
விருந்தினர் உபசரிப்பு
தன்னை
தன் பச்சையை
முழுதாய் உண்டு
முடிக்கும் வரை
அந்த இலைப்புழுவினை
தரையில் விழாதபடிக்கு
பத்திரமாய்
மிக பத்திரமாய்
தன் மடியில் தான்
ஏந்திக் கொண்டிருக்கிறது
ஓர் தளிரிலை
(ஓர் உபகுறிப்பு:
உண்டு முடித்ததும்
அந்த இலைப்புழுவினை
மீண்டும்
தன் மடி ஏந்திக் கொண்டது
இன்னுமொரு இலை
இப்படியே
இன்னுமொரு இலை
இன்னுமொரு இலை
இன்னுமொரு இலை
கடைசி வரை
தரையில் விழாமலேயே
வானம் ஏறிச் சென்றது
அந்த இலைப்புழு
அதாவது
அதை
பத்திரமாய்
மிக பத்திரமாய்
வானம் ஏற்றி அனுப்பி வைத்தன
தளிரிலைகள்)
கதி
பொழுதெல்லாம் பரபரப்பாகவே இருக்கும்
பழைய இரயில் நிலைய படிக்கட்டுக்கள் அது
தட.. தட.. தட.. தட..
சில நிமிடங்களுக்கு ஒரு முறை
ஆயிரம் ஜோடி கால்களால்
படிகளில்
மேலே ஏறிக் கொண்டே இருக்கிறேன்
ஒரு நாள்
அச்சு அசல் என்னைப் போலவே இருக்கும்
யாரோ ஒருவன்
கீழ்படியில் அமர்ந்து
எதோ ஒரு புத்தகத்தை
முகமெல்லாம் கள்ளப் புன்னகை கொப்பளிக்க
வாசித்து கொண்டிருக்கிறான்
தட.. தட.. தட தட..
சில நிமிடங்களுக்கு ஒரு முறை
ஆயிரம் ஜோடி கால்களால்
படிகளில்
கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறேன்
மறுநாள்
அச்சு அசல் என்னைப் போலவே இருக்கும்
அவனே தான்
உச்சிப் படியில் அமர்ந்து
ஏதோ ஒரு புத்தகத்தை
அதே கள்ளப் புன்னகை கொப்பளிக்க
வாசித்துக் கொண்டிருக்கிறான்
தடதட.. தடதட.. தடதட.. தடதட..
சில நிமிடங்களுக்கு ஒரு முறை
ஈராயிரம் ஜோடி கால்களால்
படிகளில்
மேலே ஏறிக் கொண்டும்
கீழே இறங்கிக் கொண்டும் இருக்கிறேன்
இன்னுமொரு நாள்
அவன் தான்
அவனே தான்
பாதி உயர படி ஒன்றில் அமர்ந்து
ஏதோ ஒரு புத்தகத்தை
முகமெல்லாம் நல்ல புன்னகை தவழ
வாசித்துக் கொண்டிருக்கிறான்
திடுமென யாரோ ஒருவர்
என் பெயரினை
உரத்துக் கூவி
என்னை அழைக்கிறார்
படிகளில்
ஏறி இறங்குவதை நிறுத்திவிட்டு
ஈராயிரம் ஜோடி கால்களால்
அழைத்தவரிடம்
நான்
சென்று சேர்வதற்குள்
ஒரே ஒரு ஜோடிக் கால்களால்
அவன்
சென்று சேர்ந்துவிட்டான்
ம்ம்ம்…கொஞ்சம் ஓவராத்தான் தூங்கிட்டமோ?
முட்டி முட்டி முளைத்துவிட்ட
உலகின் முதல் தோட்டத்தை
முதல் முறையாக
எட்டிப் பார்த்த
காடுகள்
என்ன எண்ணியிருக்கும்?
மானுட பதர்களே, உங்கள் மத்தியான வேளைச் சோற்றில் அகப்படும் சிறு கல்லை யாரென்று நினைத்தீர்கள்?
அப்படியா சொன்னார்?
நாங்கள் ஒரு போதும்
அவரை
அப்படி எண்ணியதில்லை
ஆனாலும்
அவருடன் நாங்கள் சேர்ந்து வாழ்வது
இனி எப்படி சாத்தியம்?
நீங்கள் உண்ணும் வேளைகளில்
உங்கள் வாய்களில் அகப்பட்டு
நீங்கள் தரையில் துப்பிவிட்டதாலேயே
அவர்
மீண்டும்
எங்கள் கூட்டத்தில் ஒருவராய்
ஆகிவிட மாட்டார்
ஒரு அரிசி மணி
சோற்றுப் பருக்கை ஆவதற்கு
எத்தனை நேரம்
வேக வேண்டுமோ
அத்தனை நேரம்
அதே அரிசி மணிகளோடு சேர்ந்தே தான்
அவரும்
உலை வெந்து முடித்து
உங்களின் விருந்து இலை வரை
வந்திருக்கிறார்
உங்களின் பற்கள்
அரைக்க முடியாவிட்டால் என்ன?
உங்களின் வயிறுகள்
செரிக்க முடியாவிட்டால் என்ன?
அவரை
பூப்போல
அரைக்கும் பற்களும்
செரிக்கும் வயிறுகளும் கொண்ட
விருந்தினர்கள்
(வேறு பூமியிலிருந்தாவது)
நிச்சயம்
வந்து சேர்வார்கள்
முற்றும் முழுதாய் வெந்து
கனிந்துவிட்ட
ஒருவர்
இனி
எங்களைப் போல
வெறுங்கற்களில் ஒருவரல்லர்
சிறுங்கற்களில் ஒருவரல்லர்
காத்திருக்கும்
பெருவிருந்து
அவர்
இது தெருவோர சிறுகற்கள் கூட்டம் சொல்லிய விளக்கவுரை

வ.அதியமான்
திருவண்ணாமலை அருகேயுள்ள வந்தவாசியில் வசித்து வருகிறார். குடைக்காவல் எனும் முதல் கவிதை தொகுப்பு சால்ட் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















வித்தியாசமான சிந்தனையுடன் வலிந்து உருவாக்கிய கவிதைகள். மேலும் எதிர்பார்க்கிறேன் அதியமான் தஞ்சையிலிருந்து கலித்தேவன் (கலியபெருமாள் )