/

கிராஞ்சி: இஸுரு சாமர சோமவீர

சிங்களத்திலிருந்து தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்

எல்லாமும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. சுவர்கள், மேற்கூரை, தலையணை, படுக்கை விரிப்பு என அனைத்துமே வெண்ணிறம். கட்டிலின் அருகே சிறிய மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குவளையும் வெண்ணிற சிறு தட்டால் மூடப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் அபத்தமான விதத்தில் தூய்மையாகவும், நேர்த்தியாகவும் இருக்கின்றன. வெண்ணிற ஜன்னல் திரைகள் ஜன்னலுக்கு அப்பால் இருப்பவற்றை எனது விழிகளிடமிருந்து மறைத்து வைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் நான் வெண்ணிறத்துக்கு, தனித்த ஏகாந்தமான வெற்றிடத்துக்கு மிகவும் ஆசையுற்றவனாக இருந்தேன்.

எனது அறையில் ஒரு காலண்டரையாவது தொங்க விட நான் விரும்பவில்லை. எனினும் இப்போது இந்த வெண்ணிற வெற்றிடம் எனக்கு மிகுந்த களைப்பைத் தருகிறது. தலையினுள்ளே ஓரோர் ஓசைகளாக பலதும் எதிரொலிப்பது போல உணர்கிறேன். அது, வார்த்தையில் வடிக்க முடியாத ஒரு வேதனை. காலை வேளைக்கான மருந்தை நான் உட்கொண்டிருந்த போதிலும் காய்ச்சல் குறைந்திருக்கவில்லை. எனது வாயினுள்ளே மெலியம் படை படிந்து, வாய் கசப்போ கசப்பாக இருக்கிறது. உறக்கமும் விழிப்புமற்ற நிலையில் காணும் அபத்தங்கள், தலை பாரமாக உணரும் உணர்வை அதிகரிக்கச் செய்கின்றன. நான் அழ வேண்டும். அலற வேண்டும். இந்த மோசமான கோதாரிக் காய்ச்சலால் நான் செத்துப் போய் விடுவேன் என்ற பேரச்சம் மனதில் தோன்றுகிறது. அனைத்தையும் விட தலையினுள்ளே தோன்றும் வலியைத்தான் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

அது ஒரு தீவு. கிராஞ்சியிலிருக்கும் சிவபுரம் கடற்கரையில் தென்படும் தீவு என நினைக்கிறேன். அந்தக் கனவில் வட்டக்காய், கத்தரிக்காய், புடலங்காய், பயற்றங்காய் போன்றவை செழிப்பாக விளைந்த பயிர் நிலமொன்று இருந்தமை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடும் பச்சை நிறமான பெரிய வட்டக்காய் இலைகள் ஒரே வரிசையில் காற்றுக்கு அசைந்தன. அவற்றின் மீதிருந்த பனித் துளிகள் சூரிய ஒளியில் பிரகாசித்தன. ஊதா நிற பெரிய கத்தரிக்காய்களின் மீது பச்சை நிறத்தில் மெலிந்த புழுக்கள் நடமாடின. மஞ்சள் நிற வட்டக்காய்ப் பூக்களிடையே தேனீக்கள் பறந்தன. நானும், கோப்ரல் சமன் குமாரவும் புளொக் கற்களால் கட்டப்பட்ட, மேற்பூச்சு பூசப்படாத சிறிய வீடொன்றின் முன்னால் அமர்ந்திருந்து எமது பயிர் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எமது விழிகள் பிரகாசித்தன. கோப்ரல் சமன் குமாரவின் முகத்தில் காணப்பட்டது காட்டுமிராண்டித்தனமான ஒரு வேட்டைப் புன்னகை. எனது முகத்திலும் பெரும் புன்னகையொன்று இருந்தது. கோப்ரல் சமன் குமார ஜின்னா, நான் உபாலி கினி வெல்ல. ஒருமையில் கதைத்துக் கொள்ளாவிட்டாலும்கூட அந்தக் கனவில் நாமிருவரும் உபாலியும், ஜின்னாவும்தான் என எனக்குத் தோன்றியது. சிறுவர்களாக அல்லாது, இதோ இப்போது இருப்பது போலவேதான் நாங்கள் அந்தக் கனவிலும் இருந்தோம். எம்மிருவரது முகங்களிலும் மெலிதாக அரும்பு மீசை வளர்ந்திருந்தது. எமது வீட்டிலிருந்த பெட்டை நாய் ப்ளாக்கி, ஓரிடத்தில் அசையும் வட்டக்காய் இலைகளைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. சமனின் கண்கள் சிறுத்தன.

“முள்ளம்பன்றியொண்ணு. இதுங்கதான் நம்ம பயிரையெல்லாம் நாசமாக்குது” என சமன் எனது காதருகே அவனது பெரிய உதடுகளை வைத்து முணுமுணுத்தான்.

தொடர்ந்து சமன் துப்பாக்கியை எடுத்து கண்ணின் அருகே வைத்து, விழிகளைக் குறுக்கிக் குறி பார்த்தான். அது முள்ளம்பன்றியல்ல, ஒரு முயல். பெரிய வட்டக்காய் இலைகளின் மீது குருதித் துளிகள் தெறித்திருந்தன. சமன் வேட்டைப் பற்கள் தென்படுமளவுக்கு பெரிதாகச் சிரித்தான். நானும் சிரித்துக் கொண்டுதான் இருந்தேன் என்பதைச் சொல்ல எனக்கு நினைவிருக்கிறது. அது மிகவும் பெரிய, இருண்ட நிறத்தைக் கொண்ட ஒரு முயல். அதன் பிறகான கனவின் பகுதி தெளிவற்றது.

பிறகு, நாங்கள் கடற்கரையொன்றில் இருந்தோம். தொலைவில் நிலவொளியில் கடல் அமைதியாக அசைந்து கொண்டிருந்தது. நாமிருவரும் அருகருகே படுத்திருந்தோம். ஓரளவான தீச் சுவாலை எமக்கு முன்னால் சடசடத்து எரிந்து கொண்டிருந்தது. நான் ரொபின்சன் குரூசோவின் கதையை சமனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ரொபின்சன் குரூசோவின் கதையில் வரும் ஃப்ரைடே மிகவும் கட்டுமஸ்தானவர். ரொபின்சன் குரூசோவும், ஃப்ரைடேயும் வாழ்நாள் முழுவதும் அந்தத் தீவிலேயே வாழத் தீர்மானிக்கிறார்கள். காரணம் அந்த இருவரும் விரும்பும் விதத்தில் வாழ உலகில் எவ்விடத்திலும் இடமில்லை. அவர்கள் இருவரும் கொடியவர்களோடு சண்டை பிடிக்கிறார்கள். சுருக்கமாக, ஃப்ரைடே தனது உறவினர்களைக் கூட ரொபின்சன் குரூசோவுக்காகக் கொல்கிறான். குரூசோ தனது நாட்டுக்குச் சொந்தமான கப்பல்களைக் காணும்போது ஒளிந்து கொள்கிறான். அவர்கள் பயிர்களை விதைக்கிறார்கள், ஒன்றாக நீந்துகிறார்கள், வேட்டையாடுகிறார்கள், ஓசையெழ கர்ஜித்துச் சிரிக்கிறார்கள்.

சமன் எனது விழிகளை எட்டிக் கூர்ந்து பார்க்கிறான். அந்த விழிகள் ஈரமானவை, பிரகாசிக்கின்றவை. அவனது உடல் மிகவும் சூடாக இருக்கிறது. மெலிதான வெப்பத்துடனிருந்த கடற்கரையின் மணல் படுக்கையின் மீது நாங்கள் புரள்கிறோம். சமனின் தலைமயிரில் படிந்த மணலை நான் தட்டி விடும்போது சமனின் விழிகளுக்குள் ஆழம் வந்து நிறைகிறது. எமக்கு இன்னும் எத்தனை நாளைக்கு இவ்வாறு இந்தத் தீவில் இருக்கக் கிடைக்குமோ? எம்மவர்கள்  எவ்வேளையில் இங்கு வந்து குதிப்பார்களோ தெரியாது. நான் குனிந்து சமனின் நெற்றியில் முத்தமிடுகிறேன். அப்போது அவனது விழிகள் குறுகுகின்றன. சமன், அவன் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை என்னிடம் தருகிறான். நாங்கள் மேலே பார்த்தவாறு மாறி மாறி சிகரட்டைப் புகைக்கிறோம்.

“அது ஓரியன், அதோ வரிசையா இருக்குற அந்த நட்சத்திரங்கள் மூணும், ஓரியனோட பெல்ட்”

சமன் எனது கையைத் தொடர்ந்து, நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே ஒரு கையால் என்னைத் தடவுகிறான். நான் தீப்பற்றிக் கொள்கிறேன்.

“அடடா உனக்குத் தெரிஞ்ச விஷயங்கள் எல்லாம்… நட்சத்திரங்கள், மீன்கள், இங்க்லிஷ், தமிழ், எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கிறாய்.”

இருவருக்குமே ஒன்றாக சிரிப்பு வருகிறது.

“ஆனா எனக்கு வேட்டு வைக்கத் தெரியாது. பயிர் விதைக்கத் தெரியாது” என்று நான் கூறுகிறேன்.

“ஏன் நான் உபாலி கினி வெல்ல ஆகாமல் ஜின்னாவானேன்?” என சமன் திடீரென்று கேட்டதும், நான் சமன் பக்கமாகத் திரும்பி, அவனை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்ட போதிலும், என்னைத் தள்ளி விடுகிறான்.

“நீங்க எல்லாருமே ஒண்ணுதான், நீயும் என்னை ஏமாத்துறாய். சொல்லுடா நீயும் என்னை ஏமாத்துறாய்தானே?”

சமனின் வேட்டைப்பல் பளிச்சிடுகிறது. நான் சமனைத் தள்ளி விடுகிறேன்.

“நீங்க எல்லாரும்தான் ஏமாத்துறீங்க, எந்நாளும் ஏமாந்து போறதுதான் எனக்கு நேர்ந்திருக்கு” என்கிறேன்.

அம்மா வினாகிரியில் நனைத்த துணித் துண்டொன்றை எனது நெற்றியின் மீது வைக்கிறாள். அந்தத் துணித் துண்டு குளிர்ச்சியாக இருக்கிறது.

“கஞ்சி கொஞ்சம் எடுத்துட்டு வரட்டுமா?”

“வேணாம், குடிக்கேலாது, வாய் கசக்குது.”

“உறைப்பா மிளகாய் போட்ட வெங்காயச் சம்பலோட பாண் துண்டொன்று சாப்பிடலாம். இப்போ இருக்குறது அசதிதான். நாலு நாளா உடம்புக்கு ஒழுங்கா சாப்பாடு விழவேயில்லையே.”

“சாப்பிட ஏலாது, வாய் கசக்குது, குமட்டுது.”

“அப்படிச் சொல்லி சரி வராதுதானே… அப்படீன்னா திரும்ப அந்தி நேரம் வைத்தியரிட்டப் போவோம்.”

நான் எதுவும் சொல்லாமல் போர்வையால் முகத்தை மூடிக் கொள்கிறேன். இப்போது இருட்டு. வெளிச்சத்தால் தர முடியாத சுகத்தை, சௌகரியத்தை இருள் எனக்குத் தருகிறது. அந்தகாரத்தினுள் எதுவுமே விஷேசமானதாக இல்லை. எதுவுமே தனித்துத் தென்படாது. எதையும் பார்க்கச் சொல்லி எமது விழிகள் எம்மை வற்புறுத்தாது. வெளிச்சம் எடுத்து வராத குளிர்மையையும், இதத்தையும் அந்தகாரம் கொண்டு வருகிறது. போர்வையால் தலையை மூடிக் கொண்டதும் எனக்கு அம்மா தென்படுவதில்லை. என்றாலும் அவள் அங்கேதான் இருக்கிறாள் என்பது விளங்குகிறது. சற்று நேரத்தில் அவள் செல்வதுவும் கேட்கிறது. திரும்பவும் வெளிச்சத்தை எதிர்நோக்கத் தேவையில்லை. நான் போர்வைக்குள்ளேயே சுருண்டு கொள்கிறேன். தலையை ஒரே மாதிரியாக வைத்துக் கொண்டதும், சௌகரியமாக இருக்கிறது. தலை அங்குமிங்குமாகத் திரும்பும்போது எனது சமநிலை தடுமாறி அதல பாதாளத்தில் விழுவது போன்ற பயமும், வேதனையும் மனதில் தோன்றுகிறது. அசையாது நான் இருளை செவிமடுக்கிறேன்.

நான் திலீயுடன்தான் யசோதரனின் வீட்டுக்குச் சென்றேன். திலீபன் எனும் பெயரைச் சுருக்கி நாம் அனைவருமே அவனை திலீ என்று அழைத்தோம். நான் கிராஞ்சிக்குப் போனது அதுதான் முதல் தடவை. அந்தத் தடவை நாங்கள் மன்னார் வழியாக விடத்தல்தீவைக் கடந்து, வெள்ளங்குளத்தால் திரும்பி, முழங்காவில் ஊடாகத்தான் கிராஞ்சிக்குச் சென்றோம்.

கிராஞ்சியில் அந்த விசாலமான சதுப்பு நிலத்தினூடாகச் சென்ற போது என்னவோ புது விதமான உணர்வை நான் உணர்ந்தேன். அது வானம் பார்த்த, மிகப் பரந்த வெற்றுவெளி. அம் மாபெரும் சதுப்பு நிலம் வரண்டு போயிருந்தது. ஆங்காங்கே  தண்ணீர் எஞ்சித் தேங்கியிருந்த குட்டைகளில் ஒவ்வொரு வகையான கொக்குகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. எனக்கு அந்த சதுப்பு நிலத்தில் சில புகைப்படங்களை எடுக்க வேண்டியிருந்த போதிலும், எம்முடன் இருந்தவர்கள் முணுமுணுக்கத் தொடங்கியிருந்தார்கள். அனைவருக்கும் தமது பணிகளை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு, இருள் சூழ முன்பு மன்னாரில் நாம் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புவதே தேவையாக இருந்தது. யுத்தம் முடிவுற்றது எனக் கூறப்பட்ட போதிலும், கடந்த சில நாட்களாக அங்குமிங்குமாக அலைந்ததில், நாம் இப்போது நடமாடிக் கொண்டிருப்பது வேறொரு உலகத்தில் என்பதை உணரத் தொடங்கியிருந்தோம்.

கிராஞ்சி சிவபுரத்தில் நாங்கள் முதலாவதாகப் போன வீடு ரோசா நிறத்தில் சிதிலமடைந்திருந்த ஒற்றைச் சுவருக்கு தென்னோலையை அடைத்துக் கட்டிய சிறியதொரு குடிசை. முற்றத்தில் துளசிச் செடி வளர்க்கப்பட்டிருந்தது. ஒரு ஓரமாக இருந்த மர மல்லிகைச் செடி பூத்திருப்பதை, நன்றாகக் கூட்டிப் பெருக்கிய முற்றத்தில் நுழையும்போது வந்த சுகந்தத்திலிருந்தே உணர முடிந்தது. திலீ முன்னால் நடந்தான். “வீட்டுக்காரெங்க?” என உச்சரிப்பு பிழையாக இருந்த போதிலும், திலீயை அருகில் வைத்துக் கொண்டே நான் அதுவும் இதுவுமாக கொச்சைத் தமிழைப் பேசினேன். அந்த வீட்டில் மஞ்சள் நிறத்துக்கு நெருக்கமான செம்மஞ்சள் நிறத்தில் அழுக்கடைந்த சேலையொன்றை அணிந்திருந்த தாயொருத்தியும், மெலிந்து உயரமான இளம்பெண்ணொருத்தியும் இருந்தார்கள்.

“நாங்க பல்கலைக்கழகத்துல இருந்து வாறோம். கிராஞ்சிக் களப்பிலும், சதுப்பு நிலத்திலும் இருக்குற மீன் இனங்களைப் பற்றி ஆய்வொன்று செய்யப் போறோம். அந்த வேலைக்கு எங்களுக்கு உங்களோட உதவி தேவை. பல வருஷமா இந்தப் பகுதியில இருக்குற மீன்களைப் பற்றி யாருமே ஆய்வுகள் எதுவும் செஞ்சதில்ல. நாங்க குறிப்பாத் தேடிப் பார்க்க நினைச்சிருக்குற விஷயங்கள் ரெண்டு இருக்கு. ஒண்ணு, களப்பு நீரில் இந்தப் பகுதிக்கே உரித்தான கணவாய் இனங்கள் என்னென்ன இருக்கு என்பது, மற்றது, கிராஞ்சிக் களப்பிலிருக்கும் மீன்களோட உடலில் காணப்படுற பாதரசத்தோட

அளவை அளக்குறது. இது ஒரு வருஷம் போல எடுக்கக் கூடிய விஷேட செயற்திட்டம் ஒண்ணு.”

திலீ பெரிய அழகானதொரு புன்னகையோடு இதைத் தமிழில் சொல்லிக் கொண்டிருந்த போது அந்தத் தாயும், மெலிந்த இளம்பெண்ணும் வெறித்த பார்வையால் எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த முகங்கள் வெறுமையானவை. அவற்றில் சந்தோஷமோ, கவலையோ குறைந்த பட்சம் எந்த உணர்வுமே வெளிப்படவில்லை. முற்றத்தில் மலர்ச் செடிகளை நட்டு வளர்ப்பது இவர்கள் இருவருமாக இருக்காது என எனதுள்ளம் என்னிடம் உரைத்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த திலீயின் முகத்தில் வெள்ளந்தியான புன்னகையொன்று வெளிப்பட்டிருந்தது. அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க முடியாமல் நாங்கள் முட்டாள்கள் போல அங்கு நின்று கொண்டிருந்தோம்.

“போகலாம் ஐயா” என திலீ எனது காதில் முணுமுணுத்தான்.

தாயின் வதனத்தில் திடீரென ஏதோவோர் கனிவு, பிரகாசம் படியத் தொடங்கியது. அனைத்துமே மிக விரைவாக நடந்து முடிந்தது. அவளுடைய முகத்திலிருந்து மிகப் பெரிய சிரிப்பு வெளிப்பட்டது.

“யசோ… யசோ…. என்ர மகன்.”

இளம்பெண்ணின் விழிகள் விரிந்தன. அவள் அம்மாவின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

“அம்மா, இவன் யசோ இல்ல” என்று அவள் முணுமுணுத்தாள்.

தாய் திடீரென ஓடி வந்து எனது கையை அவளது இரண்டு கைகளாலும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். எனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது புரியாவிட்டாலும் கூட, ஏதோவோர் முட்டாள்தனமான திரைப்படமொன்றில் நடித்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தேன். திலீ பாய்ந்து வந்து அந்தத் தாயின் பிடியை அகற்ற முயன்ற போதிலும், செம்மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்திருந்த அந்தத் தாய் என்னைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். மெலிந்த பெண் மூச்சு வாங்கி வாங்கி ஏதோ வேகமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். இடைக்கிடையே ஓரிரு சொற்கள் புரிந்த போதிலும், ஒரு மந்திரம் போல, அவள் வேகமாக சொல்லிக் கொண்டே போனதால் எனது எதுவுமே சரியாக விளங்கவில்லை. திலீ எனக்காக அவளது பேச்சை மொழிபெயர்த்தான். யசோ அவளது அண்ணனாம். அவன் காணாமல் போய் விட்டானாம். அப்பாவும் இறந்து விட்டாராம்.

“செத்துப் போனாரா, கொல்லப்பட்டாரா?” என நான் கேட்டேன்.

திலீ என்னைப் பார்த்த பார்வையில்தான் அது கேட்கத் தேவையற்ற  மூடக் கேள்வி என்பது எனக்குப் புரிந்தது. யசோ எப்போதாவது திரும்பி வருவான் என இந்தத் தாயும், மகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் தலைக்குச் சுகமில்லையாம். அவள் காண்பவர்களையெல்லாம் யசோ என்று அழைக்கிறாளாம். யசோ உயிருடன் இல்லையென்றே இந்த இளம்பெண் நினைக்கிறாளாம். காரணம் அப்படி உயிருடனிருந்தால் ஏன் இன்னும் எங்களைப் பார்க்க வரவில்லை என அவள் கேட்கிறாள்.

“வேறொரு நாட்டிலயோ, முகாமிலயோ இருந்தால்?” என நான் கேட்டேன். அந்தப் பெண் அவளது கபில நிறம் படிந்த பற்களைக் காட்டி தலை சாய்த்துச் சிரித்தாள். ‘உனக்கு என்ன தெரியும் எங்களைப் பற்றி?!’ என்பது போன்ற ஒன்று அந்தச் சிரிப்பினுள்ளே மறைந்திருக்கக் கூடும். அப்போதுதான் நான் அவளது கால்களைக் கவனித்தேன்.

கணுக்காலின் மேற்பகுதி எரிந்து போயிருந்தது. தோல் சுருங்கிப் போயிருந்தது. எவ்வாறு இப்படி ஆனதென்ற கேள்வி என்னுள் எழுந்தும், நான் அதைக் கேட்காது விழுங்கிக் கொண்டேன். யசோவின் அம்மாவுடைய கண்களில் வெள்ளை படரத் தொடங்கியிருந்தது. எனினும் அந்த வெள்ளையைத் தாண்டி ஏதோவோர் ஈர ஒளிக்கற்றையால் அந்த விழிகள் பிரகாசித்தன. இளம்பெண் எம்மை வீட்டுக்குள்ளே அழைத்தாள். அந்த வீட்டுக்கென இருந்த இரண்டேயிரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளில் நானும், திலீயும் அமர்ந்தோம். மற்றவர்கள் மிகுந்த விருப்பத்தோடு வெளியேயே நின்று விட்டிருந்தார்கள். பெரிய அலுமினியப் பானைகள் இரண்டும், நுளம்பு வலையும் வீட்டின் ஒரு மூலையில் இருந்தன. இன்னும் உறை பிரிக்கப்படாத எதுவோ உயரமான பொருளொன்று ஒரு சுவரின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. ‘இந்திய அரசாங்கத்தின் நன்கொடை’ என மூன்று மொழிகளிலும் அந்தப் பொதியின் மீது அச்சிடப்பட்டிருந்தது. பிள்ளையாரின் உருவப் படமொன்று ரோசா நிறப் பூச்சு மங்கிச் சிதைந்து போன சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. வெண்ணிற பிளாஸ்டிக் பூமாலையொன்று போடப்பட்டிருந்த புகைப்படத்தில் இருந்த நபர் இங்கு கூறப்பட்ட யசோதரனின் அப்பாவாக இருக்கக் கூடும் என நான் அனுமானித்தேன்.

ரோசா நிறத்தில் சிதிலமடைந்திருந்த சுவரில் பெஸ்டலால் ஓவியம் வரையப்பட்டிருந்ததுதான் அங்கு சிறப்பான விடயமாக இருந்தது. அது சுவர் முழுவதையும் நிறைத்து வரையப்பட்டிருந்த விசாலமான ஓவியம். அதில் முகத்தை முகம் நோக்கியவாறு இரண்டு பெரிய கிளிகள் இருந்தன. அவை பூக்களால் கனத்திருந்த கிளையொன்றில் நின்றிருந்தன. அந்தக் கிளிகள் பஞ்சவர்ணக் கிளிகள் போன்றவை. அவற்றின் சிறகுகள் அனைத்து நிறங்களினாலும் வர்ணம் பூசப்பட்டிருந்தன. அம்மா அப்போதும் கூட எனது கையை விட்டிருக்கவில்லை. ஏதோ நான் அவளது கையை விட்டுவிட்டு ஓடி விடுவேன் என்பதைப் போல.

“இதை வரைஞ்சது எங்கட நிலாமதி” என அம்மா தமிழில் கூறினாள். அந்த இளம்பெண்ணின் பெயர் நிலாமதி.

நிலாமதி எங்களுக்கு கோப்பி ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். அந்தக் கோப்பியில் கொத்தமல்லியின் சுவையும் வந்தது. ஆகவே, கோப்பியை அருந்தியபோது ஏதோ புதியதொரு தன்னிறைவை உணர்ந்தேன். கோப்பியை இடிக்கும்போதே கொத்தமல்லியையும் போட்டு இடிப்பார்களாக்கும் என நான் எண்ணிய போதிலும் அதை வெளிப்படையாகக் கேட்க முன்வரவில்லை. அங்கு அடர்த்தியான அமைதி  உருவாகியிருந்தது. வெளியே இருந்தவர்களுக்கு கோப்பி வழங்க குவளைகள் போதாது என்பதால் நானும், திலீபனும் குடித்து முடிக்கும்வரை நிலாமதி காத்துக் கொண்டிருந்தாள். எனினும், வெளியே இருந்த நால்வரில் மூவர் இந்த வீடுகளில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்.

“நீங்களா இந்த சித்திரத்தை வரைஞ்சீங்க? ரொம்ப அழகாயிருக்கே” என நான் தமிழில் கேட்டதும் அவளின் விழிகள் பிரகாசித்தன.

“வரைஞ்சது நான்தான். இது யசோ, இது வாகீ” என்றவள் கிளிகளிரண்டையும் கையை நீட்டி சுட்டிக் காட்டினாள். திலீயும், நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். அம்மாவைப் போலவே இந்தப் பெண்ணுக்கும் தலையில் ஏதாவது பிரச்சினை இருக்கக் கூடும். அவள் திரும்பவும் ஆவேசம் வந்தவள் போல எதையோ கூறிக் கொண்டேயிருந்தாள். திக்கித் திக்கி எதையோ முறைப்பாடு செய்வது போலத்தான் சொன்னாள். எனினும் அந்த வேகத்தைப் பின் தொடர முடியாத காரணத்தால் நான் அவ் வசனங்களைப் புரிந்து கொள்வதை நிறுத்தி விட்டேன். நிலாமதி தலையைச் சொறிந்தவாறே கூறிக் கொண்டிருந்தாள். அவளது விழிகள் விரிவதையும், சுருங்குவதையும், முகம் அங்குமிங்குமாத் திரும்புவதையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது கூந்தல் செம்பட்டை நிறத்தில் இருந்தது. அப்போது அம்மா என்னைக் கை விட்டுப் போய் சூட்கேஸ் ஒன்றைக் குடைந்து குடைந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள். வெளியே இருந்த எம்மவர்கள் இடைக்கிடையே வீட்டுக்குள் எட்டிப் பார்த்து ‘கிளம்பலாம்’ என்பதை சொல்லாமல் சொன்னார்கள். நிலாமதி ஹோவென்று கூறிக் கொண்டேயிருந்தாள்.  

அம்மா சூட்கேஸிலிருந்து கறுப்பு வெள்ளை புகைப்படமொன்றைத் தேடி எடுத்து வந்தாள். அந்தப் புகைப்படத்தில் என் வயதையொத்த இரண்டு பையன்கள் இருந்தார்கள். இருவரும் தோள்களில் கைகளைப் போட்டிருந்தார்கள். நிலாமதி அருகில் வந்து எனக்கும், திலீக்கும் புகைப்படத்தில் இருப்பவர்களைக் குறித்து விவரித்தாள். முள்ளம்பன்றித் தலைமயிரோடு பெரிய கண்களைக் கொண்டிருந்த கட்டுமஸ்தானவன் யசோதரன். சிறு பிள்ளையொன்றின் புன்னகையைக் கொண்டிருந்த மற்றவன் வாகீசன். இருவருமே பெரிதாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும், யசோதரனுக்கும் இருந்த உருவ ஒற்றுமை பெரிய கண்களும், பெரிய உதடுகளும் மாத்திரம்தான். அது தாயொருத்தியை ஏமாறச் செய்யும் அளவிற்கான உருவ ஒற்றுமை அல்ல. நாங்கள் புறப்படத் தயாரான வேளையில் அந்தத் தாய் சற்று அமைதியடைந்திருந்தாள். அவள் எட்ட இருந்து எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த விழிகள் கூறும் விடயங்களைப் புரிந்து கொள்ள முயற்சித்த போதிலும், வெள்ளை படிந்த அந்த விழிகள் எதையுமே உரைக்கவில்லை.

“வெளிப்படையாச் சொல்லா விட்டாலும் கூட இதுங்க எல்லாரும் புலிகளாகத்தான் இருக்கணும். அவளோட கூந்தலைக் குட்டையா வெட்டியிருக்குற விதத்தைக் கண்டீங்களா?” என ஜயா கூறியபோது திலீ என்னைப் பார்த்து புன்னகைத்தான். அந்தப் புன்னகையை நான் புரிந்து கொண்டேன்.

திலீ அச் சமயம் கனடாவுக்குப் போக மிகவும் பாடுபட்டுக் கொண்டிருந்தான். அதற்கிடையில் சிறு சிறு மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து சம்பாதிக்கும் காசை பத்திரமாக சேமித்து வந்தான். முகத்துக்கு நேராகக் கூறாவிட்டாலும் திலீ மிகவும் கஞ்சத்தனமானவன் என எமது குழுவினர் கதைத்துக் கொள்வது பல தடவைகள் எனது காதில் விழுந்திருந்தது.

“அவள் அவ்வளவு ஆவேசமாக என்ன புலம்பினாள்?” என்று நான் கேட்டதும், திலீ ஒரு கணம் தயங்கியவனாக பின்னால் திரும்பி ஜயாவைப் பார்த்துவிட்டு கூறத் தொடங்கினான்.

நிலாமதி அவளது அண்ணனின் கதையைத்தான் கூறியிருந்தாள். அண்ணனுக்கு சங்கீதம் படிக்க ஆசையிருந்ததாம். கிட்டார் வாசித்தானாம். நண்பர்களோடு சேர்ந்து ஒரு இசைக் குழுவையும் தொடங்கினானாம். அண்ணனுக்கு ஆங்கிலப் பாடல்களை வாசிப்பதுதானாம் மிகவும் பிடிக்கும். அண்ணனின் நெருங்கிய சிநேகிதனான வாகீயும் பாடல்களைப் பாடுவானாம். அவர்கள் இருவரும் சிறு பராயத்திலிருந்தே நல்ல சிநேகிதர்களாம். போகப் போக அவர்கள் பாடல் இசைப்பதை நிறுத்தி விட்டார்களாம். காரணம் வாகீ அடிக்கடி யசோவுடன் வாக்குவாதப்பட்டிருக்கிறான். வாகீயுடன் கதைக்க வேண்டாம், அவன் சொல்வதை நம்ப வேண்டாம் என்றெல்லாம் யசோ நிலாமதிக்கும், அம்மாவுக்கும் உத்தரவு போட்டிருக்கிறான். குழுவிலிருந்த ஏனையவர்களும் வாகீக்கு சார்பாகத்தான் இருந்திருக்கிறார்கள். இயக்கத்திலிருந்த கமலா என்ற பெண்ணும் அந் நாட்களில் வாகீயை சந்தித்து வருவதாக தகவல் வந்ததாம். யசோவும், வாகீயும் கோபித்துக் கொண்டிருக்கிறார்கள். வாகீ இடைக்கிடையே யசோவைப் பார்க்க வந்த போதெல்லாம் யசோ, வாகீயைத் திட்டித் துரத்தி விட்டிருக்கிறான். இரண்டு பேரும் பயங்கரமாக மோதிக் கொண்டார்களாம். அதற்கு சில தினங்களுக்குப் பிறகு வாகீ காணாமல் போயிருக்கிறான். யசோ பல தினங்களாக உண்ணக் குடிக்காமல், பார்த்த இடத்தையே வெறித்துப் பார்த்தவாறு பட்டினி கிடந்திருக்கிறான். பிறகு ஒரு நாளிரவு தன்னைத் தேட வேண்டாம் என வீட்டாருக்கு ஒரு சிறு கடிதத்தை எழுதி வைத்து விட்டு காணாமல் போயிருக்கிறான். பிறகொரு காலத்தில் நிலாமதி இயக்கத்தில் இணைந்து கொண்ட போதிலும் யசோவைக் குறித்தோ, வாகீயைக் குறித்தோ எவ்விதத் தகவலும் கிடைத்திருக்கவில்லை. நிலாமதியின் கிணற்றருகில் ஒவ்வொரு நாளும் அந்தி நேரம் இரண்டு கிளிகள் வருகின்றனவாம். அவை கழுத்தில் மாலை இருக்கின்ற பெரிய கிளிகள். நிலாமதி அவற்றுக்கு சோறு வைப்பாளாம். அவை நிலாமதியைப் பார்க்கும் பார்வையில், அவை எங்கேயோ இறந்து போன யசோவும், வாகீயும் தானென நிலாமதிக்குத் தோன்றுமாம்.

எனது தலைக்குள் யசோவையும், வாகீயையும் குறித்து வேறொரு கதை துளிர் விடத் தொடங்கிய போதும், நான் அந்தத் தளிரைப் பிடுங்கியெறிந்தேன். திடீரென்று என்னைக் குறித்தே ஒரு பெரும் அறுவெறுப்பை நான் உணர்ந்தேன்.

வாந்தியெடுப்பதற்காக அம்மா எனது கட்டிலருகே வைத்திருந்த தகரப் பேணி எனக்கு இரண்டாகத் தென்படுகிறது. கடலில் அலையடிப்பது போல வாந்தி வருகிறது. கடைசியாக, உடலை அசைத்தசைத்து ஒக்காளமிட்ட போதும் வெளியே கொட்ட எதுவும் மீதமிருக்கவில்லை. வாந்தி தரை  முழுவதும் சிதறியிருக்கிறது. தலையினுள்ளிருந்து வரும் வலியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“கிளிநொச்சியோட அர்த்தம் தெரியுமா? நொச்சி மரத்திலிருக்கும் கிளிகள். அதோ அங்க ஊதா நிறத்துல சிறிய பூக்கள் பூத்து, நீண்ட இலைகளைக் கொண்ட மரம்” என திலீ நொச்சி மரமொன்றைக் கண்ட போது என்னிடம் கூறியிருந்தான். சட சடவென்று கிளிகள் பறக்கின்றன. அவை எல்லா இடங்களையும் மூடியிருக்கின்றன. தாழ்வாரப் பலகையில் ஒரே வரிசையாக. ஜன்னல் படியின் மீது மூட இடமற்றவை கீ… கீயென்று கத்தியவாறு பறக்கின்றன. ஆச்சியின் தோட்டத்தில் தேங்காய் பறித்த, பல வருடங்களுக்கு முன்னர் மரத்திலிருந்து வீழ்ந்து மரித்துப் போன ஜேம்ஸ், சாரத்தை கொடுக்காகக் கட்டிக் கொண்டு, மயிரடர்ந்த கால்களை ஆட்டி ஆட்டி கிளிகள் மூடியிருக்கும் தாழ்வாரப் பலகையில் அமர்ந்திருந்து சிவந்த கண்களால் என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் இறுக்கமாகக் கண்களை மூடிக் கொள்கிறேன். கனத்த கறுப்பு நிற அந்தகாரத்துக்குள் கிளிகள் ஆங்கிலத்தில் பாடல்களைப் பாடியவாறு வட்டமாகச் சுற்றிச் சுற்றிப் பறக்கின்றன.

கிராஞ்சி கடற்கரையில் வைத்து சமன் குமாரவைக் கண்டவுடனே எனது தலைக்குள் மின்னல் வெட்டியது. அவனுக்கு அடர்த்தியான இமைகளின் கீழ் வேட்டு வைக்கும் விழிகள். நான் அவனை நேராகப் பார்க்காத போதிலும், மீன் பிடிப்பவர்கள் கொண்டு வந்திருந்த கணவாய்களை நாங்கள் அளந்து பார்ப்பதை அவன் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதை விழியோரத்தால் கண்டேன்.

“எங்க படையினரோட அனுமதி வாங்கிட்டா ஐயாமார் இங்க இந்த வேலை செய்றீங்க?” என அவன் வெகுநேரம் கழித்துக் கேட்டான். நான் ஆமாம் என்றதும் அவன் எனது வார்த்தைகளை நம்பி விட்டான்.

“எல்லாருமே சிங்களவங்க தானே, அப்ப பிரச்சினையில்ல” என்றான்.

சற்றுத் தொலைவில் ஜயா கணவாய்களின் மாதிரிகளை போத்தல்களில் இடுவதை, படையினர் இருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு நிழலுக்குச் சென்றேன். மீன் திரும்பியதும் நான் தலையை அசைத்து சிகரெட்டை நீட்டினேன். மீன் இரையை விழுங்கியது. வேட்டு வைக்கும் விழிகள் என்னருகே வந்தன. திலீ விந்தையானதோர் புன்னகையோடு எனக்குக் கண்ணடித்து விட்டு எங்கேயோ பார்த்திருந்தான்.

“தம்பிக்கு எந்த ஊர்?”

“நான் எப்பாவல, எளியதிவுல்வெவ அண்ணா” என மீன் பெரிய புன்னகையோடு கூறியது. தன்னுடைய விழிகள் வேட்டு வைப்பதை அவன் அறியவில்லை என்பது அவன் வாயைத் திறக்கும்போதே எவருக்கும் புரியும். வேட்டு வைக்கும் விழிகளைக் கொண்ட மீன் இரு தடவைகள் சிகரட்டை இழுத்துப் புகைத்து விட்டு மீண்டும் என்னிடம் தந்தது.

“தம்பி செயலணிலயும் இருந்தீங்களா?”

“இல்லாம… நாங்க நந்திக்கடல்லயும் இருந்தோம் அண்ணா. அந்த நாட்கள்ல எனக்கு மஞ்சள் காய்ச்சல் வந்தது. நான் செத்துட்டேன்னுதான் எல்லாரும் நினைச்சாங்க. நாலு நாட்களா மயக்கத்திலேயே கிடந்திருக்கேன். திரும்பவும் சோறு சாப்பிடுவேன்னு நானே நினைச்சிருக்கல. போன ஜென்மத்துல செஞ்ச ஏதோ ஒரு புண்ணியம் மிச்சமிருந்ததால உயிர் பிழைச்சேன். அண்ணாவுக்கு எந்த ஊர்?”

“நான் பிலியந்தலை. இங்க நல்லமா?”

பையன் மெலிதாகப் புன்னகைத்தான். வேட்டு வைக்கும் விழிகளிரண்டும், பெரிய உதடுகளும் இருந்த போதிலும் சிறு குழந்தையின் வெள்ளந்தியான புன்னகையே அவனிடம் இருந்தது. அவனது கூர்மையான வேட்டைப் பற்களின் காரணமாக, அந்தப் புன்னகைக்கு தனியானதோர் அழகும் இருந்தது.

“இப்பன்னா முன்பு போல விடுமுறை எடுக்க கஷ்டம் எல்லாம் ஒண்ணுமில்ல. என்றாலும் ஊரில இருக்குற மாதிரி வருமா?”

“ஏனது? அங்க விட்டுட்டு வர முடியாத அளவுக்கு விஷேசமா யாராவது இருக்காங்களா?”

பையனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.

“இன்னும் நாங்க கல்யாணம் முடிக்கல. வாற வருஷம் முடிக்கப் போறோம்.”

“பேரென்ன?”

“பட்டி.”

“பட்டி..?”

“நிஜப் பெயர் தமயந்தி. வீட்டுல பட்டின்னு கூப்பிடுவாங்க.”

“யார் பட்டின்னு பெயர் வச்சது? நீங்களா?”

“இல்ல… சின்ன வயசுல அவளோட அம்மா வச்சிருப்பா.”

“தமயந்தின்னா தம்மின்னுதானே கூப்பிடணும்? ஏன் பட்டின்னு?”

கோப்ரல் சமன் குமாரவுக்கு சிரிப்பாக இருந்தது.

“அதை என்கிட்டயில்ல, அவளோட அம்மாக்கிட்டத்தான் கேட்கணும்.”

“சரி… இனிமே நீங்களாவது தம்மின்னு கூப்பிடுங்க.”

“பேருக்கு என்ன சொல்லிக் கூப்பிட்டா என்ன?!”

நான் புற்தரையில் அமர்ந்திருந்து மேலுமொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். சமனுக்கும் ஒன்றைக் கொடுத்தேன்.

“எத்தனை பேருக்கு வேட்டு வச்சிருக்கீங்க?”

சமன் திடுக்கிட்டுப் போனான். நான் புகை வளையமொன்றை காற்றில் விட்டேன்.

“போன ஜென்மத்துல செஞ்ச பாவத்தின் காரணமா மலர்ப் பூஜை செய்த கைகளாலேயே துப்பாக்கி ஏந்த வந்தாலும் கூட, நாங்க பௌத்த விகாரைகளைத் தரிசித்த, அன்னதானம் கொடுத்த பசங்க அண்ணா.”

“அக்கராயன்ல சந்திச்ச ஆமிப் பையன் ஒருத்தர், இயக்கத்தோட கேம்புக்கு அடிச்ச விதத்தைச் சொன்னார். அவங்கள்ல ஒருத்தரைக் கூட தப்பிச்சுப் போக விடலயாம்” என நான் கூறியதும், சமன் தலையையுயர்த்தி என்னைப் பார்த்தான்.

“என்னோட அப்பா சாகும்போது எனக்கு எட்டு வயசு. அம்மா தம்பியையும், என்னையும் பிக்குவாக்க, மடத்தில் விடப் பார்த்தா. தம்பி பிக்குவாகிட்டான். நான் அழுது குழறி வீட்டுலயே தங்கிட்டேன். எனக்கு ஒரு அக்காவும், இன்னும் ரெண்டு தங்கச்சிகளும் இருக்காங்க. அம்மா பொஸ்பேட்டுக்கு வேலைக்குப் போனா. இப்ப கிட்னி வருத்தம். ஒரு தங்கச்சி ஓடிப் போயிட்டாள். மற்றத் தங்கச்சியும், அக்காவும் வீட்டுல இருக்காங்க.”

அவன் வேட்டு வைக்கும் விழிகளால் என்னைப் பார்த்தவாறு சொல்லிக் கொண்டிருந்தான். இனிமேலும் அந்தக் கண்கள் வேட்டு வைக்காது.

நான் திலீயை அழைத்து எம்மிருவரையும் ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். சமன் தனது சீருடையின் சுருக்கங்களை ஒரு கையால் அகற்றி விட்டு உலக்கை போல நேராக நிமிர்ந்து நின்று கேமராவைப் பார்த்தான். நான் சமனின் தோளில் கையை இட்ட போதும், சமன் எனது தோளில் கையை இடவில்லை.

“முறைச்சுப் பார்க்காம கொஞ்சம் சிரிங்களேன்” என நான் கூறியதும் அவன் முரட்டுத் தோற்றம் குறையாமலே மெலிதாகப் புன்னகைத்தான்.

மதிய நேரம், நிலாமதி எம்மிடம் ஏதாவது வேலைவாய்ப்பு இருக்கிறதா என்று விசாரித்துப் பார்க்க கடற்கரைக்கு வந்தாள். எம்மிடம் வேலை வாய்ப்புகள் எவையும் இருக்கவில்லை.

மாலை வேளையில் இடி மின்னலோடு மழை பெய்தது. சமன் தனது அலுவலகத்தில் தேநீர் ஊற்றி எமக்கும் தந்தான். சமனிடம் மாத்திரம் கேட்டு வாங்க முடியாததால் நான் அங்கிருந்த படையினர் மூவரினதும் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.

திரும்பவும் மன்னாருக்கு வரும்போது, வழியில் வெள்ளங்குளம் பகுதியில் வைத்து எமது வாகனம் சகதியில் சிக்கிக் கொண்டது. அதைத் தள்ளப் போய் நாங்கள் அனைவரும் நனைந்து விட்டோம். அருகிலொரு வீட்டிலிருந்த இளைஞர்களை அழைத்துத்தான் ஒருவாறு வாகனத்தைத் தள்ளினோம். மன்னாருக்கு வந்து சேரும்போது நள்ளிரவு தாண்டி விடிகாலை ஒரு மணியை நெருங்கியிருந்தது.

சுபானிஸ் மாமா ஒரு ராகத்தோடு மந்திரித்து மந்திரித்து எனது தலையைச் சுற்றிச் சுற்றி பாக்குவெட்டியால் வெட்டும் எலுமிச்சம்பழங்களின் சாறு ஒரு தட்டில் விழுகிறது. எனது தலைக்குள்ளே அந்த மந்திரங்கள் எதிரொலிக்கின்றன. கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் கனத்துக் கிடக்கின்றன.

நான் கிராஞ்சி கடற்கரையில் நின்று கொண்டிருக்கிறேன். தொலைவில் தென்படும் தீவிலிருந்து யாரோ கையை அசைக்கிறார். அவரைக் காப்பாற்றுமாறு கூறி அலறுகிறார். அதுவொரு உடைந்த குரல். அது நானா? வாகீயா? யசோவா? சமன் குமாரவா? இல்லாவிட்டால் திலீயா?

இஸுரு சாமர சோமவீர

சிங்கள இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர். 2 சிறுகதைத் தொகுதிகளும், 3 கவிதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன. சுகாதாரத் துறையில் பணியாற்றுகிறார். இவருடைய பத்துச் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘திருமதி பெரேரா’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். சிங்கள இலக்கியங்களை தமிழிற்குத் தொடர்ச்சியாக மொழிபெயர்த்துவருகிறார். இலங்கை அரச சாகித்திய விருது, வம்சி விருது, கனடா இலக்கியத்தோட்ட விருது முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.