்கும்போது, மற்ற எல்லாரும் அவளைச் சிறுவன் என்று குறிப்பிடுகிறார்கள் – அது அவர்களின் பார்வையில் சரிதான். ஆனால், இந்தப் பகுதி மூன்றாம் நபரின் பார்வையாக நாவலில் சொல்லப்படும்போதிலும், ‘அவன்’ என்றே வருவது சரியா என்பது முக்கியக் கேள்வி. அந்தப் பகுதி, பிற்பாடு தீபனின் கனவில் நிகழ்வதாக உருமாறுகிறது. ஆனாலும், மூன்றாம் நபர் பார்வையில் எழுதப்படும்போது, சொல்வது ஆசிரியரா, கதைநாயகனா என்ற குழப்பம் உருவாவது தவிர்க்க முடியாதது.
வாசகராக நின்றுகொண்டு, ஓர் ஆக்கத்தில் ஏன் ஒன்றைப் பற்றிப் பேசவில்லை என்று பொதுவாகக் கேட்கக்கூடாதுதான். ஆனாலும், பெண் ஆணாக மாறும் திருநம்பிகள் யாரும் கதைக்களத்தில் ஏன் அமையவில்லை என்ற கேள்வி எழுகிறது. இயல்பான ஒரு காரணம், ஆண் பெண்ணாக மாறுவதுதான் நம் பண்பாட்டில் தொடர்ந்து நடைமுறையிலும் இலக்கியங்களிலும் மதங்களின் குறியீடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. எனவே, அவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு இந்தக் கால கதைக்களத்தில் பொருத்திப் பார்ப்பதும் விரித்துப் பார்ப்பதும் இயல்பாக இருக்கலாம்.
பால் பற்றிப் பேசும்போது, பாலீர்ப்பு பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இந்த நாவல் அதைப் பற்றிப் பேசாமல் இல்லை. தீபனுக்கு சரா ஒரு பெண் தான் என ஒருபக்கம் உணர்த்தும் அதே வேளையில், அவள் இன்னும் உடல் மாற்றம் செய்யவில்லை என மறுபக்கம் அவனுக்கு வெறுப்பாக இருக்கிறது. ஓர் ஆணான தான், எப்படி இன்னொரு ஆணோடு உறவு கொள்வது என்பதே அவனுடைய குழப்பமாக இருக்கிறது. இதை அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பாக, அவனுடைய புரிதலாக நாம் எடுத்துக்கொள்ளலாம். நாவலில் பூஸ் பூனையின் மீது தீபன் காட்டும் எல்லையில்லாத குரூரமான காட்சி வருவதற்கு முன், தீபன் இரு ஆண்கள் உறவு கொள்வதைக் காண்கிறான். அதைக் கண்டதும் எச்சில் துப்பி அருவருப்படைகிறான். உடனே அவனுடைய மனம் சராவைத் தொடர்புபடுத்தி, இப்போது சராவும் ஓர் ஆண் தான், அவள் உறுப்பை வெட்டிக்கொண்டு வந்த பின்னர் அவளுடைய உறுப்பினுள் உறவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். இந்தச் சிறுகாட்சியை, தீபனின் மனத்தைப் பிரதிபலிக்க நாவலாசிரியர் வைத்துள்ளார் என்று கொள்வது ஒரு கருத்து. ஆனால், ஏற்கனவே தீபனின் அத்தகைய மனப்போக்கு நமக்குத் தெரிந்தபோதிலும், அதை மேலும் விளக்குவதற்காக நாவலாசிரியர் இந்தச் சிறு துணுக்கைப் புகுத்தியிருக்கிறார் என்பதை மற்றொரு கருத்தாகக் கொண்டு, இதை ஆசிரியரின் புரிதல் குறைபாடாகக் காண்பதும் சாத்தியமானதுதான்.
தீபனின் தடம்
இருபது வயதிலும் தீபன் தன் அம்மாவுக்காக, அம்மாவுடன் இருக்க ஏங்குகிறான். எப்போது அவரிடம் செல்வோம் எனக் காத்திருக்கிறான். பல பயணங்கள் முடிந்து தன் வீட்டுக்குச் சேர்ந்து, தன் படுக்கையில் படுக்கும்போது நமக்கு ஏற்படும் பெருமூச்சுடன் கூடிய நிம்மதியுணர்வை அடைவதற்காகக் காத்திருக்கிறான். ஆனால், அவன் கடைசியாகத் தேர்ந்தெடுப்பது அவனுடைய உயிரியல் தாயை அல்ல, சிகண்டி என்கிற தாயை. அந்தத் தாய் தன்னை அடைவதற்கு காட்டும் வழி, அவனைப் பெண்ணாக மாறச் சொல்வது. அல்லது, அவன் கடைசியாகப் பெண்ணாக உணர்ந்து அதற்காகத் தன் பல்லியின் வாலை அறுத்துக்கொள்கிறான் என்றும் வாசிக்கலாம். இந்தக் கதாபாத்திர மாற்றத்துக்கு உரிய காரணமோ குறிப்போ நாவலில் அதுவரை ஏதாவது உண்டா என்று கேட்டால், இல்லை என்றுதான் கூற வேண்டும்.
தனக்குள்ளிருந்து தாய்மை ஊற்றெடுத்து வந்தது என்று தீபன் முடிவில் கூறுகிறான். குவான்-யின்னாக முன்பு இருந்த சரா இப்பொழுது இல்லாததால், தானே புதிய சராவாக, புதிய தாய் தெய்வமாக ஆகிறான் எனக் கொள்ளலாம். கதை முழுவதும், சரா தீபனை ‘தீபா’ என்றுதான் அழைக்கிறாள்; அந்தப் பெயர் பெண்ணைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால், இவ்வாறு யோசிப்பது ஒரு வெற்று வாக்கியமாகவே எஞ்சுமோ எனவும் எனக்குத் தோன்றுகிறது. வெறும் ஆண்குறி செயல்படாததற்கு தனக்குள் இருக்கும் பெண்மைதான் காரணம் என்று தீபன் உணர்வதாக வருவது என் வாசிப்புக்குப் பொருந்தவில்லை. திருநங்கைகளாக, தங்களைப் பெண்ணாக உணரும் ஈபு, சரா, நிஷாம்மா முதலிய கதாபாத்திரங்களின் உருவாக்கம் கச்சிதம். ஆனால், இதைத் தீபனுக்கும் பொருத்திப் பார்த்தது சரியாக அமையவில்லை. அவன் தன்னைப் பெண்ணாக உணர்ந்ததாக அதுவரை நாவலில் எந்த அறிகுறியும் தெரியப்படுத்தாமல், கடைசி இரண்டு பத்திகளில் அவன் தாய்மையை உணர்கிறான் என்று சொல்வது, ஒரு சிறுகதையில் வாசகரை அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்காகவே எழுதப்பட்டதைப் போன்றது. மேலும், ஏன் ஆண்களால் தனக்குள் இருக்கும் தாய்மையை உணர முடியாதா? தன் குறியை வெட்டித்தான் அது ஒருவருக்குள் ஊற்றெடுக்குமா?
முடிவாக, நாவல் மிக நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். வழி தேடித் திண்டாடிக்கொண்டிருக்கும் ஓர் ஆணுக்கு ஒரு பெண் ஒளிகொடுக்கிறாள் என்ற கூற்றை பல ஆக்கங்களிலும் கலைகளிலும் நாம் கண்டாலும், ஒவ்வொன்றும் சொல்வது வெவ்வேறு விதமாக, வெவ்வேறு வழியில். இந்த ஆக்கத்தில், அவள் உடலால் ஆணாகப் பிறந்தவள், தன் மாசற்ற மனத்தினால் அன்னையாக, அப்சராவாக, குவான்-யின்னாக வெளிப்படுகிறாள். அதுமட்டுமன்றி, அவனையும் அன்னையாக மாற்றுகிறாள். நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் இழிவையும் குரூரத்தையும் பல பக்கங்களில் நம்மையே உணரச் செய்யும் இந்நாவல், ஒரு கருணைத் தூறலையும் சேர்த்தே தருகிறது.
000
வெளியீடு – யாவரும் பதிப்பகம்
இணையத்தில் வாங்க

விஜய் ரெங்கராஜன்
விஜய் ரெங்கராஜன், இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வரும் எழுத்தாளர். அமெரிக்கா கலிபோர்னியா வளைகுடா பகுதியில், கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
விஜய் ரங்கராஜனின் இந்த விமர்சனக் கட்டுரை சிகண்டி நாவலுக்கு இதுவரை வந்த கட்டுரைகளில் மிகச் சிறந்தது. முதல் பாதி கட்டுரையில் நாவலின் சிறப்புகளை நேர்த்தியாக அடுக்கிக்கொண்டுபோகும் விஜய் இரண்டாவது பகுதியில் மிக நுணுக்கமான பார்வையையும் வினாக்களையும் வைக்கிறார். சிகண்டியை விமர்சனம் செய்த பலருக்கு இந்தக் கோணங்கள் தட்டுப்படவில்லை. ஒரு நல்ல நாவலில் எல்லாம் சரியாக அமைந்துவிடுவதில்லை. நாவலின் சிறந்த அம்சங்களிலேயெ விமர்சகர்களின் கவனம் குவிமையம் கொள்ளும் அளவுக்கு நாவல் சிறந்துவிளங்கிவிடும்.. ஆனால் விஜயின் கூர்ந்த வாசிப்பு நாவலின் சில பின்னடைவுகளைக் கேள்விக்குட்படுத்துகிறது. ஒரு நாவலை எப்படி நோக்கவேண்டும் என்ற படிப்பினையை விஜய் தெளிவாகக் காட்டிச்செல்கிறார். நல்ல நாவலுக்கு வந்த நல்ல கட்டுரை.
மிகவும் நுணுக்கமான அலசல். நாவலை மீண்டும் ஒரு முறை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது
விஜய் ரெங்கராஜனின் நூல்குறிப்பை நான் சிகண்டி நாவலை வாசிப்பதற்கு முன் , வாசித்த பிறகு என இருமுறை வாசித்தேன். என் வாசிப்பிற்கு முன்னரே, இது வாசிப்பனுபவத்தை தாண்டி ஒரு விமர்சகனாகவும் இருக்கிறது என்பதை கவனித்தேன். வாசிப்பிற்கு அப்புறம், அவர் வைக்கும் கேள்விகளை , ஒரு மானுட / சமூக ஆர்வலனாகவும் பார்க்கிறேன். இந்த நூலை மறுபிரசுரம் செய்தால், விஜய்யின் குறிப்பை பின்னுரையாக இணக்கலாம். இன்றைய அரசியல் / சமூக சூழ்நிலையில், பேசப்படவேண்டிய பேசுபொருளை , கதை மாந்தர்களை உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ளது. வெறும் தகவல்களாக நிரப்பப்பட்டுவிடக்கூடிய அபுனைவு சாரங்களை, நகரின்/மக்களின் வரலாற்றை, சமூகத்தால் அதிகம் சீண்டப்படும் சக மானுடரை, பண்பாட்டு நம்பிக்கையை இரத்தமும் சதையுமாக வாசகனின் அகத்தை தொடுமளவு மாற்றப்பட்டுள்ள புனைவை அனைவரும் வாசிக்க விஜயின் நூல் குறிப்பு உதவும்.
மிக்க நன்றிகள், கோ. புண்ணியவான், எம். சேகர், ஆஸ்டின் சௌந்தர்.
இந்த நாவல் மிக முக்கியமான பேசுதளத்தைக் கொண்டிருக்கிறது. Coming-of-age bildungsroman வகை தமிழ் எழுத்துகளில் புது முயற்சி. தாய்மை என்பதற்கு மனத்திற்கும் உடலுக்குமான பங்கு என்னென்ன என்பதை ஆராய்கிறது.