/

நீலச் சுழி: கே.டீ. தர்ஷன

නිල් සුළිය | කේ.ඩී. දර්ශන | தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்

நான் பலமுறை அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டேன். அவள் இன்னும் உறக்கத்திலேயே இருந்தாள். அவளிடமிருந்து எந்தவித அசைவும் இல்லை. ஒருவேளை விடிகாலை தாண்டியும் விழித்திருந்ததால் இப்போதுதான் நன்றாக உறங்கிப் போயிருக்கக் கூடும். கதவின் திரைச்சீலை வழியாக நிறையத் தடவைகள் அவளை எட்டிப் பார்த்து விட்டதால் ஏதாவது சாப்பிட்டு விட்டு வரலாம் என்று சமையலறைப் பக்கமாகப் போனேன். அம்மாவும் அயல் வீடுகளிலிருக்கும் பெண்கள் சிலருமாக சேர்ந்து ஏதோ ஆழமான பேச்சில் மூழ்கியிருந்தார்கள். எனக்கு, அதற்கு மேலும் முன்னால் அடியெடுத்து வைக்கத் தேவைப்படவில்லை. எனது பார்வை சுற்றி வரப் பார்த்து விட்டு சமையற்கட்டின் மீதிருந்த மூன்று அடுப்புக் கற்களின் மேல் நிலைத்து நின்றது. பழைய சாம்பலும், நேற்றைய உணவின் மீதங்கள் படிந்திருந்த கழுவப்படாத பானைகள் சிலவும் எனது கேள்விக்கு பதிலளித்தன. அங்கிருந்து  நூற்றெண்பது பாகையில் திரும்பிய நான் மீண்டும் விறாந்தைப் பக்கமாகச் செல்ல முற்பட்ட போதுதான் தஸ்லீமா மாமியின் கண்ணீரைக் கண்டேன். ஏனென்று விசாரிக்கவோ, கவலைப்பட  வேண்டாமென்று ஆறுதல் கூறவோ நேரமிருக்கவில்லை. நடையின் வேகத்தைக் குறைத்து மெதுவாக நடந்து சென்று மீண்டும் விறாந்தைப் பக்கமாகப் போனேன்.  திரும்பவும் கதவின் திரைச் சீலையை விலக்கிப் பார்த்தேன். அவள் இப்போதும் உறங்கிக் கொண்டிருந்தாள். என்றபோதும் எனக்கு அங்கிருந்து விலக மனம் வரவேயில்லை. அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் அவளிடத்தில் அசைவுகள் தென்படுவதாக எனது பார்வைக்குத் தோன்றியது. உண்மையிலேயே அப்படியேதும் நடக்கின்றதா அல்லது எனது கண்களில் பார்வை ரேகைகள் அசைகின்றனவா என்பதைச் சடுதியாக யோசிக்க முடியவில்லை. இல்லை.. மெய்யாகவே அவளிடம் அசைவொன்று தென்பட்டது. அவளுக்கு அருகாகச் சென்று பார்க்க நினைத்தேன். நானாக அல்ல தன்பாட்டிலேயே அவளருகே போய்விட்டிருந்தேன்.  முகம் குப்புறப் படுத்திருந்த அவளது முதுகு ஒரு வித தாளத்துக்கு ஏற்ப அசைந்து கொண்டிருந்தது. நான் அவளை சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அதற்கு மேலும் தாங்க இயலாத கணத்தில் அவளை எழுப்பினேன்.

“பா.. பாத்திமா..”

அவள் படுத்திருந்த விதத்தில் ஒரு மாற்றமும் இல்லை. அதற்குப் பதிலாக முதுகில் தென்பட்ட அந்த அசைவு வேகமானது. அடுத்த சில நொடிகளில் அது மெல்லிய விம்மலாக வெளிப்பட்டது.

“பாத்திமா”

அவள் எழுந்து கொள்ளவில்லை. மாறாக விம்மல், அழுகையாக மாறியது. எனது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அடுத்த கணத்தில் அது, எவ்வாறு நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. பாத்திமா எனது தோளில் தலைசாய்த்து விம்மிக் கொண்டிருந்தாள். அதை உணர்ந்த முதல் நொடியிலேயே அவளை இறுகப் பற்றிப் பிடித்து கட்டிலில் அமரச் செய்தேன். எனது உள்ளங்கையில் எதையோ உணரவும், சந்தேகத்தோடு அவளது தலையிலிருந்து கையை விடுவித்துக்கொண்டு எனது பார்வைக்குக் கிட்டவாகக் கொண்டு வந்தேன். நான் சந்தேகப்பட்டது சரிதான் என்பது புரிந்தது. ஆனாலும்.. ஆனாலும் திடீரென எனது  உள்ளங்கைக்கு சூடான குருதி எங்கிருந்து வந்ததென எனக்குத் தெரியவில்லை.

“பாத்திமா இங்க பாருங்க. உங்க தலையில ஏதோ காயம் பட்டிருக்கு போல.. இங்க பாருங்க.. என்னோட கையில ரத்தம் பட்டிருக்கு..”

அவள் அதை ஏறெடுத்துப் பார்க்காமலேயே எனது கையைத் தட்டி விட்டாள்.

“நான் சொல்றது உங்களுக்குப் புரியலையா பாத்திமா? உங்க தலைல காயம் பட்டிருக்கு..”

“என்னை சும்மா இருக்க விடுங்க..”

“நான் உங்களை என்ன பண்ணினேன்?”

பாத்திமா அவளது இடது காதை எனது பக்கமாகத் திருப்பினாள். கடவுளே! காது மடல் கிழிந்து காய்ந்த இரத்தம் கட்டியாகிப் படிந்திருந்தது. அந்த கட்டியை நனைத்தவாறே புதிய குருதி வெள்ளமாகப் பெருக்கெடுக்கத் தொடங்கியிருந்தது. அவளை நான் படுக்கையிலிருந்து இழுத்தெடுத்து அமரச் செய்த வேளையில் அந்தப் பழைய காயம் மீண்டும் விரிசல் கண்டிருக்கக் கூடும் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

“இருங்க பாத்திமா, ஐயோ என்னை மன்னிச்சிடுங்க..” என்று மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. அதற்குள் வார்த்தைகள் வராமல் ஊமையாகிப் போய் விட்டேன். எங்களுடைய விழிகள் ஒன்றையொன்று மோதிக் கொண்டன.  என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் இருக்கவில்லை. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்குமோ தெரியாது. ஆனால் அந்த விழிகளில் ஆழ்ந்த வேதனையோடு கோபமும் படிந்திருந்ததாக பின்னர் எனக்குத் தோன்றியது. அந்த முகத்தில் தெரிந்தது, இரத்தம் வடிந்து கொண்டிருந்த காயத்தால் எழுந்த வலியல்ல என்பது புரிந்தது. விம்மிக் கொண்டிருந்த பாத்திமாவை கட்டில் விளிம்பில் சாய்ந்து அமர்ந்திருக்க வைத்து விட்டு நான் சமையலறைக்கு ஓடிப் போனேன்.

“மகனோட கைக்கு என்ன நடந்தது? ஏதாவது காயம் பட்டுச்சா?” என்று அம்மா பதறினாள். எனது கை காயமாகியிருப்பதாக அவள் நினைத்து விட்டாள். அது இன்னொருவருடைய இரத்தம் என்பது அம்மாவுக்கு விளங்கவில்லையா? எல்லா இரத்தமும் ஒன்று போலவே இருக்கின்றன. எனது இரத்தத்துக்கும்,

கையிலிருக்கின்ற இந்த இரத்தத்துக்கும் இடையே எவ்வித வேறுபாடுகளும் தென்படாத போதிலும், தொடர்ந்தும் பற்றியெரிந்து கொண்டிருக்கும் இனவாதத் தீயை வரையறை செய்ய  என்னிடம் யாதொரு கோட்பாடும் இல்லை. நேற்று நள்ளிரவில் தொடங்கிய இனக் கலவர வேட்டை,  நெடுங்காலமாக மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த இரத்தப் புடையன்களது சதித் திட்டத்தின் பெறுபேறாக இருந்திருக்காவிட்டால், இன்று எனது கையில் இரத்தமும் இல்லை, எனது கட்டிலில் பாத்திமாவும் இல்லை.

“பாத்திமாவோட காதுல காயம் பட்டிருக்கு..”

தஸ்லீமா மாமி பதற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக சுவரில் சாய்ந்திருந்த அவரது உருவம்  மெதுமெதுவாகக் கீழே  சரிந்து அப்படியே தரையில் அமர்ந்து விட்டார். தஸ்லீமா மாமியின் மெலிந்த சரீரம் எந்தளவு கனத்தது என்பது அவர் நின்றிருந்த இடத்தின் சுவரில் படிந்திருந்த தடத்திலிருந்து எனக்குப் புரிந்தது. அவர் அணிந்திருந்த பர்தாவைத் தாண்டி, குச்சிகள் போன்றிருந்த முதுகெலும்புக் கூட்டின் அடையாளம் கூட சுவரில் படிந்திருந்தது. அதற்குள் அம்மா அறைக்குள் போய் விட்டிருந்தாள். மாமி அதே இருப்பில் அமர்ந்திருந்தார். நான் அறைக்குள் ஓடிப் போனேன். நான் கதவின் திரைச் சீலையை நகர்த்தி உள்ளே நுழையும் போதே, அம்மா ஈரத் துணியொன்றால் பாத்திமாவின் காதைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் புடைவைத் துண்டும், தண்ணீரைக் கொண்டிருந்த பிளாஸ்டிக் கோப்பையும் கூட அதே சிவப்பில் நிறமேறிப் போயிருந்தன.

“ஆஹ்..”

“பொறுக்கிகள்..”

“ம்மா.. ஆஹ்”

“மகன் போய் மருந்துப் பெட்டியை எடுத்துட்டு வா.. அவங்க இந்தப் பிள்ளைட காதை சிதைச்சிருக்காங்க..”

“காதுல எப்படிக் காயம் பட்டது பாத்திமா?”

பாத்திமா எனது கேள்வியைக் காதில் வாங்கிக் கொள்ளாததைப் போல இருந்ததால், நான் அக்காவின் அறையில் வைக்கப்பட்டிருந்த மருந்துப் பெட்டியைக் கொண்டு வந்து சற்று ஓசையெழும் விதமாகவே அங்கிருந்த சிறிய மேசை மீது வைத்தேன். அவள் திரும்பிப் பார்த்தாள். பின்னர் மீண்டும் மறுபுறமாகத் திரும்பி விம்மத் தொடங்கினாள்.

“வாப்பாவுக்கு அவங்க  அடிச்சப்போ நான் கத்திக் குழறிக் கொண்டு அவங்க மேல பாய்ஞ்சேன். அப்பதான் அவங்க என்னோட தோட்டையும் சேர்த்து…” என்றவள் வாக்கியத்தை முடிக்காமலேயே விம்மினாள். என்னைப் போலவே அம்மாவும் தனது மனதுக்குள் அந்த வாக்கியத்தைப் பூரணப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.

அவளது கிழிந்த காது மடலுக்கு அம்மா மருந்திட்டு பிளாஸ்டர் ஒட்டிய வேளையில் எனது விழிகளிலிருந்த கண்மணிகளில் எதையோ வித்தியாசமாக உணர்ந்தேன். அது எவ்வாறானது என்பதை விபரிப்பது கடினம். வித்தியாசத்தை உணர்ந்த அந்தக் கணத்திலேயே பாத்திமாவின் காயமடைந்திருந்த காது மடல் கரு நீல நிறமாக மாறத் தொடங்கியது. அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து காது முழுவதையும் நீல நிறப் படலமொன்று மூடியது. எனது விழிகளில் எரிச்சலை ஏற்படுத்தியவாறே அந்த நீலப் பனிப் படலமானது, நீர்ச் சுழியொன்றைப் போலச் சுழன்று அவளது காதுக்குள் நுழையத் தொடங்கிற்று. கணப்பொழுதில் மொத்த அறையும் அடர்ந்த நீலப் பனியால் மூடுண்டு என்னையும் சுழற்ற ஆரம்பித்தது. முதலில் அம்மாவின் கையிலிருந்த ஈரத் துணித் துண்டு அச் சுழல் காற்றில் அகப்பட்டு பாத்திமாவின் காதுக்குள் இழுபட்டுச் சென்றது. பிறகு பிளாஸ்டிக் கோப்பை. அவற்றைத் தொடர்ந்து சிறிய மேசை, பூச் சாடி, எனது மேசை மீதிருந்த புத்தகங்கள், இன்னும் என்னென்னவோ எல்லாம் அந் நீல அந்தகாரத்துக்குள் அவளது காதுக்குள் இழுபட்டுச் சென்று காணாமல் போயின. அம்மாவின் உருவம் காணாமல் போய் நானும் சுற்றிச் சுழல்வது எனக்கு விளங்கியது. ஒரு கேமராவின் ஷட்டர் கணம் போன்ற மிகக் குறுகிய காலத்துக்குள் நானும் உள்ளே ஈர்க்கப்பட்டுச் சென்று விட்டேன். அந்த அனுபவம் பயங்கரமானது. சிறிய வாக்கியத்தினாலேயோ, ஒரு நீண்ட வாக்கியத்தினாலேயோ கூறி முடிக்க முடியாத அளவுக்கு பயங்கரமானது. நாங்கள் பாரிய படுகுழியொன்றுக்குள் இழுக்கப்பட்டு சுழன்று கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. அந்தப் பயணத்தின் இடையில் ஒருவரையொருவர் முட்டி மோதிக் கொண்டும், அழுது புலம்பியவாறும் வரையறையற்ற அச்சத்தால் எழுப்பிய ஓலமானது, ஒடீஸியஸைக் கூட அசைத்துப் பார்த்திருக்கும். நீலச் சுழிக்குள் சிக்குண்டிருந்தவைகளிடையே வெளியுலகத்தின் வரையறைகளுக்கேற்ப, ஒரேயொரு உயிர்ப் பிராணி நான் மாத்திரம்தான். என்றாலும், அங்கிருந்த அனைத்திடமும் தனித் தனியான ஓலங்கள் இருந்தன. அனைத்துக்கும் குரல்கள் கூட இருந்தன. அனைத்தும் ஒன்றோடொன்றென தம் உடல்களின் மீது மோதிக் கொண்டன. அங்கிருந்த அனைத்தும் வலியையும் அனுபவித்தன. எனது சிறிய மேசை எழுப்பிய வேதனை முனகல், உள்ளத்தை உருக்கக் கூடிய அளவுக்கு உணர்வு பூர்வமாயிருந்தது. மேசை மீது வைத்திருந்த புத்தகங்கள் அனைத்தையும் நான் வாசித்திருக்காத காரணத்தால் அவை ஒவ்வொன்றும் எழுப்பிய ஓலங்கள் யாருடையவை என்பதை தனித்தனியாக என்னால் இனங்கண்டுகொள்ள இயலவில்லை. அங்கு பேராசிரியர் நளிந்த சில்வாவின் குரல் மிக மெலிதாக எனக்குக் கேட்டது. அவர் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். திடீரெனச் சுழன்று வந்த கனத்த அட்டையைக் கொண்ட புத்தகமொன்று எனது நெற்றியில் பட்டது.  நான் பின்னால் எறியப்பட்டேன். அதற்கிடையில், விரைவாக அதலபாதாளத்துக்குள் சென்று கொண்டிருந்த, பாத்திமாவின் குளிர்ந்த இரத்தம் படிந்த துணித் துண்டு எனது நெற்றியில் விழுந்தது. நான் அதைக் கையிலெடுத்து கோபத்தோடு சுருட்டி உருண்டையாக்கி அந்தப் புத்தகத்தை நோக்கி வீசியடித்தேன். அந்தப் புத்தகம் கனத்த குரலெழுப்பியவாறு ஏதோ வசனங்களை உச்சரிக்கத் தொடங்கிற்று.

 “இப்போது இப் பிரபஞ்சத்தின் மற்றுமொரு யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
இங்கு எழுந்துள்ளது நமது அக ஆத்மாவா எனப் பாருங்கள்
இது நமதேயான அக ஆத்மா அல்லாவிடின் வேறேதேனும் சக்தியா?
இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?…”

அந்த வசனங்கள் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே “ஸ்லாங்” எனும் ஓசையோடு சுழற்சி நின்றது. தொடர்ச்சியாக சுழன்று கொண்டேயிருந்ததால் எனக்கு வாந்தி வரும் போல இருந்தது. நான் தரையில் படுத்துக் கொண்டேன். என்னுடனே படுகுழிக்குள் தள்ளப்பட்டிருந்த புத்தகங்களும், ஏனைய பொருட்களும் ஒவ்வொன்றாகக் கீழே விழத் தொடங்கின. திரும்பவும் அந்த ஈரத் துணித் துண்டு எனது தலையிலேயே விழுந்தது. அனைத்தையும் அடித்துத் தள்ளி விட்டு சிறிய மேசையின் விளிம்பில் முதுகைச் சாய்த்து அமர்ந்து கொண்டதும்தான் நான் எங்கேயிருக்கிறேன் என்பதைக் கண்டு கொண்டேன். அது ஊரிலிருந்த பௌத்த விகாரையின் போதி மரத்தடி. மரத்தடியின் அருமையான குளிர்ச்சியும், இதயத்தைப் பிளக்கின்ற செறிவான ரசாயன வாடையும் அங்கிருந்தன. படுகுழிக்குள் விழுந்ததால், நான் மிகவும் களைப்புற்றிருந்தேன். இருந்தும் மிகுந்த சிரமத்தோடு எழுந்து, புத்தர் பெருமானைச் சுற்றி வலம் வரத் தொடங்கினேன். சற்று தூரம் நடந்த பிறகுதான் நான் தவறான திசையில் வலம் வந்து கொண்டிருப்பது புரிந்தது.

“இடதுசாரிகள்தானே.. அதனால் பரவாயில்லை..”

திடுக்கிட்டுப் போனேன். யாரது? யாருடைய குரல் இது..? யாரும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவரும் இல்லை. தொலைவில் பச்சை நிற மரங்களுக்கிடையே கடும் செம்மஞ்சள் நிறத்தில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த சிலைகளின் வரிசையும், அவற்றின் கீழே அவற்றுக்கு வர்ணம் பூசிக் கொண்டிருந்த சாயம் பூசுபவர்களும் மாத்திரம்தான் அங்கிருந்தார்கள். ஒருவேளை படுகுழியில் விழுந்ததால் உருவான தலை சுற்றலின் பலனாக இந்தக் குரல் கேட்டிருக்கக் கூடுமென்று நினைத்தேன். மீண்டும், புதிதாக வர்ணம் பூசப்படும் அந்தச் சிலைகளிலிருந்து எழுந்த கடுமையான வாடை எனது மூக்கைத் துளைத்தது.

“இடதுசாரிகள்தானே.. அதனால் பரவாயில்லை..”

மீண்டும் அதே குரல்!

ஓஹ்..! என்னுடனேயே படுகுழிக்குள் தள்ளப்பட்டிருந்த ஒரு புதிய கவிதைத் தொகுப்பிலிருந்து அந்தக் குரல் வந்திருந்தது. வாசிக்குமளவுக்கு பெறுமதியுள்ள புத்தகமாக அது எனக்குத் தோன்றாததால் அதனை நான் ஒரு புறமாகப் போட்டு வைத்திருந்தேன். அங்கு அப் புத்தகத்தைக் கையிலெடுத்து சும்மா வாசித்துப் பார்க்கத் தோன்றிய போதும், எனது பசி அதற்கு இடமளிக்கவில்லை. நான் தொடர்ந்தும் இடப் புறமாகவே புத்தர் பெருமானை வலம் வந்து கொண்டிருந்தேன். இருபத்தெட்டு புத்தர் சிலைகள் முடிவடையும் இடத்தில், சரியாகச் சொன்னால் தீபங்கர புத்தர் சிலையின் அருகே நான் நின்றிருந்தேன்.

“தீபங்கர புத்த பிரானே, எனக்குத் தெளிவான விளக்கத்தைத் தாருங்கள் சாமி..”

நான் நிறுத்தாமல் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தேன். வெகுநேரமாக பட்டினியில் கிடந்ததால் மூன்றாவது சோற்றுக் கவளத்தை விழுங்கிய வேளையில் எனது தொண்டையில் விக்கியது. படையலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் கொஞ்சம் அருந்தி விட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினேன். தீபங்கர புத்தரிடமிருந்து தெளிவான விளக்கத்தைப் பெற்றவனாக நான் அங்கேயே மணற் தரையில் சாய்ந்து படுத்துக் கொண்டேன்.

                                                                        0

“என்னோட மகளுக்குன்னு பல லட்சங்கள் மதிப்புள்ள தங்க நகைகள் நிறைய இருந்துச்சு.. அதையெல்லாத்தையும் கொண்டு போயிட்டாங்க.. மகன் ரத்தினக் கற்கள் தோண்டுற இடத்துல வேலை செஞ்சதால கிடைச்ச சின்னச் சின்ன ரத்தினக் கற்களை எல்லாம் சேகரிச்சு அலுமாரியில் வச்சிருந்தான். அதையெல்லாத்தையும் கூடக் கொண்டு போயிட்டாங்க ஐயா… ஐயோ..! அல்லாஹ்தான் இருக்கான்…”

எம்முடன் ஒரே வகுப்பில் படித்த நூர்தீனின் அம்மா பெருமூச்சு விட்டவாறு கூறுகிறார். போலிஸ்காரர் முறைப்பாட்டைக் கேட்டு எழுதிக் கொள்கிறார். ஆனால் நூர்தீனின் அம்மா கூறிய அளவுக்கு நீண்ட வாக்கியங்கள் எவையும் போலிஸின் ஏட்டில் எழுதப்படவில்லை என்பதை நான் காண்கிறேன். முறைப்பாட்டை எழுதும் அதிகாரி வெட்டிக் கொத்தி செதுக்கிய சில வாக்கியங்கள் மாத்திரம் ஏட்டில் பதிவாகின்றன.

“என்னோட ரெண்டு சேவல்களையும், கோழியையும் கூட கொண்டு போயிட்டாங்க ஐயா..!” என்று அவர் ஓலமிடுகிறார்.

அவரது விழியோரமாகப் படிந்திருந்த கண்ணீர்ப் படலத்தின் மீது, மேலும் கண்ணீர் கீழ் நோக்கி வழிகையில் நூர்தீனின் அம்மா மயக்கமாகி விடுகிறார். சரியாக அக் கணத்திலேயே ஓஐசீயின் அறையிலிருந்து வெளியே வந்த தடியன் ஒருவன் என்னை இழுத்துக் கொண்டு தாழ்வாரம் வழியே நடக்கத் தொடங்கினான். இரும்பினாலான கை விலங்குகளுக்குள் அகப்பட்டிருந்த எனது கைகளிரண்டும் வேதனை தருகின்றன. அணுவளவேனும் அனுதாபம் காட்டாமல், அவன் எனது கழுத்தைப் பிடித்து சிறைக்குள் தள்ளி கதவைப் பூட்டுகிறான். சற்று நேரம் கழித்து எமது குழுவிலேயே இருந்த பையன்கள் எட்டுப் பேரை நான் இருந்த சிறைக்கே கொண்டு வந்து அடைத்து விடுகிறான் அதே தடியன்.

அவ்வேளையில் அச் சிறை அறைக்குள் கதைத்துக் கொள்ளப்பட்ட விடயங்கள் பலவும் அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல. அந்தி நேரமாகும் போது வெளியே போய் விடலாம் என்று அவர்கள் கதைத்துக் கொண்டது மாத்திரம் அனைத்தையும் விட முக்கியமானது. நான் எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை. எனினும் சிறைக்குள் தள்ளப்பட்டதன் பிறகு, அந்தளவு விரைவாக வெளியே வர முடியுமா என்ன? தடியன் கூறிய விதத்தில், நாளை ஓஐசீ எம்மை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைப்பார். அவ்வாறில்லாமல் ஊருக்குப் புறப்பட்டுப் போவதைப் போல, இந் நாய்க் கூண்டிலிருந்து இலகுவாக வெளியே வர முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. மனதை ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் இவர்கள் ஆறுதல் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்களாக இருக்கும். எனக்கு இதழோரமாக சிரிப்பும் வந்தது.

அந்தி நேரம் கடந்து இருள் சூழ்ந்தது. தாழ்வாரத்தில் மின்விளக்கு ஒளிர்ந்த போதிலும் எமக்கு மேலேயிருந்த மின் விளக்கு எரியவில்லை. மேலே தொலைவாகத் தெரிந்த காற்று இடைவெளி வழியே இருள் இன்னுமின்னும் இந் நாய்க் கூண்டுக்குள் சேகரமாகிக் கொண்டிருந்தது. நானும், ஏனைய எட்டு நாய்களும் எவ்வித மூச்சும் பேச்சுமற்று அப்படியே விழுந்து படுத்துக் கிடந்தோம்.  உறக்கம் வரும் சமயத்தில் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது. எங்களில் சிலர் மட்டும் விழித்துக் கொண்டோம். அந்தத் தடியன் வந்திருந்தான்.

“ஒவ்வொருத்தனா வெளியே வாங்கடா.”

தடியனும், அவனுடன் இன்னும் இரண்டு அதிகாரிகளும் எங்களை ஒவ்வொருவராக வெளியே எடுத்து கை விலங்குகளை இட்டு வரிசையாக நிற்க வைத்தார்கள்.

“எதற்காக இது..? எங்களை நீதிமன்றத்துக்கு அனுப்பப் போறாங்களா?”

நான் பக்கத்தில் நின்ற நாயொன்றிடம் கேட்டதும், அவன் பதிலளிக்காமல் நக்கலாகச் சிரித்தான். அப்போதிலிருந்து நான் வாயை மூடிக் கொண்டு என்ன நடக்கப் போகிறதோ என அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரம் கடந்து போனது. மேலே தொலைவில் தெரிந்த காற்று இடைவெளி வழியே மேலும் கொஞ்சம் இருள் சேகரமாகத் தொடங்கியது. பிறகு எம்மைக் கடந்து நேராக நாய்க் கூண்டின் உள்ளே சென்றது. சற்று நேரத்தில் ஓஐசீயும், வெள்ளை நிறத்தில் காற்சட்டையும், மேற்சட்டையும் அணிந்த மேலும் சிலரும் நாங்கள் இருந்த பக்கமாக வந்தார்கள். ‘அட.. அமைச்சர்.’ தொலைவில் இருந்ததால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய் விட்டது. நாய்கள் தமது வால்களை ஆட்டத் துவங்கின. அவற்றின் வாயிலிருந்து வீணீர் பெருக்கெடுத்து வழியத் தொடங்கியது. எனதருகே நின்றிருந்த நாயுடைய வாயின் இரு ஓரங்களிலிருந்தும் வீணீர் பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தது. அமைச்சர் தனது கையிலிருந்த பையிலிருந்து வெளியே எடுத்த எட்டு எலும்புத் துண்டுகளையும் வரிசையாக நின்றிருந்த எங்களுக்கு முன்னால் போட்டார். எனக்கு மாத்திரம் இடவில்லை. நான் அமைச்சரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சில எலும்புத் துண்டுகள் பைக்குள் எஞ்சியிருப்பதை நான் கண்டேன். எட்டு நாய்களும் வீணீர் வழிய வழிய தரையில் அமர்ந்து எலும்புத் துண்டுகளைச் சுவைத்தன. நான் நின்றுகொண்டே இடையிடையே அமைச்சரையும், எலும்புத் துண்டுகள் இடப்பட்டிருந்த பையையும், எட்டு நாய்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்துக் கொண்டிருந்த போதே அமைச்சரின் கை மீண்டும் பைக்குள் போயிற்று. எனது வாயோரத்திலும் வீணீரை வழிய வைக்க நான் முயற்சித்தேன். அது அந்தளவு இலகுவானதாக இருக்கவில்லை. அமைச்சர் எறிந்த எலும்புத் துண்டொன்று ஓஐசீயின் பற்களிடையே நெறிபட்டது. எஞ்சிய சிலவற்றை அருகேயிருந்த ஏனைய அதிகாரிகளிடம் வீசியெறிந்த அமைச்சர் திரும்பி நடக்கத் தொடங்கினார். அதிகாரிகளும் தரையில் மண்டியிட்டு எலும்புத் துண்டுகளை சுவைக்கத் தொடங்கினார்கள். அந்தத் தடியன் கீழ் நோக்கிக் குனியும்போதே அவனின் வாயிலிருந்து வழிந்த வீணீர் படலமொன்று எலும்புத் துண்டின் மேலே விழுந்து, மின்விளக்கு வெளிச்சத்தில் அது, வெண்ணெய் தடவப்பட்டது போல பளபளக்கத் தொடங்கியது.

எலும்புத் துண்டு விளையாட்டு முடிந்தது. மீண்டும் நாய்க் கூண்டுக்குள் போக வேண்டியிருந்தது. இந்தத் தடவை நான் மட்டுமே நாயாக இருந்தேன். ஏனைய அனைவரும் அமைச்சருடைய உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். ‘அந்தி நேரமாகும் போது வெளியே போய் விடலாம்’ என்று கூறப்பட்டதன் உண்மையான அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிந்தது. வெங்காரை மரத்தின் தடி, முஸ்லிம் கடை முதலாளியின் தலையைத் தாக்க முன்பு அதைப் பறித்தெடுத்தவன் நான். அந்தப் பாவத்துக்கு நான் நாய்க் கூண்டுக்குள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தலையைச் சிதறடிக்க தடியை உயர்த்தியவர்கள்தான் எலும்புத் துண்டுகளைச் சுவைத்தவர்கள். அது போதாதற்கு இப்போது விடுதலை செய்யப்பட்டு வெளியேயும் போய் விட்டார்கள். எப்படியோ, நான் அன்று போதி மரத்தடியில் படுத்துக் கொண்ட பாவத்துக்கான நஷ்ட ஈட்டை இவ்வாறு செலுத்த நேர்த்திருக்கலாம், இல்லையா? ஆனால் கடவுளே, புத்தர் பெருமான் ஒரு கிழமையாக போதி மரத்தில் சாய்ந்திருந்தாரே. கொழும்பு, புறக்கோட்டையில் இருக்கும் போதி மரத்தின் மீது தினந்தோறும் எத்தனை எத்தனை யாசகர்கள் சிறுநீர் கழிக்கிறார்கள்? அவ்வாறிருக்கும்போது நான் சில மணித்தியாலங்கள் போதி மரத்தடியில் படுத்துக் கொண்டால் என்ன குறைந்து விடப் போகிறது? எதுவாக இருந்தாலும் இப்போது எல்லாமுமே நடந்து முடிந்து விட்டன. நாளை வெட்கமேயில்லாமல் நான் நீதிமன்றத்துக்கும் போக வேண்டியிருக்கும். 

“டேய்..”

வெளியேயிருந்து சத்தம் கேட்டது. நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து அவ்விடத்திலிருந்தே தாழ்வாரத்தைப் பார்த்தேன். அந்தத் தடியன் நின்றிருந்தான்.

“வந்து சோத்தை எடுத்துட்டுப் போடா..” என்றதும் எனக்கு அம்மாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

‘நீ யாரையடா கூப்பிடுறாய் பொறுக்கி.. கூட்டுல இருந்தாலும் நான் நாய்னு நினைச்சியா?’ என்று கூற எனக்குத் தோன்றிய போதிலும், நான் எதுவும் கூறவில்லை. மனதுக்குள் முணுமுணுத்து விட்டு இரும்புக் கம்பிகளின் கீழேயிருந்த இடைவெளியால் சோற்றுப் பீங்கானையும், தண்ணீர்க் கோப்பையையும் பெற்றுக் கொண்டேன். திரும்பவும் முன்பு அமர்ந்திருந்த இடத்துக்கே வந்து அவற்றை ஒரு மூலையில் வைத்து விட்டு அறையை மூன்று சுற்றுச் சுற்றி விட்டு வந்து அமர்ந்து கொண்டேன்.

நேற்று களைப்பும், பசியும் சேர்ந்திருந்ததால் சட்டென்று அங்கிருந்த படையலை விழுங்கி விட்டு மணற்தரையில் சாய்ந்து கொண்டது நினைவிருக்கிறது. திரும்ப விழித்துப் பார்த்தபோது நள்ளிரவு கடந்து விட்டிருந்தது. அந்த விடிகாலைப் பொழுதில் நானாக விழித்துக் கொள்ள முன்னரே, போதி மரத்தடியில் கேட்ட கலவர ஓசைகளால் விழிப்பு வந்து விட்டிருந்தது. உடனடியாக எழுந்து அமர்ந்து கொண்டேன். உறக்கத்திலிருந்து விழித்து நிஜ உலகத்துக்கு வரும்போதே, கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிலைகளின் அருகிலிருந்து எழுந்த வாடை முகத்திலடித்தது. இரண்டாவது தடவை சோம்பல் முறிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்தக் கலவரக் குழு போதி மரத்தடிக்கே வந்திருந்தது. அது குண்டாந்தடிகளையும், வாள்களையும் கையிலேந்திய ஆண்கள் படையொன்று. இளைஞர்கள், முதியவர்கள், நடுத்தர வயதினர்கள் என கிட்டத்தட்ட ஐம்பது பேர்களைக் கொண்ட குழு. என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்து நடக்கப் போவது என்னவென எனக்கு விளங்கவில்லை. நான் கண்களைக் கசக்கிப் பார்த்தேன். கைகளைக் கிள்ளிப் பார்த்தேன். அது கனவில்லை. நிஜம். நானும் எழுந்து அந்த குண்டாந்தடிகளையும், வாள்களையும் ஏந்தியிருந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன்.

ஏதோவொரு விடயம் குறித்து உசுப்பேற்றப்பட்டிருந்த அவர்களுக்கு நான் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஓரிருவர் எனது தோளில் கையைப் போடவும் தொடங்கியிருந்தார்கள். சற்று நேரத்தில் தலைமைப் பிக்கு போதி மரத்தடிக்கு வருகை தந்தார். அனைத்து ஓசைகளும் அடங்கிப் போயின. ஒரு சிறு சத்தம் கூட இல்லை.

“எல்லோரும் புத்த பிரானை வணங்கி நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள்..”

என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே? வாள்களையும், தடிகளையும் ஏந்தியவாறு புத்தரை வணங்கச் சொல்ல இந்த பிக்குவுக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? இல்லை. உண்மைதான்! புத்த பிரான் அங்குலிமாலாவையும் இவ்வாறுதானே தட்டிக் கேட்டார். எதற்கும் இருக்கட்டும் என நானும் வணங்கி வைத்தேன்.

“இடதுசாரிகளையும், தூய பக்தர்களையும் புற வாசலால் துரத்தி விடுங்கள்..” என்று அந்தக் கவிதைத் தொகுப்பு ஓலமிடத் தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த ஓசை ஏனையவர்களுக்குக் கேட்கவில்லை. நான் ஒவ்வோர் அடியாக அடியெடுத்து வைத்து பின்னால் நகர்ந்து சென்று சிறிய மேசையை எடுத்து கவிதைத் தொகுப்பின் மேலால் வைத்து விட்டு, அதே பாதச் சுவடு வழியே திரும்பவும் வந்து அப் படையோடு சேர்ந்து கொண்டேன். பூஜை வழிபாடுகள் பூர்த்தியடைந்தன. தலைமைப் பிக்கு தொண்டையைச் செருமியவாறு உபதேசத்தை ஆரம்பித்தார்.

“நீங்கள் எல்லோரும் இதை நன்றாகக் கேட்டு விளங்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது போகப் போவது கொலைகள் செய்யவோ, அப்பாவி மக்களைத் தொந்தரவு செய்யவோ அல்ல. மேன்மை மிக்க இந்த பௌத்த மதத்தையும், சிங்களவர்களையும் பாதுகாக்கும் புண்ணிய கருமத்துக்காகத்தான் செல்கிறீர்கள். அவ்வாறே..”

“ஆகட்டும்..! ஆகட்டும்..! ஆகட்டும்..!”

“அவ்வாறே துட்டகைமுனு மன்னன் கூறியிருக்கும் வாக்கியத்தை நீங்கள் அனைவரும் உங்கள் மண்டைகளுக்குள் ஏற்றி வைத்திருப்பது நல்லது..”

“ஆகட்டும்.. ஆகட்டும்..”

ஆகட்டும் எனச் சொன்ன குழுவினரின் ஆமோதிப்பு ஓசைகளும், பிக்குவின் மென்மையான குரலில், ஆனால் கடுமையாகக் கூறப்பட்ட உபதேசங்களும் அனைவரிடமுமிருந்த வாள்கள், தடிகள் மென்மேலும் உயர்த்தப்பட ஏதுவாய் அமைந்தன. ஒருவனது கையிலிருந்த ஒரு புறம் மாத்திரம் வெட்டக் கூடிய வாள், செந்நிற வெளிச்சம் பெற்று என் கண் முன்பே இரு புறமும் வெட்டக் கூடிய வாளாக மாறியது. எனது கையிலும் கித்துள் மரத்தினாலான ஒரு நல்ல தடி திணிக்கப்பட்டது. தலைமைப் பிக்கு எமது கைகளிலிருந்த ஆயுதங்கள் அனைத்துக்கும் புத்த பிரானின் பெயரால் மந்திரிக்கப்பட்ட தண்ணீரைத் தெளித்தார். என்னிடம் தரப்பட்டிருந்த கித்துள் தடியின் முனையில் கூர்மையான முட்கள் தோன்றவாரம்பித்தன. முன்பிருந்ததை விடவும்  ஒரு சக்தி வந்ததனால் நானும் அக் குழுவுடன் இணைந்து கொண்டு அவர்கள் செல்லும் திசையிலேயே எனது இனத்தைக் காக்கவெனச் சென்றேன்.

காற்று இடைவெளி வழியே வரும் இருள், நாய்க் கூண்டினுள்ளே சேகரமாவது இன்னும் நின்றிருக்கவில்லை. பசித்தது. அக் கூட்டின் மூலையில் வைக்கப்பட்டிருந்த சோற்றுப் பீங்கானைக் கையிலெடுத்தேன். அவ்விடத்துக்கு தாழ்வாரத்தின் வெளிச்சம் படிந்து கொண்டிருந்ததால் சோறு தெளிவாகத் தென்பட்டது. மோசமான சாவு விருந்து என்பது இதுதான். இதற்கு மாற்றான வேறொரு நல்ல உணவு இன்று இனிமேல் கிடைக்காதென்பது தெளிவாகத் தெரிந்தது. உணவின் அருமையான வாடை கொஞ்சமும் இல்லை. என்றாலும் படையலில் விழுங்கிய மூன்று சோற்றுக் கவளங்களின் பின்னர் எதுவும் சாப்பிடாதிருந்த காரணத்தால் அந்த சிறையுணவை விழுங்கத் தொடங்கினேன். சில கவளங்களை விழுங்கியிருப்பேன். சடுதியாக கையில் உலோகத் துண்டு போல ஏதோவொன்று தட்டுப்பட்டது. தாழ்வாரத்திலிருந்து சோற்றுப் பீங்கானையே பார்த்துக் கொண்டிருந்த மெல்லிய வெளிச்சம் என்னை நெருங்கியது.

‘அது ஒரு தோடு’

எனது இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது. பதற்றத்துடனே தோட்டை எடுத்து மின்விளக்கு வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தபோதுதான் அது தோடு மாத்திரமல்ல என்பது புலப்பட்டது.

“பாத்திமா..!”

எனது எச்சில் தொண்டையில் விக்கியது. இடக் கையிலிருந்த சோற்றுப் பீங்கான் மடி மீது, பின்னர் மடியிலிருந்து தரை மீது என நழுவி விழுந்தது. பச்சை நிறத் தோட்டோடு காது மடலின் பாகமும் தொங்கிக் கொண்டிருந்தது. அது பாத்திமாவின் கிழிந்த காது மடலின் துண்டு என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு வெகுநேரம் எடுக்கவில்லை. எனது இரண்டு விழிகளும் எரிவை உணரத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக விழிகள் மங்கத் தொடங்கி விட்டன. தோட்டோடு தொங்கிக் கொண்டிருந்த காது மடல் துண்டு, நான் பார்த்துக் கொண்டிருந்த போதே நீல நிறமாகத் தொடங்கி விட்டது. மீண்டும் அந்த நீல நிறப் பனி என்னைச் சூழ்ந்து கொண்டது. இப்போது நாய்க் கூண்டு நீல நிறப் பனியால் மூடப்பட்டிருந்தது. தாங்க முடியாத எரிச்சலால் விழிகள் எரியத் தொடங்கின. அங்கு ஏதோவொரு அதிர்வு நிகழ்ந்து கொண்டிருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது. நழுவி விழுந்த சோற்றுப் பீங்கான் மேலே எறியப்பட்டு சுழலத் தொடங்கியது. அது எனது கையிலிருந்த காதுத் துண்டினுள் ஈர்க்கப்பட்டுச் சென்றது. அந்தப் பனிப் படலம் எனது மூக்கினுள் நுழைவதைப் போல உணர்ந்தேன். கூடவே.. நன்றாக உணர்ந்து பழகிய வாடையொன்றை நாசியில் உணர்ந்தேன். சரிதான்.. எனக்கு நினைவிருக்கிறது. அது, அந்தப் புதிதாக நிர்மாணிக்கப்படும் சிலைகளிலிருந்து எழுந்த காரமான ரசாயனக் கலவைகளின் வாடை.. அதைத் தாண்டி, அதற்குப் பிறகு எனக்கு எதுவுமே நினைவில்லை. நானும் காதுத் துண்டுக்குள் இழுபட்டுச் சென்று விட்டேனா இல்லாவிட்டால் பனி எனது மூக்கினுள்ளே இழுபட்டு வந்ததா எதைக் குறித்தும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. மங்கலான வெளிச்சத்தினூடே நிஜ உலகம் தென்படத் தொடங்கிய வேளையில், நான் எனது அறையில், எனது கட்டிலில் கிடந்தேன். பாத்திமாவோ, அம்மா அவளது காதுக்கு ஈர ஒத்தடமிட்ட துணித் துண்டோ, குறைந்த பட்சம் அம்மாவோ அங்கிருக்கவில்லை. 

“அபத்தமான கனவு..” என எனது வாய் தானாகவே முணுமுணுத்தது. அங்கு சிறிய மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர்க் குவளையை எடுத்து அவ்வளவையும் ஒரே மூச்சில் குடித்து முடித்து திரும்பவும் இடப்புறமாகத் திரும்பி கட்டிலில் படுத்துக் கொண்டேன். அக் கணத்திலேயே சட்டென்று கண்ணின் கருவிழிக்கு சில சென்றிமீற்றர்கள் தொலைவில் படுக்கை விரிப்பின் மீது வரிசையாக இருந்த கறைகள் தென்பட்டன. நான் மீண்டும் எழுந்து கட்டிலின் மீது அமர்ந்து கொண்டேன்.

“பா..பாத்திமா..”

தீபங்கர புத்தரின் முன்னிலையில் சோற்றுக் கவளம் தொண்டையில் விக்கியதைப் போல, எனது தொண்டை விக்கத் தொடங்கிற்று. குருதிக் கறைகள் எனது படுக்கை விரிப்பில் ஒரு வடிவத்தை வரைந்திருந்தன. அங்கு வரையப்பட்டிருந்தது போதி மர இலையா அல்லது ஓர் இதயமா என்பதைப் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது எனக்கு.

கே.டீ. தர்ஷன

சுயாதீன விமர்சகரும் எழுத்தாளரும் ஆவார். இலக்கிய விமர்சனங்கள், கவிதைகள், சிறுகதைகள் முதலானவற்றில் தொடர்ச்சியாக இயங்குகிறார்.

எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். சிங்கள இலக்கியங்களை தமிழிற்குத் தொடர்ச்சியாக மொழிபெயர்த்துவருகிறார். இலங்கை அரச சாகித்திய விருது, வம்சி விருது, கனடா இலக்கியத்தோட்ட விருது முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.