நீங்கள் உத்தேசிக்கும் கிளாசிக்குகளின் காலம் முடிந்துவிட்டது : ஜி.கார்ல் மார்க்ஸ்

கேள்வி: ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு உங்களுடைய  இரண்டாவது நாவல் வெளிவந்திருக்கிறது. இடையில் ஒரு சிறுகதைத் தொகுப்பும்  வெளிவந்தது .இந்த இடைவெளி ஒரு படைப்பாளராக உங்களுக்கு என்ன மனநிலையை தோற்றுவித்தது?

பதில்: நான் இலக்கு வைத்துக்கொண்டு எழுதுபவன் அல்ல. ஆனாலும் கூட ஐந்தாண்டுகள் என்பது பெரிய இடைவெளிதான். நடுவில் சென்ற ஆண்டு ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்துவிட்டாலும் நான் ரொம்பவும் குறைவாக எழுதுகிறேன் என்கிற குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொண்டேன். யார் அந்த குற்றச்சாட்டை வைத்தது என்று கேட்கக் கூடாது. இப்போது வெளி வந்திருக்கும் பீச் நாவலைக் கூட நான் தீம்புனல் வெளிவந்தவுடனே தொடங்கி விட்டேன். ஆனால் என்னுடைய பணிச் சூழல் எழதும் மனநிலையில் இருந்து அப்புறப்படுத்தி விட்டது. எப்படியோ அதிலிருந்து வெளியில் வந்து நாவலை எழுதி முடித்துவிட்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

கேள்வி: தீம்புனல் நாவல் தனது பின்புலமாக ஒரு விவசாய நிலத்தின் , அதன் மாந்தர்களின் வளர்சிதை மாற்றங்களை கொண்டிருந்தது. உங்களது பீச் நாவல் நகரத்தை , புதிய நூற்றாண்டின் இளைஞர்களை பேசியிருக்கிறது. இரண்டுமே வேறு தளங்கள் எனும்போது மொழியில், புனைவுப் பரப்பில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? 

பதில்: ஆமாம், இரண்டும் முழுக்கவும் வேறான தளங்கள். தீம்புனல் நிறைய கவித்துவ சித்தரிப்புகளுக்கான வெளியைக் கொண்டிருந்தது. ஆனால், சமகாலத்தை பிரதானப்படுத்தும் புனைவான பீச் நாவலில் அதற்கான வெளி குறைவு. அது மட்டுமல்லாது உரையாடல்களில் தமிழைப் பயன்படுத்துவதில் ரொம்பவும் திணறி விட்டேன். அது எழுத்தாளனாக என்னுடைய பிரச்சினை இல்லை அல்லவா? ஒரு கட்டத்தில் இதை முழுக்கவுமே தங்லீஷில் எழுத வேண்டியிருக்குமோ என்று கூட அஞ்சினேன். ஆனால், அந்தச் சவாலை எதிர்கொள்வதும் நன்றாகத்தான் இருந்தது. நாவலை வாசிக்கும் வாசகர்கள்தான் அது பற்றி மேலும் பேச முடியும். ஆனாலும் சமகாலத்தை அதன் அசல் தன்மையோடு எழுத்தில் கொண்டு வந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

கேள்வி: கிளாசிக் நாவலுக்குரிய மாபெரும் வாழ்க்கை எனும் இலக்கணத்தை மீறிய நவீன நாவல்கள் தமிழில் எழுதி முடிக்கப்பட்டுவிட்டன. கிளாசிக் நாவல் என்ற வகைமை மீளவும் வந்து தற்பாேது அந்த மாதிரியான நாவல்களின் வருகை சற்று நின்றிருக்கிறது. இந்த நாவலை எந்த வகைமை என நீங்கள் நினைக்கிறீர்கள் ? 

பதில்: நீங்கள் முன்வைக்கும் இத்தகைய அனுமானங்கள் குறித்து எனக்கு எப்போதும் குழப்பங்கள் உண்டு. என்னுடைய நாவல் கிளாசிக் நாவலா இல்லையா என்பது குறித்தெல்லாம் நான் ரொம்பவும் மெனக்கெடுவதில்லை. நான் சமகாலத்தை ரொம்பவும் சிதறுண்ட ஒன்றாகத்தான் பார்க்கிறேன். என்னுடைய சமீபகாலச் சிறுகதைகளில் அந்த வாழ்க்கையை அதே சிதறுண்ட தன்மையோடு சொல்வதற்கும் முயல்கிறேன். இந்த நாவலும் அப்படித்தான். இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதை அதே தொனியில் சொல்ல முயன்றிருக்கிறேன். இல்லை, நீங்கள் சுற்றி வளைக்காமல் நேரடியாக ஏதாவது சொல்லியே ஆக வேண்டும் என்று கேட்டால், நீங்கள் உத்தேசிக்கும் கிளாசிக்குகளின் காலம் முடிந்துவிட்டது என்று வேண்டுமானால் சொல்வேன்.

கேள்வி: ஆண் கதாபாத்திரங்களைவிட பெண் கதாபாத்திரங்கள் மீதான உங்களுடைய அவதானிப்புகள் துல்லியமானதாக இருக்கின்றன. இந்த நாவலிலும் அந்தத் தன்மை உண்டு. ஏதேனும் விஷேசமான காரணங்கள் இருக்கின்றனவா இப்படி அமைவதற்கு ? 

பதில்: ஆண்களை விடப் பெண்களைக் கொஞ்சம் ஆழமாக உற்றுப் பார்க்கும் சுபாவம் என்னிடம் இருப்பதால் அப்படி எழுதுகிறேனோ என்னவோ. எனக்கு ஆண்களை விடப் பெண்கள் சுவாரஸ்யம் கூடியவர்களாகத் தெரிகிறார்கள். அவர்களிடம் ஆண்கள் போராடித் தோற்பதை, ஏமாறுவதை எழுதுவது சவாலாக இருக்கிறது.

ஜி.கார்ல் மார்க்ஸ்

கேள்வி: இந்த  நாவலில் வருகிற நான்கைந்து கதாபாத்திரங்களுக்குமே பூர்வீகம் என ஒன்று மெல்லிய கோடாக மட்டுமே இருக்கிறது. ஒரு ஞாபக மறதி போல. பெயருக்குக் கூட நாஸ்டலாஜியா இருப்பதில்லை. இதில் ஏதேனும் திட்டமிடல்கள் இருந்தனவா ?

பதில்: ஆமாம் அது தேவையில்லை என்றே நினைத்தேன். அந்தப் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உதிரிதன்மையில் அவர்களது பூர்வீகம் ஒருவித குறுக்கீட்டை நிகழ்த்தும் என்று அஞ்சினேன். வாசகர்களுக்கு நான் மேலும் அதிகமான தகவல்களைத் தர வேண்டிய நிர்ப்பந்தத்தை அது உருவாக்கும். அது வாசிப்பின்பதை குறைக்கவும் செய்யலாம் என்பது என் எண்ணமாக இருந்தது.

கேள்வி: அபுனைவில் நீங்கள் மிகவும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பவராக இருக்கிறீர்கள். புனைவில் ஒரு நெகிழ்வு தென்படுகிறது. நீங்கள் வழங்குகிற சுதந்திரமா அது? அல்லது கதை தீர்மானிக்கிறதா அதை? 

பதில்: என்னுடைய அபுனைவில் வெளிப்படும் தர்க்க ஒழுங்கையும் political correctness மனநிலையையும் நீங்கள் அவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தர்க்கங்ககளைக் கைவிடுவதன் வழியாகவே நான் புனைவுப் பரப்பிற்குள் செல்கிறேன். அது ஒரு நெகிழ்வை சாத்தியப்படுத்துகிறது.

கேள்வி: நாவலில் உள்ளோட்டமான வருகிற விழுமிய மாற்றங்கள் மீதான துணுக்குறல், பிரக்ஞைபூர்வமாக சமூகத்தில் பிரதிபலிப்பதாக நினைக்கிறீர்களா? அல்லது ஒரு படைப்பாளர்தான் அதை சுட்ட வேண்டியதிருக்கிறதா ? 

பதில்: இல்லை. வெளிப்படையாக அது அவ்வாறு நிகழ்வதில்லை. ஆனால் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். படைப்பின் வழியாக அந்த விழிப்புணர்வைத் தூண்டுவதே ஒரு எழுத்தாளன் செய்யவேண்டியது. இப்படி தூண்டப் போகிறேன் என்று அவன் பிரகடனப்படுத்திக்கொள்வதில்லை என்பதே கலையின் சுவாரஸ்யம்.

கேள்வி: சரி தப்பு என்ற இரண்டு நிறங்கள் உங்கள் எழுத்தில் புலப்படுவதில்லை. மாறாகச் சாம்பல் வெளிகளை உருவாக்குவதில் அவை வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறேன். அதே போல அரசியல் சரி தவறுகளும், கலாச்சார சரி தவறுகளும் தங்கள் இறுக்கங்களை உங்கள் எழுத்தில் இழந்துவிடுவதாக நினைக்கிறேன். நீங்கள் அப்படி உணர்கிறீர்களா? ஒரு படைப்பாளராக இந்த சுதந்திர மனதை எப்படி தக்கவைத்துக் கொள்கிறீர்கள்?

பதில்: இந்தக் கோடுகள் மங்குவதே கலையின் இடம். அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன். அந்தத் தத்தளிப்புகளை எழுதுவது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு வகையில் தீர்ப்பிடும் மனநிலையில் இருந்து என்னை விலக்கி வைத்துக் கொள்வதற்கு அது உதவுகிறது. அதற்காக நான் என்ன சமரசங்களையும் புனிதப்படுத்தி விடுகிறேன் என்பதல்ல. என் அபுனைவுகளில் இருக்கும் புனைவுத் தன்மை இந்த மயக்கத்தின்பாற்பட்டதுதான்.

கேள்வி: புதிய வாழ்க்கை முறைகள். அதிவேக மனநிலை மாற்றங்கள். உலகமே ஒரு ஸ்க்ரோலில் சுபாவ மாற்றம் அடையும் ஒரு மாயையில்  இலக்கியம் எந்த விதந்தில் தன்னை இருப்பை நிறுவிக்கொள்ளும் என நீனைக்கிறீர்கள் ? 

பதில்: இலக்கியம் எந்த காலத்திலும் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும். ஏனெனில் அது மானுட தத்தளிப்பை அடிப்படையாகக் கொண்டது.

கேள்வி: வாசகர்களுக்கு இந்த வருடம் நீங்கள் பரிந்துரைக்கும் நூல்கள் ?

பதில்: இது ரொம்பவும் கிளிஷேவான கேள்வி. பதில் சொல்வதற்கு சோர்வாக இருக்கிறது. நீங்கள் கட்டாயப்படுத்தினால் ஒரே ஒரு நூலை மட்டும் சொல்வேன். அது பீச் நாவல். நான் எழுதியது.

000

பீச் – எதிர் வெளியீடு

சதீஷ்குமார் சீனிவாசன்

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். உயிர்மை இணைய இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. அருமையான நேர்காணல். கார்ல் மார்க்ஸ் ஏன் ஈர்க்கிறார் என்பதற்கு கடைசி கேள்விக்கான பதிலை பதில்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop