
இளம் தமிழ்க்கவிகளில் முக்கியமானவர் ச.துரை. மரத்தைப் பார்த்ததும் தேவதேவன் நினைவுக்கு வருவது போல, கடலைப் பார்த்ததும் துரை நினைவுக்கு வரும் அளவுக்கு கடலும் அதைச் சூழ்ந்தவைகளும் அவரது கவிதைகளில் பிரதான பாத்திரம் வகிக்கின்றன. மத்தி, சங்காயம் ஆகிய கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகு தீடை என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்; தற்போது ‘முள்ளிப்புல்’ வழியாக மீண்டும் கவிதைகளுக்குத் திரும்பியுள்ளார். ச.துரையின் மூன்றாவது தொகுப்பான முள்ளிப்புல்லை முன்வைத்து மேற்கொள்ளப்படும் உரையாடல் இது. – மதார்
கேள்வி:
“மீண்டும்
அதே கடற்கரைக்குப் போனேன்
சென்ற முறை அமர்ந்த
அதே இடத்தில் அமர்ந்து
கடலைப் பார்த்தேன்
அன்று பார்த்த அதே அலைகள்”
என்றே உங்கள் தொகுப்பு தொடங்குகிறது. கவிதை எப்போதும் ஒரே வேலையைத்தான் செய்யவேண்டி உள்ளதா?
பதில்: நிச்சயமாக இல்லை. மரம் வளர்கிறது, பூ பூக்கிறது, காய் கனிகிறது. கேட்கவும் பார்க்கவும் ஒரே வேலையைச் செய்வது போலத்தான் தெரியும். ஆனால் அப்படியில்லை அது காலநிலை மாற்றங்களை ஒவ்வொரு பருவத்திலும் எதிர்கொள்கிறது. மரம் உரியவனுக்கு மட்டுமே பழத்தைக் கொடுப்பதில்லை, காய்த்து கனியாகிய பழத்தை பறவைகள் உண்கின்றன. அணில்கள் உண்கின்றன. வழிப்போக்கர்கள் உண்கிறார்கள். கவிதைகளும் அப்படித்தான். அதை எடுத்துக்கொள்கிறவர்கள் கையில்தான் இருக்கிறதென்று நம்புகிறேன். ஒரே வேலையை மட்டுமே செய்யும் கவிதையை யாராலும் எழுத முடியாது. பலதரப்பட்ட மனித உணர்வுகளை கவிதைகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அது அனைத்தும் ஒரே உணர்வாக இல்லாத போது கவிதை மட்டும் எப்படி ஒரே வேலையைச் செய்யும், நிச்சயமாக இல்லை.
கேள்வி: ஒரு சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு கவிதைத் தொகுப்பிற்குத் திரும்பியுள்ளீர்கள். உரைநடையின் ஊடாட்டம் உங்கள் கவிதைகளில் தாக்கத்தைச் செலுத்தியதா? அல்லது கவிதைகளின் தாக்கமே உரைநடை எழுத்துக்குள் மேலோங்கி நின்றதா?
பதில்: நான் எழுதிய ஒவ்வொரு சிறுகதையையும் கவிதையாக எழுதிய பிறகுதான் கதையாக மாற்றினேன். முதலில் நான் எழுத விரும்பும் சிறுகதை, கவிதை வடிவமாக எனக்குள் வரவேண்டும். பத்து வரியோ, இருபது வரியோ அதை அந்த வடிவத்திலே வைத்து நன்றாக நானே உள்வாங்கிய பிறகே அவற்றைக் கதையாக எழுதியுள்ளேன். என்னால் ஒரு சிறுகதையை இனி வரும் காலத்திலும் அப்படிதான் எழுதமுடியும் என நம்புகிறேன். கவிதை மீதான ஆர்வமும், அதன் உரையாடல் உள்ளீடல்களும்தான் எனக்குச் சிறுகதை எழுதும் உத்வேகம் கொடுத்தது. வழக்கமான அதே பதில்தான் இப்போதும் தோன்றுகிறது. நான் எழுதுகிற ஒவ்வொரு சிறுகதையும் எத்தனை பக்கம் செல்கிறதோ அத்தனை பக்கமும் எனக்கு கவிதையை போலத்தான் தெரியும். என்னால் இரண்டையும் பிரித்துப் பார்க்க இப்போதுவரை முடியவில்லை.
கேள்வி: மத்தி, சங்காயம் இப்போது முள்ளிப்புல். மத்தியிலிருந்தும் , சங்காயத்திலிருந்தும் முள்ளிப்புல்லிற்கு வருகையில் துரையிடம் நீங்கியவை என்ன? சேர்ந்தவை என்னென்ன?
பதில்: நிச்சயமாக எனக்குச் சரியான பதில் தெரியவில்லை. இந்தக் கேள்வியை எனது ஒவ்வொரு தொகுப்பையும் முன் வைத்து கேட்கிறீர்கள். ஆனால், எனக்கு ஒவ்வொரு கவிதை எழுதியதும் அடுத்த கவிதைக்கு நான் விலக்கி வைத்து எதை எழுதினேன், அடுத்த கவிதையில் எதைச் சேர்த்தேன் என்பதாக யோசிக்க வைக்கிறது. எனக்கு இதற்குப் பதில் தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக எழுதும் கவிதைகளில் என்னை நான் அதிகமாக விசாரணை செய்யும் ஆளாக மாறியிருக்கிறேனோ என சற்றுத் தோன்றுகிறது. முள்ளிப்புல் தொகுப்பில் அந்த மாதிரியான விசாரணை கவிதை சேர்ந்திருப்பதாக நினைக்கிறேன். வாழ்வில் இறுதிக்கட்டத்தில் உள்ள வயோதிகன் எனது கவிதைகளில் அடிக்கடி வருகிறான். அவனை என்னால் “சும்மா இரு” என அதட்ட முடியவில்லை. அவன் கேட்கும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் சிறுவனாகவும் நான் வருகிறேன். நான் கடந்து வந்த, இனி நான் அடையப் போகிற இரண்டு பருவத்தில் வாழ்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன். இதைச் சொல்லும்போது எனது சிறுவயதில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து தரைமட்டமாகக் கூடிய நிலையிலிருந்த பலவீனமான கட்டிடத்தில் அவ்வளவு தைரியமாக நான் ஏறி விளையாடிய பதின்ம வயதின் நினைவுகள் வருவது ஏனென்று தெரியவில்லை.
கேள்வி: துரையின் கவிதைகளில் ‘கடல்’ என்பது கருவி அல்ல. அது ‘நான்’ ஆகவே வருகிறது.
“யாருடைய கையிலோ
யாருடைய அறையிலோ
யாருடைய சொல்லிலோ விட்டுவந்த அழுகை
எனது பிரபஞ்சத்தின் உள்ளே
இன்னும் தீராமல் சுழன்றுகொண்டிருக்கிறது”
என்ற வரியில் வரும் அழுகை எனக்குக் கடலாகவே பட்டது. கடல் என்ற ஒற்றைப் படிமம் உங்களுக்கு ‘நான்’ ஆனது எப்படி?
பதில்: கடல் எனது வீட்டுக்குப் பின்னால் எப்போதும் படுத்திருக்கும் பிராணியாகவே இருந்திருக்கிறது. அது இட்ட குட்டிகள் தான் அலைகள். தினமும் இரவில் அந்த குட்டிகளின் முனங்கல் சப்தம் கேட்டபடியே உறங்கும் ஊர் மண்டபம். நான் கடலைப் பார்வையாக பார்க்கச் செல்வதற்குக்கூட அவ்வளவு சீக்கிரமாக அனுமதிக்கப்படாதவன். எனது பதிமூன்று வயதிற்கு பிறகுதான் நான் அங்கு செல்ல சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டேன். அந்த பிராணிக்கு எனது கால்களை முகர்ந்து பார்க்க , அந்த குட்டிகள் என்னை நாவால் நக்க நானும் சில காலங்கள் காத்திருந்தேன். நான் கடலாடி இல்லை ஆனால் எனது வாழ்வில் நான் கேட்ட கதை பலவும் கடல் சார்ந்தவைதான். முழுக்க முழுக்க மீன் கவுச்சி கமழும் நிலமது. நான் அங்கு இரவும், பகலும் பார்த்த கேட்ட எல்லாமும்தான் எனது எழுத்தென்று நம்புகிறேன். அது சமயங்களில் நானாக வெளிப்பட்டிருக்கும். அது என்னை மீறிய நிகழ்வு.அந்த நிலம் எனக்குக் கொடுத்த கொடை. அதன் துணை எப்போதும் என்னோடு இருக்குமென்று நம்புகிறேன்.

கேள்வி: இருளுக்குள் அழும் அம்மா கவிதையில் ஒளியைக் கூட்டிக் குறைக்கிறீர்கள், இதற்கா அழுகிறாய் கவிதையில் ஒலியைக் கூட்டிக் குறைக்கிறீர்கள். “நீங்கள் ஒரு கடல்” என்பது இதன் மூலம் நிரூபணமாவதாகக் கொள்ளலாமா?
பதில்: நான் கடல் இல்லை எனக்கு எப்போதும் அப்படி தோன்றியதில்லை. நான் கூடையிலிருந்து கழித்து வீசப்பட்ட இறால் குஞ்சு , கரையில் நீங்கள் நின்று பார்க்கும் போது தனித்து அலையும் பருத்தி வாலை , எப்போதாவது நீங்கள் கரையில் நடக்கும்போது மிதிபடுகிற பிழைக்கத்தெரியாத பிஞ்சு நண்டு.
கேள்வி: உங்களது கவிதைகள் ‘சொல்லப்படும் பாணி’ யில் எழுதப்படுவதாகத் தோன்றுகிறது. சொல்லப்படுபவை கேட்கப்படும். ஆனால் கவிதையில் சிலவை காட்டவும் படவேண்டும். நீங்கள் சொல்லிக்கொண்டே எப்படிக் காட்டவும் செய்கிறீர்கள்?
பதில்: கவிதைகள் செல்லிக்கொண்டே காட்சிப்படுத்தும் வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது. அந்த நடையின்மீது எனக்குத் தனி ஆர்வம் உண்டு. எனது சமகால கவிஞர்களோடு நிகழ்த்திய ஆரம்ப காலகட்ட உரையாடல்களின் பங்கு முக்கியமானது. கவிதைகளைப் பலதரப்பட்ட சோதனை முயற்சிகளுக்கு நாங்கள் எழுதிப் பார்த்த காலமது. இப்போதும் அதே சோதனை முயற்சிகளைச் செய்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அங்கு நான் கற்றவைகள் அதிகம். உலகத்தரம் வாய்ந்த பல கவிதைகளை, கவிஞர்களை எனது சமகாலக் கவிஞர்கள்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். நான் அவைகளால் பெருமளவு ஈர்க்கப்பட்டேன். எனக்கான சரியான நடையை மொழியை நான் அங்கிருந்துதான் கற்றேன். அதன் ஒரு சிறு பகுதிதான் இந்த நடை. நான் நம்புகிறேன், கவிதைக்கு வார்த்தைகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் காட்சிகளும். நான் காட்சிப்படுத்த நினைப்பது எப்போதும் எனக்குத் தெளிவான ஓவியமாக வந்து விடுவதில்லை. அதுவொரு மங்கலான பிம்பமாகத்தான் கிடைக்கும். அதைத் தெளிவுப்படுத்த அதன் மேல் படிந்த நீர்த்துளிகளை கவனமாக நான் துடைத்தெடுக்கும்போது என்ன காட்சி வருகிறதோ அதோடு நிறுத்தி விடுவேன்.
கேள்வி: மகிழ்ச்சிக்குரிய கவிதைகளை முள்ளிப்புல்லில் நீங்கள் எழுதியதாகச் சொன்னாலும், நூற்றி நாற்பதுக்கு நூற்றி நாற்பத்தியோரு குழிகளை வெட்டியவன் அந்த ஒன்றை என்ன செய்யவெனக் கேட்கும் கவிதைகளையும் எழுதியுள்ளீர்கள். குற்றவுணர்ச்சி, மனதின் வினோதம் இவை மீண்டும் மீண்டும் உங்களைக் கவர்வது ஏன்?
பதில்: எல்லா காலத்திலும் மனிதனின் மிக எளிமையான செயல் இன்னொருவரைக் குற்றவுணர்வு படுத்துவதாகதான் இருந்திருக்கிறது. அங்கிருந்துதான் தன்னை சுயமாக காயப்படுத்தும் குணத்தை மனிதன் கற்கிறான். தொடர்ச்சியான மன்னிப்பை , தொடர்ச்சியான மனச்சோர்வை , தொடர்ச்சியான வேண்டுதலை அவன் அங்குதான் வேண்டி நிற்கத் தொடங்குகிறான். எதில் எல்லாம் குற்றவுணர்வு பிறக்கிறது என்பதில் ஒரு வினோதம் இருக்கிறது. நான் இயல்பிலே அதிகமாக வருத்தப்படும் ஆள். அது வளர்ந்து, வளர்ந்து ஒரு காலத்தின்பின் என்னோடு முழுமையாகத் தங்கிவிட்டது. அதனாலே அவை இரண்டும் என்னை கவர்ந்துவிட்டது.
கேள்வி: பொதுவாகவே தமிழில் எழுதும் சமகால இளம் கவிகளின் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு, அவர்கள் கவிதைகளிலிருந்து மனிதர்களை வெளியேற்றிவிடுகிறார்கள் என்று. அப்படியே எழுதினாலும் அந்தக் கவிதை ஒரு கதையாடலாக மட்டும் நின்றுவிடுவதாக இருக்கும். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொதி, பற்றுதல் இரண்டும் அபாரமான கவிதைகள். இரண்டிலும் மனிதர்கள் வருகிறார்கள் ஆனால் இவைகள் மனிதர்களைப் பேசும் கவிதைகளாகவும் இருக்கின்றன. அதே சமயத்தில் பிரபஞ்சத்தைத் தொட்டுவிடும் கவிதைகளாவும் அமைகின்றன. இந்த இருமுனையைச் சமமாகத் தொடுவதைக் குறைவான தமிழ்க்கவிதைகளே செய்துள்ளதாக நினைக்கிறேன். அது பற்றி?
பதில்: தமிழ்க் கவிதைகள் எல்லா தளத்தையும் தொட்டிருக்கிறது. சமகாலத்திலும் அது தொடர்கிறது. மனிதர்களைப் பற்றிப் பேசும் கவிதைகள் சமகால இளம் கவிஞர்களிடம் குறைந்துள்ளதாக சொல்கிறீர்கள். எனக்கு அப்படியா? என்று கேள்வி தோன்றுகிறது. நான் இன்னும் இதைத் தீவிரமாக பார்க்க வேண்டும்.
2026 சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க விரும்பும் நூல்கள்:
- சந்திரா “மலையேற்றம்” : எதிர் வெளியீடு
- சந்திரா “கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள்” : எதிர் வெளியீடு
- நரனின் “குமாரத்தி” : சால்ட் வெளியீடு
- என்.டி ராஜ்குமாரின் மொத்த கவிதைகள் : நீலம் பதிப்பகம்
- சு.வேணுகோபாலின் பனங்காய் மயிலை : யாவரும் பதிப்பகம்
கேள்வி: ஒரு நல்ல கவிதையை வாசித்தால் எனக்குத் தூக்கம் போய்விடும். அதே ஒரு நல்ல கவிதையை நான் எழுதினால் எனக்குத் தூக்கம் வரும் என்று ஒருமுறை சொன்னீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்..
பதில்: இரண்டுக்கும் நடுவில் தூக்கம்தான் இருக்கிறது. எது என்னிடம் இல்லையோ அதைத் தான் கவிதைகள் அதிகமாக கேட்கிறது, கொடுக்கிறது.
ஒரு நல்ல கவிதைக்கு தொந்தரவாகும் வாசகன் நான். என்னை பாதித்த கவிதைகள் எப்போதும் என்னை விட்டு நீங்கியதில்லை. பலநேரங்களில் என்னைப் பின் தொடர்கின்றன. தூக்கம் வரை கனவில் கூட. அதுபோலவே நான் கவிதை எழுத அதிகம் நேரம் எடுத்துக்கொள்பவன்.
நான் கவிதை எழுதும் மனநிலைக்குப் பெரும் மரியாதை கொடுப்பவன். அதன் போக்கில் அந்நாளைக் கொடுத்து விடுவேன். நான் எழுதியது எனக்கே நல்ல கவிதையாக தோன்றும் போது உற்சாகமாகத் தூங்கச் சென்றுவிடுவேன். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த நல்ல கவிதை என் மனதில் மட்டுமே கொண்டாட்டமாக இருக்கும்.
கேள்வி: இந்தத் தொகுப்பில் வரும் கிணறு என்கிற கவிதையும் எனக்குப் பிடித்தமானது. மொத்த உலகும் கிணறாகும் தருணம் அதில் வருகிறது. அதே போல மலையைச் சிலுவையில் சுமந்து இறங்கும் கவிதையும். ஒட்டுமொத்தமாக ஒன்றை அள்ளிக் கவிதையில் திரட்டுகிற அதே நேரத்தில் நீங்கள் உணர்ந்த வலி அல்லது முரண் கவிதையில் கச்சிதமாகக் கடத்தப்படுகிறது. உங்கள் கவிதைகளை நீங்கள் திருப்பி வாசிக்கிறபோது இதை உணர்ந்துள்ளீர்களா?
பதில்: நான் வாசிப்பதை விட வேறு யாராவது எனது கவிதையை குறிப்பிட்டுச் சொல்லும்போது எனக்கு அந்த வலி உணர்வு அதிகமாக எழுந்துள்ளது. மத்தி தொகுப்பில் வருகிற “நல்ல வாழ்வுதான்” கவிதையை யாராவது சொன்னால் வலி மிகுந்த பயம் வந்து விடும். சில கவிதைகள் நம்மைப் பின்பற்றுகின்றன என நம்புகிறேன். அதனால் நீங்கள் சொல்லுகிற உணர்வுகள் பெரும்பாலும் எனக்குள் எப்போதுமே இல்லாதது போல ஒளிந்து இருந்தாலும், யாராவது சில கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது உடனே வெளியே வந்துவிடும். வேறு மாதிரிச் சொல்ல வேண்டும் என்றால், எனது வலி மிகுந்த கவிதைகள் மட்டுமல்ல இலகுவான கவிதைகளைப் படிக்கும்போதும் நானே பயப்படுவேன்.
கேள்வி: அடுத்தது கவிதைகளா? புனைவா?
பதில்: அடுத்தது புனைவுதான்…
000
முள்ளிப்புல் – எதிர் வெளியீடு

மதார்
மதார் (முழுப்பெயர்: சா. முகமது மதார் முகைதீன், பிறப்பு: ஏப்ரல் 14, 1993) நவீனத் தமிழ் கவிஞர். அரசியல் தீவிரம், மனிதர்களின் துயரம், கசப்பு ஆகியவற்றிலிருந்து விலகி குழந்தைகளின் கள்ளமின்மை நோக்கி தன் கவிதைகளை விரித்தவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.