கல்விக் கூடங்களிலும், சமூக அறிவியல் ஆய்வு மேசைகளிலும் எழுதப்பட்ட மனித இனத்தின் பொதுவான வரலாறு ராஜா ராணி கதைகளாகவே இருக்கின்றன. மேலிருந்து கீழாக செயல்படும் அதிகாரத்தின், உச்சியில் இருப்பவர்களின் பெருமித கதையாடல்களாக இருக்கின்றன. இந்த வரலாற்று கதைகளில் நமக்கு எந்த பங்கும் எப்போதும் இருக்கவில்லை. நாம் இந்த வரலாற்றை வெளியிலிருந்து பார்க்கும்/துதிக்கும் மற்றவைகளாகவே இருக்கிறோம். ராஜா ராணி கதைகளை தவிர்த்த மற்ற மனிதர்களின் கதை அதாவது நமது கதை:
“மனிதர்கள் அப்பாவித்தனமான மனதுடன் வேட்டையாடி, காடுகளில் உணவுகளை தேடி வாழ்ந்து வந்தனர், பெரும் தீங்காக விவசாயத்தை கண்டுபிடித்தது தான் மனித இனம் சந்திக்கும் அனைத்து கொடுமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும், துயரங்களும் ஆதாரமாக மறியது. குறிப்பாக விவசாயம், fertile crescent என்று மனுடவியலாளர்கள் அலாதி பிரியத்துடன் அழைக்கும் இன்றைய துருக்கி, சிரியா, லெபனான் பகுதியிலிருந்தே தோன்றியது. எனவே நாகரீகங்களும் அங்கிருந்தே தோன்றின” என்பது தான்.
அப்பாவியான மனிதர்கள் விவசாயம் எனும் பாவத்தை கண்டடைந்த சமூக பரிணாம வரலாற்றை நாம் பல்வேறு வகைகளில் கேட்டு வந்திருக்கிறோம் – குறிப்பாக அறிவு தளத்தில் இந்த வரலாற்று கதை மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க ஒன்று. இந்த கதை இரண்டு வகையான அடிப்படைகளை மூலமாக கொண்டு உருவாகி இருக்கலாம். ஒன்று, விவிலிய கதையாடல்களின் நீட்சியாக அல்லது டார்வினின் பரிணாம கொள்கை உண்டாக்கிய அறிவியல் தாகக்தின் விளைவாக, சமூக பரிணாம வளர்ச்சி எனும் பார்வை உருவாகி இருக்கலாம். பாவபட்ட விவசாயத்தை கண்டடைந்த மனித இனம் அதற்கு பின் அதிகரித்த மக்கள் தொகையின் காரணமாக நகரங்களை, அதிகாரங்களை, ஆட்சி வடிவங்களை, பொருளாதாரத்தை, பணத்தை, மற்றும் இவை அனைத்தின் காரணமாக எண்ணிக்கையில் அடங்கா பல கோடி நோக்கமற்ற அல்லது மயிரு வேலைகளை உருவாக்கி மீல முடியாத சிக்கலுக்குள் சிக்குண்டு தவிக்கின்றனர்.
மனித சமூக வரலாறு குறித்த இந்த அற்புதமான பரிணாம கதையாடல் கட்டுரை போட்டி ஒன்றுக்காக ழான் ழாக் ரூசோ எழுதிய “ஏற்றதாழ்வுகளின் தோற்றம் குறித்த உரையாடல்” எனும் கட்டுரையுடன் ஆரம்பமாகிறது. இந்த கட்டுரையையும், இதற்கு முன் நடந்த ஒரு போட்டியில் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு பெற்றதற்கு முன்பாக ரூசோவின் வாழ்க்கை ஒரு வளரும் இசைக்கலைஞரின் வாழ்வாக இருந்தது. இதுவே பொருளாதார வரலாற்று களத்திலும் நிகழ்ந்தது. ஸ்காட்லாந்து தேசத்தின் எடின்பரா நகர பல்கலைக்கழகத்தில் ‘நீதியலை’ போதித்துக்கொண்டிருந்த ஒரு பேராசிரியர் எழுதிய பொருளாதாரத்தின் வரலாறு கதை, மனித சமூகத்தின் பொருளாதார வரலாறாக மாறிப்போனது – அந்த நீதியியல் பேராசிரியர் பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம் ஸ்மித்.
1.
ஒரு இசை கலைஞர் ஏற்றத்தாழ்வுகளின் வரலாற்றை அல்லது ஒரு நீதியியல் ஆசிரியர் பொருளாதார வரலாற்றை எழுதுவது தவறானது என்று தீர்ப்பு கூறுவது நோக்கமல்ல மாறாக அவர்கள் இருவரும் எழுதிய வரலாறு எப்படி மனித குலத்தின் வரலாறாக மாறியது என்பது குறித்து பேச முனைந்ததே டேவிட் கிரேபரின் முப்பது ஆண்டுக்கால அறிவு மற்றும் களச் செயல்பாடு என்று தட்டையாக வரையறை செய்யலாம். கிரேபரை உயர்தட்டு அறிவு தளத்தில் இயங்கிய பேராசிரியராக அறிமுகம் செய்வது அவரை அவமதிக்கும் செயல் என்றே கருதுகிறேன். டேவிட் கிரேபர் ஒரு அராஜகவாதி, தனது பள்ளி காலம் முதல் அதிகாரத்துக்கும் அமைப்பு முறைகளுக்கும் எதிரான களத்தில் தொடர்ந்து பயணித்தவர். 21ஆம் நூற்றாண்டை தொடங்கி வைத்த மிக முக்கிய மக்கள் எழுச்சியான ‘வால்ஸ்ட்ரீட்யை கைப்பற்றுவோம்’ எழுச்சியை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர். வால்ஸ்ட்ரீட்யை கைப்பற்றுவோம் போராட்டத்தின் பிரகாண்டனமான – இன்று வரை அனேக முற்போக்கு செயல்பட்டு களங்களின் பிரகாண்டனமாக ஒலிக்கும், நாங்களே 99% எனும் முழக்கத்தை உருவாக்கியவர் என்று சொல்லப்பட்டாலும் அதை இறுதி வரை கிரேபர் மறுத்து வந்தார்.
தனது கள செயல்பாடுகளை போலவே அவர் பணியாற்றிய உயர்தட்டு கல்வி தளத்திலும் ‘அறிவு’ எனும் அதிகாரத்தின் வரையறைகளை தொடர்ந்து மீறியவர். அதன் வெளிப்பாடே அவரது எழுத்துக்கள் அனைத்தும். குறிப்பிடும்படியாக அவரது மிக முக்கிய நான்கு நூல்களை சொல்லலாம்.
- கடன்: முதல் 5000 வருடங்கள் [Debt: The first 5000 years]
- விதிகளின் சொர்க்கம் [The Utopia of Rules]
- புல்ஷீட் ஜாப்ஸ் [Bullshit Jobs]
- அனைத்தின் தொடக்கம்: மனிதயினத்தின் புதிய வரலாறு* [The Dawn of Everything: A New History of Humanity]
*டேவிட் வெங்கிராவுடன் இணைத்து எழுதிய நூல்
கிரேபர் தனது எழுத்துக்களில், அறிவுலகம் இதுவரை உருவாக்கி வைத்திருக்கும் மனித குலத்தின் வரலாற்றை மீறிக்கொண்டே இருக்கிறார். அவரின் சிந்தனைமுறை நேர்கோட்டில் பயணிக்கும் மனிதர்களின் வரலாற்று பயணத்தை மற்றும் அதனுடாக முன்வைக்கும் தீர்வுகளையும்/முடிவுகளையும் நிராகரிக்கின்றன. குறிப்பாக கிரேபர் தன் சொந்த கருத்துக்கள் சிலவற்றையும் புதிய ஆதாரங்களுடன் நிராகரிக்கவும் செய்கிறார்.
சமூக அறிவியலின் இயக்கத்தில் ‘விவசாயம்’ எனும் வார்த்தை மிகவும் கவர்ச்சிகரமானது. விவசாயம் எனும் கண்டுபிடிப்பை ஒட்டியே மனிதர்களின் மொத்த சமூக வரலாறும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இப்பிரதியின் தொடக்கத்தில் சொன்னது போல் மனித வரலாற்றின் இந்த போக்குக்கு ஆதாரமாக ரூசோவும், ஆடம் ஸ்மித்தும் மற்றும் தாமஸ் ஹாப்ஸ்சும் இருக்கிறார்கள்.
இவர்கள் முன்வைக்கும் வரலாறு என்பது மத புனைவுகள் மற்றும் அறிவியலில் டார்வினிய கோட்பாட்டின் தாக்கம் எனும் இரண்டு விளைவுகளின் வழியாக உருக்கொள்வதாக சொல்லும் கிரேபர் தரவுகளுடன் நமக்கு சொல்லப்படும் ரூசோ – ஹாப்ஸ் எனும் இருமுனை வரலாறை மறுக்கிறார். ரூசோ, ஸ்மித், ஹாப்ஸ் முன்வைக்கும் வரலாறு சமகால முதளாலித்துவ அமைப்பு முறையை ஏற்றுக்கொள்வதற்கான கருத்தியல்களாகவே இருக்கின்றன. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு வலு சேர்க்கும் விதமாகவோ, இந்த பரிணாம வரலாற்றை உண்மை என்று நிரூபிப்பதற்கான தேவையின் காரணமாகவோ அனேக வரலாற்று நூல்களும், ஆய்வுகளும் நிகழ்வதாக கிரேபர் எழுதுகிறார்.
விவசாயம் எனும் தீண்டக்கூடாத அற்புதம் – தீண்டக்கூடாத ஆப்பிள்; பொருளாதாரத்தை, பணத்தை, கடனை, கட்டளைகளை, அதிகாரங்களை, வன்முறைகளை, நகரங்களை, நாகரீகங்களை, ஆட்சியாளர்களை தோற்றுவித்ததாக கூறும் ஒரு புள்ளியில் அனைத்தும் தோன்றிய பொதுவான பொருளாதார நேர்கோட்டு வரலாற்றை நிராகரிக்கும் கடன்: முதல் 5000 வருடங்கள், அதற்கு மாற்றான மனிதர்களிடம் தோற்றம் முதலே புழக்கத்திலிருக்கும் இயந்துவாழ்தல் எனும் இயற்கை பண்பு உருவாக்கிய நன்றிக்கடன் அல்லது கடமையே எனும் விழுமியங்களே முதலில் தோன்றின என்கிறது. அனைத்தும் ஒற்றை புள்ளியில் தோன்றியது எனும் சமூக அறிவியல் சிந்தனை, இயற்கையின் தோற்றம் அல்லது இந்த பேரண்டத்தின் தோற்றத்தை ஆரம்பகாலங்களில் தேடிய இயற்பியல் அல்லது இயற்கை மெய்யியல் வழியில் உருவான கருத்தாக்கம் என்றே பார்க்க வேண்டி இருக்கிறது. இயற்பியலின் அனைத்துக்குமான மூலம் எனும் கருத்தியல் மதங்கள் முன்வைக்கும் ‘அறுதியான மூலவர்’ எனும் புனைவிலிருந்து தோன்றியதாக இருக்கக்கூடும். ஆனால் இன்றைய அறிவியல் பெரு வெடிப்பு எனும் தொடக்க புள்ளியையும் கடந்து, அண்டம் மற்றும் அனைத்தின் இருப்பு எப்படி சார்பியல் வழி பயணிக்கிறது என்பதை தேடிக்கொண்டு இருக்கிறது.
மனிதர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப ஆரம்ப காலங்களில் பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்தனர் பிறகு இனப்பெருக்கம் மற்றும் சிக்கலான அமைப்புமுறை வர்த்தகத்தை எளிமையாக்கும் தேவையை உருவாக்கியது, அதன் காரணமாக மனிதர்கள் பணத்தை உருவாக்கினர் எனும் வரலாற்று புனைவு நமக்கு போதுமானதாக இருக்கிறது. இந்த கதை நமக்கு மனிதர்கள் இயல்பிலே லாபம் சார்ந்த வர்த்தக உறவுகளின் பங்கேற்பாளர்களாக இருந்தனர் எனும் புரிதலை பழக்கிவிடுகிறது. அடிப்படையில் மனிதர்கள் சுயநலமிக்க லாப வெறியர்கள் அதுவே நம் இயல்பு என்று நம்புகிறோம்- இது இன்றைய முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறைக்கு தேவையானதாக இருக்கின்றது.
ஆனால் இயற்கையில் மனிதர்கள் பலன்களால் மட்டுமே உந்தப்படும் உயிரினமாக இருந்ததற்கான தொல்லியல், மானுடவியல் தரவுகள் ஏதும் இல்லை என்று சொல்லும் இந்த நூல், உற்பத்தி உறவுகளாக மனிதர்கள் உருவாகும் முன்பே மனிதர்களிடத்தில் கடன் தோன்றிவிட்டது என்பதையே இயந்துவாழ்தல் – கடமை – நன்றிக்கடன் போன்ற விழுமியங்கள் ஊடாக முன்வைக்கிறது.
பணம் எனும் அமைப்பின் சமூக முக்கியத்துவம் உபரியை மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்கும் முதலாளித்துவ காலத்திலிருந்தே இன்றைய வடிவத்துக்கு மாறியது. அதற்கு முன்பான சமூக இயக்கத்தில் பணத்தின் தேவை என்பது உபரி அல்லது வர்த்தகம் சாராது சமூக பயன் சார்ந்ததாக இருந்தது. எடுத்துக்காட்டாக ஒரு இனக்குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையே நிகழும் பகைமையை நீங்க செய்யும் ஒரு கருவி எனும் அளவில் பல சமூகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது அல்லது ஒருவரின் இறப்புக்கு பின் நிகழும் அடக்க நிகழ்வில் மற்றைய உலகுக்கு அவருடன் வரும் ஒன்றாக இருந்திருக்கின்றது. நிலப்பிரபுத்துவ காலத்திலும் கூட சமூக இயக்கத்தின் மையமாக பணம் இருக்கவில்லை. எதுவும் இல்லாமல் பணம் எனும் காகிதத்தின் வழியான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உபரியை பெருக்கும் வழி – எடுத்துக்காட்டாக வட்டி; முதலாளித்துவ சிந்தனையின் வடிவம் என்கிறார் கிரேபர்.
பொருளாதாரம், வன்முறை மற்றும் கண்காணிப்பை மூலமாக கொண்ட சிக்கலான விதிகளால் இயக்கப்படும் சமூக அமைப்புமுறை பல நோக்கமற்ற அல்லது மயிரு பணிகளை உருவாக்கியது. அடுத்தகட்டமாக உபரியை மூலமாக கொண்டு இயங்கும் இன்றைய முதலாளித்துவ பொருளாதார முறை இன்னும் சிக்கலான அதேசமயம் பல நோக்கமற்ற வேலைகளை தோற்றுவித்திருக்குகின்றது. இன்று நாம் சந்திக்கும் பத்து நபர்களில் எட்டு அல்லது ஒன்பது பேர் இந்த தேவையற்ற வேலைகளை செய்பவர்களாகவே இருக்கிறோம். எடுத்துக்காட்டாக இன்றைய கல்வி புலங்களில் பணியாற்றும் நூறு பணியாளர்களில் ஐம்பது சதத்துக்கும் அதிகமானவர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் நிர்வாக பணியாளர்களாகவே இருக்கிறார்கள். இன்றைய கல்விப்புலங்கள் விற்பனை பிரதிநிதிகளையும், சமூக ஊடக மேலாளர்களையும் வேலைக்கு அமர்த்துகின்றன – சில சமயம் இவர்கள் ஆசிரியர்களை விட அதிகம் சம்பளம் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.
சந்திக்கும் மனிதர்களில் எட்டு அல்லது ஒன்பது பேர் இப்படியான மயிரு வேலைகளை செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் ஏன் இயந்திரமையமாக்கள் மனிதர்களின் வேலை நேரத்தை குறைக்கவில்லை மாறாக இயந்திரங்களுடன் போட்டியிட வேண்டிய அடிமைகளாக ஏன் மாறினார்கள் என்று புல்ஷிட் ஜாப்ஸ் நூல் விவதிக்கிறது. புல்ஷிட் ஜாப்ஸ் எனும் பதத்துக்கு ஏற்ற தமிழ் மொழியாக்கம் மயிரு வேலைகள் அல்லது நோக்கமற்ற வேலைகள் என்பதாக கொள்ளலாம். இப்படியான ஒரு பொருட்டும் இல்லாத பணிகளை செய்பவர்களாக மனிதர்கள் மாறிப் போனதின் அடிப்படை காரணம் புல்ஷிட் ஜாப்ஸ் நூலில் இல்லாமல் கடன்: முதல் 5000 வருடங்களில் இருக்கின்றது.
முதலாளித்துவ பொருளாதாரம் காகித பணதுக்கென்று தனியான மதிப்பை உருவாக்கியதின் விளைவாக கோடிக்கணக்கான நோக்கமற்ற வேலைகள் தோன்றின அவை தரும் உழைப்புக்கான கூலி காகித அல்லது இன்றைய உலகில் மெய்நிகர் பணமாக மதிப்பு கொள்வதன் மூலம் தனது வாழ்வியல் தேவைகளை மனிதர்கள் ஈடுசெய்கிறார்கள் – எடுத்துக்காட்டாக உணவு பொருட்கள் வர்த்தகம் உலகின் முதன்மையான லாபம் தரும் வர்த்தக வடிவங்களில் ஒன்று. இப்படியான தேவையற்ற வேலைகள் பற்றிய சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக உருவான சோசியலிச/கம்யூனிச அமைப்புகளிலும் கூட இவை செழித்த வளர்கின்றன என்பது தான். இதையே புல்ஷிட் ஜாப்ஸ் ரஷ்ய மற்றும் சீன எடுத்துக்காட்டுகளை முன்வைத்து பேசுகிறது.
வேலை எனும் முடிவற்ற சுழலில் தற்கால மனிதர்கள் சிக்கி உழல்வது குறித்து எழுதப்பட்ட முதல் புத்தம் அல்ல புல்ஷிட் ஜாப்ஸ். பால் லாபெரெக் எழுதிய சோம்பேறியாய் இருப்பதின் உரிமை, பாப் பிளாக்கின் உழைப்பை ஒழிப்போம் போன்ற எழுத்துக்களின் தரவுகளின் வடிவமே புல்ஷிட் ஜாப்ஸ் என்றாலும், உழைப்பு பற்றிய உரையாடல் எனும் நிலையில் இருந்து அது ஏன் பெரும்பான்மையான நேரங்களில் தேவையற்றது மற்றும் அது எப்படி தற்கால சமூக அமைப்பு முறையின் இருப்பை மேலும் உறுதி செய்கிறது எனும் பார்வையை முன்வைக்கிறது.
2.
டேவிட் கிரேபர் திடிரென்று உடல்நிலை குறைவின் காரணமாக இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தொல்லியலாளர் டேவிட் வெங்கிரோவுடன் பத்து ஆண்டுகள் உழைப்பில் எழுதி முடித்த அனைத்தின் தொடக்கம்: மனிதயினத்தின் புதிய வரலாறு இதுக்கலாம் நாம் நம்பி வந்த ரூசோவிய ஈடன் தோட்டத்து சமத்துவ உலகம் அல்லது வன்முறைகளும், ஏற்றத்தாழ்வுகளும் மனிதர்களின் இயற்கை பழக்கமாக கருதும் ஹோப்ஸிய வரலாற்றை கட்டுக்கதைகளின் பெட்டகம் என்கிறது. இந்த நூலின் சிறப்பம்சம் இதில் கையாளப்பட்டிருக்கும் கிண்டலான மொழி நடை. பொதுவாக கிரேபரின் எழுத்துநடை நண்பர் ஒருவருடன் மேற்கொள்ளும் நெருக்கமான உரையாடலை போன்ற உணர்வை தரக்கூடியது. ஒரு நூல் முழுவதும் வாசகருடன் தொடர் உரையாடல்களை நிகழ்த்தியப்படியே அவரின் எழுத்துக்கள் இருக்கும். அதைத் தாண்டி தனது சக சிந்தனையாளர்களை கிண்டலுடன் அணுகும் தொனி எங்கும் தென்படாது. ஆனால் அனைத்தின் தொடக்கம்: மனிதயினத்தின் புதிய வரலாறு கிரேபரின் வழமையான நடைக்கு மாற்றாக கிண்டலான மொழியில் நாம் நம்பும் அல்லது நம்மை நம்ப வைக்கும் வரலாற்றை/வரலாற்றாளர்களை நோக்கி சுவாரசியமான கேள்விகளை எழுப்புகிறது – டேவிட் வெங்கிரோவின் தாக்கமாக இருக்ககூடும் .
சமீப காலத்தில் தீவிர வாசகர் தளத்திலும் கூட பெரிதாக பேசப்பட்ட யுவால் நோவா ஹராரியின் சேப்பியன் நூலில், கோதுமையை மனிதர்கள் பயிரிட தொடங்கிய கதையை உருவகமாக, எப்படி மனிதர்கள் கோதுமையை வெற்றிக்கொள்ளவில்லை மாறாக கோதுமை தனது இருப்பை நிலைநிறுத்த மனிதர்களை வெற்றிக் கொண்டது என்று எழுதி இருப்பார். இதை குறிப்பிடும் கிரேபரும்,வெங்கிரோவும் ரூசோ உருவாக்கிய ‘உன்னத ஆதிமனிதன்’ எனும் அப்பாவியான முன்னோர்களின் புனைவுகளை திரும்ப சொல்லி சொல்லி அவர்களை சிந்தனையற்ற மிருகங்கள் எனும் அளவில் அணுகுவதையும், இத்தனை வன்முறையான பரிணாம மாற்றங்களை மனிதர்கள் கண்டடையாமல் இருந்திருந்தால் இன்றைய மனிதர்கள் மிக சிறப்பான ஒரு அமைப்பு முறையில் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திருக்க மாட்டர்கள் என்று கொண்டாடும் ஹராரியின் அபத்த வாதங்களை அதே கிண்டலுடன் நிராகரிக்கிறார்கள்.
யுவால் நோவா ஹராரியின் கருத்தாடல்களை மட்டுமல்லாது, ஜெராட் டைமண்ட், ஸ்டிவன் பிங்கர் போன்ற பிரபலமான வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுகளை தொல்லியல் மற்றும் மானுடவியல் தரவுகளை முன்வைத்து மறுக்கும் ‘அனைத்தின் தொடக்கம்’ சமூக அறிவியலாளர்கள் பேச மறந்த மனித வரலாற்றின் பக்கங்களை பேசுகிறது. கற்கலாம், இரும்புக்காலம், இயந்திரமைய யுகம் என்று பொருள்முதல்வாத வரலாறாக அதனுடாக ஆட்சியாளர்களின் பெருமிதங்களை முன்வைக்கும் வன்முறை மற்றும் கண்காணிப்புகளின் வரலாறாக மட்டுமே நம் சமூக வரலாறு முன்வைக்கப்படுகிறது அதுவே சரியான வரலாறு என்றும் கருதப்படுகிறது. ரோமானிய கால விழுமியங்களின், சட்ட வடிவங்களின் தொடர்ச்சியாக நீடிக்கும் இந்த வரலாற்று புனைவுகள், ஐரோப்பியமையவாதத்தின் எதிர் கருத்தாடல்களிலும் தொடரும் முரன் அபத்தமானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஐரோப்பிய அல்லது முகலாய வருகைக்கு முன்னான தமிழக வரலாறு சோழர்களின் அல்லது சேரர்களின் அல்லது பாண்டியர்களின் வன்முறை வரலாற்று பெருமிதங்களாகவே பலநிலைகளில் நிகழ்கிறது. காலனியம் அளித்த கொடையான – ரோமானிய பாணி எல்லைக்கோடுகள் வழியாக உருவாகும் தேசஉணர்வுகள் உருவாக்கும் அணுகுமுறையாகவே இவை இருக்கின்றன. தாங்கள் பேச விரும்பாத அல்லது ராஜா ராணி கதைகள் இல்லாத வரலாற்று காலங்களை உன்னத ஆதிமனித வரலாறு என்றோ இருண்ட கால வரலாறு என்று எளிதில் கடந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று ஒற்றை அடையாளத்துடன் எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாது கடந்து போக முடிகிறது.
ஐரோப்பிய காலனியத்துக்கு முன்னனாக அறியப்படாத உலகாக இருந்த அமெரிக்க நிலப்பரப்பின் சமூக அமைப்பு முறைகளை அதிகப்படியான எடுத்துக்காட்டுகளாக கொண்டும் வழமையான யூரேசிய மற்றும் ஆப்ரிக்க தரவுகளை முன்வைத்தும் சமூக அறிவியல் பேச மறந்த வரலாற்றை முன்வைக்க முயல்கிறது இந்த நூல். இரண்டு டேவிட்களும். யூரேசிய எடுத்துக்காட்டுகளில் சிந்து சமவெளி அல்லது ஹரப்பா நாகரீகம் குறித்து சொல்லும்போது அங்கு எப்படி சாதி இல்லை என்பதையும் அந்த நாகரீகம் வழக்கிலந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பே இந்திய துணைக்கண்டத்தில் சாதி தோன்றியது என்கிறார்கள். மேலும் சாதி மனித சமூகங்களில் இயங்கும் கொடூரமான ஒடுக்கு முறைகளில் ஒன்று என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்த நூல், சமூக அறிவியலாளர்கள் நிராகரித்த மிக முக்கிய தொல்லியலாளரான மரிஜா கிம்புடஸ் முன்வைத்த ‘பெண் எனும் ஆதி விஞ்ஞானி’ எனும் கருத்தாக்கத்தை மீட்டெடுத்து எப்படி ஆதி மனிதர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பெண்கள் கண்டடைந்தவைகளாக இருக்கின்றன. குறிப்பாக எப்படி பெண்கள் விளையாட்டாக விவசாயத்தை பல ஆயிரம் ஆண்டுகள் முயற்சித்தார்கள். விவசாயத்தை கண்டுபிடித்த பின்பும் மனிதர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்படி பாகுபாடுகள் நிறைந்த சிக்கலான சமூக அமைப்பை உருவாக்காமல் தவித்தனர். இன்னொரு புறத்தில் வேட்டை சமூகமாக இருந்த வேறு சில குழுக்கள் எப்படி ஏற்றத்தாழ்வுகளை முறையாக கடைபிடித்தனர். எனவே விவசாயத்துக்கும் ஒடுக்குமுறை மற்றும் ஏற்றதாழ்வுகளுக்கும் எப்படி எந்த தொடர்பும் இல்லை போன்ற மிக முக்கிய வரலாற்று தரவுகளை முன்வைக்கினறனர். இன்னும் ஒருபடி சென்று பெண்கள் கண்டுபிடித்தார்கள் என்பதற்காகவே விவசாயம் – தீண்டியிருக்ககூடாத ஆப்பிளாக ஆண் சிந்தனையாளர்களால் கருதப்படுகிறது எனும் கருத்தை முன்வைக்கிறது.
மேலும் அறிவொளி காலத்து சுதந்திரம், சமத்துவம் போன்ற கருத்துக்கள் ஐரோப்பிய சிந்தனையின் வெளிப்பாடு என்பதை மறுத்து இவை எப்படி பல பூர்வ அமெரிக்க சமூகங்களின் அடிப்படை சிந்தனைகளாக இருந்திருக்கின்றன என்பதை, ஐரோப்பியர்கள் எழுதிய, பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் அணைத்து வீடுகளையும் அலங்கரித்த பயண நூல்கள் வழி நிறுவுகின்றனர். குறிப்பாக கண்டியாராங்க் (Kandiaronk) எனும் வென்டட் பூர்வகுடி அமெரிக்க மெய்யியலாளரின் அனுபவங்களின் வழியாக ஐரோப்பிய அறிவொளி கால சிந்தனை முறைகளை அணுகுகின்றனர். கண்டியாராங்க் (Kandiaronk) உரையாடலின் வழி பிரெஞ்சு மதபோதகர் லஹோந்தனிடம் எப்படி வன்முறை சட்டமாவும், தவறுக்கான தீர்வாக இருக்கும் எனும் கேள்வியை முன்வைக்கிறார். சட்டம் என்று வன்முறையை மனிதர்கள் மீது திணிப்பது மனிதர்களை மேலும் வன்முறையாளர்களாகவே மாற்றும் என்கிறார். கண்டியாராங்க் (Kandiaronk) லஹோந்தனிடம் உங்கள் சமூகங்களின் மனிதர்கள் உணவுக்காக மற்றவர்களிடம் கையேந்துகின்றனர், அது எப்படி ஒரு மனிதர் உணவு வேண்டி வேறு ஒருவரிடம் கையேந்த முடியும் அது எப்படி மானுட நாகரீகத்தின் இயல்பாக இருக்க முடியும் என்கிறார்.
மனித சமூக வரலாற்று குறித்த பிரம்மாண்டமான பிரதியாக உருவாகியிருக்கும் அனைத்தின் தொடக்கம் எல்லையற்ற மானுடவியல் தொல்லியல் தரவுகளை முன்வைத்து நாம் இதுக்கலாம் நம்பிக்கொண்டிருக்கும் மனித இனத்தின் வரலாற்றை கட்டுடைக்கிறது. மனித சுதந்திரத்தின் அடிப்படை என்று இந்த நூல் முன்வைக்கும் 1) பிடித்தமான அல்லது தேவையான இடத்துக்கு இடம்பெயர்தல் 2) கீழ்ப்படிய மறுக்கும் சுதந்திரம் மற்றும் 3) சமூக அமைப்பு முறைகளை தேவையான சமயங்களில் மாற்றி அமைக்கும் சுதந்திரம். இவைகளை படிப்படியாக இழந்த மனித சமூகங்கள் இறுக்கமான, வன்முறையும், கண்காணிப்பும் நிறைந்த இன்றைய அமைப்புமுறைக்குள் சிக்குண்டு, மேலும் இதிலிருந்து தப்புவதற்கான வழி ஏதும் இல்லை என்று புனைவான ஒரு வரலாற்றை சொல்லி அல்லது நம்பி வழக்கின்றனர் என்கிறது.
மோலி பிஷர், கிரேபர் குறித்த அஞ்சலி கட்டுரையில் குறிப்பிட்டுயிருப்பதை போல், டேவிட் வெங்கிராவ்வும் டேவிட் கிரேபரும் இணைத்து மனித சமூகம் தங்கள் ஆதி அல்லது தொடக்கம் குறித்து கேட்க வேண்டிய கேள்விகள் அடங்கிய பிரமாண்ட தொகுப்பு ஒன்றை கையளித்திருக்கிறானர். அந்த தொகுப்பு மனித வரலாற்றை நேர்கோட்டில் பார்க்காமல் திரவத்தன்மையில் அணைத்து சாத்தியங்களையும் கொண்டதாக பார்க்கிறது. வாழும் சூழலுக்கு ஏற்ப சார்பாக படைப்பு திறன்மிக்கதாக பல வடிவங்களில் இயங்கிய சமூக வரலாறு எப்படி இறுக்கமான ஒன்றாக மாறியது – அப்படி மாறிய நிலையை நாம் எப்படி நாகரீகத்தின் உச்சம் என்கிறோம் எனும் கேள்விகளை முன்வைக்கிறது.
3.
மனிதர்கள் இயற்கையில் குழுவாக வாழும் இயல்பினராக, உற்பத்தி உறவுகள் சாராதவர்களாகவே இருந்திருக்கின்றனர் எனும் மானுடவியல் தகவல்களை முன்வைக்கும் கிரேபரின் சிந்தனைகள் நாம் பள்ளிகளில், கல்லூரிகளில் படித்த ராஜா ராணி கதைகள் அனைத்தையும் தூக்கிவீசி விட்டு, வெகுஜனம் நிரம்பிய மனிதர்களின் வரலாற்றை முன்வைக்கின்றது. அந்த புரிதல் மனித சமூகத்தின் எதிர்காலத்துகான நம்பிக்கையினை விதைக்கின்றது – அதிகாரங்களை எதிர்த்து பேச, கிரேபரின் அந்த நம்பிக்கையை நாம் இருக்க பற்றிக்கொள்கிறோம்.
”ஒரு புதிய உலகை உருவாக்க, நாம் நம் கண்களின் முன்னால் இருப்பதை, எப்போதும் இருந்துவருவதை மறுகண்டுபிடிப்பு செய்வதில் இருந்தே தொடங்க முடியும் – டேவிட் கிரேபர்”
இளவேனில்
இளவேனில் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். கடந்த எட்டு ஆண்டுகளாக புதினங்கள், கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘உரையாடல்கள்’ எனும் சிறுகதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது.