அமைதி  : க.கலாமோகன்

மழை தூறத் தொடங்கியபோது அவதியிலும் விருப்பினாலும்  ஜன்னல்களைத் திறந்தேன். ஆம்! அந்தத் தூறல்களை   ரசிப்பதற்காக.  எனது பிள்ளைகளின் ரசிப்பு அவைகள்  அல்ல என்பது “மழை கொடூரம், திறக்காதே!” என அவள்கள்  கத்தியபோதே  தெரிந்தது.  

“நான் பால்கனிக்குப்  போவேன். ஜன்னலைச் சாத்துங்கள்.” என  அமைதியாகச் சொன்னேன்.  

இப்போது நான் வெளியே. எனது துணைவியும் பிள்ளைகளும் உள்ளே. பால்கனிக்கு வந்தது என்னை மழைத்துளிகளோடு ஒட்டுவதற்காகவே. எனது சிறுவயதில் கிடைத்த தினங்களை மீளவும்  பிடிக்கவா? பண்பாட்டு வலைகளைக் கடந்து வாழத் துடிப்பது என் நினைப்பு. பழைய தினங்கள் என்னை அவ்வப்போது முத்தமிடுவன ஓர் பண்பாட்டின் குறியீடுகளா? நிறங்கள், மொழிகள், கலாசாரங்கள், சடங்குகள் என்பன பண்பாடுகளா? அனைத்துப் பண்பாடுகளும் எமது மூளைக்குள் குத்தப்பட்டவையல்லவா? திணிக்கப்படவையில்லையா? 

கேள்விகளில்தாம் எமது தினங்கள் ஓடுகின்றன. இவைகள் இல்லாமல் வாழ்வு அசையுமா? அரசியல் நடக்குமா? எழுத்து வருமா? பத்திரிகை நடத்தலாமா? செக்ஸ் இருக்குமா? எமது அனைத்துப் பார்வைகளும் கேள்விகளை விழுங்கியவையே. கேள்வித் தாம்பாளங்களில்தாம்  எமது நடைகள், எமது குடும்பங்கள், எமது உறவுகள்… இன்னும் பல. 

அண்மையில் எனது வசிப்பிடத்திற்கு  அருகில் உள்ள ஓர் சிறிய வீதியில் காலை வைத்தேன். அங்கு  ஓர் பாழடைந்த கட்டிடம் உள்ளது. அங்கே சிலவேளைகளில் ஒருசில மார்ஜினல்களைக் காண்பேன். அன்று,  அதன் முன் குறிப்பிடத்தக்க ஆண்களும்,  பெண்களும்  கூட்டமாகி நின்றனர்.  பலரது கைகளில் பியர்ப் போத்தல்கள். கட்டிடத்தின் உள்ளே பலர் போவதும் வருவதுமாக இருந்தனர். உள்ளே என்ன நடக்கின்றதாம்?  

எனது ஜாக்கெட்டின் பாக்கெட்டில் இருந்த சிறிய போத்தல் போர்டோ  வைனில் கொஞ்சம் குடித்துவிட்டு, “உள்ளே என்ன நடக்கின்றது?” என ஓர் இளம் பெண்ணிடம் கேட்டேன். 

“ஓவியக் கண்காட்சி”.” 

ஒரு ஆச்சரியம் வந்தாலும், அது வந்த வேகத்திலேயே அழிந்து போயிற்று. பாரிஸில் எதுவும் நடக்கும், எங்கும் நடக்கும் என்பதுதான்.  

“அங்கு அழைக்கப்படாதவர்களும் போகலாமா?” 

“இது இலவசமானது. எவரும் போகலாம்.” என அவள் சொன்னபோது தனது முகத்தில் பல நிறங்களைப் பூசிக்கொண்ட  ஓர் நடுத்தர வயதுப் பெண் இரண்டு பூனைகளுடன் அதனுள் நுழைந்தாள். 

நானும்  உள்ளே சென்றேன். ஓர் அபத்தமான கலை நிகழ்வாக இருக்கும் என எனக்குப்பட்டது. சில போத்தல்கள் உடையாமல் நாம் நடக்கும்   தரையினில்  கிடந்தன. எவரது கால்களும் போத்தல்களை மிதிக்காததைக் கண்டபோது வியப்பாகவே இருந்தது.   

ஓர் அறைக்குள் சென்றேன். பல உடைகள் நிலத்தில் கிடந்தன. அவைகள் மீது செருப்புகள். ஓர் பாப்பிள்ளையின் தலையும். 

“அபூர்வம்!”  ஓர் முதிய பெண், தனது சிவப்பு  உதடுகளைக் காட்டி என்னிடம் சொன்னாள். 

“இது ஏன் அபூர்வம்?” 

“எனக்கு மட்டும் இது அபூர்வமாக இருக்கலாம். அது எனக்குத்தான் தெரியும்.” என்றபடி தனது  உதடுகளுக்கு மீண்டும் சிவப்புச் சாயத்தைத் தீட்டினாள்.  

“உங்களுக்கு இது எப்படி அபூவர்மாக உள்ளது என்பதை நீங்கள் விரும்பினால் சொல்ல முடியுமா?. 

“இந்த நிலத்தில் கிடக்கின்ற உடைகளுக்குள் கிடக்கும்  ஓர் மார்புச் சட்டை உங்களிற்குத் தெரியவில்லையா?  

தேடுகின்றேன். 

“அது சிறியது. நான் 16 ஆவது வயதில் இருந்தபோது அணிந்தது  என நினைக்கின்றேன்” 

அது எனக்குத் தெரியவில்லை. 

“மன்னிக்கவும், அதனைக் காட்டுவீர்களா?” 

அது ஓர் மிகச்  சிறிய மார்புச் சட்டை. இடது பக்கம் கிழிந்து இருந்தது. அதனில்  சில சிவப்புத் துளிகள்.  

“ஓவிய விருப்பில் நீங்கள் உங்களது மார்புச் சட்டையின் இடது பக்கத்தைக் கிழித்து, சிவப்புக் கலவையைத் துளிகளாக விட்டு உள்ளீர்கள் என்பது எனது நினைப்பு….” 

நான் சொன்னதைக் கேட்டுப் பெரிதாகச்  சிரித்தாள். 

“உங்களது நினைப்புப் பொய்யானது. இது எனது இரத்தம்.” 

அவளது பதில் என்னைத் திகைக்க வைத்தது. அவளால் உருவாக்கப்பட்ட  இரத்தமா அல்லது அவளை  வன்முறை செய்ததால் வடிந்த  இரத்தமா? இந்தக் கேள்விகளை அவள் முன் எழுப்புவது சரியானதா எனும் கேள்வி எனக்குள் வந்தது. நான் அவளது மார்புச் சட்டையைக் கேள்விகளுடன் பார்த்தேன்.  திரும்பியபோது  அவள் என் அருகில் இல்லை. 

வேறு  அறைக்குள் சென்றேன். பல விதங்களில் விளக்குகள் எரிந்தன. காய்ந்துபோன பிரீதிகள் சுவர்களில் ஒட்டப்படிருந்தன. அவைகளது அருகில் சில பாப்பிள்ளைகளின் தலைகள். இவைகள் அசுத்தமாக. சிலவற்றில் செவிகள் வெட்டப்பட்டும்  இருந்தன. 

மனித அவதானிப்பு மர்மக் கோட்டைக்குள் ஜனிப்பதா? அனைவரது நினைவு விழிகளிலும் மாற்று நோக்கு உள்ளதா? நோக்குகள் யாவும் விசித்திரமானவையா? எனக்குள் எழுந்தன இந்தக் கேள்விகள்.   

“இந்த ஓவியங்களைக் கீறியவர் யார்?” என ஓர் இளம் வாலிபனிடம் கேட்டேன்.  

“கீறியவள் மேலே ரயில் தண்டவாளத்துக்கு அருகில் உள்ளாள்.” 

நான்  வாழும் பகுதி என்பதால் எனது விழிகள் அந்தத் தண்டவாளத்தைப் பார்த்து உள்ளன. அது கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ளது. உடைந்து கிடந்த படிக்கட்டால் நடந்துதான் அங்கு செல்லலாம். பாலத்தின்  அருகில்தான்  உள்ளது. அதில் ஒருபோதுமே ரயில் ஓடியதை நான் கண்டதில்லை. பழையதாக இருக்கலாம். போதை நுகர்பவர்கள்  அங்கு அலைவதைக் கீழே நின்று கண்டுள்ளேன். அது ஓர் அதிர்ச்சியான தண்டவாளம். எங்கே அது அது தொடங்குகின்றது, எங்கே அது முடிகின்றது என்பது எனக்குத் தெரியாது. 

நான் மேலே. அங்கே சில பெண்கள், சில ஆண்கள். அவர்களில் யார் நான் பார்த்த படத்தைக்  கீறிய ஓவியர்?  முகங்களில் அது எழுதப்பட்டிருக்கவேயில்லை. கேட்கலாம் என நினைத்தேன். அங்கு எவருடனும் சிநேகிதத்துடன் பேசலாம். பேசினேன். அங்கு நான் தேடிய ஓவியரே இல்லை. நிச்சயமாக அவள் வேறு எங்காவது இருக்கலாம். கண்டால் சம்பாஷிக்கலாம், இல்லையெனில் எந்தச் சிக்கலுமே இல்லை. 

ஓர் சிறிய இளைஞன் என் மீது புன்னகையுடன். அவனது இடது கையில் ஓர் பியர் டின் இருந்தது. வலது கையில் இருந்து வந்த புகையால் எனக்குள் ஓர் மயக்கம். கொஞ்சம் வைனைக் குடித்தேன். 

“நீங்கள் கீழே போய்ப் பார்த்தீர்களா?”  

“ஏன்?” என்று கேட்கின்றேன். 

“மிகவும் அழகிய படைப்பு ஒன்று உள்ளது.” 

“எந்த இடத்தில்?”  என அவனிடம் கேட்டவேளையில்  “அருகில் உள்ள படிகளால் நடவுங்கள்” என்றான். 

அருகில் இருட்டுத்தான் நிறைய இருந்தது. சில சிகெரெட், லைட்டர் ஒளிகளையும் கண்டேன். நிச்சயமாக என்னிடம் தீ இருக்கவில்லை. மிகவும் கவனமாகக்  கால்களை அழுத்தி இறங்கினேன். 

ஓர் றூம். நிறைய வயர்கள். சில சிவப்பு லைட்டுகள் எரிந்தபடியும், வேறு லைட்டுகள் எரியாதபடியும். ஓர் பெண்ணின் படம் கிழிக்கப்பட்டு அங்கும் இங்கும் கிடந்தன. செவியை உடைக்கும் இசை ஒன்று  கத்தியது. மீண்டும் மீண்டும் அந்த ஓசையைக் கேட்டேன். விளங்கவுமில்லை,  ரசனையும் வரவில்லை.  

சரி, ரசனை என்பது எதுவாம் எனும் ஓர் கேள்வி என்னைக் கடித்தது.  எனக்குத் தெரிந்த பிரெஞ்சு நண்பர் ஓர் வாசிகசாலையில் வேலை செய்பவர். நான் எப்போது நூல்கள் எடுக்கச் சென்றாலும் அவர் ஓர் இசையில் மூழ்கி உள்ளதையே காண்பேன். அவ்வப்போது அவரது இசையைக் கொஞ்சம் கேட்டாலும், அது எனக்கு விளங்கியதே இல்லை. அவர் கேட்கும் இசையை, இசை என்று எண்ணாமல், அது ஓர் புதிய கத்தலாக  இருக்கும் என எண்ணிக்கொண்டேன். கசப்புச் சாற்றைக் காதுக்குள் ஊற்றும் கத்தல். இந்தக் கசப்பு அவருக்கு  உவப்பாக.  பல தடவைகள் அவரது “இசைகளைக்”  கொஞ்சம் கேட்டபடி புத்தகங்களைப் புரட்டுவது என் சுபாவம்.  

அவர் கேட்கும் இசை மீது உரையாடும் எண்ணம் எனக்குள் ஒருநாள்  வந்தது. 

“வணக்கம் லோரன், உங்களிடம் இருந்து கடன் எடுத்த இரண்டு நூல்கள் எனது வீட்டிலேயே உள்ளன. நிச்சயமாக நாளை கொண்டு வருவேன்.” 

“மோகன், நீங்கள் அவதிப்படவேண்டாம். இங்கு நிறைய வாசிப்பாளர்கள் இல்லை. நீங்கள் பிந்தியே கொண்டுவரலாம்…” எனச் சொல்லியவர் தனது “இசை”யைக்  கேட்பதில் மூழ்கினார்.  

அவர் கேட்பன குண்டுகள் போலவும், சுவர்களை உடைக்கும் போக்கிலும்  இருந்தன.  ஒழுங்கு நிலையைத் தழுவி எழும் இசைகளைக் கேட்ட எனக்கு இவர்  கேட்பன நூறு வீதத்  திருப்தியைத் தரவில்லை என்பதுதான் உண்மை. 

“நீங்கள்  கேட்கும் “இசை”களை நான் ஒருபோதுமே  கேட்டதில்லை.” 

 “உண்மைதான். இவைகளை ஒரு சிலரே கேட்பதுண்டு.” 

“ஏன்?  இது பலருக்கு தோதானதாக  இல்லையா?” 

“ஆம்! பலருக்கு இவைகள் தெரியாது.” 

“பேர்சி (Bercy) மண்டபத்துள் ஆயிரக்கணக்கானோர் நிறைய இசைகளைக் கேட்கின்றனர்…. இவர்களுக்கு ரசனை இல்லையா?” 

லோரன் ஓர் விசித்திரமான சிரிப்பைக் காட்டினார்.  

“உங்களுக்கு இந்திய இசையில் விருப்பம் உள்ளதா?” 

“சிறிய  விருப்பம். நான் இந்தியாவுக்குப் பல தடவைகள் சென்றுள்ளேன்.” என்றபடி “இதனைக் கேள்! என்றபடி ஓர் புதிய “இசை”யை விட்டபோது, எனது காதுகள் வெடிப்பதுபோல இருந்தன. 

அவரது முகம் ரசனையில் ஆடியதைக் கண்டு வியந்தேன். 

000 

வயர்கள் நிறைந்த அறையை விட்டு வெளியே வந்தபோது கசங்கிய ஓவியம் ஒன்றுடன் ஓர் பெண். அதில் சில கீறல்களும் எழுத்துகளும் மங்கலாகத் தெரிந்தன. பிரெஞ்சு எழுத்துகள் கிழிபட்டு. 

“என்னைக் கெடுத்த எனது அப்பாவுக்காக இந்தக் கண்காட்சியை நான்  சமர்ப்பிக்கின்றேன்.” என அவள் சொன்னாள். இந்தக் கிழியல் நிகழ்வை நடத்துவது அவளே என நினைத்துக் கொண்டேன். 

மீண்டும் எனது நாவைத் தடவியது வைன். 

“உங்களது அப்பா கொடுமையானவரா?” 

“எனது முகம் சாந்தமானது. நான் கொடுமையானவள்.” 

“உங்களது அப்பா மீது உங்களிற்குக் கோபம் இல்லையா?” 

“இல்லை. இந்தக் கட்டிடம் பாழடையாமல் இருந்தபோதுதான், இதனுள் என்னைக் கெடுத்தார்.” 

“நீங்கள் பொலிஸில் இதனை அறிவிக்கவில்லையா?” 

“நான் கெடுக்கப்பட்டேன் என்பது பின்புதான்  எனக்குத் தெரிந்தது. அப்போது நான் சிறுமியாக இருந்தேன்.” 

“சரி, ஏன் நீங்கள் கொடுமையானவள்?” 

“நான் எனது சிநேகிதனைக் கொலை செய்தேன்.”  

“நீங்கள் பிடிபடவில்லையா?”  

“இல்லை. ஆம், ஆதாரங்கள் இல்லை.”  

எனது வைன் போத்தல் காலியாகியது. அவள் தனது பாய்கினைத் திறந்து, பியர் டின் ஒன்றைத் தந்தபின் வேறு பக்கம் சென்றாள். 

பியரைக் குடித்தபோது, அதனது டின்னில் சில கீறல்கள் இருந்தன. கூர்மையாக அவதானித்தேன். அது ஓர் பறவைபோலத் தெரிந்தது.  

வேறு ஓர் அறைக்குள் சென்றேன். அது ஒரு வகையில் சுத்தமானதாக இருந்தது. அங்கே சில சிறுமிகள். அவள்களது கைகளில் வெள்ளைத்தாள்கள்.  

“நீங்கள் கீறியுள்ளவைகளைப் பார்க்க அனுமதிப்பீர்களா?” 

“நிச்சயமாக.” என்று எல்லோரும் சொல்லினர். 

பின் அனைத்துத் தாள்களும் என் விழிகளின் முன். அவைகளில் எழுதப்பட்டதோ ஒரே ஒரு சொல். அமைதி.  

வேறு அறைகளில் இருந்து மிகவும்  பெரிய சிரிப்பொலிகள் கேட்டன. அந்தப் பாழடைந்த கட்டிடத்தின் கிழியல் ஓவியங்களிற்கு மத்தியிலும் ஒருவித அமைதி.  

நான் எனது வசிப்பிடம் திரும்பியபோது கேள்விகள் என்னைப் பின்தொடர்ந்து வரவில்லை.  

ஆனால் அமைதிதான் என்னை மிகவும் மெதுவாகத் தள்ளியது. 

000

  

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss