நெகிழன் கவிதைகள்

நல்லவர்கள் கெட்டவர்கள் என்று
இரண்டு பதாகைகள் மாட்டப்பட்டிருந்தன

நல்லவர்கள் வரிசையில்
கூட்டம் அலைமோதியது
கெட்டவர்கள் வரிசையிலோ
ஒருவருமேயில்லை

சென்று 
கெட்டவர்கள் வரிசையில் நின்றேன்

நேரம் செல்லச் செல்ல
நல்லவர்கள்
ஒருவரையொருவர் 
வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டும்
அடித்துக்கொண்டும் உதைத்துக்கொண்டும்
ஜாலியாக நின்றார்கள்

நானோ
திட்டவும் அடிக்கவும் உதைக்கவும்
ஆளில்லாமல்
ஒரு அனாதைப்போல
மிகத் தனியாக நின்றேன்

நல்லவர்கள் வரிசையில் நின்றபடியே
வெகுநேரமாக என்னை கவனித்த
நல்ல மனிதர்
கூட்டத்திலிருந்து வெளிவந்து
என்னையும் நல்லவனாக்குவதாகக் கூறி
ஒரு பெருமரத்தின் பின்புறம் அழைத்துச் சென்றார்.
மரத்தின் இலைகள் குலுங்கின.

0

அதுமுதல்

படிப்பைக் கோட்டை விட்டதுதான்
அதன் பிறகு நிகழ்ந்த
எல்லா மோசமான விஷயங்களுக்கும் தொடக்கமாக அமைந்தது
அவனுடைய பிடி
உடும்பினுடையது என்றாலும்
அதையும் மீறி
கைகளிலிருந்து நழுவி
தரையில் சிதறியவை ஏராளம்
யாவற்றையும்
மெல்ல மெல்ல மறந்துவிட்டபோதும்
வேறொரு காலத்தில்
அவற்றை நினைவூட்டவெனவே பிறந்தவர்கள் போல 
அவர்கள் அவனை நோக்கி ஓடி வந்தார்கள்
அவர்களுக்கு பயந்துகொண்டுதான்
வீட்டைப் பூட்டி
பூட்டை பலமுறை இழுத்துப் பார்த்துவிட்டு
சாவியை கிணற்றில் போட்டான்
அவர்களுக்கு பயந்துகொண்டுதான்
மரத்தில் ஏறி
வீட்டின் மீதிறங்கி
ஓட்டைப் பிரித்து உள் குதித்தான்
அங்கிருக்கும்
ஒரு அழகான பெட்டியிலே
ஒளிந்துகொண்டான்.

0

ஆயிசு நூறு

பெரிய மனிதர்கள் என்று ஏமாந்து
பலநேரம் சிறிய மனிதர்களிடமே பழகியிருக்கிறேன்
சிறிய மனிதர்கள் என்றெண்ணி
பல நேரம் பெரிய மனிதர்களிடமிருந்து
விலகி நடந்திருக்கிறேன்

இரண்டு குட்டி போட்டும் கூட
இன்னும் பிடிபடவில்லை
பெரியதற்கும் சிறியதற்கும்
உண்மைக்கும் பொய்க்கும்
அசலுக்கும் போலிக்கும்
உள்ள வித்தியாசங்கள்

இந்த இலட்சணத்தில்
எடுத்த எடுப்பில் போனில் ஒருவர்
உங்களுக்கு நூறு ஆயிசு என்கிறார்
எனக்குப் புரியவேயில்லை
நூறு வருடங்கள்
இம் மூச்சுத் திணறலுடனேயே வாழ
சபிக்குமளவுக்கு 
அப்படியென்னதான் குற்றம் செய்துவிட்டேன்.

0

இரவு 12.30_க்கு
நகரின் குறுக்கு சாலையில்
ஆன்மாவையே கரைக்கக்கூடிய
கவர்ச்சியான பேயைக் கண்டேன்
அது, தனது கவுனின்
கீழ்ப் பகுதியைத் தூக்கி தலைமேல் போட்டுக்கொண்டு
வாகனத்தை மறித்தது.
நானதை
வைத்த கண் வாங்காமல் பார்த்தேன்
கடவுளை விடவும்
இந்தப் பேய் தான் எவ்வளவு
அழகாககவும் பிரகாஸமாகவும் இருக்கிறது
இப்படியொரு பேய் இருக்குமென்று
முன்பே தெரிந்திருந்தால்
வீணாக
நான் எந்த சாமியையும் கும்பிட்டிருக்க மாட்டேன்
வீணாக
கோவில் கோவிலாய் அலைந்திருக்க மாட்டேன்
அதற்கு பதில்
இருள் இருளாக அலைந்து திரிந்து
இவ்வாழ்வை
சுவைத்துச் சுவைத்து 
எப்படியெல்லாமோ வாழ்ந்திருப்பேன்.
கடவுளே கடவுளே
அதன் தெய்வீகக் கால்களைப் பாருங்கள்
இத்தனை இருளிலும்
எத்தனை மின்னுகிறது.

0

இருவரும் எதிரெதிரே அமர்ந்தோம்
தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியை
மேசையில் வைத்து
அவனை நோக்கி நகர்த்தினேன்

அவன் என்னைச் சுடலாம்
அல்லது
தன்னையே சுட்டுக்கொள்ளலாம்
அல்லது
ஜாக்கிசானைப் போல
கொரித்துத் தின்று தண்ணீர் குடிக்கலாம்

ரொம்ப நேரம் பார்த்துவிட்டு
இது பார்க்க அழகாக இருக்கிறது
என்று சொல்லிவிட்டு
அதை எடுத்துக்கொண்டு
சென்றுவிட்டான்

ஐந்து குண்டுகளை அதில் போட்டேன்
அவன் அதை வைத்து
ஐந்து எதிரிகளைச் சுடலாம்
அல்லது
ஒரு எதிரியை ஐந்து முறை சுடலாம்
என்ற யோசனையோடு
இடத்தை காலி செய்தேன்

மறுநாள்
துப்பாக்கியுடன் ஒருவன் பிடிபட்டதாகவும்
அவன் தன்னைத் தானே
ஐந்து முறை சுட்டுக் கொண்டதாகவும்
நாளிதழில் படித்தேன்.

***

நெகிழன்

கொமாரபாளையத்தைச் சேர்ந்த ‘நெகிழன்’ கவிதைகள் எழுதிவருகிறார். வரைகலை துறையிலும் பரந்த ஆற்றல் கொண்டவர். ‘பூஜ்ய விலாசம்’ என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்.

2 Comments

  1. ஆயுசு நூறு கவிதை சிறப்பாக உள்ளது.
    இருள் இருளாக அலைந்து திரிந்து
    இவ்வாழ்வை
    சுவைத்துச் சுவைத்து
    அருமையான வரிகள்
    வாழ்த்துகள் நெகிழன்

  2. சொற்களின் காட்சியமைப்பே கவிதைகள் என்பர் உங்கள் கவிதைகளில் அதிகம் திரண்டு வருகிறது நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.