
இதுவரை நாம் பார்த்த இந்தியத் தத்துவ மரபுகள் ’கடவுள்’ எனும் கருதுகோளை ஆராயவோ, வகுத்துக்கொள்வதற்கான முயற்சியையோ செய்யவில்லை, ஒருவகையில் அதை விவாதிக்கவே மறுத்தன. கடவுளை உணர்வது அல்லது அடைவது என்ற அளவிற்கு இல்லாவிட்டலும் கூட, கடவுளை தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் கூட ஒருவர் பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாம் முன்பு பார்த்த சில பொருள்முதல்வாத தத்துவமரபுகளுக்கு கடவுள் என்ற கருதுகோளே தேவையில்லை.
நிர்குண பிரம்மம் மற்றும் சகுண பிரம்மம், பரமார்த்திக உண்மை மற்றும் வியவஹாரிக உண்மை என அறிவார்ந்தோர் விவாதித்து கொண்டிருந்த அதே வேளையில், இன்னொரு பக்கம், லட்சக்கணக்கான சாதாரண மக்கள் கோவில்களுக்கு முண்டியடித்து சென்றுகொண்டிருந்தனர். அல்லது வீட்டில் அமைதியாக வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ? என்கிறான் கம்பன்.
தத்துவவாதியின் ஒவ்வொரு சொல்லும் கனமான அர்த்தத்தை கொண்டிருந்தது. ஆனால் ஒரு பக்தனின் பிதற்றலில் அர்த்தச்செறிவு இல்லை. ஆனால் பக்தன் தனது பிதற்றல், தத்துவஞானியின் சொற்களை விட எளிதாக கடவுளை அடையும் என்று நம்பினான். இந்த பக்தனின் வழியை சரியென ஆமோதித்தார் ஒரு தத்துவவாதி. அவர் ராமானுஜர்.
பழந்தமிழகத்தில், இறைவனை பற்றியும், பூரண சரணாகதியின் மேன்மைகள் பற்றியும் ஆழ்வார்கள் பாடி உள்ளனர். வைணவர்கள் தங்கள் குலத்தலைவன் போல கருதும் நம்மாழ்வார் இன்னும் ஒரு படி மேலே சென்று ‘கடவுளின் அருள் தன்னிச்சையானது, ஆனால் கண்மூடித்தனமானது (capricious) அல்ல. அது இலவசமாக, கைம்மாறு எதிர்பாராது, சம்பாதிக்கப்படாது, அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படுவது’ என்கிறார்.
கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான் முகனார் பெற்ற நாட்டுளே
புல் முதல் ஊறும் எறும்பு வரை அசைவன, அசையாதன, நான்முகத்தின் படைப்பில் பிறந்த எல்லாவற்றையும் அவற்றின் உயர்ந்த நிலையில் ராமன் தன் அயோத்தி நகரில் ஏற்றுக்கொண்டான். ராமபிரானை அன்றி பிறரிடம் கற்பதற்கு ஏதும் உண்டோ?
பிரபத்தி
மேலே உள்ள நம்மாழ்வாரின் இந்த செய்யுளிலும், இதைத்தொடர்ந்து வரும் பாசுரங்களிலும் வெளிப்படும் உணர்வு ‘பிரபத்தி’. ஆழ்வார்களுக்கு பக்தி மட்டும் போதுமானதாக இல்லை, பூரண சரணடைதல் எனும் பிரபத்தி நிலை தான் உச்சபட்சமானது. பக்தி மார்க்கம், ஞான மார்க்கம்(அறிதல் வழி) மற்றும் கர்ம மார்க்கம்(செயல் வழி) என கீதை வகுத்த வீடுபேறுக்கான வழிகள் மூன்றும் போதாது. இவையெல்லாம் கொஞ்சமேனும் சிறு முயற்சியையும், ஒருவித தகுதியை அல்லது தனித்தன்மையை சார்ந்துள்ளன. ஆனால், பிரபத்தி அல்லது பூரணசரணாகதி என்பது எல்லாருக்குமானது. ஒருவரின் சமூகநிலை, ஜாதி, கடந்த காலம் ஆகிவை எதுவாக இருந்தாலும் அவருக்கு பிரபத்திநிலை சாத்தியம். ஒரு ஆன்மாவின் தகுதிகள் மட்டுமல்ல அதன் தகுதியின்மைகள் கூட அதை இறைவனின் அருளுக்கு அணுக்கமானதாக ஆக்கலாம். அறிவார்ந்த தன்மை அல்லது உயர்ஜாதியில் பிறப்பது அல்ல, மாறாக அவை இல்லாத ஒருவர் கடவுளுக்கு விருப்பமானவராக இருக்கலாம். வழிமுறை(உபாயம்) மற்றும் இலக்கு(உபேயம்) இரண்டுமே இறைவன்தான். பிரபத்திக்கு இடம், நேரம், முறை, தகுதி போன்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. ஒரே ஒரு நிபந்தனை – கடவுள் மட்டுமே இலக்காக இருக்க வேண்டும். மகாபாரதத்தில் திரௌபதி பிரபத்தியுடன் வேண்டிக்கொள்ளும் போது மாதவிலக்கிலும், அசுத்தமாகவும் இருந்தார். அர்ஜுனன் இறைவனின் கீதை உபதேசம் பெற்ற இடம் என்பது கீழ்மையான, அசுத்தமான மக்கள்திரளை கொண்ட போர்க்களம். லோகாசார்யா பிள்ளை அவரின் ‘ஸ்ரீ வசன பூஷணம்’ என்கிற புத்தகத்தில், உயர்ந்த குலத்தில் பிறப்பதை விட தாழ்ந்த குலத்தில் பிறப்பதே மேல் என்பதை நிறுவ நீண்ட விவாதத்தை முன்வைக்கிறார். தாழ்ந்த சாதியில் பிறந்தவர் இயற்கையாகவே பணிவு, தகுதியின்மை மற்றும் கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளைக் கொண்டிருப்பார். இவை யாவும் பிரபத்திக்கு மிக உகந்தவை. மேலும் ஜீவாத்மாவின் இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவதற்கும் தகுந்தவை. அதேசமயம், உயர் குலத்தில் பிறந்தோர் இயல்பாகவே மேட்டிமையுணர்வும், செறுக்கு மற்றும் அகங்காரம் போன்ற பண்புகளை கொண்டிருப்பதால், பிரபத்தி நிலையை அடைய மிகவும் சிரமப்பட வேண்டும். இறைவனுக்கு கீழ்ப்படியும் மனநிலையை அவர்கள் தக்கவைப்பதும் எளிமையானது அல்ல.
ஆழ்வார்களிடமிருந்து இந்த கருதுகோளை எடுத்துக்கொண்டு, அதை தத்துவ அமைப்பில் நேர்த்தியாக கட்டமைத்து, தன்னம்பிக்கையுடன் முன்வைத்தது ராமானுஜர் தான். ராமானுஜர் தமிழில் எழுதவில்லை என்பதையும், அவர் எங்கும் ஆழ்வார்களின் பங்களிப்பை குறிப்பிடவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சமஸ்கிருத வல்லுநர்களுடனான விவாதங்களில், ஆழ்வார்களின் தமிழ் பாடல்களை பிரமாணமாக முன்வைக்க இயலாது, அவர்கள் அதை ஏற்கவும் மாட்டார்கள். ஆனால் எப்போதும் ராமானுஜருக்கு ஆழ்வார்களின் துணை இருந்தது. குறிப்பாக நம்மாழ்வார் அவருடன் எப்போதும் நண்பனும் வழிகாட்டியுமாக ‘தோன்றா துணைவனாக’ இருந்தார் என்று சொல்லப்படுகிறது. குருபரம்பரை மற்றும் ஈடு(ஈடு முப்பத்திராயிரப்படி உரை, ஸ்ரீ வைஷ்ணவ மரபில் மிகவும் விரிவான மற்றும் மிகுந்த மதிப்பிற்குரிய உரை விளக்கம்) ஆகியவை ராமானுஜர் எந்த அளவுக்கு ஆழ்வார்களை நேசித்தார் என்பதையும், அவர்களின் பாசுரங்களை விளக்கி விரிவாக்கினார் என்பதையும் கூறும் நிறைய கதைகளை கொண்டுள்ளன.
ராமானுஜரின் வாழ்க்கை
ராமானுஜர் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர்(பூதபுரி என்பது பழையபெயர்) எனும் சிற்றூரில், வடம பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் பொ.யு. 1017 லிருந்து பொ.யு. 1137 வரை, அதாவது 120 வருடங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ராமானுஜரின் இயற்பெயர் இளைய பெருமாள். பெற்றோர் கேசவ பெருமாள் சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி அம்மாள். தனது பதினாறு வயதில் ரக்ஷகாம்பாளை திருமணம் செய்து கொண்டார். அதன் பின், சங்கரரின் அத்வைதத்தில் முக்கியமான அறிஞரான யாதவ பிரகாசரின் வழிகாட்டுதலில் வேதங்களை கற்றார். கருத்து வேறுபாடுகளாலும், யாதவ பிரகாசரின் விளக்கவுரைகளை மறுத்ததாலும், மேலும் அத்வைத தத்துவத்தையே மறுத்ததாலும், யாதவ பிரகாசர் இளைய பெருமாளை கொல்ல திட்டமிட்டார். கோவிந்தர் என்பரின் முன்னெச்சரிக்கையால் ராமானுஜர் ஆசிரமத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
அதே சமயம், யாதவ பிரகாசரின் வேத விளக்க முறையை நிராகரித்து தானே சுயமாக விளங்கங்களை அளித்த ஒரு மாணவர் தவச்சாலையை விட்டு வெளியேறியதை ஆளவந்தார்(யமுனாசார்யா) அறிந்தார். தனது சீடனை அனுப்பி ராமானுஜரை அழைத்து வர சொன்னார். துரதிர்ஷ்டவசமாக, ராமானுஜர் ஸ்ரீரங்கம் சேரும் முன் ஆளவந்தார் இயற்கை எய்தினார். ராமானுஜர், ஆளவந்தாரின் பூதஉடலை மட்டுமே கண்டார். அப்போது ஆளவந்தாரின் மூன்று விரல்களை மட்டும் மடித்து வைத்திருக்கும் நிலையில் இருப்பதை கண்டார். அது ஏன் என வினவியபோது, அது ஆளவந்தாரின் மூன்று நிறைவேறா கோரிக்கைகள் என கண்டறிந்தார். பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதுவது, வியாசர் மற்றும் பராசரர் ஆகிய முனிவர்களின் பங்களிப்புகளை கௌரவிக்க ஏதாவது செய்வது, நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரை எழுதுவது ஆகியவை அந்த மூன்று நிறைவேறா கோரிக்கைகள். ராமானுஜர் இவற்றை தான் முடிப்பதாக உறுதி ஏற்றார்.
ஸ்ரீ வைஷ்ணவ இறையியலில் அறிஞர் ஆன மகாபூர்ணா என அழைக்கப்பட்ட பெரிய நம்பியின் ஸ்ரீ சம்பிரதாய மரபில் சேர்ந்து கற்க தொடங்கினார். மகாபூர்ணரின் மனைவிக்கும், ராமானுஜரின் மனைவி ரக்ஷகாம்பாளுக்கும் இடையே பூசல் ஏற்பட்டதால், தனது 32 வது வயதில் ராமானுஜர் துறவு பூண்டார்.
துறவு பூண்டபின் ராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பி வந்து, யமுனாசார்யாவின் சீடர்களின் வழிகாட்டலில் கல்வியை தொடர்ந்தார். அந்த சீடர்களில் கோஷ்டி பூர்ணர் என அழைக்கப்பட்ட திருகோஷ்டியூர் நம்பி முக்கியமானவர்.
ராமானுஜர் தனது பிரம்மசூத்திரத்தின் விளக்கவுரையான ஸ்ரீ பாஷ்யம் எழுத துவங்கும் முன், முந்தைய விளக்க உரையான ‘போதாயன விருத்தி’ என்ற நூலை கற்க, தனது சீடர் குரேசர் உடன் வட இந்திய பயணம் மேற்கொண்டார். அந்த நூலின் பராமரிப்பாளர்கள் ராமானுஜருக்கு அதை பகிர முன்வரவில்லை. எனினும், குரேசர் அதை படித்து ஒவ்வொரு எழுத்தையும், பக்கத்தையும் நினைவில் நிறுத்தி, ராமானுஜருக்கு விளக்க உரை எழுதி முடிக்க உதவினார்.
ராமானுஜரின் பிரம்ம சூத்திர பாஷ்யம் ‘ஸ்ரீ பாஷ்யம்’ என்று அழைக்கப்பட்டது. கூரத்தாழ்வாரின் மகன்களுக்கு பராசரர் பட்டர் மற்றும் வேத வியாச பட்டர் என பெயரிட்டு ஆளவந்தாரின் இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்றினார். ராமானுஜரின் கட்டளையின் பேரில், அவரது சீடர் ஸ்ரீ குருகேசர் (பிள்ளன்) திருவாய்மொழிக்கு உரை எழுதி முடித்தார். இவ்வாறாக ராமானுஜர் ஆளவந்தாரின் மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றினார்.
அவரது வாழ்நாளில், ஏராளமான கோவில்களில் (ஸ்ரீரங்கம், திருப்பதி மற்றும் மேல்கோட்டே) வைஷ்ணவ மரபில் பூஜைகள் சடங்குகள் செய்வதை தொடங்கிவைத்தார். பெரும் சமூக சீர்திருத்தவாதி. பலரை ஸ்ரீ வைஷ்ணவ மரபிற்குள் கொண்டுவந்தார். அவர் சமஸ்கிருதத்தில் மட்டுமே ஒன்பது படைப்புகளை எழுதியுள்ளதாக கருதப்படுகிறது. அவற்றில் முக்கியமான, தத்துவம் சார்ந்த நூல்கள்: ஸ்ரீ பாஷ்யம், பகவத் கீதை பாஷ்யம் மற்றும் வேதார்த்த சங்க்ரகம்.
ராமானுஜரின் தத்துவம்
கடவுள் என்பவர் உண்மை என்றும், சார்பற்றவர் என்றும் ராமானுஜர் தனது வாதத்தை முன்வைத்தார். இந்த உலகில் உள்ள ஆத்மாக்களும்(ஜீவாத்மா) உண்மையானவையே என்றாலும் அவற்றின் உண்மைத்தன்மை முற்றிலும் கடவுளை சார்ந்தது. இந்த உலகிலுள்ள எல்லா பருப்பொருட்களும், உயிர்களும் தனிஇருப்பு கொண்டவை, அவையும் பிரம்மமும் ஒன்று அல்ல. ராமானுஜரின் பார்வையில் பிரம்மம் என்பது இந்த உலகின் ஒழுங்கின்மைகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் பருப்பொருட்கள் தன்னுணர்வு அற்றவை, ஜீவாத்மாக்கள் அறியாமைக்கும் துயரத்திற்கும் உட்பட்டவை. ஆனாலும் பருப்பொருட்களும் ஜீவாத்மாவும் இணைந்து ஒருவகையான ஒருமையை உருவாக்குகின்றன. ஏனெனில் பருப்பொருட்களின், ஜீவாத்மாக்களின் இருப்பு பிரம்மத்தை சார்ந்தது. பிரம்மத்தின் உடல் என்ற நிலையிலேயே அவற்றின் இருப்பு அர்த்தம்கொண்டதாக ஆகின்றது. அதாவது, அவற்றின் இருப்பும் நிலையும் அவை பிரம்மத்தின் ஆளுகைக்குள் இருப்பதாலும், பிரம்மமே அவற்றின் ஆத்மா என்பதாலும்தான் சாத்தியம். பிரம்மத்திற்கு அப்பால், அவற்றின் இருப்பிற்கு எந்த அர்த்தமுமில்லை. தனி ஆத்மாக்களும் சலனமற்ற பிரகிருதியும் இறைவனிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டவை என்றாலும், இறைவன் அல்லது இறை சேவையைத் தவிர அவற்றிற்கு தனி இருப்போ அல்லது செயல் நோக்கமோ இல்லை. ஆக, ’பரமாத்மா’ தனி ஆத்மாக்களாகவும் பிரகிருதியாகவும் பலவகை வடிவங்களில் நிலைபெறுகிறது எனும் பன்மைத்துவத்துடன், ராமானுஜரும் இரண்டின்மை வாதம் அல்லது அத்வைத நோக்கையே முன்வைக்கிறார். எனவே இது விசிஷ்டாத்வைதம் அல்லது விசேஷமான இரண்டின்மை வாதம் எனப்படுகிறது. இறைவன் எங்கும் எதிலும் எல்லா உயிரிலும் உள்ளுறைபவன்(சர்வ வியாபி).
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் – என்கிறார் திருவாய்மொழியில் நம்மாழ்வார்.
அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் – கம்பராமாயணம்
அறிஞர் ராதாகிருஷ்ணன் குறிப்பிடுவது போல, சங்கரர் முற்றிலும் தூய ஞான மார்க்கத்தை அறிவுசார் கற்றல் மட்டுமே என முன்வைக்காவிட்டாலும், அவரின் மரபினரும், சீடர்களும் மதத்தை பக்தியை(இதயம் சார்ந்த) விட அறிவார்ந்த(மூளை சார்ந்த) விஷயமாக கருதும் போக்கு காணப்பட்டது. ‘அஹம் பிரம்மாஸ்மி – நானே பிரம்மம்’ எனும் ஆப்தவாக்கியத்தை வெறும் இயந்திரத்தனமாக ஓதுவது என்பது அறிவார்ந்த பக்திக்கு ஈடாகவில்லை. எனவே நான்கு வைஷ்ணவ பள்ளிகள்(ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம், நிம்பார்க்கரின் துவைதாத்வைதம், விஷ்ணுசுவாமியின் சுத்தாத்வைதம்) உள்ளிட்ட இறைநம்பிக்கை சார்ந்த தத்துவப்பள்ளிகள் பக்தியை வலியுறுத்தின. கோட்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும், மாயை எனும் கருத்தை நிராகரிப்பதிலும், கடவுளை ஆளுமையுடையவராகக் கருதுவதிலும், ஆத்மா அழியாத தனித்துவத்தைக் கொண்டதாக கருதுவதிலும், அதன் உண்மையான இருப்பு பரம்பொருளில் லயிப்பதில் மட்டுமே அல்லாமல் அவருடன் பிணைப்பிலோ அல்லது அவரிடம் சரணாகதியிலோ உள்ளதாகக் கருதுவதிலும் இவை அனைத்தும் ஒத்துபோகின்றன.
புலனறிவு, ஊகம் மற்றும் முன்னறிவு(வேதம்) ஆகியவற்றை மட்டுமே தூய அறிவுத்தேடலுக்கான பிரமாணங்களாக ராமானுஜர் ஏற்கிறார். (அவரின் சீடர்கள் மேலும் ஒன்று அல்லது இரண்டை பட்டியலில் சேர்க்கிறார்கள்.) ஒரு தனிப்பொருள் அதன் வடிவத்தை உருவாக்கும் பொது இயல்புகளையும், அந்த பொருள் பிற பொருட்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தும்தன்மையையும் தன்னில் கொண்டிருக்கிறது. இவற்றை(வேறுபடுத்தும்தன்மையையும், பொது இயல்புகளையும்) புலனறிவு வழியாக நாம் அறிகிறோம். நாம் இரு பொருட்களை வெவ்வேறாக அறியும்போது, அவை மெய்யாகவே இரண்டு வெவ்வேறான பொருட்கள்தான்.
ராமானுஜரின் பார்வையில், தனி ஆத்மாக்கள் உண்மையானவை மற்றும் வேறுபட்டவை. உண்மையில் தனிஆத்மாக்களுக்கிடையே வர்க்கங்கள் போன்ற நிலையான கருதுகோள்கள் எதுவும் இல்லை. ஆனால் ஒரு பொருளில் பிற பொருட்களின் சாயல்கள்(resemblance) உண்டு. இந்த ஒப்புமைகளை/சாயல்களை அடிப்படையாக வைத்துதான் நாம் வர்க்கம் போன்ற கருதுகோளை உருவாக்குகிறோம். அவற்றை ஒரே சொல்லால் குறிப்பிட பொருட்களுக்கு இடையேயான ஒப்புமையே அடித்தளமாக இருக்கிறது. உதாரணமாக, நாம் மனிதர்கள் எனப்படுகிறோம், எனினும் நாம் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள். ராமானுஜர் வேதங்களை முழு உண்மைகளாக ஏற்கிறார். இந்த உலகம் தோன்றுவதற்கு ஒரே காரணமான, ஒட்டுமொத்த உண்மையான பிரம்மத்தை அறிய அறிவார்ந்த வழிமுறைகளைவிட வேதங்களின் வழியேதான் அறியமுடியும். பிரம்மம் புலனறிவால் அறியப்படும் ஒன்றல்ல, வாழ்க்கையனுபவங்களில் இருந்து பெறப்பட்ட எந்த அறிதலும் பிரம்மத்தை நிறுவவோ மறுக்கவோ இயலாது. மானுட அறிவின் எல்லைகளுக்கும் புரிதல்களுக்கும் அப்பாற்பட்ட பேருண்மை அது. புலனறிவுக்கு அப்பாற்பட்ட அபௌதீகமான, அதீத இருப்புகளை அறிய வேதம் ஒன்றே வழி. இந்த வேத ஆய்வில், ஓரளவிற்கு தர்க்கத்தின் உதவியை நாடலாம்.
ராமானுஜர் வேதங்களை நித்தியமானவை, முதலும் முடிவும் அற்றவை என்கிறார். ஸ்மிருதிகளும் இதிகாசங்களும் வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்களையே விளக்குவதால், அவையும் பிரமாண நூல்கள் என கொள்ளலாம். தெய்வத்தன்மையுடைய வாசுதேவரில் இருந்து தோன்றியதால், பாஞ்சராத்திர ஆகமங்களையும் முழுதாக ஏற்கலாம். வேதங்கள் கூட நமக்கு நேரடியாக அறிவை வழங்குவதில்லை. வேத வாக்கியங்களை சொற்களின் வழியாக மட்டும் புரிந்துகொள்ள இயலாது, மேலதிகமாக சில புரிதல்கள் தேவை. தர்க்க அறிவு மூலமாக இல்லாமல், பக்தியின் மூலம் மட்டுமே உண்மையை உள்ளுணர்வு வழியாக அறியமுடியும். நம் அன்றாட வழிபாடுகளின், பிரார்த்தனைகளின் மூலம் இந்த அறிவு கடவுளால் அருளப்படும். இது மதரீதியான அனுபவம் அல்லது பிரம்மத்தை நேரடியாக உணர்வது. அப்படித்தான் தனி ஆத்மா பிரம்மத்துடன் ஒத்திசைகிறது.
எல்லா அறிவும் பிரம்மத்தை பற்றியது என்றாலும் அறிவால் முழுஉண்மையான பிரம்மத்தை அறிய இயலாது என்கிறார் ராமானுஜர். மானுட அறிவு குறைபட்டது, முழுமையற்றது. கடற்கரை மணலில் உள்ள சங்கை வெள்ளி என தவறாக கணிக்கும்போது, நாம் அதன் சில பண்புகளை கவனித்து பிறவற்றை தவற விடுகிறோம். நாம் கனவு காணும்போது, அதிலுள்ள பொருள்கள் கனவு காணும் நமக்கு மட்டுமே உரியவை, அந்தரங்கமானவை. அவை பிறருக்கானவை அல்ல என்ற உண்மையை நாம் காணத் தவறிவிடுகிறோம். பொதுவாக தூய அறிவு என ஏற்றுக்கொள்ளப்படுவதில் கூட, நடைமுறைத் தேவைகளுக்கு அவசியமில்லாத பலவற்றைப் புறக்கணிக்கிறோம்.
உண்மையான அறிதல்(true knowledge), பிழைப்பட்ட அறிதல் என இரண்டுமே முழுமையற்றவை என்ற போதிலும், உண்மையான அறிதல் நம் தேடலுக்கு அவசியமான பண்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, நம் குறிக்கோள்களை நிறைவேற்றுகிறது; பிழையான அறிதல் நம் இலக்கை அடைய உதவுவதில்லை. தூய அறிவு வாழ்விற்கு உபயோகமானது.
கானல் நீர் என்பது பிழை தான். அதை பிழை என்று சொல்வதற்கு காரணம் அதில் நீர் இல்லை என்பதால் அல்ல, கானல்நீரால் நம் தாகத்தை தீர்க்க இயலாது என்பதால்தான். உண்மை என்பது மெய்ப்பொருளை (யதார்த்தத்தை), நடைமுறையில் பயன்பாடு மதிப்பு கொண்டதை பிரதிநிதித்துவப்படுத்துவது.
நிர்குண பிரம்மத்தை அறிவார்த்தத்தால் (intellect) உள்வாங்க முடியாது என்றும், அது நம் சிந்தையால் புரிந்துகொள்ள இயலாத ஒன்று என்பதால் அறிவை பழிக்கக்கூடாது என்றும் சங்கரர் சொல்கிறார். ஒரு பொருளுக்கு(subject) குறிப்பிட்ட பண்பு(predicate) உண்டு என்று கொள்வோம். அந்த நிலையில் நாம் பொருள்= பண்பு(subject=predicate) என்ற தர்க்கப்பூர்வமான முடிவிற்கு வருவோம். ஆனால் ஒரு பொருள்(subject) தன்னில் தான் நிறைந்தது(self-identity) என்றால், அந்த பொருளுக்கு குறிப்பிட்ட பண்பு எதையும் நம்மால் உருவகிக்க இயலாது, subject=predicate போன்ற தர்க்கபூர்வமான முடிவுகள் சாத்தியமில்லை, அந்த பொருள் அது மட்டுமே (subject is subject) என்று மட்டுமே நம்மால் சொல்ல முடியும். இது சங்கரரின் தரப்பு.
ராமானுஜர் இதை வேறுவகையில் அணுகுகிறார். உதாரணமாக, ரோஜா சிவப்பானது என்ற வாக்கியம் ரோஜாவிற்கும் அதன் பண்பான சிவப்பிற்குமான ஒற்றுமையை சுட்டுகிறது. ஆனால் இன்னொரு முக்கியமான உண்மை, சிவப்பு என்ற நிறமும்(redness) ரோஜா என்ற மலரும் வேறுவேறானது. இங்குள்ள வெவ்வேறு பொருட்களுக்கும், வெவ்வேறு பண்புகளுக்கும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லையென்றால் ”ரோஜா சிவப்பானது” போல எந்த தர்க்கப்பூர்வமான ஊகங்களும் சாத்தியமே இல்லை. ஆனால் அந்த ஒற்றுமை வெவ்வேறு பொருட்களாகவும், பல்வேறு பண்புகளாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு அவை ஒன்றே என்ற நிலையை தாண்டிச்செல்கின்றன. ஒற்றுமை என்பது ஒருவகையான ஒப்புமைப்படுத்துதல். இரண்டு தனித்தனி விஷயங்கள் இருந்தால் மட்டும்தான் ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடமுடியும். அப்படியில்லையென்றால் ஒப்பீடு என்ற செயல்பாடே சாத்தியம் இல்லை.
வேற்றுமைகள் அனைத்தையும் மறுப்பது, ஒருவகையில் ஒரு பொருளை அடையாளப்படுத்தும்(identity) சாத்தியத்தையே இல்லாமலாக்குகிறது. நாம் “பொருள்-1 என்பது பொருள்-1 மட்டுமே” என்ற கூற்றை சொல்வது, அந்த பொருள் பிறிதொரு பொருளை ஒத்ததா என்ற கேள்விக்கு பதிலாகத்தான். ‘அது நீயே (தத்வமஸி)’ என சொல்லும்போது அங்கே இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு உண்டு என்றும், அந்த உறுதிப்பாடு அவற்றிற்கிடையேயான உண்மையான ஒற்றுமையை(ஒன்றின் அடையாளத்தை பிறிதொன்று கொண்டிருப்பதை) குறிக்கிறது என்றும் வாதிடுகிறார். ஆனால் ஒப்புமையும் வேறுபாடும், ஒரே வகையான யதார்த்ததில் இருக்கும் பொருள்களுக்கே பொருந்தும் என்று ராமானுஜர் அதை மறுக்கிறார். எந்த ஒரு தனி இருப்பும் (identity), அடிமுதல் நுனிவரை வேறுபாடு வழியாக சாத்தியம். அவற்றை பற்றிய ஒவ்வொரு தர்க்கப்பூர்வமான கூற்றும் இந்த வேறுபாடு வழியாகவே அடையப்படுகின்றன. வானம் நீல நிறமானது எனும்போது வானமும் நீலமும் ஒன்று அல்ல. அதே நேரத்தில் அவை முற்றிலும் வேறுவேறானவையும் அல்ல. வானம் என்ற பொருள், அதன் பண்பான ‘நீலத்தன்மை’, இரண்டும் சுதந்திரமான அர்த்த சாத்தியங்கள் கொண்டவை. ஆனால் இங்கு அவை இயைந்தே உள்ளன.
காரியத்தில் காரணம் உள்ளுறைகிறது எனும் ‘சத்காரியவாத’ கொள்கையை ராமானுஜர் ஏற்கிறார். காரணம் என்றால் முற்றிலும் புதிய பொருள் உருவாவது அல்ல; ஏற்கனவே உள்ள பொருளின் நிலை மாறுவதே. துணி இழைகளிலிருந்தே உருவாகிறது. துணி என்பது இழைகளின் கட்டமைப்பு மட்டுமே.
ஒரு பொருளின் இருநிலைகள்: இருப்பு மற்றும் இருப்பின்மை. இருப்பின்மை என்பது தன்னளவில் முழுமையானது அல்ல, அது சார்புநிலை கொண்டது. எவற்றிற்கெல்லாம் குணங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் பொருட்கள் அல்லது திரவ்யம்(dravya) என்று சொல்லலாம். பொருள் தான் அடிப்படை(adhara), அந்த பொருளை சார்ந்துள்ளவற்றின் பெயர் ஆதேயம்(adheya). ஒரு பொருளை சார்ந்துள்ளவை ’அதிரவ்ய(adravya)’ என்று வகைப்படுத்துகிறார்கள். அதாவது ஒரு பொருளை திரவ்யம் என்றும், அதன் குணங்கள், அதற்கும் மற்ற பொருட்களுக்குமான இணைவுகள் இவற்றை அதிரவ்யம் என்றும் சொல்லலாம். உதாரணமாக, விளக்கு என்பது ஒரு பொருள், அதில் எரியும் சுடரும் ‘பொருள்’ தான். ஆனால், அந்த சுடர் என்பது விளக்கின் இயல்பும்கூட. எண்ணங்களாக விரிந்தும், பின் அவை அடங்கி தணியும் தன்மையுடைய புத்தி ‘buddhi’ ஒரு திரவ்யம்; ஆனால் அது ஆன்மாவின் இயல்புகளில் ஒன்று. இந்த உலகை வெளியேயிருந்து, அதாவது கடவுளின் கோணத்திலிருந்து பார்ப்போம். கடவுளின் நோக்கில் நாம் வாழும் உலகம் என்பது அவரை(iswara) சார்ந்திருக்கும், அவரின் இயல்புகளில்(adjective) ஒன்று. அப்படிப்பார்க்கும்போது இந்த உலகம் என்பது கடவுளின் ஒரு பண்பு மட்டுமே (அதிரவ்யம்). அடுத்து நம் பார்வைக்கோணத்தை மாற்றி இந்த உலகத்திற்குள் இருந்துக்கொண்டே இந்த உலகை பார்ப்போம். அப்படிப்பார்த்தால், இந்த உலகில் தனிப் பொருட்கள் (திரவ்யம்), அவற்றின் பண்புகள் (அதிரவ்யம்) என இரண்டுமே இருப்பதை உணரமுடியும்.
திரவ்யங்கள் உபதான காரணமாக விளங்குகின்றன; அதிரவ்யங்கள் அவ்வாறு இருக்க இயலாது. பிரகிருதி என்பது காலம், தூயப்பொருள்(suddha-sattva), குணமாகிய அறிவு (தர்மபூத ஞானம் dharmabhUtajnanan) எனும் மூன்று ஜடப்பொருள்களையும், ஆத்மா மற்றும் கடவுள் எனும் இரண்டு உணர்வுகளையும் கொண்ட அஜடம். ஞானம் ஜடம் அஜடம் எனும் இரண்டின் கூறுகளையும் கொண்டது. ஞானம் ஜட திரவ்யங்களைப் போலல்ல; அது தன்னையே வெளிப்படுத்தி, புறப்பொருட்களையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. எனினும், ஞானம் எப்போதும் தனக்காக அல்லாமல் ஆன்மாவிற்காகவே உள்ளது. தர்மபூத ஞானம் ஆன்மாவின் அசாதாரணமான துணைக் கூறாகும். ஞானம் நம் புலன்கள் வழியாகப் ஒரு பொருளுடன் தொடர்பு கொள்ளும் போதே ஆன்மா ஒரு பொருளை அறிகிறது. தனித்தனியாக பிரிந்து இருக்கும் அறிவையும் அறிபடுபொருளையும் ஞானம் இணைக்கிறது. (ராமானுஜர் இதை மாயை என்று குறிப்பிடுவதில்லை).
முழு உண்மை என்பது இருமையற்ற பிரம்மம் மட்டுமே என்பதால், அறிவிற்கும் அறிபடுபொருளுக்கும் இடையேயான வேறுபாடு சார்புநிலையானது என்கிறார் சங்கரர். ராமானுஜர் சங்கரரின் இந்த கூற்றை மறுக்கிறார். விழிப்புநிலை(பிரக்ஞை) என்பது அறிவின் இயல்பு. அந்த அடிப்படை இயல்புதான், ‘சிந்திக்கும் நிலையான தன்னிலை’ என ஒன்று இருப்பதற்கும், அந்த தன்னிலை அறியும் பல ‘பொருட்களின்’ இருப்பிற்கும் சான்றாக அமைகிறது என்று அவர் வாதிடுகிறார். நிர்குண பிரம்மத்தை தனித்து அறிய நம்மிடம் எந்த பிரமாணமும் இல்லை. அப்படி ஒரு பிரமாணம் இருந்தாலும், அது பிரம்மத்தை அறிபடுபொருளாய் நிறுத்தி, அதை நாம் அறியும் பொருளின் எல்லைக்குள் சுருக்கும். எந்த அறிபடுபொருளும் அற்ற தூய பிரக்ஞை என ஒன்று இருக்க இயலாது. அப்படி ஒன்றை நாம் நிறுவ முயற்சித்தால் அதற்கு குணங்கள் உண்டு என்ற நிலை வருகிறது. அப்படி குணங்கள் அற்றது என்றால் அதற்கு இருப்பே இல்லை என்றே ஆகிறது. உதாரணம், ஆகாயமலர்.
’அறிவு’ எல்லையற்றது என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால், நம் அறியும் பொருட்களுக்கும் எல்லையற்றவை என்ற நிலை வருகிறது. ஆனால் நாம் அறியும் பொருட்கள் எல்லைக்குட்பட்டவை. ஆழ்ந்த உறக்கத்தில் அல்லது அபோத நிலையில், எந்த அறிபொருளின் துணையும் இன்றி தூய அறிவு தனியாக செயல்படுகிறது என்று எண்ணுவதும் பிழையானது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கும் ஒருவர் “என் அகங்காரத்தின் அனைத்து ஃபாவங்களிலிருந்து விடுபட்டு நான் தூய பிரக்ஞையாக, அறியமுடியாமையை(ajnana) உணர்ந்தேன்” என்று சொல்வதில்லை. மாறாக “நல்ல தூக்கம், நான் எதையுமே அறியவில்லை” என்றே சொல்கிறார்
ராமானுஜரின் கொள்கையின் படி, பிரம்மம் -எந்த பண்புகளும் அற்ற- நிர்குண பிரம்மமாக மட்டும் இருக்க இயலாது. பிரம்மம் என்ற முழுமை, பல வேற்றுமைகள்(பன்மைத்தன்மை) வழியாகவே தன் தனிஅடையாளத்தை, தன் முழுமையை நிலைநிறுத்திக்கொள்கிறது. சார்பற்ற, எல்லையில்லாத முழுமுதல் உண்மையான பிரம்மம் என ஒன்று உள்ளதை ஏற்கும் ராமானுஜர், அதேசமயம் நாம் காணும் எல்லைக்குட்பட்ட உண்மைகளும் அந்த பிரம்மத்தின் வெளிப்பாடே(மாயை அல்ல) என்பதை தெளிவாக உணர்த்துகிறார். இங்குள்ள பன்முகத்தன்மை கொண்ட பொருட்களுக்கு இடையே உறவாடல் நிகழ, ஒத்திசைவு ஏற்பட, இங்குள்ள எல்லா பொருட்களின் உட்கூறுகளுக்கும் இடையே ஒருவகையான பந்தமோ, சார்போ இருந்தே தீர வேண்டும். அது ஒரு ஆன்மிகமான விளக்கமாகவே இருக்க இயலும். ஒரு தனிமனிதன் தன் தர்க்கபூர்வமான தேடலுக்காக மட்டுமல்ல அவனின் மதம் சார்ந்த அனுபவத்திற்கும், வரையறுக்கத்தக்க, பொருண்மையான அம்சங்களுக்கு நிகராக, வரையறுக்க இயலாத முடிவிலியையும் அவன் தனக்குள்ளே தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கடவுள் என்பவருடன் தன்னை முழுதும் ஒப்படைக்க தேவையான உணர்வு, அந்த தெய்வீக புருஷனுடன் ஒரு உண்மையான உறவு ‘பக்தி’ மூலமாகவே பெற இயலும். மனிதனின் தன்னலமற்ற பக்தியையும், அமைதியாக அவன் தாங்கிக்கொண்டிருக்கும் துயர்களையும் எந்த உணர்ச்சியுமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நிர்குண பிரம்மம், மத அனுபவத்தால் உணரப்படும் கடவுளாக இருக்க முடியாது என்கிறார் அறிஞர் ராதாகிருஷ்ணன். சங்கரரின் தர்க்கமுறை அவரை வெறுமைக்குள் கொண்டு சென்று சேர்க்கிறது என்கிறார் ராமானுஜர். தன் நொய்மையான வாதங்களின் வழியாக அந்த வெறுமையை சங்கரர் மறைக்க முயற்சிக்கிறார் என்கிறார் ராமானுஜர். சங்கரரின் பிரம்மம் என்பது புலனறிவு, பிரமாணங்கள் மற்றும் வேதங்கள் என எதனாலும் விளக்க இயலாத வெறுமை.
பிரம்மம் என்பது பரம புருஷன், புருஷோத்தமன். தனி ஜீவாத்மாக்கள் பூரணத் தன்மை குறைந்த புருஷர்கள். இங்கே புருஷத்துவம் என்பது தன் நோக்கங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றும் ஆற்றலை இயல்பாகவே உள்ளடக்கியதை குறிக்கிறது. எல்லா அனுபவங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாலும், அதை அன்றி வெளியே எதையும் சார்ந்திருக்காததாலும் கடவுள்/இறைவன் என்பது குறையற்ற பரிபூரண புருஷன். அதே சமயம் புருஷத்தன்மைக்கு இன்றியமையாத வேற்றுமைகள் அதனுள்ளேயே அடங்கியுள்ளன. ஞானம், ஆற்றல் மற்றும் கருணை போன்ற உயர் பண்புகள் கடவுளுக்கு உரியவை. கடவுளின் கருணையால் இந்த உலகம் படைக்கப்பட்டு, நியதிகள் உருவாக்கப்பட்டன. பரிபூரணத்தை நாடும் புருஷர்களுக்கு அந்த கருணையே உதவி செய்கிறது. பரம புருஷனின் புருஷர்களுடனான இணைப்பு இயற்கையானது(svabhavika) மற்றும் ஆதி அந்தமற்றது(sanatana). கடவுளின் மற்ற பண்புகளாக அழைக்கப்படும் ஜடப்பொருட்கள் மற்றும் ஆத்மாக்கள் போல அல்லாமல் முன் சொன்ன இந்தப் பண்புகள் அருவமானவை. கடவுளின் அடிப்படை பண்புகளுக்கும் அவரை சார்ந்துள்ள பொருட்களின் பண்புகளுக்கும் ஈஸ்வரனே ஆதாரம்(adhara). மனித உடல் என்பது வெறும் உறுப்புகளின் தொகுப்போ அல்லது உயிர்விசையால் நிலைநிறுத்தப்படுவதோ அல்ல. மேலும் உடல் என்பது வெறும் புலனறிவின் இருப்பிடமோ அல்லது சுகதுக்கத்தின் காரணியோ அல்ல. ராமானுஜர், உடலை(சரீரம் – sarira) இப்படி வரையறுக்கிறார் “எந்த பொருளை பிரக்ஞை கொண்ட ஆன்மா தன் சொந்த நோக்கங்களுக்காக முழுமையாக கட்டுப்படுத்துகிறதோ, துணைசெய்கிறதோ; எந்த பொருள் ஆன்மாவுக்கு முற்றிலும் அடிபணிந்த நிலையில் இருக்கிறதோ, அதுவே உடல்”. உடலில் திகழ்ந்தாலும், கடவுள் தனி புருஷனின் துன்பங்களை அனுபவிப்பதில்லை. ஏனெனில் அந்த துன்பங்களுக்கு காரணம் கர்மம்/வினை(karma) மட்டுமே. கடவுள் இந்த கர்மத்தின் தலைவன். கர்மம் தானே கர்மபலன்களை உண்டுபண்ண இயலாது. அறிவற்றதும் நிலையற்றதும் ஆன வினையால், எதிர்காலத்தோடு தொடர்புடைய பலனை விளைவிக்க இயலாது. பரம புருஷனான கடவுளே இவ்வுலகிலும் விண்ணுலகிலும் புருஷன் அனுபவிக்கும் பலவிதமான இன்பங்களையும் அருளுகிறார். எல்லாவடிவங்களுடனும் இணைக்கப்பட்டிருந்தாலும், பிரம்மம் வடிவற்றது. புருஷன் தான் பிணைக்கப்பட்டுள்ள உடலுடன் திகழ்ந்து, இன்ப துன்பங்களை பெறுகிறான். பிரம்மம் எனும் பரம புருஷன் ஆத்மாவின் இன்ப துன்பங்களுக்கும், பருப்பொருட்களின் உருமாற்றங்களுக்கும் அப்பாற்பட்டவர், வடிவமற்றவர்.
கடவுள் என்பவர் சுயபிரக்ஞை உடைய புருஷர்கள் அடையும் அறுதி நிலையோ அல்லது பொருண்மையான உலகிற்கு அப்பால் உள்ள வெறும் அதிமுழுமையோ(transcendental absolute) அல்ல என்கிறார் ராமானுஜர். இந்த பிரபஞ்சத்தின் பிரக்ஞை கொண்ட, பிரக்ஞை அல்லாத (சேதனம் மற்றும் அசேதனம்) அனைத்தும் கடவுளுடன் இணைந்தே உள்ளன என்றாலும் அவை தன் இருப்பையும் வாழ்வையும் கடவுளிடம் இருந்தே பெறுகின்றன. இந்த பன்மைத்துவ பிரபஞ்சம் எந்த அளவிற்கு உண்மையோ அதே அர்த்தத்தில் கடவுளும் உண்மை. ராமானுஜருக்கு கடவுள் அதீதமானவரும் உள்ளுறைபவரும்(புறமும் அகமும்) ஆன, இவ்வுலகை தாங்குபவர். கடவுள் பரம புருஷன்.
பிரபஞ்ச நியதிக்கு உட்பட்டு கடவுள் இந்த உலகை உருவாக்கி பேணுகிறார், பின்னர் ஊழியில் அதை தன்னுள்ளே கரைக்கவும் செய்கிறார். ஆக்கமும் அழிவும் கால நிகழ்வுகளாக அல்லாமல், அவை நாம் ஒரு பரம்பொருளின்/பிரம்மத்தின்/பரமபுருஷனின் மீது சார்ந்திருப்பதை குறிப்பதாக கொள்ளவேண்டும். பிரம்மம் மட்டுமே காரணமற்றது, மற்ற அனைத்தும் காரணத்திற்கு உட்பட்டவையே. இந்த குறைபட்ட உலகிற்கு காரணமானாலும், அவர் இந்த உலகின் குறைகளுக்கு அப்பாற்பட்டவர். இந்த உயர் பண்புகள் கொண்ட பரமபுருஷனை ராமானுஜர் விஷ்ணு என்கிறார். பிரம்மாவும் சிவனும் விஷ்ணுவே என்கிறார்.
ராமானுஜர் பிரம்மம், உலகம் பற்றி தனது கருதுகோளுக்கு வேதங்களை ஆதாரமாகக் கொள்கிறார். வேதங்கள் பிரம்மத்தை முழுதும் உயர் நற்பண்புகளால் நிறுவுகின்றன. உண்மை, ஞானம் மற்றும் முடிவிலி தான் பிரம்மம் என்கிறது உபநிடதம். இவையாவும் ஒரு மிக உயர்ந்த உண்மை என பிரம்மம் இருப்பதை குறிக்கின்றன. பிரம்மத்தின் அறிவு எல்லையற்றது, குறைவுபடாதது. அதிலிருந்து வந்த ஆத்மாக்களில் அந்த அறிவு குறைவுபட்டது, அவற்றின் அறிவு சில காலம் மட்டுமே எஞ்சியிருக்கும். இடம், பொருள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்ட பிரம்மம் முடிவற்றது(அனந்த Anantha), முதலுமற்றது (அனாதி anathi). எல்லாவற்றிலும் இருந்து மாறுபட்டது. இந்த முடிவற்ற தன்மை (அனந்தம்) பிரம்மத்தின் பண்புகளையும் தன்மையையும் குறிக்கும்; நித்ய ஜீவாத்மாக்களுக்கு இது பொருந்தாது. வேதங்களில் அல்லது உபநிடதங்களில் பிரம்மத்தை பற்றி மறுப்புகள் கூறப்படும் பகுதிகள் இருப்பதை ஏற்கும் ராமானுஜர், அவை பிரம்மம் சார்ந்த சில தவறான, எல்லைக்குட்பட்ட பண்புகளை மட்டுமே மறுப்பதாகவும், அதன் எல்லா பண்புகளையும் அல்ல என்கிறார். அவை பிரம்மத்தை அறியவோ உட்கிரகிக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது. நம் எல்லைக்குட்பட்ட மனித அறிவால் வரையறுத்துவிட முடியாத அளவிற்கு பரந்தது பிரம்மம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார்.
மாயாவாத கொள்கை மற்றும் கருத்துமுதல்வாத கொள்கைகளை ராமானுஜர் முற்றிலும் மறுக்கிறார். முழுமையற்ற அல்லது குறைபட்ட மனித அறிவுதான் உலகை வேறுவேறாக காண்கிறது எனில் கடவுளுக்கு அப்படிப்பட்ட வேறுபாடுகள் இருக்க இயலாது. ஆனால் வேதங்களின் படி கடவுள் உலகை படைத்தார், ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழ்வையும் ப்ராப்தத்தையும் அளித்தார் எனும்போது கடவுள் இந்த பன்மைத்துவ, வேறுபட்ட உலகையே கணக்கில் கொண்டுள்ளார் என்று சொல்லலாம். கானல் நீர் உட்பட எந்த பன்மைத்துவத்தையும் உண்மையல்ல என சொல்லிவிடமுடியாது. கானல் நீரால் தூண்டப்பட்ட நமது செயல் மட்டுமே வீணாகிறது, ஆனால் உலகை புலனறிவால் உணர்ந்து நாம் மேற்கொள்ளும் செயல் அப்படி வீணாவதில்லை. புலனறிவின் சான்றாக ஏற்கப்பட்ட இந்த உலகின் யதார்த்த உண்மையை, வேதங்களின் சான்றுடன் மறுப்பது தர்க்கரீதியான வாதம் அல்ல. புலனறிவும் வேதங்களும் இரண்டு வெவ்வேறான யதார்த்தங்கள். அதனால் அவை பரஸ்பரம் முரண்பட முடியாது. எல்லா ஞானமும் பொருட்களையே வெளிக்காட்டுகிறது. நிலைத்தன்மை இல்லாத காரணத்தால், பொருட்களே இல்லை என்று வாதிடுவது விந்தையானது.
அத்வைதத்தின் அவித்யை(அறியாமை/அறிவின்மை) கோட்பாட்டிற்கு எதிராக ராமானுஜர் முன்வைக்கும் ஏழுநிலை மறுப்புகள் ‘சப்தவிதா அனுபபத்தி’ என அழைக்கப்படுகிறது.
1. ஸ்வரூப அனுபபத்தி (Svarupa) – அவித்யையின் தன்மையே முரண்பாடுகளால் நிறைந்துள்ளது.
2. அனிர்வசனீய அனுபபத்தி (anirvacaniya) – அவித்யை விளக்க இயலாது என வர்ணிப்பதையும் நிலைநாட்டமுடியாது.
3. பிரமாண அனுபபத்தி (Pramana) – அவித்யை கோட்பாட்டை எந்த பிரமாணம் வழியாகவும் ஆதரிக்கமுடியாது.
4. ஆஸ்ரய அனுபபத்தி (as’raya) – அவித்யைவின் இருப்பிடம் பிரம்மமா, ஜீவாத்மாவா என்று சொல்ல முடியாது
5. திரோதன அனுபபத்தி (tirodhana) – அவித்யை பிரம்மத்தை மறைக்கும் என்பது ஏற்கத்தக்கதல்ல.
6. ஞான-நிவர்த்யா அனுபபத்தி (jnana-nivartya) – சரியான ஞானத்தால் அவித்யாவை நீக்க முடியும் என்பதும் ஏற்கமுடியாது.
7. அவித்யா-நிவ்ருத்யா அனுபபத்தி (avidya-nivrtti) அவித்யையை நிறுத்த முடியும் என்ற கருத்தே அபத்தமானது.
‘அனந்த கல்யாண குணங்கள்’ எனப்படும் எல்லையற்ற முடிவற்ற நற்பண்புகளால் ஆனவர் கடவுள் என எல்லா வேதங்களும் தெளிவாக கூறுகின்றன. அப்படியிருக்கும் போது, பிரித்தறிய இயலாத குணங்களற்ற கடவுள் எனும் அத்வைதத்தின் நோக்கு தவறு. உண்மை, ஞானம், தூய்மை, ஆனந்தம்(மகிழ்ச்சி) மற்றும் எல்லையற்றவர் எனும் நற்குணங்களால் ஆனவர் கடவுள். ராமானுஜரின் கடவுள் விஷ்ணு. விஷ்ணு எனும் கடவுள், பரம புருஷன், நாராயணன், பிரம்மன், வாசுதேவன் என பிற பெயர்களாலும் அழைக்கப்படுபவர்.
இவ்வுலகில் நாம் காணும் மாற்றங்களெல்லாம் கடவுளின் அடிப்படையான பண்பு அல்ல, அவை பிரகிருதி எனப்படும் இயற்கையின் பண்பு. அந்த இயற்கையை அகமும் புறமும் ஆக இருந்து ஆள்பவர் கடவுள். கடவுள் எல்லா உயிரிலும் உள்ளுறைகிறார் ஆனாலும் அது அவரின் வெளிப்பாடு அல்ல. பருப்பொருட்களும் ஜீவாத்மாக்களும் உண்மை. அவையாவும் கடவுளின் எச்சங்கள்(sesha) எனக்கொள்ளத்தக்க வகையில் அவருடன் இணைந்துள்ளன.
ராமானுஜரின் பிரபத்தியை, கீதையின் இந்த செய்யுளுக்கு அவர் தரும் விளக்கத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.
பகவத்கீதை 18.66 ஸ்லோகம்.
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வ சர்வ – பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:
எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே முழுமையாகச் சரணடைவாயாக.
உனது வீடுபேறுக்கு தடையாக இருக்கும் எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கின்றேன். கவலை வேண்டாம்.

ராமானுஜரின் விளக்கம் 1:
ஒருவர் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என எந்த பாதையை தேர்ந்தாலும், கடவுள் மீதான அர்பணிப்புடன் செயல்படவேண்டும். அதே சமயம், தான் இந்த வகை யோகத்தை கடைபிடிக்கிறோம் எனவும், இந்த யோகங்களை மேற்கொள்ள தனக்கு ஆற்றல் உள்ளது எனவும், இதன் பலன்கள் தன்னை சேரும் எனவும் எண்ணக்கூடாது. அதாவது, தான் வினைபுரிபவன் என்றும், வினைப்பயன்களை அனுப்பவிக்கபோகிறவன் என்றும் எண்ணக்கூடாது. எல்லாவற்றையும் புரிபவர் கடவுள் ஒருவரே எனவும், இந்த செயல்கள் யாவும் கடவுளின் ஆனந்தத்திற்காக(ப்ரிதீ – Priti) எனவும் கருதவும், புரிந்துகொள்ளவும் வேண்டும்.
ராமானுஜரின் விளக்கம் 2:
ஒருவர் பக்தி மார்க்கத்தை கடைபிடிக்கும் போது சில பாவங்களை புரிந்தார் என கொண்டால், அவை செம்மையான பக்தி யோகத்தில்(வீடுபேறுக்கான) தடைகளாக கொள்ளப்படும். எனவே பக்தி யோகத்தை தொடர சில பரிகாரங்களை, ஈடுகளை செய்யவேண்டும். பாவப் பரிகாரங்களுக்காக நூல்கள் கிருச்ர நோன்பு (கடினம் – Kricchra), சந்திரயான நோன்பு, குஷ்மாந்த வேள்வி போல சில பிராயசித்தங்களை பட்டியலிடுகின்றன. இந்தப் பரிகார சடங்குகள் நீண்ட காலத்தை கோருகின்றவை, மேலும் செய்வதற்கும் கடினமானவை. “நூல்களில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு பரிகாரங்களை கைவிடுக, அவற்றுக்கு மாற்றாக நான் இருக்கிறேன், என்னில் சரணடைக. அவ்வாறு பக்தி யோகத்தில்(வீடுபேறுக்கான) தடைகள் களையப்படும்” என கிருஷ்ணர் கூறுகிறார்.
ஆழ்வார்களையும் பிரபந்தங்களையும் அறிந்த தமிழ் மனம், இந்த கீதை ஸ்லோகத்திலும் ராமானுஜரின் விளக்கத்திலும் காணப்பெறுவது பிரபத்தி என்பதை எளிதில் கண்டுகொள்ளும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
