
வேளச்சேரி ரயில் நிலைய மேற்கூரையெங்கும் பறவைகளின் ஒலி இடைவிடாது ஒலித்தது. நடைமேடை ஒன்றின்மீது வளைந்து துருப்பிடித்த கம்பி ஒன்று விழுந்தது. பெரும் கரும்பாறைகள் நகர்வதுபோல் தண்டவாளங்களைக் கடந்து சென்றன எருமைகள். சற்றுத் தூரத்தில் தெரியும் ரயிலின் வெளிச்சத்தைக் கண்டு, கைகளை ஓங்கி எருமைகளின் வேகத்தைக் கூட்டினான் நிலையக் காவலாளி. எஞ்சிய தண்டவாள நீள்கம்பிகள் ஒன்றின்மேல் ஒன்றாகவும், வளையக் கம்பிகள் மலைபோல் குவிந்தும் காணப்பட்டன. மலைக் குவியலின்மீது மஞ்சள் நிறப் பூக்களுடன் கொடியொன்று படர்ந்திருந்தது. நடைமேடையை நுகர்ந்தபடி ஒரு கருத்த மிருகம் தென்பட்டது. முதலில் அது ஓநாயைப் போன்றும், பிறகு ஆட்டுக் குட்டியைப் போன்றும், அதன்பின் தடித்த கருங்கோடுகளால் சிறுத்தை போன்றும் அச்சமூட்டியது. மர்மமான முறையில் தோன்றிய அவ்விலங்கு நிலையத்தின் தென்கிழக்கில் மறைந்தது.
மாயவனிடமிருந்து காயாம்பூவிற்கு அழைப்பு வந்தது. இப்போதுதான் வீட்டிலிருந்து கிளம்புகிறேன் 10 நிமிடங்களில் வந்துவிடுகிறேன் என்றான். சரி என்றபடி சிற்றிதழ் ஒன்றை வாசிக்கத் தொடங்கினான்.
அடிப்பரப்பில் சாம்பலும் கருமையும், மேற்புரத்தில் வெள்ளிநிற மேகங்களுமாக நீலமற்ற வானம். தூரத்துக் கண்ணாடி மாளிகைகள் அடைப்பட்ட மின்மினிகளாக ஒளிர்ந்தன. நிலைய விளக்குகளை இடைவிடாது மொய்க்கும் பூச்சிகள். தொடை, முதுகுப் பகுதிகளில் கொசு கடித்த இடங்களைச் சொறிந்தபடி வாசித்துக்கொண்டிருந்த காயாம்பூவின் நெஞ்சிலும் கைகளிலும் மட்டுமல்லாது கண்ணருகே பறந்து கவனத்தைக் கலைத்தன. தாக்குப் பிடிக்க முடியாமல் ரோலெக்ஸ் பாரை நோக்கி நடந்தான். பாரின் கிழக்குப் பக்கம் மூடை மூடையாகச் சாராயப் பாட்டில்கள். அதன் அருகே தாங்க முடியாத சிறுநீர் நெடியிலிருந்து தப்பி, பாருக்கும் எதிரே இருந்த இரண்டு மாமரங்களுக்கு நடுவே நின்றான் காயாம்பூ. மாயவன் வந்ததும் இருவருமாகக் கொண்டாட்ட வாயிலில் உட்புகுந்தனர்.
ஒரு சோடா, ஒரு சின்ன வாட்டர் பாட்டில் என்று சொன்ன மாயவன், உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள் என காயாம்பூவை நோக்கிக் கூறினான்.
ஃப்ரூட் சாலட், வேர்க்கடலை என காயாம்பூ சொல்லும்போதே வேர்க்கடலை இல்லை சென்னா, அவிச்ச முட்டை இருக்கு என்றான் வெயிட்டர்.
”அவிச்ச முட்டை கொண்டு வாங்க” என்றான் மாயவன்.
”ஒன்றா, இரண்டா” என்றான் வெயிட்டர்.
”எத்தனை முட்டை போடுவீங்க” என்றான் மாயவன்.
”ரெண்டு முட்டைண்ணே”
”சரி சரி ஒன்னு எடுத்துட்டு வாங்க”
”வாட்டர், சோடா கூலிங்கா வேண்டுமா?”
”வாட்டர் கூலிங் வேண்டாம், சோடா கூலிங் வேண்டும்.”
”கேஷா? ஜிபேவா?”
”கேஷ் ஐந்நூறு ரூபாய்தான் இருக்கு.”
”அதைக் குடுங்க. மீதத்தை ஜிபே செய்துடுங்க.”
”ஆஃப் எடுத்துட்டு வரவா?”
”இல்லை, குவாட்டர் கொண்டு வாங்க, அப்புறம் இன்னொரு குவாட்டர் வாங்கிக்கிறோம்”
முகம் சுருங்கியவாறு சரி என்று தலையாட்டிச் சென்றான் வெயிட்டர்.
”சிரித்துக்கொண்டே நீங்கள் எப்போதும் சொல்வதுபோல்தான், குவார்ட்டர் சொன்னாலே நம்மை ஏற இறங்கப் பார்க்கிறார்கள்”
இன்னொரு குவார்ட்டர் வாங்கலைன்னா அடுத்த தடவை நம்மை பாருக்குள்ளே விடமாட்டாங்க. ஏன் குவார்ட்டர் முடிந்ததுமே கூட வெளிய போகச் சொல்லிடுவாங்க என்ற மாயவன், ஆயிரம்தான் நீங்கள் பணம் கொடுத்தாலும் குடிக்கு என்று ஒரு மரியாதை இருக்கு என்பார்கள் என்றான். மேலும் போனதடவை வாங்கிய ஆஃபில் பாதியே இன்னும் ஃப்ரிட்ஜில்தான் இருக்கு என்றான்.
”ஒயினைப் பாதி குடித்துவிட்டு மீதம் வைக்கலாமா”
”ஒயினை வைக்க மாட்டாங்க. ஒன்லி பீர்தான் என்றபடி இந்த லைட் நல்லா இருக்கு இல்ல என்றான்.
நெருக்கடியற்ற இருக்கைகளைக் கொண்ட அறை, தோலுரிக்கப்பட்ட ஆரஞ்சுச் சுளைகளின் நிறத்தில் இருந்தது. சுவரோ ஆரஞ்சுத் தோலின் நிறத்தில் இருந்தது.
”கக்கன் பாலத்தின் அருகே இருக்கும் பாரில்கூட இதேபோன்ற தன்மையிலான வெளிச்சம் பாவியிருக்கும் அல்லவா”
அதை மறுத்த மாயவன், அங்கு இவ்வளவு இடைவெளிகள் இருக்காது. கூட்டமாக இருக்கும். மேலும் கல்யாண மண்டபம் போல் நீளமாக இருக்கும் என்றான்.
வடிவத்தை ஆமோதித்து, நான் நிறத்தை மட்டும்தான் சொல்கிறேன் என்றான்.
இரயில் ஏறுவதற்கு முன்பு கண்ணில் ஒரு தூசி விழுந்தது. அது இன்னும் உருத்திக்கொண்டே இருக்கிறது. கண்களைச் சுழற்றவே முடியவில்லை. மயிலிறகு வருடுவது போல் வருடியும், அழுத்தமாகத் தேய்த்தும் பார்த்தேன். இன்னும் அது சரியாகவில்லை. தண்ணீரில் கண்ணை முக்கி எடுத்தால் சரியாகிவிடுமா என்றான் காயாம்பூ.
குழாய்த் தண்ணீரில் கழுவாதீங்க, அதில் உள்ள அழுக்கெல்லாம் படிந்துவிடும். இன்னொரு வாட்டர் பாட்டில் வாங்கி அதில் கண்ணைக் கழுவுங்கள் என்றான் மாயவன்.
டேபிளில் வைக்கப்பட்ட தண்ணீர் பாடிலை எடுத்துக்கொண்டு, பாத் ரூமிற்குள் சென்றான். அங்கு இரண்டு மூன்று பேர் ஆளுக்கொரு மூலையில் நின்றுகொண்டு புகைபிடித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் சுவரின் மீதும், இன்னொருவர் அண்ணாந்து மேற்தளத்தின் மீதும், மூன்றாமவர் ஜன்னல் வழியாக இருட்டின் மீதும் புகையை ஊதிக்கொண்டிருந்தனர். சிகரெட் புகை மூச்சடைக்க வைக்கும் என்பதால் புகையின் நடுவே உட்புகுந்து செல்ல பயந்து நின்றான் காயாம்பூ.
⧫
சிற்றிதழில் இடம்பெற்ற தென் கொரியக் கவிஞரான கோ இவுன் கவிதைகள் குறித்து இருவரும் உரையாடத் தொடங்கினர். ஏற்கெனவே வாசித்திருந்த மாயவன் பின்வருமாறு தொடங்கினான்.
‘‘சோவித் ரஷ்யாவில் புரட்சிக்கு முன்னும் பின்னும் இலக்கியப் படைப்பாளிகளின் பாதை எப்படி மாறுகிறது, கோட்பாடுகள் எப்படி மாறுகின்றன, மனிதன் என்ற சாராம்சம் எப்படி மாறுகிறது, அதற்கு முன் தனிமனிதன் என்று ஒருத்தன் கிடையாது, திரளாகத்தான் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். அதாவது ரஷ்யப் புரட்சிக்கு முன் தங்களை ஒரு குழுவாக, சமூகமாகத்தான் உணர்ந்தார்கள். ஆனால் புரட்சிக்குப் பிறகு தனி மனிதக் குரல் வந்துவிடுகிறது. சோசியலிஸம் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகின்றன. சோசியலிஸம் வந்தால் சுதந்திரம் கிடைத்துவிடும், எல்லாம் சமவுடைமை ஆகிவிடும், லட்சியங்கள் எல்லாம் வெற்றி பெறும் போன்ற நம்பிக்கைகள் எல்லாம் தகர்கின்றன. அதை ஒரு இடத்தில் காற்று போன பந்து போல் ஆகிவிட்டது என்று சொல்லியிருப்பார்’’ என்றான்.
அவர் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘துயர்மிகு தன்னிலை ஒருமை’ என்னும் தலைப்பிலான அக்கவிதை வரிகளை வாசித்தான் காயாம்பூ.
‘நான் துயரமாய் இருக்கிறேன் அறிவொளியூட்டுதல் விரைவில் முரண்பாடாய் மாறுகிறது. சென்ற நூற்றாண்டில் புரட்சிக்குப் பின் சோவியத் கவிஞர்கள். நாம் என்று மாத்திரமே சொல்வதெனத் தீர்மானித்தனர். அவர்கள் தங்களை நாம் என்று மாத்திரமே அழைப்பதென முடிவெடுத்தனர்’
‘‘புரட்சி நடந்த உடனே பெரிய அதிர்வு ஏற்படும் அல்லவா. வெற்றிபெற்றுவிட்டோம் என்கிற உணர்வு. புத்தாண்டு அன்று நான் என்று சொல்வதைவிட நாம் என்று தானே சொல்வோம். எல்லோரையும் கட்டித் தழுவுகிறோம், எல்லோரின் கண்ணீரையும் துடைத்து விடுகிறோம். இப்படி பொன்னுலகைக் கண்டது போன்று இருக்கிறோம் அல்லவா.’’ என்றான் மாயவன்.
‘‘யார் யாருக்கோ ஹாய் சொல்கிறோம், யார் யாருக்கோ கைகொடுக்கிறோம்’’ என்றான் காயாம்பூ.
‘‘அன்று ஒருநாள் சமூக இடைவெளி எல்லாம் காணாமல் போய்விடுகின்றன. சாதி, மதம், மொழி, இனம், பாலினம் என எல்லாவற்றையும் கடந்து எல்லோரையும் அரவணைக்கிறோம். அடுத்த நாளே தமிழன் வேறு, தெலுங்கன் வேறு என்று பேச ஆரம்பிக்கிறோம். சாதியை, மதத்தைப் பேச ஆரம்பிக்கிறோம்’’ என்று மாயவன் பேசிக்கொண்டிருக்குபோது, ஆர்டர் செய்த அனைத்தையும் வெயிட்டர் டேபிளில் வைத்தான். அடுத்தமுறை வரும்போது இன்னொரு தண்ணீர் பாட்டில் எடுத்து வரும்படிச் சொன்னான் மாயவன்.
இரண்டு பாலித்தீன் குவளைகளில் ஒன்றை எடுத்துத் தண்ணீர் ஊற்றி அலசிய மாயவன், அதே தண்ணீரை இன்னொரு குவளையிலும் ஊற்றி அலசி மேசைக்கும் அடியில் சுவரோரமாய்க் கீழே ஊற்றினான். அவற்றில் சரிசமமாக லெமன் பகார்டியை ஊற்றி முகத்துக்கும் நேராகக் குவளையைத் தூக்கிக் கண்களால் அளவைக் கணித்து இன்னொரு குவளையில் இன்னும் கொஞ்சம் ஊற்றினான். காயாம்பூவிடம் தண்ணீரோ, சோடாவோ எது வேண்டுமோ கலந்துகொள்ளுங்கள் என்றான்.
இருவரும் சேர்ந்து ‘‘சியர்ஸ்’’ சொன்னார்கள்.
⧫
முதல் மடக்கிலேயே வீறுகொண்டு எழுந்தவன் போல் காயாம்பூ இவ்வாறு குரல் உயர்த்தி கவிதை வாசிப்பைத் தொடர்ந்தான்.
‘அவர் தம் தீர்மானம். பனிப் புயல் காரணமாக அவர்களால் தெருக்களில் செல்ல இயலாத போதும்கூடத் தீர்மானிக்கப்பட்டது’
‘‘சவாலான, நெருக்கடியான சூழலில்கூட எல்லாரும் உணர்வால் ஒன்றாக இருக்கிறார்கள்.’’ என்றான் மாயவன்.
‘நான் என்பது முகம் பார்க்கும் கண்ணாடியினுள் எங்கோ மறைந்தது.’
என்னும் வரியை வாசித்தபடி சிரித்தான் காயாம்பூ.
அச்சிரிப்பை மறுதளிப்பது போல், ‘‘இல்லை நான் என்பது ஸ்தூலமாகத் தெரிவது கண்ணாடியில்தானே. வேறு எந்த இடத்திலும் நான் என்பதை ஸ்தூலமாகப் பார்க்கவில்லை. மனதில்தான் காயாம்பூ, மாயவன் என்று உணர்கிறோம். ஆனால் நம்மை ஒரு பொருளாய், ஜடமாய்ப் பார்ப்பது கண்ணாடியில்தானே. அந்த நான்கூடக் கரைந்துவிட்டது என்கிறார். கண்ணாடியில் பார்க்கும் போதுகூட, என்னை நான் இந்தச் சமூகத்தின் ஒரு துளிதான், இந்த மானிடத்தின் ஒரு கூறுதான். மொத்த மனித இனத்தையும் ஒன்றாக உணர்வது. மரத்தில் நான் ஒரு இலைதான் என்பது போல் தன்னை உணர்கிறான்’’ என்றான் மாயவன்.
‘‘ஆனால் போகப் போக நிகழும் மாற்றங்களையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் அல்லவா’’ என்றான் காயாம்பூ.
‘‘பெரிய கால ஓட்டத்தை, வரலாற்றின் மாற்றத்தை ஒரு கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்’’ என்றான் மாயவன்.
வாசிப்பைத் தொடந்தான் காயாம்பூ.
‘மாயக்கோவ்ஸிகியும்கூடப் பளிச்சென்று வெயில் அடித்த நாளன்று வெளிக் கிளம்பினார்’
‘‘நமக்கு பாரதிதாசன் போல், மாயக்கோவ்ஸிகி அங்கே புரட்சிக் கவிஞன். மேலும் சொல்வதென்றால் பாப்லோ நெருடாவைப் போல் இடதுசாரிக் கவிஞன்.’’ என்றான் மாயவன்.
‘‘ ‘வெயில் அடித்த நாளன்று வெளிக் கிளம்பினார்’ என்னும் வரி எதை உணர்த்துகிறது?’’ எனக் கேட்டான் காயாம்பூ.
‘‘கவிஞன் ஓர் அறைக்குள் அடைந்துகிடப்பவன் இல்லை அல்லவா. ஆதலால் கூட்டத்திற்கோ, கவிதை வாசிப்பிற்கோ, போராட்டத்திற்கோ, புரட்சிக்கோ இப்படி எங்கோ கிளம்பிச் செல்கிறார். கோடையில் கூட எந்தவிதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடாமல் கிளம்புகிறார் என்று பண்பாட்டுரீதியாகக் கூட இப்படி எடுத்துக் கொள்ளலாம்’’ என்றான் மாயவன்.
‘நாம் என்று திரும்பத் திரும்பக் கத்தியபடி அவர் தெருக்களின் கவிஞனாய் இருந்தார் நான் என்பது எங்குமே அனுமதிக்கப்படவில்லை. நான் என்பது கொடியது நாம் நாம்அதுமட்டுமே ஒரு உச்சாடன சக்தி கொண்டதாய் இருந்தது சிறிது சிறிதாய்த் தாழ்வழுத்த முன்னணி நிலைகொண்டது’
என்று காயாம்பூ வாசித்துக்கொண்டிருக்கும் போதே மாயவன் இவ்வாறு கூறினான்:
‘‘பொதுவுடமை இயக்கத்தில் நான் என்பது முதலாளித்துவத்தின் ஒரு அங்கம். எனவே சமூகம்தான் உண்மையானது. மனிதன் தன்னைக் குழுவாகத்தான் உணர்கிறான். இப்படி மானிடத்தை ஒரே குடும்பமாக உணர்தல்தான். இது ரஷ்யாவில் மட்டுமல்ல; உலகத் தொழிலாளர்கள் எல்லாம் ஒரே சமூகமாக மாறுவதுதான். அப்போது உலக மக்கள் அனைவருமே நாம் என்றுதான் உணர்ந்தார்கள். இந்தியாவில்கூடச் சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் நாம் என்றுதானே சொன்னார்கள். சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு மாநில உணர்வு, மத உணர்வு, சமூக உணர்வு, இன உணர்வு, சாதிய உணர்வு, தனிப்பட்ட அடையாளங்கள், பிராந்திய அடையாளங்கள், மொழி அடையாளம் இப்படி எல்லாம் வருகின்றன. அதற்கு முன்பு தேசியமாக ஒன்றிணைந்திருந்தோம். விடுதலை நெருங்க நெருங்க முஸ்லீம்கள் தனிநாடு கேட்கத் தொடங்குகிறார்கள், திராவிட இயக்கம் உருவாகிறது, ஒவ்வொரு இடத்திலும் உள்ளூர்ப் பிரச்சினைகள் உருவாகின்றன, மொழிரீதியான கட்டமைப்புகள் உருவாகின்றன.’’
‘‘மொழிரீதியாகத்தானே பிரிகிறது, இனரீதியாக இல்லை அல்லவா?’’
‘‘மொழிரீதியாகத்தான். ஆனால் மொழி என்பது இனமும் அடங்கியதுதானே. எல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்ததுதான். கோரிக்கைகள் இனரீதியாகத்தானே வைத்தார்கள். திராவிட நாடு என்று கேட்பது இனரீதியால்தானே.’’
‘‘திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல; கர்நாடகா, ஆந்திரா, கேரளம் எல்லாம் சேர்ந்ததுதான் என்று சொல்கிறார்கள் அல்லவா. ஆனால் கல்வெட்டு திராவிடம் என்றாலே தமிழ்நாடுதான் என்று கூறுகிறதே’’
‘‘கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் தமிழ்நாடு என்ற மாநிலமே கிடையாது. ஆந்திரா என்ற மாநிலம் கிடையாது. 1956 இல் தானே மாநிலவாரியாகப் பிரிக்கப்பட்டது. அதற்கு முன் நாடு என்கிற சிந்தனையே கிடையாது. ஆட்சியில் இருந்த அரசனின் நிலப்பரப்புதான் ஒரு நாடு. சோழர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு சோழநாடு, பாண்டியர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு பாண்டிய நாடு, சாளுக்கியர் ஆட்சி செய்த நிலப்பரப்பு சாளுக்கிய நாடு. அரசனின் குடும்பத்துப் பெயர்தான் நாட்டின் பெயரும். ஏனென்றால் அன்று ஜனநாயகம் கிடையாது. பொதுவாகத் தென்னிந்தியாவைத் திராவிடம் என்று பேசியிருக்கிறார்கள்.’’ என்றான் மாயவன்.
‘கோடை மலர்கள் கால்களால் மிதிபட்டுக்கொண்டிருந்தன புரட்சி புரட்சியை விழுங்கிற்று’
‘‘இதுதான் பயங்கரமான வரி. புரட்சி தன்னைத்தானே தோற்கடிக்கிறது அல்லவா. புரட்சி எதற்காக உருவாகியதோ, அந்த இடத்திற்கே எதிராகப் போகிறது. இதுவும் எல்லா நாட்டிற்கும் பொருந்தும். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்கிறது. சுதந்திரத்தின் போதே நாட்டின் எல்லையில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்றார்கள், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை அல்லவா. சுதந்திரம் வந்த பிறகுதான் வெண்மணி படுகொலை நடந்தது, இந்தியா முழுவதும் உள்ள நிலச்சுவான்தார்கள் உழைக்கும் மக்களை ஒடுக்குகிறார்கள். சுதந்திரம் கிடைத்த போது இந்திய விவசாயிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருப்பார்கள் அல்லவா. நாளையிலிருந்து தேனாறும், பாலாறும் ஓடப் போகிறது என்று நினைத்திருப்பார்கள் அல்லவா. ஆனால் அடுத்த நாள் ஒரு பண்ணையாருக்கு அடிமையாகக் கூலி வேலைக்குத்தான் போயிருப்பர். உண்மையிலேயே புரட்சி புரட்சியை விழுங்கிற்றுதானே.’’ என்றான் மாயவன்.
‘‘சுதந்திரத்திற்குப் பின்பு அவர் பண்ணையடிமைதானா’’
‘‘ஆமாம். அங்குதான் தனிமனிதன் வருகிறான். சுதந்திரம் வந்துவிட்டது. ஆனால் தனிமனிதனின் எல்லா லாப நஷ்டம் என்று நாம் எல்லோரும் யோசிக்கத் தொடங்கிவிட்டோம். ஒட்டுமொத்தமாக ஒரு நாடு என்ற கற்பனையை உருவாக்கி, கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் ஒரு தேசத்தின் வெற்றியாக அல்லவா மாற்றப்படுகிறது. ஆனால் தனிமனிதாக யோசிக்கும்போது அந்த வெற்றியால் என்ன பலன். அந்தக் கிரிக்கெட் டீமிற்குக் கோடி கோடியாகத் தருகிறார்கள். ஆனால் அதிலிருந்து நமக்கு நூறு ரூபாய்கூடக் கிடைக்காது அல்லவா?. தனிமனிதர்கள் நான் எப்படி இருக்கிறேன், என் குடும்பம் எப்படி வாழ்கிறது போன்ற விசயங்களைத்தான் அளவுகோலாக வைத்திருப்பார்கள், நாடு எப்படி இருக்கிறது என்பதில் இல்லை. என்னோட குடும்பத்திற்கு முன்னேற்றம் இருக்கா? இந்த இடத்தில்தான் தனிமனிதத்துவம் வந்துவிடுகிறது அல்லவா.’’ என்ற மாயவன் இன்னுமா அதைக் குடிக்கிறீர்கள் என்றான்.
வாய்விட்டுச் சிரித்த காயாம்பூ ‘‘ஏன் நீங்கள் முடித்துவிட்டீர்களா?’’
‘‘இது எறும்பு குடிக்கிறது அளவுதாங்க. இதனாலதான் வெயிட்டரு நம்மை மதிக்க மாட்டிக்கிறான். இது உடம்பில ஒட்டவே ஒட்டாதுங்க. ஆனால் குறைவாக அருந்துவது ரொம்ப நல்லதுதான்’’ என்றபடி இன்னும் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்தான்.
மீண்டும் சிரித்தபடியே குடிக்கச் சென்ற காயாம்பூவை நோக்கி, ‘‘உங்களின் சிரிப்பு, போதை கொஞ்சம் ஏறியதைக் காட்டுகிறதே’’ என்றான்.
‘ஒவ்வொரு குழந்தையின் பந்திலிருந்தும் காற்று வெளியேறிற்று’
‘‘இதுதாங்க அபாரமான இடம். கவிதையாக மாறுகிற இடம் இதுதான். எவ்வளவு பெரிய வரலாற்று மாற்றத்தை ஒரு சின்ன உவமைவழியாகச் சொல்லிவிட்டார்.”
‘‘கம்யூனிசம் மேலோங்கியிருந்த காலக்கட்டத்தைக் காற்றடைத்த பையாகவும், அது வீழ்ச்சிபெற்ற காலத்தைக் காற்று வெளியேறியதாகவும் கூறியிருக்கிறார் அல்லவா.’’
‘‘எல்லோருடைய மனதிலும் ஒரு பந்து இருக்கிறது. அதில் காற்று நிறைந்து கிடக்கிறது. வீட்டிற்கு ஒரு பந்து பூரித்து, திணிவோடு இருக்கும். அதை உருட்டி விளையாடி மகிழ்ச்சியாக இருப்போம். வாரங்களாகும், மாதங்களாகும், வருடங்களாகும் நம் பந்திலிருந்து காற்று சிறிது சிறிதாக இறங்க இறங்க பந்து தன் கவர்ச்சியை இழந்துவிடும் அல்லவா.’’ என்றான் மாயவன்.
‘‘ஆம், நிறமாறும், அதன் பருமன் மாறும் பிறகு இருந்த இடம் தெரியாமல் போகும்’’
மாயவனுக்குத் தன் மனைவியிடம் அழைப்பு வர, இங்கிருந்தபடியே பேசினால் சத்தத்தில் நாம் எங்கிருக்கிறோம் எனக் கண்டு பிடித்து விடுவாள். எனவே, வரந்தாவிற்குச் சென்று பேசிவிட்டு வருகிறேன் என்று காயாம்பூவிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.
⧫
‘அவ்வாறே இறுக்கமான வட்டவடிவ நாம் எனும் சூழ்நிலைமை நிதானமாய்த் தட்டையாக ஆயிற்று’
‘‘வட்டம் என்பது முழுமையல்லவா, எல்லாமே சமமாகிவிடும், எல்லாமே முழுமைத்துவம் அடைந்துவிடும், எல்லோரும் சாட்சிய நிலைக்குப் போய்விடுவோம் என்பதற்கான முழுமைதானே வட்டம். பலூனில் மந்திரத்தால் காற்று வெளியேறிவிட்டது என்ற உருவகத்தைக் கருத்தாகச் சொல்கிறார்.’’ என்றான் மாயவன்.
‘யாரோ ஒருவர் தைரியமாக நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்று எழுதினார்’
‘‘ரொம்ப பயங்கரமான வரி. இதுதான் கலகத்தின் முதல் குரல். புரட்சியாளர்கள் காதலிக்கக் கூடாது. புரட்சி நடந்துகொண்டிருக்கும் போது காதல் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். காதல் கவிதைகளுக்கு அங்கு இடமில்லை. புரட்சி உக்கிரமாக இருக்கும் போது காதல் கவிதைகளா எழுதிக்கொண்டிருக்க முடியும். ஆனால் யாரோ ஒருத்தர் புரட்சியெல்லாம் முடிந்த பிறகு, தைரியமாக ஒரு காதல் கவிதையை முதல்முறை எழுதுகிறார். இங்கு தனிமனிதன் வந்துவிடுகிறான். நான் என்று இருக்கும் போது எப்படிக் காதல் கவிதைகள் சாத்தியம். நாம் என்று இருக்கும்போது அரசியல் சாத்தியம். நாம் எல்லோரும் சேர்ந்து பதாகை ஏந்திப் போராடலாம், எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கலாம், எல்லோரும் சேர்ந்து ஒரு இடத்தை முற்றுகையிடலாம், கூட்டமாகச் சேர்ந்து ஆயுதம் ஏந்திப் போராடலாம், கூட்டமாகச் சேர்ந்து எப்படிக் காதலிக்க முடியும்? காதல் என்னும் போதே தனிமனிதன் அங்கு வந்துவிடுகிறான். காதல் தனிமனித அஃபைர், புரட்சி பொதுமனித அஃபைர்” என்ற மாயவன் அபாரமாக எழுதியிருக்கிறார் என்றான்.
‘‘வேர்க்கடலை ஆய்வது போல் ஒவ்வொரு வரியாக ஆய்ந்து, வார்த்தைகளின் ஓடுகளைப் பிரித்துப் பருப்பை எடுப்பது போல், நீங்கள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்லத்தான் நிறைய விசயங்கள் புலப்படுகின்றன’’ என்ற காயாம்பூ மேற்கொண்டு வாசித்தான்.
‘குளிர்கால உறைபனி இன்னும் உருகவில்லை
வசந்தகாலம் எப்போதும் நிச்சயமற்றிருந்தது
சென்ற நூற்றாண்டியின் இறுதியில்
சோவியத் யூனியன் காணாமல் மறைந்தது.’
‘‘எழுபத்தைந்து ஆண்டுகள் சோவியத் யூனியன் இருந்தது. 1971 இல் புரட்சி தொடங்கியது. ஆனால் அதன்பின்பு பல ஆண்டுகள் கழித்துதான் அரசமைப்பு எழுதிப் பிரகடனப்படுத்தி சோவியத் யூனியன் கட்டமைக்கப்படுகிறது. உக்ரைன், உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா உட்பட ரஷ்யாவுடன் சேர்ந்து பதினைந்து நாடுகள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்தன. நாடு என்கிற சிந்தனைக்கு மாற்றாக உலகச் சமூகத்தைக் கட்டமைக்கிறார்கள். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்காளதேஷ், சீனா எல்லாம் சேர்ந்து ஒரே நாடாக இருந்தால் எப்படி இருக்கும், அதுபோன்ற ஒரு அமைப்பு. முன்னுதாரணமே இல்லாத முதல்முறையான பரிசோதனை அது. இப்போதும் நீங்கள் யூடியூப்பில் ‘எவரி டே இன் சோவியத் யூனியன்’ என்று தேடிப் பாருங்கள், சோவியத் யூனியன் காலத்தில் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது என்பது அதில் இருக்கும்.’’ என்று பேசிக்கொண்டிருந்த மாயவனிடன் எல்லாமே யூடிப்பில் இருக்கிறதா என்றான் காயாம்பூ.
‘‘ஆமாம் இப்போதுதான் எல்லாமே யூடியூப்பில் இருக்கிறதே என்றான். எல்லாமே கம்யூனிட்டிதான். கம்யூனிட்டி என்றால் குழு. அதாவது எல்லாம் குழுச் செயல்பாடுதான். நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து ஒன்றாக வாழ்வார்கள். எல்லாருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும். ரேஷன் கார்டு ரஷ்யாவின் கண்டு பிடிப்புதான். அதைத்தான் நேரு இங்கு அடாப்ட் பண்ணுகிறார். நேருவுக்கு மிகவும் பிடித்த நாடு ரஷ்யா. அது அவருக்குக் கனவு தேசம். அங்கிருக்கும் நடைமுறைகளை அப்படியே இங்கு நடைமுறைப்படுத்த இயலாது. ஐந்தாண்டுத் திட்டம்கூட ரஷ்யாவினுடையதுதான். அதை இங்கே நடைமுறைக்குக் கொண்டுவந்தார். ஒரு திருமணத்தை அங்கு தனியாக நடத்த முடியாது. கல்யாணத்திற்கு அரசாங்கத்திடம் சென்று பதிவு செய்ய வேண்டும், அரசே ஒரு கம்யூனிட்டி அரங்கத்தை ஒதுக்கித் தரும். அங்கு பதிவு செய்யும் போது டோக்கன் கொடுப்பார்கள். அதன்படிதான் திருமணம் நடைபெறும். நான் மட்டும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துகிறேன் என்று அங்கு செய்ய முடியாது. இப்படி எல்லாமே அரசின் கட்டுப்பாட்டில்தான் நடைபெறும். அதேசமயத்தில் நிறைய ஒடுக்குமுறைகளும், பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்தன.’’
‘ஒன்றடுத்து ஒன்றாய்
வார்சா ஒப்பந்தத்திலிருந்து நாடுகள் விலகின.
அப்போதிருந்து கவிஞர்களுக்கு நானைத் தவிர ஒன்றும் இருக்கவில்லை
நானில் தொடங்கி அவர்கள் நாளிறுதியை நானில் முடித்தனர்’
‘‘வார்சா என்பது ஒரு ஊர். வார்சா ஒப்பந்தம் என்பது கம்யூனிஸ்ட் நாடுகள் சேர்ந்து நடத்தியது. நேட்டோ நாடுகள் என்று சொல்கிறார்கள் அல்லவா. அதாவது அமெரிக்காவின் நட்பு நாடுகள். அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளை நேட்டோ என்று அழைக்கிறார்கள் அல்லவா. அமெரிக்க-ஐரோப்பிய வல்லாதிக்கச் சக்திகள் இணைந்ததுதான் நேட்டோ. இவர்கள்தான் உக்ரைன்மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நேட்டோவுக்கு உக்ரைன் போகிறதா இல்லையா என்பதுதான் பிரச்சினையே. இதுபோல் கம்யூனிஸ்ட் நாடுகளின் கூட்டமைப்புத்தான் வார்ஷா ஒப்பந்தம். அதாவது ரஷ்யாவை ஒட்டியிருந்த மேற்கு நாடுகள் எல்லாமே.’’ என்றான் மாயவன்.
‘‘வார்சாவின் செயல்பாடுகள் என்ன’’ என்றான் காயாம்பூ.
‘‘நேட்டோவுக்கு எதிரான நாடுகள்தான் இவை. முதலாளித்துவ நாடுகள் எல்லாம் ஒரு குழு. இதற்கு எதிரான அணிதான் வார்ஷா. இரண்டும் சம அளவிலான சக்தி வாய்ந்ததாக இருக்கும். ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு மறைமுக யுத்தம் நடந்துகொண்டே இருக்கும். உதாரணத்திற்கு ‘நாங்கள் அமெரிக்கவுடனும் இல்லை; ரஷ்யாவுடனும் இல்லை. இந்தியா அணிசேரா நாடாக இருக்கும்’ என்பது நேருவின் நிலைப்பாடாக இருந்தது. இப்போதுவரை காங்கிரஸ்காரர்கள் இக்கருத்தைப் பேசுபொருளாக்கி வருகிறார்கள். காலப் போக்கில் வார்சா ஒப்பந்தமே அர்த்தமின்மையை நோக்கிச் சென்றது. ஏனென்றால் ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை எல்லாம் கம்யூனிச நாடுகளாக்க முயற்சித்தது.’’
‘நானில் தொடங்கி அவர்கள் நாளிறுதியை நானில் முடித்தனர்’ என்ற வரியை மீண்டும் கோடிட்டுக் காட்டினான் காயாம்பூ.
‘‘அவர்களின் சிந்தனை ஓட்டமே இறுதியில் ‘நான்’ ஐ நோக்கிச் சென்று விட்டது. அவர்களின் பிரபஞ்சமே வெறும் நானில் தேங்கிவிட்டது. நமக்குக்கூட நம்முடைய குடும்பம், நம்முடைய பிரச்சினை, நம்முடைய வாழ்வாதாரம் இப்படி எல்லாமே சுயத்தை நோக்கித் தானே சுழல்கின்றன. உலகத்தின் பிரச்சினைகள்…’’ என்று மாயவன் பேசிக்கொண்டிருக்கும் போது வேறு ஏதேனும் வேண்டுமா என்று வெயிட்டர் உள்நுழைந்தான்.
⧫
பேச்சினூடே இன்னொரு குவாட்டர் என்ற மாயவன். சைடிஸ் என்ன இருக்கு என்றான். வெயிட்டர் ஈரல் இருக்கு என்று தொடங்கியதும் என்ன ஈரல் என்றான் காயாம்பூ. மாயவனும் வெயிட்டரும் ஒருமித்த குரலில் சிக்கன் ஈரல்தான் என்றார்கள். வேறு என்ன இருக்கிறது என்கிற அர்த்தத்தில் வெயிட்டரை நோக்கித் திரும்பினான் மாயவன்.
‘‘மஹாராஜா சிக்கன் இருக்கு, தவா இருக்கு, செட்டிநாட்டுச் சிக்கன் இருக்கு’’ என்று வெயிட்டரின் அடுக்குதலினூடே சிக்கன் போயிடலாமா என்றான் மாயவன். காயாம்பூவின் யோசனையில், மீண்டும் வெயிட்டர் தொடர்ந்தான்.
‘‘வறுவல் இருக்கு, உப்புக்கறி இருக்கு’’ என்பதைக் கேட்டு
‘‘எண்ணெய் இல்லாமல் என்ன இருக்கு’’ என்றான் மாயவன்.
‘‘எண்ணெயே இல்லாமல் இருப்பது தவாக்கறி மட்டும்தான்’’
‘‘சரி அது ஒன்னு கொடுத்துடுங்க. வெஜ் சாலட் இருக்கா’’
‘‘வெஜ் சாலட் இல்லை’’
‘‘ஃப்ரூட் சாலட் இருக்கா’’ என்றான் காயாம்பூ.
‘‘இங்க ஃப்ரூட்ஸ் அவ்வளவா நல்லா இருக்காது’’ என்றான் மாயவன்
‘‘இல்லை ஃப்ரூட்ஸ் எல்லாம் ஃப்ரெஷா இருக்கும்” என்றான் வெயிட்டர்
‘‘சரி அது ஒன்னு கொடுத்துடுங்க’’
‘‘வாட்டர், சோடா எதுவும் வேண்டுமா’’
‘‘வாட்டர் மட்டும் போதும்’’
‘‘இப்பவே தேவையான அளவு ஏறிடுச்சு” என்றான் காயாம்பூ.
‘‘நமக்குத்தான் பார்த்தாலே ஏறிடுமே. நம்ம சேர்ந்து குடிக்கணும் என்றில்லை, போன் பேசியபடி உள்ளே வந்து, இங்கு குடிப்பவர்களை வேடிக்கை பார்த்தபடி ஆளுக்கொரு மூலையில் நின்று போனில் பேசும் போது, சரியா சிக்னல் கிடைக்கவில்லை என்று படியில் இறங்கி ரோட்டுக்குச் சென்றுவிட்டாலே போதும், நமக்குத் தேவையான போதை கிடைத்து விடும். ஏனென்றால் நமக்குத் தேவை மூடுதானே. இந்த நிலையில்தான் நாம இருக்கோம்’’ என்றான் மாயவன்.
‘‘இப்படிச் சொல்லிக்கிட்டே அடுத்த குவார்ட்டர் சொல்லிட்டோமே.’’
‘‘இது கவர்மென்ட்டைக் காப்பாற்றுவதற்காக. இதுவும் இல்லையென்றால் இந்த வெயிட்டர் பையன்கூட நம்மைச் சுத்தமா மதிக்க மாட்டானே’’
இன்னும் நான்கு வரிகள்தான் இருக்கு. அதையும் வாசித்திடலாம் என்றபடி தொடர்ந்தான்.
⧫
‘நான் தவிர ஒன்றும் மிச்சமிருக்கவில்லை. கடவுளே கூட நான் என்பதற்கு இன்னொரு பெயராக ஆனார்.’
என்ற வரிகளைக் கேட்ட மாயவன் எவ்வளவு பயங்கரமான வரிகள் பாருங்க. கடவுள் வரும் இடத்தை இன்னொருமுறை வாசிங்க என்றான்.
‘‘இந்தப் பிரபஞ்சத்தில் நாம் தேடக்கூடிய லட்சிய வடிவம் கடவுள். முழுமைத்துவத்தின் நிறைந்த வடிவம் கடவுள். இப்போது கடவுளும் நானும் ஒன்றாக மாறிவிட்டது. அப்போது உண்மை என்ற இடத்தில் பொதுவுடைமை என்னும் சித்தாந்தம் இருந்தது. அந்த இடத்தில் இப்போது நான் வந்துவிட்டது. எது அறுதி உண்மையோ, எது இறுதி உண்மையோ அதைத்தான் கடவுள் என்கிறோம். அப்போது புரட்சியைத்தான் கடவுள் என்றார்கள். இப்போது நம்முடைய எல்லோரின் கடவுளும் ‘நான்’ தான். நீங்கள் வேண்டுமானால் நினைத்துப் பாருங்கள், நாம் அதிகமாக யாரைப் பற்றி யோசிக்கிறோம். தன்னைப் பற்றித்தான். தன்னைத்தான் இந்தப் பிரபஞ்சத்தின் மையமாகக் கருதுகிறோம். என்னுடைய பிரச்சினை என்ன? நான் இருக்கிறவரைதான் இந்த உலகம் இருக்குமா? நான் இல்லாமல் போனால் இந்த உலகம் என்னாகும். இப்படி தன்னோட பசி, தன்னோட இருப்பு, தன்னோட இலக்கு, தன்னோட புடுக்கு என எல்லாமே தன்னைப் பற்றியேதான் மனிதன் அதிகம் யோசிக்கிறான்.’’ என்றான் மாயவன்.
‘‘ச்சா, எவ்வளவு முக்கியமான விசயத்தை அபாரமாக எழுதியிருக்கிறார் அல்லவா.’’ என்றான் காயாம்பூ.
‘‘சமீப காலமாகத்தான் இவரைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்கள்’’
பிரம்மராஜனின் இந்த வொர்க் மிகப் பிரமாதமா இருக்கு. வழக்கமாக அவரின் மொழிபெயர்ப்பு ரொம்ப ஆர்டிஃபிசியலாக இருக்கும். மொழியோடும் ஒட்டாமல், வாழ்வியலோடும் ஒட்டாமல், வறட்டுத்தனமான மொழியே அதிகம் காணப்படும். அதாவது நான் சொல்வது அவர் மொழிபெயர்க்கும் கவிதைகளை. சில கட்டுரைகள் ரொம்ப அற்புதமாக இருக்கும். குறிப்பாக கேள்விகளின் புத்தகத்தில் பாப்லோ நெருடாவைப் பற்றிய கட்டுரை மிக நேர்த்தியாகவும், உயிரோட்டமாகவும் இருக்கும். ஆனால் கோ இவுன் கவிதை மொழியாக்கத்தில் பிரம்மராஜனின் பெயர் இடம்பெறவில்லை.’’
‘‘இது என்ன அயோக்கியத்தனமான செயலா இருக்கு. மொழியாக்கம் செய்தவனின் பெயர் போடணும் இல்லையா?’’
அதைக் கேட்டதற்குத்தான் ‘‘அட ங்கொம்மா’’ என்கிறான்.
‘‘யாரு’’
‘‘வேறு யாரு? இதழாசிரியர்தான். அவனையெல்லாம் நான் நேரில்கூடப் பார்த்தது இல்லை. அவனுக்கும் எனக்கும் என்ன பகை. ஏன் இப்படி என்மேல் வெறுப்பை உமிழவேண்டும்’’
⧫
இன்னும் மூன்று வரிகள்தான் என்றபடி வாசித்தான் காயாம்பூ.
‘இன்று முடிவற்ற அலைகளைக் கொண்ட பசுபிக் விளிம்போரப் பிரதேசத்தில்
நான் என்பதன் ஆவிகளைப் புதைக்கிறேன்.
யார் பிறப்பார்கள்
யார் பிறப்பார்கள்
நாம் அல்லது நான் இரண்டும் அல்ல
ஒவ்வொரு அலையும் மற்றொரு அலையின் இடுகாடு
மற்றொரு அலையின் கருப்பை’
‘‘இந்த இடத்தில் பின்நவீனத்துவமாக மாறுது பாருங்க. மூன்று காலக்கட்டத்தையும் கொண்டு வருது. புரட்சியால் உலகத்தை மாற்ற முடியும் என்கிற லட்சியவாதக் காலக்கட்டம். ஒரு பெரிய பொன்னுலகம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையை விதைத்த காலக்கட்டம். தமிழக அளவில் திராவிட இயக்கம், இந்திய அளவில் அம்பேத்கர் நடத்திய புரட்சி, உலக அளவில் கார்ல் மார்க்ஸ் நடத்திய புரட்சி என உலகம் முழுக்க மிகப் பெரிய புரட்சி நடந்தது. அது புரட்சியின் காலக்கட்டம். ஆனால் பிறகு புரட்சி பற்றிய பெரிய நம்பிக்கை இழப்பு, தனிமனித உரிமைகள், நம்பிக்கை, போராட்டம், கனவு பற்றிய காலக்கட்டம். மறுபடியும் எல்லாவற்றின் மீதான கேள்விகள் மட்டும் நிலைபெறும் காலக்கட்டம். தெளிவே இல்லாமல் எல்லாவற்றின் மீதான குழப்பம் எழுந்த காலக்கட்டம். எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எதையும் முழுமையாகப் பற்ற முடியவில்லை. அதாவது இன்றைக்கு எல்லாவற்றிலும் பட்டும் படாமலும் இருக்கிறோம் அல்லவா. இப்படி எல்லாவற்றிலும் குழப்பம் இருக்கிற பின்நவீனக் காலக்கட்டத்திற்குத்தான் இந்தக் கவிதையைக் கொண்டு வந்திருக்கிறார். ஏனென்றால் ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையின் பிறப்பாகவும் இருக்கிறது, இறப்பாகவும் இருக்கிறது’’ என்றான் மாயவன்.
‘ஒவ்வொரு அலையும் மற்றொரு அலையின் இடுகாடு
மற்றொரு அலையின் கருப்பை’
மீண்டும் வாசித்தான் காயாம்பூ.
‘‘ஒரு தத்துவார்த்த இடத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். பிரபஞ்சம் தோன்றிய இடத்தில் இருந்து, ஒன்றில் இருந்து ஒன்று, ஒன்றை அழித்து ஒன்று, ஒன்றை உருவாக்கி ஒன்று என்று இவ்வாறு தானே மறுசுழற்சி நடந்து வந்திருக்கிறது. இறுதியில் ஒரு ஸ்தம்பித்த இடத்தை அடைந்திருக்கிறது. விடையே இல்லாமல் குழம்பித் தவிக்கும் இடத்திற்கு வந்து விட்டிருக்கிறது. இதேபோல் ஓசிப்மெண்டல்ஸ்டாம் எழுதியிருப்பார். அதாவது waves starting and restarting forever என்று எழுதியிருப்பார்.’’ என்றான் மாயவன.
I was born in a land with far more adjectives than nouns
I longed to be on touch with wordless earth
‘‘பெயர்களை விட, பெயர்களை ஒட்டிய அடைமொழி இருக்கும் அல்லவா, அது அதிகமாக இருக்கும் நிலப்பரப்பில் நான் பிறந்தேன் என்கிறார். உதாரணத்திற்குத் தமிழ்நாட்டுத் தலைவரின் பெயர்களை விட அவர்களின் அடைமொழிதானே மிகவும் பிரபலம். எம்.ஜி.ராமச்சந்திரன் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியாது, புரட்சித் தலைவர் என்றால் தானே தெரியும். ஈ.வே.ராமசாமி என்றால் எல்லோருக்கும் தெரியாது, பெரியார் என்று சொன்னால்தான் தெரியும். அண்ணா என்றால் எல்லோருக்கும் தெரியாது, பேரறிஞர் என்றால்தான் தெரியும். எனவே, நிஜப் பெயர்களை விட அடைமொழிகள் பிரபலமாக இருக்கும் இடம்தான் என்னுடைய நிலப்பரப்பு என்கிறார்.’’
covered with the dead leaves of all the trees
that had, each one, fallen in sorrow before ever being stuck with a name
‘‘சொற்களில்லாத உலகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்று சொல்கிறார். ஏனென்றால் புரட்சித் தலைவர், பேரறிஞர், பெரியார், தளபதி, இளைய தளபதி என்பதெல்லாம் வெறும் புகழ்மொழிகள் தானே. எனவே வார்த்தைகள் இல்லாத உலகத்தில் வாழ ஏங்குகிறேன் என்கிறார். இதை எப்படி முடிக்கிறார் என்றால், மொழியால்தானே இந்த உலகத்தை வசப்படுத்தியிருக்கிறோம். மனிதர்கள் மொழியால்தான் இந்த உலகத்தைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் நாம் பெயரிட்டிருக்கிறோம். வாழை மரத்தை நாம்தான் வாழை மரம் என்று அழைக்கிறோம், வாழை மரத்திற்குத் தான் வாழை மரம் என்று தெரியுமா? தெரியாது அல்லவா? அது ஒரு புல்; கொஞ்சம் அதிகமாக வளர்ந்துவிட்ட புல் அவ்வளவுதான். இலைகளை அத்துமீறலாக விரித்துவிட்ட புல்தான். ஆனால், வாழை மரம் என்ற உணர்வு, மொழிப் பிரக்ஞை அதற்குக் கிடையாது. ஒரு பொருளுக்குப் பெயர்வைப்பதன் மூலம் அப்பொருளை நம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறோம். வீட்டில் நான்கு பூனைகள் இருக்கின்றன. நாலுக்கும் பெயர் வைப்பதன் மூலம் அவற்றை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறோம். ஆனால் பெயர்களுக்கு அப்பாற்பட்ட உலகத்தில்தான் பூனைகள் வளர்கின்றன. நட்சத்திரங்கள் எல்லாவற்றுக்கும் பெயர் வைத்திருக்கிறோம். இப்பெயர்கள் எல்லாம் நட்சத்திரங்களுக்குத் தெரியுமா என்ன? அதேபோல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மொழியிலும் பெயர்கள் மாறுகின்றன. ஆனால் இப்பெயர்களுக்கு அப்பாற்பட்டுதான் அவை இருக்கின்றன. பெயர்கள் இல்லாததுதான் பிரபஞ்சம். மொழியென்பது ஒரு வகையான அடையாளம், ஒரு வகையான அதிகாரம். மொழியில் இந்த உலகம் இருக்கிறது என்றுதான் இந்த நான்கு வரிகளும் சொல்கின்றன.’’
பொறித்த மீன்வறுவலின் மேல் அறுத்த எலும்பிச்சைத் துண்டுகள் வைத்த தட்டு ஒன்றை மேசையில் வைத்தார் வெயிட்டர். ஒரு எலுமிச்சைத் துண்டை மீனின் மீது பிழிந்துவிட்டான் மாயவன். அதில் ஒன்றை எடுத்துத் தனியே வைத்துக்கொண்டான் காயாம்பூ. வீட்டிற்குச் செல்லும் போது வாய்க்குள் பிழிந்துவிட்டால் வாடை அடிக்காமல் இருக்குமல்லவா என்றான். இன்னொரு லெமன்கூட வாங்கிக் கொள்ளலாம் என்ற மாயவன், அடுத்து உள்ள இரண்டு வரிகள் என்ன என்று இதழை வாங்கி வாசித்தான். ம்… அபாரமா இருக்கு என்றபடி வாசித்தான் மாயவன்.
I was born in a land with far more adjectives than nouns
I longed to be on touch with wordless earth
‘‘மொழி தோன்றி ஒரு லட்சம் வருடங்கள் இருக்குமா, மனிதன் தோன்றி நாற்பது லட்சம் ஆண்டுகள் இருக்குமா? அப்படியென்றால் மனிதன் தோன்றிய பிறகு பல லட்சம் வருடங்களாக மொழியே இல்லாமல் தானே வாழ்ந்திருக்கிறான். அக்காலக்கட்டங்களில் இப்பிரபஞ்சத்தை எப்படிப் புரிந்து வைத்திருந்தோம். நம் வீட்டில் இருக்கும் எறும்போ, ஒரு கொசுவோ, நாயோ, பூனையோ எப்படி இந்த உலகத்தைப் புரிஞ்சுக்க முடியும். வீட்டு வாசலில் கிடக்கும் கல்லுக்குத் தான் ‘கல்’ என்று தெரியாது. அது ஒரு பருப்பொருள் அவ்வளவுதான், கல் என்ற சிந்தனை அதற்குக் கிடையாது. மொழியில்லாத உலகத்தில் வாழ்வதற்கு ஏங்குவது பயங்கரமாக இருக்கிறது’’
covered with the dead leaves of all the trees
that had, each one, fallen in sorrow before ever being stuck with a name
‘‘பழுத்த இலைகள் சருகுகளாக உதிர்ந்து, உதிர்ந்து மூடிய நிலப்பரப்பு வேர்கள் இல்லாத சருகுகள் என்று சொல்கிறார். சருகுகளுக்குப் பெயர் இருக்கா? இலைகளுக்குப் பெயர் இருக்கா? சாலைகள் முழுவதும் நூற்றுக்கணக்கான இலைகள், நூற்றுக்கணக்கான சருகுகள் இவையாவற்றுக்கும் பெயர்கள் இல்லை. ஒரு ஆலமரம் இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பழுத்து உதிர்ந்து சருகுகளாகின்றன. ஒவ்வொரு சருகுக்கும் ராமசாமி என்றோ, எம்.ஜி.ஆர் என்றோ பெயர்கள் இல்லை. பெயர்களற்ற இந்த நிலப்பரப்பில் வாழ்வதற்குத்தான் வாழ ஏங்குகிறேன் என்கிறார்’’
‘‘நீங்கள் முதலில் சொல்லும் போதே திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. ‘எங்கே மனிதர் இல்லையோ, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’ என்ற கண்ணதாசன் பாடலும், அதன் நீட்சியாக ‘யாரும் மானிடரே இல்லாத உலகில் சிறு வீடு கட்டிக்கொள்ள வேண்டும்’ என்னும் தாமரையின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன’’ என்றான் காயாம்பூ.
‘‘மிக அருமையாகச் சொன்னீர்கள். மனிதன் என்று சொன்னாலே, அவனின் சாராம்சம் மொழிதான். மனிதனைப் பிழிந்து ஒரு குவளையில் ஊற்றினால் அவன் சொற்களாகத்தான் எஞ்சியிருப்பான். எனக்கும் உங்களுக்குமான உறவு. உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமான உறவு சொற்கள்தான். சண்டை வந்தாலும் சரி, மிகப் பெரிய அன்பு வந்தாலும் சரி வார்த்தைகளால்தான் அடையாளப்படுகிறோம். மொழியை நீக்கிவிட்டால் நம் மொத்த உலகமும் சிதறிவிடும்.’’ என்றான் மாயவன்.
‘‘ஒரு பாட்டில் திறக்காமல் அப்படியே இருக்கு. இது ரொம்ப அசிங்கமாவும் இருக்கு. இதை மட்டும் ரிட்டர்ன் கொடுத்தோம் என்றால் ரஷ்யப் புரட்சி அளவுக்கு வெயிட்டர் ஒரு புரட்சி செய்திடுவான்’’ என்ற மாயவனிடம் ”எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்து வீட்டுக்குக் கொண்டு போங்க” என்ற காயாம்பூ வீட்டுற்குச் செல்லும் வழியில் வானத்தை அண்ணாந்தபடி எலுமிச்சையைப் பிழிந்தான்.
000

பச்சோந்தி
பச்சோந்தி தமிழ்க் கவிஞர், பத்திரிகையாளர். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் 'பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்' என்னும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகியுள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
