/

திருவருட்செல்வி: விஷால் ராஜா

அலுவலகம் முடிந்து, ஹாஸ்டலுக்கு வந்த செல்வி, வேகவேகமாக நடந்தாள். அவள் முதுகுப்பை தனியே துள்ளி ஓடுவது போல நெளிந்தது. எதிர் திசையில் இழுத்தது. மூச்சிரைப்பு போல ஒரு குரல் தொடர, கீழ்த்தளத்தில் மாடிப்படியை ஒட்டியிருந்த தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினாள். ஹெட்போனை காதுகளிலிருந்து அகற்றிவிட்டு, முதுகுப் பையைக் கழற்றி மேஜையில் வைத்தாள். ஜிப்பைத் திறந்து உள்ளிருக்கும் பூனையைத் தன் மெலிந்த கைகளால் தூக்கி தரையில் விட்டாள். ஆரஞ்சு நிறக் கோடுகள் கொண்ட பூனை தலையை உலுக்கியது. பின்னர் குட்டி உறுமலோடு உடலை அசைத்துவிட்டு, செல்வியை சட்டை செய்யாது, புதிய இடம் பற்றியும் எந்த தயக்கமும் இல்லாமல் வாலை நிமிர்த்தி நேரே நடை போட்டது.

சுடிதார் துப்பட்டாவை கழற்றிக் கட்டிலில் வீசிவிட்டு, விரைவாக நடந்து பூனையை குனிந்து தூக்கியதும்  கம்பி போன்ற மீசை ரோமங்களோடு “என்ன?” என்று அது பொறுமையில்லாமல் முகத்தை எக்கி பார்த்தது. அடிவயிறு மேலே வரும்படி மல்லாந்த நிலையில் தூக்கவும் தன் கால்களை உதைத்து எதிர்ப்பை தெரிவித்து. கால் நகத்தால் அறைய முற்பட்டது. “பாஞ்சு வருதே” என்று சிரித்தவாறு கீழே இறக்கிவிட்டாள். உடனே பெரிய மனதோடு நடந்து கொள்வது மாதிரி சிணுங்கலாக ஒரு மியாவ்வை சொல்லிட்டு அறையை பூனை மீண்டும் சுற்றி வந்தது.

தன் சிறிய கால்களால் சீக்கிரமே அந்த இடத்தைச் சுற்றி வந்துவிட்டது. இரண்டு இரும்புக் கட்டில்களோடும் கடப்பா கல் அலமாரியோடும் ஒரு ஹால். மூலையில் ஒரு மர மேஜை, மசாலா டப்பாக்களோடும் கரண்டி பாத்திரங்களோடும் சமையல் கட்டாய் மாறியிருந்தது. இடதுபக்கம் சின்னதாக குளியலறை.

இதற்கு முன்னால் அந்த ஹாஸ்டல் அறையில் செல்வியோடு அவள் தோழி மாலதியும் தங்கியிருந்தாள். இருவரும் ஒரே வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். மாலதி, வள்ளியூர். செல்விக்கு, ராதாபுரம் பக்கத்தில் கனியானேரி.  ஐந்து வருஷங்கள் அவர்கள் சேர்ந்து வசித்த அறையைவிட்டு இரண்டு மாதங்கள் முன்னால், மாலதி, திருமணம் நிச்சயமாகி பிரிந்துச் சென்றாள். கடைசி தினம், செல்வியின் கையைப் பிடித்துக்கொண்டு விடைபெறுகையில் மாலதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது. போன மாதம் வள்ளியூரில், மாலதியின் திருமண வரவேற்பில் தன் அம்மாவோடு செல்வி கலந்து கொண்டாள். வரவேற்பு மேடையிலும் கையை பிடித்துக் கொண்டாலும், அங்கே மாலதி கண்ணீரெல்லாம் விடவில்லை.

பூனைக்கு அந்த அறையில் ஒன்றும் சுவாரஸ்யமாக படவில்லை போல. அசமந்தமாக நடந்தது. பின்னர், சுவர் மூலையில் போய் முன்னங்கால்களை நீட்டி உடலை வளைத்து நெட்டி முறித்து, கொட்டாவி விட்டு சமையல் மேடைக்குக் கீழே சுருண்டு கொண்டது.

செல்வி, எலக்ட்ரிக் அடுப்பில் பாத்திரத்தை வைத்து பால் காய்ச்சினாள். பால் வாசம் கண்டதும் பூனை பாய்ந்து வந்து அவளருகே நின்றது. “கொஞ்சம் பொறு” என்று மேஜை விசிறிக்குப் பக்கத்தில் ஸ்டூலில் பாத்திரத்தை வைத்து பாலை ஆறவிட்டாள். ஆறிய பாலை இன்னொரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் வைக்கவும், பூனை அதில் தலையை நுழைத்து சப்புக் கொட்டி குடித்தது. “நல்ல பசி இருக்கு.என்னடே?”

தொடர்ந்து, பூனைக்குப் பெயர் வைக்கலாம் என யோசித்தபோது அது ஆணா பெண்ணா எனும் குழப்பம் வந்தது. ஊரில் அவர்கள் வீட்டில் இரண்டு பூனைகள் இருந்தன. மண் நிறத்திலான முதல் பூனை, அவள் பத்தாம் வகுப்பு படித்தபோது அவர்கள் வீட்டுக்குத் தானாய் வந்தது. அப்பூனையை மடியில் படுக்க வைத்து அதன் வயிறு மேட்டையும் மென்மையான ரோம வரிசையையும் விரல்களால் தடவுவாள். பூனை கூசி நெளியும்போது சிரிப்பு மூளும்.  ஆனால், சில நாட்களிலேயே  வீட்டு கொல்லைப் புறத்தில் அது இறந்து கிடந்தது. பரண் மேல் எலிக்கு வைத்த மருந்தை சாப்பிட்டிருக்கலாம் என்றார் அப்பா. இல்லை, பக்கத்து வீட்டுக்காரிதான் பொறாமையில் கொன்றுவிட்டாள் என்றாள், அம்மா. எப்படியோ பெயர் வைக்கும் எண்ணம் வருவதற்கு முன்பாகவே அதைப் புதைத்து கறிவேப்பிலைச் செடியை நட்டு வைத்தார்கள். 

சிமெண்ட் நிறத்திலான இரண்டாவது பூனையை, அரசு பொறியியல் கல்லூரியில் அவள் கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தபோது, அப்பா குட்டியாக பிடித்துக் கொண்டு வந்தார். அவரே பிச்சுமணி என்று பெயரும் வைத்தார். அன்று டிவியில் வடிவேலு கோட்டு சூட்டுடன் அக்ரகாரத்தில் நடந்து செல்லும் காட்சி ஓடியது. வடிவேலுவை யாரோ “பிச்சுமணி” என்று அழைத்தார்கள். அப்பா தொடையில் தட்டி சிரித்தவாறு “பிச்சுமணி. டேய் பிச்சுமணி” என்று சத்தமாக குரல் கொடுத்தார். “அதுவும் திரும்பிப் பார்க்குது. அதுக்க பேரு பிச்சுமணியேதான்”

“நீ போட்ட சத்தங் கேட்டு அடுப்பங்கரையில இருந்து அம்மக்கூட தான் திரும்பி பார்த்தா. அம்மயையும் இனி பிச்சுமணினே கூப்பிடுவியோ”

“சும்மா கெட கழுத” என்று செல்வியை அதட்டினார் அப்பா.

செல்வி பிச்சுமணி மீதும் பிரியமாயிருந்தாள். ஆரம்பத்தில் அவளை நகத்தால் கீறி காயப்படுத்தினாலும் பின்னர் பிச்சுமணியும் அவளோடு இணக்கமாகிவிட்டது. வீட்டுக்குள் எதிர்பாராத இடங்களில் எல்லாம் பிச்சுமணி, தட்டுப்படும். தாழ்வாரத்தில் நின்றுக் கொண்டு எட்டிப் பார்க்கும். ஓட்டுக் கூரையின் ஒற்றை கண்ணாடித் தடுப்பில் வரும் வெளிச்சத்துக்கு உடலை காட்டி படுத்துக் கிடக்கும். தண்ணீர் பேரலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும். இறுதியில் ஒரு நாள் கட்டிலுக்கு க்கீழே பார்த்தபோது அதன் வயிறு வீங்கியிருப்பது தெரிந்தது. அது பெண் என்றே தெரியாமல் வீட்டில் எல்லோரும் பிச்சுமணி, அவன், இவன் என்று பேசி பழகிவிட்டிருந்தார்கள்.

நடுவே ஆறு மாதம் ஓடியதில், செல்வி கல்லூரி படிப்பை முடித்துவிட்டிருந்தாள். நான்கு லட்சம் ரூபாய் கடனோடு அவள் அப்பா திடீரென்று ஒரு நாள் அவர்கள் பெட்டிக் கடையிலேயே நெஞ்சை பிடித்து விழுந்து இறந்து போனார். கடனை அடைக்க, செல்வி வேலை தேடி சென்னைக்கு, வர வேண்டியதானது. பிச்சுமணி குட்டிகள் ஈன்று, அவை திசைக்கொன்றாய் காணாமல் போயின. அவள் சென்னைக்கு வந்த பிறகு, பிச்சுமணியும் காணாமல் போய்விட்டதாக அம்மா சொன்னாள்.

முதல் தடவை, செல்வியை சென்னையில் விட்டுச் செல்ல அவள் அம்மாவும் வந்திருந்தாள். எக்மோர் ரயில் நிலையத்தில் அம்மாவும் மகளும் கவலையோடு விடைபெற்றார்கள். “சீக்கிரம் ஊருக்கு வந்துடியேன்மா” என்றாள் செல்வி. “என் மவ தனியா எங்கயும் இருந்ததில்லையே. முருகா துணையிரு” என்று அவள் அம்மா விசும்பினாள். சுற்றி, எல்லா மனிதக் குரல்களையும் மூடும்படி பாங்கென்று பேரோசையோடு ரயில்கள் வருவதும் போவதுமாய் இருந்தன. நடைமேடைகளில் சூட்கேஸ் சக்கரங்கள் வேகமாய் இழுபட்டன. ரயில் நிலையம் முழுக்க ஒரே இரைச்சல். டிங் டிங் டிங்கென்று அறிவிப்பு குரல் தலைக்குள் கேட்டது.

அம்மாவை ரயிலேற்றிவிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே ஓர் இருக்கையில் கண்ணீரை அடக்கியபடி குனிந்து உட்கார்ந்திருந்தாள் செல்வி. இங்கும் அங்குமாய் நூறு கால்கள் நடந்தன. பேய் மாளிகை போன்ற அந்த பிரிட்டிஷ் கால சிவப்பு கட்டிடம் செல்விக்கு பிடிக்கவில்லை. டிங் டிங் டிங் எனும் சத்தம் பிடிக்கவில்லை. ஹாஸ்டலுக்குப் போக பிடிக்கவில்லை. அந்த நகரமே அவளுக்குப் பிடிக்கவில்லை. பின்னர், இந்த ஐந்து வருடங்களில் பலமுறை அவள் எக்மோர் ரயில் நிலையம் சென்றுவிட்டாள். இப்போது அந்த இருக்கையையே அவளால் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்ல முடியாது.

பாலைக் குடித்துவிட்டு பூனை விடைத்த காதுகளோடு யாரையோ தேடியது. செல்வி கட்டிலில் அமர்ந்து அதை மடியில் இருத்திக் கொண்டாள். இம்முறை பூனை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவள் மடியிலேயே படுத்து தூரத்தில் பார்த்து நாக்கை மட்டும் சுழற்றியது. முதுகு ரோமத்தை மெல்ல கைகளால் அலைந்தாள் செல்வி. பூனை கண் சொக்கி தூங்க, செல்வி சாய்ந்து உட்கார்ந்தாள். செல்பேசி ஒலித்தது.“செல்வி” என்று மறுமுனையில் அம்மா பேசினாள். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு “தெசயன்வெளையலிருந்து இன்னொருக்கா போன் வந்துச்சு” என்றாள்.

“ஊர் சைடே மாப்பிள்ளை பாக்காண்டாம்மா”

“ஒவ்வொன்னையும் தட்டிக் கழிச்சிட்டே இருக்கப்பிடாது மக்களே.” 

“இன்னும் லோன் வேற கொஞ்சம் இருக்கே”

“அது ஒன்னும் பிரச்சனையில்லை. வருச கடைசியில கல்யாணம் வச்சா போதும்னு சொல்லியாவ. கல்யாணச் செலவும் பாதி அவியளே ஏத்துக்கிடியாவளாம். பொண்ணு லட்சணமா அழகாட்டு இருக்கானு பையனும் சொன்னாராம்”

“சும்மா இரும்மா.நான்தான் கவுர்மெண்ட் எக்சாம் எழுதியேன்னு சொல்லியேம்லா”

அம்மாவின் முகம் இறுகுவதை செல்வியால் இங்கிருந்தே பார்க்க முடிந்தது. அம்மாவின் முகம், கோபத்தில் சலனமிழந்து ஒடுங்கும்போது, கன்னச் சதையின் இடுக்கம், குழி போல தெரியும். அப்பா இறந்த பிறகு, துயரம் வருத்தம் ஏமாற்றம் எல்லாவற்றையும் கோபமாகத்தான் அம்மாவுக்கு வெளிபடுத்த வருகிறது.

சோம்பல் முறிப்பது போல பூனை ஒரு நீண்ட மியாவ் சொல்ல, அம்மா “என்ன ஏதோ சத்தங் கேக்கு” என்றாள்.

“இங்க ஒரு பூனை கெடைச்சிச்சு”

“உனக்கு எதுக்கு இப்பம் பூனை? உன்னால அத பார்த்துக்கிட முடியாது. அந்தால கொண்டு போய் ரோட்டுல வுடு முதல்ல.”

“அது பாட்டுக்கு இருந்துட்டு போகுது. என்ன இப்போ?”

“சும்மா சொன்னதை செய். ஒரு சொல் சொன்னாய்க்கி, அத தட்டாம கேக்கியா? ஏதோ பைத்தியக்காரி பேசியான்னு உன் பாட்டுக்கு இருந்தாய்க்கி என்ன அர்த்தம்? அது செய்யேன்னு இது செய்யேன்னு என்னத்தையாவது சொல்லிட்டிருக்க”

அம்மாவின் ஓங்கிய குரலை கேட்டு செல்வி சமாதானமாக “சரி. சரி. நான் அதை வெளியே விடுகேன்” என்றாள்.  ஆனால், அந்த பூனையை அடுத்த ஐந்து நாட்களுக்கு தன் அறையில்தான் வைத்திருந்தாள். சுந்தரவள்ளி எனும் குல தெய்வத்தின் பெயரை சுருக்கி வள்ளி என்று அதை அழைத்தாள். பக்கத்தில் கட்டிட வேலை நடக்கும் இடத்திலிருந்து மணல் அள்ளி வந்து அறைமூலையில் ஓர் அட்டைப் பெட்டியில் வைக்க, வள்ளி உடனே அதை பயன்படுத்த கற்றுக் கொண்டாள்.  

செல்வி அடுத்த நாள், கருவாடு வாங்கி வந்து சில துண்டுகளை அவளுக்கு கொடுத்ததோடு, நல்லெண்ணய் ஊற தானும் கருவாட்டுக் குழம்பு வைத்து சாப்பிட்டாள். மாலதி ஹாஸ்டலை காலி செய்து போன பிறகு, ஒருத்திக்காக மட்டும் தனியே சிரத்தையெடுத்து சமைக்க மனம் வருவதில்லை. தற்போது  நீண்ட நாட்கள் கழித்து கருவாட்டைப் பக்குவமாய் சமைத்துச் சாப்பிட்டபோது ருசி நெடுநேரம் நாக்கில் தங்கியது.

தினமும் காலையில் அலுவலகம் போவதற்கு முன்னால் வள்ளிக்காக ஒரு கிண்ணத்தில் குழைத்த பால் சாத்தையும் இன்னொரு கிண்ணத்தில் தண்ணீரையும் மறக்காமல் வைத்துவிடுவாள். எனினும் மாலை அலுவலகம் முடிந்து பேருந்தில் வந்து இறங்கியதுமே செல்வியை பயம் பீடிக்கும். ஹாஸ்டலை நோக்கி  சாலையில் அவசர அவசரமாக நடப்பாள். வாசலிலிருந்து கிட்டத்தட்ட ஓடிப் போய் அறைக் கதவை திறந்து பார்க்கும்போது அந்த ஆரஞ்சு உடல் சட்டென்று பார்வையில் படாது. ஆனால் உடனேயே அலமாரியின் கீழடுக்கிலிருந்தோ கட்டிலில் போர்வையோடு சுருண்டபடியோ குட்டி உருவம் அசைவதை கண்டுபிடித்துவிடமுடியும். பிறகு அறை முழுக்கக் கிடக்கும் பூனை ரோமங்களை பெருக்கியள்ளுவாள்.

வள்ளியை இப்படி அறையில் தனியே பூட்டிவிட்டு போவது செல்விக்கே பிறகு பிடிக்கவில்லை. “ஜெயிலாட்டாம் இருக்கோ?” என்று அதன் காதை வருடியபடி கேட்டாள். மன வாட்டம் ஏற்பட்டது. தூங்க போகும்போது தீர்மானமாய் ஒரு முடிவு உதித்தது. மறுதினம் வேலைக்குப் போகையில், அவளைக் கண்டெடுத்த இடத்திலேயே விட்டுவிட்டாள். அந்த வெட்டவெளியை -காலை வெளிச்சத்தை- வித்தியாசமாய்ப் பார்த்துவிட்டு பின்னர் தலையை உலுக்கி அச்சமில்லாமல் வாலை நிமிர்த்தி வள்ளி நடை போட்டாள். “பத்திரமா இருடே. முருகன் துணை” என்றபடி புறப்பட்டாள், செல்வி.

அன்று வேலை முடிந்து ஹாஸ்டலுக்குத் திரும்பியபோது அறை பெரிதாக மாறியது போலிருந்தது. அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. “பூனையை விட்டாச்சு இல்லையா?” என்று கேட்டாள். முதல் நாளுக்குப் பிறகு, இது பற்றி அம்மா எதுவுமே கேட்கவில்லை என்பது நினைவு வந்தது. இன்றுதான் கேட்கிறாள். “விட்டாச்சும்மா”

வள்ளி செல்வியின் கண்ணிலேயே பின்னர் படவில்லை. வள்ளியைக் கண்டெடுத்த இடத்தை -அரசு பள்ளிக்கூடத்தை- கடக்கும்போது அவ்வப்போது அவள் பார்வை அப்பகுதியை சுற்றி அலையும். கொஞ்ச தூரத்தில் பெருமாள் கோயில். தண்ணீர் தெளித்த சாமந்திப் பூக்களோடும், உதிரி ரோஜாக்களோடும் பூக்கடை. சற்றுத் தள்ளி தள்ளுவண்டியில் பானி பூரியும் சென்னா மசாலாவும். மறுபுறம் பேன்சி ஸ்டோர். மனிதர்களுடன் சுதந்திரமாக நடக்கும் இரண்டு தெரு நாய்கள். ஒன்றைப் பார்த்து இன்னொன்று குரைக்கிற, ஒன்றை இன்னொன்று துரத்துகிற அந்நாய்களை பார்க்கும்போது செல்விக்கு துணுக்குறல் உண்டாகும். பெருமாள் கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டபடி நடந்து செல்வாள்.

அடுத்த நான்கு மாதங்களில் செல்வி, வழக்கம் போல, அலுவலகம் சென்றாள். வாரவாரம் பெருமாள் கோயிலுக்கு போனாள். அவ்வப்போது கந்த சஷ்டி வாசித்தாள். இரண்டு முறை அவள் அம்மா சென்னைக்கு வந்து, அதே ஹாஸ்டலில் தின வாடகைக்குத் தங்கியபோது இருவரும் மெரீனா கடற்கரைக்குப் போனார்கள். ஈர மண்ணில் நின்று செல்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். வடபழனி முருகனையும், மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும் தரிசித்தார்கள். அப்புறம் அவள் அரசு பரீட்சைக்குப் படித்தாள். புதிதாய் ஓர் உயரமான இளைஞன் தன்னைத் தெருவில் பின் தொடர்வதைப் புறக்கணித்தாள். அறையைக் கூட்டிச் சுத்தமாக வைத்தாள். இவற்றுக்கு நடுவே, ஒரு நாள் அவள் அதிகம் யோசித்து யோசித்து, அந்த அயர்ச்சியாலேயே மறதியில் விழுந்துவிட்ட முக்கியமான விஷயமும் சாதாரணமாய் நடந்தது. வங்கியில் அவள் கடன் தவணை முடிவுக்கு வந்தது.

செல்வி, ஹாஸ்டலில் அமர்ந்து, வங்கியிலிருந்து வந்த கடன் நிறைவுச் சான்றிதழை செல்பேசியில் உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஒவ்வொரு வரியாய் மறுபடி படித்தாள். சென்னையில் வேலை கிடைத்ததும், வங்கியில் தனிநபர் கடன் போட்டு ஊரில் அப்பா, அங்கும் இங்குமாய் வாங்கி வைத்திருந்த கடனை மொத்தமாய் அடைத்து முடித்தாள் செல்வி.

இப்போது, இந்த கணத்திலிருந்து, திரும்பி பார்க்கும்போது எல்லாம் இயல்பாக ஏதோவோர் ஒழுங்கில் நடந்தது போல இருக்கிறது. ஆனால் அப்பா இறந்தபோது பாதையே தெரியாமல் வெறும் இருட்டாகவே இருந்தது. அப்பா இளமையிலேயே வெவ்வேறு தொழில்களில் தோற்று தன் பங்கு குடும்பச் சொத்தைத் தொலைத்தவர். மேலும், கத்தை கத்தையாக லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பணத்தைக் கரைத்திருக்கிறார். இரவெல்லாம் பிளேடை வைத்து லாட்டரி சீட்டைச் சுரண்டும் அப்பாவை சிறுவயதில் செல்வி அச்சத்தோடும் வியப்போடும் பார்த்ததுண்டு. அரசாங்கம் லாட்டரியைத் தடை செய்தபோது இழந்த சொத்துக்களை மீட்பதற்கான அப்பாவின் கடைசி வழியும் மூடப்பட்டது. அப்புறம்தான் அவர் பேருந்து நிலையத்தினருகே பெட்டிக் கடை வைத்தார்.  

அப்பா இறந்த பிறகு அம்மா அவரைக் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தாள். ஆனால் செல்வி அப்படி நினைக்கவில்லை. அதிகபட்சமாக அவர் மேல் என்ன குற்றச்சாட்டு வைக்கலாம்? அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியவில்லை என்று சொல்லலாம். பிச்சுமணி ஒரு பெண் பூனை என்று தெரியாத மாதிரியே. அவ்வளவுதான். அப்பா மது அருந்த மாட்டார். சிகரெட் பிடிப்பார். ஐயப்பனுக்கு மாலை போடுவார். வடிவேலுவை அவருக்கு மிகப் பிடிக்கும். விதவிதமாக ஏமாந்து விதவிதமாகத் தோற்று அழுகிற வடிவேலுவை பார்த்து அவர் வெடித்து வெடித்து சிரிப்பார்.

அப்பா இறந்தபோது அவர் அண்ணன் மகன் தான் கொள்ளி வைத்தான். அவர்கள் கடன் பிரச்சனையை தீர்க்க முன்வந்து, உபகாரமாக கனியானேரி வீட்டை எழுதி வாங்கப் பார்த்ததும் அதே அண்ணன் மகன் தான். அம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யார் யாரோ எப்படி எப்படியோ பேசினார்கள். ஆனால் செல்வி உறுதியாகச் சொன்னாள். வீட்டை விற்கக் கூடாது. தன்னால் வேலைக்குச் செல்ல முடியும்; கடனை அடைக்க முடியும்.

“கஷ்டமான காரியம் மக்களே. நமக்கு முடியாது”

“நீ ஏன் முடியாதுங்க? என்னால முடியும் கேட்டியா?”

கல்லூரி வளாக நேர்முகத் தேர்விலேயே செல்விக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தது. ஆனால் வேறு மாநிலத்தில் பயிற்சி என்பதால் அம்மா தடுத்துவிட்டாள். இப்போதும் திருநெல்வேலி டவுனிலேயே வேலை தேடலாம் என்று அம்மா சொல்ல, செல்வி ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னைக்குப் போவதில் உறுதியாக இருந்தாள். அவளிடமும் அச்சம் இருந்தது. அதைவிட கூடுதலாக ஒரு வேகமும். பள்ளியிலும் கல்லூரியிலும் பரீட்சைக்குப் படிக்கும்போது அவளிடம் அந்த வேகம் வரும். பன்னிரெண்டாம் வகுப்பில் அப்படிதான் அவள் மாவட்ட அளவில் ரேங்க் எடுத்தாள்.புத்தகத்தை மடியில் வைத்து குனிந்த தலை நிமிராமலும் சுற்றி என்ன நடக்கிறது என்கிற போதமேயில்லாமலும் அவள் படித்துக் கொண்டேயிருப்பாள். அப்போது புத்தகத்தோடு அவள் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பது போல தோன்றும். அல்லது படபடவென்று அசையும் உதடுகளில் ஏதோ மந்திரம் உச்சரிப்பது போல.

அதே வேகத்தில் கல்லூரி தோழியான மாலதியிடம் பேசி, சொற்ப பணத்தோடு சென்னைக்கு வந்தாள். நவுக்ரி இணையதளத்தில் பதிவு செய்தாள். வேலைக்குக் காத்திருந்த நாட்களில் யாரோ தன்னை எந்நேரமும் கண்காணிப்பது போல அடிக்கடி கூசினாள். ஹாஸ்டலிலேயே எந்தப் பெண்ணை பார்த்தாலும் வெட்கம் வந்தது. அடிக்கடி அழுது கொண்டிருந்த அம்மா, அடிக்கடி கோப்பபடுகிறவளாக மாறுவதைக் கவனித்தாள். சாப்பிடவே பிடிக்கவில்லை. சீக்கிரமே ஒரு நாள் அந்த உணவு கவளம் தீர்ந்துவிடும் என்று அச்சம் வந்தது. கோயிலுக்குச் சென்று அழுதாள். வெவ்வேறு நேர்காணல்களில் தோற்றாள். கடைசியில் இந்த பன்னாட்டு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்ந்து தொடர்ந்து அங்கேயே பணி நிரந்தரமும் ஆனபோது செல்வி களைத்திருந்தாள்.தற்போது, ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன.

செல்வி செல்பேசியை முகத்தின் அருகே கொண்டு வந்து அந்த கடன் நிறைவு சான்றிதழைப் பார்த்தாள். அந்த பொடி எழுத்துக்களை திரும்பத் திரும்பப் படித்தாள். நான்கு லட்சம் ரூபாய் கடன் தீர்ந்தது. தனக்குள்ளேயே அவள் மீண்டும் சொல்லிக் கொண்டாள். கடன் தீர்ந்தது. கடன் தீர்ந்தது. எத்தனை தடவை அப்படிச் சொன்னாள் என்று தெரியவில்லை. அறுபது மாதங்கள் அசலும் வட்டியும் கட்டியதற்காக அறுபது தடவை சொன்னாளா அல்லது இருப்பதியேழு வருடங்கள் பூமியில் வாழ்ந்த காலத்துக்காய் இருபத்தியேழு தடவை சொன்னாளா தெரியவில்லை. அப்பா இறந்து ஆறு வருடங்களாகியிருந்தது. அதற்காக ஆறு தடவை மறுபடி சொல்லலாம்.  கண்ணீர் பெருகி அவள் கழுத்து வரையில் வரிவரியாக ஓடியது. கடன் தீர்ந்தது. கண்ணீரைத் துடைக்காமல் அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கடன் தீர்ந்தது. உப்பு பிசுபிசுப்பில் முகம் காய்ந்து வந்தது.

வாசல் பக்கம் அந்த அசைவை உணர்வதுவரை அவள் தன்னிலையில் இல்லை. கதவிடுக்கு வழியே பார்த்தபோது, முதலில் உடலும் வாலும் மட்டும் தெரிந்தன. வள்ளி என்று கண்டுபிடித்துவிட்டாள். இன்னும் வராந்தாவில் விளக்கு போடாததால் இருட்டில் அறைகுறையாக உடல் தெரிய, செல்வி உற்சாகமாக எழுந்துச் சென்றாள். கதவை முழுமையாகத் திறந்தபோதுதான், வள்ளி தன் வாயில் ஒரு பூனைக்குட்டியை கவ்வியிருப்பதை பார்க்க முடிந்தது. அறைக்குள் வந்து கதவுக்குப் பக்கமாக தன் குட்டியைக் கீழே விட்டுவிட்டு அமைதியாக நின்றாள் வள்ளி.

செல்வி குழப்பத்தோடு விழித்தாள். தரையில் விடப்பட்டதும் வெள்ளை நிறப் பூனைக்குட்டி தீனமாக முனங்கியது. சற்றைக்குள் அது வலியில் துடிப்பதை புரிந்துகொள்ள முடிந்தது. வலது முன்னங்காலில் அடிபட்டு தோல் பிய்ந்து காயமாகியிருந்தது. அசைக்கமுடியாதபடி, முட்டியில் நல்ல வீக்கமிருந்தது. ரத்தம் கட்டிய சிவப்புத் தடம்.  எழுந்து நிற்க முயன்று அது வலியில் மேலும் துடித்தது. வள்ளி செல்வியின் காலருகே தலையை தொங்கப்போட்டு நின்றாள். பிறகு அண்ணாந்து பார்த்தாள். பழுப்பு நிறக் கண்கள் இறைஞ்சுவது போல இருந்தன. செல்வி குனிந்து அவள் முதுகை தடவிக் கொடுக்க, அதை ஏற்றுக் கொள்வது போல வள்ளி சற்று உடலை குறுக்கிக் கொண்டாள். செல்வி, பூனைக்குட்டி பக்கம் திரும்பவும் சில நொடிகள் அமைதியாக நின்று பிறகு விடைபெறல் போல் தலையை ஆட்டிவிட்டு, வள்ளி வாசலைத் தாண்டி வெளியேறினாள். இருட்டில் நெருப்பு அசைவது மாதிரி ஆரஞ்சு கோடுகள் நெளிந்தன.

பூனைக்குட்டியை எடுத்து மடியில் வைத்தாள். குட்டி முகத்தில் கண்கள் எதையும் பார்க்காமல் தன்னுள் ஆழ்ந்திருந்தன. வலியில் இமைகள் மூடி மூடித் திறந்தன. சைதாபேட்டையில் ஒரு கால் நடை மருத்துவமனை இருப்பது செல்விக்கு ஞாபகம் வந்தது. அலுவலகம் போகும் வழியில் யதேச்சையாக சில தடவை பார்த்தது. நாளை அங்கு அழைத்துப் போகலாம். செல்வி பூனைக்குட்டியை சற்று மேலே தூக்கி அடிபட்ட முன்னங்காலை உயர்த்தி பார்த்தாள். அவள் விரல் பட்டதும், விக்கி விக்கி அழுவது போல மியாவ்,மியாவ் என்றது. உடனே அவள் கையை நகர்த்தி அதன் காதுப் பகுதியை வருடினாள். பூனைக்குட்டி மெல்ல அமைதியானது. கைக்குள் துணி போல சுருண்டது.

செல்வி, தரையில் போர்வையை மடித்துப் போட்டு பூனைக்குட்டியைக் கிடத்தினாள். கையில் ஒட்டிய பூனை ரோமங்களை உதறிவிட்டு, குளியலறைக்குச் சென்று முகத்தை கழுவி வந்தாள். பூனைக்குட்டியிடம்  “இருடே வாறேன்” என்று சொல்லி, கதவை பூட்டிவிட்டு பக்கத்தில் அண்ணாச்சிக் கடைக்கு போய் கால் லிட்டர் பாலும் மஞ்சள் பாக்கெட்டும் வாங்கி வந்தாள். அவள் திரும்பி வரும்போது வராந்தாவில் விளக்கு போட்டு ஹாஸ்டல் வெளிச்சமாகியிருந்தது. “என்னமா பால் வாங்கினு வர்றியா?” என்று வார்டன் முந்தானையை விசிறி போல சுழற்றியபடி கேட்டார். “குச்சியில கோடிழுத்த கணக்கா தேஞ்சிட்டே வர்ற. ஹார்லிக்ஸ் கலக்கி குடி”. அவசரத்தில் தலையாட்டி ஆமோதித்தாள் செல்வி. “ஏதும் பூனை உள்ளார பூந்திடுச்சானு தெர்ல. எங்கேயோ சத்தம் கேக்குது” தனக்குள் பேசியவாறு, செல்வியின் அறைக்கு எதிர்திசையில் வார்டன் சென்றார்.

அறைக்குள் வந்து செல்வி ஒரு பழைய ஷிம்மீஸை கிழித்து பூனைக்குட்டியின் காலில் மஞ்சள் வைத்து கட்டு போட்டாள். பிறகு பாலை காய்த்து ஆற வைத்து ஸ்பூனால் ஊட்டி விட்டாள். பசியில் ஆர்வமாக அது பாலை குடித்தது. ஸ்பூனையே கடிக்க முயற்சி செய்தது. நடுநடுவே வலியில் தனக்குள் ஒடுங்கி மெல்லமாக முணுமுணுத்தது.

அலமாரியிலிருந்து திருச்செந்தூர் முருகன் படத்தையும் காலண்டர் காகிதத்தில் சுற்றிய திருநீறையும் செல்வி எடுத்து வந்தாள். யந்திரக் கட்டங்களின் பின்னணியில் மஞ்சள் தகடு போன்ற கெட்டித் தாளில் முருகன் வேலுடன் நிற்க அவர் காலைத் தொட்டு தன் முகத்திலும் பூனைக்குட்டியின் முகத்திலும் ஒற்றினாள். திருநீறு எடுத்து இரண்டு நெற்றிகளிலும் தீற்றினாள். தரையில் இன்னொரு விரிப்பை போட்டு,  பூனைக்குட்டிக்கு பக்கத்திலேயே செல்வி படுத்துக் கொண்டாள். அவ்வப்போது குழந்தையின் கேவல் போல் பூனைக் குட்டியின் முனங்கல் கேட்டது. உடனே திடுக்கிட்டு எழுந்து அந்தக் குட்டி உடலைத் தடவிக் கொடுத்தாள். இரவு கனவிலும் அந்தக் கேவல் கேட்டபோது அவள் பயந்து எழுந்து “முருகா” என்று சொல்லிக் கொண்டாள்.

காலையில் பூனைக்குட்டி சற்று தேறியிருந்தது. சீராக நடக்க முடியவில்லை என்றாலும், முன்னைக் காட்டிலும் கதியாக எழுந்து நிற்க முடிந்தது. நொண்டி நொண்டி சில எட்டுகள்கூட எடுத்து வைத்தது. செல்வி அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு பொறுமையாகக் குளித்துத் தயாரானாள். பாத்திரத்தில் மீதியிருந்த பாலை மறுபடி காய்ச்சி ஆற வைத்து பூனைக்குட்டிக்குப் புகட்டிவிட்டு, தனக்கு இட்லி அவித்துச் சாப்பிட்டாள். பின்னர், முன்மதியம் முதுகுப் பையில் குட்டியைப் பதுக்கிப் புறப்பட்டாள். 

பேருந்து கூட்டமில்லாமல் வருகிற வரைக்கும் நிறுத்தத்தில் காத்திருந்தாள். குறைந்த ஆட்களோடு வந்த பேருந்தில் ஏறி ஜன்னல் பக்கம் உட்கார்ந்தும் பையிலிருந்து பூனைக்குட்டியை வெளியே எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். அடுத்த நிறுத்தத்தில் ஏறிய ஒரு அம்மாவும் மகளும் அவளுக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார்கள். அம்மாவின் காலில் உட்கார்ந்திருந்த சிறுமி, பூனைக்குட்டியை, முதலில் வினோதமாகவும் பிறகு புன்னகையோடும் பார்த்தாள். “டிக்கெட். டிக்கெட்” என்று பேருந்து கூரையை தட்டியபடி நடந்துச் சென்ற கண்டக்டர், பூனைக்குட்டியை பார்த்து என்னவோ சொல்ல முன்வந்து பிறகு கட்டுப் போட்ட காலை கவனித்து விசிலை ஊதியபடி முன்னால் சென்றார்.  

மருத்துவமனைக்கு கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தது. மோசமான விபத்து நடப்பதற்கான எல்லா சாத்தியங்களோடும் சாலையில் கார்களும் பைக்குகளும் வேகமாகவும் கோணலாகவும் முன்னேறிக் கொண்டிருந்தன. ஒரு டெலிவரி நபர் மனிதர்களைச் சுமக்கும் அளவிலான பையை முதுகில் மாட்டி வண்டி ஓட்டினார். பூனைக்குட்டி எல்லா சத்தங்களையும் கேட்டு அஞ்சியது. உயரமான கட்டிடங்களைக் கண்டும் அஞ்சியது. செல்வி அதை ஆற்றுப்படுத்துவது போல பேச்சு கொடுத்தபடி நடந்தாள். “டிபன் ரெடி” “தக்காளி சாதம் ரெடி” என்று சிலேட் மாட்டி நடைபாதைகளில் தள்ளுவண்டிகள் நின்றிருந்தன.  இந்தச் சந்தடிக்கு வெளியே பெரிய பெரிய மரங்களோடு ஒரு நீளமான வளாகம். காவல் ஆணையர் அலுவலகம். மீன் வளத்துறை அலுவலகம். கால் நடை மருத்துவமனை. மூன்றும் அங்கே இருந்தன. அரசு வாகனங்கள் நின்றிருந்த ஆல மர நிழலைத் தாண்டி நடந்து மருத்துவமனைக்குள் நுழைந்தாள் செல்வி.

டோக்கன் போட்டு நாற்காலியில் காத்திருக்கச் சொன்னார்கள். பிரசவத்திற்காக கொண்டு வரப்பட்ட ஒரு பசு மாடு  பெருத்து தொங்கும் வயிறோடு வெளியே ஓரமாய் நின்றிருந்தது. ஜன்னல் வழியே வெயிலும் நிழலும் அந்த பெரிய உடலில் அசைவதைப் பார்க்கும்போது செல்விக்கு பூரிப்பாய் இருந்தது. அவள் பக்கத்து நாற்காலியில், ஒரு முதிய மனிதர் தடிமனான நாயுடன் காத்துக் கொண்டிருந்தார். சிவப்பு கழுத்துப் பட்டையுடன் அந்த கருப்பு நாய் நிமிர்ந்து உட்கார்ந்தபோது செல்வியின் இடுப்புயரம் வந்தது. தாடை வலுவை வைத்தே அதன் பற்களின் கூர்மையை கற்பனை செய்ய முடிந்தது. பூனைக்குட்டியைத் துப்பட்டா முனையால் மூடிக் கொண்டாள் செல்வி. எதிரே உட்கார்ந்திருந்த நபர் ஒரு கிளிக் கூண்டோடு காத்திருந்தார். கூண்டுக்குள்ளே ஊஞ்சலில் அசைவில்லாமல் நின்றிருந்த கிளிக்கு என்ன வியாதி இருக்க முடியும் என்று செல்வி யோசித்தாள். திடீரென்று அது தொண்டை அடைத்த கீச்சுக் குரலில் கோபமாக “டீனு டீனு” என்றது. செல்வி அதிர்ந்து மீண்டும் சம நிலைக்கு வந்தபோது புன்னகை எழுந்தது. கிளியின் உரிமையாளர் முறைக்கவும் கிளி அமைதியானது. பிறகு அது பேசவில்லை. இன்னொரு நாய் மற்றும் எடை மிகுந்த ஒரு பூனையோடு, காத்திருப்பு பகுதி ஏறத்தாழ நிறைந்திருந்தது. அந்த பெரிய கருப்பு பூனையை அணைத்துப் பிடித்திருந்த, சிவப்பு டீஷர்ட் உடுத்திய பெண் அசிரத்தையாக செல்பேசியில் விரலை ஓட்டிக் கொண்டிருந்தாள். அங்கேயிருந்த ஒவ்வொருவரும் தன் வளர்ப்பு மிருகத்தின் சாயலை கொஞ்சம் வாங்கியிருப்பது போல செல்விக்கு பட்டது. கடித்த காத்திருக்கும் முதியவர். டீனு மேல் கோபம் கொண்ட ஆண். குண்டு பூனையின் சோம்பல் மற்றும் சோர்வோடு ஒரு குண்டு பெண்.

செல்வியின் டோக்கன் எண் வந்தது. உள்ளே மருத்துவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் கண்கள் சலனமில்லாமல் நிலைத்திருந்தன. மனிதர்களுக்கான மருத்துவர்களைப் போலவே எதன் மேலும் பெரிதாக அக்கறையில்லாதவராக தோற்றம் தந்தார்.

“வைட் கிட்டனா? எங்க எடுத்த?” என்று பூனைக்குட்டியை கையில் வாங்கினார். செல்வி சொல்வதற்குள்ளாக அவரே காயத்தைக் கண்டுபிடித்து,  காலைச் சுற்றியிருந்த துணியை கத்திரிக்கோலால் வெட்டி எடுத்தார். பிறகு, அது கத்துவதை பொருட்படுத்தாமல் காலை மடக்கி பார்த்தார். “நாய் ஏதாவது மிதிச்சு கடிச்சும் இருக்கலாம்” என்றார் “இன்ஜெக்ஷன் போட்டா போதும். இன்னைக்கே நடக்க ஆரம்பிச்சிடும். மருந்து வச்சு சும்மா டிரெஸ்ஸிங்க் போடுறேன்”. புதிய ஊசியொன்றை கவர் பிரித்து குப்பியை உடைத்து அதில் மருந்தேற்றினார். “குட்டியா இருக்கிறதால ரொம்ப சின்ன காயம்கூட பெரிய ஆபத்தா மாறும். மத்தபடி வளர்ந்திடுச்சின்னா ஒன்னும் சிக்கல் இல்ல “ வாலை தூக்கி ஊசிப் போட்டுவிட்டு அதன் உடலை மருத்துவர் தடவிக் கொடுத்தார். பின்னர், குட்டியின் வாயை பிளந்து ஏதோவோர் மாத்திரையை போட்டுவிட்டு வாயை சில நொடிகள் அழுத்தி மூடினார். “பூனைக்கு ரப்பர் உடம்பு தெரியுமில்லையா? மாடியில இருந்து தூக்கி போட்டாக்கூட அதுக்கு ஒன்னும் ஆகாது. பூனை யாரையும் எதிர்பார்க்காத ஒரு மிருகம்”.

செல்வி பூனையை கையில் ஏந்திக் கொண்டாள். வெளியே வந்த பிறகே மருத்துவரிடம் தான் ஒரு வார்த்தையும் பேசவில்லை என்பது உரைத்தது. ஆனால் பூனைக்குட்டி வலுபெற்றிருந்தது. முதல் தடவையாக தலையை தூக்கி அவளை நேரே பார்த்தது. அடிபடாத இன்னொரு காலை அசைத்து அவளை தொட முயற்சி செய்தது. “பிள்ளைக்கு சுரத்து வந்துட்டே” என்றாள் செல்வி.

காத்திருப்பு பகுதியைக் கடக்கும்போது கிளி மீண்டும் பேசுமா என்று பார்த்துக் கொண்டே போனாள். ஆனால் அது பேசவே இல்லை. அந்த சிவப்பு டீஷர்ட் பெண் இன்னமும் செல்பேசியைவிட்டு கண்ணெடுக்கவில்லை. வாசல் படிகளைக் கடந்து சிறிது தூரம் போனதும், பசு மாடு வலி மிகுந்த நீண்ட அழைப்பாகக் குரல் கொடுப்பது கேட்டது. கன்றுக்குட்டியை நினைத்து கொண்டதும் துள்ளலான ஒரு மகிழ்ச்சி செல்வியைப் பற்றிக் கொண்டது. பேருந்தில் ஏறி சிக்னலிலும் நெரிசலும் பயணம் செய்து, பேருந்தை விட்டிறங்கி, திரும்ப ஹாஸ்டலுக்குப் போகும் வழி நெடுக செல்வி மகிழ்ச்சியோடிருந்தாள். பூனைக்குட்டியோடு நடந்து செல்பவளை சிலர் வித்தியாசமாக பார்த்தார்கள். ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

அவளுக்குச் சம்பந்தமில்லாமல் ஏதேதோ ஞாபகங்கள் வந்தன. அம்மாவை நினைத்தாள். வங்கிக் கடன் முடிந்துவிட்ட செய்தியை அவளிடம் சொல்ல வேண்டும். அரசு பரீட்சைக்கான தேதி பற்றி நினைத்தாள். மீண்டும் அம்மாவை நினைத்தாள். பிறகு, முருகனை நினைத்தாள். திருச்செந்தூர் முருகன். வடபழனி முருகன். குன்றத்தூர் முருகன். போன வருடம் மாலதியை குன்றத்தூர் முருகன் கோயிலில் ஒரு குடும்பம் பெண் பார்க்க வந்தது. செல்வியும் துணைக்குச் சென்றாள். மாப்பிள்ளை மற்றும் குடும்பம் வருகிற நேரத்தில், மாலதியின் அக்கா, செல்வியை குன்றின் இன்னொரு புறத்தில் காத்திருக்கச் சொல்லிவிட்டார். செல்வி குன்றின் உச்சியில் தனியே நின்று மரங்களையும் படிகளையும் தூரத்து கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஹாஸ்டலுக்கு வந்த பிறகே அந்த சம்பந்தம் தட்டிப் போனது தெரிய வந்தது. செல்வியை கட்டிக் கொண்டு மாலதி அழுதாள். “பரவாயில்லை விடு”. மாலதி கேவியபடி செல்வியை பார்த்து, “உனக்கென்ன புள்ள? நீ அழகா இருக்க. காலங்கடத்துனாலும் உன்னை கட்டுவாங்க” என்றாள். அப்போது செல்வி ஒன்றும் சொல்லவில்லை. வேறு சம்பந்தம் உறுதியாகி, கல்யாண வரவேற்பில் சிரித்த முகத்துடன் மாலதி மிக அழகாக இருந்தாள். செல்வி அதைக் குறிப்பிட்டபோது மாலதி வெட்கப்பட்டு கையைத் தட்டிவிட்டாள்.

செல்வி மேலும் நடந்தாள். ஹாஸ்டல் அறைக்குச் செல்லும் வழி நீண்டு கொண்டே போவதாகப் பட்டது. ஒருமுறை இதே பாதையில் அந்த உயரமான இளைஞன் தன்னிடம் பேச முயன்றதை செல்வி எண்ணி பார்த்தாள். ரொம்ப ரொம்ப தயங்கி “ஹலோ உங்க பேர் என்ன?” என்று கேட்டான். உடனே அவள் கோபமாக “இப்போ போறீங்களா? இல்லை ஒரேடியா கத்தவா?” என்றாள். அவன் பயந்து பின் வாங்கிவிட்டான். விலகி ஓட்டமாக சென்று மறைந்தான். செல்விக்கு சிரிப்பாக வந்தது. பூனைக் குட்டியோடு நீள நீளமாய் காலடி வைத்தாள். சற்று கோணலாகக்கூட நடந்தாள். அவளுக்குத் தோன்றியது – கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு ஒரே கத்து கத்தினால் போதும். எல்லாம் ஓடிவிடும். அவள் எண்ணத்தை ஆமோதிப்பது போல பூனைக்குட்டி மியாவ் என்றது.

ஹாஸ்டல் வரவேற்பு பகுதியில் யாரும் இல்லை. முதுகுப் பையில் ஒளித்து வைக்காமல், பூனைக் குட்டியை கையில் பிடித்தே தன்னுடைய அறைக்குச் சென்றாள் செல்வி. சாதம் வடித்து பாலில் குழைத்து பூனைக்குட்டிக்குப் புகட்டினாள். செல்வியின் மடியிலேயே உறங்கிய பூனைக்குட்டி கண் விழித்த பிறகு, கால்கள் ஊன்றி எழுந்து நின்றதோடு தாங்கித் தாங்கி நடக்கவும் ஆரம்பித்துவிட்டது. சற்று நேரம் அடிப்பட்ட காலை பாதி மடக்கி நொண்டி நடந்தது. பின்னர் அதில் எடை அழுத்தாமல் நடந்தது. நடை பழகும் குழந்தையை நோக்கி கை நீட்டுவது மாதிரியே செல்வி கை நீட்ட அது அவளை நோக்கி வந்தது. உடனே கைத் தட்டி பாராட்டினாள்.

மடியில் இருத்திக் கொண்டு பரீட்சைப் புத்தகத்தை விரித்து படிக்க ஆரம்பித்தாள் செல்வி. பூனைக் குட்டி சின்ன அசைவு கூட இல்லாமல் மௌனமாக இருந்தது. அவ்வப்போது காற்றில் ஏதோ பூச்சியை கண்டது போல கண்களை இருபுறமும் அலையவிட்டு மூக்கை உறிந்து தலையை அசைத்தது. சிலபோது அண்ணாந்து செல்வியின் முகத்தைப் பார்த்தது. அதன் தலையில் கைவைத்து செல்வி, “அக்கா கவுர்மெண்ட் ஆபீசராகப் போறேன்” என்றாள். அது மலங்க மலங்க விழித்தது. “ஆபீசர்னாய்க்கி பெரிய உத்தியோகம். ரொம்ப உசரம்” என்றாள். இப்போது அதற்குப் புரிவது போல தெரிந்தது.

முன்னிரவில் கதவின் மறுபக்கம் மீண்டும் அந்த அசைவை செல்வி உணர்ந்தாள். அவள் எதிர்பார்த்திருந்ததுதான். மாலை அவளே வராந்தாவில் போய் சுற்றி நோட்டம்விட்டு திரும்பியிருந்தாள். வார்டன் அவளைக் கண்டு “திரும்ப ஏதோ சத்தம் கேக்குது.” என்றபடி மறுபடியும் எதிர்திசையிலேயே போனார். மற்றபடி வராந்தாவில் யாரையும் காணவில்லை. இப்போது முன்னிரவு. வாசலில் நிழல் போல சத்தமில்லாத அசைவு. செல்வி எட்டிப் பார்த்தபோது வள்ளி வாசலில் நின்றிந்தாள்.

செல்வி கதவைத் திறந்து வள்ளியை அழைத்து வந்தாள். “உனக்க அம்மய பாரு” செல்வி சொல்லி முடிப்பதற்குள் பூனைக்குட்டி விந்தி விந்தி நடந்து வள்ளிக்குப் பக்கத்தில் வந்து அவள் வயிறில் மோதியது. வள்ளி தன் காலால் அதை லேசாக அடித்தாள். பிறகு தலையைத் தூக்கி செல்வியைப் பார்த்தாள். செல்வி புன்னகைக்க, வாலை அசைத்துவிட்டு வள்ளி திரும்பி நடந்தாள். குட்டியும் அதே போல செல்வியை தலையை உயர்த்திப் பார்க்க, அவள் குனிந்து அதை வருடிக் கொடுத்தாள். உடனே குட்டி அவள் கையை நக்கிவிட்டு, அம்மாவின் பின்னால் நடை போட்டது.

“அப்பப்ப வந்து போயிட்டு இருங்கடே. குட்டிக்கு சண்முகா பேர் வைப்போம் வள்ளி. திருச்செந்தூர் முருகனுக்க பேரு” என்று அவர்களை வழியனுப்பினாள், திருவருட்செல்வி.

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

3 Comments

  1. சரளமான நடை. எளிதாக வாசிக்க முடிந்தது. செல்வி வள்ளியும் யதார்த்தம். நகரத்திற்கு சிறு ஊரிலிருந்து வரும் அழகான பெண்ணுக்கும் அவள் கடந்த காலமும், எதிர்காலமும் தான் முக்கியம். ஆனால் செல்வி மற்ற பெண்களிடம் இருந்து வேறுபட்டிருப்பது அவள் புகழ் படைத்த ஆணை தன்வசமாக்க முயற்சிக்காமல் இருப்பது. நகரத்தில் அது பெரும்பாலும் நடக்கிறது. பூனைக்கு உதவும் போது அவள் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

  2. பேரன்பும் பெருங்கருணையும் வழிந்தோடும் சிறுகதை. நம்பிக்கையும் நிறைவும் அளிக்கும் திருவருட்செல்வி போன்ற ஒரு சிறுகதை வாசிக்கக் கிடைப்பது அரிதாகி விட்டது. ஆரம்பத்தில் மருந்து வைத்து கொல்லப்படும் ஒரு பூனை, பின்னர் ஒரு பெண் பூனை பிச்சுமணி என்ற ஆண் பெயருடன் திரிந்து சில நாட்களில் அதன் வாழ்வும் சிதைந்துவிட, கடைசியில் வள்ளி பூனை தன் குட்டி சண்முகனை காப்பாற்றி விடுகிறது. கதைக்குள் கதையாக பூனைகளின் வீழ்ச்சியும் எழுச்சியும், செல்வியின் வாழ்க்கை சித்திரமும் இணைந்து மிகச் சிறப்பாக வந்துள்ளது.

    சென்னையின் நுண் சித்தரிப்புகள் அருமை. நகரத்தின் நெரிசல், எழும்பூர் ரயில் நிலையம், தக்காளி சாதம் ரெடி, டிபன் ரெடி ஹோட்டல்கள், அந்த பஸ் கண்டக்டர், கடற்கரை, பெருமாள் கோவில், கபாலீஸ்வரர் கோவில், வட பழனி, குன்றத்தூர் கோவில். “மோசமான விபத்து நடப்பதற்கான எல்லா சாத்தியங்களோடும் சாலையில் கார்களும் பைக்குகளும் வேகமாகவும் கோணலாகவும் முன்னேறிக் கொண்டிருந்தன ” – நகர வாழ்க்கையை விவரிக்கும் அற்புத வரி.

    குண்டு பெண்மணியின் குண்டு பூனை, கோபக்கார மனிதரின் கோபமான கிளி என அந்த மிருக வைத்தியசாலை பகுதிகள் சுவாரசியமாகவும் புன்னகை செய்யவும் வைக்கின்றன.

    இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் மூலம் இப்போது நிலா சென்றடைந்து விட்டோம். அடுத்து சூரியனை நோக்கி ஆதித்யா L1 திட்டத்துக்கு தமிழ் பெண் விஞ்ஞானி ‘நிகர் ஷாஜி’ நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நம் தேசத்தின் தேவை செல்வி போன்ற பெண்களின் பங்களிப்பு தான். இந்த சிறுகதை பல்வேறு இந்திய மொழிகளில் நமது மாணவர்களை, இளைஞர்களை சென்று சேர வேண்டும்.

    சில பாடல்களை சிலர் குரலில் தான் கேட்க வேண்டும். “என்ன கவி பாடினாலும், உந்தன் மனம் இரங்கவில்லை” பாடலை மதுரை சோமு பாடித்தான் கேட்க வேண்டும். பாடலின் இறுதியில், “அலட்சியமோ உனக்கு, முருகா, உன்னை நான் விடுவதில்லை” என்று பாடும்போது எழுகின்ற அதே பரவசமும், நம்பிக்கையும் திருவருட்செல்வி சிறுகதையின் முடிவில் வருகின்ற திருச்செந்தூர் முருகனுடன் நிறைவடைகிறது.

    விஷால் ராஜாவுக்கு வாழ்த்துகள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.