/

மார்ட்டின் விக்ரமசிங்கவின் கலை: ஜிஃப்ரி ஹாசன்

நவீன சிங்கள இலக்கியமும் சிந்தனையும்

நவீன சிங்களச் சமூக யதார்த்தவாத இலக்கியத்தைத் தொடக்கி, முன்னகர்த்திச் சென்ற இரட்டையர்களுள் ஒருவர் மார்ட்டின் விக்ரமசிங்க.  மற்றவர் எதிரிவீர சரத்சந்திர. நீண்டகால எழுத்துச் செயற்பாட்டைக் கொண்டிருந்த மார்ட்டின் விக்ரமசிங்க சிங்கள இலக்கிய உலகில் முழுநேர எழுத்தாளராகத் தன்னை நிறுவிக்கொண்டவர். சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பல்துறைசார்ந்து 65க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். அவற்றில் 10 புத்தகங்கள் அவர் ஆங்கிலத்தில் எழுதியவை. இலக்கியம் (புனைவு, அபுனைவு) சமூகவியல், வரலாறு, மானுடவியல், இயற்கை அறிவியல், தத்துவம், மொழியியல், கல்வி, பௌத்தம், மதங்கள், வாழ்க்கை வரலாறுகள், பயண இலக்கியம் என அவர் இயங்கிய களங்கள் மிகவும் விரிவானவை. பொதுவாக சமூக அறிவியல்கள் சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு சிங்களச் சிந்தனை உலகுக்குப் பங்களிப்புச் செய்தார். சார்ள்ஸ் டார்வீனின் பரிணாமத் தத்துவம் குறித்து முதன்முதலில் சிங்களத்தில் விரிவான அறிமுகத்தைச் செய்துவைத்தவர் மார்ட்டின் விக்ரமசிங்க. அந்தவகையில் சிங்களச் சமூக சிந்தனைவெளியிலும் புதிய சிந்தனைகளுக்கும், நவீன அறிவியக்கத்துக்கும் அவர் ஒரு முன்னோடி.

அவரது சிங்கள இலக்கியத்தின் மைல்கற்கள் ‘Landmarks of Sinhala Literature (1948)’ எனும் நூல்தான் பல தசாப்தங்களாக இலங்கையின் பல எழுத்தாளர்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்திய சமூக யதார்த்தவாதத்துக்கான ஓர் ஆரம்ப மாதிரி விமர்சனமுறையை முதன்முதலில் தொடக்கிவைத்தது எனச் சிங்கள இலக்கிய விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறது. இந்நூலில் இடம்பெறும் ஒரு பிரதான கட்டுரை ஜாதகக் கதைகள் பற்றிப் பேசுகிறது. சிங்களச் சமூக வாழ்வையும் பண்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக யதார்த்தவாதப் படைப்புக்குச் சிங்களத்தில் வெளிவந்த சிறந்த எடுத்துக்காட்டான படைப்பாக அவர் ஜாதகக் கதைகளையே கருதினார் எனச் சிங்கள இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர்.

1914 இல் வெளிவந்த ‘லீலா’ என்ற நாவலுடன் அவரது எழுத்துப் பயணம் தொடங்குகிறது. ஆங்கிலம், இந்தி, ரஸ்யன், தமிழ், சீனம், இத்தாலி, டச்சு, ஜப்பானிஸ், ஜேர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட இலங்கையின் ஒரே படைப்பாளியாகவும் அவரே இருப்பார் என நினைக்கிறேன்.

வருமானப் பணியாகப் பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுத்த மார்ட்டின் விக்ரமசிங்க 1920-1946 வரையான காலப் பகுதியில் லக்மின, சிலுமின, தினமின போன்ற புகழ்பெற்ற சிங்களப் பத்திரிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார். 1932ஆம் ஆண்டு பிரபல சிங்கள நாளிதழான தினமின வின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கடமை புரிந்தார். எனினும் ஆசிரியப் பீடத்தில் இருந்துகொண்டு ஆக்க இலக்கியப் படைப்புகளைக் கொண்டு வருவதில் சிரமங்களை எதிர்கொண்டார். எனவே, 1946இல் கடமையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளனாகத் தன் பணியைத் தொடங்கினார்.

மார்ட்டின் விக்ரமசிங்கவின் படைப்புலகையும் சிந்தனையையும் வடிவமைத்ததில் காலனித்துவத்துக்கு மிக முக்கியப் பங்கிருக்கிருக்கிறது. அவரது காலம் இலங்கையில் காலனித்துவம் நிலவிய காலப்பகுதியாகும். அவரது வாழ்க்கைக் காலம் 1890 தொடக்கம் 1976 வரையாகும். இந்தக் காலம் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருக்க நேரிட்டது. அதே காலப் பகுதிக்குள்ளேயே இலங்கைக்குச் சுதந்திரமும் கிடைத்தது. இலங்கையில் பல்வேறு அரசியல் கொள்கைகள், இலங்கையில் போர் மூளுவதற்குக் காலாக அமைந்த பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள், பௌத்த மத எழுச்சி போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்தக் காலப்பகுதியிலேயே நிகழ்ந்தன. இவை பொதுவாக இலங்கையின் தேசிய இலக்கியம், அரசியல், சமூக சிந்தனை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலைமைகள் இலங்கைச் சமூகத்திலும் இலக்கியத்திலும் இரு தரப்புகளை உருவாக்கி இருந்தன.

பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி மூலம் மேற்குப் பண்பாட்டை ஆதரிக்கிற, ஆங்கிலக் கல்வி பெற்ற நகர்ப்புற மத்திய வகுப்பொன்று சிங்களவர்கள் மத்தியில் உருவாகியது. அவர்கள் பெரிதும் ஆங்கிலத்தில் படிப்பவர்களாகவும் எழுதுபவர்களாகவும் செயல்படுபவர்களாகவும் இருந்தனர். அவர்களது இலக்கியப் படைப்புகள் பொழுதுபோக்குத் தன்மையான ரொமாண்டிச எழுத்துகள். ஆங்கில ஜனரஞ்சக இலக்கியப் படைப்புகளினால் ஊட்டம் பெற்ற இந்தவகைப் படைப்புகள் காலனித்துவ இலங்கையின் ஆங்கிலக் கல்வி கற்ற நகர்ப்புற மத்தியதரச் சிங்களவர்களிடம் பிரபல்யம் பெற்றிருந்தது.

அதேநேரம் இதற்கு மாற்றான இன்னொரு தரப்பாகக்  காலனிய காலத்தில் பிரிவேனாக்களில் கல்வி கற்ற ஒரு ’சுதேசியச் சிங்கள கற்றோர் குழாம்’ கிராமிய மட்டத்தில் உருவாகியது. பிரிவேனாவில் வழங்கப்பட்ட பௌத்தக் கல்வி முறையினால் உருவாகிய தரப்பு என்ற வகையில் இது முற்றிலும் பிராமணிய_- சமஸ்கிருத வழிபாட்டில் திளைத்திருந்தது. ஆங்கிலப் பண்பாடு, மேற்குச் சிந்தனைகள், கிறிஸ்தவம் போன்றவற்றைக் கடுமையாக இவர்கள் எதிர்த்தனர். பௌத்தம், உள்நாட்டு மரபுகள் போன்றவற்றைக் கொண்டாடுவதிலும், பாதுகாப்பதிலும் அதிக முனைப்புக் கொண்டிருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை பிராமணிய அடிச்சுவட்டிலான சமஸ்கிருதக் கலப்புள்ள இலக்கியமே சிங்கள இலக்கியம் என்ற புரிதலும் மயக்கமும் இருந்தது. இந்தப் பார்வை அவர்களை மேற்குப் பண்பாடு, கிறிஸ்தவ வெறுப்புணர்வுக்குக் கடுமையாக இட்டுச்சென்றது. இந்த ஆழமான வெறுப்பு சிங்களப் பௌத்தப் பண்பாட்டு மரபு எனும் அவர்களின் சுயத்தைக் கூடத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் பிடிவாதமான பிராமணிய சமஸ்கிருத வழிபாட்டுக்குள் அவர்களைத் தள்ளியது. இந்த மேல்தட்டு வர்க்கத்தினரால் சிங்களமொழி சமஸ்கிருத மொழிக்கலப்புடன் சாதாரண மக்களுக்கு விளங்காமல் இறுக்கமானதாகப் பாவனை செய்யப்பட்டது. அதனால் அவர்களின் இலக்கியங்கள் பௌத்த மத ஒழுக்கங்களையும் பண்பாட்டு மரபுகளையுமே பிராமணிய சமஸ்கிருதக் கலப்பான கடினமான சிங்கள மொழியில் பேசுவதாக அமைந்தது. அதுவே சிங்கள இலக்கியம் எனவும் முன்னிறுத்தப்பட்டது. இந்த இருசாராரும் பரஸ்பர எதிர்ப்பு என்ற அடிப்படையில் தங்கள் தரப்பை மேலும் வலுவூட்டிக்கொண்டு எதிர்ச்சிந்தனையுடன் செயல்பட்டனர். ஆங்கிலேயே அரசின் தந்திரமான நடவடிக்கைகளும் அவர்கள் இணைவதற்கான புள்ளிகளை நுட்பமாக அழித்துவிட்டிருந்தது.

இதனால் நவீன சிங்கள இலக்கியத்தின் தொடக்க காலகட்டத்தில் சிங்கள இலக்கியமானது, பௌத்த ஒழுக்கம், அறம், மரபுகள் போன்றவற்றைப் பேசிய நெறிமுறை இலக்கியம் என்றும் ரொமாண்டிசத் தன்மையான வெகுஜனப் பொழுதுபோக்கு இலக்கியம் என்றும் இரு போக்குகளாகப் பிரிந்து நின்றது.  முதல்வகை எழுத்துகளுக்கு முற்றிலும் மறுமுனையான எழுத்துகள் இரண்டாம் வகுதியைச் சேர்ந்தவை. அதேநேரம் இலக்கியமாகக் கொள்ள முடியாத வெறும் பொழுதுபோக்கு எழுத்துகளாக அவை இருந்தன. இதனால், வெறும் பொழுதுபோக்கு ஊடகமாகச் சிங்கள இலக்கியம் சுருங்கியிருந்தது. அத்தகைய இலக்கியத்துக்கே வெகுஜனத் தளத்திலும் அதிக வரவேற்பு இருந்தது. இப்போதும் சிங்கள இலக்கிய உலகில் இந்த நிலை நீடிக்கவே செய்கிறது.

அதேநேரம் முதல்வகை இலங்கியங்களும் சாமான்ய மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு மிக அந்நியமான காவிய இலக்கியமாகவே இருந்தது. உலக இலக்கியமானது புராணங்கள், இதிகாச, காவியத் தன்மைகளிலிருந்து விடுபட்டு மனிதனின் நடைமுறைசார்ந்த வாழ்க்கையையும் அதன் சாரத்தையும், மனித நாகரிக, வரலாற்று முறைகளையும் முன்வைக்கும் போக்கை நோக்கிச் சென்றுவிட்டிருந்ததை சிங்கள இலக்கிய உலகு அதுவரை அறியாமலே இருந்தது. இதனால், இறுக்கமான பிராமணிய சமஸ்கிருத மொழிக்கலவையான தூய சிங்களத்தில் பௌத்த ஒழுக்கங்களைப் பேசிக்கொண்டிருந்த நெறிமுறை இலக்கியமும், அதற்கு முற்றிலும் மறுதலையான வெகுஜனப் பொழுதுபோக்கு ரொமாண்டிச எழுத்துகளுமே அன்றைய சிங்கள இலக்கிய சூழலில் கடும் செல்வாக்குப் பெற்றிருந்தன.

இந்த இருபோக்குகளையும் நிராகரித்த மார்ட்டின் விக்ரமசிங்க நவீன சிங்கள இலக்கியத்துக்கான புதிய போக்கை வடிவமைத்தார். அந்தவகையில் சிங்கள இலக்கியத்தில் சாதாரண எளிய மக்களுக்கு நெருக்கமாகப் படைப்புகளைக் கொண்டுவந்த முன்னோடியானார். பௌத்த நெறிமுறை இலக்கியத்தில் பின்பற்றப்பட்ட மொழி, உள்ளடக்கம் சார்ந்த இறுக்கத்தையும் வரையறையையும் தளர்த்திச் சாதாரண மக்களுக்கேற்ற விதத்தில் சிங்கள மொழிப் பண்புக்கூறுகளைப் புழக்கத்துக்குக் கொண்டுவந்தார். சமஸ்கிருதக் கலப்புள்ள பண்டித மொழியைத் தன் படைப்புகளிலிருந்து தூரமாக்கிச் சாதாரண மக்களின் மொழியைப் படைப்பு மொழியாக மாற்றினார். தவிர, இன்னொரு பக்கம் செல்வாக்குடனிருந்த ரொமாண்டிச வெகுஜனப் படைப்புகளின் ஆதிக்கத்திலிருந்து சிங்கள வாசகர்களை விடுவிக்கும் நோக்கில் ஆங்கிலேய உலக நோக்குகளையும் தன் படைப்புகளில் கவனப்படுத்தினார். இது சிங்கள இலக்கியப் போக்கிலும் சமூக மனப்பாங்கிலும் குறிப்பிட்டத்தக்க மாற்றத்தை அக்காலப்பகுதியில் ஏற்படுத்தியிருந்தது. சில படைப்பாளிகள் அவரைப் பின்தொடர்ந்தனர். இன்று அத்தகையவர்கள்தான் சிங்கள இலக்கியத்தின் மாஸ்டர் படைப்பாளிகளாக மதிக்கப்படுகின்றனர். அவரது இந்த முன்னெடுப்புக்காகவே நவீன சிங்கள இலக்கியத்தின் தந்தையாக மார்ட்டின் விக்ரமசிங்க சிங்கள இலக்கிய உலகில் மதிக்கப்பட்டு வருகிறார்.

புனைவிலக்கியத்துக்கு அப்பால் சென்றும் இந்த இரண்டு தரப்பாரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் சிந்தனை இழையை விக்ரமசிங்க தொடக்கினார். பத்திரிகைகளிலும், தன் படைப்புகளிலும் இந்த இரு சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் ஒரு கருத்தியலை உருவாக்கினார். மேற்கத்தேய அறிவு, விஞ்ஞான நோக்கு தொடர்பில் எந்தப் புரிதலுமற்றிருந்த கிராமப்புற சிங்கள அடித்தட்டு மக்களுக்கு அறிவியல் பார்வையை வழங்குவதற்காக மேற்குலக அறிவியல் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் சிங்கள மொழியில் எழுதினார். மத நம்பிக்கையைக் கடந்து அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் மனிதர்களுக்கு எழும் முதல் கேள்வியான மனிதன் என்பவன் யார்? கடவுள் இல்லையென்றால் அவன் எங்கிருந்து வந்தான் போன்ற ஆரம்பக் கேள்விகளுக்கான தெளிவைச் சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான தேடலிலிருந்து அவரது சிந்தனைப் பயணம் தொடங்கியது. இதற்கான பதிலாக அறிவியலில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த, பரவலாக விவாதிக்கப்பட்ட டார்வினின் பரிணாமத் தத்துவத்தைக் கிராமப்புறச் சிங்கள மக்களுக்கும் புரியும் விதத்தில் மக்களுக்கான சிங்களத்தில் பத்திரிகைகளில் எழுதினார். இதுசார்ந்து எந்தப் பிரக்ஞையுமற்றிருந்த சிங்கள உலகுக்கு இதன்மூலம் புதிய பார்வைகளும் அறிவியல் நோக்குகளும் பரிச்சயமாகின.

சிங்கள அறிவுலகில் முதன்முதலாக மார்ட்டின் விக்ரமசிங்க மூலமே பரிணாமத் தத்துவம் பற்றிய அறிமுகம் கிடைத்தது எனக் கூறப்படுகிறது. பரிணாமமும் மானுடவியலும் சார்ந்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பின்னர் மூன்று தொகுப்புகளாக வெளிவந்தன. அது அவரது படைப்புச் செயற்பாடுகளுக்கு அப்பாலான அறிவியல்சார்ந்த எழுத்துப் பணியாக அமைந்தது. ஒரு படைப்பாளியால் இந்தத் தளத்திலும் இயங்க முடியும் என்பதற்குச் சிங்கள இலக்கிய, சிந்தனை உலகில் அவரே முன்னோடி. அதேநேரம் தனது நாவல்களில் படித்த நகர்ப்புற காலனித்துவ வழிபாடு கொண்ட சிங்களவர்களுக்குப் பௌத்தப் பண்பாட்டு மரபுகள் குறித்த பிரக்ஞையைத் தனது நாவல்கள் மூலம் ஏற்படுத்தினார். அவரது கம்பெரலிய, விராகய, மடொல் தூவ போன்ற நாவல்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லாம். இந்நாவல்களும் அவரது பெரும்பாலான கதைகளும் தீவிர மேற்கத்தைய கோட்பாடுகளுக்கும் வாழ்க்கையொழுங்குகளுக்கும் -உள்நாட்டு பௌத்தக் கோட்பாட்டுக்கும் வாழ்க்கை ஒழுங்குகளுக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைத்துப் பரஸ்பர உரையாடல்களுக்கு வழிவகுக்கும் வகையிலான கதாபாத்திரங்களையும் கதையம்சங்களையும் கொண்டிருந்தன. ஆங்கிலேயப் பண்பாட்டையும் வாழ்க்கைமுறையையும் இலங்கை வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு மதிப்பீடுசெய்யும் கூரிய நோக்கையும் அவரது பெரும்பாலான படைப்புகளில் காணக்கிடைக்கிறது.

2

மார்ட்டின் விக்ரமசிங்கவின் படைப்புகள் சராசரி மனிதனின் வாழ்க்கையை நவீன இலக்கியத்தின் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலும் அர்த்தத்திலும் முன்வைத்தன. சாமான்ய மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அதன் சிடுக்குகளையும் பேசும் சமூக யதார்த்தவாத இலக்கியம் என்ற பாதையை நோக்கிச் சிங்கள இலக்கியத்தை அவர் திசை திருப்பினார். ஆயினும் அதற்கு மக்கள் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆங்கிலேயத் தாக்கத்துக்குள்ளான ரொமாண்டிசப் பண்புகள் பீறிடும் பொழுதுபோக்கு எழுத்துகளையே மக்கள் இலக்கியமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். மறுபுறம் கிராம மட்டத்தில் பெளத்த நெறிமுறை இலக்கியம்.

 எனினும் மெய்-இலக்கியத்தை மக்கள்மயப்படுத்துவதற்கான அவரது போராட்டம் தொடர்ந்தது. அதற்காக அவர் விலை கொடுக்க வேண்டி வந்தது. அவரது நூல்களின் விற்பனையில் சவால்களை எதிர்கொண்டார். அவரது லீலா (1914) நாவல் இரண்டு வருடங்களில் 200 பிரதிகளே விற்றதாகக் கூறப்படுகிறது. அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான கெஹெனியெக் (ஒரு பெண் 1924) சிறுகதைத் தொகுப்பு விற்றுத் தீர்வதற்கு 12 வருடங்கள் எடுத்தன. எனினும் இந்தச் சூழலை மாற்றியமைப்பதில் இடையறாத உறுதியான பயணம் அவருடையது. இலக்கியம் என்பது மனித வாழ்க்கையையும் அதன் பல்வேறு கோலங்களையும் அதன் சாரத்தையும் இலக்கிய மொழியில் பேசுவதுதான் என்பதை எழுதியெழுதியே அவர் நிறுவினார். அதுவே இன்றைய நவீன சிங்கள இலக்கியத்தின் தொடக்க விதையாக விழுந்தது.

அவரது கம்பெரலிய (கிராமப் பிறழ்வு) தான் சிங்கள இலக்கியத்தில் முதன்முதலில் நாவல் இலக்கியத்தை அதன் முழுமையான வடிவத்தில் தொடக்கிவைத்தது என்றும் மதிப்பிடப்படுகிறது. சிங்கள இலக்கியத்தின் முதல் நவீன யதார்த்தவாத நாவலாகக் கொள்ளப்பட வேண்டியதும் அதுவே. 1964 ஆண்டு இந்நாவல் சிங்கள சினிமாத்துறையின் மிக முக்கிய இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸினால் திரைப்படமாக்கப்பட்டது. அது தில்லி சர்வதேச திரைப்பட விழாவில் பொன்மயில் விருதையும் வென்றிருந்தது. அவருக்கு முந்தி எழுதப்பட்ட சிங்கள நாவல்கள் உலக தீவிர இலக்கியத்தில் நாவல் கலைக்காக அங்கீகரிக்கப்பட்ட வடிவத்தையோ பொருளையோ மொழியையோ கொண்டிருந்திருக்கவில்லை என்று சொல்லலாம்.

காலனித்துவ இலங்கையில் பொருளாதார, சமூகப் பண்பாட்டு மாற்றங்களுக்குள்ளான சமூக வகுப்புகளுக்கிடையிலான போராட்டத்தையே கம்பெரலிய மையமாகக் கொண்டிருந்தது. அதாவது சிதைந்துவரும் நிலமானிய வகுப்புக்கும் எழுச்சியடைந்துவரும் மத்திய வகுப்பாருக்குமிடையிலான உறவின் சமூகவியலையும் கிராமப்புறச் சிங்களவர்களின் பௌத்த நம்பிக்கைகளுக்கும் நகர்ப்புறச் சிங்களவர்களின் ஆங்கிலப் பண்பாட்டு ஏற்பு மனநிலைக்குமிடையிலான நுண்மையான முரண்களையும் அந்நாவலில் உயிர்ப்போடு வெளிப்படுத்தினார். தென்னிலங்கையில் கடற்கரையை அண்டியுள்ள கொக்கல என்ற கிராமம்தான் கதை நிகழும் களன். இரிகல் தேவலாய எனும் கற்குன்று அங்குள்ளது. அதனை இரிகல் தேவலாய எனும் வழிபாட்டிடமாக அந்த மக்கள் மதித்து வழிபடும் தொல் பண்பாட்டு மரபையும் நாவல் பதிவுசெய்கிறது. அக்கல் தெய்வீக சக்தி வாய்ந்தது என நம்பும் அந்த மக்களின் ஆன்மீகத்தோடு கல் கலந்திருப்பதைச் சித்திரிக்கிறார். அந்த நம்பிக்கை காலனித்துவம் இங்கே திணித்த மேற்குப் பண்பாட்டு ஆதிக்கத்துக்கு எதிரானதாகும். மக்கள் தங்கள் தேவைகளை அந்தக் கல்லையே முன்னிறுத்திப் பிரார்த்தனை புரிவதிலிருந்து அந்தக் கல்லே அவர்களின் ஆன்மீக வாழ்வின் குறிகாட்டியாகத் தெரிகிறது. அந்த மக்களின் தேவைகள், சாபம், கோரிக்கைகள் எல்லாம் இரிகல கல் முன்னால் பரந்து கிடந்தது.

நாவல் நெடுகிலும் கிராமியச் சிங்களப் பண்பாட்டு வாழ்க்கை முறையையே மார்ட்டின் காட்டிக்கொண்டு வருகிறார். ’சிறுமட்பாண்டங்களில் சமைத்தல்’ ஒரு மரபாக அந்த மக்களின் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் வருடா வருடம் தங்கள் மனையில் கூடி இந்தச் சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதை நாவலுக்குள் சித்திரிக்கிறார் மார்ட்டின். புதுவருடக் கொண்டாட்டம், பஞ்சி எனும் கிராமிய விளையாட்டு போன்ற கிராமிய வாழ்க்கை முறையையும் பதிவு செய்கிறார்.

நாவலில் நந்தாவுக்கும் பியலுக்குமிடையில் நிகழும் உரையாடல் ஆங்கிலத்தை ஆராதிக்கும் வகுப்புக்கும், அதை மறுக்கும் வகுப்புக்குமிடையிலான முரண்களையும் இடைவெளிகளையும் காட்டுகிறது. பியல் ஆங்கிலம் கற்பதையும் அதன் தேவையும் வலியுறுத்தும் அதேவேளை நந்தா அதன்மீது நாட்டமற்றிருக்கிறாள். தனது அம்மா கையொப்பம் வைக்கவும், தந்தி வாசிக்கவும் ஆங்கிலம் கற்றிருந்தால் போதும் என்கிறாள். பியலால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எதிர்ப்பாகச் சிரிக்கிறான். ஊரிலுள்ள அனைத்து இளைஞர்களும் ஆங்கிலத்தில் ஒப்பமிடக் கற்றுக்கொண்டதை நந்தா ஞாபகிக்கிறார்.

சிங்களத்தில் கையெப்பமிடுவது மதிப்பற்ற செயலா?” என நந்தா கேட்பது காலனித்துவம் கட்டமைத்த ஆங்கில மோகத்தின் மீதான கீழ்தட்டு மக்களின் ஆதங்கம். நந்தாவின் இந்தக் குரல் மிக முக்கியப் பின்காலனியக் குரலாகும்.

சமூக அமைப்பில் ஊறியிருந்த சாதியத்தையும் குலபேதத்தையும் மார்ட்டின் பதிவு செய்கிறார். பியல்மீது நந்தாவுக்கு இளக்காரமான பார்வை; முகாந்திரமான அவளது தந்தையிடம்கூட பியல் குறித்து அத்தகையதொரு இளக்காரமான பார்வையே இருக்கிறது. இது காலனித்துவ ஆராதனையும் எதிர்ப்பும் பதிவாகும் தருணம்.

முகாந்திரத்தின் வீட்டில் சாதா எண்ணெய் விளக்கை வாயால் ஊதி நூற்பதை எப்போதும் செய்ய வேண்டாம் என முகாந்திரம் அம்மையார் தடுப்பார். அது கிராமிய நம்பிக்கைகளின் படியான ஒரு தடையாகும். இத்தகைய உள்நாட்டு மரபுகள், நம்பிக்கைளை எல்லாம் எப்படி காலனித்துவ அறிவு மூடநம்பிக்கை எனப் பகடி பண்ணியது என்ற புரிதலை நோக்கி நாவலின் இந்தப் பகுதி வாசகரை அழைத்துச்செல்கிறது.

மடொல் தூவ அவரது குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பு. நாவலின் மையக் கதாபாத்திரம் உபாலி கினிவெல்ல எனும் சிறுவனின் பார்வையில் கதைசொல்லப்படுவதால் அவனது மனவுணர்வுகளும் கனவுகளும் சிறுவர் உலகமுமே நாவலின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் சிங்கள இலக்கிய உலகில் ஒரு சிலர் இதனை ஒரு சிறார் நாவலாக நோக்குகின்றனர். ஆனால் வளர்ந்தோருக்கான நாவல் இது. ஒரு சிறுவனின் நோக்கில் வளர்ந்தோரின் வாழ்க்கையையும் சிறார்களுக்கும் வளர்ந்தோருக்குமிடையிலான முரணுலகின் விசித்திரங்களையும் நாவல் முன்வைக்கிறது. சிறுவர்களுக்கான இடம் அதில் மிகக் குறைவே. வளர்ந்தோரின் சுயநலனும், சிடுக்குகள் நிறைந்த வாழ்வும், அவர்களால் கைவிடப்பட்ட சிறுவர்கள், அவர்களின் திசைமாறும் வாழ்வு, கனவுகள் ஆகியவற்றையே நாவல் பேசுகிறது. சிறுவர்களின் அகவுலகை, அமுங்கிக் கிடக்கும் கனவுகளைப் பெரியவர்கள் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டி போன்றது இந்நாவல்.

நாவலின் மையக் கதாபாத்திரங்களான உபாலி கினிவெல்லவும், ஜினபால என்கிற ஜின்னாவும் தமது பார்வையில் உலகம் எப்படி இருக்கிறது, ஆனால் அது எப்படி இருக்க வேண்டும்? மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி வாழ வேண்டும். அரசியல், கல்வி, தாய் தந்தையர் என எல்லாமும் ஏன் சிறுவர்களுக்கேற்ற விதத்தில் இல்லை? பெரியவர்களால் ஒருபோதும் சிறுவர்களின் உலகை அதன் அசல்தன்மையைப் புரிந்துகொள்ளவே முடியாதா போன்ற கேள்விகளை நோக்கி நாவல் நம்மை அழைத்துச் செல்கிறது. 

’கம்பெரலிய’ நாவலே சிங்கள நாவல் இலக்கியத்தின் மகத்தான தொடக்கமாகவும் படைப்பாகவும் இதுவரை மதிப்பிடப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை மார்ட்டின் விக்ரமசிங்கவின் ’விராகயதான் ஒரு மாஸ்டர் படைப்பு என்பேன். அது சிங்கள இலக்கியத்தில் மட்டுமல்ல உலக இலக்கியத்திலேயே இடம்பெறக்கூடிய மகத்தான நாவல். அந்நாவலுக்குச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பும் கிடைத்தது. இப்போது அந்நாவல் அச்சில் இல்லை. அதற்கொரு மறுபதிப்பு கொண்டுவரப்பட வேண்டும். [S1] அதன் மொழியும் கதை நகரும் விதமும் ஏற்படுத்தும் அலை மிகப்பெரியது. திரும்பத்திரும்ப ஐந்து, ஆறு தடவைகள் வாசித்திருப்பேன். இதுவல்லவா படைப்பு என்ற வியப்பும் மலைப்பும் ஒவ்வொருமுறையும் ஏற்பட்டது. விராகயவில் வரும் கதைநாயகன் அரவிந்தவும் நாவலின் மையக்கதையும் வாசித்து 20 வருடங்கள் கழித்தும் இன்னும் நினைவை விட்டும் கரையாமல் நிற்கிறது என்றால் அந்தச் சிருஷ்டி நுட்பம்தான் எவ்வளவு மகத்தானது.

3

மார்ட்டின் விக்ரமசிங்க தன் சிறுகதைகளிலும்கூட காலனித்துவத்தின் விளைவான ஆங்கிலேய வாழ்க்கை முறை குறித்த பதிவுகளை முன்வைக்கிறார். காலனித்துவத்தின் விளைவான இலங்கை மேல்தட்டு வகுப்பாருக்கும், கீழ்தட்டு வகுப்பாருக்குமிடையிலான அக முரண்பாட்டையும் புறவய முரண்களையும் வெளிப்படையாகவும் சிலவேளைகளில் பூடகமாகவும் கதைகள் பேசுகின்றன. அவரது ’’விநோதாஸ்வாதய’’ எனும் கதை இணையவே முடியாத மேல்தட்டினருக்கும் கீழ்தட்டினருக்கும் இடையிலான இடைவெளிகளைப் பற்றிப் பேசுகிறது. மேற்கத்திய வாழ்க்கைமுறையையும், சமூக உளவியலையும் கொண்ட உள்நாட்டு மேல் வகுப்பினர், கீழ் தட்டினர் குறித்துக் கொண்டிருக்கும் அகரீதியான விலகலையும், புறவய ஒதுக்கலையும் கடலில் நடக்கும் ஒரு விநோத விளையாட்டினூடே முன்வைக்கிறார். சிங்களம் எழுத வாசிக்கத் தெரியாத ஒரு நகர்ப்புற வகுப்பு சிங்களச் சமூகத்தில் உருவாகி இருந்ததை காலனித்துவத்தின் விளைவாகக் காணும் மார்டின் இக்கதையைச் சிங்கள மொழி கற்பிக்கும் ஒரு ஆசிரியரின் பார்வையிலேயே நகர்த்துகிறார். காலனித்துவ ஆட்சியாளர்கள் சிங்கள மொழி, பண்பாட்டு மரபுகள்மீது மேற்கொண்ட புறக்கணிப்புகள், கீழ்மைப்படுத்தல்கள்தான் காலனிய, பின்காலனிய இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் தோன்றுவதற்கு அடித்தளமிட்டது என்கிற வரலாற்றுப் புரிதலை வாசகர் வந்தடைகிறார். மேற்கத்திய வாழ்க்கைமுறையையும் பண்பாட்டையும் தழுவிக்கொண்ட உள்நாட்டு மேல் வகுப்பினர் தங்கள் மொழியையும் மரபுகளையும் துறந்து மேற்கத்திய வாழ்க்கை முறையைச் சரிகாணவும் மேலும் தழுவிக்கொள்ளவும் முனைந்த போக்கு சிங்களச் சமூகத்தில் வலுவடைந்ததை அவர் தொடர்ந்தும் தன் கதைகளில் பதிவுசெய்தார். இக்கதையில் வரும் மேற்கைத் தழுவிக்கொண்ட ஒரு சிங்களப் பெண் தன் உறவினரின் வீட்டு விருந்தில் முள்ளுக்கரண்டியால்தான் சாப்பிட முடியும் என்கிறாள். கைகளால் சாப்பிட எனக்கு விருப்பமில்லைஎன்கிறாள்.

ஏன் நமது ஆட்சியாளர் சிங்கள வாழ்க்கை முறையையும், சிங்கள மொழியையும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் தானே?” என ஒருவர் சொல்கிறார். இந்த உரையாடல் இந்த இருவகுப்பாருக்குமிடையில் விழுந்த திரையையும் விலகலையும் வெளிப்படையாகப் பேசும் தருணம்.

மார்ட்டின் விக்கிரமசிங்கவின் ஏனைய படைப்புகளிலும்கூடச் சிங்கள மக்கள் மத்தியில் காலனித்துவம் ஏற்படுத்திய வாழ்க்கைக் கோலங்களும் மாற்றங்களும் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. சில இடங்களில் அவரது பார்வை மேற்கின் நிலைப்பாடுகளுக்கு சார்பானதாகவே இருந்திருக்கிறது. இலங்கையின் சுதேச பண்பாட்டுக்கும் அறிவுக்கும் பதிலீடாக மேற்கின் பண்பாட்டையும் அறிவையும் வைக்கும் மனநிலைதான் அவரிடம் மேலோங்கி இருந்தது. ஆபிரிக்க பின்காலனியப் படைப்பாளிகளிடம் வெளிப்பட்ட காலனித்துவத் திமிருக்கெதிரான கலகக் குரல் மார்ட்டின் விக்கிரமசிங்கவிடம் வெளிப்படுவதில்லை.

ஆங்கிலேயப் பண்பாட்டையும், பௌத்த பண்பாட்டையும் குறித்த ஒரு சமாந்தரப் பார்வையை அவரது ‘விராகய, ‘மடொல் தூவ; போன்ற ஒரு சில நாவல்களில் மட்டுமே காண முடிகிறது. அவரது சிறுகதைகளில் அந்தப் பண்பைக் காண முடிவதில்லை. தவிர, அவரது சில அபுனைவுகளில் பௌத்தம் மீதான விமர்சனங்களையும் மறுப்புகளையும் மிக வெளிப்படையாகவே பதிவுசெய்திருக்கிறார். அத்தகைய பார்வைகள் குறைபாடுடையவை போன்று தெரிகின்றன. பௌத்தம், பௌத்தப் பண்பாடு குறித்த அவரது வரலாற்று நோக்குகள் உண்மையில் ஆழமற்றவை. அவரது கிறிஸ்தவப் பின்னணி கட்டமைத்த தனிப்பட்ட உளநெருக்கடியிலிருந்து இந்த விமர்சனங்கள் எழுந்திருக்கலாம்.  பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தும் சில முனைப்புகளும் அவரிடம் வெளிப்பட்டன. அவருக்கு 1953 ஆண்டு பிரித்தானிய மகாராணியால் எம்.பி.ஏ. பட்டம் வழங்கப்பட்டது.

‘Buddhism and culture’ என்கிற நூலில் பௌத்தம் குறித்த அவரது நோக்குகள் மேலோட்டமானவைதான். புராதனச் சிங்களவர்கள் இந்து மதத்திடமிருந்தே பண்பாட்டுக்கூறுகளை இரவல் பெற்றனர். ஆனால் பௌத்தச் சிந்தனைக்கேற்ப அவை மாற்றமடைந்தன (‘Buddhism and culture’, p.69) என்கிறார். ஆனால் சமண, பௌத்தக் கூறுகளையே இந்து மதம் தனதாக்கிய சில வரலாற்றுத் தருணங்களையே வரலாற்றில் படித்திருக்கிறோம். எனினும் இது மேலும் விவாதத்துக்குரியதுதான். 

1976 இல் அவரது கடைசி நூலான ‘பவதரணய வெளிவந்தது. புத்தரின் பரிநிர்வாணத்துக்கு முந்தைய வாழ்க்கையைப் பேசும் புத்தகம் அது. அந்நூலில் புத்தரைச் சாதாரண மனிதராகச் சித்திரித்துவிட்டார் எனப் பௌத்த அடிப்படைவாதக் கும்பலால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நூல் பலத்த எதிர்ப்புகளுக்குள்ளானது. ஆனாலும் அதுகுறித்த அவரது மறுப்புகள் இதுவரை என் வாசிப்புக்குக் கிடைக்கவில்லை. எனினும் உள்நாட்டுப் பண்பாட்டு மரபுகள், பௌத்தம் சார்ந்த அவரது கருத்துநிலை இந்த எல்லைக்குள் சுருங்கியதாகத்தான் இருந்தது.

இன்று அவரது எழுத்துகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. வெகுசில படைப்புகள் தமிழிலும் கிடைக்கின்றன. எனினும் அவரது புனைவுகளுக்குத் தமிழில் நல்ல மொழிபெயர்ப்புகள் மிகமிகக் குறைவுதான். சுந்தரம் சௌமியன் அவரது இரண்டு நாவல்களை நல்ல தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஏனைய மொழிபெயர்ப்புகள் மிகப் பலவீனமானவை.


ஜிஃப்ரி ஹாஸன்

கிழக்கு இலங்கையில் பாலைநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் ‘அரசியல் பௌத்தம்’ என்ற புத்தகம் முக்கியமானது.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.