நீரின் மீது

தீராக் காதல் கொண்ட மரங்கள்

 ஏரியைச் சுற்றி நிற்கின்றன.

சர்வ காலமும்

ஏரியை பார்த்தவண்ணமே

பூக்கின்றன உதிர்க்கின்றன.

சலன அலைகள்

நெளிகோடுகளாய் ஊர்ந்து

கரை தொடுகின்றன.

ஏதோ நிகழ்கிறது.

0

ஓடும் ஆற்றின் இதயத் துடிப்பை அறிய

நாம் கையில்

ஒரு மீனைப் பிடிக்கவேண்டும்

0

சற்று குரலவிழ்த்து

தேநீரில் சர்க்கரையில்லை என்றேன்

கோபித்துக்கொண்டு

கரும்புக் காட்டுக்குள் புகுந்துவிட்டாள்

தன்னைக் கரும்பென

நம்பிவிட்டவளை அழைத்துவர

அறுவடைக் காலம் வரை

காத்திருக்கும்படியாயிற்று

 நாளடைவில்

வார்த்தைகளை எச்சிலாக மாற்றும் வித்தையை

கற்றுக்கொண்டேன்

இருந்தும் ஒருநாள் மறதியாய்

குழம்பில் உப்பில்லை என்றேன்

கடலுக்குள் இறங்கிவிட்டாள்

நீருக்கடியில் மீனென நீந்திக்கிடந்தவளை

வலை வீசிப் பிடிப்பதற்குள்

போதும் போதும் என்றாகிவிட்டது

0

யாரோ யாருக்கோ  அனுப்பிய முத்தம்

வழி தவறி

என் வீட்டுக்கு வந்தது

கன்னம் கடித்து

உடலெங்கும் அலைந்தது

அன்றிரவு

படுக்கையில் புரண்ட பின்

என் கைகளைப் பற்றிக்கொண்டு

நீதான் என் உயிர் என்றது

இறுக அணைத்து முத்தமிட்டேன்

அது வெடித்துச் சிதறியது.

சதைத் துணுக்குகளும்

இரத்தத் தெறிப்புகளும்

அப்பிய முகத்தோடு

தலைதலையாய் அடித்துக்கொண்டு அழுகிறது

எனதறை.

நெகிழன்

கொமாரபாளையத்தைச் சேர்ந்த ‘நெகிழன்’ கவிதைகள் எழுதிவருகிறார். வரைகலை துறையிலும் பரந்த ஆற்றல் கொண்டவர். ‘பூஜ்ய விலாசம்’ என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.