6
இப்படியாக எட்வர்ட் தன்னுடைய உடனடி ஆபத்தைத் தவிர்த்தான்: அவன் ஆசிரியப் பணியின் தலைவிதி அப்பெண் இயக்குநரின் கைகளில் மட்டுமே உள்ளது, அது அவனுக்கு பெரும் நிம்மதியாகவே இருந்தது: இந்த இயக்குநருக்கு இளைஞர்களின் பால் பலவீனம் உள்ளது என்ற அவன் அண்ணனின் அவதானிப்பு அவன் நினைவிற்கு வந்தது. தன்னுடைய இளமை ஊஞ்சலாடும் தன்னம்பிக்கை (மிகுந்திருந்த ஒன்று இப்போது சற்று தளர்ந்திருக்கிறது) முழுவதும் கொண்டு ஒரு ஆணாக அவன் தன் ஆற்றலின் துணையுடன் இந்தப் போட்டியில் வெல்வது என்று சூளுரைத்தான்.
ஒப்புக்கொண்டபடி சில நாட்கள் கழித்து பெண் இயக்குநரை அவர் அலுவலகத்தில் சந்தித்த போது உற்சாகமான தொனியில் உரையாட முயன்றான், கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் அந்தரங்கமான ஒரு குறிப்பையோ சன்னமான புகழுரைகளையோ புகுத்தினான். அல்லது ஒரு பெண்ணின் தயவில் இருக்கும் ஒரு ஆணின் தனித்த நிலையை மிகக் கவனமான தெளிவின்மையுடன் வலியுறுத்திக் கூறினான். ஆனால் உரையாடலின் தொனியைத் தேர்வு செய்ய அவன் அனுமதிக்கப்படவில்லை. இயக்குநர் அவனிடம் இணக்கமாகத்தான் பேசினார், ஆனால் மிகுந்த கட்டுப்பாட்டைக் காட்டினார்; அவன் தற்போது என்ன வாசித்துக்கொண்டிருக்கிறான் என்று கேட்டார், பின்னர் அவரே சில புத்தகங்களின் பெயரைச் சொல்லி அவற்றைப் பரிந்துரைத்தார்; அவன் சிந்தனையில் மாற்றம் உண்டாக்கும் நெடிய பணியில் அவர் உடனடியாக குதிக்க விரும்பினார் என்று தெளிவாகத் தெரிந்தது. அவர்களின் இந்தச் சிறிய சந்திப்பு அவனை தன் வீட்டிற்கு அழைப்பதில் முடிந்தது.
இயக்குநரின் கட்டுப்பாட்டின் விளைவாக எட்வர்டின் தன்னம்பிக்கை மீண்டும் தளர்ந்தது. அதனால் தனது ஆண்மையின் வசீகரத்தால் அவரை ஈர்க்கும் எந்த நோக்கமுமின்றி பணிவுடன் அவரின் சிறிய அடுக்ககத்திற்குள் நுழைந்தான். அவனை இருக்கையில் அமர வைத்து நட்பான குரலில் அவனுக்குக் குடிக்க என்ன வேண்டும் என்று கேட்டார் இயக்குநர் : கொஞ்சம் காஃபி? அவன் வேண்டாம் என்றான். சிறிது மது? அவன் சங்கடப்பட்டான் : “உங்களிடம் கான்யாக் இருக்குமென்றால்…” உடனே சற்று மீறிவிட்டோமோ என்று பயந்தான். ஆனால் பெண் இயக்குநர் அன்புடனே பதிலளித்தார் : “இல்லை… கான்யாக் என்னிடம் இல்லை. கொஞ்சம் வைன் இருக்கிறது,” பாதி காலியான பாட்டிலைக் கொண்டு வந்தார், இரண்டு கோப்பைகளை நிறைக்கும் அளவிற்கு மட்டுமே அதில் மது இருந்தது.
பின்னர் எட்வர்டிடம் தன்னை ஒரு விசாரணை அதிகாரியாகக் கருதக்கூடாது என்று சொன்னர் பெண் இயக்குநர்; எல்லோருக்கும் அவர்களின் நம்பிக்கை மீது பற்றுகொள்ள முழு உரிமை உண்டு. இயல்பாகவே ஒருவருக்கு (இதை உடனடியாகச் சொன்னார்) இப்படியான ஒரு நபர் ஆசிரியராக இருக்கத் தகுதியானவர்தானா என்ற சந்தேகம் வரும்தான்; அந்த காரணத்திற்காகவே எட்வர்டை விசாரணைக்கு அழைத்து (அவர்கள் அனைவருக்கும் அதில் வருத்தம்தான் என்றபோதிலும்) பேச வேண்டியிருந்தது. அவர்களுக்கு (குறைந்தபட்சம் இயக்குநருக்கும் இன்ஸ்பெக்டருக்கும்) அவன் வெளிப்படையாகப் பேசிய விதத்திலும் எதையுமே மறுக்கவில்லை என்பதிலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர் எட்வர்டைப் பற்றி இன்ஸ்பெக்டரிடம் நீண்ட நேரம் பேசியதாகவும் ஆறு மாதங்கள் கழித்து அவனை மீண்டும் விசாரணைக்கு அழைக்க முடிவு செய்திருப்பதாகவும் அதுவரை அவனின் வளர்ச்சிக்கு அப்பெண் இயக்குநரே தன்னுடைய ஆற்றலால் உதவுவார் என்றும் கூறினார். மேலும் தான் ஒரு விசாரணை அதிகாரியோ அல்லது போலீஸோ அல்ல. நட்பு ரீதியாக மட்டுமே உதவ விரும்புவதாக மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார். அதன் பிறகு எட்வர்டை கடுமையாகத் தாக்கிய ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிட்டார்: “அந்த மனிதன் எதையோ மறைக்கிறான், அதனால்தான் அடுத்தவர்களைப் பலி கொடுப்பதில் அவ்வளவு ஆனந்தம் கொள்கிறான். பிறகு அந்தப் பெண் துப்புரவாளர் நீ திமிர் பிடித்தவன் என்றும் தன்னுடைய கருத்தில் பிடிவாதமாக இருப்பவன் என்றும் எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறாள். உன்னை கல்லூரியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அவளுடைய கருத்திலிருந்து அவளை வெளியேற்றிவிட முடியாது. நிச்சயமாக எனக்கு அதில் உடன்பாடு இல்லைதான் ஆனால் நீ அவளைப் புரிந்துகொள்ள வேண்டும். தெருவில் வெளிப்படையாகச் சிலுவையிட்டுக் கொள்ளும் ஒருவன் என் மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது எனக்குமே பிடிக்காது.”
இவ்வாறு தனது கருணையினால் உருவாகும் வாய்ப்புகள் எவ்வளவு இனிமையானது என்றும் தன் கெடுபிடியால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு அச்சுறுத்தலானவை என்பதை எட்வர்டுக்கு வாக்கியங்களாகப் பொழிந்து காட்டினார் இயக்குநர். பின்னர் அவர்களின் இந்தச் சந்திப்பு உண்மையிலேயே நட்பார்ந்தது என்பதை நிரூபிக்க அவர் மற்ற பேச்சுகளுக்குள் சென்றார்: புத்தகங்களைப் பற்றிப் பேசினார், எட்வர்டுக்கு தன்னுடைய நூலகத்தைக் காட்டினார், கல்லூரி அவனுக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என்று கேட்டார். அவன் அளித்த பொதுவான பதில்களுக்குப் பிறகு அவரே நீண்ட நேரம் பேசினார். அவர் தனக்கு இந்தப் பதவி வாய்த்ததற்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பதாகக் கூறினார்; குழந்தைகளுக்கு கல்வியளிப்பதற்கு இது தனக்குக் கிடைத்திருக்கும் ஒரு வழி என்பதாலும் இப்படியாக தான் எதிர்காலத்துடன் நீடித்த, உண்மையான, தொடர்பில் இருப்பதாலும் இந்தப் பணி தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறினார். எதிர்காலத்தால் மட்டுமே இறுதியில் இந்தத் துன்பங்களுக்கெல்லாம் நியாயம் சேர்க்க முடியும். (“ஆம், ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்”) அவ்வளவு துன்பங்கள் இருப்பதாகக் கூறினார்!! “நான் என் சொந்த வாழ்க்கையை விட மேலான ஒன்றுக்காக வாழ்கிறேன் என்று நான் நம்பவில்லையெனில் என்னால் வாழ்வே முடியாது.”
இவ்வார்த்தைகள் திடீரென மிகவும் ஆத்மார்த்தமாக ஒலித்தன. ஆனால் தற்போது இயக்குநர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க முயல்கிறாரா அல்லது வாழ்வின் அர்த்தம் குறித்த வழமையான கோட்பாட்டு விவாதத்தைத் தொடங்குகிறாரா என்று எட்வர்டுக்கு தெளிவாகத் தெரியவில்லை. தனிப்பட்ட அர்த்தத்தில் வைத்து இதை விளங்கிக்கொள்ள முடிவு செய்தான் எட்வர்ட். உள்ளடங்கிய குரலில் மிகவும் கவனமாகக் கேட்டான்:
“உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி…”
“என் வாழ்க்கையா?”
“ஆமாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை உங்களுக்குத் திருப்திகரமாக இல்லையா?”
அவர் முகத்தில் கசப்பான புன்னகை தோன்றியது. எட்வர்ட் அக்கணத்தில் அவருக்காகக் கிட்டத்தட்ட பரிதாபப்பட்டான். அவர் பாவப்படும் அளவிற்கு அழகற்றவளாக இருந்தார். கறுத்த முடி சதையற்ற முகத்தின் மீது ஒரு நிழல் போலப் படர்ந்திருந்தது. மூக்கின் கீழ் ஒரு கருப்பு தீற்று தெளிவாக மீசையைப் போன்று தெரியத் தொடங்கியது. திடீரென்று அவர் வாழ்க்கையின் அத்தனை துயரங்களையும் ஒரு நொடியில் கண்டான். வன்மையான காம உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜிப்ஸியைப் போன்ற அங்கங்களை அவன் கண்டான். இந்த வன்மையைத் தணிப்பது சாத்தியமற்றது என்பதை வெளிப்படுத்தும் அவளது அழகின்மையையும் புரிந்துகொண்டான்; ஸ்டாலினின் மரணத்தை அறிந்து உணர்ச்சிவயமாய் உயிருள்ள சிலையாக அவள் மாறுவதையும், உணர்ச்சிக்கொந்தளிப்புடன் ஆயிரக்கணக்கான கூட்டங்களில் நீண்ட இரவுகளில் அமர்ந்திருப்பதையும், பாவப்பட்ட இயேசுவிற்கு எதிராகத் தீவிரமாகப் போராடுவதையும் அவனால் கற்பனை செய்ய முடிந்தது. இவை அனைத்தும் அவரது விழைவுகளுக்கான சோக வடிகால் மட்டுமே என்பதைப் புரிந்துகொண்டான்; அவர் நினைத்த இடத்திற்கு அவற்றைச் செலுத்த முடியவில்லை. எட்வர்ட் இளமையானவன், கருணையின் மீதான அவனது சாய்வு இன்னும் மறைந்துவிடவில்லை. இயக்குநரைப் புரிதலுடன் நோக்கினான். ஆனால் அவரோ தன்னிச்சையாக அமைதியாகிவிட்டதற்கு வெட்கப்பட்டு உரக்கக் குரலெடுத்துப் பேசினார் : “அது கேள்வியே இல்லை எட்வர்ட். ஒருவர் தனக்காக மட்டுமே வாழக்கூடாது. ஒருவர் வாழ்வதற்கு எப்போதுமே வேறு நோக்கம் இருக்க வேண்டும்.” அவர் அவன் கண்களை ஆழமாகப் பார்த்தார்: ஆனால் அது எதற்காக என்று அறிந்துகொள்வதுதான் முக்கியம். உண்மையான ஒன்றுக்காகவா? அல்லது கற்பனையான ஒன்றுக்காகவா? கடவுள் என்பது ஒரு அழகான யோசனைதான். ஆனால் மனிதனின் எதிர்காலம், எட்வர்ட், நிதர்சனத்தில்தான் இருக்கிறது; எதார்த்தத்திற்காக நான் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டேன்.”
அவர் அவ்வளவு உறுதியுடன் அதைச் சொன்னார், தன்னுள் சற்று முன் பாய்ந்தோடிய திடீர் புரிதல் எழுப்பிய உணர்வுகளை எட்வர்ட் நிறுத்தவில்லை; சக மனிதரிடம் இப்படி வெட்கமின்றி பொய் பேசுவது அவனுக்கு முட்டாள்தனமாகத் தோன்றியது. மேலும் அவர்களின் உரையாடலில் இந்த நெருக்கமான தருணம் தன்னுடைய இந்தத் தகாத (கடினமானதுமான) போலி பிம்பத்தை ஒரு வழியாக உதறிவிடுவதற்கான வாய்ப்பாகத் தோன்றியது அவனுக்கு.
“ஆனால், நான் உங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்,” சட்டென அவரிடம் உறுதியளித்தான். “நானும் யதார்த்தத்தையே விரும்புகிறேன். என் பக்தியை அவ்வளவு உண்மையென எடுத்துக்கொள்ள வேண்டாம்.”
ஒரு மனிதன் உணர்ச்சி வேகத்தில் நிலைதவறிப் போய்விடக் கூடாது என்பதை அவன் விரைவிலேயே கற்றுக்கொண்டான். வெளிப்படையாகத் தெரிந்த கோபத்துடன் பெண் இயக்குநர் கூறினார்: “நடிக்காதே. நீ வெளிப்படையாகப் பேசியதால்தான் உன்னை எனக்குப் பிடித்திருந்தது. நீ இப்போது வேறு யாரோ போல நடிக்கிறாய்.
இல்லை, தானே எடுத்துப் போர்த்திக்கொண்ட மத ஆடையிலிருந்து வெளியே வர எட்வர்ட் அனுமதிக்கப்படவில்லை. அவன் சட்டெனத் தன்னைதானே திருத்திக்கொண்டு, அவரின் தவறான எண்ணத்தைச் சரிசெய்யக் கடுமையாக முயன்றான். “இல்லை, நான் மழுப்பவில்லை. நிச்சயமாக நான் கடவுளை நம்புகிறேன், அதை மறுக்கப் போவதில்லை. எனக்கும் மனிதகுலத்தின் எதிர்காலத்திலும், அதன் முன்னேற்றத்திலும் அதைப் போன்ற எல்லாவற்றிலும் நம்பிக்கை உண்டு என்பதைத்தான் சொல்ல விரும்பினேன். எனக்கு அதில் நம்பிக்கை இல்லையென்றால் பின் எதற்காக நான் ஆசிரியனாக வேலை செய்ய வேண்டும், குழந்தைகள் எதற்காகப் பிறக்க வேண்டும், நம் வாழ்வு எதை நோக்கி இருக்கும்? கூடவே, சமூகம் சிறப்பான ஒன்றை நோக்கிச் செல்வதும் கடவுளின் விருப்பமே என்று நினைத்தேன். கடவுள், கம்யூனிஸம் இரண்டின் மீது ஒரு மனிதன் நம்பிக்கை வைக்கமுடியுமென்றும் அவையிரண்டும் ஒத்திசைந்திருக்க முடியும் என்றும் நினைத்தேன்.
“இல்லை,” தாய்மையின் அதட்டலுடன் மறுத்தார் பெண் இயக்குநர். “இந்த இரண்டும் சமரசம் செய்துகொள்ளவே முடியாது.”
“எனக்குத் தெரியும்,” வருத்தத்துடன் சொன்னான் எட்வர்ட். “என் மீது கோபப்படாதீர்கள்.”
“நான் கோபப்படவில்லை. நீ இளைஞன், உன் நம்பிக்கையின் மீது பிடிவாதமாகத்தான் இருப்பாய். என்னைப் போல வேறு யாரும் உன்னைப் புரிந்துகொள்ளவில்லை. நானும் ஒரு காலத்தில் இளமையாக இருந்தவள்தானே. இளமை எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். உன்னுடைய இளமை எனக்குப் பிடித்திருக்கிறது. உண்மையில், எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது…”
கடைசியாக அது நடந்தேவிட்டது. சீக்கிரமாகவும் ஆகவில்லை, ஆனால் தாமதமும் இல்லை. இப்போது, மிகச் சரியான கணத்தில். (அந்தச் சரியான தருணத்தை எட்வர்ட் தேர்ந்தெடுக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரியும்; அந்தத் தருணம்தான் இது நடந்தேறுவதற்கு எட்வர்டை பயன்படுத்திக்கொண்டது) இயக்குநர் அவனைப் பிடித்திருப்பதற்காகக் கூறியவுடன், எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பதிலளித்தான்:
“எனக்கும் உங்களைப் பிடிக்கும்.”
“உண்மையாகவா?”
“உண்மையாகத்தான்.”
“அப்படியா… நான் ஒருபோதும்…! நான் வயதானவள்…!” இயக்குநர் தடுத்தார். “அது உண்மையில்லை,” என்று எட்வர்ட் சொல்ல வேண்டியிருந்தது.
“ஆனால் அதுதான் உண்மை.”
“முட்டாள்தனம், உங்களுக்கு வயதாகவே இல்லை,” அவன் மிக உறுதியாக இதைச் சொல்ல வேண்டியிருந்தது.
“நீ அப்படியா நினைக்கிறாய்?”
“கண்டிப்பாக. எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது.”
“பொய் சொல்லாதே. நீ பொய் சொல்லக் கூடாது என்று உனக்குத் தெரியும்தானே.”
“ நான் பொய் சொல்லவில்லை, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.”
“அழகா?” தான் இதை நம்பவில்லை என்று காட்ட முகத்தைச் சுளித்தார் பெண் இயக்குநர்
“ஆமாம், அழகுதான்,” எட்வர்ட் சொன்னான். மேலும் அவனின் இந்த முடிவின் வெளிப்படையான சாத்தியமின்மையை அவனே உணர்ந்ததால் அதை வலுப்படுத்த உடனடியாக முயற்சிகள் எடுத்தான்: “உங்களைப் போன்ற கறுத்த முடி கொண்ட பெண்களின் மீது எனக்கு பெரும் பித்து உண்டு.”
“கருப்பு முடி கொண்ட பெண்களை உனக்குப் பிடிக்குமா?” எனக் கேட்டார்.
“அவர்கள் மீது நான் பைத்தியமாகவே இருக்கிறேன்.”
“ஆனால் கல்லூரியில் இருக்கும் நேரங்களிலெல்லாம் என்னை நீ ஏன் பார்க்க வருவதில்லை? என்னைத் தவிர்க்கிறாயோ என்று எனக்குத் தோன்றியது.”
“எனக்குத் தயக்கமாக இருந்தது,” எட்வர்ட் சொன்னான். “என் தேவைக்காக நான் நடிக்கிறேன் என்று எல்லோரும் சொல்லியிருப்பார்கள். உங்களைப் பிடித்திருப்பதால்தான் நான் உங்களைப் பார்க்க வருகிறேன் என்று ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள்.”
“ஆனால் இப்போது பயப்படுவதற்கு ஒன்றுமில்லை,” என்றார் இயக்குநர், “நாம் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானமே போடப்பட்டுள்ளது இப்போது.”
தன் பெரிய பழுப்பு நிற கருவிழிகளால் அவன் கண்களைப் பார்த்தார் (அவர் கண்கள் அழகாக இருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்), அவன் புறப்படுவதற்கு சற்று முன்பு அவர் அவன் கையை லேசாகத் தடவினாள், இந்த முட்டாள் ஒரு வெற்றியாளனின் மகிழ்வை உணர்ந்தான்.
7
அந்த விரும்பத்தகாத விஷயம் தனக்குச் சாதகமாக தீர்க்கப்பட்டுவிட்டது என்பதில் எட்வர்ட் உறுதியாக இருந்தான். அடுத்த ஞாயிற்றுக்கிழமை எந்த கவலையுமற்று, சற்று திமிராகவும், ஆலிஸுடன் தேவாலயத்திற்குச் சென்றான். அது மட்டுமல்ல, அவன் முழு தன்னம்பிக்கையுடன் அங்கு சென்றான். பின்னோக்கிப் பார்க்கும்போது, இயக்குநருடனான அவனின் சந்திப்பு அவன் ஆண்மையின் வசீகரத்திற்கு அப்பட்டமான ஆதாரத்தை வழங்கியிருக்கிறது என்பதுதான் காரணம். (நமக்கோ அவன் மீது பரிதாபகரமான புன்னகையைத் தான் எழுப்புகிறது என்றாலும்…)
கூடுதலாக, இந்த குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் ஆலிஸ் சற்று வித்தியாசமாக இருப்பதை அவன் கவனித்தான்: அவர்கள் சந்தித்தவுடன் அவள் அவன் கையைப் பிடித்துக்கொண்டாள், தேவாலயத்தில் கூட அவனைப் பற்றிக்கொண்டிருந்தாள்; அதற்கு முன்பு அவள் அடக்கமாகவும் யார் கண்களுக்கும் படாமல் இருப்பாள், இப்போது அவள் சுற்றிச் சுற்றி பார்த்தாள், குறைந்தது பத்து தெரிந்தவர்களைக் கண்டு புன்னகைத்தாள்.
இது வினோதமாக இருந்தது, எட்வர்டால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் தெருக்களில் இறங்கி இருட்டில் நடந்தபோது, எட்வர்ட், அவனே வியக்கத்தக்கவகையில், முன்பு ஏதோ பெயருக்காக இன்பமற்று இருந்த அவளது முத்தங்கள் இப்போது அழுத்தமாக, ஈரம் சொறிந்து, வெப்பமாக இருந்தன என்பதை உணர்ந்துகொண்டான். தெருவிளக்கின் கீழே ஒரு கணம் அவர்கள் நின்றபோது மோகம் ததும்பும் கண்களுடன் அவள் நோக்குவதை அவன் கண்டான்.
“உன்னிடம் இதைச் சொல்லவேண்டும்: ஐ லவ் யூ,” சொற்கள் வெளிகுதித்த அடுத்த கணத்தில் அவள் தன் வாயைப் பொத்திக் கொண்டாள். “இல்லை, இல்லை… எதுவும் சொல்லாதே. எனக்கே என்னை நினைத்தால் அசிங்கமாக இருக்கு. நான் எதையும் இப்போது கேட்க விரும்பவில்லை.”
மீண்டும் அவர்கள் சிறிது தூரம் நடந்தனர், மீண்டும் அவர்கள் நின்றார்கள், ஆலிஸ் சொன்னாள்: “இப்போது எனக்கு எல்லாம் புரிகிறது. நான் என் நம்பிக்கையை வசதியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன் என்று நீ என்னைத் திட்டியது ஏன் என்று புரிகிறது.”
ஆனால் எட்வர்டுக்கு எதுவுமே புரியவில்லை; அதனால் அவன் எதுவுமே சொல்லவில்லை; அவர்கள் சற்று தூரம் நடந்து சென்றதும் ஆலிஸ் சொன்னாள்: “ஆனால் நீ என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஏன் நீ என்னிடம் எதுவும் சொல்லவில்லை?”
“நான் உன்னிடம் என்ன சொல்லியிருக்கவேண்டும்,” கேட்டான் எட்வர்ட்.
“ஆமாம். இதுதான் நீ!” சன்னமான உற்சாகத்துடன் அவள் சொன்னாள். “அடுத்தவர்களாக இருந்தால் தான் முன்கூட்டியே சொன்னது எவ்வளவு சரி என்று அளந்துவிட்டிருப்பார்கள் இந்நேரம். ஆனால் நீ அமைதியாக இருக்கிறாய். அதனால்தான் நான் உன்னைக் காதலிக்கிறேன்.”
அவள் எதைப் பற்றிப் பேசுகிறாள் என்று எட்வர்ட் இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கினான், இருந்தாலும் அவளிடம் கேட்டான், “நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்?”
“உனக்கு நடந்ததைப் பற்றி?”
“அதைப் பற்றி உன்னிடம் யார் சொன்னது?”
“விளையாடாதே, எல்லோருக்கும் இது தெரியும். உன்னை விசாரணைக்கு அழைத்தார்கள், உன்னை மிரட்டினார்கள், நீ அவர்களிடம் முகத்திற்கு நேராக பழிப்பு காட்டியிருக்கிறாய். நீ எதையும் விட்டுக்கொடுக்கவும் இல்லை. எல்லோரும் உன்னை வியந்து பாராட்டுகிறார்கள்.”
“ஆனால் நான் யாரிடமும் இதைச் சொல்லவில்லையே.”
“அப்பாவியாக இருக்காதே. இது போன்ற விஷயங்களெல்லாம் சீக்கிரம் பரவிவிடும். அப்புறம் இது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லையே. தைரியம் உள்ள ஒருத்தரை இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்கமுடிகிறதா என்ன…”
ஒரு சிறிய நகரத்தில் ஒவ்வொரு நிகழ்வும் எவ்வளவு சீக்கிரம் தொன்மமாக மாறும் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அவன் ஈடுபட்டிருந்த அர்த்தமற்ற அத்தியாயங்களெல்லாம், அதன் முக்கியத்துவத்தை அவன் ஒருபோதும் மிகைப்படுத்தி மதிப்பிடவில்லை, தொன்மங்களை உருவாக்கும் பலம் கொண்டிருந்தன என்று அவன் நினைத்தே பார்க்கவில்லை; தியாகிகளைப் போற்றும் தன்னுடைய சக குடிமகன்களுக்கு அவன் எவ்வளவு பயனுள்ளவனாக மாறிவிட்டான் என்பதை அவன் முழுவதுமாக அறிந்துகொள்ளவில்லை. இத்தகைய மக்கள் தங்களின் இனிமையான செயலின்மையை மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டு ஆறுதலடைகிறார்கள். வாழ்க்கை இரண்டே இரண்டு சாத்தியங்களைத்தான் தருகிறது என்ற தங்கள் கருத்தில் உறுதியடைகிறார்கள்: கீழ்படு அல்லது அழிந்துவிடு. எட்வர்ட் அழிந்துபோவான் என்று யாரும் சந்தேகிக்கவில்லை இதுவரை, மனநிறைவுடனும் வியப்புடனும் அவர்கள் இந்தச் செய்தியைப் பரப்பினார்கள். ஆனால் ஆலிஸின் மூலம் தனது சொந்த சிலுவையில் தான் அறையப்பட்டிருக்கும் அற்புதமான காட்சியைக் கண்டான். அவன் நிதானமாகப் பதிலளித்தான் : “ஆனால் நான் எதையும் விட்டுக்கொடுக்காமல் இருந்தது முற்றிலும் இயற்கையானதுதானே. வேறு யார் இருந்தாலும் இதைத்தானே செய்திருப்பார்கள்.”
“யாராக இருந்தாலுமா?” ஆலிஸ் கத்தினாள். “அக்கம் பக்கத்தில் மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்! எவ்வளவு கோழைகளாக இருக்கிறார்கள்! சொந்த அம்மாவையே காட்டிக்கொடுப்பார்கள்.!”
எட்வர்ட் அமைதியாக இருந்தான், ஆலிஸும் அமைதியாக இருந்தாள். அவர்கள் கைகளைக் கோர்த்தபடி நடந்தார்கள். பின்னர் ஆலிஸ் அவனிடம் கிசுகிசுத்தாள், “நான் உனக்காக எதையும் செய்வேன்.”
இதுபோன்ற சொற்களை இதுவரை யாரும் எட்வர்டிடம் சொன்னதில்லை; அவை எதிர்பாராத பரிசு. அவை தகுதியற்ற பரிசுதான் என்பதை நிச்சயமாக எட்வர்ட் அறிவான். ஆனால் தன் தகுதிக்குரிய பரிசுகளை விதி தன்னிடமிருந்து விலக்கி வைத்திருக்கும்போது, தனக்குத் தகுதியற்ற பரிசுகளைப் பெற்றுக்கொள்வது தன் உரிமை என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். அதனால் அவன் சொன்னான்: “இல்லை, இனி எனக்காக யாரும் எதுவும் செய்யமுடியாது,”
“ஏன் அப்படி?” கேட்டாள் ஆலிஸ்.
“அவர்கள் என்னைக் கல்லூரியிலிருந்து விரட்டப் போகிறார்கள். இன்று என்னை நாயகனாகப் போற்றுபவர்களெல்லாம் அப்போது ஒரு சுண்டு விரலைக் கூட தூக்க மாட்டார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். நான் தனித்து விடப்படுவேன்.”
“இல்லை,” தலையசைத்து ஆலிஸ் சொன்னாள். “நான் தனியன்.” எட்வர்ட் சொன்னான்.
“இல்லை!” ஆலிஸ் கத்தினாள்.
“அவர்கள் அனைவரும் என்னைக் கைவிடுவார்கள்.”
“நான் உன்னைக் கைவிடவே மாட்டேன்,” என்றாள் ஆலிஸ்.
“நீயும் என்னை விட்டுவிடுவாய்,” வருத்தத்துடன் சொன்னான் எட்வர்ட்.
“நிச்சயமாக இல்லை,” சொன்னாள் ஆலிஸ்.
“இல்லை ஆலிஸ்,” என்றான் எட்வர்ட். “நீ என்னை நேசிக்கவில்லை. நீ என்னை நேசித்ததே இல்லை.”
“அது உண்மை அல்ல,” முணுமுணுத்தாள் ஆலிஸ். அவள் கண்கள் ஈரமானதை மனநிறைவுடன் நோக்கினான் எட்வர்ட்.
“இல்லை ஆலிஸ். இப்படியான விஷயங்களை ஒருவரால் உடனடியாக உணர முடியும். நீ எப்பவும் என் மேல் அரவணைப்பைக் காட்டியதே இல்லை. ஒருவனைக் காதலிக்கும் பெண் அப்படி நடந்துகொள்ள மாட்டாள். எனக்கு அது நன்றாகவே தெரியும். இப்போது அவர்கள் என்னை அழிக்கப் பார்க்கிறார்கள் என்பதால் என் மேல் இரக்கம் காட்டுகிறாய். ஆனால் உண்மையில் நீ என்னைக் காதலிக்கவில்லை, இதைப் பற்றி உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.”
அவர்கள் மேலும் சற்று தூரம் நடந்தார்கள், அமைதியாக, கைகளைப் பற்றிக் கொண்டு. ஆலிஸ் சற்று நேரம் அமைதியாக அழுதாள் பின் அவள் நடப்பதைச் சட்டென நிறுத்தினாள், தேம்பல்களுக்கு இடையில் சொன்னாள்: “இல்லை, அது உண்மை இல்லை. அதைச் சொல்ல உனக்கு உரிமை இல்லை. அது உண்மை இல்லை.”
“அது உண்மைதான்,” என்றான் எட்வர்ட். ஆலிஸ் அழுகையை நிறுத்தாதபோது சனிக்கிழமை அவன் கிராமத்திற்குச் செல்லலாம் என்று அவளைத் தூண்டினான். அழகான பள்ளத்தாக்கில், ஆற்றங்கரையில் அவன் அண்ணனின் குடில் இருந்தது, அங்கு அவர்கள் தனியாக இருக்கலாம்.
மௌனமாகத் தலையசைத்து அவள் சம்மதத்தைத் தெரிவித்தபோது ஆலிஸின் முகம் கண்ணீரால் நனைந்திருந்தது.
8
இது நடந்தது செவ்வாய்க்கிழமை. அவன் வியாழக்கிழமை இயக்குநரின் அடுக்ககத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டான், உற்சாகம் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அங்கு சென்றான். அவனுடைய இயற்கையான வசீகரமே தேவாலய அவதூறுகளையெல்லாம் காற்றில் சிறுபுகையென கரைத்துவிடும் என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் வாழ்க்கை அப்படி இருப்பதில்லையே: ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நாடகத்தில் தன்னுடைய பாத்திரத்தை நடிப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறான். இடைப்பட்ட நேரத்தில் அவனுக்குத் தெரியாமலே காட்சிகள் மாற்றப்பட்டுவிட்டதை அவன் அறிவதில்லை. வேறு ஏதோவொரு காட்சி நிகழ்ந்துகொண்டிருக்கும்போது சம்பந்தமில்லாமல் அதன் நடுவில் தான் நிற்பதைப் பிற்பாடுதான் உணர்கிறான்.
இயக்குநருக்கு எதிரே இருந்த நாற்காலியில் அவன் மீண்டும் அமர வைக்கப்பட்டான். அவர்களுக்கிடையே ஒரு சிறிய மேஜையும் அதன் மீது ஒரு கான்யாக் பாட்டிலும் இரண்டு கண்ணாடி கோப்பைகளும் இருந்தன. நுண்ணறிவு கொண்ட, மது பழகாத, ஒரு மனிதன் தேவாலய அவதூறெல்லாம் இனி கேள்விக்குரிய விஷயமே அல்ல என்று உணர்வதற்கு புதிய ஆதாரமாக இருந்தது அந்த கான்யாக் பாட்டில்தான்.
ஆனால் அப்பாவி எட்வர்ட் தன் மீதே அதீத மையல் கொண்டிருந்ததால் தொடக்கத்தில் இதையெல்லாம் அவன் உணரவேயில்லை. தொடக்க உரையாடலில் (அதன் பேசுபொருள் பொதுவானதாகவும் தெளிவற்றும் இருந்தது) விருப்பத்துடனே பங்கு கொண்டான், ஆனால் அவனுக்கு அளிக்கப்பட்ட கோப்பையைக் காலி செய்ததும் அவன் உள்ளபடியே சலிப்புற்றான். அரை மணியோ அல்லது ஒரு மணி நேரத்திற்கோ பிறகு பெண் இயக்குநர் சூசகமாகத் தனிப்பட்ட பேச்சுகளுக்குத் தாவினார்; தன்னைப் பற்றியே அதிகம் பேசினார், தன் சொற்களிலிருந்து எட்வர்டுக்கு முன்னால் தான் விரும்பிய பிம்பத்தை உருவாக்கினார்: விவேகமான நடுவயதுப் பெண்மணி, மிகவும் மகிழ்ச்சியாக இல்லைதான் ஆனால் மிகக் கண்ணியமான முறையில் தன் வாழ்க்கையுடன் சமரசம் செய்துகொண்டவர், எதைக் குறித்தும் ஏக்கம் கொள்ளாதவர், தன் தனியுரிமையையும் சுதந்திரத்தையும் முழுக்க அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொள்ளாததைக் குறித்தும் மனநிறைவே கொண்டவர். இந்த வாழ்க்கை அவருக்கு ஒரு அழகான குடியிருப்பை வழங்கியுள்ளது, இங்கு அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார். இங்குதான் இப்போது எட்வர்ட் கூட அனேகமாக அவ்வளவு சங்கடமாக உணரவில்லை.
“ஆமாம், உண்மையிலே இந்த இடம் அழகாக உள்ளது” சொன்னான் எட்வர்ட். இதை அவன் சற்று சோர்வுடன்தான் சொன்னான், ஏனென்றால் அந்த நொடி அவனுடைய உற்சாகம் வடிந்திருந்தது. அந்த கான்யாக் பாட்டில் (முதல் வருகையின்போது அவன் தற்செயலாகத்தான் கேட்டான், இப்போது அச்சுறுத்தும் வகையில் அவ்வளவு வேகமாக அவன் முன்னே தயாராக இருந்தது), சிறிய அடுக்ககத்தின் நான்கு சுவர்கள் (மேலும் குறுகிய வரையறைக்குட்பட்ட இடமாக இதை மாற்றிக்கொண்டிருந்தன), இயக்குநரின் சொற்பொழிவு (தனிப்பட்ட விஷயங்களின் மீதே அதீத கவனம்), அவருடைய பார்வை (ஆபத்தான வகையில் அவன் மீது நிலைத்திருந்தது); இவையெல்லாம் காட்சிகள் மாறிவிட்டதை அவனுக்கு உணர்த்தின; மாற்ற முடியாத முன்திட்டத்தால் உருவாக்கப்பட்ட சூழலுக்குள் தான் நுழைந்துவிட்டதை உணர்ந்தான்; தன்னுடைய வாழ்வாதாரம் சீர்குலைக்கப்படுவதற்கு இயக்குநரின் வெறுப்பு காரணம் அல்ல, மாறாகத் தன்னை குடிக்க அழைக்கும் இந்த மெலிந்த, மூக்கின் கீழ் கறுப்பு திட்டு கொண்ட பெண்ணின் உடல் மீதான தன்னுடைய வெறுப்பே என்று இப்போது தெளிவாகப் புரிந்துகொண்டான். பதட்டம் அவன் தொண்டையை இறுக்கியது.
அவன் இயக்குநரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து தனது கோப்பையைக் காலி செய்தான், ஆனால் இப்போது அவனது பதட்டம் மிகவும் வலுவாக இருந்ததால் மது அவன் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மறுபுறம், ஏற்கனவே முற்றிலுமாக தன்வசம் இழந்திருந்த இயக்குநர் இரண்டு கோப்பைகளுக்குப் பிறகு சமநிலையைத் தொலைத்துவிட்டார், அவருடைய சொற்கள் அச்சுறுத்தும் வகையிலான உச்சத்தை அடைந்திருந்தன: “ஒரு விஷயத்திற்காக நான் உன்னைப் பார்த்து பொறாமைப்படுகிறேன்,” என்று சொன்னார். “நீ மிகவும் இளமையாக இருக்கிறாய். ஏமாற்றம் என்றால் என்ன, துரோகம் என்றால் என்ன என்பதை நீ இன்னமும் அறிந்திருக்க மாட்டாய். அழகும் நம்பிக்கையும் நிறைந்திருப்பதாகவே நீ உலகத்தைப் பார்க்கிறாய்.”
அவள் எட்வர்டை நோக்கி மேசையின் மீது சாய்ந்து, துயருறுத்தும் அமைதியில் (வலிந்து திணிக்கப்பட்ட புன்னகையுடன்) அவரின் பயமுறுத்தும் கண்களை அவன் மீது பொருத்தினார். அதே நேரத்தில் அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்: இன்னும் கொஞ்சம் குடித்து போதை ஏறாவிட்டால், அவன் இந்த மாலைக்குள் உண்மையான சிக்கலில் மாட்டிக்கொள்வான்; தன் கோப்பையில் கொஞ்சம் கான்யாக்கை ஊற்றிச் சட்டென உள்ளே இறக்கினான்.
இயக்குநர் தொடர்ந்தார்: “ஆனால் எனக்கும் அப்படிப் பார்க்க வேண்டும் என்றுதான் ஆசை. நீ பார்ப்பதைப் போல!” பின்னர் நாற்காலியிலிருந்து எழுந்தார், தன்னுடைய மார்பை வெளியே துருத்தி கேட்டார் : “உனக்கு என்னைப் பிடிக்கும் என்பது உண்மையா? சொல், உண்மையா?” சிறிய மேசையைச் சுற்றி வந்து எட்வர்டின் சட்டைக் கையைப் பிடித்தார். “அது உண்மையா?”
“ஆமாம்” என்றான் எட்வர்ட்.
“வா, நடனமாடலாம்,” என்று சொன்னார். எட்வர்டின் கையை விடுத்து ரேடியோவை நோக்கிச் சென்று நடன இசை ஒலிக்கும் வரை அதைத் திருகினார். பின்னர் புன்னகையுடன் எட்வர்டை நோக்கி நின்றார்.
எட்வர்ட் எழுந்து இயக்குநரைப் பற்றிக் கொண்டு இசையின் தாளத்திற்கு ஏற்ப அறையச் சுற்றி வரத் தொடங்கினான். அவ்வப்போது அவர் தன் தலையை அவன் தோளில் சாய்த்தார், சட்டெனத் தலையை உயர்த்தி அவன் கண்களை நோக்குவார், பின்னர் சிறிது நேரம் கழித்து இசையுடன் சேர்ந்து மென்மையாகப் பாடுவார்.
எட்வர்ட் மிகவும் சங்கடமாக உணர்ந்தான். நடனமாடுவதை நிறுத்திவிட்டு பலமுறை மது அருந்தவேண்டியிருந்தது. இந்தப் பயங்கரமான இடைவிடாத உலைச்சல் முடிவுக்கு வருவதைவிட அவன் தற்போது வேறு எதையும் விரும்பவில்லை. ஆனால் இந்த நடனத்தைத் தொடர்ந்து வரப்போவது தாங்கமுடியாததாக இருக்குமென்ற திகில் அவனுக்கு மேலும் பயத்தைக் கொடுத்தது. அதனால் தனக்குள்ளே பாடிக்கொண்டிருந்த பெண்மணியைத் தொடர்ந்து நடனமாடியபடியே அறையைச் சுற்றி வரச் செய்தான். அதே நேரத்தில் மது தனக்குள் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்துகிறதா என்று ஆவலுடன் (பதட்டமான பொறுமையின்மையுடனும்) கவனித்தான். இறுதியாக கான்யாக் அவன் மூளையை போதுமான அளவு மழுங்கடித்துவிட்டது என்று தெரிந்தவுடன் தனது வலது கையால் இயக்குநரை உறுதியாக தன் உடலின் மீது அழுத்தி இடது கையால் அவர் மார்பைத் தொட்டான்.
ஆமாம்… மாலை முழுதும் அவனைப் பயமுறுத்திய அதே காரியத்தைச் செய்தான். இதைச் செய்யாமல் இருப்பதற்காக அவன் எதையும் தரத் தயாராக இருந்தான் ஆனாலும் அவன் அதைச் செய்தான். அப்படியானால், என்னை நம்புங்கள், அதை அவன் உண்மையிலேயே செய்ய வேண்டி இருந்ததால்தான் அதைச் செய்தான்: இந்த மாலையின் தொடக்கத்திலேயே அவன் சிக்கிக்கொண்ட சூழல் அவனுக்கு வெளியேற வேறு வாய்ப்பை வழங்கவில்லை; அதன் வேகத்தைக் குறைப்பது சாத்தியம் என்றாலும் அதை முற்றிலுமாக தடுப்பது சாத்தியமில்லை. அதனால் அவன் இயக்குநரின் மார்பில் கை வைத்தபோது அவன் தவிர்க்கவே முடியாத ஒரு தேவைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான்.
அவனது செயலின் விளைவுகள் எல்லா எதிர்பார்ப்புகளையும் மிஞ்சிவிட்டன. ஒரு மந்திரவாதியின் மந்திரக்கோலின் அலையசைவுகளைப் போல அவர் அவன் கரங்களில் நெளியத் தொடங்கினார், சற்றும் தாமதிக்காமல் தன் ரோமங்கள் நிறைந்த மேலுதட்டை அவன் வாய்க்குள் வைத்தார். பிறகு அவனைச் சாய்வு மெத்தையில் இழுத்து கட்டின்றி அவன் மேல் சுருண்டு, உரக்க மூச்சொலி எழுப்பி, அவன் உதட்டையும் நுனி நாக்கையும் கடித்தார். அது எட்வர்டை மிகவும் காயப்படுத்தியது. பிறகு அவன் கைகளிலிருந்து நழுவி, “இரு” என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் ஓடினார்.
எட்வர்ட் தனது விரலை நக்கினான், நாக்கிலிருந்து லேசாக ரத்தம் வழிவதைக் கண்டான். அவன் சிரமப்பட்டுத் தூண்டிய போதை இறங்குமளவிற்கு அந்தக் கடி அவனுக்கு வலித்தது. அடுத்து என்ன என்ற பதட்டத்தில் அவனது தொண்டை மீண்டும் இறுகியது. குளியலறைக்குள் தண்ணீர் வாரியிறைப்பதும் சத்தமாக வழிவதும் கேட்டது. கான்யாக் பாட்டிலை எடுத்து உதடுகளின் மீது வைத்து இறுதிவரை குடித்தான்.
ஆனால் இந்த நேரத்தில், ஒளி ஊடுருவக்கூடிய இரவாடையில் (மார்பக பகுதிகள் சரிகைகளால் அடர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தன) கதவோரத்தில் வந்து நின்றார் பெண் இயக்குநர். பின் மெதுவாக எட்வர்டை நோக்கி நடந்து வந்தார். அவனை அணைத்துக்கொண்டார். பின்னர் சட்டெனப் பின்வாங்கி அவனைக் கண்டிக்கும் விதமாகக் கேட்டார்: “நீ ஏன் இன்னும் உடையில் இருக்கிறாய்?”
எட்வர்ட் தன் மேலங்கியைக் கழற்றி இயக்குநரைப் பார்த்தான். (அவருடைய பெரிய கண்கள் அவன் மீது பதிந்திருந்தன) தான் திட்டமிட்டு உருவாக்கிய விழைவை உடல் கெடுத்துவிடக்கூடும் என்ற உண்மையைத் தவிர அவனால் வேறு எதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எனவே எப்படியாவது தன் உடலைத் தூண்ட விரும்பி உறுதியற்ற குரலில் சொன்னான்: “ஆடைகளை முழுவதுமாக கழற்று.”
சட்டென உற்சாகமாக, கிழ்படுதலின் உடலசைவுகளுடன் தன் இரவாடையைக் கழற்றி தன் மெலிந்த வெள்ளை உடலை வெளிக்காட்டினார். அதன் மத்தியில் அடர்ந்த கறுப்புப் புதர் பரிதாபமாகக் கைவிடப்பட்டு நீண்டிருந்தது. அவர் மெதுவாக அவனை நோக்கி வந்தார், எட்வர்ட் ஏற்கனவே அறிந்திருந்ததை தற்போது பயத்துடன் உணர்ந்தான்: அவன் உடல் பதட்டத்தில் முழுவதுமாக கட்டுண்டிருந்தது.
எனக்குத் தெரியும், அன்பர்களே, அவ்வப்போது உங்கள் உடல் உங்களுக்கு கீழ்ப்படியாமல் போவதை இத்தனை வருடங்களில் நீங்கள் பழகிக்கொண்டீர்கள், அது உங்களை இப்போது வருத்துவதில்லை. ஆனால் புரிந்துகொள்ளுங்கள், எட்வர்ட் அப்போது இளமையாக இருந்தான்! அவனது உடலின் நிலைகுலைவு ஒவ்வொரு முறையும் அவனை நம்பமுடியாத பீதியில் தள்ளியது, அதைத் தாங்கவியலாத அவமானமாக ஏற்றுக்கொண்டான். இதற்குச் சாட்சியாக இருப்பது ஒரு அழகிய முகமாக இருந்தாலும் சரி அல்லது இயக்குநரைப் போல அருவருப்பான, வேடிக்கையான ஒன்றாகவே இருந்தாலும் சரி. பெண் இயக்குநர் இப்போது அவனிடமிருந்து ஒரு அடி தொலைவில்தான் இருந்தார். அவன் பயந்து, என்ன செய்வது என்று தெரியாமல் சட்டென ஒரு வேகத்தில் சொன்னான், எப்படி என்று அவனுக்கே தெரியாமல் (தந்திரமான சிந்தனையினால் அல்ல ஒரு அகத்தூண்டலின் விளைவாக): “வேண்டாம், வேண்டாம். கடவுளே, வேண்டாம். இல்லையில்லை, வேண்டாம்… இது ஒரு பாவம்… இது பாவம்!” எகிறி விலகினான்.
ஆனால் இயக்குநர் அவனை நோக்கி வந்துகொண்டே இருந்தார், முணுமுணுத்தார்: “என்ன பாவம்? பாவம் என எதுவும் இல்லை”
அவர்கள் சற்று நேரம் முன்பு அமர்ந்திருந்த மேசைக்குப் பின்னால் நகர்ந்து ஒதுங்கினான் எட்வர்ட்: “இல்லை, என்னால் இதைச் செய்ய முடியாது. அதற்கு எனக்கு உரிமை இல்லை.”
குறுக்கே இருந்த நாற்காலியைத் தள்ளிவிட்டு, எட்வர்டைப் பின்தொடர்ந்தார் இயக்குநர், அவரது பெரிய கரிய கண்களை அவன் மீதிருந்து எடுக்கவே இல்லை: “பாவம் என்ற ஒன்று இல்லை! பாவம் என எதுவும் இல்லை!”
எட்வர்ட் மேசையைச் சுற்றி வந்தான், அவனுக்குப் பின்னால் சாய்வு இருக்கை மட்டுமே இருந்தது, இயக்குநர் ஒரு அடி தூரத்தில் இருந்தார். அவனால் இப்போது தப்பிக்க முடியாது, அனேகமாக அவனுடைய கையறுநிலைதான் இந்த இக்கட்டான தருணத்தில் அவரை நோக்கிக் கட்டளையிட வைத்தது: “மண்டியிடுங்கள்.”
ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார், ஆனால் அவன் மீண்டும் ஒருமுறை மூர்க்கமாக உறுதியான குரலில் “மண்டியிடு!” என்றான்! அவர் கிளர்ச்சியுற்று அவன் முன்னால் மண்டியிட்டு அவன் கால்களைத் தழுவினார்.
“அந்தக் கைகளை எடு,” கட்டளைக்கு கீழ்ப்படியச் சொன்னான். “கைகளைக் கோர்த்து வை!” அவர் மீண்டும் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார்.
“கைகளைக் கோர்த்துவை! நான் சொன்னது கேட்டதா?”
அவர் கைகளைக் கோர்த்துக்கொண்டார்.
“பிரார்த்தனை செய்!” அவன் கட்டளையிட்டான்.
அவர் கைகள் கோர்த்திருந்தன, ஆர்வமுடன் அவனை நோக்கி கண்களை நகர்த்தினார். “பிரார்த்தனை செய்! கடவுள் நம்மை மன்னிக்கட்டும்” கத்தினான்.
அவர் கைகள் இன்னமும் கோர்த்திருந்தது. அவர் தன் பெரிய கண்களால் மேல்நோக்கி பார்த்திருந்தார். எட்வர்டுக்கு தற்போது அவகாசம் கிடைத்திருப்பது மட்டுமல்லாமல் மேலிருந்து அவரைப் பார்த்தபோது, தான் அவரின் வெறும் ஒரு வேட்டைப்பொருள்தான் என்ற தாழ்வெண்ணம் விலகத் தொடங்கியது. தன்னம்பிக்கையை மீண்டும் பெற்றான். அவரை முழுமையாகப் பார்க்கும்படி பின்னகர்ந்தான். மீண்டும் ஒருமுறை கட்டளையிட்டான், “பிரார்த்தனை செய்!”
அவர் அமைதியாக இருந்தபோது, “சத்தமாக…” என்று கத்தினான்.

அந்த மெலிந்த, நிர்வாணமான, மண்டியிட்ட பெண், “பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக…” என்று சொல்லத் தொடங்கினார்.
அவர் பிரார்த்தனைச் சொற்களை உச்சரித்தபோது, அவனையே கடவுளெனப் பாவித்து நோக்கினார். பெருகும் உற்சாகத்துடன் அவரைப் பார்த்தான் அவன். முன்னால் மண்டியிட்டிருப்பது இயக்குநர், கீழ்ப்பணியாளனால் அவமதிப்பு செய்யப்பட்டு…
அவமானத்தின் இந்த மும்மடிப்பு பிம்பம் அவனைப் போதையுறச் செய்தது, சட்டென்று எதிர்பாராத ஒன்று அப்போது நிகழ்ந்தது: அவன் உடல் தன் மௌனமான எதிர்ப்பை விலக்கிக்கொண்டது; எட்வர்டுக்கு விறைப்புத்தன்மை உண்டானது!
“எங்களைச் சோதனைக்கு ஆட்படுத்தாதீர்,” என்று இயக்குநர் கூறியபோது, விரைந்து தன் ஆடைகளைக் கழற்றி எறிந்தான். “ஆமென்” என்று அவர் சொன்னபோது, வலுக்கட்டாயமாக அவரை தரையிலிருந்து தூக்கி சாய்விருக்கையில் கிடத்தினான்.
9
அது நடந்தது வியாழக்கிழமை, சனிக்கிழமை எட்வர்ட் தனது சகோதரனைக் காண ஆலிஸூடன் தன் கிராமத்திற்குச் சென்றான். அவன் அவர்களை வரவேற்று அருகிலுள்ள குடிலின் சாவியை அவர்களிடம் கொடுத்தான்.
காதலர்கள் இருவரும் மதியம் முழுதும் காடுகளிலும் புல்வெளிகளிலும் சுற்றித் திரிந்தனர். அவர்கள் முத்தமிட்டுக்கொண்டனர், எட்வர்டின் திருப்தியுற்ற கைகள், பேதைமைக்கும் உறவு மீறிய காமத்தின் செயற்களத்திற்கும் இடையிலான, தொப்புளுக்கு அருகே, கற்பனைக் கோடு இனி கணக்கில் வராது என்று கண்டுகொண்டன. நீண்டகாலமாக எதிர்பார்த்த நிகழ்வை முதலில் வாய்மொழியாக உறுதிபடுத்திக்கொள்ள விரும்பினான், ஆனால் அப்படிச் செய்வதற்குப் பயந்து அமைதியாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தான்.
அவன் முடிவு அனேகமாகச் சரியாக இருக்கலாம்; அவனது பல நாட்கள் பின்தொடர்தலுக்கும், வாக்குவாதங்களுக்கும், வேறு எந்த ஒரு தர்க்கரீதியான அடிப்படைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது ஆலிஸின் இந்த திடீர் மாற்றம். உண்மையில் இது எட்வர்டின் வீரச்செயலைப் பற்றிய செய்தியின் அடிப்படையிலே நிகழ்ந்திருக்கக்கூடும். ஒரு தவற்றின் விளைவு, அதுவும் அந்தத் தவற்றிலிருந்து சற்றும் தர்க்கமற்ற ஒரு முடிபு; ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம்: எட்வர்ட் தனது நம்பிக்கைகளுக்கு விசுவாசமாக இருந்ததற்காக அனுபவித்த துன்பங்கள் ஆலிஸ் தன் கடவுளின் சட்டங்களுக்கு எதிராகத் துரோகம் இழைப்பதற்கு ஏன் காரணமாக இருக்க வேண்டும்? உண்மை கண்டறியும் குழுவின் முன் எட்வர்ட் கடவுளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல் இருந்திருந்தாள், இவள் இப்போது எட்வர்டின் முன்னாள் கடவுளுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டியிருந்திருக்காதே?
இத்தகைய சூழலில் உரக்க வெளிப்படுத்தப்படும் எந்தவொரு சிந்தனையும் ஆலிஸுக்கு அவளுடைய அணுகுமுறையில் உண்டாகியிருக்கும் முரண்பாட்டை அவளுக்கே காட்டிக்கொடுக்கும் அபாயம் நேர்ந்துவிடும். அதனால் எட்வர்ட் விவேகத்துடன் அமைதியாகவே இருந்தான். ஆலிஸ் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் அதுவும் கவனிக்கப்படாமலே போனது. அவள் உற்சாகமாக இருந்தாள், அவளது ஆன்மாவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் வியப்பானதென்றோ அல்லது வலி மிகுந்தது எனும்படியான குறிப்போ தென்படவில்லை.
இருட்டியதும் அவர்கள் குடிலுக்குத் திரும்பிச் சென்றார்கள், விளக்குகளை ஏற்றி, படுக்கையை விரித்து, முத்தமிட்டனர். எட்வர்டிடம் விளக்குகளை அணைக்கச் சொன்னாள் ஆலிஸ். ஆனால் நட்சத்திரங்களின் ஒளி ஜன்னல் வழியாகத் தொடர்ந்து தெரிந்தது, எனவே ஆலிஸின் வேண்டுகோளின் பேரில் எட்வர்ட் ஜன்னல்களையும் மூட வேண்டியிருந்தது. பின்னர், முழு இருளில், ஆலிஸ் ஆடைகளைக் கழற்றி அவனிடம் தன்னை ஒப்படைத்தாள்.
எட்வர்ட் இந்தத் தருணத்தைப் பல வாரங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால் அதிசயிக்கும் விதமாக இப்போது அது உண்மையிலேயே நடக்கும்போது, இத்தனை கால காத்திருப்பிற்கு உரிய அளவு சிறப்பானதாக இருக்குமென்ற உணர்வு அவனுக்கு இல்லை; காதல் செயல்பாட்டின்போது அவன் கவனம் மிக எளிதாகச் சிதறியது, அது அவனுக்கே மிகத் தெளிவாகவும் தெரிந்தது. அவன் தலையில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை விரட்டச் செய்த முயற்சிகள் அத்தனையும் வீணாகப் போனது: ஆலிஸ் தன்னுடைய புறக்கணிப்பால் அவனைத் துன்புறுத்திய நீண்ட பயனற்ற வாரங்கள் அத்தனையும் அவனிடம் திரும்ப வந்தன; கல்லூரியில் அவனுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதற்கு அவள் காரணமாக இருந்ததால், தற்போது தன்னையே அளிக்கும் அவளிடம் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக ஒருவித பழிவாங்கும் வெறுப்பை உணரத் தொடங்கினான். ஒரு காலத்தில் வெறித்தனமாக வழிபட்ட அவளின் ‘அகாமக் கடவுளுக்கு’ இப்போது எவ்வளவு எளிதாக எந்தத் தயக்கமுமின்றி துரோகம் செய்கிறாள் என்பது அவனுக்கு எரிச்சலைத் தந்தது; எந்த விழைவும், எந்த நிகழ்வும், எந்த சஞ்சலமும் அவள் அமைதியைக் குலைக்கவில்லை என்பது அவனுக்கு எரிச்சலூட்டியது. எந்த அகப் போராட்டமுமின்றி அவள் அத்தனையையும் தன்னம்பிக்கையுடனும் மிக எளிதாகவும் அனுபவித்ததில் அவன் மேலும் எரிச்சலடைந்தான். இந்த எரிச்சல் அதன் சக்தியால் அவனை மீறி வெளிப்படுமென அச்சுறுத்தல் எழுந்தபோதெல்லாம் அவளிடமிருந்து ஏதோ வகையான ஒலியையோ, முனகலையோ, சொல்லையோ அல்லது பரிதாபமான அழுகையையோ வலுக்கட்டாயமாக எழுப்ப வேண்டி அவன் உணர்ச்சி மிகுந்து ஆவேசமாகக் கலவியில் ஈடுபட்டான். அந்தப் பெண் அமைதியாக இருந்தாள். அவனுடைய காமக் கடுமுயற்சிகள் அனைத்தையும் மீறி அது ஆரவாரமற்று அமைதியாக முடிந்தது.
பின்னர் அவன் மார்பின் மீது சாய்ந்து அவள் உடனே உறங்கிப் போனாள். எட்வர்ட் நீண்ட நேரம் விழித்திருந்தான், தான் எந்த மகிழ்ச்சியையும் அடையவில்லை என்பதை உணர்ந்தான். அவன் ஆலிஸை கற்பனையில் பார்க்க முயன்றான் (அவளுடைய உடல் தோற்றத்தை அல்ல. ஆனால், முடியுமென்றால், ஒட்டுமொத்தமாக அவளுடைய இருப்பை), அவளை மங்கலாகத்தான் அறிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
இந்தச் சொல்லில் நிறுத்துவோம்: ஆலிஸ், இதுவரை எட்வர்ட் கண்டது போல, தன்னுடைய அத்தனை வெகுளித்தனத்துடனும், ஒரு நிலையான தனித்த பிறவி: அவளுடைய தோற்றத்தின் அழகிய எளிமை அவள் நம்பிக்கையின் இயல்பான அழகுடன் ஒத்துப்போவதாகத் தோன்றியது. அதுபோலவே அவளது எளிய ஊழ் அவள் அணுகுமுறைக்குக் காரணமாகத் தோன்றியது. இதுவரை அவளை திடமானவள் என்றும் கூர்மையான சிந்தனை கொண்டவளாகத்தான் எட்வர்ட் பார்த்திருக்கிறான்: அவளைக் கிண்டலடித்துச் சிரிக்க முடியும், திட்ட முடியும், அவள் அறியாமல் ஏமாற்ற முடியும் ஆனால் (தன்னையும் மீறி) அவளை மதிக்க வேண்டியிருந்தது.
இருப்பினும், இப்போது, திட்டமிடப்படாத பொய் செய்திகளின் வலை அவளது சமநிலையில் ஒரு பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவளுடைய கருத்துகளெல்லாம் அவளுடைய ஊழை மூடி மறைக்கும் ஒரு பூச்சுதான் என்றும் அவளுடைய ஊழ் அவள் உடலை மறைக்கும் ஒரு மேற்பூச்சுதான் என்றும் எட்வர்டுக்கு தோன்றியது. அவளை உடல், கருத்துகள், வாழ்வின் போக்கு ஆகியவற்றின் தன்னிச்சையான ஒரு நிலையற்ற இணைப்பாகக் கண்டான். அவன் கற்பனையில் அவளுடைய உடலையும் அவளின் கருத்துகளையும் தனித்தனியாகக் காட்சிப்படுத்திக் கண்டான் (அவன் தோள் மீது அவள் ஆழமாகச் சுவாசித்துக்கொண்டிருந்தாள்). உடல் அவனுக்குப் பிடித்திருந்தது ஆனால் கருத்துகள் அபத்தமாகத் தோன்றின; இந்த உடலுக்கும் அதன் கருத்துகளுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை; அவளை ஒட்டுத்தாளில் பரவும் ஒரு மை கோடாகக் கண்டான்; உருவமும் இல்லை உருவரையும் இல்லை.
இதன் உடல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆலிஸ் காலையில் எழுந்தபோது அவளை ஆடைகளின்றியே இருக்குமாறு வற்புறுத்தினான். நட்சத்திரங்களின் மங்கலான ஒளி கூட அவளைத் தொந்தரவு செய்ததால் ஜன்னல்களைச் சாத்தும்படி அவனை நேற்றுதான் வற்புறுத்தினாள் என்றாலும் இப்போது மொத்தமாகவே தன்னுடைய நாணத்தை மறந்துவிட்டாள். எட்வர்ட் அவளை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான் ( அவள் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து காலையுணவுக்குத் தேநீர் பொட்டலங்களையும் பிஸ்கட்டுகளையும் தேடிக்கொண்டிருந்தாள்). ஒரு கணம் கழித்து ஆலிஸ் அவனைப் பார்த்தபோது, அவன் சிந்தனையில் மூழ்கியிருப்பதைக் கவனித்தாள். அவள் அவனிடம் என்ன விஷயம் என்று கேட்டாள். காலை உணவுக்குப் பிறகு அவன் தன் சகோதரனைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று எட்வர்ட் பதிலளித்தான்.
கல்லூரி எப்படி இருக்கிறது என்று அவனை அண்ணன் விசாரித்தான். எல்லாம் சரியாக இருக்கிறது என்று எட்வர்ட் பொதுவாகப் பதிலளித்தான். அவன் அண்ணன் சொன்னான்: “அந்த செஸியகோவா ஒரு பன்றி. ஆனால் அவளை வெகு காலம் முன்பே நான் மன்னித்துவிட்டேன். தான் செய்வதென்ன என்பது அவளுக்குத் தெரியவில்லை என்பதால் மன்னித்தேன். அவள் எனக்குத் தீங்கு செய்ய விரும்பினாள், மாறாக ஒரு அழகான வாழ்க்கையைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியிருக்கிறாள். ஒரு விவசாயியாக நான் அதிகம் சம்பாதிக்கிறேன், இயற்கையுடன் ஒன்றியிருப்பது நகரவாசிகளை அதிகம் பாதிக்கும் சந்தேகப்புத்தியிலிருந்து என்னைக் காக்கிறது.”
“உன்மையில் அந்தப் பெண்மணி எனக்கும் கொஞ்சம் சந்தோஷத்தைத் தந்தாள்,” சிந்தனையில் மூழ்கியபடி இதைச் சொன்னான் எட்வர்ட். ஆலிஸைக் காதலிப்பதும், கடவுள் நம்பிக்கை இருப்பதாகப் பொய்யாகக் காட்டிக்கொண்டதையும் ஒரு விசாரணைக் குழுவின் முன் ஆஜராக வேண்டி இருந்ததையும் செஸியகோவா தனக்கு மறுகல்வி அளிக்க விரும்பியதையும் தன்னை தியாகி என்று நினைத்து ஒருவழியாக ஆலிஸ் தன்னை அவனுக்கு அளித்துவிட்டதையும் அவன் அண்ணனிடம் சொன்னான். அவன் சொல்லாத ஒரே விஷயம் இயக்குநரைக் கட்டாயப்படுத்தி இறை பிரார்த்தனையைச் சொல்ல வைத்ததுதான்; தன் அண்ணனின் கண்களில் அவநம்பிக்கையைக் கண்டான். அவன் பேசுவதை நிறுத்தினான், அவன் அண்ணன் கூறினான்: “என்னிடம் நிறைய தவறுகள் இருக்கலாம், ஆனால் என்னிடம் இல்லாத ஒன்று: நான் ஒருபோதும் பாசாங்கு செய்ததில்லை, நான் நினைத்ததை எல்லோர் முகத்திற்கு நேராகவும் சொல்லிவிடுவேன்.”
எட்வார்ட் தனது சகோதரனை நேசித்தான். அவனுடைய மறுப்பு வேதனை அளித்தது, எனவே அவன் தன்னை நியாயப்படுத்த முயன்றான், அவர்கள் வாதிடத் தொடங்கினர். இறுதியில் எட்வார்ட் கூறினான்:
“நீ நேர்மையான ஆள் என்பதும் அதில் உனக்குப் பெருமை உண்டு என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் ஒரு கேள்வியை உனக்கு நீயே கேட்டுக்கொள்ள வேண்டும்: ஒருவர் எதற்கு உண்மையைச் சொல்ல வேண்டும்? அதைச் செய்ய எது நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? ஏன் உண்மை பேசுவதை ஒரு நல்லொழுக்கமாகக் கருதுகிறோம்? நீ ஒரு பைத்தியக்காரனைச் சந்திப்பதாக வைத்துக்கொள்வோம். அவன் தன்னை ஒரு மீன் என்றும் நாம் எல்லோருமே மீன்கள்தான் என்றும் சொல்கிறான். நீ அவனுடன் வாக்குவாதம் செய்வாயா? அவன் முன்னாள் ஆடைகளை அவிழ்த்து உனக்குத் துடுப்புகள் இல்லை என்று காண்பிப்பாயா? அவன் முகத்துக்கு நேராக நினைப்பதைச் சொல்வாயா? சொல்லு…”
அவன் அண்ணன் அமைதியாக இருந்தான். எட்வர்ட் தொடர்ந்தான்: “நீ அவனிடம் முழு உண்மையையும், வெறும் உண்மையை, நீ உண்மையிலேயே என்ன நினைக்கிறாய் என்பதை மட்டும் அவனிடம் சொன்னால், நீ ஒரு பைத்தியக்காரனுடன் தீவிரமான உரையாடலில் ஈடுபடத் தொடங்கியிருப்பாய். நீ பைத்தியக்காரனாக ஆகிவிடுவாய். நம்மைச் சுற்றி உள்ள உலகமும் அதைப் போலத்தான். நான் அதனிடம் நேரடியாக உண்மையை மட்டும் பிடிவாதமாகச் சொன்னால், நான் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன் என்று அர்த்தம். தீவிரமல்லாத ஒன்றைத் தீவிரமாக எடுத்துக்கொண்டால் நான் என் தீவிரத்தை இழக்கிறேன் என்று அர்த்தம். நான் ஒரு பைத்தியக்காரனைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு நானே பைத்தியக்காரனாக மாறக்கூடாது என்றால் நான் பொய் சொல்லியாக வேண்டும்.”
10
ஞாயிற்றுக்கிழமை காதலர்கள் இருவரும் ஊருக்குக் கிளம்பினர்; அவர்கள் இரயில் பெட்டியில் தனியாக இருந்தனர் (அந்தப் பெண் மீண்டும் உற்சாகமாகப் பேசிக்கொண்டேயிருந்தாள்). தன்னுடைய கடமைகள் தனக்கு ஒருபோதும் வழங்காத ஒரு தீவிரத்தை ஆலிஸின் மாற்றுக் குணத்தில் காண சில காலம் முன்பு தான் காத்திருந்தது எட்வர்டின் நினைவிற்கு வந்தது. மேலும் அவன் (இரயில், தண்டவாள இணைப்புகளில் மிகக் கோர்வையாக ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது) ஆலிஸுடனான தன்னுடைய காதல் சாகசம் கேலிக்குரியது என்று துயரத்துடன் உணர்ந்தான். அது தற்செயலாலும் பிழைகளாலும் ஆனது, எந்தத் தீவிரமும் அர்த்தமும் இல்லாதது; அவன் ஆலிஸின் வார்த்தைகளைக் கேட்டான், அவளுடைய அசைவுகளைக் கண்டான் (அவன் கையை அழுத்தினாள்), இந்தச் சைகைகளுக்கெல்லாம் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று தோன்றியது. ஆதாரமற்ற நாணயங்கள், காகிதத்தால் செய்யப்பட்ட எடைகள், நிர்வாணத்தில் இயக்குநரின் பிரார்த்தனைக்குக் கடவுள் எந்த மதிப்பளிப்பாரோ அதைவிட எவ்விதத்திலும் மேலான மதிப்பை அவனால் இவற்றுக்கு அளிக்க முடியாது. திடீரென்று இந்த நகரத்து மக்கள் அனைவருமே ஒட்டுத்தாளில் பரவும் ஒரு மை கோடுதான் என்று அவனுக்குத் தோன்றியது, இடம்மாறும் குணங்கள் உடையவர்கள், திடமான சிந்தனை அற்றவர்கள்; ஆனால் மோசமானது என்னவென்றால், மிக மோசமானது என்னவென்றால் (பின்னர்தான் அவனுக்குத் தோன்றியது) இந்த அத்தனை நிழல் மாந்தர்களின் நிழல்தான் தானும் என்பது; ஏனென்றால் அவர்களுடன் ஒத்துப்போகவும் அவர்களைப் போலவே பாவிக்கவும்தான் தன் மொத்த மூளையையும் தீர்த்திருக்கிறான். ஆனாலும், அவர்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், உள்ளூர சிரிப்புடன்தான் அவர்களைப் போல நடித்தான் என்றாலும், ரகசியமாக அவர்களைக் கிண்டலடிக்க அவன் முயற்சிகள் எடுத்தான் என்றாலும் (அவர்களுடன் பொருந்திப்போகத் தான் எடுத்த முயற்சிகளை நியாயப்படுத்தும் விதமாக), அது உண்மை நிலையை மாற்றப்போவதில்லை. தீமையின் சாயலும் தீமைதான், போலியான நிழலும் நிழல்தான்; ஒரு வழித்தோன்றல், இரண்டாம் நிலை கொண்டது, இழிவானது!
அவமானகரமானது, மிகவும் அவமானகரமானது. ரயில் தண்டவாளங்களின் இணைப்புகளில் இயல்பாகச் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது (அவள் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள்). எட்வர்ட் சொன்னான்:
“ஆலிஸ் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?”
“ஆமாம்,” என்றாள் ஆலிஸ்.
“நான் மகிழ்ச்சியாக இல்லை”
“என்ன? உனக்கென்ன பைத்தியமா?”
“நாம் அதைச் செய்திருக்கக் கூடாது. அது நடந்திருக்கக்கூடாது.”
“உனக்கு என்ன ஆச்சு? நீ தானே அதை விரும்பினாய்”
“ஆம், நான்தான். ஆனால் அது என் மிகப் பெரிய தவறு. கடவுள் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார். அது பாவம், ஆலிஸ்.”
“இப்போது என்ன ஆச்சு உனக்கு?” நிதானமாகக் கேட்டாள். “எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுள் அன்பையே விரும்புகிறார் என்று நீதானே எப்போதும் சொல்வாய்?”
சற்று நேரத்திற்கு முன்பு களத்தில் தன்னைத் தோல்வியுறச் செய்த இறையியல் குதர்க்க வாதங்களை, உண்மையில், அமைதியாக ஆலிஸ் கோர்ப்பதை எட்வர்ட் கேட்டவுடன் அவனைக் கோபம் ஆட்கொண்டது: “உன்னைச் சோதிப்பதற்காக அப்படிச் சொன்னேன். கடவுளுக்கு நீ எவ்வளவு உண்மையானவளாக இருக்கிறாய் என்பதை இப்போது கண்டுபிடித்துவிட்டேன்! கடவுளுக்குத் துரோகம் செய்யும் ஒருவர் அதைவிட நூறு மடங்கு எளிதாக ஒரு மனிதனுக்குத் துரோகம் செய்ய முடியும்!”
ஆலிஸ் எப்போதும் பதில்களைத் தயாராக வைத்திருப்பாள், ஆனால் இப்போது அப்படி இல்லாமல் இருந்திருந்தால் அவளுக்கு அது நல்லதாக அமைந்திருக்கும்; ஏனென்றால் அவை அவனது பழிவாங்கும் வெறியைத் தூண்டின. எட்வர்ட் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தான் (இறுதியில் அவன் ‘குமட்டல்’, ‘அருவருப்பான உடல்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினான்) அவளின் அமைதியான, மென்மையான, முகத்தில் இருந்து (ஒருவழியாக!) அழுகையும், கண்ணீரும் முனகல்களையும் அவன் பெற்றது வரை.
“குட்பை” என்று அவளிடம் இரயில் நிலையத்தில் சொன்னான், அவளைக் கண்ணீரில் விட்டுச் சென்றான். பல மணி நேரங்கள் கழித்துதான், வீட்டில், அவனுடைய இந்த அரிதான கோபம் வடிந்தபிறகு அவன் செயல்களின் விளைவுகளைப் புரிந்துகொண்டான்: அன்று காலை அவன் முன் நிர்வாணமாகத் துள்ளிக் குதித்த அவளின் உடலைக் கற்பனை செய்தான், அவன் தன் சொந்த விருப்பத்தின் பேரில் விரட்டியடித்து அந்த அழகான உடலை அவன் தொலைத்துவிட்டதற்காகத் தன்னை முட்டாள் என்று அழைத்து தன் முகத்தில் தானே ஓங்கி அறையும் எண்ணத்தைக் கொண்டான்.
ஆனால் நடந்தது நடந்துவிட்டது, இனி எதையும் மாற்றுவதற்கான சாத்தியம் இல்லை.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவன் நிராகரித்த இந்த அழகான உடலைப் பற்றிய எண்ணம் எட்வர்டுக்கு ஓரளவு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவன் இந்த இழப்பிலிருந்து மிக விரைவாக மீண்டான் என்பதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலின் மீதான நாட்டம் அவனை மிகவும் தொந்தரவு செய்து அவனை ஏங்கும் நிலைக்குத் தள்ளியிருந்தது என்றால் அது புதிதாக நகருக்கு வந்திருந்த அவனின் குறுகிய காலத் தேவைதான். வாரத்திற்கு ஒருமுறை அவன் இயக்குநரைச் சந்தித்தான் (இந்தப் பழக்கம் உடலின் மீதிருந்த அவனின் ஆரம்பக்கால பதட்டத்தைத் தணித்திருந்தது), மேலும் கல்லூரியில் அவனது நிலை தெளிவாக உறுதிபடுத்தப்படும்வரை தொடர்ந்து அவரைச் சந்திக்கத் தீர்மானித்திருந்தான். இதற்கு அப்பால், அதிகரித்து வரும் வெற்றியில் எல்லா விதமான மகளிரையும் இளம்பெண்களின் பின்னாலும் சென்றான். இதன் காரணமாக அவன் தனிமையில் இருக்கும் தருணங்களைப் பெரிதும் மதித்தான், தனிமையான நடைபயணங்களை விரும்பினான், அப்படியே சில சமயம் (தயவுசெய்து இந்த விவரத்திற்குக் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்) தேவாலயத்திற்கும் சென்றான்.
இல்லை, கவலைப்பட வேண்டாம். எட்வர்ட் கடவுளை நம்பத் தொடங்கவில்லை. என் கதைக்கு இவ்வளவு மோசமான, அப்பட்டமான முரண்பாட்டை முடிசூட விரும்பவில்லை. ஆனால் கடவுள் இல்லை என்பதை எட்வர்ட் கிட்டத்தட்ட உறுதியாக நம்பினாலும் கடவுள் என்ற கருத்தை நோக்கி ஏக்கத்துடன் திரும்பினான்.
கடவுளே கடவுளின் சாராம்சம். அதேசமயம் எட்வர்ட் (இயக்குநருடனும் ஆலிஸுடனுமான அவன் சாகசங்கள் நடந்து பல வருடங்களாகிவிட்டன) அவனது காதல் விவகாரங்களிலோ, கல்வி கற்பித்தலிலோ அல்லது அவனது சிந்தனைகளிலோ அத்தியாவசியமான மாற்றங்கள் எதையும் அவன் காணவில்லை. தேவையற்றவற்றிலிருந்து தனக்கான தேவையைத் தேடிக்கொள்வதாக ஒப்புக்கொள்ளும் அளவிற்கு அவன் மிக நேர்மையானவன் ஆனால் தன் தேவைகளுக்காக ரகசியமாக ஏங்காத அளவிற்குப் பலவீனமானவன்.
ஆ, பெண்களே கனவான்களே, ஒரு மனிதன் யாரையும் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாத போது ஒரு சோகமான வாழ்க்கையை வாழ்கிறான்! அதனால்தான் எட்வர்ட் கடவுளுக்காக ஏங்குகிறான், ஏனென்றால் கடவுள் மட்டுமே முன்னால் தோன்ற வேண்டும் என்ற கடமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார், வெறுமனே அவரின் இருப்பே போதும். அவர் மட்டுமே (அவர் தனித்தவர், தனித்துவமானவர், இல்லாதவர்) இவ்வுலகத்தின் அத்தியாவசிய எதிர் நிலையை உருவாக்குகிறார், அத்தியாவசியமற்று இருப்பதற்கு அதுதான் அதிக தேவையாகவும் இருக்கிறது.
ஆகவே எட்வர்ட் அவ்வபோது தேவாலயத்திற்குச் சென்று குவிமாடத்தை கனவு போல வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பான். அப்படியான ஒரு நேரத்தில் நாம் அவனிடமிருந்து விடை பெறுவோம்: மதிய நேரம், தேவாலயம் அமைதியாகவும் காலியாகவும் இருந்தது. எட்வர்ட் ஒரு மர நீள் இருக்கையில் கடவுள் இல்லை என்ற எண்ணத்தினால் சோகமாக அமர்ந்திருக்கிறான். ஆனால் இம்முறை அவனின் சோகம் மிகப் பெரியது, திடீரென ஆழத்திலிருந்து கடவுளின் உண்மையான உயிருள்ள முகம் வெளிப்படும் அளவிற்கு. பாருங்கள்! அது உண்மைதான்! எட்வர்ட் புன்னகைக்கிறான்! அவன் புன்னகைக்கிறான், அவனின் புன்னகையில் மகிழ்ச்சி நிறைந்துள்ளது.
தயவுசெய்து அவனை இந்தப் புன்னகையுடன் உங்கள் நினைவில் வைத்திருங்கள்.
**********************

மூலமொழி: செக்
இந்த சிறுகதையின் ஆங்கிலவடிவம் ”Laughable Loves” என்ற தொகுப்பில் “Edward and God” என்ற தலைப்பில் உள்ளது.
செக் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்: சூஸேன் ரபாபோர்ட்.
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: நரேன்

நரேன்
சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் சிறுகதைகளை தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்துவருகிறார் நரேன். இவரின் முதல் நூல் 'இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்' மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு 2020-ல் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்ததுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சற்றே பெரிய நல்சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு(நல்). வாய்ப்பமைத்துத் தந்த நரேனுக்கு ப்ரியம். மிலன் குந்தேராவின் சிறுகதைகள் சிலவற்றை நரேன் தமிழுக்குக் கொண்டுவர உறுதி கொள்ள வேண்டுமாய் ‘நம்பாத கடவுளை’ப் பிரார்த்திக்கிறேன்.
சக்திவேல், கோபிசெட்டிபாளையம்
எப்படி மூலக் கதையில், கதைச் சொல்லி “எட்வர்ட்” யின் பிரக்ஞையில் ஊடாடினாரோ, அதே போல், தமிழாக்கம் செய்ததில், நரேன் எட்வர்டாக வாழ்ந்து இருக்கிறார். எப்படியோ உடலும் உள்ளமும் சேர்த்த பசிக்கு கடவுள காரணமாக்கி, எட்வர்ட் தன் அறிவின் தர்க்கங்களை, தன்னறத்தோடு முட்டி மோதி கடைசியில் தன்யிருத்தலை மறந்து மூலத்தோடு உணரும் தருணத்தில், அவன் அகம் மலர்கிறது, அத்தோடு கதையும் முடிந்தது.
பி. ராஜாராமன்,
சிங்கப்பூர்
எட்வர்டும் கடவுளும்
மிக நல்ல சிறுகதை. எட்வர்டின் மன அமைப்பும் ஊழும் அபாரமாக காட்சி படுத்தப் பட்டுள்ளது.
இரண்டு கோட்பாடுகளும் மூன்று மனிதர்களின் வாழ்க்கையையும் இக்கதை சித்தரிக்கிறது.
செசாக்-கோவா கம்யூனிசத்தின் பிரதிநிதியாகவும் ஆலிஸ் கடவுள் நம்பிக்கையின் பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையே இருக்கும் ஒரு ஆணின் மனப்போராட்டமும் வாழ்க்கையின் மாறும் நிறங்களும் இக்கதையை சுவாரஸ்யமாக்குகின்றன. செசாக்-கோவாவும் எட்வர்டும் ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆலிஸ் தான் பாவம் கடவுளுக்கு இழைத்த துரோகத்தால் தண்டிக்கப் படுகிறாள். சற்றும் கருணையற்ற நிகழ்வு தான் ஆலிஸிற்கு நிகழ்கிறது. அது அவளது ஊழ் என அதிலிருந்து அவள் மீண்டிருக்கவும் கூடும்.
கம்யூனிஸம் ஏன் வீழ்ச்சி அடைந்தது? அது மனித சுபாவங்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இலட்சியவாதத்தின் எடையை ஏற்றி விட்டதாலா?
கடவுள் அத்தியாவசிய மற்றவர்தான் ஆனாலும் அவருக்கு மாற்றாக கம்யூனிஸத்தால் எதையும் கண்டடைய முடியவில்லை என்பதாலும் அது தோல்வியுற்றிருக்கலாம்
எட்வர்ட் இரண்டு தரப்பின் எல்லைகளையும் அதன் பாவனைகளையும் கண்டு கொண்டான்.
ஆனாலும் கடவுள் அவ்வப்போது தேவைப் படுகிறார் தான்