பாலியல் விடுதலை

மகிஷாசுரமர்த்தினி, கலம்காரி ஓவியம்

பெண்கள் உரிமை இழப்பதற்கும் அடிமையாவதற்கும் ஆண்களே காரணம் எனப் பெண்ணியக் கவிதைகள் வலியுறுத்துகின்றன. அவை ஆண்களின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி, விலகி முழு விடுதலை அடைவது, சம உரிமை பெறுவது போன்றவற்றுக்கான பல்வேறு வழிமுறைகளைப் பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன. பெண்ணின் ஆளுமையை வளர்த்தெடுக்கப் பெண்ணியக் கவிதைகள் பலவாறு முனைகின்றன. அதற்குப் ‘பெண்மொழி’ பலவகையில் உதவுகின்றது. 

பெண்ணியக் கவிதைகள் படைப்புத்தளத்தில் மட்டுமின்றி இயக்கம் சார்ந்தும் தமது வீச்சினைச் செயல்படுத்த வருவது குறிப்பிடத்தக்கது. எத்தனை பாரதிகளும் பாரதிதாசன்களும் பெரியார்களும் கவிமணிகளும் வந்தாலும் இந்தக் கற்புக் கோட்பாட்டைப் பொதுமைப்படுத்தவே முடியாது என்றே தோன்றுகிறது. இதைப் பொதுமைப்படுத்தவும் இதிலிருந்து விடுபடவும் நவீனப் பெண்ணியக் கவிதைகள் போராடுகின்றன.

பெண்களுக்குப் பெண் உரிமையை அறிவித்தல், மறுக்கப்பட்ட பெண்ணுரிமைகளைப் போராடிப் பெறுதல், அடிமைத்தளையிலிருந்து பெண் விடுதலை பெற வழிகோறுதல் போன்ற பெரும்பணிகளைச் செயல்படுத்த நவீனப் பெண்ணியக் கவிதைகள் எவ்வகையில் பங்காற்றுகின்றன என்பதை அறிய வேண்டியுள்ளது.

  நம் நாட்டில் வாழ்ந்த பழங்காலப் பெண்கள் கல்வியிலும் வீரத்திலும் அரசியலிலும் திறமையுடையோராக விளங்கினர். அப்போது நம் நாடும் செழித்திருந்தது. சுதந்திரமாய் இருந்தது. காலப்போக்கில் பெண்கள் தங்களின் உரிமைகளைச் சிறுக சிறுக இழந்தனர். ஆண்களால் அடிமைப்படுத்தப்பட்டுக் கல்வி, வீரம், அரசியல் போன்ற அடிப்படைத் தளங்களில் புறக்கணிக்கப்பட்டனர். அதனால் நம்நாடு அடிமைப்பட்டது – சுதந்திரமிழந்தது. 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியப் பெண்களில் பெரும்பாலோர் தனிமைத் துயரில் வாடினர் என்றால் அது மிகையாகாது. முகத்திரை அணிந்து, மூட நம்பிக்கைகளில் மூழ்கி, தந்தை – கணவன் – மகன் ஆகிய உறவுடைய ஆண்களை மட்டுமே சார்ந்து, வெளியுலகம் அறியாதவர்களாக, அடக்கி ஒடுக்கப்பட்ட இரண்டாம் தரக் குடிமக்களாகவே பெண்கள் இருந்தனர். தங்களுக்குரிய உரிமைகள் எவை என்றும்கூடத் தெரியாதவர்களாக இருந்தனர். 

அவர்களது அறிவும் ஆற்றலும் வலிமையும் அவர்களின் சுயதேவைக்கும் தன்னலத்திற்கும் இல்லாது சமூகப் பயன்பாட்டிற்கும் சிறிதளவேனும்கூடப் பயன்படுத்தப் பெறவில்லை. அக்காலப் பெண்களின் நிலை குறித்து வாசுகி ஜெயரத்னம்,

“நான்கு சுவர்களுக்கு நடுவில் உழலவிடப்பட்ட கிணற்றுத் தவளைகளாய்க் காலத்தை விழுங்கி வந்தார்கள். பிள்ளை பெறும் எந்திரங்களாய் அப்பிள்ளைகளைப் பேணிப் பாதுகாக்கும் தாதிகளாய்க் குடும்ப வேலைகளைத் தலையில் சுமந்து தள்ளாடித் தவிக்கும் சுமை தாங்கிகளாய் அதுவே சுகம் என எண்ணி நிறைவுகொள்ளும் கூண்டுக் கிளிகளாய் வாழ்ந்து குப்பை கொட்டி நிறைவு கொண்டொழுகினார்கள்” (வாசுகி ஜெயரத்னம், பெண்ணியச் சுவடுகள், ப. 34) என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

கல்வியும் ஞானமும் பொது அறிவாற்றலும் ஆண்களுக்கே உரியதாகவும் பெண்கள் அவற்றைப் பெறத்தக்கவர்கள் அல்லர் என்பது போலவுமான நடைமுறைகள் நாட்டில் நிலவின. ஆணாதிக்கப் பார்வையும் அணுகுமுறைகளும் சமூகத்தை மூளைச்சலவை செய்தன. இதன் விளைவாக அக்காலப் பெண்கள் தொழில் சார்ந்த உழைப்பு, குடும்பப் பணி சார்ந்த உழைப்பு, குழந்தைகளைப் பெறுதல், அவற்றைப் பேணுதல் என இத்தகு பணிகளிலேயே தங்களை முழுவதுமாய் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தனர். 

உலக வரலாற்றில் ஏற்பட்ட கால மாறுதல்களால் பெண்கள் வெளியுலக வாழ்வைப் புரிந்து கொண்டனர். பெண்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கினர். வாழ்வியல் தேவைகள் அவர்களின் அறிவையும் ஆற்றலையும் வெளிக் கொணர்ந்தன எனலாம். அவை, சமூகத்தின் மறுமலர்ச்சிக்குப் பயன்படும் வகையில் வளர்ச்சி நிலையை உருவாக்கத் தொடங்கின. 

இந்திய விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் பெண்களும் தங்களின் எதிர்கால நலன்கருதி அப்போராட்டத்தில் பங்காற்றினர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உழைத்த பெருந்தலைவர்கள், சமூகச் சீர்திருத்தச் செம்மல்கள் ஆகியோரின் உணர்ச்சி மிக்க பேருரைகள், பெண்களின் நெஞ்சங்களைத் துண்டாடியதோடு, பழைய மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பவும் போராடவும் அவர்களைத் தூண்டின. சமுதாய விழிப்புணர்ச்சியும் கல்வி கற்று உயர்தல் வேண்டுமென்ற இலட்சியப் பிடிப்பும் பெண்கள் மத்தியில் கருத்துருவாக ஆழப்பதிந்தன. 

மகரிஷி கார்வே, ஜோதிபாபுலே, சந்தோஷி பாபுலே, சரோஜினி, இராஜாராம்  மோகன்ராய், லோகமான்ய பாலகங்காதர திலகர், காந்தி, வீரேசலிங்கம் பந்துலு, துர்க்காபாய் தேஷ்முக் போன்ற தலைவர்களும் சமூகச் சீர்திருத்தவாதிகளும் பெண்கள் கல்வி கேள்விகளில் ஈடுபாடு கொண்டு சிறந்து விளங்கிட அடிகோலிட்டனர். இதன் விளைவாக, ஆண் – பெண் பேதம் அகன்றிட சுதந்திர இந்தியா, பெண்களுக்குச் சம உரிமை, சம தகுதி, சம தரம், சம வாய்ப்பு எனச் சட்டம் இயற்றியது. 

அறுபதுகளின் முடிவில், கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்தது. பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பிற்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் வளர்ச்சி பெற்றது. எங்கெங்கும் எவ்வெத்துறைகளிலும் ஆணாதிக்கமே செறிந்திருந்த சூழ்நிலையில் மாற்றம் கண்டு, எண்பதுகளில் துறைதோறும் பெண்களின் பங்கும் அவர்களின் இருப்பும் இடம்பெறலும் தவிர்க்க முடியாத நிலையை எய்தியது. பலப்பல துறைகளில் தலைமைப் பொறுப்பேற்று சாதனை படைக்கும் சாதனையாளர்களாகவும் பெண்கள் திகழத் தொடங்கியுள்ளனர். 

அரசியலிலும் பெண்கள் தங்களது தடங்களைப் பதித்து அரிய பல சாதனைகளை நிகழ்த்தி வருவது கண்கூடு. சுயதொழில் புரிந்து தம்மையொத்த பலருக்குப் பணிவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் தொழில் அதிபர்களாகவும் சிறந்த நிர்வாகிகளாகவும் திகழ்கின்றனர். கல்வி, கேள்விகளில் சிறப்புற்று விளங்கும் பெண்மணியர் பலர் தாம் கற்ற கல்வியின் பெரும் பயனைத் துய்ப்பவர்களாக விளங்கி வருவதோடு எதிர்காலத் தலைமுறையினருக்குத் நல்ல வழிகாட்டிகளாகவும் விளங்கி வருகிறார்கள். 

தொண்ணூறுகளுக்குப் பின்னர் குடும்பம், சமுதாயம், நாடு, உலகம் எனப் பெண்களின் சேவைகளும் நற்பணிகளும் உலக நிறுவனங்களில் பன்னாட்டு அரசுகளால் அறியப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, உற்சாகமூட்டப்பட்டு வரும் நிலை உருவாகியுள்ளது. நான்காம் உலக மாநாடு இதனைக் குறிப்பிட்டு துரித வளர்ச்சி காண அறைகூவல் விடுத்துள்ளது. இருப்பினும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்க நிலையிலும்கூட உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள பெண்களின் வாழ்க்கைத் தரம் சமூகத் தகுதிநிலை இதர பிற அனுபவ எல்லைகள் ஏற்றமும் இறக்கமும் இன்பமும் துன்பமும் கலந்த ஒருவகைக் கலப்பு வாழ்க்கை நிலையாகவே தொடர்ந்து கொண்டிருப்பது சிந்திக்கத் தக்கது. 

சட்டப்பூர்வ சமத்துவம், சம வாய்ப்பு, சொத்துரிமை, சுதந்திரக் குடியுரிமை, தங்களது எதிர்காலத்தைத் தாமே நிர்ணயித்துக்கொண்டு தக்க தளம் அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு எனப் பலதரப்பட்ட உரிமைகளைத் துய்க்கும் வழிவகைகளிலிருந்தும் இந்தியப் பெண்கள் தம்மைச் சார்ந்து வாழும் தன்மை, ஏகாந்த நிலை, வன்தாக்குதல், வரதட்சணைக் கொடுமை, சமூக விரோதிகளின் கோரப்பிடி எனப் பலவகை இன்னல்கள் பெண்களைப் பீடித்துவருகின்றன. இவற்றிலிருந்து அவர்களைக் காக்க இந்தியச் சட்டங்கள் பல்வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் அவை உரிய வழிமுறைகளில் செயல்படுத்தப் படவில்லை. 

தங்கள் உரிமைகளைப் பறிமுதல் செய்துவந்த ஆண்களிடமிருந்து தத்தமக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்காலப் பெண்கள் முனைந்து வருகின்றனர். அதனை வெளிப்படுத்தும் வகையில் தமிழச்சி தங்கபாண்டியனின் ‘சுயம்பு’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை உள்ளது. 

ஒரு பெண் தன் கணவனை நோக்கிக் கேட்கும் ஒரு வினா போலவோ அல்லது வினா தொடுத்து விடை அளிக்கும் வகையிலோ இக்கவிதை அமைந்துள்ளது. 

“புறக்கணிக்கின்ற பொறுப்பின்மையுடனோ
இனியும் என்னை அணுக விரும்பும்
உனக்கு ஒரு வார்த்தை” 

(தமிழச்சி தங்கபாண்டியன், வனப் பேச்சி, ப. 76)

எனத் தொடங்கி அப்பெண் தன் கணவனின் அடக்குமுறைகளைப் பட்டியலிட்டு அதற்குத் தன் எதிர்ப்பினை மௌமாகவே முன்வைக்கின்றாள்.

இவ்வாறு கையளித்துவிட்ட பெண்ணின் நிலையை ‘அரூப நிழல்’ என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் உமாமகேஸ்வரி காட்டியுள்ளார். 

“பேசிப் பேசாதிருக்கவும்
பேசாமல் பேசவும் நினைத்து அனைத்தும்
பூசிப் பேச்சின்மையில் மூடியது என்
திறவாத் தாழ் மறுபடி
நீ திறப்பாயோவென்று” 

(உமாமகேஸ்வரி, கற்பாவை, ப. 7)

இவ்வாறு மீண்டும் ஆண்களின் அதிகாரத்திற்குள் சிறைப்பட்ட பெண் தனக்கான விடுதலையை எண்ணிக் காத்திருப்பதாக உமாமகேஸ்வரி தன் கவிதையின் வழியே குறிப்புணர்த்தியுள்ளார். 

உமாமகேஸ்வரி

உரிமைகளை இழந்த பெண்ணுக்கு இந்த உலகமே எதிரிதான் என்ற கருத்தைப் ‘பெருவிரல் உலகம்’ என்ற கவிதையில் எழிலரசி வெளிப்படுத்தியுள்ளார். பரந்து விரிந்த இவ்வுலகம் உரிமை  இழந்த பெண்ணுக்கு மட்டும் சுருங்கியே உள்ளது என்றும் கவிஞர் இக்கவிதையில் குறிப்பிட்டுள்ளார். 

“கால் பெருவிரலைப் பார்த்தே
குறுகிப் போனது பார்வை
என்ன நிமிர்த்தியும்
வளைந்தே போனது முதுகு
சுருங்கிப் போனது உலகம்” 

(எழிலரசி, மிதக்கும் மகரந்தம், ப. 49) 

இக்கவிதை திருமணத்திற்குப்பின் பெண் தன் உரிமைகளை இழப்பதனைச் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், கனிமொழியின் ‘அறம் – 2’ என்ற கவிதை திருமணத்திற்கான சடங்குகளின்போதே ஒரு பெண் தன் உரிமைகள் முழுவதையும் இழந்துவிட நிர்ப்பந்திக்கப்படுகிறாள் என்பதனை வெளிப்படுத்தியுள்ளார். 

“தலையில் 
கையில்
உடலெங்கும் பாரங்கள்
ஏற்றப்பட்டன
நடுங்கும் என் கைகளைப் பிடித்து
யாரோ அழைத்துச் சென்றார்கள்” 

(கனிமொழி, அகத்திணை, ப. 25)

என்று மணமாகிச் செல்லும் ஒரு பெண்ணின் நிலையை உரிமை இழந்த ஓர் அடிமையின் வாழ்வுக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். ‘திருமணம்’ என்பது பெண்ணின் உரிமைகளைப் பறித்துச் செல்லும் ஒரு சடங்கு என்பதைக் கவிஞர் இக்கவிதைவழிக் காட்டியுள்ளார். 

நவீனப் பெண்கள் எவ்வளவுதான் புரட்சிமொழிகள் பேசினாலும் அவர்கள் இறுதியில் ஆணுக்குக் கட்டுப்பட்டுத் தன் உரிமைகள் அனைத்தையும் இழந்து கீழ்ப்படிந்துவிடுவார்கள் என்ற கருத்தினைக் கனிமொழி பின்வரும் கவிதையில் வெளிப்படுத்தி உள்ளார். 

“புதுயுகப் பெண்கள் நாங்கள்
கேள்விகள் கேட்போம்
கொடி பிடிப்போம்
கோசம் போடுவோம்
வலித்துக் கதறுவோம்
புன்னகையோடு
கீழ்ப்படிவோம்” 

(கனிமொழி, அகத்திணை, ப. 32)

‘ஆண்மையச் சமுதாயத்தில் பெண் உரிமை’ என்பது, ஒரு மாயை என்பதனையும் ஆணுக்குப் பெண் என்றும் அடிமையே என்பது யதார்த்தம் என்பதையும் இக்கவிதை உறுதிபடக் குறிப்பிட்டுள்ளது. 

பெண் பற்றிய ஆணாதிக்கக் கருத்துருவங்களும் சமூக, பொருளாதார, உளவியல் நோக்கில் பெண் பாலியலைக் காரணமாக்கி ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும், அமுக்கப்பட்டும் வரும் நிலையையும் ஆய்வு செய்வதன் வழியாகப் பெண்ணிற்கான விடுதலை, மீட்சி பற்றிய கருத்தாக்கத்தை வரையறுக்க இயலும். 

இந்த நிலையில் பெண் உடலை மையப்படுத்தி எழுந்த புனைவுகளும் பெண்ணின் உழைப்புச் சுரண்டல்களையும் மையப்படுத்தி எழுந்துள்ள கவிதைகள் மறுவாசிப்புக்குட்படுகின்றன. இது குறித்து எலைன் ஷோவால்டர் என்பார், “பிரெஞ்சுப் புரட்சியின்போது, எழுந்த ஒரு கருத்தாக்கத்தின்படி, கவிதை, ஓவியம் வரைதல் போன்ற படைப்பாக்கத்தில் பெண்கள் நிலை என்பது புனைவுதான். உண்மையானதல்ல. 

அதாவது, ‘பெண்மையில் இயற்கைக்கு மாறான படைப்பாற்றல் எனக் கருதப்பட்டது. இலக்கியப் படைப்பாற்றல்’ என்பது நேர் எதிரானதாக, உயிர்ப் படைப்பாற்றலைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது” (அரங்க மல்லிகா, தமிழ் இலக்கியமும் பெண்ணியமும், ப. 176) என முதன்மைக் காரணத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். 

நிலவுடைமைத் தோற்றமும் முதலாளித்துவ நிலைப்பாடும் ஆணாதிக்கச் செங்கோலும் தொடர்ந்து அடக்குமுறையைப் பெண்ணின்மீது செலுத்தி வருவதை மரபாகக் கொண்டிருக்கின்றன. இதனால், ஓர் ஆண் ஆணாகவோ, ஒரு பெண் பெண்ணாகவோ இருக்க இயலாதவாறு ஆளுகையும் ஆளுகையின்கீழ் அடங்குதலும் இருந்து வருகின்றபொழுது, சமூகத்தின் ஒரு பிரிவான பெண்களுக்கான பெண்கள் சார்ந்த விடுதலையையும் அவர்களுக்கான மீட்சியையும் தனித்துப் பிரித்து உணர்வது இயலாது.

‘மீட்சி’ என்பது, தம்மீதான கட்டுப்பாடுகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவது எனக் கூறலாம். பெண்ணியக் கோட்பாடானது, பெண்கள்மீது செலுத்திவரும் குடும்ப, சமூக வன்முறைகளை நீக்கி விடுவிப்பதாகப் பொருள் கூறுகிறது. பெண்ணிய நோக்கில் மீட்சி என்பது குடும்ப சமூக நிறுவனங்கள் பெண்ணை அடக்கி ஆளும் அடக்கு முறைகளிலிருந்து மீட்டெடுப்பது எனப் பொருள் கொள்ளப்படுகிறது. 

இத்தகு மீட்சியினைப் பெண்கள் மேற்கொண்டு வருவதனை எழிலரசியின் ‘மீளல்’ என்ற தலைப்பிலமைந்த கவிதை மிக நுட்பமாக, வெளிப்படையாகப் புலப்படுத்தியுள்ளது. 

“சூழ்ந்தது நச்சு வெம்மை
உனது கோரை நீண்டு
அழுத்தியது மேலும்
வேறு வழியில்லை
மீண்டெழுந்தேன் கூராயுதத்தோடு” 

(எழிலரசி, மிதக்கும் மகரந்தம், ப. 29)

குடும்பச் சூழலில் ஓர் அடிமையாக இருத்தி வைக்கப்பட்ட பெண்கள் அகத்தூண்டலால் அடிமைத்தளையை அறுத்தெறியும் விதத்தையும் அவ்வாறு அவர்கள் மீண்டெழும்போது அவர்கள் கைக்கொள்ளும் போராட்டப் பாதை வன்முறை நிறைந்ததாய் இருக்கும் என்பதையும் கவிஞர் இக்கவிதை வழியாகக் குறிப்புணர்த்தியுள்ளார். 

இத்தகு மீண்டெழல்களைக் கனிமொழியின் கவிவரிகளும் சுட்டியுள்ளன. ‘அரங்கம்’ என்ற தலைப்பிலமைந்த கவிதையில், 

“அவள் குரல் வியாபிக்கிறது
காற்றின் திசைகளை

…. ……. ……

வழிமறிக்கும் அலை விலக்கி
நிலவு வழியும் 
மணற் பரப்பில் கால் பதிய
நடக்கிறாள்” 

(கனிமொழி, அகத்திணை, ப. 78)

என்று மீண்டெழுந்த பெண் வர்க்கத்தைக் குறியீடாகக் காட்டியுள்ளார். இத்தகைய மீண்டெழுதல்கள் காலத்தின் கட்டாயமாக, இயல்பாக நிகழ்வதுதான் என்று உமாமகேஸ்வரியின் ‘மீறிய அலைகள்’ என்ற கவிதை சுட்டிக்காட்டியுள்ளது. 

“விழியோரம் மொட்டுக்கள்
துளிர்க்க
எழுகிறேன் அனிச்சையாக
அலைமீறி” 

(உமாமகேஸ்வரி, இறுதிப்பூ, ப. 32)

மீண்டெழுதலையே விடுதலையின் முதற்படி எனப் பெண்ணியலாளர்கள் சுட்டுகின்றனர்.

விடுதலை குறித்து ஹெர்பர்ட் ஸ்பென்சர், “ஏறக்குறைய நான் எது பிரியமானாலும் செய்யலாம் என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலை உள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும். பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தான் விரும்பியதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை” (மேற்கோள் – அரங்க மல்லிகா, தமிழ் இலக்கியமும் பெண்ணியமும், ப. 176)  என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

  பெண்ணியம், பெண்ணின் விடுதலை குறித்து விளக்கும்போது ஆணாதிக்கப் பண்பாடு வரையறை செய்துள்ள பாலின, பாலிய வேறுபாட்டைக் களைந்து ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழவேண்டும் என்று கூறுகிறது. எனவே, விடுதலை, சுதந்திரம் என்ற சொற்களின் அர்த்தக் குறியீடுகள் தளைகளிலிருந்து மீள்வதைக் குறிக்கின்றன. இதுபற்றி இராகுல சாங்கிருத்தியாயன், “சுதந்திரம் என்பதன் அர்த்தம், பெண்கள் வாழ்க்கை நடத்துவதற்குப் பிறருடைய உதவியை எதிர்பார்க்காதிருத்தல் என்பதுதான்” (மேற்கோள் – அரங்க மல்லிகா, தமிழ் இலக்கியமும் பெண்ணியமும், ப. 176)  என்று கூறியுள்ளார். 

பெண் சுதந்திரத்தை இவ்வாறு வரையறுக்கும்போது, பாலியல் விடுதலையும் உள்ளடங்குகிறது. ஆனால், பெண் சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்று ஆணுடன் உறவு கொள்வது ஆணிற்கும் பெண்ணிற்கும் சுகாதாரமானதாகக் கருதுவதற்கில்லை என்பதால் இதைத் தவிர்த்து பெண்ணைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மாயைகளை, அடக்குமுறையை, சுரண்டலைத் தவிர்த்து, மீட்டெடுத்து மட்டும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. 

ஆண் – பெண் இருவரின் நனவு மனம், நனவிலி மனம் ஆகிய இரண்டிற்கிடையே உள்ள உறவினைக்கொண்டு ஆளுமையையும் பண்பையும் தீர்மானிக்கிறது. நனவிலியுடன் தொடர்புறுத்தப்படும் ‘பெண்மை’ பெண்ணின் பாலியல் உறவைக் குறிப்படுத்துகின்றது. நனவிலியானது பண்பாட்டின்மூலம் மனிதன் காணும் புறஉலக அறிகுறிகளையும் நடத்தையையும் பதிவு செய்து கொள்கிறது. இதனால், நனவிலியில் பதிந்துள்ள மறக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட எண்ணங்களும் அனுபவங்களும் பண்பாட்டு விழுமியங்களும் பெண்ணின் ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 

அமுக்கப்பட்ட நனவிலியால் பெண்ணின் ஆளுமையும் அமுக்கப்படுகிறது. பெண்ணின் ஆளுமை என்பது, ஆணிய ஆண் ஆதிக்கப் பண்பாட்டின் வெளிப்பாடாக இருப்பதால் ஆணாதிக்கக் கருத்துருவத்தை உள்முகமாக ஏற்றிருக்கின்றது. இதனை ஆர். டபிள்யூ. கானல் என்பார், “ஆளுமை மற்றும் பண்பு அமைப்புகள் நனவுக்கும் நனவிலிக்கும் இடைப்பட்ட உறவுமுறை, குறிப்பிட்ட கொள்கையின் மேலாதிக்கம் ஆகியன தந்தைவழிச் சமூக அமைப்பின் ஒரு வகையாகக் கருத முடிகின்றது” (மேற்கோள் – அரங்க மல்லிகா, தமிழ் இலக்கியமும் பெண்ணியமும், ப. 72)  என்று எடுத்துக் கூறியுள்ளார். 

இயல்பான ஆளுமை உள்ள பெண்ணாக இல்லாமல் பெண்ணின் ஆளுமை மற்றும் பண்பு அமைப்புக்கள் புறஉலக நடப்புகளால் ஒருமுகப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, ஆண் நுகர்வோராகவும் பெண் நுகர்வுப் பொருளாகவும் புனையப்பட்டு அவளின் ஆளுமை அழுத்தப்படுகின்றது. 

இதுகுறித்து ஜூலியட் மிட்செல்,  “உளப் பகுப்பாய்வு என்பது பெண் எப்படி இருக்கிறாள் என்பதைச் சொல்லவில்லை. ஆனால், உளவியல் சார்ந்த பெண்மைத் தன்மை பற்றிப் புரிந்துகொள்ள உதவுகின்றது” (Juliet mitchel,  psychoanalysis and Feminism,  p. 329) என்று கூறியிருப்பது பொருத்தமாக உள்ளது. எனவே, பெண்மை என்ற பண்பாட்டுப் பின்னணியில் உருவான பின்புலங்கள் பெண்களின் உள, பாலியல் தன்மையில் பெரிதும் ஆண்மை சார்ந்த கருத்துருவங்களை ஏற்பதாக அமைந்துள்ளன. இதனால் பெண்களின் ‘ஆளுமை’, மாற்றம் பெறுகின்றது. 

இத்தகு ஆளுமை பெறாத பெண்களின் வாழ்வு, 

“விடுதலையற்று என்னுள்
விறைத்தது உயிர்
இருத்தலின் அடையாளங்களற்றுத்
தேய்கிறது வாழ்வு” 

(கனிமொழி, அகத்திணை, ப. 56)

என்ற கவிதையின் வழியாக எவ்வாறு கெடும் என்பதனைக் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். 

கனிமொழி

அத்தகு ஆளுமை பெற்ற பெண்களின் வாழ்வு, புதுவகையில் விரிந்து செல்வதாக, மாலதி மைத்ரி, ‘அதனதன் உலகம்’ என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் குறிப்பிட்டுள்ளார். 

“பறவையின் பார்வைக்கு அப்பால்
பாறைக்கு விரிகிறது
தேரையின் இன்னும் ஓர் உலகம்” 

(மாலதிமைத்ரி, சங்கராபரணி, ப. 49)

இக்கவிதையில் பறவை என்பது, ஆணாதிக்கமாகவும் தேரை என்பது பெண்களின் வாழ்வாகவும் குறிப்புணர்த்தப்பட்டுள்ளன. அடிமைப்பட்ட பெண்மை மீண்டெழுதலின் விளைவாகப் புதிய ஆளுமை பெற்றுத் தனக்கான ஒரு புத்துலகைக் கண்டடைவதாகக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய ஆளுமையின் எல்லையற்ற சுதந்திரத்தை, விடுதலையை மாலதி மைத்ரி ‘ஒரு கோப்பைத் தேநீர்’ என்ற கவிதையில் உள்ளுறைக் குறிப்பாகச் சுட்டியுள்ளார். 

“உன்னால் ஏழுகடல் மட்டுமே தாண்டமுடியும்
கோப்பைக்குள் நீ 
அதன் விளிம்புக்கு வெளியே
எல்லையற்ற என்னுடல்” 

(மாலதிமைத்ரி, சங்கராபரணி, ப. 59)

என்று ஒரு பெண் தன் ஆளுமை குறித்து விளக்குவதாகக் கவிதையை அமைத்துள்ளார். 

சமூக உந்துதல்களின் மதிப்பு மற்றும் ஒழுங்கமைவுகள், பெரும்பான்மை ஆணாதிக்கத்தின் வழித்தோன்றல்களாக இருப்பதால் இரண்டு பாலினங்களின் உளவியலையும் அவை பாதிக்கின்றன. ஆனால், ஆணாதிக்கக் கருத்துருவங்கள் ஆணின் உளவியலைப் பாதிப்பதைக் காட்டிலும் பெண்ணின் உளவியல்மீது அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. 

சமூகம், பெண்ணின் மனநிலையை ஆணின் மனநிலைக்கு ஏற்பச் செயல்பட வைக்கிறது. பெண்ணைப் புரிந்துகொண்டு வினையாற்ற ஆணின் சுயம் மறுதலிக்கின்றது. இந்தப் பண்பாட்டுப் புனைவுதான், பெண்ணிற்குப் பலவீனமான மனத்தை உண்டுபண்ணுகிறது. இதனை உளவியலாளார்கள் மனம், உயர்வு மனம், அதீத மனம் என்று கருதுகின்றனர். இதற்கு, “சமூகச் சூழமைவினுடைய ஒழுக்கம், சட்டம், வழக்காறுகள் ஆகியன ஆளுமையை எடுத்துக்காட்டுகின்றன. இதைத்தான் பிராய்டு ‘உயர்மனம்’ என்று கூறுகிறார்” (James U.M.C Connell, Understanding Human Behaviour, p. 497) என ஜேம்ஸ் வி. மெக்கானல் குறிப்பிட்டுள்ளது பொருத்தமாக உள்ளது. 

பிராய்டியக் கருத்தானது ஆண் மேலாதிக்கத்தை மனத்தில் கொண்டு எழுந்தது எனப் பெண்ணியவாதிகளால் மறுப்புத் தெரிவிக்கப் படுகின்றது. 

ரெய்ச் என்பார், உள்ளுணர்வை அமுக்காமல் பாலுணர்வை வெளிப்படுத்தும்போது சமூக மாற்றம் நிகழும், பெண் விடுதலையடைதல் சாத்தியமாகும் எனக் கருதுகிறார். பெண் சுதந்திரமாகச் செயல்பட, பண்பாட்டுத் தடைகள் காரணமாக அமைவதால் பாலியல் செயல்களும் தடை செய்யப்படுகின்றன. இதனால், பெண்ணின் உள்ளுணர்வுகளில் உயர்; மடைமாற்றம் காண்பது அரிதாகிவிடுகின்றது. 

இத்தகைய சூழலில் பெண்கள் தங்களின் வெளிப்பாட்டைச் சுருக்கிக் கொள்கின்றனர். இதனை எஸ். தேன்மொழியின் ‘வாசல்’ என்ற கவிதை,

“என் 
வாசல்கள் ஒவ்வொன்றாய்
மூடிக்கொள்ளத் துவங்குகின்றன” 

(எஸ். தேன்மொழி, துறவி நண்டு, ப. 67)

என்று குறிப்புணர்த்தியுள்ளது. 

பெண் விடுதலைக்கான போராட்டம் கணவன் – மனைவி உறவிலிருந்தே பெரிதும் தொடங்குவதாகக் கருத முடிகின்றது. அதற்கு முதற்காரணமாக எழிலரசி குறிப்பிடும் ‘பொருந்தாத வாழ்வு’ அமைகின்றது. இதனை, 

“தோழியாய் துணைவியாய் 
என் பாத்திரம் மட்டும்
இன்னும் பொருந்தவில்லை” 

(எழிலரசி, மிதக்கும் மகரந்தம், ப. 31)

என்ற கவிதை சுட்டிக்காட்டியுள்ளது. 

இரண்டாவது காரணமாக, இருவருக்குள் நிகழும் மௌன யுத்தம் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனை மாலதி மைத்ரியின் ‘மரணங்கள் உருவாக்கப்படுகின்றன’ என்ற கவிதையின்வழிக் காணமுடிகின்றது. அக்கவிதை, 

“நீயோ நானோ
ஒரு கொலையாயுதத்தின்
விசையில் விரல் பொருத்த
போதுமான காரணங்களைச் சுமக்கிறோம்” 

(மாலதி மைத்ரி, நீரின்றி அமையாது உலகு, ப. 58)

என்று ஒரு மனைவியின் மனவோட்டமாக அமைந்துள்ளது. 

பெண்ணை, பெண்மையிலிருந்து விடுவிக்க முயலும் எழுத்தாக்க முயற்சிகளும் எழுத்தின் நெறிகளும் கையாளப்படுகின்றன. அவற்றில், முழுவெற்றி கிடைத்துள்ளது என்பது ஐயப்பாடாகவே உள்ளது.

எனினும், ‘பெண்ணைப் பெண்ணிற்கே அன்னியப்படுத்தும்’ கட்டுப்பாடான நிலை தகர்க்கப்படுகிறது. பாறைகளுக்குள்ளாக, அடிப்பள்ளத்திற்குள் நிறைந்து கிடக்கும் நீர் கிடைக்கும் துளித்துளி இடுக்குகளின் வழியே விசையுடன் பீறிட்டு வெளிவருதல்போல் முனைப்புடன் வெளிப்படும் நிலை உள்ளது. இதனை,

“இரவுக் கனவுகள்
மனத்தின் உளைச்சல்கள்
விடியல் கனவுகள்
நிஜத்தின் நிழல்கள்” 

(மித்ரா, காற்றின் சிறகுகள், ப. 135)

என்று குறிப்பிடும் மித்ராவின் கவி வரிகளில் கண்டுணர முடிகின்றது.

சமகாலச் சூழலில் பெண் விடுதலையின் நிலை

ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களுடன் இணைந்த சிறுவளையமாகச் சங்கிலித் தொடர் வாழ்வில் இயங்க வேண்டியுள்ளது. தன்னை நிலைப்படுத்தி வாழ்தலின் பொருளை உலகுக்கு வழங்குதல் மூலம் மானுட உலகாக இயற்கை உலகை மாற்ற வேண்டியுள்ளது. 

நிலைப்படுத்த முயலும் உரிமை வேட்கையையும் தனக்கான பகுதியை ஒதுக்க முற்படுவதில் அயலோர் ஆக்கிரமிப்பு நிகழ்ந்துவிடா வண்ணம் மேன்மேலும் பத்திரப்படுத்த முயல்வதில் தனிமைப்படும் சூழலையும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. 

அயலோர் கைக்கொள்ளாதவாறு தனக்கான வெளியைத் தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு தனிநபரும் மேற்கொள்ளும் நுட்பமான போராட்ட இயக்கம் கண்களுக்குப் புலப்படாத வண்ணம் பிரபஞ்ச வெளியில் ஒவ்வொருவராலும் நிகழ்த்தப்பட்ட வண்ணமே இருக்கிறது. 

தன்னைச் சுதந்திரமானவராக நிலைப்படுத்திக்கொள்ள, அயலவர் ஆதிக்கத்தைத் தகர்க்கும் நூதனப் போர், கணத்திற்குக் கணம் நடைபெற்று வருகிறது. விடுதலை வேணவா நிறைந்த கனவுப் பூமியாக ‘மானுட பூமி சுழலுவதன் உள்ளீடு’ மித்ராவின் கவிதை வரிகள் உணர்த்தியுள்ளன. 

உலகுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத ஒரு பார்வையாளரைப்போல கால எல்லையைக் கடந்து மனித இனத்திற்கு வெளிப்புறம் வாசம் செய்பவரைப் போல், நிகழும் வரலாற்றுப் பதிவுகளைப் பரிசீலிப்பவரைப்போல் ‘பாவமற்ற பாவத்துடன்’ வினவும் இப்போக்கு எவ்வித முன்னிறுத்தலையும் கொண்டிருப்பதில்லை. இத்தகு வினாக்களை, 

“இந்நூற்றாண்டு விருட்சங்கள் பாட
பறவைகளை மலர்த்திப் புலருமா?
இல்லை
மரவிழுதுகளில் பறவைகள்
தூக்கிட்டுக் கொள்ளுமா?” 

(குட்டிரேவதி, முலைகள், ப. 41)

என்ற குட்டிரேவதியின் கவிவரிகளில் காணமுடிகின்றது.

குட்டிரேவதி

  பெண் என்பதன் தனித்தன்மையைக் கொண்டாட முயலும் பரிமாணம் காணக் கிடக்கின்றது. ‘பெண்’ணெனக் கொண்டாடுவது பெண்ணுடலையா? தன்னுடலைத் தான் பிறர்போலக் கருதியோ, தனதெனக் கொண்டோ கொண்டாட முற்படும் நிலைப்பாட்டில் ‘முதிர்ச்சியற்ற தன்மை’ உள்ளதென்றும் அது பின்னடைவைத் தோற்றுவிக்கும் அபாயம் உள்ளது என்றும் பெண்ணியவாதிகள் கருதுகின்றனர்.

‘ஆணும் பெண்ணும் எதிரெதிர்’ எனும் கருத்தாக்கத்தைப் புறக்கணிப்பது, இந்நிலைப்பாட்டில் ‘எவரும் எதிரிகள் இல்லையெனில் யாருக்கு நண்பர்கள் தேவை? யாவரும் நண்பரே எனில் போராட்டம் எதற்கு?’ எனும் வினாக்களைச் சுகிர்தராணியின்,

“எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில் 
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறோம்” 

(சுகிர்தராணி, இரவு மிருகம், ப. 27)

என்ற கவிதை அடிகளில் உள்ளீடாகக் காணமுடிகிறது. 

பெண் தன் உடலைக் கொண்டாட வேண்டும். ஆணுடலை நிராகரிக்க வேண்டும் என்பது மாலதி மைத்ரியின் நிலைப்பாடு. ஆண் இல்லாத ஓர் உலகம் சாத்தியமில்லை. ஆண்களின் கட்டுருவாக்கத்திற்கும் கருத்துருவாக்கத்திற்கும் இசைந்ததாய், வாகாய் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்ணுடலைப் பெண்ணே உணர்வதும், கண்ணுக்குப் புலனாகாமல் உணர்வதற்கு மட்டுமே உரிய ஆணாதிக்கத் தளையிலிருந்து உடலை உருவி எடுப்பதும் அதற்கான தேவையும் அதைத் தொடர்ந்த மீளாக்கமும்தான் தன்னுடைய பெண் விடுதலையின் அளவீடு என்பது சுகிர்தராணியின் நிலைப்பாடு ஆகும்.

உடலியல் சார்ந்ததா, உளவியல் சார்ந்ததா, மனநிலைப் பாற்பட்டதா என்று பரிசீலித்தலைவிட வாழ்வியல் சார்ந்து அமையும் விழுமியங்கள் மனித சமூகத்தின் வாழ்தளத்திற்கேற்ப அமைகின்றன. அவை நிர்ணயிக்கும் மரபு, பாரம்பரியம், பண்பாடு எனும் கட்டுமானங்களைப் பொறுத்தே பெண்ணியப் படைப்பிலக்கியத் தடம் வடிவமேற்கின்றது. 

தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரை பெரிய பயணங்களும் அனுபவப் பகிர்வுகளும் பெண்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்துவதாகக் கருதும் குட்டிரேவதி, ‘ஆனால், பெண்கள் பயணம் செய்வதற்கான சாத்தியங்கள் இங்கு மிகவும் குறைவு’ எனக் கருதுகின்றார்.

நமது கோடைகாலம் மிக நீண்டது. உணவு மிகவும் காரசாரமானது. உழைப்பு அதிகம் உடையவர்கள்நாம். மிகவும் உணர்ச்சிபூர்வமான மனிதர்களாகவும் நாம் இருக்கிறோம். மொழி, நிலப்பரப்பு, வெயில் சார்ந்து நம்மிடையே ஏகப்பட்ட பிரிவுகள், மொழிவழியாக உள்வாங்கிக் கொண்ட கற்பிதங்கள் ஏராளம். அவற்றைக் கடக்க முடியாத மனத்தடைகளும் சமூகத் தடைகளும் நம்மிடையே அதிகம் உள்ளன என்று சூழலியல் பரிமாணத்தைத் தொட முயலுவர். இதனைக் குட்டிரேவதியின்,

“தங்களைப் பூக்களாகவோ 
பறவைகளாகவோ எண்ணிக்கொள்ளும்
பெண்கள் நிறைந்த பாழ்மண்டபத்தில்
கண்மூடி எல்லோரும் உற்றுநோக்கும்
ஓர் உருக்கமான மெழுகுவர்த்தி நான்” 

(குட்டிரேவதி, முலைகள், ப. 33)

என்ற கவிதை அடிகளில் காணமுடிகின்றது.

‘மொழி’ என்பது ஆற்றல், வாழ்க்கை, பயன்பாட்டுக் கருவி. இதனை ‘விடுதலையின் அடையாளம்’ என்பர். டேல் ஸ்பென்டர் என்பார், “நாம் வாழும் உலகினை மொழியினால் உருவாக்கிக் கொள்ள அது  நம்மை அனுமதிக்கிறது. படைப்பாக்கச் சுதந்திரத்தை மொழி நமக்கு வழங்குகின்றது. அதே தருணத்தில் அப்படைப்புக் கட்டுமானமே நமக்கான வரையறையாக முன்னோக்கிச் செல்ல இயலாத் தடையாக, அதைக் கடக்க அஞ்சுபவராக நம்மை நிறுத்திவிடுகின்றது” (மேற்கோள் – தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம், ப. 183) என்று மொழியின் இருவேறு செயல்களையும் விளக்கியுள்ளார். 

ஒரு பெண் தனது இருத்தலுக்கான போராட்டத்தைக் கர்ப்பப்பையில் இருந்தே தொடங்க வேண்டியுள்ள காலச் சூழலில் அவள் எப்படி அவளை மறுஆக்கம் செய்துகொள்வது என்ற வினாவுக்கு மொழிவழியே இருத்தலின் அடையாளங்களைப் பதிவு செய்தல் ஒருவகையில் மறுஆக்கம் செய்துகொள்வதுதான் என்பதே விடையாக அமைகின்றது. 

“பேயின் சாயலெல்லாம்
பெண் 
பெண்ணின் சாயலெல்லாம் 
பேய்
பேயின்மொழி
கவிதை
கவிதையின் சாயலெல்லாம்
புனிதவதி
பெண்ணாகி
கவியாகி
பேயாகி
பேயின்மொழி
விடுதலை” 

(மாலதி மைத்ரி, நீலி, ப. 70)

என்று பெண்விடுதலையின் சாத்தியப்பாடுகள் பற்றி மாலதிமைத்ரி தன் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். 

மொழி ஒரு வரலாற்று, சமூகத் தடத்தின் மெய்ம்மைக் கூறு. அதனுள் வளர்ந்து, வாழ்ந்து, பேசி, தனக்கான இருத்தலின் தடயங்களைப் பதிந்து மறைதல் சிலருக்கே சாத்தியப்படுகின்றது. மொழியைப் பழகி, மொழிக்குள் வாழ்ந்து, மொழியைப் பழக்கிச் சுவடின்றி மறைந்தோர் பலர். 

பெண்ணாகி, கவியாகி, பேயாகி, கவிதை ஏற்கப்பட்டு, விடுதலை சாத்தியப்பட்ட பெண் எதிர்கொள்ளும் போராட்டம் அசாதாரணமானது. 

மொழி மனிதர்களையும் பொருட்களையும் மனத்திரையில் தோன்றச் செய்கின்றது. இதனைப் பூடகமாக மாலதிமைத்ரியின்

“உலகமே கண்டெடுக்கப்பட்ட
அருங்காட்சியகமாகத் தன்னைப்
புதுப்பித்துக் கொள்கின்றது
வரலாறுகள் அருங்காட்சியகங்களில்
இருந்து எழுதப்படுகின்றன” 

(மாலதி மைத்ரி, சங்கராபரணி, ப. 64)

என்ற கவிதை குறிப்பிட்டுள்ளது. 

பெண் உடல், பரிபூரணமானது. முழுமையானது, சுதந்திரமானது. ‘ஆதி உடல்’ அதிலிருந்துதான் எல்லாப் பிறப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. பெண் உடலை நுகர்பொருளாகக் கருதுதல், பெண் உடல் தீட்டு, பாவம் என்று ஒதுக்குதல், விமர்சிக்கப்படுகின்றன. பெண் உடலைக் காமுக நோக்கில் காண்பது ஆண்பார்வை, பெண் உடலைக் கொண்டாட வேண்டும். அங்கீகரித்து உரிய மதிப்பை வழங்க வேண்டும் எனும் முழக்கம் தமிழ்க் கவிதைப் படைப்புத்தளத்தில் ஏற்பட்டிருப்பது பெண்ணிய அழகியலே ஆகும். 

‘நான்’ என்று பெண் பேச மொழி, தளம் அமைத்தல் வேண்டும். இருத்தலைப் பதிவதாக அது பெண்ணுக்கு இடமளிக்க வேண்டும். 

மரியாகன் மோரிசு என்பார், “எங்ஙனம் பெண் இருக்க வேண்டும்? எனும் வரையறை மதிப்பீடுகளைத் திணிக்கும் கருவியாக ஆணின் ஆதிக்கச் சாட்டையாக இருத்தல் கூடாது” (மேற்கோள் – தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம், ப. 185) என்றும், அட்ரீன் ரிச் என்பார், “பெண்களுக்கு இடையே ஒரு புது உலகை உருவாக்குவதாகவும் புது இயங்கு வெளியை அமைப்பதாகவும் மொழி இருத்தல் வேண்டும்” (மேற்கோள் – தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம், ப. 185) என்றும் வலியுறுத்தியுள்ளனர். இக்கருத்தினை, 

“உனது சிமிழுக்குள் அடைபட்ட
கிளியல்ல உயிர் – அது
விசையற்ற கோளம்போல்
அலைந்து கொண்டிருக்கிறது
உன்னால் ஏழுகடல மட்டுமே தாண்டமுடியும்
கோப்பைக்குள் நீ – அதன் 
விளிம்புக்கு வெளியே
எல்லையற்ற என்னுடல்” 

(மாலதி மைத்ரி, சங்கராபரணி, ப. 59)

என்ற கவிதையில் மாலதிமைத்ரி குறிப்பிட்டுள்ளார். 

அகவுணர்வுகளைப் பெண் வெளிக்காட்டாமல் மனத்திற்குள் ஒளித்து வைக்கப் பரிந்துரைப்பது எங்ஙனம் மொழியாக முடியும்? வரம்பற்ற சுதந்திரத்தை ஒரு பாலினருக்கும் முடிவற்ற மௌனத்தை இன்னொரு பாலினருக்கும் கொடையாக வழங்குதல் ஒடுக்குதலின் வெளிப்பாடே ஆகும். இதனைச் சுகிர்தராணி, 

“வானத்தின் ஓட்டை வழிய
உருகி வழிகிறது
இன்னொரு உலகத்தின்
ஒளிச்சாறு” 

(சுகிர்தராணி, இரவு மிருகம், ப. 45)

என்ற தன் கவி அடிகளில் நம்பகத்தோடு முன்வைத்துள்ளார்.

  ‘உள்ளொளி’ உள்ள படைப்பு மட்டுமே காலம் எனும் கூற்றை வென்று நிலைத்து இருக்கும். குறைந்த அளவில் சொல்லி வாசிப்பவர்களைச் சிந்திக்கவும் விரிவுபடுத்திக் கொள்ளவும் ஏற்ற மாதிரி இடம் கொடுத்து விடுவதைச் சாத்தியப்படுத்தும் அற்புதம் கவிதைப் படைப்பில் கைகூடிவிடுகின்றது. 

உலகின் ஊடாக உணரும் அடிக்கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு. உணர்வுடையோர் உணர்ந்து கொள்ளலாம். உணர்ந்ததை உணர்ந்தவாறு உரைக்க வாய்ப்பற்றதாக மொழி இருக்கும்வரை பெண்ணின் மொழிப் பயன்பாடு வடிவற்று, நினைவும் உணர்வும் புரட்சிகரமானதாகக் காட்சி தருமே அல்லாமல் மாற்றுக் கட்டுமானக் கட்டமைப்பாக உருப்பெற இயலாது. 

“நீர்ப்பரப்பின் மேலே 
நங்கூரத்துடன் கட்டப்பட்ட
மிக நுண்ணிய சொற்களின்
ஓயாத நடனம்
கடலாடச் செல்லும் பெண்கள்
மிதக்கும் சொற்களைக்
குலைத்து அடுக்கிய நீர்ப்படலத்தில்
கடல் பற்றிய
கூட்டுக் கவிதையை
எழுதிப் பார்க்கின்றனர்” 

(மாலதி மைத்ரி, நீலி, ப. 37)

‘கூட்டுக்கவிதை’ எவ்வித விருப்பத் தேர்வையும் முன்னிறுத்தவில்லை. கடலாடச் செல்லும் பெண்களது வேறுபாடுகளைப் புறமிருத்தித் தூய பதிவைத் தூக்கிப் பிடிக்க முயலுகிறது. எல்லாச் சூழல்களையும் சமனப்படுத்தும் விளியற்ற நோக்கை காலவெளிக்குச் சிக்காத உலகைப் பதிவு செய்கின்றது. 

“மௌன மென்பது
சொற்களடர்ந்த மொழி
மொழியென்பது 
உணர்வு தளும்பும் மௌனம்” 

(குட்டிரேவதி, முலைகள், ப. 53)

தன் இருப்பைத் தொலைவில் வைத்து, தான் அதில் எவ்விதத்திலும் தொடர்பு கொண்டிராதவராக நடிப்பதும், அந்நடிப்பினை நியாயப்படுத்தவல்ல காரணங்களைக் கற்பிக்க முயலுவதுமான நடத்தையை, ஒருவிதப் பாவனையை, ஒவ்வொருவரும் நிகழ்த்தினாலும் ஒருவரும் தன்னுடையது என்று உரிமை கொண்டாட முன்வராத ஒழுங்கமைவே ‘அழகியல்  நடத்தை’ ஆகும்.

கவிதைக்குள், படைப்பு வெளிக்குள் சிக்காது விலகும் சொற்கள், எல்லாப் பெண்களின் அனுபவத்தையும் உள்ளடக்கிய சட்டகத்தைத் தளமாக வைத்துப் புனைவு வெளியை உருவாக்க வேண்டும். 

உள்ளுக்குள் உள்ள ஆற்றலை உணர்தல், மிகுந்த ஆற்றல், பொருள் ஆழத்தில் இணைந்து பெண்ணியத் தளத்தில் தன்னை அறியும் உந்துதலாக உருவம் கொள்கிறது. 

எழுதுதல், எண்ணும் எண்ணங்களின் உண்மையைப் பதிவாக இருப்பது மட்டும் அல்லாது கையாளும் மொழியின் உள்ளீட்டுப் பதிவாகவும் அமைய வேண்டி உள்ளது. 

“உச்சரிக்கப்படாத 
ஒரு சொல்லாய்
நீ இருந்தாய்
உன் இருப்பின் பிரமாண்ட
பேரமைதியில் அதிர்வுற்று
உன்னை விளித்த அக்கணம்
உன் மௌனக் கார்வை
உன்னைச் சிருஷ்டிக்கும்
மந்திரமெனில் காலம் மனம் கொள்ளும்” 

(மாலதி மைத்ரி, சங்கராபரணி, ப. 50)

தளரும் மனத்திடம் ‘விலகும் அவா, விடுபடும் உள்ளார்ந்த இலக்கு, கடந்த காலச் சுழற்சி, நினைவுறுத்தும் கூறுகள், நிகழ்வெளியைக் கடக்கும் குழப்பம், இவை யாவும் இணைதல் காணத்தக்கது. பொருளற்ற வாய்ப்பு மறுக்கப்பட்ட வாழ்வில், தீண்ட முடியாத தொலைவில் விடுதலை எனும் நிலையில் எதன் ஊடாகவோ தனதை எப்படியேனும் வெளிப்படுத்திக்கொள்ள அலைபாய்கையில் அகத்தும் புறத்தும் தானேயாக வடிவம் தரித்தல் வெகு இயல்பாக நேர்ந்துவிடுவதை மாலதிமைத்ரி உணர்த்துகிறார். 

மனிதச் சூழலில் எதிர்கொள்ளும் வேறுபாடுகள், படைப்பாளரது படைப்பில் கருத்தியலாக இடம்பெறுகையில், ஏற்கப்பட்டுக் கலைவடிவம் பெறுகிறது. ஆழகியல் நியாயப்படுத்தல் படைப்பாளரது இலக்காதல் ஒருபுறம். தன்னுள் கனலும் தீக்கனலைத் தொடர்பு ஊடக வாயிலாகச் சொல்லுதலோ, அப்படைப்பாக்கத்தின் அழகு தரப்படுத்தப்பட்ட கதைக் கூற்றாலோ மெருகேற்றப்பட்ட நடையமைப்பாலோ கையாளப்பட்ட படிமங்களாலோ அளந்து தரநிர்ணயப்படுத்தல் பொருளற்றது. மரணமோ, துயரமோ, அநீதியோ, வியர்வை சிந்தலின் உழைப்புத் துயரங்களோ, களைத்த மனத்தின் நிராசைகளோ, யாதாயினும் படைப்பு மனத்திலிருந்து விடுபட்டு வாசிப்பு மனத்தினுள் புக முடிதலின் சாத்தியப்பாடே பெண்ணிய அழகியல் பெறமுடியும். 

போர், நலிவு, சுரண்டல், ஆதிக்கம், ஒடுக்குதல் போன்றவை நிகழ்ந்ததை எவ்வழியிலும் நிறுத்திட வழிதராது கடந்தகாலம் எனினும் நலிவுற்றவரது மனத்தில் துயரப்படிமங்களிருத்தலையும் அவற்றின் அளவுகளையும் அறிதல், நம்மிடையே நலிந்தவர் இருப்பாராயின் அவரது வாழ்முறையை விடுவித்தல் எனும் இலக்குகள் தரித்துக்கொள்ளும் வடிவமே பெண்ணியப் படைப்பாகிறது. 

மாலதி மைத்ரி

‘கவிதை’ என்பது, பூரணமான படைப்பு. பெண்ணியக் கலை வடிவங்களில அதுவும் ஒன்று. எழுதுபவரின் ஆளுமையின் வெளிப்பாடு. காலம் என்பதன் சுவட்டிலிருந்து விடுபட்டு, காட்சிப்படுத்துவதிலும் மொழியைக் கையாளுவதிலும் சுதந்திரமான போக்கைக் கையாண்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். 

விடுதலையை நோக்கிய இயக்கம், ‘பெண்ணிய இயக்கம்’. இதன் புரிதல்கள் ஒருபோதும் முற்றுப்பெறாதவையாகத்தான் கிளர்ந்தெழுகின்றன. பெண்ணிய இயக்கம் தூலமானது. மனிதர்களை, வாழ்வியலை, பண்பாட்டை, சமயத்தை, கலையை, இலக்கியப் படைப்புகளை, ஆசைகளை, சகமனிதர்களுடன் கூடிய உறவை, அதில் ஆட்சி செய்யும் ஆதிக்க அரசியலை வென்று உலகின் எல்லாவிதக் கட்டமைப்பகளையும் பரிசீலிக்கக்கூடிய வாய்ப்புக்களைக் குறையப்பெற்று ‘வெளிப்படையான தூல வடிவத்தினது’ எனும் நிலை மாற்றம் கண்டுள்ளது. 

பெண்ணியக் கவிதைகளில் இலக்கியம், வாழ்வியல், வரலாறு என்பவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளி அகல்கின்றது. வரைவிலக்கண நியதிகள் உடைபடுகின்றன. பிரதிவாசிப்பும் பிரதியின் ஊடே பயணித்துச் செய்யும்  மறுவாசிப்பும் சம அளவில் வேண்டப்படுகின்றன. 

காரணம், வரலாறோ, இலக்கியப் படைப்போ யாதாயினும் விவரித்தலாகத்தர்னே வடிவம் ஏற்கிறது. விவரித்தலின் வாழ்வியல தளம் சார்ந்ததாக இருக்கையில் ‘கலைத்து அடுக்கப்படும் மாறா எண்ணிக்கை உடைய அதே குறியீடுகளைக் கொண்ட சீட்டுகளாய் அமைவதுபோல் ஒருமித்த பாவத்தைப் பெறுகிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வெவ்வேறு பொருண்மைகளைப் புலப்படுத்தும் நிலை பெண்ணிய எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. 

“வீடெல்லாம் என் கண்கள
வீடெல்லாம் என் கால்கள்
ஆனால், 
எல்லாக் கண்களும் இரவல் கண்கள்
எல்லாக் கால்களும் மரக் கால்கள்
மரப்பட்டையாய் நான்” 

(கோ. தான்யா, என்றாவது ஒருநாள், ப. 24)

வாழ்வியல் முரண்களைக் களையும் முயற்சிகளில் கண்டடைவது விழுந்துபடும் அனுபவங்களது தொடர்ச்சிகளும் உள்ளிருந்து மீண்டும் விழவே முடியாத நிலையைப் பெறுதல், ‘விழுவதின் மூலமே சாத்தியப்படும்’ என்பதும் உள்ளுணர்வால் உணர்த்தப் பெற்று, பெண் வாழ்வின் இரவல் தன்மையை இனம் காட்டுகிறது.

தான் தன் காலில் நிற்றல் என்பது உணர்வு ரீதியிலும் உறவியல் தளத்திலும் சாத்தியப்படுதலில் உள்ள கடினம் புலப்படுத்தப் படுகின்றது.

பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுதல், இன்றைய பெண்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளினால் கைகூடியிருக்கும் தருணம் இது. அதுவே, பெண்ணை, தன்னையும் தன் சுயத்தையும் பரிசீலிக்கத் தூண்டுகிறது. 

வாழ்விற்கும் மரணத்திற்கும் இடைப்பட்டது வாழ்க்கை. கண்ணுக்குப் புலப்படுவனவற்றின் ஊடு சென்று பயணித்தலில் பெற்ற வாழ்வியல் அனுபவங்களின் பதிவுகளாய்க் கவிதைகள் அடுத்தவரது வாசிப்பிற்கும் அர்த்தமளிக்கின்றன. ஒன்றுபடுதல், துண்டுபடுதல், இரண்டுபடுதல் எனும் நிலையில் வாசிப்பு அனுபவவெளி பெண்ணியக் கவிதையில் தவிர்க்க இயலாததாய் விரிகின்றது.

பெண்ணை, ‘பெண்மை’யிலிருந்து விடுவித்தல், வாய்பேசாது அமைதியாய் இருக்கும் பண்பாட்டைத் தகர்த்தல், வேறுபாடுகளையும் இடைவெளிகளையும் இனம் காணுதல், வினாவிற்குட்படுத்துதல், விடைகாண முற்படுதல் எனும் பரிமாணங்களுடன் தமிழ்ப்  பெண்ணியப் படைப்புலகு இயங்கி வருகிறது.

கனிமொழி, மாலதிமைத்ரி, குட்டிரேவதி, லீனா மணிமேகலை, சல்மா, அ.வெண்ணிலா, தாமரை, இளம்பிறை போன்ற தமிழ்ப் பெண்ணியக் கவிஞர்களிடம் கவிதைக் கட்டமைப்புச் செய் நேர்த்தியைவிட அறிவுப் புலப்பாட்டியலில், உணர்வியலில், அழகியல் கூறுகளை உள்ளடக்கிய உள்ளீட்டுப் பெண்ணியப் பதிவுகளை உணரமுடிகிறது.

***

உதவிய நூல்கள்:

  1. வாசுகி ஜெயரத்னம், பெண்ணியச் சுவடுகள்,
  2. தமிழச்சி தங்கபாண்டியன், வனப் பேச்சி,
  3. உமாமகேஸ்வரி, கற்பாவை,
  4. உமாமகேஸ்வரி, இறுதிப்பூ,
  5. எழிலரசி, மிதக்கும் மகரந்தம்,
  6. கனிமொழி, அகத்திணை,
  7. அரங்க மல்லிகா, தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்,
  8. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி – 2,
  9. Juliet Mitchel,  Psychoanalysis and Feminism,
  10. மாலதி மைத்ரி, சங்கராபரணி,
  11. மாலதி மைத்ரி, நீரின்றி அமையாது உலகு,
  12. மாலதி மைத்ரி, நீலி,
  13. James U.M.C Connell, Understanding Human Behavior,
  14. எஸ். தேன்மொழி, துறவி நண்டு,
  15. மித்ரா, காற்றின் சிறகுகள்,
  16. குட்டிரேவதி, முலைகள்,
  17. சுகிர்தராணி, இரவு மிருகம்,
  18. மு. திலகவதி, மனிதனே மனிதனாக இரு,
  19. லீனா மணிமேகலை, ஒற்றையிலையென,
  20. லதா, பாம்புக் காட்டில் ஒரு தாழை,
  21. தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம்,
  22. கோ. தான்யா, என்றாவது ஒருநாள்,
  23. வேதநாயகம் பிள்ளை, பெண்மதிமாலை,
  24. ஆண்டாள் பிரியதர்சினி, முத்தங்கள் தீர்ந்துவிட்டன,
  25. மைதிலி, இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்,
  26. சல்மா, பச்சைத் தேவதை,
  27. அமுதா, விழி தேடும் வழி,
  28. இளம்பிறை, முதல் மனுஷி,
  29. ஜெயசீலி, கவிப்புறா,
  30. முனைவர் ப. சரவணன், நவீனப் பெண்ணியம்,

ப. சரவணன்

முனைவர் ப. சரவணன் (மே 14, 1978) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இலக்கிய ஆளுமைகளைப் பற்றிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop