
பெருந்தன்மை
இன்று ஏனோ
குனிந்தவள் மறந்தாள்
நெஞ்சில் கை வைக்க
கண்களில் அமுதூறும் அழகை
காண நினைத்திருப்பாள்.
OOO
அபிப்ராயம்
மழைக்குப் பின்
முளைவிட்ட காளான்
இகழ்ச்சியாகத்தான் சொல்கிறீர்கள்
அதனாலென்ன
அவைகள் தனித்துவமிக்கவை
உங்களின் அறியாமைக்காக
பரிதாபம் கொள்கிறேன்.
OOO
உள் மாற்றம்
தட்டானாகிறேன்
நினைத்த கணத்தில்
பறந்திடுவதில்லை.
உடல் சிறுத்து
இறக்கைகள் முளைத்து
பறப்பதற்கு
கற்றுக்கொள்ள
தேவைப்படுவது
காலம் மட்டும்தானா?
OOO
அழிவு
ஊரில் மட்டுமல்ல
உலகத்திலும் உண்டு
கண் சிமிட்டும் கணத்தில்
காணாமலாக்கும்
அழிவுக் கருவிகள்.
அதனாலென்ன
புற்கள் முளைப்பதும்
பனித் துளிகள் அமர்ந்து
அழகூட்டுவதும்
நிகழ்ந்துகொண்டுதானே
இருக்கிறது.
OOO
மமதை
என் கடவுள்
காக்கி சீருடைக்குள்ளும்
இருக்கக் கூடும்தானே.
பாவம்
அவர்களுக்குத்தான்
உள்ளிருக்கும் அன்பை
உறங்கச் செய்து
மரணத்தை தரும்
மமதை வந்திடுகிறது.

அகழ்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















மழைக்குப் பின்
முளைவிட்ட காளான்
இகழ்ச்சியாகத்தான் சொல்கிறீர்கள்
அதனாலென்ன
அவைகள் தனித்துவமிக்கவை
உங்களின் அறியாமைக்காக
பரிதாபம் கொள்கிறேன்.
பெரியசாமிக்கு வாழ்த்தும், நன்றியும்.