கல்லுக்குத் திரும்பு அம்மை : ஆசை

கவிஞர் ஆசையின் புதிய நூலான “கல்லுக்குத் திரும்பு அம்மை” (பதிகங்களும் அந்தாதியும்), எழுத்து பிரசுரம் வெளியீடாக வந்துள்ளது. அந்நூலுக்கு கவிஞர் கண்டராதித்தன் எழுதிய முன்னுரையினையும், நூலிலிருந்து ஒரு பதிகத்தையும் இங்கே வெளியிடுகிறோம் – அகழ்

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் – கண்டராதித்தன்

துருக்கியின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்ஸ் எனும் நகரத்தில் கி.பி 10 நூற்றாண்டின் மத்தியில் அர்மீனிய மன்னர் பக்ராடிட் என்பவரால் கட்டப்பட்ட  அர்மீனிய அப்போஸ்தலிக் தேவாலயம் ஒன்றுள்ளது. இது  பிற்காலத்தில் ரஷ்ய படையெடுப்பில் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சாகவும் அதன் பின்னர் அர்மீனிய கதீட்ரலாகவும் மாற்றப்பட்டது.தற்போது துருக்கி வசமிருந்து மசூதியாக இருந்துவருகிறது. பல்வேறு போர்களால் பாதிப்புக்குள்ளாகிய, பனி படர்ந்த சிதிலமடைந்த பகுதி இது. வரலாறு பல்வேறு விதமாக மாறினாலும் இந்த தேவாலயம் இன்னும் அதன் பொலிவு குன்றாமல் உள்ளது. இந்த  தேவாலயத்தின் ஆன்மா, அந்த நகரின் வரலாற்றுடனும், அந்நகரில் வசிக்கும் மனிதர்களுடனும் உள்ளும் புறமுமாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டே வந்துள்ளது. பல்வேறு போர்களுக்கிடையிலும் கார்ஸ் கதீட்ரல் என்ற அந்த தேவாலயம் இன்னும் அழியாமல் மனிதனின் மதம் என்ற தீராத நம்பிக்கையை தன்னளவில் காத்துநிற்கிறது.

நானறிந்த வரையில் கவிஞர் ஆசை ஒரு நாத்திகர். ஆனால் ‘கல்லுக்குத் திரும்பு அம்மை’ என்ற பதிகங்களுடனும் அந்தாதியுடனும் ஒரு தொகுப்பை எழுதியிருக்கிறார் என்பது எனக்கு விநோதமாகத் தோன்றியது. அர்மீனிய அப்போஸ்தலிக் தேவாலயம் தன்னுள் வெவ்வேறு வித மதங்களையும்,மார்க்கங்களையும் தாங்கி நின்றுள்ளதோ அதுபோன்றே தில்லைக்காளி பதிகமும், ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் பதிகமும் கிடைத்துள்ளது. தேவாரப் பாடல்களை பதிகத்துக்கு உதாரணமாகவும், அந்தாதிக்கு அபிராமி அந்தாதியை உதாரணமாகவும் சொல்லாம்

இக்கவிதைகளில் தில்லைக்காளி பதிகம் சிதம்பரத்திலும், அய்யம்பாளையம் உத்தமராய பெருமாள் கோவில் பதிகம், ஆரணி அருகில் உள்ள பெரிய அய்யம்பாளையம் உத்தமராய பெருமாள் கோயில் நிலைப்படிகளுக்குள்ளாகவும் எழுதப்பட்டிருக்கின்றன.

கல்லொரு புறப்பாடு
சிலசமயம் 
கல்லொரு வெளிப்பாடு
சிலசமயம்
கல்லொரு தோற்றம்
சிலசமயம் 
கல்லொரு எண்ணம்
சிலசமயம்
கல்லொரு மனம்
சிலசமயம்
கல்லொரு அமைதி
இங்கே இப்போது
அமைதி குளிர்கிறது
இங்கே இப்போது.

இக்கவிதைகள் முழுக்க ஆட்கொள்ளப்பட்ட மனநிலையில் எழுதப்பட்டுள்ளன, திருத்தலத்தின் பிரகாரம், உட்பிரகாரம், மூலவர், அருட்பிரசாதம், அருட்ஜோதி என கவிஞரை ஆளுமைக்குட்படுத்திய அனைத்தும் உணர்ச்சிப்பிரவாகமான   மொழியில் வெளிப்பட்டுள்ளன. போற்றிப்பாடலுக்கும் பதிகத்துக்கும் உள்ள வித்தியாசம் மொழிதான். ஒரு கடவுள் மறுப்பாளர் தேவார, திருவாசகப் பதிகங்களில் இருந்து கற்பது மொழியின்  ஆன்மாவை. அங்கிருந்து மொழியின் திருவுருவைக் காண்பதே பேருவுகை.

கண்டராதித்தன்

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்ற ஞானசம்பந்தர் எழுதிய தேவாரப் பதிகத்தை எனது பதின்ம வயதில் வாசித்தபோது என்னால் அப்பதிகத்தில் இருந்த இறைவனாரையும் உமாதேவியையும் நினைத்துக்கொள்ள முடியவில்லை. மாறாக கழுமல வளநகர் என்ற ஊரில் இருந்த ஒரு மனம்பொருந்திய தம்பதியைக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

அம்மை சன்னிதிக்குள்
அம்மை ஒரு யாசகி
யாவரும் அங்கே யாசகரே
பெறும் சன்னிதியிலும்
அதிகம் பெறுபவள் அவளே
அருள் செய்யும் சிலிர்ப்பே
யாவினும் மிகப்பெரிது

என்ற இடத்தை கவிஞர் அடைவதை ”நல்லாலொடும் பெருந்தகை” இருப்பதைக் காண முடிகிறது.

குங்குமச் சன்னிதியில்
கால் வைக்கிறது மனது
காணாததைக் கண்டதுபோல்
குங்குமச் சகதியில்
விழுந்து புரள்கிறது
குங்குமப் பன்றியே
பொறாமை கொள்கிறேன்
உன் கருஞ்சிவப்பு 
மேனி கண்டு.

மேற்கண்ட கவிதையை வாசிக்கும்போது ஆவுடையக்காளின் ”சிறுக்கி நடையும் பிடி இடையும் உடையும் கண்டு சிந்தை உருகலாமோ மனமே” வரிகள் நினைவுக்கு வந்தன.

கல்லுக்குத் திரும்புதல் பதிகத்தில் 

”உன்னலங்காரம்
நாங்கள் 
வெளிநிற்கிறோம்.
தன்னலங்காரம்
கல்லின் வெப்பம்
கல்மனசின் குளிர்
இரண்டும் 
ஆரத்தழுவி
அர்த்தநாரி நடனம்
ஆடட்டும்”
என்கிறார் புதுக்கவிதை நடையில் ஆசை, தங்கத் தேருக்குத் தனி அலங்காரம் என்றார் நம்பி நவீன கவிதையில்.

புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக் காலத்துக்கு முன்பிருந்தவொரு மொழிநடை இக்கவிதைகளின் பின்புலமாக இருப்பதை உணரமுடிகிறது. இவற்றைப் பக்திப்பாடல்கள் என்று  வரையறை செய்யமுடியாது. இவற்றில் ஒருவித நளினமான நவீனம், வேதாந்தத் தன்மையுடனான பரவச மனநிலை, அனுபூதி, தியானம் ஆகியவை உள்ளொடுங்கி காணப்படுகின்றன.

வெளிவருமுன்னே
அன்னையின் கண்டாமணியை 
நாவால் அடிக்கிறேன்
அதில் கார்வை சுரக்கிறது
வாயதனைக் குடிக்கிறது
அம்மையின் பால்மட்டும்
மனம் வருடி
வயிற்றுக்குச் செல்வதன்
காரணமே 
அந்த கார்வைதான்

என்ற கவிதை ‘போதையார் பொற்கிண்ணத்தடிசில் பொல்லாதென’ தொடங்கும் மற்றொறு பதிகத்தை நினைவுக்குக் கொண்டுவந்தது.

நாம் காண்பதும் உணர்வதும் நம்புவதும் என்றாவது கவிதையாகிவிடுகின்றன. சுயதர்க்கத்தோடு கவிதை எழுத இடமுண்டா  என்று என்னைக் கேட்டால் உண்டு அல்லது இல்லை என்று இரண்டையும்தான் சொல்வேன். சுயதர்க்கமில்லாத உணர்வெழுச்சியில் தன் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தரிசனத்தை, ஒரு ஜீவவொளியை கவிஞன் காணமுடியும் போது அங்கு அவன் சரணாகதி அடையவும், அதிலிருந்து முற்றிலுமாக விலகவும் முடியும் என்றே கருதுகிறேன்.

ஆனால், இந்த இருபொருள் நிலை கவிஞனாக, நாத்திகனாக, இவ்வுலக இயற்கையின் முன்பு தன் ஆன்மாவை ஒப்படைக்கும் ஜீவனுக்கு சாத்தியமாகிறது. அந்த வகையில் ஆசையின் இக்கவிதைகள் கலைநுட்ப அளவுகோலை முற்றாகக் கைவிட்டு ஆத்ம தரிசனத்தை நோக்கி நகர்ந்திருப்பதை உணரலாம். 

000

“கல்லுக்குத் திரும்பு அம்மை” நூலிலிருந்து

கல்லுக்குத் திரும்புதல் பதிகம்

[1]

கல்லுக்குத் திரும்பு
அம்மை
உன்னலங்காரம்
நாங்கள்
வெளிநிற்கிறோம்
தன்னலங்காரம்
கல்லின் வெப்பம்
கல்மனசின் குளிர்
இரண்டும்
ஆரத்தழுவி
அர்த்தநாரி நடனம்
ஆடட்டும்
கல் வேடிக்கை பார்க்கட்டும்
கல்லுக்குத் திரும்பு
அம்மை

[2]

கல்லென்பது
சொல்லுக்குத் தாய்
சொல்லாமல் நிற்கும் கோலம்
சொன்னதையும்
எடுத்துக்கொண்ட கோலம்
சொன்னது சொல்லாதது
இருப்பது இல்லாதது
எல்லாம்
உட்சுழன்று இரையும்
ஓலம்

[3]

கல்லொரு புறப்பாடு
சிலசமயம்
கல்லொரு வெளிப்பாடு
சிலசமயம்
கல்லொரு தோற்றம்
சிலசமயம்
கல்லொரு எண்ணம்
சிலசமயம்
கல்லொரு மனம்
சிலசமயம்
கல்லொரு அமைதி
இங்கே இப்போது
அமைதி குளிர்கிறது
இங்கே இப்போது

[4]

கல்துயில்
நீக்க வேண்டாம்
கல்லமைதி
கலைக்க வேண்டாம்
கல்மூச்சு கனவாகிறது
விடும் மூச்சு
வெளிநின்ற
மனமாகிறது
உறைபடு
உலகிலேயே
வழிபடல் தொடரட்டும்

[5]

கல்லுக்குள் அம்மையைக்
கச்சிதமாய்ப் பிடித்தது
எவர் கைகள்
எவர் கையில் அம்மை
தன்னுயிரைப் பிடித்துவைத்தாளோ
அவர் கைகள்
உயிர் தன் உடலைத் தேடும்
முயற்சியில்
சிலையாகிறது

[6]

அம்மை திருவுரு
முழு இதயம்
நிச்சலனமே
அதன் கோலம்
அதன் துடிப்போ
என் கண்ணுள்
அதன் வெடிப்போ
என் நெஞ்சுள்

[7]

கல்லே பூ
கனியே மனம்
கல்லே சுவை
அமுதின் குவை
சொல்லே மணம்
சுடரே அருள்
சுடரே அருந்தி
படரும் பெருந்தீ
அதில்
கல்லே பூ
கருகாத பூ

[8]

கல்லின் மேல்
எறியப்பட்ட சொற்கள்
கனியாகித் தொங்குகின்றன
அதே கனவில்
நானும் எறிகிறேன்
கனியாகித் தொங்குமோ
உன் இதயம் சென்று
தங்குமோ
ஏற்றலின்றித் திரும்புமோ
தெரியாது
இது உனை நோக்கி
எறியப்பட்ட கனி
அப்பெருமை போதும்
அது மட்டுமே
எனக்குத் தெரியும்

[9]

கல்லுள்ளிருந்து வீசுகிறது
ஒரு காற்று
கன்னம் தடவிச் செல்கிறது
கண்மூடிக் கொள்கிறேன்
உள்ளே
கண்திறந்து சிரிக்கிறது
கற்சிலை

[10]

கல்லுக்குத் திரும்பிவிட்டாள்
அம்மை
கற்சிலை ஆகிவிட்டாள்
அம்மை
சொற்சிலை செய்கின்றேன்
முன்னே
அம்மைச் சொல்
என்பதால்
சொக்கிப் போய்க்
கல்லுக்குத் திரும்பிவிட்டேன் நானும்
தன்னே

ஆசை

ஆசிரியர் குறிப்பு : இயற்பெயர் ஆசைத்தம்பி. கவிஞர். பத்திரிக்கையாளர்.  'சித்து’ (2006), ‘கொண்டலாத்தி’ (2010), ‘அண்டங்காளி’ (2021), ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியர். க்ரியா அகராதியில் (2008) துணையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டுவரும் ஆசை காந்தி பற்றி ‘என்றும் காந்தி’ (2019) எனும் நூலையும் வெளியிட்டுள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop