பிறந்த போது
பொக்கை வாயோடு இருந்தேனாம்
அதை நான்
பார்க்கவுமில்லை
நினைவிலுமில்லை
எனவே
மிக உறுதியாக நம்ப மறுத்தேன்
இன்றோ
அசந்த நேரத்தில்
கண்ணாடி காட்டிவிட்டது
இப்போது
கட்டிலுக்கடியில்
ஒளிந்துகொண்டிருக்கிறேன்
நன்றிகெட்ட கொசுக்கள்
கத்தி கத்தி
கடித்து கடித்து
மாட்டிவிடப் பார்க்கின்றன.
0
நூற்றியெட்டாம் முறையாக
எப்போதெல்லாம்
கண்ணயர்கிறேனோ
அப்போதெல்லாம்
காதுகளில் கத்திவிட்டு
ஓடிவிடுகின்றன கொசுக்கள்
சிவந்த கண்களின் நரம்புகள்
புடைக்கப் புடைக்க
சபதமிட்டேன்
உங்களை
இந்த முறை நிச்சயம் விடமாட்டேன்
குருட்டு வாள் வீரனைப் போல
மட்டையை கன்னாபின்னாவென்று சுழற்றினேன்
பிறகு
பிறகு
பிறகு
கட்டிலின் மூலையில்
வண்டி துரத்தியோய்ந்து களைத்த
நாயைப் போல கிடந்தேன்.
0
எலிகளும் பூனைகளும்
மாறி மாறி
கொஞ்சிச் சாகும் பூங்காவில்
தனியாய்
அமர்ந்திருக்கிறேன்
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
பூனைக்கு எலியாக
எலிக்குத் தேங்காயாக
இருக்க முடியாதவர்கள்
இப்படித்தான்
நாள் முழுதும்
புற்களை எண்ணிக்கொண்டு
கூட்டத்தில்
மிகத் தனியாக அமர்ந்துவிட்டு
வீடு திரும்பியதும்
கூடிய நரை மயிர்களை
நரைக்காத மயிர்களுக்குள்
மறைத்துவிட்ட திருப்தியில்
விசிலூதிக்கொண்டே
படுக்கையில் சாய்வார்களாம்.
நெகிழன்
கொமாரபாளையத்தைச் சேர்ந்த ‘நெகிழன்’ கவிதைகள் எழுதிவருகிறார். வரைகலை துறையிலும் பரந்த ஆற்றல் கொண்டவர். ‘பூஜ்ய விலாசம்’ என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்.