
கே: வணக்கம் . நாவல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள். புனைவெழுத்தாளராக முன்பே சிறுகதைகள் எழுதத் துவங்கியிருந்தாலும் முதல் நாவல் வருவதற்கு சற்று காலம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கான காரணம் என எதைக் குறிப்பிடுவீர்கள்?
ப: வணக்கம். என்னுடைய பதினேழாவது வயதில் நான் எழுதிய முதல் சிறுகதையை தினமலர்-வாரமலர் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பினேன். ஆறுதல் பரிசு கிடைத்து வெளிவந்தது. அதைத் தொடர்ந்து மங்கையர் மலரில் எனது அடுத்த சிறுகதை வெளிவந்தது. ஆனால் அவை எல்லாம் அந்தந்த இதழ்களின் இயல்பை ஒட்டி எழுதப்பட்டு வெளிவந்தவை, அவை என் இயல்பான படைப்பல்ல எனத் தோன்றியதால் நான் இதழ்களுக்கு எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். வாசிப்பும், அவ்வப்போது கட்டுரைகளுமாகவே அடுத்த 17 ஆண்டுகள் கழிந்தன. கிட்டத்தட்ட பன்னிரு ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய இணையத்தளத்தில் தன் வாசகர்கள் சிறுகதை எழுதும் ஒரு போட்டியை அறிவித்தார். என்னை அப்போட்டிக்கு எழுதுமாறும் சொன்னார். என்னைப் பாதித்திருந்த சம்பவங்களில் இரண்டினை அடிப்படையாகக் கொண்டு “கன்னிப்படையல்”, “வாயுக்கோளாறு” என்ற இரு சிறுகதைகளை எழுதி அனுப்பினேன். எந்த மாற்றமும் செய்யப்படாமல் இரு சிறுகதைகளும் தேர்வாகி ஜெயமோகன் அவர்கள் தளத்தில் வெளிவந்தன. ஆனால் நாவல் எழுதும் எண்ணம் அதற்கு முன்பிருந்தே மனதில் இருந்ததுதான்.
நாவல் போன்ற ஒரு விரிவான படைப்பை எழுத சற்று பக்குவம் கூடி வரும் மனநிலை அவசியம் என்பது என் எண்ணம். அகக் கொந்தளிப்பு இருப்பவனே எழுத்தாளன் ஆகிறான் என்பது பொதுவான அபிப்ராயம். ஆனால் தன் அகம் அடையும் கொந்தளிப்பை, தத்தளிப்பை , இவ்வாறாக எனக்கு நிகழ்கிறது என்று ஒரு எழுத்தாளன் முதலில் உணர வேண்டியிருக்கிறது. அவற்றைத் தாண்ட வேண்டியது கூட இல்லை, சற்று விலகி நின்று அவற்றை அவதானிக்கும் அளவில், ஒரு ஆற்றிடைக்குறை போன்ற தற்காலிக பக்குவமாவது தேவைப்படும்போதுதான் நாவல் போன்ற ஒரு விரிவான வாழ்க்கையைக் காட்டும் படைப்பை எழுத முடியும். வாழ்வின் மேடு பள்ளங்களுக்குள், தனது சுய இருள் ஒளிக்குள் துளியாவது சென்று மீண்ட பிறகுதான் பிறரது அனுபவங்களுமே கூட நமக்கு உணரத் தக்கதாகிறது. அதுவரை தெரிந்து கொண்டிருப்போம். உணர்ந்ததை எழுதும்போதுதான் அது தனக்கான இடத்தை அடைகிறது. தெரிந்ததை எழுதினால் புகழ் வரலாமே தவிர நிறைவு வராமல் அதை அங்கீகாரமாக எதிர்பார்த்து இளைக்க வேண்டியிருக்கும். எனக்கு அப்படியான நிதானம் வந்தபிறகே நாவலை எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்.
கே: தங்களது முதல் புத்தகமான ‘ஆட்டத்தின் ஐந்து விதிகள்’ ஒரு சுய முன்னேற்றப் புத்தகமாக விளங்குகிறது. தாங்கள் ஒரு பயிற்றுநராக பணியாற்றுபவர். விஷ்ணுபுரம் போன்ற இலக்கிய விழாக்களை தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கிறீர்கள். இவை தவிர ஆசிரியராக , மரபிலக்கியம் தொடங்கி உள்ள மேம்பாடு வரை, வெவ்வேறு பயிற்சி வகுப்புகள் எடுக்கிறீர்கள். இந்தப் பணிகளில் இயல்பாகவே எழுந்து வரும் சமநிலைத் தன்மை, புனைவு மனநிலைக்கு எதிரானவை. இதை எவ்வாறு கையாளுகிறீர்கள்?
ப: புனைவு எழுத எந்த நேரமும் அடுப்பு அணைக்கப்படாத குக்கர் போல எழுத்தாளன் சீறிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படியோ இங்கே வந்து விட்டது. விளைவாக முதலில் எழுதக் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, சீற்றமடையக் கற்றுக் கொள்கிறார்கள். வாசற்படியில் காலணிகளைக் கழட்டி விட்டு வீட்டிற்குள் நுழைவது போல புன்னகை, நகைச்சுவை உணர்வு எல்லாவற்றையும் வெளியே விட்டுவிட்டுதான் இலக்கியத்திற்குள் நுழைய வேண்டுமென நினைத்துக் கொள்கிறார்கள். நம் தகப்பன்மார்களும், தாத்தன்மார்களும் கடுங்கோபம் கொண்டவர்களாகத்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறார்கள். அதற்காக எழுவதிலிருந்து உறங்கச் செல்லும் வரையிலுமா அப்படியே இருந்தார்கள்?
அகக் கொந்தளிப்பு என்பது ஒரு வினா. எப்போதெல்லாம் அதில் இறங்குகிறோமோ அப்போதெல்லாம் சுழட்டி அடிப்பது. நீண்ட தாமிரபரணியில் கால் வைத்த இடங்களிலெல்லாம் சுழலிருக்குமா என்ன? எதிர்போக்கில் குறுக்காக நீந்தவும், சுழலில் மிதந்து ஒதுங்கவும் தெரிந்தவன்தான் தாமிரபரணியில் திளைக்கத் தெரிந்தவன்.
சமநிலைத் தன்மை என்று இதைச் சொல்லலாமா எனத் தெரியவில்லை. ஆனால் எழுதும்போது அந்தத் தவிப்பில் இருந்துதான் எழுதுகிறேன். பிற வகுப்புகள் எடுக்கையில் அந்த வகுப்புக்குரிய மனநிலையில் இருந்துதான் எடுக்கிறேன். ஒரே விஷயத்தை நாம் அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் ஆகியோரிடம் ஒரே மாதிரிதான் சொல்கிறோமா என்ன? இலக்கியம் என்று வரும்போது மட்டும் எல்லா நேரமும் ஏன் கொதிநிலை 100 டிகிரியிலேயே எதிர்பார்க்கப்படுகிறது? தவறானதை சரியாகக் கற்றுக் கொள்கிறவர்கள் நம்மில் மிகுதி.
இன்னும் சொல்லப்போனால் நெல்லைப் பகுதிகளில் 10, 20 ஆண்டுகள் காத்திருந்து பழிவாங்கும் கொலைகள் அதிகம். இந்த இடைப்பட்ட வருடங்களில் அக்கொலையாளியின் வாழ்க்கை உண்டு, உறங்கி, காதல் செய்து, பிள்ளை பெற்று என்று வழக்கமான வாழ்க்கையாகத்தான் நீடித்திருக்கிறது. ஆனால் அந்த பழியுணர்வில் இறங்கும்போது இவையனைத்தும் அவன் கவனத்திலிருந்து மறைந்து விடுகின்றன. தனக்கான சந்தர்ப்பம் வரும்வரை அவன் பழியுணர்வை மனம் ஆழத்தில் கனல் குறையாமல் வைத்திருக்கிறது. அதன்மேல் அவன் இயல்பான வாழ்க்கை நகர்கிறது. உயிரைப் பணயம் வைத்து உயிரை எடுக்கும் செயலில் இருப்பவனே இப்படி என்றால் உயிரைப் பணயம் வைத்து வாழ்ந்தாக வேண்டிய வாழ்க்கையை கேள்விக்கு உட்படுத்தும் ஒருவனும் அப்படித்தானே இருந்தாக வேண்டும்? எழுதுபவர்களுக்குத் தெரியும், எழுதும்போது அந்த உலகம் எழுத்தாளனுக்கு மட்டுமே உண்மையானது. அவன் மனைவியும், தாயும் கூட அந்த உலகை அறிய முடியாது. பிறர் அறிய முடியாத தனிமையில் இருந்துதான் எழுத்தாளன் எழுதுகிறான். பிற அனைத்திலும் இன்னொருவருக்கு இடமிருக்கிறது. ஆகவே பிறருக்கு இடமிருக்கும் எந்த செயலிலும் நான் அந்த இடத்தை மதிப்பிட்டே செயல்படுகிறேன். என்னையன்றி எவருக்கும் இடமில்லா படைப்புலகில் நான் எவ்வித மதிப்பீடுகளையும் சுமக்காத அல்லது எல்லாவற்றையும் சுமந்தலையும் ஒருவனாக இருக்கிறேன். என் புனைவு மனநிலை என்பது அந்த உலகத்திற்குள் நுழைந்து கொண்டதும் என்னை எடுத்துக் கொண்டு விடுகிறது. பிற பணிகளில் ஈடுபட்டிருக்கையில் அது தனக்கான நேரத்தை எதிர்பார்த்து அமைதியுடன் காத்திருப்பதாகத் தோன்றுகிறது.
கே: தெய்வநல்லூர் கதைகளில் வரும் காலம் என்பது 1980 களின் இறுதிக்கட்டம். சுதந்திர இந்தியாவின் அடிப்படை பிரச்சனைகளை அடையாளம் கண்டு அங்கிருந்து முன்னோக்கி எழவைத்த சில குறுகிய கால சிந்தனைகள் அப்போது எழுந்தன. அறிவொளி இயக்கம், முதியோர் கல்வி போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவை சொற்பகாலம்தான் நீடித்தன என்பதால் அந்த காலகட்டத்தை அப்போதைய மாணவர்கள்தான் அனுபவப்பட்டிருப்பார்கள். தெய்வநல்லூர் கதைகளில் மாணவர்களுக்கிடையே உருவாகும் அமைப்புகள் அத்தகைய சூழலின் கீற்றாகத் தோன்றுகிறது. அதைப் பற்றி கூற இயலுமா மேலும் அந்த சூழல் குறித்த நாவல் எழுதும் எண்ணம் உள்ளதா?
ப: தெய்வநல்லூர் கதைகள் நாவலில் வரும் காலம் 80 களின் இரண்டாம் பாதி. அவநம்பிக்கை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பட்டினி, பழைய காலத்தின் நீட்சியாகத் தொடர்ந்த தொழில்நுட்பங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள் என நிறைந்து சிறு கீற்றெனவும் கூட எந்த நம்பிக்கையும் இல்லாத காலங்கள். அன்று பெரும் ஆசுவாசத்தை அளித்தவை திரைப்படங்களும், திரைப்பாடல்களும். எவ்வளவு மோசமான படமும் 25 நாட்களாவது ஓடி விடும். ஒரு வருட காலத்துக்கு தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும். பள்ளி சிறார்களான எங்களுக்கு வேலையின்றி திரியும், ஆயுதப் புரட்சி பற்றி பேசும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர வேண்டுமென்று ஆசை மட்டுமே படும், டி ராஜேந்தர் படங்களைப் பார்த்து விட்டு வரும்போதெல்லாம் யாரையாவது காதலித்தாக வேண்டிய கட்டாயத்திலும், காதலித்திருந்தால் தோல்வி அடைந்து தாடி வளர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்திலும் தம்மை இருத்திக் கொண்டிருந்த அண்ணன்மார்கள் கண்முன் நின்றார்கள். அவர்கள் செய்வதை நாங்களும் இன்னும் சில ஆண்டுகளில் செய்ய வேண்டியிருக்கும் என்ற நினைப்பே எங்களை பீதியாக்கியது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் வேலை இல்லா வருங்காலத்தை எண்ணி பயந்து நடுங்கிக் கொண்டிருந்த காலம். இன்றைய தலைமுறையினருக்கு கல்லூரி முடிக்கும்போது கூட இந்தப் பதட்டம் இல்லை.

தெய்வநல்லூர் கதைகள் 80 களின் இறுதிப்பகுதியில் துவங்கி 90 களின் துவக்கத்தில் முடிகிறது. வெறும் அவநம்பிக்கையை சொல்லி போராட்டமே தீர்வு என சொல்லிய இயக்கங்கள் நிரம்பிய நாட்கள். ஆயுத போராட்டக் குழுக்கள் தமிழகமெங்கும் இருந்தார்கள். பொன்பரப்பி தமிழரசன் மக்களால் கொல்லப்பட்ட சம்பவமெல்லாம் நடந்த காலம். மிக மேம்போக்கான எவ்வித பெரிய உபத்திரவங்களும் இல்லாத போராட்ட முறைமைகளை திராவிட இயக்கங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள மெய்யாகவே காவல் துறை துப்பாக்கியால் தேடும் உயிருக்கு ஆபத்தான போராட்ட வழிமுறைகளை தீவிர கம்யூனிஸ குழுக்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டன. இரண்டுக்கும் நடுவே உள்ள தீர்வை நோக்கிய போராட்ட களம் அன்று அரசியல் கம்யூனிஸ கட்சிகள் கையில் இருந்தது. உண்மையில் திராவிட இயக்கங்களுக்கு இணையாக குக்கிராமங்கள் வரை ஊடுருவி மக்களோடு மக்களாய் நின்றவை அன்றைய கம்யூனிஸ கட்சிகள். அறிவு , வாசிப்பு, உரையாடல், விவாதம், வகுப்புகள் என ஒரு கிராமத்து வீட்டின் திண்ணையில் உலக அரசியலைக் கொண்டு வந்து வயது வேறுபாடு பாராமல் அறிவை மட்டுமே முன்னிறுத்தி செயல்பட்ட இயக்கங்கள் கம்யூனிஸ இயக்கங்கள்.
ஆனால் 91 க்குப் பிறகு நிலைமை மாறியது.
ஒரு புறம் இந்திய அரசு செய்துகொண்ட உலக வங்கி ஒப்பந்தங்கள் குறித்த கடும் பயமுறுத்தல்களும் எச்சரிக்கைகளும் போராட்டங்களும் பரப்புரைகளும்; மறுபுறம் மெல்ல மெல்ல முகிழ்த்து வந்த புதிய தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள். 1994 ல் திருநெல்வேலியில் ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் 6 மாத பயிற்சிப் படிப்புச் சான்றிதழுடன் சென்றால் சென்னையில் நல்ல சம்பளத்தில் ஒரு கணினி வேலை; வார இறுதியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் எம் சி ஏ படிப்பை இரு ஆண்டுகளில் முடித்து விட்டால் பெரும் நிறுவனங்களில் கற்பனை செய்ய முடியாத சம்பளத்தில் உறுதியாக வேலை. இந்த தொழில்நுட்பப் பணிகள் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிடும் என்ற பரப்புரைகளும், 2,3 ஆண்டுகள் பணி புரிந்தோர் அயல்நாடுகளுக்கு செல்லும் தகவல்களும் மாறி, மாறி கிடைத்து வந்த 2000 வரையிலான காலம் இந்த இரண்டுக்குமான ஊடாட்டம்.
80 களில் சமூகத்தின் வறுமையையும், அவநம்பிக்கையையும் கொண்டு, 90களில் நம்பிக்கையும், ஐயமுமாகக் கொண்டு இரண்டுக்கும் இடையே ஊடாடிக் கழிந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். நீங்கள் சொன்ன அறிவொளி இயக்கம் போன்றவை 90 களில்தான் துவங்குகிறது. அன்று இந்த அரசுத் திட்டங்களில் பணி செய்வதை மாற்றுப்பணியாக ஏற்றுக் கொண்டு வந்தவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ இயக்க ஆதரவாளர்கள். ஆகவே ஒரு புறம் இவர்களது டங்கல் – காட் ஒப்பந்த அச்சுறுத்தல்கள், மறுபுறம் உறவினர்கள் சென்னைக்கு பணிக்கு சென்று வசதியாய் மாறுவது என்பதற்கு நடுவிலுள்ள காலம் 90கள்.
தெய்வநல்லூர் கதைகள் 90கள் வரை உள்ள அவநம்பிக்கைக் காலத்தின் கதைகள். அரசுப்பணி ஒன்றே வாழும் வழி, பிற அனைத்தும் வெறுமே பிழைக்கும் வழி என்ற நம்பிக்கையின் காலக்கட்டம். அரசுப்பணி பெற்றோர் இரு சிறகுகள் கொண்டவர்களாக தம்மைக் கருதிய காலம். அதைப் பெறுவதற்காக அதிகாரத்துடன் எத்தகைய சமரசத்துக்கும் தயாராக ஆரம்பித்த காலம். அரசுப்பணியை உயர் விழுமியமாக எண்ணிய முந்தைய தலைமுறை அரசுப்பணியாளர்கள் குறைய ஆரம்பித்த காலம். அதை 15 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் பார்வையில் பேச முயற்சித்த படைப்பே தெய்வநல்லூர் கதைகள்.
2026 சென்னை புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் நூல்கள்
- புத்த தியான கருவூலம் – வி அமலன் ஸ்டேன்லி (தமிழினி பதிப்பகம்)
- ஒற்றைக் குரல் – இளங்கோ கிருஷ்ணன் (யாவரும் பதிப்பகம்)
- குருதிவழி – சுனில் கிருஷ்ணன் (யாவரும் பதிப்பகம்)
- மாதர் திரையுலகு – ஜா தீபா (ஜீரோ டிகிரி பதிப்பகம்)
- க நா சு நேர்காணல்கள் – துரை லட்சுமிபதி (அழிசி பதிப்பகம்)
90 களின் ஊடாட்டக் கொந்தளிப்பை மற்றுமொரு நாவலாக எழுதும் எண்ணமும் இருக்கிறது. கிட்டத்தட்ட இரு யுகங்களின் சந்தியில் நின்று அந்த அஸ்தமனத்தையும், உதயத்தையும் ஒருசேர தலையில் தாங்கிய தலைமுறை என்னுடைய காலத்தையது. அதன் கதை நம் இலக்கியத்தில் சொல்லப்படவே இல்லை. அம்முயற்சியின் சிறு தொடக்கமே தெய்வநல்லூர் கதைகள். முயற்சி தொடரும்.
கே: தங்கள் நாவலில் அரசியல் ஒரு மெல்லிய இழையாக இருக்கிறது. ஆண் பெண் நட்பும் அதன் மீதான சமூகத்தின் வக்கிரமும் வெளிப்படுகிறது. நாவலின் அன்றைய மாணவர்கள் வயதில் இன்று தங்கள் மகன் விஸ்வஜித் இருக்கிறார். அவருக்கு இதில் பெரிதாகத் தெரியும் வேறுபாடு என்று எதை சொல்கிறார். அல்லது தாங்கள் எதை உணர்கிறீர்கள்?
ப: ஒவ்வொரு முந்தைய கேள்விக்கான பதிலும் அடுத்த கேள்விக்கான பதிலையும் சேர்த்தே வைத்திருக்கிறது. ஆம், அன்று அரசியல் மிக வெளிப்படையாகவே பள்ளிகளில் பேசப்பட்டது. மெல்லிய இழையாக அதை குறைத்துதான் படைப்பில் கொடுத்திருக்கிறேன். தனக்கு தேநீர் வாங்கி வரச் சொன்ன ஆசிரியர் அந்த காலி தேநீர் கோப்பையை நான்தான் எடுத்துச் செல்ல வேண்டுமென்று சொன்னார். இத்தனைக்கும் தேநீர் கடைக்காரர் வந்து காலிக் கோப்பையை எடுத்துக் கொண்டு பணமும் வாங்கிச் செல்வது வழக்கம். நொடி நேரம் நான் தயங்கி நின்றபோது நான் பிறந்த ஜாதி, இனம் ஆகியவற்றின் பெயரால் வசைச்சொல் பெற்றேன். ஒரு வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை நான் உணரவும் இவ்வகையான இழிவுகள் உதவின என்றுதான் சொல்ல வேண்டும். அன்று அரசியலையும், சமூக சீர்திருத்தத்தையும், வெறுப்புணர்வையும், வன்மத்தையும் தனித்தனியே பிரித்து கையாளத் தெரிந்த ஆளுமைகளை நான் கம்யூனிஸ இயக்கங்களில் மட்டுமே கண்டிருக்கிறேன்.
ஆண் பெண் நட்பு கனவில் கூட ஏற்கப்படாத காலம். இயல்பான நட்பும் கூட கடும் சமூக தணிக்கைக்கு உட்பட்டிருந்த காலம். ஆச்சரியமூட்டும் விதத்தில் அதை இயல்பாகவே ஏற்றுக்கொண்ட மரபான மனிதர்களும் இருந்தார்கள்தான். ஆனால் அன்று முற்போக்காய் பேசி வந்தவர்கள்தான் இந்த பால் பேதமற்ற நட்பை ஏற்கவே முடியாமல் கொந்தளித்தவர்கள். மேடையேறி பகுத்தறிவுப் பொதுக்கூட்டத்தில் பேசும் ஆசிரியர் ஒருவர்தான் நான் பெண்களுடன் நட்பாக இருப்பதை கடுமையாக எதிர்த்தவர். என்னை அழைத்து ஒழுக்கமாக இருக்கும்படி எச்சரித்தவர். இப்படியே இருந்தால் நான் “பொண்டுகசெட்டி” ஆகிவிடுவேன் என பயமுறுத்தியவர். நான் இப்போதுவரை பெண்களால் புரக்கப்பட்டு, நல்ல நட்பினை தொடர்ந்து அனுபவித்து மகிழ்ந்து வரும் ஆணாகவேதான் இருக்கிறேன். ஆணென பெண் ஏற்காத வரை ஒருவன் ஆணாக இருந்து விட முடியுமா என்ன?
நல்லவேளையாக இப்படியான சூழல் இன்று என் மகனுக்கு பள்ளியில் இல்லை அல்லது குறைந்திருக்கிறது. இன்னும் போட்டிகள் நிறைந்த பணிச் சூழலுக்குள், சமூகச் சூழலுக்குள் அவன் வரவில்லை. அங்கு வேறு விதத்தில் இதெல்லாம் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இலக்கியத்தில் மட்டும் என்ன? நான் சொல்லும் மாற்றுக் கருத்துக்கு பதில் என் ஜாதியைச் சுட்டுவதாகவே இருக்கும். இங்கேயே இருப்பவர்கள் என்று மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா சென்று கல்வியில் சிறந்திருப்பவர்களிடமும் பார்ப்பன வெறுப்பு மாறவேயில்லை. ஒரு ஒடுக்கப்பட்ட மனிதன் அவன் ஜாதியால் திட்டப்படுவதை எதிர்த்து நூறு கட்டுரைகள் எழுதும் கரங்கள், லட்சம் சொற்களை உதிர்க்கும் வாய் அதே ஜாதியின் பெயரால் இன்னொருவனை இழிவு செய்யத் தயங்குவதில்லை. கூடவே அதை இயல்பான ஒன்றாக, அறிவுஜீவித்தனமாகவே ஆக்கி வைத்திருக்கிறது. என் மகனும் இதைத் தாண்டித்தான் வரவேண்டும் என்கிற சூழலே இப்போதும் இருக்கிறது. ஆனால் விரைவில் இதுவும் மாறும் என்ற நம்பிக்கையும் அழுத்தமாகவே இருக்கிறது. இந்த வெறுப்பை தகுதியாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை ஓயும்போது இந்த நிலை மாறும் என உறுதியாக நம்புகிறேன். அப்படியான தலைமுறை ஓயத்தொடங்கும் காலம் இது.
கே: உங்களது பக்தி இலக்கிய ஆர்வமும் பரிச்சயமும் நாவலில் ஆங்காங்கு வெளிப்படுகிறது. பெரிய வரிகளை எளிமைப்படுத்திச் சொல்வதை அங்கத சூழல்களில் பயன்படுத்துகிறீர்கள். கனமான இடங்களில் இத்தகைய உதாரணங்களை தவிர்த்து தங்களது சொற்களை கையாளுகிறீர்கள். எந்த விதத்தில் பக்தி இலக்கியத்தின் பயன்பாடு நிகழ்காலத்தில் தேவையாக உள்ளது எனக் கருதுகிறீர்கள்?
ப: தமிழில் பக்தி இலக்கியங்கள் மிக தனித்துவம் வாய்ந்தவை. இறைவனின் புகழைப் பாடுவது மட்டுமல்லாமல் முதன்மையாக தம்மை கவிதைகளாக முன்வைப்பவை. இறைவனைத் துதிக்க தோத்கிரங்கள், மந்திரங்கள் இருக்கும்போது எதற்காக பாசுரங்கள் பாடப்பட வேண்டும்? அனைத்திலும் மேன்மையான ஒன்றைப் பாட, மொழியின் மேன்மையான வடிவத்தை ஆழ்வார்களும், நாயன்மார்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கவிதையாக ஒளிரும் பக்தி இலக்கியங்கள் தமிழ் பண்பாட்டை, இங்கு பேசப்பட்ட தத்துவங்களை, மரபுகளை, விழுமியங்களை, வாழ்க்கை முறைகளை நமக்குக் காட்டும் காலப் பெட்டகமாக இருக்கின்றன. இன்றைய நோக்கில் பக்தி இலக்கியம் தேவைப்படும் புள்ளியும் இதுதான்.
என்னைத் ததைத்துக் கொண்டு உன்னை ஊற்றவும் வல்லையே என நாச்சியார் உருகுவதும், வரவாறு ஒன்று இன்மையால் வாழ்வு இனிது என நம்மாழ்வாரும், நின்னோடும் ஒக்க வழிபட அருளினாய் போலும் என தொண்டரடிப்பொடியாழ்வாரும் பேசும் அனைத்தும் கவிதையே. இறைவனை அணுக கடும் முறைமைகளை பின்பற்றும் வேதமந்திரங்கள் இருக்க கவிதைகளை இவர்கள் ஏன் எடுத்தார்கள்? கவிதை இலக்கணம் மீறுவது. இறைவன் மேல் காதலுற, காமமுற, கோபமுற, வசை பொழிய, எண்ணி ஏங்க, மகவென ஆக்கி மடிமேல் இட்டு அணைக்க, அன்னையென ஆக்கி அவள் மாடி புக என இறைவனை எதுவாக வேண்டுமானாலும் ஆக்கி அனுபவிக்க கவிதை வழி செய்கிறது. மேலே சொன்ன ஒவ்வொரு உணர்வின் உச்ச நிலையையும் பித்து கொண்டு பேசி அவற்றை இறை அனுபவமாக மாற்றுவதே பக்தி இலக்கியங்களின் செயல்முறை. உணர்வின் உச்ச நிலைக்குப் போகும் பக்தி இலக்கியத்தை வாசிப்பவர்கள் அந்த அனுபவத்தின் தேனை ருசிக்காமல் மலரின் இதழ்களை மட்டுமே காண்கிறார்கள். முறைமைகளின் வழியில் பக்தி இலக்கியத்தையும் அணுகி கவிதையில் இறையை அனுபவிப்பதை முகம் கடுகடுக்கும், முறைப்பான செயலாக ஆக்கிக் கொள்கிறார்கள். கவிதையில் பயின்று வரும் மொழி உச்ச உணர்வுகளைப் பேசுவதாலேயே அந்த மொழியைப் பேசும்போதெல்லாம் அந்த உணர்வு நிலைக்குப் போய்விடுகிறார்கள்.
ஆனால் மொழி தன்னளவில் முழுமையானது. நன்மைக்கும், தீமைக்கும் ஒரே கடவுளைப் போல மொழியும் நற்சொல், தீச்சொல் இரண்டுக்கும் உரியதாகிறது. ஆகவேதான் அந்த கவிமொழியை நகைச்சுவைக்கும், பகடிக்கும் பயன்படுத்திப் பார்த்தேன். அதே நேரம் கதையின் சம்பவங்களில் வரும் உச்ச உணர்வுகளுக்கு அந்த மொழியைப் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் முன்பே சொன்னது போல அம்மொழி வேறோர் உணர்வு உச்சத்திற்கு அடையாளமாகி நிற்பது. மொழி அளிக்கும் இந்த எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவிப்பது சுவாரசியமூட்டுவது.
கே: தெய்வநல்லூர் கதைகளைத் தொடர்ந்து தங்களிடமிருந்து அடுத்தடுத்த புனைவுகளை எதிர்பார்க்கலாமா?
ப: ஆமாம். எழுதுவது என் அன்றாடப் பணியாக இல்லை. எழுதாமலும் இருப்பதில்லை. அதில் புனைவு எழுத சற்று அவகாசம் தேவைப்படுகிறது. நவீன தமிழ் இலக்கியம் 75 ஆண்டுகளில் செவ்வியல் தன்மை அடைந்த ஒன்றாக இருக்கிறது. அதன் நவீன இயல்பின் காரணமாக கிளைத்துக் கொண்டே செல்கிறது. நமக்கு முந்தைய படைப்பாளிகள் எழுதி சிறப்பித்த ஒரு விஷயத்தில் அதைத் தாண்டும் ஒன்றையோ, அதை இன்னும் செறிவூட்டும் விதமாகவோ எழுதுவதே சரியானது என நினைக்கிறேன். போலவே எழுதுதல் என்பது தேவையற்ற இலக்கிய அடைசல்களையே உருவாக்கும். தொடர்ந்து எழுதும் ஆவல் இருப்பதால் புனைவுகள் எழுதுவேன் என்று நம்பலாம்.
OOO
தெய்வநல்லூர் கதைகள் – ஜீரோ டிகிரி பதிப்பகம்

ஆர். காளிப்பிரஸாத்
சிறுகதையாசிரியர். இலக்கிய விமர்சனங்கள் எழுதுவதிலும், மொழியாக்கங்களிலும் ஆர்வம் கொண்டவர். இவரின் சிறுகதைகள் ‘ஆள்தலும் அளத்தலும்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது, ‘தம்மம் தந்தவன்’ என்ற நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
தமிழில் சிறார் இலக்கியம் வளமாகும் என்ற நன்னம்பிக்கையைத் தருகிறது தெய்வநல்லூர் கதைகள் குறித்த இந்த நேர்காணல்…