/

வேணு தயாநிதி கவிதைகள்

யாதுமற்ற இருப்பின் துளி

மலர் தோறும்
அலைந்து திரியும்
வண்ணத்துப்பூச்சி

தோட்டத்தின்
செடி ஒன்றாய் சோதித்தும்
நிறைவின்றி
ரீங்கரித்து சுற்றி வரும்
கருவண்டு

பாதாளம் கண்டு
தூர்வாரி
ஏறி வரும் தேனீக்கள்

சுவை தேடி
உடனே செல்லும்
அடுத்த இடம்

உலர் நுண்
துரும்பெனினும் சரி.

தட்டானின் தேவையோ
இறகு தாழ்த்தி
அணைத்து
அமர

ஒரு
எளிய
பிடி.

தனிமை

உறைந்த ஏரியின்
வெண்பனி
பரப்பின் கீழ்

பனிப்பாளத்தின்
பாகுநிலை கூடிய
ஆழத்தின்
அடியில்

இருளில்
துணை தேடி
அலையும்

ஒற்றை
மீன்
ஒன்று

பாதாள அறையின் நூலேணி

பெயர் தெரியாத
பறவையின்
படம் பொறித்த

பழைய
பீங்கான் குவளையை
பற்றி எடுத்கையில்

நிழலாடுகிறது,
பாதள அறையிலிருந்து
மேலேறிச்செல்லும்
நூலேணி.

குவளையின்
கொதி நீரிலிருந்து
கிளம்பும் நீராவி

அதில்
அரேபிய பூத்தைப்போல்
கிளர்ந்து எழுகிறது
அஸ்ஸாம் மலைச்சரிவின்
மண் மணம்.

மட்கிய உயிர்கள்
ஒவ்வொன்றையும்
வரிசையாய்
உயிர் பெற்று
எழ வைக்கும்
தேயிலை பறிக்கும்
இளம்பெண்களின் பாடல்

பாடலில்
முகம் தெரியாத
போர்வீரனின்
சாகாவரம் பெற்ற காதல்

இப்போதைக்கு
இது போதும்.

கொதிக்கும் நீரில்
என் கருமையை இழந்து

உன்
ஞானேந்திரியங்களில்
இனிய ஒன்றாக
என்றென்றைக்குமாய்
படிந்து விடுவேன்,

ஏந்த காத்திருக்கும்
உன் கைகளின்
கதகதப்புக்குள்

என்னை
ஒப்புக்கொடுத்து

வேணு தயாநிதி

வேணு தயாநிதி இலக்கியத்திலும், இசையிலும் அதிகம் நாட்டம் கொண்டவர். தற்சமயம் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.  புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்டவர்

2 Comments

  1. பாதாள அறையின் நூலேணியின் முனையை பிடித்துவிட்டேன் (நனவிலி) சிறப்பு ஐயா நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.