சமகாலத்தை எழுதுவது புதிய காயத்தைக் கையாள்வது போன்றது : வாசு முருகவேல்

கேள்வி: வாசுமுருகவேலின் புத்தக வெளியீடு இல்லாமல், சென்னைப் புத்தகக் கண்காட்சி இல்லை என்ற கருதும் அளவுக்கு, பெரும்பாலான தடவை புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி புத்தகங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தங்கள் உங்களுக்கு உள்ளதா?

பதில்: இந்தக் கேள்வி இரண்டு கோணங்களில் இருந்து வரக்கூடும் என்று நம்புகிறேன். ஒன்று , வருசா வருசம் புத்தகம் போடுறான்… என்று எண்ணக்கூடிய ஒருவிதமான ஒவ்வாமையில் இருந்து வரலாம். இரண்டாவது எப்படி இவ்வாறு இயங்குகின்றீர்கள் என்ற அக்கறையில் இருந்து வரலாம். நான் இரண்டாவது கோணத்திற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். நான் எழுத்தாளன். இதை அடைமொழியாக போட்டுக் கொண்டு என்னால் வேறு எவற்றிலோ கவனம் செலுத்தி காலத்தை கடத்திவிட முடியாது. நான் அந்த சொல்லுக்கான மரியாதையை உளப்பூர்வமாக செலுத்த விரும்புகிறேன். வருடம் முழுவதும் நான் எழுத்து வாசிப்பு என்பதற்கு ஒதுக்கும் நேரம் மிகவும் அதிகம். அன்றாட இயல்வு வாழ்க்கையை இதற்கு நான் தெரிந்தே பலியிடுகிறேன். அதனால் அவமானங்களை கூட இயல்பு வாழ்கையில் தொடர்ந்து எதிர்கொள்கிறேன். இந்த வாழ்க்கை முறை சரியா x தவறா என்ற விவாதத்திற்கு அப்பால் நான் அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஒரேயொரு படைப்பு என்பதை நோக்கி என்னுடைய ஒட்டுமொத்த கவனத்தையும் குவிக்கிறேன். இதனால் ஆரோக்கியம் கூட பலநேரங்களில் பாதிக்கின்றது. ஆனால், என்னுடைய உடல் – மனம் மற்றும் புறச்சூழல் ஒத்துழைக்கும் காலத்தில் என்னால் முடிந்த அளவுக்கு செயற்பட்டுவிட வேண்டும் என்ற பேராவல் என்னை முன்னால் இழுத்துச் செல்கின்றது. இவை அனைத்தும் ஏதாவது ஒரு தருணத்தில் முற்றிலும் தகர்ந்தும் போகலாம். நான் அதை உள்ளுணர்வால் புரிந்து கொள்கிறேன். அதுவரையில் நான் முன்னோக்கி போய்விட விரும்புகிறேன். வாழ்க்கையில் ஏதாவது ஒன்றிற்காவது முற்றிலும் உண்மையாக இருந்துவிட வேண்டும் இல்லையா?. அது எனக்கு இலக்கியம். சொந்த நாடு உட்பட வாசு முருகவேலிடம் சொந்தம் என்று எதுவும் இல்லை. இருப்பது சில படைப்புகள் மட்டுமே தான்… என்னுடைய ஒரேயொரு சொத்து இலக்கியம்!. இந்த இடத்தில் இன்னொரு விசயம். நான் தீவிரமாக இயங்குவதால் இடையில் இரண்டு வருடங்கள் என்னுடைய படைப்புகள் வரவில்லை என்பது கூட பலருடைய கவனத்திற்கு போகவில்லை. அது என்னுடைய பாக்கியம்!

கேள்வி: பெரும்பாலும் உங்கள் படைப்புகள், குறுநாவல் வடிவுக்குள் வருபவை. ஏன் பெருநாவல் நோக்கிச் செல்லவில்லை?

பதில்: துல்லியமான பதில் எனக்கு தெரியவில்லை. இது குறித்து நான் யோசனை செய்யவில்லை. எனக்கு தோன்றுகின்ற களங்களை தொடர்ந்து எழுதிவருகின்றேன். களங்களை முடிவு செய்த பிறகு பலவும் நிகழ்கின்றவைதான். வடிவம் – அளவு என்று அனைத்தும் அமைவது என்றுதான் கருதுகிறேன். அதாவது நான் அவற்றை கையாள்வது மிகவும் குறைவு. அதனால்தான் இவ்வாறு அமைந்திருக்கலாம். சிலவேளை அவை நிகழக்கூடும். அவையும் என்னுடைய முடிவுகளினால் மட்டுமே நிகழாது என்று கருதுகிறேன்.

கேள்வி: பெரும்பாலான ஈழ நாவல்கள் நினைவு கூர்தல் ஊடாக, கடந்த காலத்தை நோக்கிச் செல்பவை. மணிபல்லவம் உங்கள் பால்யகால ஊர் நினைவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்று ஊகிக்க இயல்கிறது. கடந்த காலத்தை எழுதுவதற்கும், சமகாலத்தை எழுதுவதற்கும் (உ தா : மூத்த அகதி) என்ன வித்தியாசம்? கடந்த காலத்தை எழுதுவது ஒப்பிட்டளவில் சௌகரியமானதா?

பதில்: நாம் கடந்து வந்த பாதைகள், அனுபவம் போன்றவை நமது படைப்புக்குள் தாக்கத்தை செலுத்தும் என்று நினைக்கிறேன். புத்திரன் நாவல் என்னுடைய பால்யகாலத்தை அடிப்படையாகக் கொண்டது. மணிபல்லவத்தின் காலகட்டம் கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தை ஒட்டியது என்றாலும், அதை அவ்வாறு வரையறுக்க முடியாது. இரண்டையும் படிக்கும்போது அதை உணரலாம். என்னுடைய மூத்த அகதி நாவலை நிகழ்காலத்தை எழுதியதாக கருதுவது சரியானதுதான். ஆனால், அதுவும் எனது வாழ்வில் இருந்து பத்தாண்டுகள் பின்னால் போய் எழுதியதுதான். ஆகவே, காலகட்டத்தில் இன்னும் பின்னால் சென்றால் அதற்கான அடையாளம் நினைவு கூர்தலாக இருக்கின்றது.

எனது அன்னா குறுநாவலில் பல்வேறு காலங்களை நினைவுகள் ஊடாக சமகாலத்தில் (2009) பிணைத்திருந்தேன். என்போன்ற ஒருவருக்கு சமகாலத்தை எழுதுவது புதிய காயத்தை கையாள்வது போன்றது. பழைய காயங்கள் எவ்வளவு ஆழமாக இருப்பினும் இப்போது அவைகள் தடவிப்பார்க்கும் வடுக்கள்தான் இல்லையா!

வாசுமுருகவேல்

கேள்வி: ஈழத்தில் வசித்ததைவிட, தமிழ்நாட்டில் நீங்கள் வசித்தது அதிகம். இதனால் உங்களது உள்மொழி எந்தளவுக்கு மாறியுள்ளது? இது படைப்பில் கசியாமல் இருக்க பிரக்ஞை பூர்வமாக முயல்வீர்களா?

பதில்: எனது அன்றாடம் தமிழகத்தின் மக்களுடன் இரண்டறக் கலந்ததுதான். ஆகவே என்னுடைய பேச்சு வழக்கில் அவற்றின் தாக்கம் இயல்பாகவே உண்டு. ஆனால், என்னுடைய எழுத்தில் அவை அந்தளவுக்கு ஏனோ வருவதில்லை. எழுதும்போது தனிப்பட்ட முறையில் அதில் நான் கவனம் கொள்வதில்லை. அதனால் பல்வேறு தமிழகத்தின் சொற்கள் வரவும் கூடும். அவ்வாறு நிகழ்வதை நான் இயல்பானது என்றே கருதுகிறேன். அது என்னுடைய தமிழ் எழுத்து மொழி என்று எடுக்கொள்ளலாம். அதேசமயம் ஈழத்தமிழர் பேசும் ஒரு வசனத்தை நான் முற்றிலும் தமிழக சொல் வழக்கில் எழுதியிருந்தால் இரண்டாவது முறை படிக்கும் போது கவனத்தில் கொண்டு மாற்ற முனைவேன். அது படைப்பில் பொருந்தாமல் போகலாம் இல்லையா. அதனால் அது அவசியம் என்று தோன்றுகிறது.

கேள்வி: ஒப்பீட்டு அளவில், உங்கள் முன்னைய நாவல்களை விட மணிபல்லவம் வடிவ ரீதியான கச்சிதத்தை அடைந்துள்ளது. நாவல் முடிவில், இயல்பாக கலையமதி திரண்டு வருகிறது. ஆனால், நாவலில் ஆங்காங்கே ஆசிரியரின் குரல் பெரும்பாலும் ஒலிக்கிறது. அவை பெரும்பாலும் அரசியல் நிலைப்பாடுகள், விமர்சனங்கள் சார்ந்தவை; இப்படி ஒலிப்பது (சரி , தவறுக்கு அப்பால்) கலைப்படைப்பில் சாரியாக இருக்குமா என்ற கேள்வி எனக்கு உள்ளது. இதேபோல, சிங்கள தரப்பில் தங்கள் ஆதரவை கலைப்படைப்பில் வெளிப்படுத்தினால், அதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்ற கேள்வி வருவதையும் தவிர்க்க இயலவில்லை.

பதில்: உங்களுடைய கேள்விகளை ஆழமாக புரிந்து கொள்கிறேன். அவற்றுக்கு ஆழமான பதில்களை தரவும் விரும்புகிறேன். ஆனால், அவை திரண்டு வரவில்லை. இதுதான் என்னுடைய இயல்பாக இருக்கின்றது. சில பதில்கள் உங்களுக்கு முழுமையாக தோன்றலாம். ஆனால், அதுவும் எனக்கு முழுமையானவை என்ற நம்பிக்கை இல்லை. இந்த கருத்தை என்னுடைய படைப்பிலும் நீங்கள் பொருத்தி பார்க்கலாம். வடிவங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவற்றை கறாராக கையாள்வதில் நான் கவனம் செலுத்துவதும் இல்லை.

படைப்புகளில் ஆசிரியர் குரல் என்பது சரியா தவறா என்ற கேள்வி எனக்கும் இருக்கிறது. ஆனால் பேச வேண்டிய இடங்களில் அவன் பேசட்டும் அந்த சுதந்திரத்தை வழங்கவே விரும்புகிறேன். ஆனால், அதுவும் அளவுக்கு மீறக்கூடாது மீறினால் சரியாக இருக்காது.

சிங்கள தரப்பு, தமிழ் தரப்பு என்பது என்னுடைய பிறப்பின் அடையாளமாக ஏற்படுவது. அது என்னுடைய தேர்வு அல்ல. எனக்கு அரசியல் தரப்புகள் இருக்கலாம் என்று நண்பர்கள் கூறுவதில் இருந்து புரிந்து கொள்கிறேன். ஆனால், எனக்கு அரசியல் தரப்புகள் மேல் நம்பிக்கை அல்லது ஈடுபாடு இல்லை. நான் தமிழனும் இல்லை சிங்களவனும் இல்லை படைப்பாளி. படைப்பாளி அவ்வளவு தான். சிங்கள மக்களும் தமிழர்கள் போன்று மனிதர்கள் தான் என்ற ஆழமான புரிதல் ஈழ மக்களுக்காக போராடியவர்களுக்கு இருந்த அளவுக்கு இன்றைக்கு பலருக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஏற்பு நிராகரிப்பு என்பது பற்றிய கவலைகளை நான் கடந்து வந்துவிட்டதாக நம்புகிறேன். இவ்வளவு பெரிய உலகில் கொஞ்ச மனிதர்களாவது இல்லாமலா போய்விடுவார்கள். நான் மனிதர்களை நம்புகிறேன். உறுதியாக நம்புகின்றேன். என்னுடைய கலை என்பது அவர்களுடனான ஒரு மிகச்சிறிய உரையாடல். அவர்கள் அதை பெரும் உரையாடலாக உலகுக்கு கொண்டு செல்லக் கூடும். செல்லாவிட்டாலும் அதில் குறையொன்றுமில்லை!

கேள்வி: இந்திரன் கதையை எழுதினால், பக்கம் பக்கம் விரிவாக எழுதலாம். அவனுக்குள் ஒரு நாவல் புதைந்து இருப்பதாக நினைக்கிறேன். கோபுரத்தில் ஏறும் கொத்தலாவக்கு பின்னாலும் அவ்வாறு பெரிய கதைகள் இருக்கும். நயினா தீவு என்ற சிறிய தீவின் பல்வேறு கதை மாந்தர்களை வைத்து, அந்த ஊரின் எழுச்சியை, வீழ்ச்சியை பெரு நாவலாக எழுதியிருக்கலாம். ஆனால் நீங்கள், ஒவ்வொரு கதை மாந்தர்களையும், சிறிய கமராகொண்டு புகைப்படம் எடுத்து காலத்தில் உறைய வைப்பதுபோல, சிறிய சிறிய நுட்பமான சம்பவங்களை மட்டும் எழுதி ஒரு மையத்துக்குள் இணைக்கிறீர்கள். குறைவான உரை நடையில், நுட்பமான சித்தரிப்புகள் வழியே பெரும்பாலும் எழுதுகிறீர்கள். மினிமலிச அழகியல் தரப்பில் உங்கள் ஆக்கங்களை வைக்கலாம். பெரும்பாலான ஈழ எழுத்தாளரிகளில் இருந்து உங்களை வித்தியாசப்படுத்தும் இடமும் கூட. ஆனால், இவ்வகையான சித்தரிப்புகள் இயல்பாக படைப்பில் எழுந்து வரும் உணர்ச்சி ரீதியிலான பிணைப்புகளை நீக்கம் செய்கின்றது அல்லது கட்டுப்படுத்துகின்றது என்றும் தோன்றுகிறது. இதைப்பற்றி யோசித்தது உண்டா?

பதில்: இந்திரன் போன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மின்னல் போல மின்னி மறைந்து போய்விட்டார்கள். அவர்களுடைய இடம் மிகவும் சிறியது போன்று தோன்றினாலும் விளைவுகள் பாரியவை. ஒரு கதையின் பாத்திரம் எந்த வகையில் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பது மிகவும் முக்கியமானது.

ஒரு படைப்பில் மையப்பாத்திரம் என்ற ஒன்றின் மூலம் முக்கியமான பலவற்றை உணார்த்த முயலும் சித்தரிப்பு எனக்கு சரியென்று தோன்றுவதுண்டு. அதற்கான உரையாடல் அல்லது எதிர்வினை என்பது சுற்றி சுழலும் பாத்திரங்கள் மூலம் வெளிப்படலாம். அதை திட்டமிட்டு மட்டுப்படுத்துவதில்லை. ஆனால் என்னுடைய எழுத்து இயல்பில் அல்லது போக்கில் அவை சரியாக அமைந்து விடுகின்றன. அதை சரியானவை என்று நானும் நம்புகிறேன்!

எனக்கு குறிப்பிட்ட கோட்பாடுகள் சார்ந்த எந்த மயக்கமும் இல்லை. ஏன் அவைகள் குறித்த விரிவான அறிவு இருக்கின்றதா என்பது குறித்து கூட எனக்கு துல்லியமாக தெரியாது. அவைகள் அனைத்தும் விரிந்து மாற்றமடைந்து புதிய தன்மைகளை எட்டலாம் என்று கூட கற்பனை செய்கிறேன். நிலையான வட்டங்களில் என்னால் தங்கிவிட முடியாது. என்னிடம் குறிப்பிட்ட திட்டங்கள் இப்போதும் இல்லை ஆதலால் நான் இந்த பதில்களுக்கு எதிர் திசையில் நின்று கூட ஏதாவது படைப்பை உருவாக்கலாம். என்னுடைய பதில்கள் இந்த தருணத்திற்கானவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்!

பெருநாவல் என்று நீங்கள் குறிப்பிடும் அம்சத்தின் மையம் ஒவ்வொரு பாத்திரத்தின் மிக மிக மிக விரிவான என்பதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால் என்னால் அதை என்னுடைய எழுத்தின் நுட்பத்தின் மூலம் அதை தொடர்ந்து நிகழ்த்திவிட முடிகின்றது என்பதுடன் அதுவே சரியான முறைமை என்ற எண்ணம் எழுதும் போது ஏற்படுகின்றது. எழுத்தாளனை கையைப் பிடித்து திருகுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அவனிடம் பிழை திருத்தம் மட்டுமே சொல்ல உரிமை உண்டு என்று எண்ணுகிறேன்.

பிணைப்பு ரீதியிலான உணர்ச்சிகளை நான் நீக்குவதில்லை. அதை வெளிப்படுத்தும் முறைமையில் ஒரு எழுத்தாளனுக்குரிய நுட்பத்தின் மூலம் அதைக் கையாள விரும்புகிறேன். ஈழ இனப்படுகொலையின் வலியை நான்கு ஒளிப்படங்களில் வெளிப்படுத்திவிட முடியும் என்ற தலைமுறையிடம் நான் வந்து நிற்கிறேன். அதைப் புரிந்து கொள்ளாத, அல்லது முயலாதவர்கள் குறித்து எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. அது சற்று தாமதமாகவேனும் நிகழும், நிகழ்ந்தே தீரும். எனக்கு அதில் ஆழமான நம்பிக்கை இருக்கிறது.

2026 சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க விரும்பும் நூல்கள்:

  • குருதிவழி – சுனில் கிருஷ்ணன் (யாவரும் வெளியீடு)
  • அப்பன் திருவடி – மஞ்சுநாத் (எதிர் வெளியீடு)
  • ரமலோவ் – சரவணன் சந்திரன் (உயிர்மை)
  • குமாரத்தி – நரன் (சால்ட் பதிப்பகம்)
  • உப்பளத்தான் – ஆறு பேச்சிப்பாண்டியன் (நீலம் பதிப்பகம்)

கேள்வி: ஷோபாவை “பத்தினித் தெய்யோ”வாக உருவகிக்கும் ஓர் இடம் வருகிறது. பௌத்த சிங்கள இராணுவ வீரன் ஒருவன் உணரக்கூடிய புள்ளி. அந்தச் சித்தரிப்பு, மின்னி மறையும் ஒளி போல வந்து செல்கிறது. இதனால் அந்த இராணுவ வீரன் என்ன உணர்ந்து இருப்பான் என்ற எதிர்க் கேள்வியும் வருகிறது. இதனை மேலும் விரிவாக்கி இருக்கலாம் என்று தோன்றியதா?

பதில்: மின்னல் போல வந்து போகும் சில மனிதர்கள் நம்முடைய வாழ்கையை புரட்டிப்போட்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். முத்துக்குமார் என்ற தமிழக இளைஞனின் தியாகம் எண்ணற்ற இளைஞர்களை கோட்டுக்கு மறுபக்கம் இழுத்து போட்டிருப்பதை நான் அன்றாடம் பார்க்கின்றேன்.

இந்த நாவலைப் பொறுத்தவரை “பத்தினித் தெய்யோ” வாசகனுக்கான ஒரு முக்கியமான இடம். அதை அவன்தான் நிரப்ப வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த இடத்தை அவன் கண்டடைந்த பிறகு அதன் ஆழத்திற்கு அழைத்துச் செல்லும் அடுத்த கட்ட கடமை எனக்கு இருக்கலாம். அந்த காட்சியை மையம் கொண்டு ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற சிறிய எண்ணம் எனக்குள் இருக்கிறது. சிலவேளை அது நிகழலாம்!

கேள்வி: உங்கள் எழுத்து நடையில் கசப்பு இருந்தாலும் அங்கதமும் வருகிறது. ஒருவகையில் பெரும்பாலான ஈழ எழுத்தாளர்களிடம் இந்த அங்கத்தை பார்க்க இயலும். ஒருவகையில் அங்கதம் நிரம்பப் பெற்ற படைப்புகள் அதிகம் வாசிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. ஷோபாவின் தேத்தண்ணியில் கசப்பு கூடுவது போல, வலிகள் நிறைந்த ஈழ எழுத்தாளர்களின் எழுத்துக்களில் அங்கதம் கூடுவது எதனால் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: கசப்புகளில் இருந்தும் அங்கதம் வரலாம். என்னுடைய படைப்புகளில் அங்கதம் மூத்த அகதியில் இருக்கும் என்று நினைக்கிறேன். கலாதீபம் லொட்ஜ் நாவலிலும் கொஞ்சம் இருக்கலாம். மற்றைய படைப்புகளில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உதாரணமாக ஆக்காண்டியில் அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். மூத்த அகதி நாவலைப் பொறுத்தவரை மொத்த சூழலும் ஒரு நீண்ட பண்பாடு கொண்டு சமூகத்தின் ஒட்டு மொத்த அபத்த வாழ்வை காட்டுவதாக இருக்கும். அந்த இடத்தில் அங்கதம் என்பது நாவல் வரித்துக்கொண்ட தன்மைதான். மேலும் அழுது வடிவதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. இந்த அபத்தமான இயல்பு வாழ்கையை எதிர்கொள்ள கொஞ்சம் தலைகீழ் பார்வை அவசியமாகும் என்று நம்புகிறேன்.

கேள்வி: இன்னும் சொல்லித் தீராத கதைகள் ஈழத்தில் இருந்தாலும், ஏறக்குறைய அனைத்துக் கதைகளும் ஒரே தன்மையை கொண்டிருப்பதால், பெரும்பாலான ஈழ எழுத்துக்கள் ஒரு பெரும் கதையாடலின் வெவ்வேறு உதிரிகளாக மதிப்பிடப் படுகின்றன. இந்தச் சவாலை மீறி கதை சொல்வது, ஈழ எழுத்தாளர் ஒருவருக்கு சவாலானது. இதனை நீங்கள் எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?

பதில்: ஈழ இலக்கியம் என்பது ஒரு இடைவெளிக்கு பிறகு மறுபடியும் வந்திருக்கின்றது. இன்றைக்கு தீவிரமாக எழுதக்கூடிய பலரும் அந்த இடைவெளிக்கு பிறகு வந்தவர்கள் தான். அவர்களுக்கு எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் அவர்கள் போருக்குள் சுருளும் போக்கு கொஞ்சம் சலிப்பை தருவதை காணலாம். அது போரை எழுதுவது என்பது மட்டுமல்ல எப்படி எழுதுவது சார்ந்ததும் தான்.

என்னுடைய முதல் படைப்பான ஜெப்னா பேக்கரி வெளிவந்தபோது ஈழ இலக்கியம் முள்ளிவாய்க்காலை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜெப்னா பேக்கரி சோனகர் வெளியேற்றத்தை மையமாகக் கொண்டது. என்னுடைய இரண்டாவது நாவலான கலாதீபம் லொட்ஜ் கொழும்பில் தற்காலிகமாக வந்து தங்கும் மனிதர்களை மையமாகக் கொண்டது . அப்போதும் ஈழ இலக்கியம் முள்ளிவாய்காலை நோக்கியே சென்றது. அவ்வாறு எழுதக்கூடாது என்பதல்ல எப்படி எழுதுவது என்பதே முக்கியமானது. ஏனெனில் அவற்றில் சில படைப்புகள் கவனம் பெறத்தான் செய்தன. என்னளவில் போரை எழுத வேண்டும். எப்படி எழுதுவது என்பதற்கு கொஞ்சம் காலமும் இடைவெளியும் தேவைப்படலாம். நான் இந்த சிக்கல்களை புரிந்து கொண்டு மூத்த அகதி எழுதினேன். அது தமிழகத்தில் வாழும் ஈழ மக்கள் தொடர்பானது. அதற்கு பிறகு மறுபடியும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு ஆக்காண்டி நாவலை எழுதினேன். என்னுடைய படைப்புகள் போரில் இருந்து தூண்டித்தவை அல்ல. ஆனால் அவை வேறு ஒரு பக்கத்தில் இருந்து போரை நோக்கி வந்தன. இந்த மிகச்சிறிய விசயம் எனக்கு உதவியது என்றே நினைக்கிறேன். ஈழ இலக்கியம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இந்த குழப்பங்கள் சலிப்புகள் எல்லாம் கடந்துதான் அந்த இடத்தை அடையவேண்டியது இருக்கிறது!

000

மணிபல்லவம் (நீலம் பதிப்பகம்)

அனோஜன் பாலகிருஷ்ணன்

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. ஆழமான உரையாடல். நன்றிகள் இருவருக்கும்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop