அதிசயமாக அன்று காலை இயல் என்னை எழுப்பினாள். நாம் எழும்புவதற்கு கால் மணி நேரம் இருந்தது. கண்கள் அதிசயிக்கும்படி தானாகவே குளித்து, தன்னை அழகு படுத்தி, தனக்கு பிடித்த ‘அனா’ சட்டையை அணிந்திருந்தாள். காதுகள் அதிரும்படி பிரெஞ்சு மொழியில் ‘’Petit cochon réveille-toi’’என்றாள். (சிறிய பன்றி கண்விழி) எனது வாழ்வில் என்னை ‘சின்ன பன்றி’ என்று அழைத்தது, நான்கு வயதை நிறைத்துக் கொண்டிருந்த என் இயல். நான் பதறிப் போனேன். அவள் ‘பெரிய பன்றி’ என்றிருந்தால் பதட்டத்தின் அளவு குறைந்திருக்கும்.
பொதுவாக தமிழில் பன்றி, எருமை, குரங்கு, நாய் என்று ஊரில் திட்டு வேண்டியதால் அவை ‘கெட்ட’ வார்த்தைகள் என்று என்னிடம் படர்ந்திருந்தது. ஒரு இருட்டு மேகம் போல முகத்தை மாற்றி ‘’ இதை யார் உனக்கு சொல்லித் தந்தார்கள் ? ‘’ என்றேன். அவள் மீண்டும் ஒருமுறை அதை சொல்லிச்சிரித்தவாறு ‘என் நண்பி கிளாரா ‘ என்றாள்.
என்னை வெற்றி கொண்டு விட்டதான முகச் சாயலில் ஒரு படி மேல் சென்று ‘’ réveille-toi papa grenouille ‘’ (அப்பா தவக்கிளையே ! எழுந்திரு.) என்றாள். எனது மனதெங்கும் பஞ்சில் ஊறும் இரத்தம் போல் வேதனை படர்ந்தது. ‘’மகளே அந்த வார்த்தைகள் சொல்லக் கூடாது ! அது மகிழ்ச்சியற்ற வார்த்தைகள். மீண்டும் சொன்னால் அப்பா கவலைப்படுவேன்’’ என்றேன்.
அவள் ‘’ இல்லை அப்பா ! இது கெட்ட வார்த்தை இல்லை’’ என்றாள். என்னால் ஒருபோதும் அதை நம்ப முடியாது. இரண்டு வருடமாக பள்ளிக்குச் செல்லும் இயல் ஒரு போதும் இப்படி வார்த்தையை பயன்படுத்தவில்லை. அதைவிட நாளை அவளுக்கு இரண்டாவது ஆண்டில் முடிவுக்கான பெரிய விடுமுறை ஆரம்பிக்கிறது. இந்த நேரம் பார்த்து கிளாரா கெடுத்து விட்டாள் என்று நினைத்துக் கொண்டேன்.
எனது பெயரை பிரான்சில் முழுமையாக ‘’முத்துலிங்கம் தயாளநேசன்’’ என்று உச்சரிக்கும் இயலின் ஆசிரியரான எமிலியிடம் இயல், கொடும்சொல் சொல்லப்பழகியதை பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்து பள்ளிக்குச் செல்லத் தயாரானேன்.
நிறைந்து வழியும் இளமையும், நிறுத்தாத புன்னகையும், மெல்லிய சங்கிலிகள் போன்ற கட்டம் கட்டப்பட்ட அளகமும், வைத்திருந்தாள் எமிலி. பார்ப்பவர் எல்லோரையும் பாடாய்ப்படுத்தும் அழகு. இடியமீன்கள்கூட சின்ன மீன்குஞ்சுகள் போல ஆகிவிடுவார்கள். இளங்கோ அடிகள் இவளைப்பாடி இருந்தால் ‘’ புரிகுழல் அளகத்து நகை !’’ என்றிருப்பார். தமிழ்ப்பெண்களின் நீண்ட கருங்குழல் பேரழகென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொன்போன்று மினுங்கும் முடியை வைத்திருப்பவளுக்கு ‘பொன்நகை’ தேவையற்றுப் போய்விடுகிறது. கம்பர் எமிலியைக் கண்டிருந்தால் ‘’ கஞ்சா இருக்கும் மலர்க்கூந்தல்’’ என்றிருப்பார். என்ன செய்வது ? இளங்கோ, கம்பர், இன்னும் பெண்களை ஆராதித்த புலவர்பெருமக்களுக்கு வாய்த்தது அவ்வளவுதான் ! அவர்கள் மேற்குநாடுகளுக்கு ஏதிலியாகியிருந்தால் எத்தனை புதுச்சொற்கள், அழகுப்பாடல்களை தமிழ் கண்டிருக்கும் ? .
எமிலியிடம் பேசுவதில் ஒரு ஆபத்து இருந்தது. இயலைக் கண்டதும் ‘mon cœur’ (என் இதயமே) ஓடி வா’ என்று அவளை அணைத்து விட்டு என்னைப் பார்த்து உலகின் அற்புதமான சிரிப்பை உற்பத்தி செய்வாள். ஒரு கவிதை சொல்வது போல நளினமாக ‘முத்துலிங்கம் தயாளநேசன் çava ? (நலமா ?) என்பாள். நான் பேச நினைத்ததை எல்லாம் மறந்துவிடுவேன்.
பள்ளி வாசலில், எல்லாப்பிள்ளைகளும் திரும்பி திரும்பி தாய்க்கோ, தந்தைக்கோ கைகாட்டி உதடுகளில் வலது கையை வைத்து முத்தங்களை அனுப்புவார்கள். பெற்றோரும் அனுப்புவார்கள் எனக்கு அந்த வாய்ப்பு வருவதில்லை. இயல் எமிலியை கண்டதும் என்னை முழுவதுமாக, மறந்து விடுவாள். ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதில்லை. மற்றப் பிள்ளைகளின் முத்தங்களை இரவல் வேண்டி இயலி முதுகை நோக்கி முத்தத்தை அனுப்புவேன். அது திரும்பி வராது. எதிர்காலத்தில் அவள் ‘சின்னப் பன்றி’ என்ற வார்த்தையை எல்லோருக்கும் முன்னால் அனுப்பாமல் இருந்தால் போதும் என்று நினைத்து கொண்டேன்.
அந்தப்பள்ளியில் எல்லோருக்கும் தெரிந்தவளாக இயல் இருந்தாள். அவளது நிறம் அங்கு புதுமையாக இருந்தது. வீட்டைவிட பள்ளியை விரும்பும் ஒருத்தியாகவும் இயல் இருந்தாள். பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாலையும் 04 மணி 30 நிமிடத்துக்கு அழைத்துப் போவேன். எல்லா பிள்ளைகளும் பெற்றோரிடம் பசுவைத்தேடும் கன்றாக கண்களை நிமிர்த்தி காத்திருப்பார்கள். இயல் மட்டும் எமிலியிடம் ஏதேதோ கேட்டுக் கொண்டிருப்பாள். இறுதியாக எமிலி ‘’ உன் அப்பா வந்துவிட்டார், அங்கேபார்’’என்ற பின்னரும் என்னை பார்த்துவிட்டு எமிலியுடன் பேச்சை நீட்டிக்கொண்டிருப்பாள்.
எமிலி என் கரங்களில் இயலைத்தரும்போது ‘’ உங்கள் மகள் என்னோடு வந்துவிடுவாள்போல் இருக்கிறது’’ என்பாள். நான் எமிலிக்காக சிரிப்பேன். என்னிடம் நடுக்கடலில் தத்தளிக்கும் அகதியின் மனநிலை இருக்கும்.
அன்று எந்தத்தடைகளுமற்று சூரியன் வந்த காலையில் எமிலியிடம் இயலை கொடுத்ததும் ‘’எமிலி உங்களிடம் இரண்டு நிமிடம் இருக்குமா ? பேசவேண்டும் ! ‘’ என்றேன். ‘’என்னவிடயம்பற்றி முத்துலிங்கம் தயாளநேசன் ? என்று என்பெயரை பாடிக்கொண்டிருந்தாள்.
‘’இயல் இன்றுகாலை ’Petit cochon réveille-toi’’, réveille-toi papa grenouille என்ற வார்த்தைகளை கூறுகிறாள். அதிர்ச்சியாக இருக்கிறது இந்த வார்த்தைகள்.. ‘என்று முடிக்க முதல் இரண்டு நிமிடம் முடிந்து விடும் என்ற அவசரத்தில் ‘’ஓ.. நேசன் அது ஒரு செல்ல வார்த்தை. அன்பானவர்களை பிரஞ்சு மொழியில் அப்படி அழைப்பது வழக்கம். நீங்கள் பயப்படத்தேவையில்லை ‘’ என்றாள். என்னால் இரண்டு வெட்கங்களைத் தாங்கவேண்டி இருந்தது.
சிரித்துக்கொண்டே வேலைக்குச் சென்றேன். என் எதிரே சென்றவர்கள் தனியே சிரிப்பதை கடைக் கண்ணால் பார்த்துச் சென்றார்கள். சிரிப்பது வீதியில் அதிசயமாகத் தான் இருந்தது. எனக்கும் இது புது வகை பழக்கமாக தோன்றிவிட்டிருந்தது. சொல்லிச் சிரிக்க யாரும் இல்லாததால் தனியே சிரிப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் எல்லை தாண்டினால் வைத்தியசாலை செல்ல வேண்டி வரலாம். அவ்வளவுதான்.
எனது வேலை நேரத்தை அந்த நிறுவனம் இரண்டாக வெட்டித் தந்திருந்தது. அது ஒரு மகளை வைத்திருக்கும் எனக்காக செய்த விதிவிலக்கு. காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணி வரை. பின்னர் மாலை 07 மணியிலிருந்து இரவு 11 மணி வரை. இயலை பள்ளியில் விடவும் பின்பு அழைத்து வந்து பணிவிடைகளையும் உலகத்தின் உன்னத பொறுமையை எனக்குக் கற்றுத்தந்த உணவூட்டும் பணியையும் செய்ய அது பொருத்தமாக இருந்தது.
மாலை 6 மணிக்குப் பின்னர் அந்த தீப்பெட்டி போன்ற வீட்டில் நான் செய்வது சட்டப்படி குற்றமானது. ஒரு குழந்தையை தனியே விட்டு விட்டு செல்வது. ஆனால் என்னிடம் வேறு தீர்வு இருக்கவில்லை. அந்த நகரத்தில் அறிந்த தமிழர்களோ, இரவில் பிள்ளையைப் பார்க்கும் பணியாளர்களோ இல்லை. பணம் கொடுத்து பிள்ளையை பார்க்கும்படி வங்கி நிலுவையும் இல்லை. கோடைகால கிணறு போல் மாத முடிவில் ஆழம் சென்றிருக்கும்.
இயல் தான் பிறந்து பதினோராவது நாளில் இருந்து எனக்கு இந்த விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பை தருகிறாள். அவள் இரண்டு வயதை தொட்ட போது ஒரு நாள் மட்டுமே என்னை அதிரச் செய்தாள்.
அன்று மாலை வேலைக்குச்சென்றபோது வீட்டுக்கதவை பூட்டாமல் சென்றுவிட்டேன். இரவு 11 மணி கடந்து நான் வீட்டை அடைந்த போது, அவள் வீட்டை விட்டு வெளியேறி படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். (யாரும் பார்க்கவில்லை.) வாரி அணைத்து அறையில் சென்று அவளுக்கு மொழி புரியாத போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவள் என் கண்களை தடவி நீரைத் தொட்டு விளையாடினாள்.
அன்றிலிருந்து இரவு பசித்தால் குடிக்க அருகே அவளது பால்புட்டியும், உறவினர்களான பூனைப்பொம்மை, மிக்கிமௌஸ், க்கோன், டெடிபியர், நூனூஸ்பொலர், பேர்நுவல், புலி, யானைக்குட்டி, என அவளுக்கு மட்டும் பெயர் தெரிந்த இன்னும் பல பொம்மைகளையும் கட்டில் அருகில் வைப்பேன். இயல் பேசி, பாடி, பாடம்சொல்லி, தூங்க அவர்கள் துணை வேண்டும். கடவுளுக்கு கொடுக்க வைத்திருந்த முத்தத்தையும் கொடுத்த பின்னர் கதவை பூட்டி விட்டு சிலநிமிடம் கதவில் காதுவைத்து கேட்பேன். தன் பொம்மைகளுக்கு கட்டளையிடும் சத்தம் கேட்கும். இந்தச் சீதையை கடத்த எந்த புட்பக விமானமும் வரமுடியாதென்று நினைப்பேன். இவள் இராவணன் வளர்க்கும் சீதை ! என்று எனக்குள் நம்பிக்கை ஊட்டிவிட்டு வேலைக்குச் செல்வேன்.
இரவு 11 மணி கடந்து வரும்போது பால் புட்டி தீர்ந்திருக்கும். பொம்மைகள் இயலுக்கு மேலும் அருகிலும் தூங்கியிருப்பார்கள். இயல் ஒரு இளவரசியின் தோரணையில் தூங்கியிருப்பாள்.
நான் ஒவ்வொரு இரவும் சில நிமிடங்கள் அந்த காட்சியை தினமும் குடித்து விட்டுத்தான் குளிக்கச் செல்வேன்.
எனக்கு எந்த விதத்திலும் துன்பத்தை தராமல் தனிமையில் இரவின் பாதியைக் கழித்து வளரும் இயல் ஓர் இரும்பு பெண்ணாக கரும்புபோல் வளர்வாள் என எண்ணிக்கொள்வேன். அவள் எனக்கு சசியை நினைவூட்டிக்கொண்டே வளர்ந்தாள்.
சசியின் வயிற்றுக்குள் இயல் வளர்ந்தபோது தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் என்று நான் பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன். ஆனால் என்னால் ஒரு பெயரைக்கூட தேடிப்பெற முடியவில்லை. ஒருநாள் மாலை 14 ம் லூயி மன்னன் கட்டிய சிலுவைக் குளத்தினருகே இருவரும் புல்வெளியில் இருந்தபோது « ‘இயல்’ என்ற பெயரை வைப்போமா ? » என்று இயல்பாகக் கேட்டாள். அதிகமாக பேசிக்கொண்டு கனவுகளில் வாழ்ந்து கொண்டு நான் இருப்பேன். சசியோ செயல்களிலேயே எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருப்பாள். நான் வேலைக்கு போகும் போது வாசலில் ஒரு பவுத்த புன்னகை நிறைத்து பார்த்துக் கொண்டிருப்பாள்.
இயல் பிறந்து பதினோராவது நாள் அந்த நதி தீர்ந்தது. இரவு 11 மணிக்கு ஆவலோடு வீடு வந்தேன். இயலை மடியில் வைத்து சசி காத்திருந்தாள். ‘’இயலை பிடியுங்கோ எனக்கு ஏதோ செய்கிறது.’’ என்றாள். ‘’ எனக்கு தலை சுற்றுகிறது’’ என்று விட்டுச் சென்றாள். முழுமையாக மணிக்கூட்டின் பெரிய கம்பி ஒருமுறை சுற்றிவர முதல் ஒரு அலறல் சத்தம் கேட்டது. யுத்தம் நடந்த நிலத்தில் இருந்த எனக்கு ஒரு போதும் கேட்டிராத கதறலாக அது இருந்தது. ச….. சி என்று மனமெங்கும் மிரண்டிருக்க கதவை திறந்தேன். சசி இரத்தத்திற்கு மேல் இரண்டாக மடிந்து கிடந்தாள். சசிக்கு தலைவலிப்பு வந்து தூக்கி வீசியதில் அந்த மலசலகூடத்தின் வெள்ளைமாபிள் மேல் விழுந்ததால் அவள் முறிந்துவிட்டாள்.
‘ஐ..யோ…ஓ..’ என்ற நீண்ட ஒலியைமட்டும் எழுப்பிவிட்டு நான் அமைதியாகி போனேன். எதிர் வீட்டு ‘கினே’ என்ற நாட்டைச் சேர்ந்த அரேபியாவும், சிண்டாவும் அந்த அறையில் இருந்து சசியை தூக்க முயன்றார்கள்,. முடியவில்லை. பின்னர் அவசர வைத்திய உதவியை அழைத்தார்கள. ஒரு சிவப்பு நிற வைத்திய அவசர வண்டியில் வந்தவர்கள் கடும் முயற்சியில் கதவை கழற்றியபின்னர்தான் சசியை வெளியே எடுத்து பெரும்படைசூழ கொண்டு சென்றார்கள். நான் இடியேறு விழுந்த தென்னை போல மடியில் இயலுடன் சரிந்து இடந்தேன்.
அப்படித்தான் நானும், இயலும் வாழ ஆரம்பித்தோம். இயலுக்கு ஏதும் தெரிந்திருக்காது. அவள் எதிர்காலத்தில் அறிவாள். சசியின் அம்மா மட்டக்களப்பில் இருந்து பேசும் போது அடிக்கடி சொல்வார்- ‘ஒரு கரைச்சலும் உங்களுக்கு தராத இயல் தெய்வக்குழந்தை, சின்ன வயதில் பெரியவள் போல் வளர்கிறாள்’ என்று. நான் நினைப்பேன், குழந்தைகள் எல்லாம் தெய்வமாக பிறக்கிறது. நாம் ஏன் மனிதராக மாற்றுகிறோம் ?
அன்று வழமைபோல மாலை இயலை அழைத்து வரச் சென்றேன். இயலின் முகம் முற்றாக இருட்டியிருந்தது. மூன்று மாதம் பள்ளி இல்லை என்ற தகவல் அவள் மகிழ்ச்சி உலகத்தை குலைத்திருந்தது. எமிலி தன் குழந்தையை பிரிவது போல பல நிமிடங்கள் இயலைக் கட்டி அணைத்துக் கொண்டிருந்தாள். எமிலி முகத்திலும் முதன்முதல் சிரிப்பைக் காணமல் இருந்தேன்.
இயல் படலை தாண்டிய போதும் மீண்டும் ஓடிப்போய் இரு கைகளாலும் இதயத்தை செய்து காட்டினாள். எமிலியும் பதிலுக்கு செய்தாள். அந்த இதயங்களை பார்க்க மட்டுமே முடிந்தது.
இயல், தொட்டால் கலைந்துவிடும் தேன்கூடு போல முகத்தை வைத்திருந்தாள். நான் பேச்சை தொடுக்கவில்லை. பாதி வழியில், தன்னால் நடக்க முடியாது, கால் வலிக்கிறது என்றாள். அவளை தூக்கித் தோள் மீது இருத்தினேன். என் தலையைப் பிடித்தபடி ‘papa on peut retourner à l’école’ என்றாள். நான் வந்த பாதையில் மீண்டும் பள்ளிக்கு சென்றேன் எல்லோரும் சென்று சென்றுவிட்டிருந்தார்கள். பள்ளி தனித்திருந்தது. தோளில் இருந்தவாறு பள்ளிப்படலையை பிடித்தவாறு ‘ஏமிலி.. ஏமிலி.. ‘என்று தன் ஆசிரியரை அழைத்தாள். பள்ளி பதிலளிக்கவில்லை.
மழை திடீரென வந்து சேர்ந்தது. என்னிடம் குடை இல்லை. என் தோளில் இயலும் நானும் நனைந்து கொண்டே வீடு வந்தோம். அந்த மழை எனக்கு வசதியாக இருந்தது. இயலுக்கும்.
குளிப்பு தொட்டியில் இயலை இறக்கி தோயவார்த்தேன். தலை துவட்டி கட்டிலில் இருத்தினேன். பொம்மையை மடியில் இழுத்து வைத்து அதன் தலையைத் தடவினாள். ‘இயல் அப்பா தோய்ந்துவிட்டு வருகிறேன் இருங்கோ’ என்றேன். பொம்மையை பார்த்தவாறு தலையை ஆட்டினாள்.
தோய்ந்து விட்டு வந்து சூடாக்கிய பாலுடன் இயலின் கட்டிலை நெருங்கினேன். சசி யாழ்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற புகைப்படம் ஒன்று தான் வீட்டில் தொங்கியது. அதை இறுக கட்டியவாறு தன் தாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இயல். çva va (நலமா ?) இயல் ? என்றேன். தலையைத் தடவியவாறு ‘papa je veux maman’(அப்பா, எனக்கு அம்மா வேணும் ! ) என்றாள்.
Mon ‘petit cochon’ je veux toi ! ’(என் சின்னப்பன்றியே ! எனக்கு நீ வேண்டும் !) என்றேன். எமிலியை கட்டி அணைத்ததுபோல பாய்ந்து என்னை இறுகக் கட்டி அணைத்தாள்.
மழைபெய்த வானம் தூர நின்றது. வெள்ளை முகில்கள் பிய்ந்து அலைந்தது. கிழக்கில் கருமேகங்கள் திரண்டு கொண்டிருந்தன, மேற்கில் சூரியன் பின்வாங்கிக் கொண்டிருந்தது. விடுபட்ட இடமெல்லாம் நீலம் நின்றது. இன்று மாலை வேலைக்குச் செல்வது என் வலுவுக்கு ஏற்றதில்லை என்று வானம் சொன்னது.
அகரன்
பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.
இந்த அவசரகால சட்டத்திலும் . அவசரம் இல்லாத ரசனை வர்ணிப்பு அருமை.
“பணம் கொடுத்து பிள்ளையை பார்க்கும்படி வங்கி நிலுவையும் இல்லை. கோடைகால கிணறு போல் மாத முடிவில் ஆழம் சென்றிருக்கும்.“ என்ற வரிகளை வாசிக்கும் போது எனது வங்கி நிலுவையும் ஞாபகத்துக்கு வந்துபோனது .
“நிறைந்து வழியும் இளமையும், நிறுத்தாத புன்னகையும், மெல்லிய சங்கிலிகள் போன்ற கட்டம் கட்டப்பட்ட அளகமும்“, என்ற வரிகள் பள்ளி காலத்தில் வந்து போன பருவ காதல் ஞாபகம் வருகிறது .
இங்கே ஒரு தாயுமானவன் தன் பிள்ளையின் எதிர்காலம் குறித்து எங்கும் ஏக்கத்தை மிக அழகாகவும் அருமையாகவும் தந்திருக்கும் அகரன் இன்றைய இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத விம்பம் ஆகிவிடுகிறர் தன் பிஞ்சு குழந்தையின் இரு வார்த்தை பிரயோகத்தில் ஆரம்பிக்கும் அவர் எண்ணிலடங்கா சிறப்பான விடயங்களை தன் எழுத்துக்களால் எங்களுக்கு தந்து இருக்கிறார் நாம் இழி சொல் என கருதும் பல வார்த்தைகள் சிறப்புமிக்க அன்புமிக்க வார்த்தைகளாக மாறுகின்றது என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் இங்கே ஒரு பேருண்மையை கூறியிருப்பதை நான் அவதானிக்கிறேன் பெற்ற தாய்க்கு அடுத்த படியாக ஆசிரியர்களே எங்கள் பிள்ளைகளை தாய் போன்று பாசத்துடனும் நேசத்துடனும் நடத்துகிறார்கள் அப்படி செய்வதனால் தான் இந்த உலகம் சிறந்த மனிதர்களை உற்பத்தி செய்கிறது என்ற மிக அழகான கருத்தை ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயலும் எமிலியின் என் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விட்டார்கள் இயலையும் எமிலி யையும் எங்களுக்கு தந்த அகரன் போற்றுதற்கு உரியவர் சசி தாயுமானவரின் இதயத்தில் மட்டுமல்ல எங்கள் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார் மொத்தத்தில் மிகச் சிறந்ததொரு கதை
அற்புதம்.
இயல்களால்தான் உலகம் இயங்குகிறது.