மேக்கியின் பரிசு : ஓ. ஹென்றி

தமிழில்: கோ. புண்ணியவான்

[புகழ்பெற்ற செவ்வியல் கதைகள் மொழிபெயர்ப்பு வரிசை]

ஒரு டாலர் எண்பதேழு காசு. அவ்வளவுதான் எஞ்சியது! கொஞ்சம் இறைச்சியையும், உணவுப் பொருளையும் வாங்க ஒற்றைகாசு ஒன்றை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைத்தாள், இன்னொரு காசையும், கடைசியாய் மேலுமொரு ஒற்றைக் காசையும் றதில் சேர்த்தாள். டெல்லா மும்முறை அதைத் திரும்பத் திரும்ப எண்ணினாள். மறுநாள் கிருஸ்த்துமஸ் பண்டிகை.

படுக்கையில் சாய்ந்து அழுவதைத் தவிர வெறொன்றும் செய்ய முடியவில்லை அவளால்! டெல்லா அதைத்தான் செய்தாள். அந்த வீட்டைக் கவனித்தால் ஒரு விடயம் புலப்படும், அவ்வீட்டின் இல்லாள் கிருஸ்துமஸ் நெருங்க நெருங்க அமைதியாகிப் போனாள்.  தளவாடப் பொருட்களோடு சேர்த்து அவர்கள் வசிக்கும் அறைக்கு, ஒரு வாரத்துக்கு எட்டு டாலர் கட்டணம். அதைப்பற்றிச் சொல்ல அதிகம் ஏதுமில்லை!

கீழே உள்ள விருந்தினர் அறையில் கடிதங்கள் வைக்க ஒரு சின்ன பை மாட்டப்பட்டிருக்கும். வீட்டுக்கு அழைப்பு மணியும் உண்டு. ஆனால் அது பழுதான ஒன்று. கதவில் பெயர் பலகை உண்டு. திரு. ஜேம்ஸ் டிலிங்ஹம் யாங்.

அவர் $30 சம்பளம் பெற்றபோது கதவில் மாட்டப்பட்டு காற்றில் ஆடிய பெயர்ப்பலகையில் அவரின் பெயர்   ஜேம்ஸ் டி லிங்ஹம் யாங் என்றே நீளமாக எழுதியிருந்தது. அந்த வருமானத்தில்  அவருடைய வாழ்க்கையும் சுபீட்சமாக இருந்தது. தற்சமயம் அவருடைய வருமானம் $20 ஆகக் குறைந்துவிட்டது அதற்கேற்ப அப்பெயர் பலகையில் அவர் பெயரும் வெயிலிலும் மழையிலும் மங்கி டி லிங்கம் என்றே சுருங்கிக் கிடக்கிறது. டிலிங்கம் வேலை முடிந்து வீடு வந்து சேரும்போது  ‘ஜிம்’ என்று அன்போடு அழைத்து கட்டி அணைத்துக்கொள்வார் அவரின் இளம் மனைவி. நீங்கள் அவளைச் சந்தித்திருக்கலாம். அவள் பெயர் டெல்லா.

அழுது முடித்ததும் டெல்லா கண்ணீரின் வடு தெரியாதவாறு முகத்தைத் துடைத்துக்கொண்டாள். சன்னலருகே நின்று தெருவை சுரத்தில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். நாளை கிருஸ்த்துமஸ் திருநாள். அவள் கையில் இருந்தது வெறும் $1.87 காசு மட்டுமே. இந்த சொற்ப பணத்தை வைத்துதான் ஜிம்முக்கு கிருஸ்துமஸ் பரிசு வாங்கியாக வேண்டும். பல மாதங்களாக அவள் சிக்கனமாக இருக்க முயன்றும், சேமிக்க முடிந்த பணம் இச்சிறிய தொகைதான்! ஒரு வாரத்துக்கு $20 என்பது அதிகம் இல்லை. பொருட்களின் விலை அவள் எதிர்ப்பார்த்தது போல இல்லை. எல்லாமே விலை ஏறிப்போயிருந்தது. இது வழக்கமாக நடப்பதுதான்.

ஜிம்முக்கு கிருஸ்துமஸ் பரிசு வாங்க கையிலிருப்பது $1.87 காசு மட்டுமே. ஜிம்முக்குப் பரிசு வாங்கவேண்டும் என்ற என்ணமே அவளை  பல மணி நேரம் மகிழ்ந்திருக்கச் செய்திருக்கிறது. தான் அவனுக்குரியவன் என்ற கௌரவத்துக்குப் சமானமான தரமான ஒரு பரிசை வாங்கிவிடவேண்டும்.

அறைச்சுவரில் சன்னலுக்கருகே ஆளுயர நிலைக்கண்ணாடி இருந்தது. இந்த $8.00 வாடகை அறையில் இது போன்ற கண்ணாடி ஒன்றை நீங்கள் பார்த்திருக்கலாம். அது ஒரு மிகக்குறுகிய ரசம் போன கண்ணாடி. அக்கண்ணாடியில் ஒரு நேரத்தில் ஒருவர் ஒரு பகுதி பிம்பத்தை மட்டுமே பார்க்க இயலும். அவள் ஒல்லியாக இருப்பதனால் தன் உருவத்தை எளிதில் பார்த்துவிடமுடிகிறது. டெல்லா மெலிந்த உடலமைப்பு கொண்டவளாததால் அப்படிப் பார்க்கும் கலை அவளுக்கு எளிதில் கைவந்திருந்தது.

சட்டென்று ஒரு யோசனை வர, அவள் சன்னல் பக்கமிருந்து நகர்ந்து அக்கண்ணாடியின் முன் வந்தாள். அவள் விழிகள் உடனே ஒளிர்ந்தது, ஆனால் அடுத்த கணம் அவள் முகம் கலையிழந்துகொண்டிருந்தது. முடிந்திருந்த கொண்டையை அவிழ்த்து  தலை முடியை சரிந்துவிழச் செய்து தொங்கவிட்டுப் பார்த்தாள்.

திரு திருமதி ஜேம்ஸ் டிலிங்கம் தங்களிடமுள்ள இரு உடமைகளில் பெருமை கொண்டிருந்தனர். ஒன்று ஜிம்முக்குச் சொந்தமான தங்கக் கடிகாரம். ஒரு காலத்தில் அது அவருடைய தந்தைக்குச் சொந்தமான ஒன்றாக இருந்தது. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அது அவருடைய அப்பாவின் அப்பாவுக்கு உரிமையானதாக இருந்தது. இன்னொன்று டெல்லாவின் அழகிய கேசம்.

ஒரு வேளை அரசி ஒருவர் அவள் அறைக்குப் பக்கத்தில் வசித்திருந்தால், அந்த அரசியின் பார்வையில் படும்படி அவள் கேசத்தை அலசிச் சுத்தம்செய்து உலரவைத்து கோதி அழகு காட்டியிருப்பாள். எந்த அரசியின் விலைமதிப்பற்ற நகைகள், பரிசுகளைவிடவும் பன்மடங்கு அழகானது தன் தலைமுடி என்று டெல்லாவுக்கு ஏகப்பட்ட பெருமை. அதே வீட்டில், எல்லா செல்வமும் பொருந்திய அரசன் ஒருவன் வசித்திருந்தால், அவர் எதிரில் வரும்போதெல்லாம் ஜிம் தன் தங்கக் கடிகாரத்தையே பலமுறை திரும்பத் திரும்பப் பார்த்துப் பரவசமடைந்திருப்பார். எந்த அரசரும் தன் தங்கக் கடிகாரத்துக்குச் சமதையான விலை மதிப்பற்ற பரிசு வைத்திருக்க வாய்ப்பில்லை!

டெல்லாவின் அழகிய தலைமுடி பொன் வண்ணத்தில் மின்னும் நீர்வீழ்ச்சிபோல விழுந்து கிடந்தது.  அது அவள் கால்முட்டி வரை நீண்டு தொங்கி அலைந்தது. கிட்டதட்ட அது ஒரு ஆடையெனவே அவளின் உடலை மூடி அலங்கரித்திருந்தது. பின்னர் பதட்டத்தோடும் விரைவாகவும் மீண்டும் தன் அடர்ந்த கேசத்தை  தன் தலைக்கு மேல் குவித்துப் பார்த்தாள். சற்று நேரம் பந்துபோல திரண்டு சுருண்டிருக்கும் அதனையே திகைப்புடன் அவதானித்தாள். அவள் பிடியிலிருந்து ஓரிரு இழைகள் வழுக்கி அவள் முகத்தின் குறுக்கே நீண்டு தொங்கின.

அதனை தன் சொக்லேட் நிற கோட்டின் மீது போட்டுப் பொருத்தமாக இருக்கிறதா என்று பார்த்தாள். பின்னர் தன் சோக்லேட் நிற தொப்பியோடு இணைத்துப் பார்த்தாள். அவள் விழிகள் மகிழ்ச்சியில் சுடர, தன் வீட்டுக் கதவைத் திறந்து வெளியேறி தெருவில் நடந்தாள். ஓரிடத்தில் நின்று ஒரு விளம்பரப் பலகையில், ‘திருமதி ஸோப்ரோனியின் முடி அலங்காரப் பொருட்கள்’ என்று எழுதியிருந்ததைப் படித்தாள்.

விடு விடுவென்று மேல் மாடி ஓடி மூச்செறிய நின்றாள். திருமதி ஸோப்ரோனி வெண்மை நிறத்தில் நல்ல உயரங்கொண்ட, கவர்ச்சியான விழிகளோடு டெல்லாவை ஏறிட்டாள்.

“என் தலைமுடியை வாங்கிக்கொள்கிறீர்களா?” டெல்லா கேட்டாள்.

“நான் முடியை வாங்குபவள்தான்,” என்று பதிலிறுத்தாள் ஸோப்ரோனி. “உன் தொப்பியைக் கழற்றி உன் முடியைத் தொங்கவிட்டுக் காட்டு பார்ப்போம்,”

அந்தத் பொன்னிறத்திலான நீர்வீழ்ச்சி சரிந்து தொங்கியது.

கால் முட்டிவரை தொங்கிய முடியை முன்கையால் தூக்கி அதன் கனத்தைக் கணக்கிட்டுவிட்டு, ”$20 தருகிறேன்,” என்றாள்.

“சீக்கிரம் கொடுங்கள்” என்று பரபரத்தாள் டெல்லா. அடுத்த இரண்டு மணி நேரம் அவள் மகிழ்ச்சியில் பறப்பதை உணர்ந்தாள். ஒரு கடையிலிருந்து அடுத்தடுத்த கடைகளுக்கு ஓடி ஓடி ஜிம்முக்கான பரிசைத் தேடியபடி இருந்தாள்.

கடைசியில் ஒரு பரிசைக் கண்டடைந்தாள். இது பிறரைவிடவும் ஜிம்முக்காகவே தயாரிக்கப்பட்டது போலிருக்கிறது. அவள் அந்தப் பட்டணம் முழுவதும் தேடி அலைந்துவிட்டாள். இதுபோன்று ஒன்று வேறு கடைகளில் இல்லவே இல்லை.

அது பொன்னிறத்திலான கடிகாரச் சங்கிலி. மிக எளிமையான வேலைப்பாடு கொண்டது. அதன் மதிப்பு அதன் அசலான தன்மையிலும், நேர்த்தியான வேலைப்பாட்டிலும் மிளிர்ந்தது. அதன் எளிமையும் தூய்மையுமே அது விலையுள்ள பொருள் என்று சொல்லிவிடும். எல்லா நல்ல பொருட்களும் இவ்வாறான தன்மைகள்கொண்டதுதானே.

அவரின் தங்கக் கடிகாரத்துக்கு இது மிக அழகாகப் பொருந்தும்.

அதனைப் பார்த்த கணத்தில் இது ஜிம்முக்குப் பிடிக்கும் என்று முடிவெடுத்தாள். இது அவர் குணத்துக்கு ஒப்பானதுதான். அமைதியும் தரமுமிக்கது, இது ஜிம்முக்கும் அவரின் கடிகாரத்துக்கும் சாலப் பொருந்தும். அவள் அதற்கு இருபத்தோரு டாலர் கொடுத்தாள். அந்தச் சங்கிலியோடும் மீதம் இருந்த எண்பத்தேழு காசோடும் வீட்டுக்கு விரைந்தாள். அந்தச் சங்கிலி அவரின் கடிகாரத்தோடு இணைக்கப்பட்டதும், அவர் அதனை அணிந்துகொண்டு இனி எங்கிருந்தும் நேரம் பார்க்கலாம். அது அழகிய கடிகாரமாக இருந்த போதிலும் இத்தனை நாளும் சங்கிலி இணைப்பின்றியே கிடந்தது இத்தனை காலமும்! இதுநாள் வரை அவர் மணி பார்க்க நேரும்போதெல்லாம்  பாக்கெட்டிலிருந்து ரகசியமாக எடுத்துப் பார்த்துவிட்டு யாரும் பார்ப்பதற்கு முன் அதனைத் திரும்ப அங்கேயே வைத்துவிடுவார்.

வீடு வந்து சேர்ந்ததும் அவள் மனம் நிம்மதியடைந்தது. அவள் தர்க்கப்பூர்வமாக சிந்திக்கத் தொடங்கினாள். அவளின் செய்கையினால் உண்டான வெறுமையையும், முடியிழந்த தழும்புகளையும் அவள் மறைக்க முயன்றுகொண்டிருந்தாள். அன்புடனும் பெருந்தன்மையுடனும்  வழங்கப்படும் பரிசு மனதில் ஆழமான தடங்களை உண்டாக்கும். அதனை மறைப்பது அவ்வளவு சுலபமல்ல நண்பர்களே, ஒருபோதும் சுலபமல்ல!

நாற்பது நிமிடத்துக்குப் பின்னர் அவளின் தலையின் தோற்றம் தேவலாம் போலிருந்தது. அந்தக் கிராப்பு வெட்டில் அவள் பள்ளி மாணவன் போல அழகாக இருந்தாள். நெடு நேரம் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஜிம் என்னைக் கொல்லாமல் இருந்தால் சரி!” அவள் தனக்குத் தானே சமாதானப்படுத்திக்கொண்டாள். என்னைக் கூர்ந்து பார்ப்பதற்கு முன், நீ சில்லறைக்காக ஆடிப்பாடும் பள்ளிச் சிறுமி போல இருக்கிறாய் என்று சொல்லிவிடுவார். இந்த ஒரு டாலர் எண்பத்தேழு காசை வைத்துக் கொண்டு நான் என்னதான் பெரிதாய் சாதித்துவிட முடியும்?

மாலை மணி ஏழுக்குள் ஜிம்முக்கான இரவு உணவு தயாராகிவிட்டது.

ஜிம் தாமதமாக இல்லம் திரும்பியதே இல்லை.

அந்தச் சங்கிலியைக் கையில் வைத்துக்கொண்டு ஜிம் வருகைக்காக வாசலில் காத்திருந்தாள். நுழைவாயிலில் அவனின் காலடிச் சத்தம் கேட்டது. அவள் முகம் ஒரு கணம் கலையிழந்துவிட்டிருந்தது. அந்த நாளில் எல்லாமே நல்லபடி அமைய  அவள் அடிக்கடி பிரார்த்தனை செய்துகொள்ளும் பழக்கமுள்ளவள். அத்தருணத்திலும் அதனைச் செய்தாள், ”இறைவா தயவு செய்து  நான் இன்னும் அழகாய் இருப்பதாக அவர் அபிப்பிராயப்படவேண்டும்.”

கதவு திறந்ததும் ஜிம் உள்ளே வந்தார். அவர் அன்றைக்கு மெலிந்து காணப்பட்டதோடு புன்னகைக்காமலும் இருந்தார். பாவம் அவர், இருபத்திரண்டு வயதுதான் ஆகிறது, அவரை நம்பித்தான் அவர் குடும்பமே இருக்கிறது. குளிர் படும் அவர் கையை மறைக்கப் புது கோட் அவருக்குத் தேவைப்படுகிறது.

ஜிம் கதவருகே சில விநாடிகள் நின்றார். ஒரு பறவையை இரையாக்கிக்கொள்ள நினைக்கும் ஒரு வேட்டை நாயைப்போல ஓசையின்றி இருந்தார். டெல்லாவிடம் புதிதாக எதையோ கண்டுவிட்டதுபோலப் பார்த்தார். எதையும் புரிந்துகொள்ளமுடியாத குழப்பமான முகபாவனையோடு கூர்ந்து நோக்கினார். அப்பார்வையில் அவளுக்கு அச்சம் மிகுந்தது. அதில் கோபமோ வியப்போ அல்லது அவள் ஏதோ ஒன்று சொல்லத் தயாராய் காத்திருக்கும் உணர்வோ எதுவுமே வெளிப்படவில்லை. அவர் முகத்தில் ஒரு விசித்திரமான பாவத்துடன் அவளை கண்மாறாமல் பார்த்தார்.

டெல்லா அருகில் போனாள்.

அவள் கண்ணீர் சிந்தியவாறு, “ அன்பே ஜிம், என்னை அப்படிப் பார்க்காதீர்கள். நான் என் தலைமுடியை வெட்டி விற்றுவிட்டேன். உங்களுக்கு ஒரு கிரித்துஸ்மஸ் பரிசை வாங்கித் தராமல் இந்தத் திருநாளை என்னால் மகிழ்ச்சியாகக் கொண்டாடவே முடியாது. என் தலைமுடி வளர்ந்துவிடும். நீங்கள் வருந்தவில்லைதானே? என் தலைமுடி மிக வேகமாக வளர்ந்துவிடும் ஜிம். இது கிருஸ்த்துமஸ் அன்பே. வா மகிழ்ச்சியாக இருப்போம். உனக்குத் தெரியாது   அருமையான ஒன்றை, உனக்குக் கொடுக்க எவ்வளவு கவர்ச்சியான பரிசை வாங்கி வைத்திருக்கிறேன் என்று.”

“நீ உன் முடியைக் கத்தரித்துவிட்டாயா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டார் ஜிம். என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க அவர் கடுமையாக முயன்று கொண்டிருந்தார் .அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நம்பினார்.

டெல்லா சொன்னாள், “ஆமாம் என் முடியை வெட்டி, விலைக்கு விற்றுவிட்டேன், இதனை விரும்பவில்லையா நீங்கள்? நான்தான் ஜிம், டெல்லா!, அதே நான்தான் ஜிம், முடியை வெட்டிவிட்ட உங்கள் டெல்லா ஜிம்.”

ஜிம் அறையைச் சுற்றிலும் பார்த்தார்.

“உன் முடியை அகற்றிவிட்டேன் என்றா சொன்னாய்?” என்று கேட்டார்.

“அதனை அறையில் எங்கும் தேடவேண்டாம். நான்தான் சொன்னேனே, அது விற்றாகிவிட்டது. நான் சற்று முன்னர்தானே சொன்னேன் அதனை விலைக்குக் கொடுத்ந்துவிட்டேன் என்று. அது முடிந்துபோன ஒன்று. இது கிரிஸ்த்துமஸுக்கு முதல்நாள் இரவு ஜிம். என்னோடு அன்பாய் இரு. ஏனெனில் அதனை உனக்காக விற்றேன். ஒருகால் என் தலை முடிகளை எண்ணிவிட முடியும், ஆனால் எவரும் நான் உன் மீது வைத்திருக்கும் என் காதலைக் கணக்கிட்டுவிடமுடியாது. ”ஜிம் தன் கையை டெல்லாவின் தோள்களின் மேல் போட்டார். ஒரு பத்து விநாடிகளுக்கு நாம் அவர்களைப் பார்க்காமல் வேறு திசையில்  பார்ப்போம். ஒரு வாரத்துக்கு எட்டு டாலர் அல்லது ஒரு கோடி டாலர் ஓர் ஆண்டுக்கு – அவற்றுக்கிடையே என்ன பெரிய வித்தியாசம்? யாராவது இதற்கு விடை தர முடியும்? ஆனால் எப்படிப் பார்த்தாலும் அது தவறான விடையாகவே இருக்கும். மேகிகள் கொண்டுவந்த  பரிசுகள் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றாக இது இல்லை. இதன் பொருளை நான் விரைவில் விளக்கமாகச் சொல்வேன்.

கோட் பையிலிருந்து ஒரு தாளில் மடிக்கப்பட்ட ஒரு பொருளை வெளியே எடுத்தார் ஜிம். அதனை மேசையின் மேல் போட்டார்.

“நீ என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் டெல்.” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார். நீ உன் முடியைக் கத்தரித்துவிட்டதால் உன் மீதான என் காதல் குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் இதனைத் திறந்து பார்த்தால், நான் வீட்டினுள் நுழைந்ததும் உன்னைப் பார்த்தபோது நான் என்ன நினைத்தேன் என்று நீ தெரிந்துகொள்வாய்.”

டெல் அந்தப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். பின்னர் மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினாள். அடுத்த நொடியே கேவிக் கேவி அழத் தொடங்கினாள்.

அது ஒரு சீப்பு. டெல்லா ஒரு கடையில் அதனைப் பார்த்துவிட்டு நீண்ட நாட்களாக வாங்க ஆசைப்பட்ட அதே சீப்பு. பொன்னால் செய்யப்பட்ட மிக அழகிய சீப்பு. அவள் கேசத்தை அழகாக்கும் பொருத்தமான சீப்பு. அவள் தகுதிக்கு அது அதிக விலையுள்ளது என்று அறிந்தே வைத்திருந்தாள். கடையில் அதனைப் பார்த்துவிட்டு  தன்னால் அதனை உரிமையாக்கிக்கொள்ளும் தகுதி தனக்கு இல்லை என்று நம்பிக்கை இழந்துவிட்ட ஒன்று. இத்தருணத்தில் அது தன்னுடையது. ஆனால் கேசமோ அகற்றப்பட்டுவிட்டது!

அதனை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். ”என் தலைமுடி விரைவில் வளர்ந்துவிடும் ஜிம். என்று சொல்லி சட்டென்று எழுந்து நின்று “ஓ.. ஓ…” என்று கதறி அழுதாள்.

ஜிம் இன்னும் அவள் வாங்கிய அழகிய பரிசை பார்க்கவில்லை! தன் கைக்குள் வைத்திருந்த அப்பரிசை அவள் திறந்து காட்டினாள். அப்பொன்னாலான சங்கிலி அவள் அவனுக்காகத் தேக்கி வைத்திருந்த உண்மை அன்பைப்போல மெலிதாய் ஜொலித்தது.

‘‘நீ விரும்பியதுபோல இருக்கிறதா ஜிம்? நான் பட்டணம் முழுதும் அலைந்து தேடி வாங்கியது. நீ உன் கைகாடிகாரத்தைக் கையில் கட்டிக்கொண்டு தினமும் நூறு முறை மணி பார்க்கலாம், உன் கடிகாரத்தை என்னிடம் கொடு. இரண்டும் எவ்வளவு பொருத்தமாக இணைகிறது என்று என் கண்ணால் பார்க்கவேண்டும்.”

ஜிம் அமர்ந்துவிட்டு புன்னகைத்தார்.

“டெல்லா, நாம் வாங்கிய கிருஸ்த்துமஸ் பரிசைப் பற்றிக் கொஞ்ச நேரம் மறந்துவிடுவோம். அவை இப்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக அழகானவை. நான் என் கடிகாரத்தை விற்று உனக்குச் சீப்பு வாங்க பணம் வாங்கினேன். இப்போது நாம் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம் என்று நினைக்கிறேன்.”

மேகிக்கள் ஞானிகள். அற்புதமான ஞானிகள். புதிதாகப் பிறந்த குழந்தை இயேசுவுக்கு பரிசு வாங்கி வந்தவர்கள். முதன் முதலில் கிருஸ்த்துமஸ் பரிசு வழங்கியவர்கள் அவர்கள்தான். ஞானிகள் என்பதால் அவர்கள் பரிசு சந்தேகமில்லாமல் சிறந்த ஒன்றுதான். சற்று முன்னர் நான் ஞானமே இல்லாத இரு குழந்தைகளின் பரிசுகள் வாங்கிய கதையைச் சொன்னேன். இருவருமே தாங்கள் வைத்திருந்த விலைமதிப்பற்ற பொருளை விற்று தங்களின் அன்பானவர்க்கு பரிசுகள் வாங்கியிருக்கின்றனர். கடைசியாக இந்றைய ஞானிகளுக்குச் சில வார்த்தைகளைச் சொல்லட்டுமா? பரிசு கொடுத்தவர்களிலேயே இவர்கள்தான் உண்மையிலேயே ஞானிகள். இதுநாள்வரை பரிசு கொடுத்தவர்களிலும் வாங்கியவர்களிலும் இவர்கள்தான் உள்ளபடியே ஞானிகள். யாரைக்காட்டிலும் இவர்கள்தான் எப்போதுமே ஞானிகளாகக் கருதப்படுவார்கள். இவர்கள்தான் உண்மையிலேயே மேகி ஞானிகள்.

000

# மாஜிகள் (மேகிகள்) என்பவர்கள் இயேசு அவதரித்தபோது அவரை வணங்கவும் அவருக்காகப் பரிசுகள் கொண்டுவந்து கொடுத்த ஞானிகள். கிருஸ்த்துமஸுக்கு பரிசுகள் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் தொடங்கக் காரணமாக இருந்த தொன்மக் கதை இது.

கோ. புண்ணியவான்

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். ஐம்பது ஆண்டுகளாக இடைவிடாது எழுதியும் இயக்கங்கள் வழி பங்காற்றியும் வருபவர். கோ.புண்ணியவான் மலேசியாவில் நவீன சிறுகதை எழுத்தில் மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாலமாகச் செயல்படுகிறார். அவரது படைப்புகள் மலேசிய நவீன தமிழ் இலக்கிய நகர்ச்சியையும் வளர்ச்சியையும் மிகச்சிறப்பாக அடையாளம் காட்டி நிற்கின்றன." என்று அ.பாண்டியன் மதிப்பிடுகிறார்.

தமிழ் விக்கியில்

 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. இந்த இளம் தம்பதியரை வறுமை ஜெயிக்கப் பார்க்கிறது. ஆனால் இவர்கள் காதலும் அன்பும் வறுமையை மிஞ்சுகிறது. சராசரி மனத்திற்குத் தோன்றாத பரிசுப் பரிமாற்றம். ஒருவருக்கொருவர் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு தியாக அன்பு உயிர்பெற்று எழுகிறது. டெல்லாவும் ஜிம்மும் வாழ்வில் மறக்கமுடியாத பாத்திரங்கள். இனி கைக்கு கடிகாரம் கட்டும்பொழுதும் தலைமுடி வார சீப்பையும் பார்க்கும் போது அன்பின் சின்னங்களாகவே தோன்றும்.

    கிறிஸ்மஸ் பண்டிகையின் போது மேற்கு நாடுகளில் பரிமாறிக்கொள்வது அவர்கள் பண்பாடு. இந்தக் கதையை தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய ஆசிரியர் கோ . புண்ணியவான் அவர்களுக்கு மிக்க நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop