அகழ் : சென்னை புத்தகக் காட்சி சிறப்பு பதிவுகள் நிறைவு

அகழ் இணையதளத்தில், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தினமும் எழுத்தாளர் உரையாடல்களை வெளியிட்டு வந்தோம். சென்னை புத்தகக் காட்சியை ஒட்டிய முன்னெடுப்பு இது. புதிய நூல்களை கவனப்படுத்துவிதமாக இத்தொடர் உரையாடல்களை பிரசுரித்தோம். இந்த முன்னெடுப்பு பரவலான கவனத்தை ஈட்டியதை வாசக எதிர்வினைகள் வழியே அறிந்துக் கொண்டோம். வரவேற்புக்கு நன்றி.

இந்த முன்னெடுப்புக்கு ஒத்துழைத்த எழுத்தாளர்களுக்கு முதன்மையாக நன்றி சொல்ல வேண்டும். நவீனத் தமிழ் இலக்கியம் என்பது நெடுங்காலமாகவே சிறிய வட்டத்திற்குள்ளேயே புழங்கி வருகிறது. இதை மலினமாக பேசுபவர்கள் உண்டு. எழுத்தாளர்கள் தங்களுக்குள்ளேயே வாசித்துக் கொள்ளும் குழுச் செயல்பாடு என்று ஏளனமாக சொல்வார்கள். வெகுமக்கள் புகழை பிரதானமாக கருதுவோர் அப்படியே சிந்திக்க முடியும். ஆனால், அவ்விமர்சனம், உள்ளபடியே, நவீனத் தமிழ் இலக்கியத்திற்கே உரிய ஒரு நேர்மறையான அம்சத்தையே சுட்டிக் காட்டுகிறது. எழுத்தாளர்கள் தம் சமகாலத்தினரை வாசிக்கிறார்கள். அவர்களோடு உரையாடலில் இருக்கிறார்கள். இலக்கியத்தை ஒரு கூட்டியக்கமாக கருதுகிறார்கள் என்பதற்கான சான்று அது.

நிச்சயமாக, பொது வாசகர்கள் ஒரு சூழலில் பெருகி இருக்க வேண்டும். அப்போதே வாசிப்பு ஒரு கலாச்சார செயல்பாடாக நிலைக் கொள்ள முடியும். ஆனால் எழுத்தாளர்களே மதிப்பீடுகளை உருவாக்க முடியும். அவ்விதம் எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் வாசிப்பது ஓர் ஆரோக்கியமான சூழலின் அறிகுறி.

அகழில் வெளியான இந்த தொடர் உரையாடல்கள் சக எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டவை என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. தனிமனித நோக்கு நம் காலத்தின் யதார்த்தமாக இருக்கும் வேளையில், பொதுக் காரியங்கள் மீதான நம்பிக்கை இன்னமும் வலுவாக இருக்கிறது என்பதன் அத்தாட்சி இது.

எவ்வித மனத்தடையும் இல்லாமல் பிற எழுத்தாளர்களின் நூல்களை குறுகிய இடைவெளியில் வாசித்து ஆழமான கேள்விகளோடு இவ்வுரையாடல்களை மேற்கொண்டிருக்கிறார்கள். அதன் நிமித்தம் எழுத்தாளர்கள் – ஏ.வி.மணிகண்டன், ஜனார்த்தனன் இளங்கோ, எம்.கோபாலகிருஷ்ணன், ஆனந்த் குமார், ஆர்.காளிப் பிரஸாத், ரா.கிரிதரன், சித்ரன், அனோஜன் பாலகிருஷ்ணன், மதார், சதீஷ்குமார் சீனிவாசன் – ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. ஈடுபாட்டுடன் பதிலளித்த எழுத்தாளர்கள் – ஷங்கர்ராமசுப்ரமணியன், அழகிய மணவாளன், க.மோகனரங்கன், இசை, ஜா.ராஜகோபாலன், சங்கரன், சுனில் கிருஷ்னன், வாசு முருகவேல், ச.துரை, சயந்தன், ஜி.கார்ல் மார்க்ஸ் – ஆகியோருக்கும் நன்றி.

சில எழுத்தாளர்கள், தனிப்பட்ட முறையில் தொடர்புக் கொண்டு, மிகுந்த உரிமையோடு தங்கள் புத்தகம் இப்பட்டியலில் இடம் பெறாததை கண்டித்தார்கள். நிச்சயமாக மேலும் பல நல்ல புத்தகங்களுக்கும் இத்தகையை உரையாடல்களை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் அகழ் போன்ற ஒரு இணையத்தளத்துக்கு சில எல்லைகள் உண்டு. சிறிய நட்புக் குழுவால் இத்தளம் நடத்தப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை கவனப்படுத்த அதிக எழுத்தாளர்களிடம் பேச வேண்டும். ஒருங்கிணைக்க வேண்டும். பின் தொடர வேண்டும். அதற்கான வளம் இன்றைய நிலையில் இல்லை என்பதே உண்மை.

வருங்காலங்களில் இன்னும் பல எழுத்தாளர்களையும் உள்ளடக்கி இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொள்ள விரும்புகிறோம். அதற்கான ஆதரவையும் கோருகிறோம். எனினும் இப்பட்டியலில் ஒரு பெண் எழுத்தாளர்கூட இடம்பெறவில்லை என்ற விமர்சனத்துக்கு தீவிரமாகவே முகங்கொடுக்கவுள்ளோம். அதன் நிமித்தம் வருந்தவும் செய்கிறோம்.

000

ஓரு கண்டனம்

சென்னை புத்தகக் காட்சி நடைபெற்றுவரும் வேளையில் அண்மையில் வெளியான ஒரு செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியது. இவ்வருடம் பபாசி நிர்வாகம், புத்தகக் காட்சியை பிரபல்யப்படுத்தும் நோக்கில் புத்தகம் சார்ந்து இயங்கும் யுடியூபர்களுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்திருக்கிறது. ஆனால் அத்திட்டத்திற்கு ஸ்ருதி டிவி இலக்கிய சேனலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஸ்ருதி டிவி தன் முகநூல் பக்கத்தில் இதை குறிப்பிட்டுள்ளது. “மரியாதைக்குரிய பபாசி நிர்வாகத்தினருக்கு.. புத்தகக் காட்சியை பரவலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக book vloggers, review channels ஆகியவற்றை collaboration-க்கு அழைத்த விபரம் கண்டேன். கடந்த 12 வருடங்களாக இயங்கி வரும் shruti.tv உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாது. அழைத்து ஒரு இந்த வருஷம் என்ன செய்யப்போறீங்க என்று எதனாவது கேட்கலாம். அது கூட வேண்டாம் ஒரு பைக் பாஸ் கொடுக்கலாம்.. எங்களது ஒரு வீடியோ அல்லது Facebook post-ஐ கூட உங்களது social media-வில் share செய்ய மாட்டீர்கள். மகிழ்ச்சி. புறக்கணிப்பு மறத்துவிட்டது..“

கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இலக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து யுடியூப்பில் பதிவேற்றி இலக்கியத்தின் முகவர் போல ஸ்ருதி டிவி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புத்தக வாசிப்பு சார்ந்த ஒரு முன்னெடுப்பில் அவர்கள் விடுபடுவது நியாயமன்று. இது எப்படியோ தொடர்ந்து நடக்கிறது. எந்தவொரு பொதுக் காரியத்திலும் மூலதனம் சேரும்போது, அதுவரை யார் அந்த காரியத்துக்காக உழைத்தார்களோ அவர்களே முதலில் புறக்கணிக்கப்படுகிறார்கள். பபாசிக்கு இந்த நேரத்தில் அகழ் சார்பில் கண்டனங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ருதி டிவிக்கு தார்மீகமாக ஆதரவு தெரிவிக்கிறோம்.

ஸ்ருதி டிவிக்கு பத்திரிக்கையாளர்களுக்கான இலவச பைக் பாஸ் கூட கொடுக்கப்படாமல் இருந்திருக்கிறது. மேலும் அரங்குகளில் தொடர்ந்து ஒலிக்கும் அறிவிப்புகள், காணொளி பதிவுகளுக்கு இடையூறு செய்யும்விதமாகவும், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் தங்களுக்குள் உரையாடுவதை சிரமப்படுத்தும் வகையிலும் இருந்திருக்கின்றன. இதையும் ஸ்ருதி டிவி தன் முகநூல் பக்கத்தில் பகிர, பபாசி அவற்றை இப்போது கலைந்திருக்கிறது. அவர்களுக்கு பாஸ் வழங்கியுள்ளார்கள். அறிவிப்புகளையும் குறைத்திருக்கிறார்கள். இதையும் ஸ்ருதி டிவியே பதிவு செய்துள்ளது. எதிர்வினைகளுக்கு செவிமடுக்கும் பண்பை பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம்.

அகழ் ஆசிரியர் குழு

அகழ் உரையாடல்கள்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop