நனையாத சூரியன்
காலை நடையில் உடன் வரும்
அப்போதுதான்
ஏரியின் நீருக்குள் இருந்து
நனையாமல் எழுந்த
காலைச் சூரியன்.
தளும்பும் செம்மையில்
செண்பகப் பூக்கள்
செண்பகப்பூ மணத்தில்
முகம் மறைத்து அலையாடும்
அலம்பிய கருங்கூந்தல்
வெள்ளிக்கிழமை பின் மதியம்
பன்னீர் பூக்கள் மெத்திட்ட
மரத்தடி நிழல்.
பாதையின் ஓரம்
இரண்டி இடைவெளியில்
சும்மா பேசிக்கொண்டிருந்தோம்.
ஆனால்
உனக்குத்தெரியும்
நாம் வெறுமனே
அமர்ந்திருக்கவும் இல்லை
சும்மா பேசிக்கொண்டிருக்கவும் இல்லை.
அப்போதும்
கொடுக்காப்புளி மரத்தின் பின்
ஒளிந்திருந்து பார்த்ததும்
இதோ,
இதே சூரியன் தான்.
O
ஆரஞ்சு நிற பசு
ஊருக்குள்
புதிதாக வந்துவிட்டது
ஒரு ஆரஞ்சு நிறப்பசு.
புரட்சி, கலகம் சீர்திருத்தம்
நவீன மோஸ்தர்
கலையின் குறியீடு
என பேசிக்கிடக்கும்
ஜனம்.
ஆரஞ்சுப் பசுவோ
எல்லா பசுக்களையும் போலத்தான்
நாயகன் அரிவாள் ஓங்கும்
ஆப்செட் போஸ்டர் மென்று
சாணியிட்டு
குப்பைத்தொட்டி அருகில்
ஆசுவாசமாய் அமர்ந்து
அசைபோடும்
கண்மூடி.
வேணு தயாநிதி
வேணு தயாநிதி இலக்கியத்திலும், இசையிலும் அதிகம் நாட்டம் கொண்டவர். தற்சமயம் அமெரிக்காவில் வசித்துவருகிறார். புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்டவர்