எட்வர்டும் கடவுளும்- மிலன் குந்தேரா (பகுதி 1)

தமிழில்- நரேன்

எட்வர்டின் கதையை கிராமத்தில் உள்ள அவனது அண்ணனின் வீட்டில் இருந்தே தொடங்குவோம். சாய்வுக்கட்டிலில் கிடந்தபடி எட்வர்டிடம் சொன்னான் அவன் அண்ணன், “அந்தச் சூனியக்காரி கிழவியிடம் போய்க் கேளு. யோசிக்காதே, அவளிடம் பேசு, பரவாயில்லை! அவளொரு பன்றி ஜென்மம்தான். ஆனால் அந்த உயிரினங்களுக்குக் கூட மனசாட்சி என ஒன்று இருக்குமெனத்தான்  நான் நம்புகிறேன். அவள் என்னை ஒருமுறை அசிங்கப்படுத்திவிட்டாள் என்பதாலேயே அதைச் சரி செய்ய நீ ஒரு வாய்ப்பு கொடுத்தால் சந்தோஷமாகத்தான் ஏத்துப்பான்னு நினைக்கிறேன்.”

எட்வர்டின் அண்ணன் எப்போதும் இப்படித்தான்: நல்ல குணமுள்ளவன் ஆனால் சரியான சோம்பேறி. சில ஆண்டுகளுக்கு முன்பு (எட்வர்ட் அப்போது மிகவும் சிறியவன்) இப்படித்தான் ஸ்டாலின் மரணித்த நாளைக்கூட அறியாமல் தனது மேல்மாட படிப்பறையில் சாய்வு நாற்காலியில் குறட்டை விட்டுச் சோம்பித் தூங்கியிருப்பான். மறுநாளும் அச்செய்தியை அறிந்திராத அவன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றான். கூடத்தின் மத்தியில் துக்கத்தின் உருவச்சிலை போல ஊரே பார்க்கும்படி உறைந்து நின்ற தன் சக மாணவியான காம்ரேட் செசாக்-கோவாவைக் கண்டான். மூன்று முறை அவளை வட்டமிட்டு உரக்கக் கிண்டலடித்துக் கூவிச் சிரிக்கத் தொடங்கினான். இதனால் புண்பட்ட அவள் தன் சக மாணவனின் சிரிப்பு ஒரு அரசியல் தூண்டுதல் என்று வெளிப்படையாகப் பழி சாட்டினாள். இதனால் எட்வர்டின் அண்ணன் படிப்பைக் கைவிட்டு கிராமத்திற்குச் சென்று வேலை பார்க்க வேண்டியதாயிற்று. ஆனால் அதன்பிறகு அவனுக்கு அக்கிராமத்திலேயே ஒரு வீடு, ஒரு நாய், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள், கூடவே வாரயிறுதியைக் கழிக்க ஒரு குடிலும் கூட அமையப் பெற்றான். 

இந்தக் கிராமத்து வீட்டில்தான் படுத்தபடி எட்வர்டிடம் விளக்கிக்கொண்டிருந்தான்: “தொழிலாளர் வர்க்கத்தைக் கண்டிக்கும் சாட்டை என்றுதான் நாங்கள் அவளை அழைப்போம். ஆனால் அதற்காக நீ பயப்பட வேண்டியதில்லை. இப்போது அவள் வயதாகிப் போன ஒரு கிழவி. ஆனால் அவள் எப்போதுமே இளைஞர்களிடம் சற்று பலவீனம் கொண்டவள், அதனால் உனக்கு அவள் உதவியாகத்தான் இருப்பாள்.”   

மிலன் குந்தேரா

எட்வர்டு அப்போது மிகவும் இளையவன். ஆசிரியர் கல்லூரியில் இருந்து அப்போதுதான் பட்டம் பெற்று வெளிவந்திருந்தான் (அவன் அண்ணன் வெளியேற்றப்பட்ட அதே வகுப்பு). வேலை தேடிக்கொண்டிருந்தான். அடுத்த நாள் அவன் அண்ணனின் அறிவுரையைப் பின்பற்றி கல்லூரி இயக்குநரின் அலுவலகக் கதவைத் தட்டினான். அவள் உயரமாக இருந்தாள். பிசுபிசுக்கும் கறுப்பு தலைமுடியும், கறுப்பு கண்களும், மூக்கின் கீழே கரிய மென் மயிர் பரவலும், மெல்லிய உடலும் கொண்ட பெண்மணி. பெண்மையின் வனப்பு அவனை எப்போதும் குறுகச்செய்துவிடும். ஆனால் அக்கூச்சத்திலிருந்து அவரது அழகற்ற தோற்றம் அவனை விடுவித்தது. அவனால் நிதானமாக, இனிமையாக, மரியாதையாக அவருடன் பேச முடிந்தது. அவனின் இந்த அணுகுமுறையைக் கண்டு இயக்குநர் வெளிப்படையாகவே மகிழ்ச்சியடைந்தார். “எங்களுக்கு இங்கே இளைஞர்கள் தேவை” என்று அப்பட்டமாக உணரத்தக்க உற்சாகத்தில் பலமுறை சொன்னார்.

2

   இப்படியாக ஒரு சிறிய போஹேமிய கிராமத்தில் ஆசிரியரானான் எட்வர்ட். இதில் அவனுக்கு மகிழ்ச்சியோ சோகமோ எதுவுமில்லை. அவன் எப்போதுமே கடும் முயற்சி செய்து தீவிரமானவற்றையும் தீவிரமல்லாதவற்றையும் பகுத்து வேறுபடுத்திப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தன்னுடைய ஆசிரியப் பணியைத் தீவிரமற்ற வகைமைக்குள் வைத்தான். ஆசிரியப் பணியே தீவிரமற்றது என்பது அதன் அர்த்தமல்ல (உண்மையில் அப்பணியின் மீது அவன் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தான், வேறு எந்த வகையிலும் அவனால் சம்பாதிக்க முடியாது என்பதை அவன் உணர்ந்தே இருந்தான் என்பதுதான் காரணம்). ஆனால் அவன் தன்னியல்பின் அடிப்படையிலேயே தனக்கு அப்பணி பொருத்தமற்றது என்று கருதினான். இதை அவன் தேர்ந்தெடுக்கவில்லை. சமூக நிர்ப்பந்தங்கள், அவனுடைய கடந்தகால வரலாறு, அவனின் உயர்நிலைப் பள்ளி பட்டையம் மற்றும் அவன் இதுவரை எழுதிய நுழைவுத் தேர்வுகள் என எல்லாம் சேர்ந்து இப்பணியை அவன் மீது திணித்தன. இப்படி ஒன்றுடனொன்று பிண்ணிப் பிணைந்த சக்திகளின் கூட்டு அவனை இறுதியில் உயர்நிலைப் பள்ளியில் இருந்து ஆசிரியப் பள்ளிக்குள் தள்ளி விட்டன (ஒரு பாரந்தூக்கும் கருவி சரக்கு வண்டிக்குள் மூட்டையைத் தூக்கிப் போடுவதைப் போல்). அவன் அங்கு போக விரும்பவில்லை (அவன் சகோதரனின் தோல்வி ஒரு கெட்ட நிமித்தம்தான்), ஆனால் வேறுவழியின்றி அதை அவன் ஏற்றுக்கொண்டான். இந்தத் தொழில் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட தற்செயலான அம்சங்களில் ஒன்று என்பதையும் அவன் புரிந்துகொண்டான். முகத்தில் போலி மீசையைப் போல இது அவனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும். நகைப்புக்குரிய ஒன்றுதான், நிச்சயமாக!

ஒருவேளை, கடமையென்று அமைந்தவை தன் அக்கறைக்குரியதாக இல்லாமல் போனால் (ஆனால் கேலிச் சிரிப்புக்குரியதுதான்), அக்கறைகொள்ள வேண்டியவை தன் கடமையென்று ஆகாமல் இருந்தால் என்னவாகும்: கொஞ்சம் காலத்திலேயே தான் புகுந்த ஊரில் ஒரு பெண்ணைக் கண்டான். அவள் மிகவும் அழகானவளாக அவனுக்குத் தோன்றினாள், கிட்டத்தட்ட உள்ளார்ந்த நேர்மையுடன் அவளைத் தனதாக்கத் தீவிரமாகப் பின்தொடர்ந்தான். அவள் பெயர் ஆலிஸ். தொடக்கச் சந்திப்புகளிலேயே தனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும் ஒன்றைக் கண்டுபிடித்தான்: அவள் மிகவும் கூச்ச சுபாவமுடையவள், நல்லொழுக்கத்தைப் பேணுபவள்!

பலமுறை மாலை நடையின் போது அவளைத் தன் கைகளால் வளைத்துப் பிடித்து பின்னாலிருந்து அவளின் வலது மார்பைத் தொட அவன் முயன்றிருக்கிறான், ஒவ்வொருமுறையும் அவள் அவன் கைகளைப் பிடித்துத் தூர விலக்கிவிடுவாள். ஒரு மாலைப்பொழுதில் அவன் இதை மீண்டும் முயன்றபோது அவள் (மீண்டும்) அவன் கைகளைத் தள்ளிவிட்டு நின்றாள். பின் கேட்டாள், “உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கா?”

தனது உணர்திறன் மிக்க காதுகளால் எட்வர்ட் இந்தக் கேள்வியில் இருக்கும் பிரத்யேகமான பிடிவாதத்தைக் கண்டுபிடித்தான். மார்பகத்தைப் பற்றிச் சட்டென மறந்து போனான்.

“நம்பிக்கை இருக்கா?” ஆலிஸ் மீண்டும் கேட்டாள், எட்வர்ட் பதில் சொல்லத் துணியவில்லை. வெளிப்படையாகப் பதில் சொல்லப் பயந்ததற்காக நாம் அவனைப் பழிக்க வேண்டியதில்லை; இந்த ஊருக்கு அவன் புதியவன், தனிமையாக உணர்பவன். மேலும் அவன் ஆலிஸின் மீது மிகுந்து ஈர்ப்பு கொண்டிருந்தான், ஒரு எளிய பதிலின் பொருட்டு அவளை இழக்கும் அபாயம் இருந்தது. 

“உனக்கு?” நேரத்தை நீட்டிக்கும் விதமாகத் திருப்பி அவளிடமே அவன் அதைக் கேட்டான்.

“ஆம், எனக்கு நம்பிக்கையுண்டு.” இப்போது அவனையும் பதிலளிக்குமாறு மீண்டும் வற்புறுத்தினாள்.

கடவுளை நம்ப வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இதுவரை ஒருபோதும் தோன்றியதில்லை. ஆனாலும் அதை ஒப்புக்கொள்ளக் கூடாது என்பதை அவன் புரிந்துகொண்டான். மாறாக, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ‘கடவுள் மீதான நம்பிக்கை’ எனும் ட்ரோஜன் குதிரையை உருவாக்கும் சாத்தியத்தைப் பார்த்தான். பண்டைய உதாரணத்தின்படி, அதன் வயிற்றிலிருந்து நழுவி குதித்து இப்பெண்ணின் இதயத்திற்குள் யாரும் அறியாமல் நுழைந்திடமுடியும். ஆனால், “நான் கடவுளை நம்புகிறேன்” என்று ஆலிஸிடம் சொல்வது எட்வார்டுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை; அவன் அப்படியான போக்கிரியும் அல்ல, பொய் சொல்வதற்கு அவன் வெட்கப்பட்டான்; பொய் சொல்வதின் எளிமை அவனுக்கு வெறுப்பையே அளித்தது. ஒரு பொய் சொல்வது அவசியமென்றாகிவிட்டால் அது உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அதனால் அவன் வழக்கத்திற்கு மீறிய சிந்தனையாழ்ந்த குரலில் பதிலளித்தான்:

“இதைப் பற்றி நான் உன்னிடம் என்ன சொல்வதென்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை, ஆலிஸ். எனக்குக் கடவுள் நம்பிக்கை நிச்சயமா இருக்குதான். ஆனால்…” அவன் இடைநிறுத்தினான். ஆலிஸ் அவனைச் சட்டென வியப்புடன் நோக்கினாள். “ஆனால், நான் உன்னிடம் வெளிப்படையாகப் பேச நினைக்கிறேன். சரியா?”

“நீ வெளிப்படையாகத்தான் பேச வேண்டும்,” அவள் சொன்னாள். “இல்லையென்றால் நாம் சேர்ந்து இருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.”

“நிஜமாகவா?”

“நிஜமாகத்தான்,” என்றாள் ஆலிஸ்.

“சில நேரங்களில் சந்தேகம் என்னை ரொம்ப தொந்தரவு செய்கின்றன,” அடைபட்ட குரலில் சொன்னான் எட்வர்ட். “சில நேரங்களில் அவர் உண்மையிலேயே இருக்கிறாரா என்றே சந்தேகமாக இருக்கு.”

“ஆனால் அதை எப்படி நீ சந்தேகப்பட முடியும்?” ஆலிஸ் கிட்டத்தட்ட உரக்கச் சத்தம் போட்டே விட்டாள்.

எட்வர்ட் அமைதியாக இருந்தான். ஒரு கணம் யோசித்த பிறகு வழக்கமான ஒரு சிந்தனை அவனைத் தாக்கியது: “என்னைச் சுற்றி இவ்வளவு தீமைகள் இருக்கும்போது அவற்றை அனுமதிக்கும் ஒரு கடவுள் இருப்பது உண்மையிலேயே சாத்தியம்தானா என்று அடிக்கடி யோசிப்பேன்.”

அவ்வளவு சோகமாக அவன் குரல் ஒலித்ததால் ஆலிஸ் அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்: “ஆமா, இந்த உலகம் உண்மையில் தீமையால் நிறைந்து இருக்கிறது. எனக்கும் அது தெரியும். ஆனால் அந்த காரணத்திற்காகத்தான் நீ நிச்சயம் கடவுளை நம்ப வேண்டும். அவர் இல்லையென்றால் இந்தத் துன்பங்கள் அனைத்தும் வீண். எதற்கும் எந்த அர்த்தமும் இருக்காது. அப்படியிருக்கும் பட்சத்தில் என்னால் வாழ்வே முடியாது.”

“நீ சொல்றதும் சரியாக இருக்கலாம்,” சிந்தனையுடன் சொன்னான் எட்வர்ட். ஞாயிற்றுக்கிழமை அவளுடன் தேவாலயத்திற்குச் சென்றான். விரல்களைப் புனித நீரில் தொட்டு சிலுவையிட்டுக் கொண்டான். அதன் பின்னர் கூட்டு வழிபாட்டில் மக்கள் பாடல்கள் பாடினர், அவர்களுடன் இணைந்து அவனும் ஒரு கீர்த்தனையைப் பாடினான், அதன் இசை அவனுக்குப் பரிச்சயமானதாக இருந்தது, ஆனால் அதன் வரிகள் அவனுக்குத் தெரியவில்லை. பாடலின் வரிகளுக்குப் பதிலாக அவன் விதவிதமான ஒலிகளையே எழுப்பினான். ஒவ்வொரு இசைக் குறிப்பையும் மற்றவர்களைவிடக் குறை நொடி பிந்தியே ஒலித்தான், இசையைக் கூட மங்கலாகவே அவன் நினைவில் வைத்திருந்தான். ஆனால் அவனுக்கு அந்த இசைக்குறிப்பில் பிடி கிடைத்துவிட்டால் தனது குரலை முழுமையாக ஒலிக்கவிட்டான். இவ்வளவு அழகான அடிக்குரல் அவனுக்கு இருப்பதை அவன் வாழ்விலே அப்போதுதான் முதன்முறையாகக் கண்டுபிடித்தான். பின்னர் அவர்கள் அனைவரும் கர்த்தரின் ஜெபத்தை ஓதத் தொடங்கினர், சில மூதாட்டிகள் மண்டியிட்டனர். கற்தரையில் தானும் மண்டியிட வேண்டும் என்று வலிய அவனுக்குள் எழுந்த வேட்கையை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. மிகவும் கவர்ச்சிகரமான அசைவுகளால் தன் கரங்களை வளைத்து சிலுவையிட்டுக் கொண்டான். வகுப்பறையிலோ தெருவிலோ அல்லது வேறெங்கும் இதுவரை செய்யாத ஒன்றைச் செய்த அற்புதமான உணர்வை அனுபவித்தான். அவன் ஆனந்த சுதந்திரத்தை உணர்ந்தான்.   

எல்லாம் முடிந்ததும் கண்களில் பிரகாசமான ஒளியுடன் வெளிப்பட ஆலிஸ் அவனைப் பார்த்தாள். “அவர் இருப்பின் மீது உனக்குச் சந்தேகம் உண்டென்று இப்போதும் உன்னால் சொல்ல முடியுமா?”

“முடியாது.”

ஆலிஸ் சொன்னாள், “என்னைப் போலவே அவரை நீ நேசிக்க உனக்குச் சொல்லிக்கொடுக்கப் போகிறேன்.”

அவர்கள் தேவாலயத்தின் அகன்ற படிக்கட்டுகளில் நின்றுகொண்டிருந்தார்கள். எட்வர்டின் ஆன்மா முழுதும் புன்னகையால் நிறைந்திருந்தது. துரதிருஷ்டவசமாக, கல்லூரி பெண் இயக்குநர் அவ்வழியே நடந்து சென்றார், அவர்களைப் பார்த்தார்.

3

இதுவொரு மோசமான சம்பவம். நாம் இங்கே ஒன்றை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது (வரலாற்றுப் பின்னணியை மறக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்காக). மக்கள் தேவாலயத்திற்குச் செல்வது தடை செய்யப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும், அங்கு செல்வதில் ஒரு குறிப்பிட்ட ஆபத்து இல்லாமல் இல்லை. 

இதைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினம் அல்ல. புரட்சி என்று அவர்களே அழைத்துக்கொண்ட ஒன்றிற்காகப் போராடியவர்கள் தங்கள் பெருமையைக் காத்து வந்தார்கள்: போர் முனையில் சரியான பக்கத்தில் நின்றிருப்பதின் பெருமை அது. பத்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு (நமது கதை நிகழும் காலம்) போர் முனைகள் உருகி அழிந்து காணாமல் போக, அதனூடே சரியான பக்கம் எதுவென்பதும் கலைந்து போனது. புரட்சியின் முன்னால் ஆதரவாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து உடனடியாக மாற்று அணிகளைத் தேடிப் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை; மதத்திற்கு நன்றி. (விசுவாசிகளுக்கு எதிராகப் போராடும் நாத்திகர்களாக) அவர்கள் மீண்டும் சரியான பக்கத்தில் நிற்கவும், தங்களுடைய வழக்கமானதும் விலைமதிப்பற்றதுமான ‘தான் பெரியவன்’ என்ற பெருமையுணர்வையும் தக்க வைக்க உதவிற்று.

உண்மையைச் சொல்வதென்றால், மாற்று அணியும் கூட மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவே இருந்தது, ஆலீஸும் அவர்களில் ஒருவர்தான் என்று இங்கே சொல்வது முதிரா தகவலாக இருக்காது என்று நம்புகிறேன். கல்லூரி இயக்குநர் சரியான அணியில் இருக்கவேண்டும் என்று விரும்பியதைப் போல அதற்கு எதிரான அணியில் இருக்க வேண்டுமென ஆலிஸ் விரும்பினாள். புரட்சியின்போது அவள் அப்பாவின் கடையை நாட்டுடைமையாக்கினார்கள். இதைச் செய்தவர்களை அவள் வெறுத்தாள். ஆனால் அவளால் இந்த வெறுப்பை எப்படிக் காட்ட முடியும்? தன் தந்தைக்காக கையில் கத்தியைத் தூக்கிப் பழிவாங்க முடியுமா? போஹேமியாவில் இப்படியான செயல்கள் வழக்கத்தில் இல்லை. ஆலிஸ் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தச் சிறந்த வழியொன்றை கைக்கொண்டாள்: அவள் கடவுளை நம்பத் தொடங்கினாள்.

இவ்வாறாக இறைவன் இருபக்கத்திற்கும் உதவி செய்தார். இந்த இரு நெருப்புகளுக்கிடையில் சிக்கிக் கொண்டான் எட்வர்ட், கடவுளுக்கு நன்றி!

திங்கட்கிழமை காலை கல்லூரி இயக்குநர், எட்வர்டை காண ஆசிரியர் அறைக்குள் வந்தபோது அவன் அமைதியிழந்திருந்தான். முதல் நேர்காணலின்போது இருந்த நட்பார்ந்த சூழலை அவனால் இப்போது உருவாக்க முடியவில்லை. அந்த சந்திப்பிற்குப் பிறகு அவன் எந்த விதமான சில்மிஷ பேச்சுகளிலும் அவருடன் ஈடுபடவில்லை (அதற்கான திறனில்லை அல்லது அக்கறையில்லை) என்பதுதான் காரணம். எனவே இயக்குநர் அவனைக் கண்டதும் எளிதில் வெளிப்படும் வில்லத்தனமான சீண்டும் புன்னகையை வெளிப்படுத்தியதற்கு நல்ல காரணம் இருந்தது. “நேற்று நாம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம், இல்லையா?”

“ஆமாம்,” என்றான் எட்வர்ட்.

“ஒரு இளைஞன் எப்படி தேவாலயத்திற்குச் செல்ல முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,” இயக்குநர் தொடர்ந்து பேசினார். எட்வர்ட் சங்கடத்துடன் தோள்களைக் குலுக்கினான். இயக்குநர் தலையை அசைத்துச் சொன்னார், “அதுவும் உன்னைப் போன்ற இளைஞன்…”

“பரோக் பாணியில் அமைந்திருந்த கதீட்ரலின் உட்புறத்தைப் பார்ப்பதற்காகத்தான் சென்றேன்” இதைக் காரணமாகச் சொன்னான் எட்வர்ட்.“ஓ… அதுக்குத்தானா” பெண் இயக்குநர் இதை முரண் நகை தொனிக்கச் சொன்னார். “உனக்குக் கட்டிடக் கலையில் ஆர்வம் இருப்பது எனக்குத் தெரியாது.”

இந்த உரையாடல் கொஞ்சம் கூட உகந்ததாக இல்லை எட்வர்டுக்கு. அவன் அண்ணன் சக மாணவியை மூன்று முறை சுற்றி வந்து கிண்டலடித்துச் சிரித்தது நினைவுக்கு வந்தது. குடும்பச் சரித்திரம் மீண்டும் திரும்புவது போல அவனுக்குத் தோன்றியது, பயம் வந்தது. சனிக்கிழமை அவன் ஆலிஸிடம் தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்கு வர முடியாது என்றான். தனக்குச் சளி பிடித்திருக்கிறது என்று சாக்கு சொன்னான்.

“நீ ஒரு சரியான பேடி,” அந்த வாரத்தில் அவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டபோது ஆலிஸ் அவனைக் கடிந்தாள். எட்வர்டுக்கு அவளுடைய சொற்கள் வெறுப்பை உமிழ்வதைப் போல் தோன்றியது. அதனால் அவளிடம் அவன் சொல்ல ஆரம்பித்தான் (புதிராகவும் ரகசியமாகவும், தெளிவற்ற குரலில் சொன்னான். உண்மையான காரணங்களையும் அவனுடைய பயத்தையும் ஒப்புக்கொள்ள அவன் வெட்கப்பட்டான்.) கல்லூரியில் அவனுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றியும் எந்தக் காரணமும் இல்லாமல் அவனைத் தண்டிக்கும் கொடூரமான கல்லூரி பெண் இயக்குநரைப் பற்றியும் கூறினான். அவளிடமிருந்து இரக்கத்தைப் பெற விரும்பினான், ஆனால் ஆலிஸ் சொன்னாள்: “என்னுடைய பெண் முதலாளி இதற்கு நேரெதிர்; கொஞ்சம் கூட கெட்டவள் இல்லை. அவள் தன் வேலை சார்ந்த கதைகளைச் சிரித்துக்கொண்டே சொல்லத் தொடங்கினாள். அவளின் குதூகலமான குரலைக் கேட்டு அவன் மேலும் மேலும் இருண்டான்.

4

பெரியோர்களே தாய்மார்களே கேளுங்கள், அவை வேதனை மிகுந்த வாரங்கள். எட்வர்ட் ஆலீஸுக்காக நரகத் துயரில் ஏங்கினான். அவள் உடல் அவனுள் தீயைத் தூண்டியது, ஆனால் அதே உடல்தான் அவனால் சற்றும் அணுக முடியாததாக இருந்தது. அவர்களின் சந்திப்புகள் நேர்ந்த சூழல்களும் அவனுக்குத் தொந்தரவு அளிப்பதாக அமைந்தன; இருட்டிய பிறகு அவர்கள் ஒன்றிரண்டு மணி நேரங்கள் தெருக்களில் அலைந்தார்கள் அல்லது திரைப்படங்களுக்குச் சென்றார்கள்; காமக் களியாட்டங்களுக்கு முற்றிலும் சாத்தியமற்ற அற்பத்தனமான இவ்விரண்டு வகைச் சந்திப்புகள் (வேறு வகைச் சந்திப்புகளுக்கு வாய்ப்பே இல்லை), ஒருவேளை வேறு சூழலில் இச்சந்திப்புகள் நிகழ்ந்தால் தன் எண்ணம் ஈடேறும் என்று எட்வர்டை நினைக்கத் தூண்டியது. கிராமத்தில் நதிக்கரை பள்ளத்தாக்கில் ஒரு குடில் அமைத்திருக்கும் தன் அண்ணனை ஒரு வார இறுதியில் சந்திக்கப் போகலாமா என்று வெகுளியான முகத்துடன் கேள்வியை முன்வைத்தான் எட்வர்ட். இயற்கையின் அப்பழுக்கற்ற அழகைப் பற்றி உற்சாகமாக விவரித்தான் எட்வர்ட். ஆனால் ஆலிஸ் (பொதுவாக எதிலும் ஐயமுறாதவள், சூதறியாதவள்) சட்டென அவன் உள்நோக்கத்தைக் கண்டுகொண்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டாள். அவனை எதிர்த்து நிற்பது ஆலிஸ் மட்டுமல்ல. ஆலீஸின் (சாசுவதமான விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும்) கடவுளும் கூடத்தான்.

இந்தக் கடவுள் ஒரே ஒரு கருத்துக்காகவே உருவெடுத்திருக்கிறார். (அவருக்கு வேறு எந்த விருப்பங்களோ கவலைகளோ இல்லை): அவர் திருமணத்திற்கு உட்படாத உடலுறவைத் தடை செய்தார். ஆகவே அவர் நகைப்புக்குரிய கடவுள்தான், ஆனால் அதற்காக நாம் ஆலீஸைப் பழித்துச் சிரிக்க வேண்டியதில்லை. மக்களுக்கு மோசஸ் அளித்த பத்து கட்டளைகளில் ஒன்பது அவளது ஆன்மாவிற்கு எந்த இடரையும் விளைவிக்கவில்லை; தன் தந்தையைக் கொல்ல வேண்டும் என்றோ அல்லது அவரை மதிக்காமலிருக்க வேண்டும் என்றோ அவளுக்குத் தோன்றவில்லை. அல்லது அண்டை வீட்டாரின் மனைவி மீது பொறாமை இல்லை; ஒரே ஒரு கட்டளை மட்டும்தான் அவ்வளவு தெளிவாக இல்லை என்று அவள் உணர்ந்தாள், அது ஒரு பெரிய சவாலாக அவள் முன் நின்றது: திருமணத்தை மீறிய காமத் தடை. தன் மத நம்பிக்கையைப் பின்பற்றவும், வெளிப்படுத்தவும், நிரூபிக்கவும் அவள் இந்த ஒற்றைக் கட்டளை மீது தன் முழு கவனத்தையும் அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. வரையறையற்ற, மிகத் தளர்ந்த பொருளில் ஒரு கோட்பாடாக மட்டுமே எஞ்சியிருந்த ஒரு கடவுளிலிருந்து மிகத் துல்லியமான, உறுதியான ஒரு குறிப்பிட்ட கடவுளை உருவாக்கிவிட்டாள் : ‘அகாமக் கடவுள்’.

உண்மையில் கலவி என்பது எதிலிருந்து தொடங்குகிறது என்று நான் கேட்கிறேன். முற்றிலும் மர்மமான அளவுகோலிலிருந்து ஒவ்வொரு பெண்ணும் தனக்கேயுரிய அளவுகோலை உருவாக்கிக் கொள்கிறாள். மிகவும் மகிழ்வுடனே ஆலிஸ் எட்வர்டை முத்தமிட அனுமதித்தாள், பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக தன் மார்பகங்களை அவன் கைகளால் தழுவ இணங்கினாள். ஆனால் அவளின் உடலின் நடுப்பகுதியில், தொப்புள் அருகே என வைத்துக்கொள்வோம், கண்டிப்பான ஒரு சமரசமற்ற கோடைக் கிழித்திருந்தாள். அதற்குக் கீழே மோசஸின் மறுப்புக்குரிய பகுதி, கடவுளின் கோபத்திற்கு உள்ளாகக்கூடிய புனிதத் தடை விதிக்கப்பட்ட பகுதி.

இறையியலின் அடிப்படை நூல்களைப் பயில்வதற்காகப் பைபிளை வாசிக்கத் தொடங்கினான் எட்வர்ட். ஆலிஸை அவளுடைய ஆயுதங்களை வைத்தே அவளை எதிர்க்க முடிவெடுத்தான். “அன்பே ஆலிஸ்,” அவளிடம் பின் சொன்னான், “நாம் கடவுளை நேசித்தால், எதுவுமே தடையில்லை. நாம் எதற்காகவாவது ஏங்குகிறோம் என்றால் அது அவரின் சித்தத்தின் விளைவேயாகும். நாம் அனைவரும் அன்பால் ஆளப்படவேண்டும் என்பதைத் தவிர கிறிஸ்து வேறு எதையுமே விரும்பவில்லை. 

“ஆமாம். ஆனால் நீ நினைப்பதிலிருந்து வேறுபட்ட காதல் அது.” என்றாள் ஆலிஸ்.

“ஒரேயொரு காதல்தான் உள்ளது,” என்றான் எட்வர்ட்.

“அது உனக்கு ஏற்றதாகவே இருக்கும்…,” அவள் சொன்னாள். “கடவுளால் மட்டுமே உருவாக்கப்பட்டவை சில கட்டளைகள், அவற்றை நாம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்.”

“ஆமாம். பழைய ஏற்பாட்டின் கடவுள்,” என்றான் எட்வர்ட். “ஆனால் அது கிறித்துவ கடவுள் அல்ல.”

“அது எப்படி? நிச்சயமாக ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார்,” ஆலிஸ் எதிர்த்தாள்.

“ஆமாம்,” என்றான் எட்வர்ட். “பழைய ஏற்பாட்டின் யூதர்கள் மட்டுமே நாம் புரிந்துகொண்டதிலிருந்து சற்று வித்தியாசமாகக் கடவுளைப் புரிந்துகொண்டார்கள். கிறிஸ்துவின் வருகைக்கு முன்பு கடவுளின் கட்டளைகளாலும் விதிகளாலும் ஆன ஒரு அமைப்பை எல்லாவற்றிருக்கும் மேலானதாகக் கருதி மக்கள்  பின்பற்ற வேண்டியிருந்தது. ஒரு மனிதனின் ஆன்மாவிற்குள் என்ன நடக்கிறது என்பது அவ்வளவு முக்கியமல்ல அவர்களுக்கு. ஆனால் இதில் சில விதிமுறைகளையும் தடைகளையும் மனதிற்குப் புறம்பானது என்று கிறிஸ்து கருதினார். ஒரு மனிதன் தன் அகத்தின் ஆழத்தில் எப்படிப்பட்டவன் என்பதே அவருக்கு முக்கியம். ஒருவன் தன் உணர்வுகளுக்கு உண்மையானவனாக இருந்தால், விசுவாசமுள்ள இதயம் கொண்டிருந்தால், அவன் செய்வது அத்தனையும் நன்மையே, கடவுளுக்குப் பிரியமானதே! அதனால்தான் புனித பால் சொன்னார்: “தூய்மையான இருதயம் கொண்ட மனிதனுக்கு எல்லாமே தூய்மையானது.”

“ஆனால் உன் இதயம் தூய்மையானதா என எனக்குச் சந்தேகமாக இருக்கு.”

“அதேபோல புனித அகஸ்டின்…,” தொடர்ந்தான் எட்வர்ட். “இப்படிச் சொன்னார்: ‘கடவுளை நேசி அதன் பின் நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்.’ புரிகிறதா ஆலிஸ்? ‘கடவுளை நேசி அதன் பின் நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்.’

“ஆனால் உனக்கு விருப்பமானது எனக்கு ஒருபோதும் விருப்பமானதாக இருக்காது,” அவள் பதிலளித்தாள். இறையியலைக் கைக்கொண்டு தான் நடத்திய தாக்குதல் முழுவதுமாக தோல்வியடைந்துவிட்டதைப் புரிந்துகொண்டான் எட்வர்ட்; எனவே அவன் சொன்னான்:

“உனக்கு என் மேல் காதல் இல்லை.” 

“எனக்கு உன் மேல் காதல் உண்டு,” சற்றுகூட உணர்ச்சியின்றி நேரடியாகச் சொன்னாள். “அதனால்தான் நாம் செய்யக்கூடாத எதையும் செய்திடக்கூடாதென்று விரும்புகிறேன்.”

நான் முன்பே குறிப்பிட்டதைப் போல இவை வேதனைகளால் நிறைந்த வாரங்கள். ஆலிஸின் மீதான எட்வர்டின் ஆசை உடல் மீதான விழைவினால் உண்டான உடல் வேட்கை மட்டுமல்ல என்பதால் வேதனைகள் மேலும் அதிகரித்தன; மாறாக, அவள் எவ்வளவு அவனிடமிருந்து தன் உடலை விலக்கினாலோ அவன் அவ்வளவு தனிமையுற்றவனாக மாறினான்; அவள் இதயத்தையும் அவ்வளவு நேசிக்கத் தொடங்கினான். அல்லல்படுபவனானான். ஆனால், அது குறித்து அவள் உடலோ அவள் இதயமோ எதுவும் செய்வதாக இல்லை. அவை அதேயளவு ஒட்டாமலிருந்தது, சுய நிறைவுடன் தனக்குள்ளாகவே அமிழ்ந்து போயின. 

அவளின் இந்த அசைக்க முடியாத சமநிலைதான் எட்வர்டை மிகவும் எரிச்சலைடையச் செய்தது. மற்ற விஷயங்களில் அவன் நிதானமான இளைஞன்தான் என்றபோதிலும், ஆலீஸின் சமநிலையைக் குலைப்பதற்காகத் தீவிர நடவடிக்கைகளில் இறங்கக் காத்திருக்கத் தொடங்கினான். தெய்வ நிந்தனையாலோ அல்லது வெறுப்புப் பேச்சினாலோ அவளைத் தூண்டுவது ஆபத்தானது என்பதினால் (ஆனால் இயல்பிலேயே இச்செயல்களின் மீது ஈர்ப்பு கொண்டவன்தான்), முற்றிலும் எதிர் திசையில் அவன் தீவிரமாகச் செயல்பட வேண்டி இருந்தது (அதனாலேயே அது மிகவும் கடினமானதும்கூட). அது ஆலிஸின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதாக இருக்கும் ஆனால் அவளே நாணும் அளவிற்கு மிகைப்படுத்தப்பட்டதாக அமையும். அவன் தேவாலயத்திற்குச் செல்வதை ஒருமுறை கூட தவறவிடவில்லை ( அங்கு அவனுக்கு ஏற்படும் சலிப்பின் மீதான பயத்தைவிட அலீஸின் மீதான அவனின் வேட்கை மிகப் பெரியது). அங்கு அவன் இயல்பிற்கு மீறிய பணிவுடன் நடந்துகொண்டான்: கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் மண்டியிட்டான், அலீஸே தன்னுடைய காலுறைகள் கிழிந்துவிடுமோ என்ற பயத்தில் நின்றுகொண்டேதான் சிலுவையிட்டாள். 

ஒருநாள் அவளின் மேலோட்டமான மதப்பற்றை அவன் விமர்சித்தான். இயேசுவின் சொற்களை அவளுக்கு நினைவூட்டினான், “என்னை நோக்கி ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று சொல்பவர்களில் எல்லோரும் பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்துவிட மாட்டார்கள்.” அவளுடைய விசுவாசம் வெறும் சடங்குதான், ஆழமற்றது, அசலானது அல்ல என்று அவளைக் குறை கூறினான். தன்னைப் பற்றித் தானே மனநிறைவு அடைந்துவிட்டதாக விமர்சித்தான். தன்னைத் தவிர வேறு யாரைப் பற்றியும் அக்கறையற்றவள் என்றும் விமர்சித்தான். 

இதையெல்லாம் அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது (இந்தத் தாக்குதலுக்கு ஆலிஸ் தயாராக இல்லை, மிகப் பலவீனமாகத் தன்னைத் தற்காத்துக்கொண்டாள்), திடீரென அவன் பழைய சாலையோர சிலுவை ஒன்றைக் கண்டான், அதில் துருப்பிடித்த கிறிஸ்து இருந்தார். ஆலீஸின் மீதிருந்து தன் கைகளை விலக்கி, நின்றான் (அந்தப் பெண்ணின் புறக்கணிப்புக்கு எதிரான தன் போராட்டமாகவும், அவனது புதிய தாக்குதலின் அடையாளமாகவும்). எல்லோருடைய கவனத்தையும் கோரும்வண்ணம் சிலுவையிட்டுக்கொண்டான். ஆனால் இந்தச் செயலை ஆலீஸை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவனால் பார்க்கமுடியவில்லை, ஏனென்றால் அதே நேரத்தில் தெருவின் மறுபக்கத்தில் தன் கல்லூரி துப்புரவு பணிப் பெண்ணை அவன் கண்டுவிட்டான். தான் மீண்டும் தோற்றுப் போனதை எட்வர்ட் உணர்ந்தான். 

5

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் துப்புரவாளர் அவனை நடைவழியில் நிறுத்தி நாளை பன்னிரண்டு மணிக்கு பெண் இயக்குநர் அலுவலகத்தில் அவன் ஆஜராக வேண்டும் என்று உரக்கக் கூறியபோது அவன் அச்சம் உறுதியானது. “உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது தோழர்!” 

எட்வர்ட் பதட்டத்தால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டான். வழக்கம்போல தெருக்களில் நடை போவதற்காக அன்று மாலை ஆலிஸை சந்தித்தான். ஆனால் எட்வர்ட் தன்னுடைய மதப் பற்றைக் கை விட்டிருந்தான். அவன் மனச்சோற்வுற்றிருந்தான், தனக்கு நேர்ந்த சம்பவத்தை ஆலிஸிடம் பகிர விரும்பினான் ஆனால் அவன் அதற்குத் துணியவில்லை. தனக்கு விருப்பமற்ற (ஆனால் தவிர்க்கமுடியாத) வேலையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நற்பேறுடைய தேவனுக்குத் துரோகம் இழைக்கத் தயாராகிவிட்டோம் என்று அவனுக்குத் தெரியும். இந்தக் காரணத்திற்காகவே தனக்கு இடப்பட்டிருந்த அசுபமான அழைப்பாணையைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவளிடம் சொல்லவில்லை. அவனால் சிறு ஆறுதலைக் கூடப் பெற முடியாமல் போனது. மறுநாள் அவன் பெரும் சோர்வுற்ற மனநிலையில் இயக்குநர் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

அறையில் நான்கு நீதிபதிகள் அவனுக்காகக் காத்திருந்தனர்: பெண் இயக்குநர், பெண் துப்புரவாளர், எட்வர்டின் சக ஆசிரியர்களில் ஒருவர் (கண்ணாடி அணிந்த சிறிய மனிதன்) மற்றும் ஒரு பெயர் தெரியாத (நரை முடி கொண்ட) மனிதர், மற்றவர்கள் அவரை ‘காம்ரேட் இன்ஸ்பெக்டர்’ என்று அழைத்தனர். எட்வர்டை உட்காரச் சொல்லி, இந்த அழைப்பு வெறும் நட்பார்ந்த உரையாடலுக்காகத்தான், அதிகாரப்பூர்வமானதல்ல என்று அவனிடம் கூறினார் பெண் இயக்குநர். கல்லூரிக்கு வெளியே எட்வர்ட் நடந்துகொள்ளும் விதம் அனைவரையும் சங்கடப்படுத்துவதாகக் கூறினார். அவர் இதைச் சொல்லிக்கொண்டே ‘இன்ஸ்பெக்டரைப்’ பார்த்தார், அவரும் உடன்படுவதாகத் தலையசைத்துக் காட்டினார். பின்னர் தன்னையே முழு நேரமும் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணாடி அணிந்த ஆசிரியரின் பக்கம் தலையைத் திருப்பினார். பெண் இயக்குனரின் பார்வையைத் துண்டித்து இப்போது அவர் ஒரு பெரிய உரையைத் தொடங்கினார். எந்த முன்முடிவுமின்றி சிறந்த இளைஞர்களுக்கு கல்வியளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம், அவர்கள் மீது முழுப் பொறுப்பும் நமக்கு உள்ளது, ஏனென்றால் நாம்தான் (ஆசிரியர்கள்) அவர்களுக்கு முன்மாதிரி. இந்தக் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காகவே ஒரு மத நம்பிக்கையாளனை எங்கள் சுவர்களுக்குள் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறினார். இந்த எண்ணத்தை நீட்டி விரிவாக்கி, இறுதியாக எட்வர்டின் நடத்தை முழு கல்லூரிக்கும் அவமானம் என்று அறிவித்தார். 

சில நிமிடங்களுக்கு முன்னர்தான், தான் ஏற்றுக்கொண்ட கடவுளை மறுத்து தேவாலயத்திற்குச் செல்வதும் பொதுவெளியில் சிலுவையிட்டுக் கொள்வதெல்லாம் வெறும் விளையாட்டுதான் என்று சொல்லத் தீர்மானித்திருந்தான் எட்வர்ட். ஆனால், இப்போது, இந்தச் சூழலை எதிர்கொண்ட பிறகு உண்மையைச் சொல்வது சாத்தியமில்லை என்று உணர்ந்தான். இவ்வளவு தீவிரமாகவும் இவ்வளவு ஆர்வத்துடனும் இருக்கும் இந்த நான்கு பேரிடம் அவர்களின் பிழையான புரிதலின் அடிப்படையில்தான் இவ்வளவு உணர்ச்சிவயப்படுக்கிறார்கள் என்று அவனால் சொல்லவிட முடியாது, அது முட்டாள்தனமும் கூட. அப்படிச் செய்வது அவர்களின் தீவிரத்தைக் கேலி செய்வதாக அமையும் என்பதையும் அவன் புரிந்துகொண்டான். அவனிடமிருந்து அவர்கள் வெற்று பதில்களையும் சாக்குபோக்குகளையும்தான் எதிர்பார்க்கிறார்கள், அதற்கான மறுப்புடனும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை அவன் உணர்ந்தான். அந்தக் கணத்தில் (ஒரே நொடியில், சிந்தித்துச் செயல்பட அவனுக்கு நேரமில்லை) அவர்களிடம் உண்மையாக இருப்பதுதான் முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டான், மிகச் சரியாக சொல்வதென்றால், அவனுடைய பதில்கள் அவனைப் பற்றி அவர்கள் கட்டியெழுப்பியிருக்கும் கருத்தை ஒத்திருக்க வேண்டும்; அந்தக் கருத்தை ஓரளவிற்குச் சரிசெய்ய வேண்டும் என்றால், அந்தக் கருத்தை அவன் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். 

“காம்ரேட்ஸ், நான் வெளிப்படையாகப் பேசலாமா?”

“நிச்சயமாக,” என்றார் பெண் இயக்குநர். “அதற்காகத்தான் உன்னை இங்கே வரச் சொல்லியிருக்கிறோம்.”

“நீங்கள் கோபப்பட மாட்டீர்களே?”

“நீ என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்,” பெண் இயக்குநர் சொன்னார்.

“ரொம்ப நல்லது. நான் உங்ககிட்ட ஒரு உண்மையை ஒப்புக்கொள்ளப் போகிறேன். நான் உண்மையிலேயே கடவுளை நம்புகிறேன்.”

அவன் தனது நீதிபதிகளை நோட்டம் விட்டான். அவர்கள் அனைவரும் நிம்மதியில் பெருமூச்சு விட்டதாக அவனுக்குத் தோன்றியது. பெண் துப்புரவாளர் மட்டும் சட்டெனக் கோபத்தில் கேட்டார், “இந்தக் காலத்திலுமா? அதுவும் இந்த வயசிலேயாவா, தோழர்? இந்தக் காலத்தில்… இந்த வயசில்…”

எட்வர்ட் தொடர்ந்தான்: “நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் கோபப்படுவீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு எப்படிப் பொய் சொல்வதெனத் தெரியவில்லை. உங்களிடம் என்னைப் பொய் சொல்ல வைக்காதீர்கள்.”

பெண் இயக்குநர் கூறினார் (மென்மையாக): “நீ பொய் சொல்ல வேண்டுமென நாங்கள் யாரும் விரும்பவில்லை. நீ உண்மையைச் சொல்வது நல்லதுதான். ஆனால் உன்னைப் போல ஒரு இளைஞன் எப்படி கடவுள் நம்பிக்கையுடன் இருக்கமுடியும்னு தயவு செய்து சொல்லு.”

“நிலாவுக்கு ராக்கெட் விடும் இந்தக் காலத்தில்…!” ஆசிரியர் கோபமடைந்தார்.

“எனக்கு வேறு வழியில்லை” என்று சொன்னான் எட்வர்ட். “எனக்குக் கடவுளை நம்பும் விருப்பம் இல்லை. உண்மையிலேயே இல்லை.”

“உனக்கு நம்பிக்கையிருக்கும்போது நம்ப விருப்பம் இல்லையென எப்படிச் சொல்ல முடியும்?” நரைத்த மனிதர் (மிகவும் கனிந்த குரலில்) உரையாடலில் இணைந்தார்.

“நான் நம்ப விரும்பவில்லை, ஆனால் நம்புகிறேன்,” எட்வர்ட் அமைதியாகத் தன் வாக்குமூலத்தை மீண்டும் முன்வைத்தான்.

கண்ணாடி அணிந்த ஆசிரியர் சிரித்தார். “ஆனால் அதில் ஒரு முரண்பாடு இருக்கிறதே!”

“தோழர்களே, நான் எது உண்மையோ அதை அப்படியே சொல்கிறேன்,” என்றான் எட்வர்ட். “கடவுள் மீதான நம்பிக்கை நம்மை யதார்த்தத்திலிருந்து விலக்கி வைக்கிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உலகம் கடவுளின் கைகளில் உள்ளது என நம்பினால் பொதுவுடைமை தத்துவம் என்னவாகும்? யாரும் எதுவும் செய்யாமல் எல்லோரும் கடவுளை மட்டுமே நம்பியிருப்பார்கள்.”

“மிகச் சரி,”  பெண் இயக்குநர் இசைந்தார்.

“கடவுள் இருக்கிறார் என்பதை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை,” என்றார் ஆசிரியர்.

எட்வர்ட் தொடர்ந்தான்: “மனிதகுல வரலாற்றுக்கும் அதற்கு முந்தைய காலத்திற்கும் வித்தியாசம் என்னவென்றால், மனிதன் தனது விதியை தன் கைகளிலே எடுத்துக்கொண்டான். அவனுக்கு இனி கடவுள் தேவையில்லை.”

“கடவுள் மீதான நம்பிக்கை, ஊழ் எனும் கோட்பாட்டிற்குத்தான் இட்டுச் செல்லும்.” பெண் இயக்குநர் சொன்னார்

“கடவுள் நம்பிக்கையெல்லாம் இடைக்காலகட்டத்தைச் சேர்ந்த ஒன்று,” என்றான் எட்வர்ட். பின்னர் இயக்குநர் மீண்டும் ஏதோ சொன்னார், அந்த ஆசிரியர் ஒன்று சொன்னார், எட்வர்டும் ஒன்று சொல்ல, ஆய்வாளர் ஏதோவொன்று சொல்ல எல்லோரும் முழுமையான ஒரு உடன்பாட்டில் இருந்தனர், கண்ணாடி அணிந்த ஆசிரியர் இறுதியாக இடைமறித்து எதிர்த்து ஒரு கேள்வி எழுப்பியதுவரை : “இது எல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும்போது எதற்குத் தெருவில் நின்று சிலுவையிட்டுக்கொள்கிறாய்?”

எடவர்ட் அவரை மிகுந்த சோக பாவத்துடன் பார்த்துச் சொன்னான்: “ஏனென்றால் நான் கடவுளை நம்புகிறேன்.”

“ஆனால் அதில்தான் முரண்பாடு இருக்கிறது!” உற்சாகத்துடன் மீண்டும் கூறினார் அந்த ஆசிரியர்

“ஆமாம்,” ஒப்புக்கொண்டான் எட்வர்ட். “அறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையே முரண்பாடு இருக்கிறது. கடவுள் மீதான நம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்ட நிலைக்குத் தள்ளிவிடுகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கடவுள் இல்லாமலிருந்தால் நல்லது என்பதையும் நான் ஏற்கிறேன். ஆனால் இங்கே, அடி ஆழத்தில்” – தன் இதயத்தைச் சுட்டிக் காட்டினான் – “அவர் இருக்கிறார் என்று உணர்ந்தால் நான் என்ன செய்வது? இதோ பாருங்கள் தோழர்களே நான் உள்ளதை உள்ளபடியே சொல்கிறேன். நான் இதை ஒப்புக்கொள்வதுதான் மேலானது. உங்களிடம் நான் போலியானவனாக இருக்க விரும்பவில்லை. நான் எப்படிப் பட்டவன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்,” தலையைத் தொங்கவிட்டான்.

ஆசிரியர் குறுகிய பார்வை கொண்டிருந்தார்; மிகக் கடுமையான புரட்சியாளர் கூட வன்முறையை ஒரு அவசியமான தீமையாக மட்டுமே கருதுகிறார்கள் என்பதையும், புரட்சியின் உள்ளார்ந்த நன்மை மறுகல்வியில் உள்ளது என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை. ஒரே இரவில் புரட்சியாளராக மாறிய அவருக்கு, பெண் இயக்குநரிடமிருந்து அவ்வளவு மரியாதை ஒன்றும் கிடைக்கவில்லை. நீதிபதிகளின் வசம் தன்னை ஒப்படைத்த எட்வர்டின் வழக்கு அவ்வளவு கடினமானது என்றோ மறுகல்வி தேவைப்படும் ஆள் அவன் என்றோ இக்கணத்தில் தன்னை விட அதிக மதிப்பைச் சம்பாதித்துவிட்டான் என்றோ அவர் சந்தேகிக்கவில்லை. அப்படியான சந்தேகம் அவருக்கு ஏற்படாததால் அவர் எட்வர்டை மிகத் தீவிரமாகத் தாக்கி இடைக்கால நம்பிக்கைகளில் இருந்து தன்னை பிரித்துப் பார்க்கத் தெரியாதவன் இடைக்காலத்தையே சேர்ந்தவன் என்றும் நவீன கல்லூரியில் தன்னுடைய பதவியைத் துறந்துவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவித்தார்.

ஆசிரியர் தன் உரையை முடிக்கும்வரை காத்திருந்து பின் தன் எதிர்ப்பை பதிவு செய்தார் பெண் இயக்குநர் : “தலைகள் உருளவதை நான் விரும்பவில்லை. இந்தத் தோழர் நேர்மையாக நடந்துகொண்டர், நம்மிடம் உண்மையைச் சொல்லியிருக்கிறார். அதை எப்படி மதிப்பது என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.” எட்வர்டை நோக்கித் திரும்பினார். “ஆனால் மதவாதிகளால் இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்க முடியாது என்று தோழர்கள் சொல்வதும் சரியானதுதான். நீ என்ன நினைக்கிறாய்?”

“எனக்குத் தெரியவில்லை தோழர்களே,” எட்வர்ட் வருத்தத்துடன் சொன்னான்.

“எனக்குத் தோன்றுவது இதுதான்,” இன்ஸ்பெக்டர் கூறினார். “பழசுக்கும் புதுசுக்கும் இடையிலான போராட்டம் வகுப்புகளுக்கு இடையில் மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்வதுதான். அப்படியான ஒரு போராட்டம்தான் நம் தோழருக்குள்ளும் நடந்துகொண்டிருக்கிறது. காரணங்களை அவர் அறிந்திருந்தபோதும் அவருடைய உணர்ச்சிகள் அவரை பின்னால் இழுக்கின்றன. இந்தப் போராட்டத்தில் நம் தோழருக்கு நாம் உதவ வேண்டும். அப்போதுதான் பகுத்தறிவு வெற்றி பெறும்.”  பெண் இயக்குநர் ஆமோதித்துத் தலையசைத்துச் சொன்னார், “அந்தப் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்!”

சிறுகதையின் இரண்டாவது பகுதி

நரேன்

சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் சிறுகதைகளை  தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்துவருகிறார் நரேன். இவரின் முதல் நூல் 'இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்' மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு 2020-ல் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்ததுள்ளது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. “நான் நம்ப விரும்பவில்லை, ஆனால் நம்புகிறேன்,” எட்வர்ட் அமைதியாகத் தன் வாக்குமூலத்தை மீண்டும் முன்வைத்தான்.

    மிலன் குந்தேராவின் சிறுகதையை மூலமொழியில் வாசிக்க வேண்டும் என நெடுநாட்களாக ஆசை. ஆனால், சாத்தியம் கிடையாது. நரேனின் மொழியாக்கம் இன்னும் செம்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். என்றாலும், அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss