கலைஞர்களின் பணி என்பது மனிதர்களின் தனித்துவத்தை மீட்பது தான்: சுனில் கிருஷ்ணன்

உரையாடல்: சித்ரன்

கே: முதல் கேள்வியை நாவலுக்கான சமர்ப்பணத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம். ‘குருதிவழி’ நாவல் வெளியானதும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை நாவல் எழுதுறதுக்கான பரிகார ஸ்தலமா அறிவிக்கலாம்னு கோயில் அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் போறதா கேள்விப்பட்டேன். அதைப் பத்தி உன்னோட கருத்து என்ன?

ப: பிள்ளையார்பட்டி தல விருட்சம் நாவல் மரமாக இருந்திருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும் ஆனால் துரதிஷ்டவசமாக மருத மரம் தான் அதன் தலவிருட்சம் என்ன செய்ய! நாவல் எழுதி நோபல் பரிசு அல்லது புக்கர் பரிசு ஏதேனும் கிடைத்தால் அதில் பிள்ளையாருக்கும் ஒரு பங்கு கொடுப்பதை பற்றி பரிசீலிக்கலாம்.

உன் கேள்விக்கு உருப்படியாக ஏதேனும் ஒரு பதிலை சொல்லலாம் என்றால், பிள்ளையார்பட்டி விநாயகர் மீது எனக்கு அந்தரங்கமான பிடிப்பு உண்டு. அதற்கு அப்பால் தர்க்கபூர்வமாக வேறொரு பதிலையும் சொல்லலாம். 2017 ஆம் ஆண்டு ‘வேரும் கனியும்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன். எழுத்தாளர் எலிசபெத் கில்பர்ட் ஆற்றிய  உரை மீதான பார்வை அந்த கட்டுரை. எலிசபெத் எழுத்தாற்றல் முடக்கத்தை உணரும் போதெல்லாம் பின்பற்றிய ஒரு வழிமுறையைப் பற்றி குறிப்பிடுகிறார். ‘கடவுளோ, இல்லை ஜீனியஸோ, இல்லை பெயரற்ற எதுவோ, இந்த படைப்பை நாம் இருவரும் சேர்ந்து உருவாக்குகிறோம் என்னளவில் நான் சரியாகவே செய்கிறேன். நீ உன் பங்களிப்பை சரியாக ஆற்றினால் மட்டுமே அது சிறந்ததாக இருக்கும்.’ என வாய்விட்டு கூறுவாராம். இது அவருக்கு பலன் அளித்ததாக பதிவு செய்துள்ளார்.

இது ஒரு புதிய கருதுகோள் அல்ல. ம்யூஸ், ஜீனியஸ் என வெவ்வேறு பண்பாடுகளில் படைப்பூக்கத்தை வெளியில் இருந்து பெறப்படும் ஒன்றாக உருவகப்படுத்துவது வழக்கம்தான். காளிதாசனுக்கு கூட காளி நாக்கில் எழுதினாள் என்றொரு கதை உண்டு தானே. பிள்ளையார் எனக்கு நாக்கில் எழுதவில்லை என்றாலும் கூட, இவ்வகையான ஒப்புக் கொடுத்தல் ஒருவித சுதந்திரத்தை அளித்தது என்று நம்புகிறேன்.

கே: நல்ல நாவல் வாசகனை ஒரு நிகர்வாழ்விற்குள் வாழ அனுமதிக்கனும். கெடுவாய்ப்பா metafiction முயற்சிகள் நாவல் தரும் நிகர்வாழ்விற்கான அனுபவத்தைக் கடத்தாம போறதுண்டு. ‘நீலகண்டம்’ நாவல் வர்ஷினி எனும் கதாமாந்தரால் எழுதப்பட்டது, ‘இச்சா’ நாவல் ‘ஆலா’வால் எழுதினது அப்படின்னு நாவல முடிக்கனும்னு அவசியமில்லைன்னுதான் தோணுது. நீலகண்டம் நாவலை அந்த முதலைப் பண்ணையிலேர்ந்து வர்ஷினி காணாமல் போறதோட முடிச்சிருந்தா  ஒரு பிரச்சினையும் இல்ல. அது இன்னும் வலுவாதான் இருக்கும்னு தோணுது. Metafiction வகைமையில் நிறைய எழுதுன பிரேம் – ரமேஷ் (அதை தமிழில் புனைவுருக்காப் புனைவுன்னு சொல்வாங்க) பிரம்மனின் உடலுக்கு வெளியே கதையை metafiction ஆ இல்லாம சாதாரணமா எழுதியிருந்தா கதைக்கு ஒரு பாதகமும் இல்ல. ஆனால் விஷ்ணுபுரம் அப்படியில்ல. அந்த நாவல் வசந்தன் எனும் பாணன் சொல்ற கதை. நாவலுக்குள் கதாமாந்தர்கள் மொத்த விஷ்ணுபுரமே பாணன் வசந்தன் சொல்ற கதை தான்னு உரையாடும் போது நமக்கு அதுல ஒரு மயக்கம் இருக்கு. ‘குருதிவழி’ நாவல் Metafiction வடிவத்தில அமைஞ்சிருக்கு. அந்த வடிவத்துல இருக்குறதால தான் அந்த நாவலுக்குள்ள அறிவியல் புனைவு இடம்பெற சாத்தியப்படுது. இந்த வடிவத்தை எழுதிக் கண்டடைஞ்சியா? இல்ல உனக்கு எழுதுவதற்கு முன்னாடியே முன் தீர்மானம் இருந்ததா?

ப: நீலகண்டத்தை பொருத்தவரை அவள் காணாமல் போன புள்ளியில் தான் நாவல் நிறைவு பெற்றது. அந்த இறுதி அத்தியாயம் அழகியல் பிழையா என்றால், இருக்கலாம். வர்ஷினி போன்ற சிக்கல் உள்ள ஒரு பெண் குழந்தை கைவிடப்படுவதாக முடிவது என்னை மிகவும் தொந்திரவு செய்தது. அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று கேட்டுக் கொண்டேன். இருக்கிறாள் என்று ஆழ்மனம் பதில் சொன்னது. அதை வெளிப்படுத்தாமல் யுத்திக்காக மறைப்பது அறப்பிழை என்று தோன்றியது. ஆகவே அந்த முடிவு.

பொதுவாகவே எனக்கு கதை மாந்தர்களை விடவும் அடிப்படைக் கேள்விகளை புனைவுகளில் உசாவுவதன் மீது மையல் உண்டு. ஒருமுறை, தெரியாமல் செய்தால் அது பிழை. பிழையே தொடர்ந்து நிகழும் பொழுது ஒரு பாணி ஆகிவிடும். நீலகண்டம், விஷக்கிணறு, குருதி வழி என ஒரு நீட்சியை காண முடியலாம். நீலகண்டம் யதார்த்த கதையாகவே தொடங்கியது. எங்க ஒரு புள்ளியில் விக்ரமன் வேதாளம் அதற்கு தேவைப்பட்டார்கள். விஷக்கிணறில் ஓப்பன்ஹைமர் வந்து சேர்ந்து கொண்டது மிகவும் தற்செயலானது. அப்படித்தான் குருதி வழி எழுதும்போதே அதன் அறிவியல் புனைவு பகுதியை வந்தடைந்தேன். நாவல் எழுப்பும் மைய கேள்வியை விரிவுபடுத்தும் நோக்கில் உருவான கதை. பொதுவாக எனக்கு முன் தயாரிப்புகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.  இப்படிச் சொல்லாமல் எழுதி இருக்கலாமா என்றால் எழுதி இருக்கலாம் தான். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் தான் இக்கதை இந்த நாவலின் பகுதியாக உள்ளது. அதை வாசகர்கள் என்றேனும் ஒருநாள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

கே: நீ அந்த அறிவியல் புனைவு எழுதுற சமயத்துல அந்த ஐடியாவை எங்கிட்ட சொன்னப்ப அது எக்சைட்டிங்கா இல்ல. ஆனால் நாவல் வாசிக்கிறப்ப அந்த பகுதிகள ரொம்ப கொண்டாட்டமா வாசிச்சேன். அது வெறும் ஃபேன்டஸியா மட்டும் இல்ல. வரலாற்றில நிகழ்ற நாச வேலைகள் எல்லாம் வெறும் ஒரு தனிமனிதன் செஞ்சது இல்ல அவன் ஒரு தரப்போட முகம் வரலாற்றுல ஒரு கருவி மட்டும் தான் அவன அழிச்சாலும் வேறொருத்தன் அந்த செயலை செய்யத் தான் போறான்னு கண்டடையுற இடம் இருக்கு. அந்த அறிவியல் புனைவு தன்னளவில் முழுமையாவும் இருக்கு. அதை எழுதுறதுக்கான தூண்டுதல் என்ன? அதைப் பத்திக் கொஞ்சம் சொல்லு.

ப: அடிப்படையில் சதக் சதக் ஒரு காமிக்ஸ் தன்மை கொண்ட அறிவியல் புனைவு என்று சொல்லலாம். அதை மட்டும் தனியாக இளையோர் நாவலாக வெளியிடும் யோசனை கூட உண்டு. இந்த கதைக்கான விதை என்று டெட் சியாங்கின் ஒரு அறிவியல் புனைவு கதையை குறிப்பிடலாம். டெட் சியாங் எனக்கு மிகவும் பிடித்த அறிபுனைவு எழுத்தாளர்களில் ஒருவர். நான் சிங்கப்பூர் சென்று இருந்த சமயத்தில் அவர் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு வந்திருந்தார். ஆகவே அவருடைய உரையை நேரில் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அவரது உரையில் அவர் குறிப்பிட்ட ஒரு கதையை தேடிச்சென்று வாசித்தேன். The Merchant and Alchemist’s Gate. இடைக்கால பாக்தாத் நகரத்தில் நிகழும் ஒரு அபாரமான கதை. ஒரு வணிகன் காலத்தின் முன்னும் பின்னும் அலைவான். அவனால் எதையுமே மாற்ற முடியாது. டெட் சியாங் கடந்த காலத்தோடு நாம் சமரசம் செய்து கொள்ள இருக்கும்  வழி என்பது அதை ஏற்பது, மன்னிப்பது, நினைவில் நிறுத்துவது, கடப்பது என்பதாக அக்கதை வழி உணர்த்தினார். சதக் சதக் இந்த தரிசனத்தில் இருந்து சற்று மாறுபட்டு கடந்த காலத்தை கதையாக்குவது எனும் தரிசனத்தை நோக்கி செல்கிறது. இந்த நாவலில் நான் மிகவும் உற்சாகத்துடன் எழுதிய பகுதி என்று இதையே சொல்வேன்.

கே: ஜெயமோகனின் வரலாற்றுப் பார்வையும் யுவனின் வரலாற்று நிராகரிப்பும் சந்திக்கும் புள்ளியில் இந்நாவல் நிகழ்வதாக நாவல் உருவான கதையில எழுதியிருக்க. ஆனால் வரலாறை எதிர்கொள்ள மனிதர்கள் கண்டுகொண்ட வழி அதை கதைகளாக ஆக்குவது தான். கதைகளை கதைகளால் எதிர்கொள்ள முடியும்னு நாவலில் இடம்பெறும் உரையாடல் எனக்கு அயோத்திதாசப் பண்டிதரைத் தான் நினைவுபடுத்துது.

ப: நாவலின் கடைசி பகுதியில் விரிவாக வரலாற்று தரவுகள் புனைவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜெயமோகனிடமிருந்து புனைவுக்கு எவ்வளவு வரலாறு தேவை என்பதை நான் கற்றுக் கொண்டேன். பெருமாள் பீட்டர் எங்கு பிறந்தார் எங்கு வளர்ந்தார் போன்ற தகவல்கள் எனக்கு புனைவுக்கு முக்கியமல்ல. ஆனால் அவர் புத்தகப் பைகளில் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு பள்ளி விடுதிக்கு சென்றால் கோபமடைவார் எனும் தகவல் மிக முக்கியமானதாக படுகிறது. அவருடைய ஆளுமையை எனக்கு நெருக்கமாக காட்டுகிறது.

அயோத்திதாசர் பாதிப்பு என்பது சரிதான். குறிப்பாக ஸ்டாலின் ராஜாங்கம் காட்டும் பண்டிதர். அயோத்திதாசர், யுவன் சந்திரசேகர், காந்தியும் கூட ஏறத்தாழ வரலாறு குறித்து ஒரே மாதிரியான கண்டடைதல்களை முன் வைப்பதாக நான் உணர்கிறேன்.

கே: 1942 தேவகோட்டை – திருவாடணை கிளர்ச்சி பகுதிகளை எழுதியதுக்கு அப்புறம் அது எப்படி வாசிக்கப்படும்னு ஒனக்கு கொஞ்சம் குழப்பம் இருந்துச்சு. ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு அனுப்பி கருத்து கேட்ட. தஞ்சை பிரகாஷ் ‘கரமுண்டார் வூடு’ எழுதினப்ப அவருக்கு இருந்த சுதந்திரம் இன்னைக்கு நமக்கு இல்லையோன்னு தோணுது. ஏனா இன்னைக்கு இலக்கியத்துக்கு தொடர்பு இல்லாதவங்க ஒரு பத்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி என்ன வேணும்னாலும் செய்யலாம்கிற நிலை இருக்கு. நாவலோட அந்த பகுதிகளை எழுதும் போது உன்னை சுயதணிக்கைக்கு உட்படுத்திக்கிட்டியா? அதை எழுதி முடிச்சப்ப இருந்த குழப்பம் இப்ப தெளிஞ்சிருச்சா? இல்ல சாரு சொல்ற மாதிரி ‘விபரீத ராஜ யோகம்’ எதாவது நிகழும்கிற எதிர்பார்ப்பு இருக்கா?

ப: மருத்துவராகவும் இருப்பதால் சமூகத்திற்கு வேறொரு வகையில் பயனுள்ள உயிரி என்று கருதி பாவம் பிழைத்து விட்டு போகட்டும் என்று விட்டுவிடுவார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.

ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு அனுப்பியது அவருடைய ஏற்போ அங்கீகாரமோ வேண்டி அல்ல. இந்த நாவல் தொடர்பாக அவருடன் உரையாடலில் இருந்தேன். ஆகவே அவருடைய பார்வை எனக்கு முக்கியமாகப் பட்டது.

 நாம் புனைவை  ஆவணமாக காணும் நோக்கிற்கு பழக்கப்பட்டு விட்டோம். தஞ்சை பிரகாஷ் காலத்தில் உறுதியாக அவர் இலக்கியம் அறிந்த சிறுபான்மையினரோடு மட்டும் உரையாடினார்.  பெரும்பான்மை பொது சமூகத்தின் அசட்டை தான் நம் முன்னோடிகளுக்கு அந்த சுதந்திரத்தை அளித்தது. இப்போதும் பொது சமூகம் அதே அசட்டையுடன் தான் நவீன இலக்கியத்தை கையாள்கிறது‌.  நம் காலத்தில் நவீன இலக்கியவாதிகள் சற்று கூடுதலாக வெளியே தெரிவதில் சில சிக்கல்கள் உண்டு.   பொது சமூகம் அவ்வப்போது இங்கே என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்க்கிறது. அதன் செய்தி வெறிக்கு எந்த தமிழ் நவீன எழுத்தாளரும் பலியாகக் கூடும்.   வாழ்வின் மீதும், விழுமியங்களின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களே நவீன இலக்கியத்தின் தோற்றுவாய். திறலின் ஆற்றலுக்கு முன் தமிழ் எழுத்தாளர் எனும் உதிரி நிற்கக்கூட முடியாது. ஊடகம் மக்கள்மயப்படுதல் தவிர்க்க முடியாதது. ஆனால் அது சில சிக்கல்களையும் தருவிக்கிறது. ஏதோ ஒரு சமரசப் புள்ளியை இன்னும் சில ஆண்டுகளில் நாம் அடையக் கூடும்.

கலவரப்  பகுதி எழுதுவதில் இருந்த சிக்கல் என்பது இரண்டு. ஏற்கனவே உள்ள ஆறாத சாதிக்காயங்களை இது கிளறி விட்டு விடக்கூடாது. தரவுகளில் நமக்கு கிடைக்கும் வன்முறை பற்றிய சித்திரங்களை எந்த அளவுவரை பயன்படுத்தலாம். இந்த வன்முறையை நான் ஏன் எழுதுகிறேன்? இந்தக் கேள்வி மிகவும் முக்கியம். வணிகத் திரைப்படத்தில் காட்டப்படும் வன்முறைகளில் ஒருவித திளைப்பு ஏற்படுவதை நாம் உணர முடியும். நீதியைச் சொன்னாலும் கூட அது வன்முறையை ஒரு பண்டமாகத் தான் கையாளுகிறது. இங்கே நாம் ஒரு பெரும் அநீதியின் சாட்சியாக மட்டுமே வன்முறையை சித்தரிக்கிறோம். ஆகவே அதில் ஒரு திளைப்பு ஏற்பட்டுவிடக் கூடாது எனும் உணர்வு எனக்கு இருந்தது. நாயகன் வில்லன் என எது எதிர் தரப்புகளாக மக்களை பிளவுபடுத்துவது இலக்கியத்தின் பணி அல்ல. மனிதர்கள் ‘தரப்புகளாக’ மட்டும் சுருங்கி விடக்கூடாது. கலைஞர்களின் பணி என்பது மனிதர்களின் தனித்துவத்தை மீட்பது தான். கலை எல்லாவித ஒற்றைப்படையாக்கத்திற்கும்   எதிரானது. நீதி ஒற்றைப்படையாக்கத்தின் விளைவல்ல. ஆகவே விபரீத ராஜ யோகத்திற்கு வாய்ப்பில்லை.

கே: ஜெயமோகனோட ‘பலிக்கல்’ சிறுகதை வெளிவரலைனா ‘குருதிவழி’ ஒரு சிறுகதையா தான் வெளிவந்திருக்கும் இல்லையா? நான் இதுவரைக்கும் எழுத நினைச்ச நாவலோட அத்தியாயங்களைத் தான் சிறுகதைகளா மாத்திருக்கேன். உதாரணத்துக்கு ‘முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்பவேட்கை’. ஜெயமோகனோட புறப்பாடுல வர அச்சக பகுதிகள் தான் நான் நாவலுக்காக வச்சிருந்த களம். புறப்பாடு வாசிச்சதுக்கு அப்புறம் அந்த எண்ணத்தை கைவிட்டு அவரு தொடாத பகுதிகள நான் சிறுகதையா எழுதினேன். ஒரு சிறுகதையை நீ நாவலா வளர்த்தெடுத்துருக்குற. சிறுகதை ஒரு மையத்தை நோக்கி குவியுறது நாவல் ஒரு மையத்திலேர்ந்து விரிவடையுறது.  ரெண்டுக்குமான அழகியலில் வேறுபாடு இருக்கு. ஒரே கருவை சிறுகதைக்கான ஒற்றைக் குரலில் இருந்து நாவலுக்கான பலகுரல் தன்மைக்கு கொண்டு போற விசயம் எது?

ப: க.நா.சு கதை என்பது ஒரு அடிப்படை இலக்கம் போல என்று குறிப்பிடுகிறார். கதை என்பதே குறுங்கதையாக, சிறுகதையாக, குறு நாவலாக, நாவலாக விரிவு கொள்ளும் சாத்தியம் கொண்டது என்று சொல்கிறார். அதன்படி எந்த கதையும் நாவலாக முடியும். கதையின் மையத்தில் ஒரு அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தின் மீதான விசாரணை தான் புனைவு. விசாரணையின் காலமும் தீவிரமும் கூடும் தோறும் புனைவின் பரப்பு விரிவடைகிறது. விசாரணையின் இறுதியில் நாம் கண்டடைவது தரிசனம். அனுபவத்தின் காரணங்களையும் விளைவுகளையும் விரித்தெடுக்கும்  தோறும் கதை விரிகிறது. உதாரணமாக உனது கொனட்டி முத்தன் கதையை எடுத்துக் கொள்ளலாம். முத்தன் அமராவதி காதலிக்கத் தொடங்குவதில் இருந்து கதை தொடங்குகிறது. அந்தக் காதலின் உச்ச நிலையில் நிறைவடைகிறது.  முத்தன் ஏன் கொனட்டி முத்தனாக ஆனான்? பெண்கள் சூழ வளர்ந்தவன். யாரெல்லாம் அவனை சூழ்ந்து இருந்தார்கள்? அவர்களால் எப்படி எல்லாம் அவன் பாதிக்கப்பட்டான்? அமராவதியின் கோணத்தில் இருந்து இன்னொரு கதையை விரித்து எடுக்க முடியும். 

எழுத்தாளர் பா.வெங்கடேசன் ஒரு உரையாடலில் கூறியது நினைவில் உள்ளது. எந்த நாவலையும் ஒரு பத்தியாக சுருக்கி எழுதிவிட முடியும்.

2026 சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க விரும்பும் நூல்கள்:

  • காதலின் குறுவாள் – மீராவின் கவிதைகள். தமிழில் செங்கதிர். நூல்வனம் வெளியீடு.
  • கொடுங்காற்றில் ஒரு விளக்கு- லல்லாவின் கவிதைகள். தமிழில் எம். கோபாலகிருஷ்ணன். நூல்வனம் வெளியீடு
  • இஸ்ஸாவும் பூசனும் இரு ஜென் கவிகள் – தமிழில் யுவன் சந்திரசேகர். நூல்வனம் வெளியீடு
  • இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் – பெருந்தேவி – சிறுகதைகள். ஜீரோ டிகிரி எழுத்து பிரசுரம்
  • டேக் 5 – இலக்கிய ரசனை விமர்சன கட்டுரைகள். நம்பி கிருஷ்ணன். யாவரும் வெளியீடு

கே: பிரேம்-ரமேஷ் சொல்கதை மரபும் வரைகதை மரபும் வினோதமாகப் பிணைந்த வடிவமே தமிழ்ப்புனைவு மரபுன்றாங்க. குருதிவழி நாவலில் சொல்கதைக்கான இடம் இருந்தும் அதற்குள்ளாக நீ ஆழமா பயணிக்கலையோன்னு தோணுது. உதாரணத்துக்கு வேலுடையார் மகிமை பாடல்னு ஒன்னு இடம்பெறுது. ஆனால் மக்களுக்கிட்ட வேலுடையாரைப் பத்தி என்னன்ன நாட்டுப்புறக் கதைகள் இருந்துச்சுன்னு புனைவாக்கியிருக்கலாம். அதை நீ தவறவிட்டுட்டியோன்னு தோணுது. நீ என்ன நெனக்குற?
ப: ஆக அது உண்மைதான் போலும். ரமேஷ்-பிரேம் பெயர்களைக் குறிப்பிடாமல் உன்னால் உரையாட முடியாது என்பது. வாழ்த்துக்கள்.

சொல் கதை மரபு சார்ந்து குருதி வழியில் சில இடங்கள் உள்ளன என்றே நம்புகிறேன். குறிப்பாக ஊர் மக்கள் வேலுச்சாமியிடம் வேலுடையாரின் கதையை சொல்லும் இடத்தை குறிப்பிடலாம். இன்னும் சில விஷயங்களை செய்திருக்கலாமா என்றால் செய்திருக்கலாம் தான். எனினும் தவறவிட்ட சாத்தியங்களுக்கு முடிவே கிடையாது. நாம் எல்லோரும் எழுத்தாளர்கள் என்பதால் இன்னொருவர் கதையை வாசிக்கும் பொழுது அது எப்படி நம் கதையாக ஆகக் கூடும் என்பதை குறித்து நிச்சயம் யோசிப்போம்.

கே: ஐந்து பகுதிகளாக இருக்குற நாவலில் மூன்றாம் பகுதியிலிருந்து அருமையான மொழி நடை அமைஞ்சிருக்கு. அந்த மொழியில நீ முதல் இரண்டு பகுதிகளையும் திரும்ப எழுதியிருக்கலாம்னு தோணுது. எழுதி முடிச்சோனே நீ அதை உணரலையா?

ப: தெரியவில்லை. என் நோக்கில் முதல் இரண்டு பகுதிகளும் ‘கதை சொல்லலுக்கான’ முயற்சி. ஆகவே சற்று இலகுவாக கட்டு தளர்ந்து இருக்கிறது. மூன்றாம் மற்றும் ஐந்தாம் பகுதிகளுக்கு தனித்த ‘இலக்கிய மொழி’ தேவைப்பட்டது.  நான்காம் பகுதி இவ்விரு தன்மைகளும் கலந்த ஒரு மொழி வெளிப்பாடு. எல்லாம் முயற்சிகள் தானே.

கே: தமிழில் சமகால எழுத்தாளர்களோட படைப்புகளை நீ தான் தொடர்ச்சியா வாசிக்குற. இன்னைக்கு சிங்கப்பூர், மலேசியாவிலேர்ந்தும் தமிழ் நாவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த நாவல்கள் எப்படியிருக்கு. ஈழத்துல ஷோபாசக்திக்கு அப்புறம் குணா கவியழகனையும், சயந்தனையும் நான் வாசிச்சிருக்கேன். வேற யாரெல்லாம் அங்க முக்கியமானவங்க. அதைப் பற்றிய ஒரு சித்திரம் தேவைப்படுது.

ப: பெயர்களைச் சொல்வது ஒரு ஆபத்தான விளையாட்டு. பொதுவாக சில விஷயங்களைச் சொல்லலாம். சிங்கப்பூர் மலேசியா நாடுகளை பொறுத்தவரை அங்கு மொழியை தக்க வைக்க போராட வேண்டி இருக்கிறது. கிடைக்கும் வெளிக்குள் நவீன இலக்கியத்திற்கான வெளியை உருவாக்க முனைவது இன்னும் பெரிய போராட்டம். சிங்கப்பூரைப் பொறுத்தவரை சிறுகதைகளில் பல நல்ல கதைகள் உள்ளன. நாவலில் அவர்கள் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும். மலேசியாவில் தொடர்ச்சியாக நாவல்கள் வெளியாகி வருகின்றன.

ஈழத்தைப் பொறுத்தவரை, ஒரு பெரிய படைப்பு நிரை உள்ளது. ஏதேனும் ஒரு பெயரை சொல்ல வேண்டும் என்றால், மிக அண்மையில் நான் வாசித்து உவகை அடைந்த படைப்பு என்பது ஈழத் தமிழ் கவி கிரிசாந்தின் ‘தத்வமஸி’ எனும் நாவல். கைப்பிரதியில்தான் வாசித்தேன். காலச்சுவடு வெளியிடாக வெளிவரக்கூடும். மிக நல்ல வாசிப்பு அனுபவத்தை நல்கிய படைப்பு.

கே: குருதிவழிக்கு அடுத்து என்ன எழுதுறதா திட்டம் வைச்சிருக்க?

ப: அசோகமித்ரனின் ‘ஒற்றன்’ பாணியில் சிறுகதைகளின் தொடராலான நாவல் போல ஒன்று. சிங்கப்பூர் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதும் எண்ணம் உண்டு. ஒரு கதை மட்டும் எழுதி இருக்கிறேன். பார்ப்போம்.

000

சுனீல் கிருஷ்ணனின் சமீபத்திய படைப்புகள்:

  1. குருதிவழி (நாவல்)- யாவரும் பதிப்பகம் (2025)
  2. காந்தியின் தன்வரலாறு (மொழிபெயர்ப்பு)- காலச்சுவடு பதிப்பகம் (2025)

சித்ரன்

சித்ரன் சிறுகதை ஆசிரியர். குறுங்கதைகளும் எழுதியிருக்கிறார்.  'கனாத்திறமுரைத்த காதைகள்', ‘பொற்பனையான்’ என்ற இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. நல்ல திறப்பான எளிமையான உரையாடல். நேர்காணலின் தலைப்பே அருமை. அதுவே நேர்காணலுக்குள் உள்ளிழுத்துக் கொண்டது. நன்றிகள் இருவருக்கும்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss