அன்றெல்லாம் எனக்கு ஏராளமான கப்பல்கள் சொந்தமாக இருந்தன. அறு வயதில் எங்களது பத்மநாபபுரம் வீட்டில் நாங்கள் வசிக்கையில் எனக்கு ஒரு கரும்பச்சை நிற சூட்கேஸ் இருந்தது. அதில் கடைசியாக நான் எண்ணிய போது சிறிதும் பெரிதுமாக ஆயிரத்தி முன்னூற்றிப் பதினான்கு கப்பல்கள் இருந்தன. சில வண்ணக் கப்பல்கள், சில கெட்டி அட்டைத்தாளில் செய்யப்பட்ட உறுதியான கப்பல்கள், பெரும்பகுதி அப்பா ப்ரூஃப் பார்த்து முடித்த பேப்பரில் செய்தவை.
முந்தைய வருடம் நாங்கள் அந்த வீட்டில் குடியேறிய போது பெரும் மழை ஒன்று பெய்யத் தொடங்கியிருந்தது. ஒன்றரை மாதம் வரை விடாமல் பெய்த அந்த மழையில் ஊரைச் சுற்றிய குளங்கள் ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மழை தொடங்கிய சில நாட்களிலேயே நானும் அப்பாவும் குடைபிடித்துச் சென்று ஊருக்கு வெளியே நிரம்பி ததும்பிக்கொண்டிருந்த பெருமாள் குளத்தை பார்த்து வந்தோம். குளம் என அழைக்கப்பட்டாலும் அது ஒரு ஏரிதான். அதன் மதகுகளில் இருந்து தண்ணீர் மாபெரும் பழுப்பு நிறத் துதிக்கைகள் போல அப்பால் தொலைவில் வேளிமலை வரை விரிந்திருந்த வாழைத்தோப்புகளை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. அமைதியாக தெரிந்த அந்த குளத்தின் மண் அதிரும் அந்த உறுமல் எனக்கு அச்சமூட்டியது. அப்பா என்னை அணைத்துப் பிடித்தபடி, தோளில் ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
கொட்டும் மழையிலேயே அப்பாவும் அம்மாவும் அலுவலகம் சென்று வந்தனர். அப்போதெல்லாம் என்னையும் தங்கை பாப்புவையும் எதிரே நிஷா மாமி வீட்டில் விட்டு சென்றார்கள். நாள் முழுவதும் சாரல்மழை ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் பெய்தது. நடுநடுவே சட்டென்று நினைத்துக் கொண்டது போல கடுமையடைந்தது. நிஷா மாமியின் சிறிய வீட்டின், கால புழக்கத்தினால் மழுமழுப்பான, மரவாசல் நிலைப்படியில் அமர்ந்து நானும் பாப்புவும் ஒவ்வொரு நாளும் அம்மா வருவது வரை மழையை பார்த்திருந்தோம். எதிரே பாசியடர்ந்த கல் மதிலையொட்டி வளர்ந்திருந்த யானைக்காதுச் செடிகள் மழையில் ஆடும் நடனத்தை பார்த்தபடி, அவை தங்கள் இலைகளில் சிறுகச் சிறுக மழைநீரை சேர்த்து பின் எடைதாளாமல் வளைந்து கீழே உள்ள இலைகளுக்கு கையளிப்பதை கண்டு மகிழ்ந்து எங்களுக்குள் சிரித்தபடி. அப்பால் இடதுபுறம் எங்கள் வீட்டு உரிமையாளரின் புதிய வீட்டின் கொல்லைப்புறத்தில் மாபெரும் வைக்கோற்போர்கள் பூதங்கள் போல வரிசையாக தலைமட்டும் நனைந்தபடி மழையில் ஒடுங்கி நின்றன. நீர் அவற்றின் கீழுடல் வளைவில் படாமல் சுற்றி ஒரு திரை போல ஒழுகியது. சிறிய ஓட்டுக்கூரை கூட்டுக்குள் அடைக்கப்பட்ட கோழிகள் நாள் முழுவதும் சன்னமாக ஒலியெழுப்பியபடி இருந்தன.
தர்மபுரியின் வரண்ட நிலத்தில் இருந்து அங்கே நாங்கள் குடிவந்திருந்தோம். முற்றிலும் புதிய நிலம், புதிய மொழி ஆகையால் நாங்கள் இருவரும் பேசுவதே அரிதாகத்தான். பாப்புவுக்கு அப்போது தான் மூன்று வயது கடந்திருந்தது. பலர் எங்களுக்கு பேச்சு வராது என்றே நினைத்தனர். நான் நிஷா மாமியிடம் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக பேச துவங்கியிருந்தேன். அவரது சற்றே வெளிறிய முகம் எப்போதும் ஒரு கனிந்த புன்னகையை உள்ளடக்கியிருந்தது.
என்னை பேச வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அவர் செய்தார்.
“பிள்ளைக்கு விசக்குதா?” என்பார்.
நான் ’இல்லை’ என்று தலையாட்டுவேன்.
“சோறு வேணுமான்னு?” என்பார் கையால் சைகை செய்தபடி கொஞ்சம் சத்தமாக.
நான் புரிந்துகொண்டு ’ஆமாம்’ என்று தலையாட்டுவேன். அதைக் கண்டு அவரும், அவர் கணவரும் சேர்ந்து சிரிப்பார்கள். அர்த்தம் புரியாமல் நானும் அவர்களுடன் சிரிப்பேன்.
“சோறு வேணும்னா வா தொறந்து கேக்கணும் என்னா?” என்பார் புன்னகையுடன். நான் சற்று வெட்கத்துடன் அவரை பார்த்து மறுபுன்னகை புரிவேன்.
“மீனும் கூட்டி சோறு தரட்டா? ம்ம்ம்? வா பிள்ளே”
நாங்கள் மெல்ல எழுந்து அவர் அருகில் செல்ல இருவரையும் சேர்த்து அணைத்துக் கொள்வார். எனக்கு ஒரு அலுமினியத் தட்டில் சோற்றை மீன்குழம்பில் பிசைந்து வைத்து, அருகே மீனை முள் எடுத்து தனியே வைத்து விடுவார். தனக்கும் பாப்புவுக்கும் சேர்த்து மீன்சட்டியிலேயே பிசைந்து கொண்டு, அவளுக்கு ஊட்டிவிட்டபடியே அவரும் உண்பார். அப்போதெல்லாம் எனக்கு பாப்புவின் மீது கடும் பொறாமை எழும்.
அம்மா நிஷா மாமியிடம் அதுவும் இதுவும் கேட்டு தொல்லை செய்யக்கூடாது என்று முன்னரே சொல்லியிருந்தார், “அவங்கள்லாம் ஏழைங்கதான செல்லம், அவங்கள நச்சு பண்ணகூடாது சரியா?”
நான் மறுநாள் அவரிடம் கேட்டேன், “நிஷா மாமீ?”. ”ஓ” என்றார் அவர் அடுக்களையில் சமைத்துக்கொண்டே.
“நீங்கள்லாம் ஏழைங்க தான?”
”ஆமாப்போ” என்றார் இயல்பாக.
“அப்றம் எப்படி ஜாலியா இருக்கீங்க?”
“தெரியலயே பிள்ளே” என்றார் அடுப்பை பார்த்தபடியே புன்னகையுடன்.
நிஷா மாமி எப்போதும் எதாவது ஒன்றிற்கு உணவளித்தபடியே இருந்தார். கோழிகளுக்கு, ஆடுகளுக்கு, காக்கைகளுக்கு, அணில்களுக்கு. குட்டன் என்று அவர் வளர்த்த ஒரு பெரிய செவலை நாய் இருந்தது, நிஷா மாமியை கண்டால் மட்டும் அதன் வால் இடம் வலமாக இரண்டு இஞ்ச் ஆடும். அதுவும் உணவு வைக்கும் போது மட்டும், அதுவும் இரண்டே முறை. மற்றபடி அதன் முகத்தில், உடலில் எந்த எளிய மானுட உணர்ச்சிகளுக்கும் இடம் இருக்காது. எங்களை குட்டன் கண்டுகொள்ளவே இல்லை என்றாலும் நானும் பாப்புவும் அது நெருங்கி வந்த போதெல்லாம் அஞ்சி விலகினோம். எங்களுக்காக அதை அவ்வபோது தென்னையில் சங்கலியால் கட்டிப்போட்டதால் குட்டனுக்கு எங்கள் மேல் சற்று கோபமும்கூட இருந்திருக்கலாம். ஆனால் அதை அறிந்துகொள்ள வழியேயில்லை.
மழைக்காலம் மேலும் மேலும் வலுத்தது. பகலில் சற்று சாந்தமாக பெய்த மழை இரவில் பெரிய முழக்கமாக எங்களை சூழ்ந்து கொண்டது. எங்கள் வீடு ஓடு வேய்ந்தது. மேலே பரணும் பத்தாயப்புரையும் கொண்ட பெரிய இரண்டடுக்கு வீடு. பண்ணையாரான எங்கள் வீட்டுரிமையாளரின் பாரம்பரிய வீடு அது. நல்ல வீடாக இருந்தாலும் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் அங்கங்கே நன்றாகவே ஒழுகியது. அப்போது எங்களுக்கு கட்டில்கள் இல்லாததால் நாங்கள் நால்வரும் சேர்ந்து தரையில் தான் படுத்து உறங்கினோம். நான் அப்பாவின் ஒருபக்கம் படுத்துக் கொள்ள, பாப்பு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில் சுருண்டு கொள்வாள். இரவில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் நாங்கள் சீக்கிரமாகவே மண்ணெண்ணை விளக்கொளியில் உணவுண்டுவிட்டு உறங்கச் சென்றுவிடுவோம். இரவில் அப்பாவை அணைத்தபடி மழையின் சத்தத்தை கேட்டு கிடக்கும்போது அவர் ஏதாவது கதைகள் சொல்ல தொடங்குவார். பேய்க்கதைகள் கூடாது என்பது அம்மாவின் ஆணை. எனவே ஏதாவது நகைச்சுவை கதை அல்லது பீமனின் சாகசக் கதைகள். சில சமயம் அவர் எழுதும் கதைகளை கூட சொல்லி எங்களை மெல்ல உறங்க வைப்பார். நள்ளிரவில் சுவரோரங்களில் இருந்து பாம்பைப் போல கரிய நீர் நெளிந்து வந்து எங்கள் படுக்கையை நனைக்கும். நான் எழுந்து ”அப்பா தண்ணி வந்திருச்சு” என கீச்சிடுவேன்.
அம்மா அரைவிழிப்பில் பாதி இமைகள் மூடியிருக்க பாப்புவை தோளில் சாய்த்து உறக்கியபடி ஓரமாக நிற்க, அப்பா வழிந்துவந்த நீரை துனியால் சுத்தமாக ஒற்றிப்பிழிந்து எடுத்துவிட்டு பின் ஓட்டுக்கூரை ஒழுகும் இடத்தில் தண்ணீர் அண்டாவை நகர்த்தி கொண்டு வந்து வைப்பார்.
ஒருநாள் இரவு கடும் மழைக்கு பிறகு வீட்டின் குடிநீர்க் கிணற்றில் பூனை ஒன்று விழுந்து இறந்து கிடந்தது. உடல் உப்பி மிதந்த அந்த வெள்ளைப்பூனையை கொட்டும் மழைக்கு நடுவிலேயே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாதாளக் கரண்டி என்று அவர்கள் அழைத்த, கொக்கிகளால் ஆன அந்த இரும்பு கம்பித் தொகையை உள்ளே விட்டு துழாவி வெளியே எடுத்து போட்டனர். ரப்பர் போல விரிவடைந்திருந்த அதன் தோல் பல இடங்களில் முடியின்றி வெளிறி கீறல்களுடன் காணப்பட்டது. ”ராத்திரி எல்லாம் கிடந்து நீந்தியிருக்கு” என்றார் ஒருவர். விறைத்த முகத்தில் கண்கள் முழுவதுமாக வெளியே பிதுங்கி நிற்க, பற்களை சீறிக் காட்டியபடி, அளவு மீறி பஞ்சு அடைக்கப்பட்ட பொம்மை போல உறைந்திருந்தது அது.
அதை வெற்றிகரமாக வெளியே எடுத்ததும் கூடியிருந்த ஆண்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கூவிச் சிரித்தனர். பெண்கள் மட்டும் முகத்தை கைகளால் பொத்திக்கொண்டனர். ஒருவர் கோணிச் சாக்கின்மேல் அதை எடுத்துப்போட, வீட்டிற்கு பின்னாலிருந்த தென்னைத் தோப்பில் அவர்கள் அதை புதைக்க எடுத்து சென்றனர்.
அன்றிலிருந்து எங்களுக்கு குடிக்க தண்ணீர் வீட்டுரிமையாளரின் கிணற்றில் இருந்துதான் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதுவும் வெகு நாட்களுக்கு இல்லை. சீக்கிரமே மழை பெய்து கிணறுகள் ஊற்றெடுத்து பொங்கியெழத் தொடங்கின. முந்தைய தினம் அம்மா கைகளாலேயே கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து அண்டாக்களில் நிறைத்து வைத்தார். மறுநாள் ஊரெங்கும் வெள்ளம் புகுந்தது. கிணறுகளில் இருந்து நீர் நிரம்பி வெளியே வழிந்ததை கண்டபோது மண்ணுக்கு அடியிலிருந்துதான் வெள்ளம் வருகிறது என நான் எண்ணினேன். பெருமாள் குளத்தின் ஒரு கரை உடைப்பு எடுத்தது என்றார்கள் சிலர்.
நிஷா மாமியின் வீடு பள்ளத்தில் இருந்ததால் முந்தைய நாள் இரவே அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். எங்கள் வீடு சற்று மேட்டில் இருந்தாலும் வீட்டுக்குள் ஏறிவர இடப்பட்ட நான்கு உயரமான கற்படிகளையும் மூழ்கடித்து வாசல் வரை அலையடித்தது சேற்றுநீர். வெள்ளம் கலங்கி சென்றதால் அதன் அடியாழம் தெரியாமல் இருப்பது ஒரு பயத்தை அளித்தது. வீட்டைசுற்றி ஆறு போல இடமிருந்து வலமாக சுழன்று சென்ற தண்ணீரை முதல்நாள் காலையில் நான் கண்டபோது “அப்பா வீடு மிதக்குது பா” என்று கத்தினேன். அப்பா என்னை அப்பால் தெரிந்த மதிலையும் மரங்களையும் காட்டி சமாதானம் செய்தார். ஆனாலும் இவை எல்லாம் சேர்ந்து ஒத்துமொத்தமாக மிதக்க வாய்ப்பிருக்கிறதே.
அம்மாவும் அப்பாவும் அந்த ஒரு வாரமாக அலுவலகம் செல்லவில்லை. வெள்ளம் வந்தது கடைசி இரண்டு நாட்கள்தான் என்றாலும் என் நினைவில் அது பல நாட்கள் என்பதாக பதிந்திருக்கிறது. நான் வீட்டின் வாசலிலேயே அமர்ந்து வீட்டை சுற்றி ஒழுகிச்செல்லும் நீரை பார்த்துக்கொண்டிருந்தேன். பாப்புவுக்கு கடும் காய்ச்சல் என்பதால் அவளை மருந்து கொடுத்து படுக்க வைத்திருந்தனர்.
விளையாட்டு துணையில்லாமல் இருந்த எனக்கு அன்றுதான் அப்பா கப்பல் செய்ய சொல்லிக் கொடுத்தார். அவரது பழைய கைப்பிரதி ஒன்றை எடுத்து வந்து, அதில் ஒரு பக்கத்தை கிழித்து முதலில் இரண்டாக மடித்தார், பின் அதன் இருபுறத்தையும் உள்நோக்கி மடித்து அதை ஒரு முக்கோண முனையாக்கினார். மேலும் நான்கைந்து மடிப்புகள். அதன்பின் அதில் இருமுனைகளைப் விரல்களால் பற்றி விரித்தபோது அவர் கைக்குள்ளிருந்து ஒரு கப்பல் மெல்ல தோன்றியது. நான் ஆச்சரியத்தில் எழுந்து விட்டேன். அவர் அதை எடுத்து அப்போது வீட்டின் மூன்றாவது படியை முழ்கடித்துச் சென்றுகொண்டிருந்த நீரில் மெதுவாக இறக்கி விட்டார். சட்டென்று உயிர் கொண்டது போல அசைவுற்று நீரின் பாதையில் அப்படியே மிதந்து சென்று வீட்டின் மறுபுறம் மறைந்தது. நான் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன். வெறும் தட்டையான பேப்பர் ஒன்று கப்பலாகி மிதந்து செல்வதன் ஆச்சரியம் என்னை அன்று முழுவதும் விடவில்லை.
ஒவ்வொரு கப்பலும் ஒரு தனிப்பாதையை தேர்ந்தெடுக்கிறது, ஓரங்களில் சென்று யோசிக்கிறது, சுழிகளில் சிக்கி சற்று சுழல்கிறது, ஆனால் திட்டமிட்டது போல வீட்டின் வலது மூலைக்கு அப்பால் நீர் அவற்றை கொண்டு சேர்த்தது. ஒவ்வொரு கப்பலாக சென்று மறையும்தோறும் நான் பார்க்க இயலாத அந்த வலது மூலையின் மர்மம் என்னை பரவசப்படுத்தியது. அன்று மாலைக்குள் அந்த மொத்த கத்தைப் பேப்பரையும் ஒவ்வொன்றாக கப்பல் செய்து மிதக்க விட்டு தீர்த்தேன்.
அன்று மாலை குட்டன் முழுவதுமாக மழையில் நனைந்து ஒட்டிய உடலுடன் வீட்டு மதிலின் வாசல் அருகே தோன்றியது. நிஷா மாமி ஊருக்கு செல்லும் முன் அதை வெகுநேரம் தேடியும் கிடைக்காமல் விட்டு சென்றிருந்தார். செம்பருத்திச் செடிகளுக்கு செய்து வைக்கப்பட்ட பாத்தியில் ஏறி நின்றபடி குட்டன் என்னை தொலைவில் இருந்தே கண்டுகொண்டது. ஒழுகிச்செல்லும் சேற்று நீரில் இறங்கி ‘சலக் சலக்’ என்ற சத்தத்துடன் நீந்தி வந்து, நான் அமர்ந்திருந்த படிகளில் ஏறிக்கொண்டது. எனக்கு உள்ளூர பயமிருந்தாலும் அசையாமல் கால்கள் குறுக்கி, கைகளை கால்களைச் சுற்றி கட்டியபடி அமர்ந்திருந்தேன்.
குட்டன் என்னருகே குந்தி அமர்ந்து படபடவென உடலை உலுக்கிக்கொண்டது. அதன் உதறலில் எழுந்த துளிகள் சாரல் போல வீச்சத்துடன் என்மேல் தெறித்தன. பின் அதன் அடிவயிற்றிலிருந்து எழுந்தது ஓர் உறுமல். ஓடும் நீரையே பார்த்தபடி ஒரு மனக்குறையாக அது எழுப்பிய உறுமல் மெல்ல கேவல் ஒலியாக மாறியது. வாயை திறக்காமலேயே வெளிப்பட்டது அந்த ஒலி. “ம்ம்ம்ம்மூ” என்று அது என் காதுகளுக்கு மட்டும் கேட்பது போல ஒலித்தது. குட்டன் அழுகிறானா!? நான் மெல்ல கைநீட்டி அவன் நெற்றியை தொட்டு தடவினேன். வெடுக்கிட்டு திரும்பிய அவன் என் கையை முகர்ந்தான். அவன் உடல் அப்போது லேசாக நடுங்கி கொண்டிருந்தது. ஈரமூக்கின் சுவாசம் என் கைகளில் பட்டு கூசியது. சட்டென்று ஒரு நெகிழ்ச்சிக் கணத்தில் குட்டன் என் கையை நக்கிவிட்டு எழுந்தான். ஒரு முறை என்னை பார்த்து வாலசைத்துவிட்டு மீண்டும் அதேபோல நீரில் இறங்கி சென்றான்.
மறுநாளே மாயத்திரை ஒன்று விலக்கப்பட்டது போல வெள்ளம் வடிந்து சென்றிருந்தது. சேற்றுத் தரையில் நீரின் பாதை சருமம் போல் மெல்லிய மண்ணாலான படலமாக தெரிந்தது. கிழவியின் சருமம் போல அதில் ரேகைகள் ஓடின. ஆங்காங்கே தென்னை மட்டைகள், பிளாஸ்டிக் வாளிகள், கிழிசல் துனிகள் என மழைகொண்டு விட்டு சென்றிருந்த பொருட்கள். முதல் மழைக்காலம் அவ்வாறு முடிவுக்கு வந்தது.
888
அந்த வருட பள்ளிக்காலம் பெருமழை முடிந்து ஆகஸ்டில் தான் துவங்கியது. அப்பா என்னை முதல் நாள் காலையே தலைமை ஆசிரியரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். எனக்கு இந்த பகுதியின் மொழி தெரியாது எனவே விஷயங்களை புரிந்து கொள்ள சற்று சிரமப்படுவேன் என அவரிடம் விரிவாக விளக்கினார். அப்பா பேசிய போதெல்லாம் தலைமை ஆசிரியர் என்மேலிருந்து கண்களை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தத் தருணம் முதலாகத்தான் நான் அப்பள்ளியில் ஒரு மந்தபுத்திக் குழந்தையாக பார்க்கப்பட்டேன் என நினைக்கிறேன்.
அதிகபட்சம் நூறு குழந்தைகளே படித்த அந்த ஆரம்ப பள்ளியின் பெயர் மட்டும் ‘லலித விலாசினி வித்யா பீடம் பிரைமரி மட்ரிக்குலேஷன் ஸ்கூல்’ என பதினாறடி நீளமான வெள்ளைப் பலகையில் கம்பீரமாக எழுதி இடப்பட்டிருக்கும். அந்த பள்ளியில் படித்த குழந்தைகள் அனைவரும் எதை கற்றாலும் கற்கவில்லை என்றாலும் அந்த பெயரை மட்டும் மனப்பாடமாக ஒப்பித்தன. நானும் எங்கள் வீட்டிற்கு வரும் அப்பாவின் நன்பர்கள் ஆபத்தறியாமல் “தம்பி எங்க படிக்கிற?” என்று எதேச்சையாக கேட்கும் கேள்விக்கு கண்களை மூடி ஒரே மூச்சில் ”லலிதவிலாசினிவித்யா பீடம்பிரைமரிமட்ரிக்குலேஷன்ஸ்கூஊல்” என்று சொல்லி மிரளச் செய்வது வழக்கம். சொல்லிமுடித்த பின் பெருமையாக என் தங்கையை திரும்பி பார்ப்பேன். அதுவரை பள்ளிக்கு சென்றிராத அவள் கண்களில் ’பெரிய இவன்’ என்ற பாவனை இருக்கும் அல்லது ஒரு பெருமிதம். அது எங்களுக்குள் அப்போது இருக்கும் உறவு நிலையை பொருத்தது.
ஆனால் பள்ளியில் நான் பெரும்பாலும் வாயை திறந்ததே இல்லை. அதற்கான அவசியம் வரவில்லை என்றுதான் நான் நினைத்தேன். சுற்றிலும் குழந்தைகள் அமர்ந்து சதா எதையோ டீச்சருடன் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தன. டீச்சர் என்னிடம் தனியாக வந்து ஏதாவது கேட்க முனைந்தபோதெல்லாம் அவர்கள் பேசுவது புரியாததால் நான் தலையை சரித்து வாயை கோட்டி, நிஷா மாமி எழுப்பியதை போல “ஓ” என்று சப்தம் எழுப்பினேன். அதை கேட்டு குழந்தைகள் அனைவரும் சிரிக்க நானும் அவர்களுடன் சிரித்தேன். இது டீச்சர்களை வெகுவாக எரிச்சல் படுத்தியது. ஆனால் சீக்கிரமே ஒரு நிகழ்வு நடந்தது. அதன் பின் அப்பள்ளியின் ஒரே ஒரு டீச்சரை தவிர பிற எல்லோருக்கும் நான் செல்லப் பிள்ளையானேன், அந்த ஒரு டீச்சரின் பரம எதிரியாகவும்.
பிரபு என்று என் வகுப்பில் படித்த ஒரு சிறுவன் தான் அந்த பள்ளியின் நட்சத்திரமாக இருந்தான். நல்ல வெள்ளைத்தோலும் உயரமும் வளப்பமான உடலுமாக இருந்த அவன்தான் வகுப்பில் வாய்பாடம், எழுத்து, உடற்பயிற்சி என அனைத்திலும் முன்நின்றான். பள்ளி துவங்கிய சில நாட்களில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் அனேகமாக எல்லாவற்றிலும் அவனே வென்றான். விளையாட்டின் விதிகள் தெரியாத நான் எல்லாவற்றிலும் பின்தங்கினேன். ஆனால் கடைசியாக நடந்த ஓட்டப்போட்டியின் விதிகள் மட்டும் எனக்கு தெளிவாக புரிந்தன. முடிந்த வரை வேகமாக ஓடிச்சென்று தூரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை தொட்டுவிட்டு பின் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர வேண்டும். இதைவிட எளிமையாக ஒரு விளையாட்டு இருக்கமுடியுமா.
தொடக்கக் கோட்டில் நாங்கள் வரிசையாக ஸ்ரீதேவி டீச்சரின் விசிலுக்காக காத்திருந்தோம். விசில் அடிப்பதற்கு சற்று முன்னரே பிரபு ஓட தொடங்க, விசில் ஒலித்த மறுகணம் நான் என் உயிரைக்கொடுத்து ஓடி அவனை துரத்தினேன். ஓட ஓட கயிற்றின் தொலைவு மேலும் அதிகரித்தது போல தோன்றியது. மூச்சில் நெஞ்சு விம்ம, ஒவ்வொரு முறை காற்றை உள்ளிழுத்த போதும் வயிற்றில் ஏதோ கத்தியால் குத்தியது போல கூர்மையான வலி தோன்றியது. ஒருவழியாக கயிற்றை தொட்டுவிட்டு திரும்பிய போது பிரபு இருபது அடிகள் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். கால்கள் கடுத்து துவள்வதையும் கருதாமல் இறுதி மூச்செடுத்து வேகம் கூட்டினேன். கடைசியாக பிரபுவுக்கு சில அடிகள் பிந்தி இறுதிக் கோட்டுக்கு இரண்டாவதாக வந்து சேர்ந்தேன். ஸ்ரீதேவி டீச்சர் பிரபுவை முதலாவதாக அறிவித்தது பள்ளி முழுவதும் பெரும் சர்ச்சையானது. பிரபு ஸ்ரீதேவி டீச்சரின் மகன் என்பது தான் முக்கிய காரணம்.
“ஆ கள்ளி எந்து பணியா காணிச்சே, நோக்கியே.”
“எல்லாத்திலும் அவள்ட குட்டி மாத்ரம் விஜயிச்சா மதி. துஷ்டத்தி” என்று பொருமினர் மற்ற டீச்சர்கள்.
“ஆ செக்கன் அஜிதன் எந்து உஷாராயிட்டா ஓடியே, நல்ல்ல்ல செக்கன்” என்றார் மற்றொரு டீச்சர்.
“அவன் காணுந்ந போல ஒந்நும் அல்ல கேட்டோ, அவண்ட அம்மையினோடக்கே நந்நாயிட்டு வர்த்தமானம் பறஞ்ஞோண்டு போகுந்நது ஞான் கண்டிட்டுண்டு” என்று என் மூளை வளர்ச்சிக்கு சான்றளித்தனர் மேலும் சிலர்.
அவ்வாறு பள்ளியின் ஒத்துமொத்த ஆசிரியர்களின் நன்மதிப்பையும் ஒரே நாளில் நான் ஈட்டிக்கொண்டேன். ஆனால் ஸ்ரீதேவி டீச்சர் என்மேல் கடும் சினம் கொண்டிருந்தார். தினமும் என்னை அடிப்பதும் கிள்ளுவதுமாக துன்புறுத்த தொடங்கினார். மதியச் சோறை முழுவதுமாக உண்ணவில்லை, வாய்பாடம் சொல்லவில்லை என வெவ்வேறு காரணங்களுக்காக வகுப்புக்கு வெளியே வெயிலில் நிற்கச்செய்தார்.
பின்னர் ஒருமுறை அம்மாவை தக்கலை செல்லும் வழியில் பேருந்தில் சந்தித்தபோது அவர் அருகே அமர்ந்து, எப்படி நான் ஒரு மந்தபுத்திக் குழந்தையாக இருக்கிறேன் எனவும், என்னால் எப்படி பிற குழந்தைகள் பாதிக்கப் படக்கூடும் எனவும் கூறி, என்னை வேறு சிறப்பு பள்ளியில் சேர்க்குமாறு ’மென்மையாக’ அறிவுறுத்தினார். அம்மாவுக்கு அப்போது இருபத்தியெட்டு வயதுதான். அன்று அந்த ஆசிரியர் சொன்னவற்றை கேட்டு வீட்டுக்கு வந்து வெகு நேரம் அழுது புரண்ட என் அம்மாவை கண்டு அப்பாவின் நெற்றியும் காதுகளும் எல்லாம் ரத்தச் சிவப்பானது. என்னை கையில் எடுத்துகொண்டு பள்ளிக்கு சென்று மொத்த பள்ளிக்கூடமும் அதிர “இனி என் மகனை பற்றி இல்லாததை சொல்பவளோ, மேலே கை வைப்பவளோ எவளையாவது பார்த்தால் அங்கயே வெட்டிட்டு ஜெயிலுக்கு போவேன்” என்று அறிவித்தார். ஸ்ரீதேவி டீச்சரைப் பார்த்து சில அடிகள் கை ஓங்கியபடி அப்பா நெருங்க அவர் ‘அம்மே…” என்று அலறியபடி துள்ளிக்குதித்து ஓடியது பள்ளியில் பின்னாளில் வேடிக்கைப் பேச்சானது.
அதன்பின் எனக்கு பள்ளியில் பெரிதாக பிரச்சனைகள் இருக்கவில்லை. எங்கள் மொத்த குடும்பமும் பைத்தியம்தான் என அவர்கள் நினைத்திருக்க கூடும். ஆனாலும் எனக்கு பள்ளி மிகவும் சோர்வூட்டுவதாக இருந்தது. ஒரே போன்ற பாடங்கள், ஒரே இருக்கை அமைப்பு, ஒரே டீச்சர்கள், ஒரே வாழ்த்துப்பாடல் என. பள்ளி மைதானத்துக்குள் ஒரு மாபெரும் இலவ மரம் நின்றது. அதன் உச்சிக்கிளைகளில் காய்ந்து வெடித்து அது உதிர்க்கும் இலவம்பஞ்சை பார்த்து அமர்ந்தபடி இடைவேளைகளை கழிப்பேன். மரத்தில் இருந்து பிரியும் பஞ்சு காற்றில் ஏறி சுழன்று சுழன்று மிக உயரத்துக்கு சென்றது. அந்த மரமே மேல் நோக்கி தன்னை உதிர்த்து கொண்டிருப்பது போல தோன்றும். மிதக்கும் இலவம்பஞ்சை கண்களால் பின் தொடர நினைத்தபோதெல்லாம் அது சென்று சூரியனில் கலந்துவிடுவதாக பிரம்மை ஏற்படும். பின் வெகு நேரம் கண்களை சுருக்கி சூரிய ஒளியை பார்த்தபடி அமர்ந்திருப்பேன். இடைவேளை முடிந்து பள்ளியறை சென்ற பின்னும் கண்கள் கூச, வண்ணக்கோடுகள், புள்ளிகள் கண்களுக்குள் தோன்றி மிதந்து மறைய வகுப்புடன் தொடர்பில்லாதது போல வாயை பிளந்து ஓரமாக அமர்ந்திருப்பேன். லலித விலாசினியில் கழித்த என் பள்ளி வாழ்க்கையில் எனக்கு நினைவிருப்பதெல்லாம் இவைதான்.
888
வீட்டில் நான் முற்றிலும் வேறொருவனாக இருந்தேன். எங்கள் வீட்டிலும் அதை சுற்றிய தோட்டத்திலும் எண்ணற்ற ஆச்சரியங்களும், வேடிக்கைகளும் இருந்தன. சில மாதங்களுக்குள் நான் அதன் மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிந்திருந்தேன். எங்கள் வளாகத்துக்குள்ளேயே வீட்டிற்கு வலது புறமாக சற்று தள்ளியிருந்த ஒரு சிறிய கோவிலும், வீட்டிற்குள் மாடிப்படி வழியாக ஏறிச்சென்றடையும் பரணும் மட்டுமே அதற்கு விதிவிலக்கு.
வீட்டின் தெற்கு பாகத்தில் அமைந்திருந்த அந்த கோவில் ஓட்டுக்கூரையும், பெரிய கற்களால் தரையிடப்பட்ட ஒரு மேடையும், அதை தாண்டி வருடம் முழுக்க மரக்கதவால் மூடியிடப்பட்ட ஒரு சிற்றறையும் கொண்டது. அது ஒரு யக்ஷி கோவில் என்று அப்பா சொன்னார். எங்கள் வீட்டு உரிமையாளரின் மூதாதையான பாட்டி யாரோ அங்கு ஆவியாக இருக்கிறார் என்றார் நிஷா மாமி. கார்த்திகை நாளில் மட்டும் அந்த கோவிலை திறந்து ஏதோ பூஜைகள் செய்தார்கள், அப்போது நான் தொலைவிலிருந்து உள்ளே எட்டிப்பார்த்தபோது சுவற்றில் வரையப்பட்டிருந்த மங்கலான ஓவியமும் அதில் விழித்த இரு அகண்ட கண்களும் மட்டும் நினைவிருக்கிறது, பூஜை செய்தவர்கள் என்னை கூப்பிட்டு கையளித்த வித்தியாசமான மணத்துடன் கூடிய இனிய தெரளி அப்பமும்.
மற்ற நேரங்களில் நான் அங்கு செல்வதை தவிர்த்தேன். தோட்டத்தின் பிற இடங்களை போல அல்லாமல் அங்கு அம்மா கூட்டி பெருக்குவது இல்லை. தரையெல்லாம் சருகுகள் உதிர்ந்து புதர்கள் மண்டி கிடக்கும். பாப்புவுடன் கண்ணாமூச்சி விளையாடும் போது சில சமயம் அங்கு சென்று ஒளிந்துக்கொள்வேன். கொஞ்ச நேரத்திலேயே காரணமில்லாத அச்சம் தோன்றும். என் காலுக்கு கீழே இருக்கும் மண் உள்வாங்கி சரிவது போலவோ, அல்லது செடிகள் எல்லாம் தங்கள் அசைவுகளால் ஏதோ தெரிவிக்க முற்படுவது போலவோ. அப்போதே எழுந்து பின்னால் திரும்பி பார்க்காமல் ஓடிவந்து விடுவேன். ஒருமுறை அப்படி ஒளிந்து கொண்டபோது தான் கோவிலின் ஒரு மூலையில் நான் மழைக்காலத்தில் விட்ட கப்பல்கள் எல்லாம் பேப்பர் குவியலாக மாறி செல்லறித்து கிடந்ததை கண்டேன்.
பரணுக்கு நான் செல்லாததற்கு காரணம் வேறு. பார்பதற்கு பயங்கரமாக, முகத்தில் காயங்களுடன் ஒரு கருப்புப் பூனை எங்கள் வீட்டில் நடமாடியது. அது அடிக்கடி மரத்தாலான மாடிப்படியேறி மூடிய மரப்பலகையின் சிறுதுளை வழியாக பரணுக்குள்ளே சென்று வந்தது. வேறு சில பூனைகளும் அதனுள் செல்வதை கண்டேன். பகலிலும், சில நேரங்களில் இரவிலும் கூட அவை ஓடுவதும் சண்டையிட்டு கொள்ளுவதுமாக சத்தம் எழுந்தபடியிருக்கும். சமயங்களில் குழந்தை ஒன்றின் அழுகைக்குரல் போலவே அவை இரவெல்லாம் ஒலியெழுப்பும். பரணில் ஏகப்பட்ட எலிகள் இருப்பதால் தான் அவை அங்கு செல்கின்றன என்றார் அப்பா. சில சமயம் நூற்றுகணக்கில் கூட பூனைகள் அங்கு கூடிவிடும் என்றார் கண்களை விரித்து. இருளில் மின்னும் நூற்றுக்கணக்காக கண்களால் ஆன அந்த பரணை நினைத்துப் பார்த்து இரவுகளில் நான் போர்வையை தலையோடு இறுகப் போர்த்திக்கொள்வேன்.’ப’ வடிவில் அமைந்திருந்த எங்கள் வீட்டின் இணைப்பு பகுதியாக இருந்த, மாடிப்படி அமைந்த அந்த அறையை பகல் நேரத்தில் கூட நான் ஓடியே கடந்து சென்றேன்.
வீட்டை சுற்றிய பெரிய மதிலை கடந்து வீட்டு வளாகத்துக்கு உள்ளே புகும் ஒருவர் முதலில் காண்பது பெரிய தோட்டத்தை. தோட்டத்தில் இருந்து இடதுபுறமாக ஒரு சிறிய ஒற்றையடிப் பாதை பிரிந்து தெற்குமூலை யக்ஷி கோவிலுக்கு செல்லும். நேராக நடந்து தோட்டத்தை கடந்தால் சற்று தூரத்தில் எங்கள் வீட்டு முற்றத்தை அடைந்து விடலாம். முற்றத்திலிருந்து இடது பக்கம் எங்கள் வீட்டின் உயரமான படிகளும் நுழைவாயிலும். நேரெதிரே கொல்லைப்புறத்துக்கு செல்லும் நுழைவாயில் கொண்ட மதில். முற்றத்துக்கு மறுபுறம் அதாவது உள்ளே வருபவருக்கு வலதுபுறம் நிஷா மாமியின் வீட்டு மதிலும் அதற்கு செல்லும் நுழைவாயிலும். மதிலில் பதித்த அந்நுழைவாயில்கள் கேரளத்து பாணியில் வீட்டுக்கதவுகள் போல மதிலை விட சற்று உயரமாக தோரணங்களுடன் எழுந்து நிற்கும்.
இடதுபுறம் படிகளை ஏறிக்கடந்து எங்கள் வீட்டுற்குள் செல்பவர் முதலில் நுழைவது மூன்று புறமும் ஜன்னல்கள் கொண்ட பெரிய வரவேற்பறைக்குள். அதன் வலது புறமாக அப்பாவின் ஒரு சிறிய வாசிப்பறையும் உண்டு. அப்பா அப்போது அவரது இரண்டாவது பெரிய நாவலை எழுதிக்கொண்டிருந்ததால் அந்த அறை முழுக்க எழுதிமுடித்த அல்லது எழுதக் காத்திருக்கும் வெற்றுக்காகிதக் கத்தைகளும் ரெனால்ட்ஸ் பேனாக்களுமாக இருக்கும். பிழை பார்த்து முடிக்கப்பட்ட முந்தைய பாகங்களும் மறுபுறம் குவித்து அடுக்கப்பட்டிருக்கும். அவர் இருக்கைக்கு பின்னால் ஒரு பெரிய அலமாரியில் அவர் வாசித்த புத்தகங்கள்.
வரவேற்பறையை கடந்து நேராக சென்றால் எங்கள் படுக்கையறை. அங்கிருந்து வலப்பக்கம் திரும்பினால் மாடிப்படியறை. தவிர்க்க முடியாத அந்த மர்ம அறைதான் ஒருபக்கம் வரவேற்பறையும் படுக்கையறையும் கொண்ட பாதியையும், உணவறையும் சமையலறையும் கொண்ட மறுபாதியையும் இணைத்தது. அந்த அறையை விரைவாகக் கடந்து மீண்டும் வலப்பக்கம் திரும்பினால் உணவறை, அதையும் கடந்து நேராக சென்றால் விறகடுப்புகளும் புகைபோக்கியும் கொண்ட சிறிய சமையலறை. காலை சூரிய ஒளியில் சரிந்துவிழும் கதிர்கள் எதிரே இருக்கும் மரச்சட்டம் வழியாக புகுந்து புகைப்படலத்தை மூன்றாக பகுத்துச்செல்லும். சமையலறையிலிருந்து மறுபுறம் படியிறங்கினால் பெரிய அம்மியும், ஆட்டுக்கல்லும், உரலும் கொண்ட கொல்லைப் புறத்தை அடையலாம். அடுத்தடுத்து இருந்த திண்ணையையும் கொல்லைப்புறத்தையும் பிரித்தது நுழைவாயில் கொண்ட அந்த பெரிய மதில்தான்.
’ப’ வடிவ வீட்டின் சரியான மத்தியில் அமைந்திருந்தது பூனை விழுந்த அந்த கிணறு. மழைக்காலம் முடிந்ததுமே மலைப்பாம்புகள் போல காட்சியளித்த பெரிய பச்சைநிற ட்யூப்களை கொண்டு வந்து மோட்டாரால் கிணற்றின் தண்ணீரை முழுவதுமாக வெளியே இறைத்து அதை சுத்தம் செய்தனர். தண்ணீர் வெளியே பீய்ச்சியபோது அந்த ரப்பர் ட்யூப் இடமும் வலமுமாக அசைந்ததை கண்டு நானும் பாப்புவும் ”பாம்பூ! பாம்பூ!” என்று கூச்சலிட்டு குதித்தோம், ”என்ன பண்றீங்கே ஜெய் நீங்களும் சேர்ந்துக்கிட்டு” என்று அம்மா சொல்வதையும் கேட்காமல் நாங்களும் அப்பாவும் வெளியே இறைந்த தண்ணீரில் படுத்து உருண்டுக் குளித்தோம். அம்மா ஒழிகிய நீர் காலில் படாதவாறு தள்ளி நின்றுக்கொண்டு எங்களை முறைத்தார்.
வீட்டைவிட நாளின் பெரும்பகுதியை நான் எங்கள் தோட்டத்தில் தான் செலவிட்டேன். பல்வேறு மரங்களும், குரோட்டன்ஸ் செடிகளும், குறுமரங்களும், பூச்செடிகளும் கொண்ட அதை ஒரு காடாகவும், அந்த ஒட்டுமொத்த வனப்பகுதியின் ராஜாவாகவும் நான் என்னை அறிவித்துக் கொண்டேன், பாப்பு எனக்கு விசுவாசமான மந்திரியாக நான் எங்கு சென்றாலும் பின் தொடர்வாள்.
காலை எழுந்தவுடன் நாங்கள் செய்யும் முதல் காரியம் வீட்டு முற்றத்தில் வலது பக்கமாக பெரிய குடை போல வளர்ந்து நின்றிருந்த இட்லிப்பூ மரத்தில் கையெட்டும் தொலைவில் அன்று புதிதாக பூத்திருக்கும் பூங்கொத்துக்களை பறித்து அவற்றிலுருந்து தேன் குடிப்பதுதான். பால் வெள்ளை நிறத்தில் கொத்தாக ஒரு பெரிய கொண்டையின் வடிவில் பூத்திருக்கும் அவற்றை அப்படியே மொத்தமாகப் பற்றி காம்புகளில் இருந்து பிடுங்கி எடுக்க வேண்டும். அப்போது பட் பட் என விடுபடும் பூக்களிலிருந்து புறங்கையிலும் மாற்பிலும் எல்லாம் சிறு சிறு தேன் துளிகள் தெறிக்கும். புறங்கையை நக்கிவிட்டு கண்களை மூடி பூக்களின் அடிப்பகுதியை வாயில் வைத்து ஒரே உறிஞ்சாக உறுஞ்சி இழுக்க வேண்டும். ஐம்பது அறுபது பூக்களில் இருந்து தேன் மொத்தமாக வாய்க்குள் நுழையும். அது நாவில் பட்டு அதன் இனிமை சட்டென்று வாய்முழுவதும் பரவுவதை கண்கள் மூடி உணர்வோம். பாப்புவின் முகத்தை அப்போது பார்க்க மிக அழகாக இருக்கும். நான் அதனாலேயே என்னை விட அவளுக்கு தான் அதிகமாக பூக்களை பறித்து கொடுத்தேன். ”எப்படி இருக்குடீ” என்று ஆர்வமாக அவளை கேட்பேன். அவள் தலைமட்டும் சரித்து “ம்ம்” என்பாள் முகத்தில் புன்னகை கூட இல்லாமல். பாப் கட் செய்யப்பட்ட அவள் தலை மட்டும் இடம் வலமாக ஆடும். ”ஒன்னுமே சொல்ல மாட்டா” என்று நான் அவள்மீது கோபம்கொள்வேன்.
காலையில் சற்று பிந்தினாலும் தோட்டத்து வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் எங்களை முந்திக்கொள்ளும். அதன் பின் பறிக்கும் பூக்களில் தேன் இருக்காது. ஆனால் மிகமிக லேசான தித்திப்புடன் அது வழி புகுந்து வாய்க்குள் நுழையும் சில்லென்ற காற்றும் சில சமயங்களில் எனக்கு பிடிக்கும். பின்காலையில் எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் இட்லிப்பூ மரத்தின் கீழ் இரண்டு சிறு குவியல்களாக பூக்கள் உதிர்ந்து கிடப்பதை காண்பார்கள்.
ஆனால் சில நாட்களிலேயே இட்லிப்பூவை இப்படி சீக்கிரம் உறிஞ்சி குடிப்பதால் அவை உடனே வீணாகிறது என்று நான் எண்ண துவங்கினேன். நாள் முழுவதும் அதை குடிப்பதை பற்றிய கற்பனைகளில் இருந்தேன். எனவே ஒரு கொத்தை மட்டும் பறித்து ஸ்கூல் பேகில் இட்டு கொண்டு செல்வேன். தோன்றும் போதெல்லாம் அதில் பூக்கள் ஒவ்வொன்றாக எடுத்து அதில் இருக்கும் ஊசிமுனையளவு தேனை உறிஞ்சிக்கொள்ள. ஆனால் அப்போதும் அதே நிறைவின்மையையே உணர்ந்தேன். எல்லாமே தீர்ந்து போகிறது என்று எண்ண எண்ண என் கண்களில் கண்ணீர் நிறையும்.
888
எங்கள் வீட்டில் நின்ற பெரும்பாலான பிற செடிகளுக்கு நாங்களே பெயர் சூட்டினோம். வெள்ளைப்பூ செடி, யானைக்காது செடி, பட்டர்பிளை செடி, கொக்கிமுள்ளு செடி, விக்ஸ் புல்லு என. இவை போக சில செடிகளுக்கு நிஷா மாமி பெயர் சொல்லித்தந்தார். கண்களைப் போல அழகாக விரிந்திருந்த நீலப்பூக்கள் கொண்ட செடியை சங்கு புஷ்பம் என்றார். நாங்கள் தரையில் ஒரு நீள்வட்டம் வரைந்து அதில் சங்கு புஷ்பத்தை இரண்டு கண்களாகவும் செம்பருத்தி மொட்டை மூக்காகவும், வெள்ளைப்பூவை வாயாகவும் வைத்து முகம் செய்து விளையாடினோம்.
விதவிதமான பூக்கள் எங்கள் தோட்டத்தில் இருந்தன கனகாம்பரம், சங்கு புஷ்பம் போல பெயர் தெரிந்தவை சிலவே. நான்கு வகை செம்பருத்தி செடிகள் வரிசையாக எங்களுக்கும் நிஷா மாமி வீட்டுக்குமான மதிலை ஒட்டி நின்றன. மாலை பள்ளி முடிந்து வந்ததும் நானும் பாப்புவும் தோட்டத்து பூக்களை தென்னை ஓலையில் கோர்த்து மாலையாக செய்து அணிந்துகொள்வோம். ரோஸ் நிற செம்பருத்தியை தவிர பிற எல்லா மலர்களும் அதில் இருக்கும் (ரோஸ் செம்பருத்தியை மட்டும் நாங்கள் பறிக்காததற்கு காரணங்கள் இருந்தன). பின் குரோட்டன்ஸ் செடியின் இலைகளை எங்கள் வீட்டு கற்படிகளில் வைத்து ‘சம்மந்தி’ அரைப்பது, தண்ணீரில் சேற்றை குழைத்து வீடுகள் செய்வது என எண்ணற்ற விளையாட்டுகள்.
எல்லாவற்றையும் விட எனக்கு பிடித்தமானது வீட்டுக்கு எதிரே நிஷா மாமியின் சுவர் ஓரமாக நின்ற கொய்யா மரம் தான். பெரும்பாலான நாட்கள் நான் அதன்மேல் ஏறி அமர்ந்துதான் என் நேரத்தை செலவிட்டேன். வழவழப்பான அதன் உடலில் வளரும் குழந்தை போல எப்போதும் தோல் உரிந்து சென்றுகொண்டிருக்கும். அதன் மேல் எப்போதும் அணில்களும், சிறுகுருவிகளும் நடமாடின. மேலே உயரத்தில் இலைகளைச் சேர்த்து பெரிய பந்துகளாக மிசிறுகள் கூடுகட்டியிருந்தன. ஆகவே மரத்தின் நான்காவது கொப்பு வரை என்னால் ஏறிச்செல்ல முடியும் என்றாலும் மூன்றாவது கொப்புதான் என் எல்லை என வகுத்துக்கொண்டேன். அங்கு இரு கிளை பிரியும் இடத்தில் அம்மாவின் பழைய சேலை ஒன்றை தூளிபோல கட்டி அதில் அமர்ந்து கொள்வேன். எனக்கு தேவையான படம் பார்க்கும் புத்தகங்கள், பேப்பர் கலர் பென்சில்கள் என எல்லாவற்றையும் மேலே எடுத்து சென்றுவிடுவேன். மேலே மிசுறுகளின் கூட்டைப்போல கீழே அது என்னுடைய தனி வீடு, அங்கு வேறு யாரும் வரமுடியாது என எண்ணிக்கொள்வேன். அங்கு அமர்ந்து நான் வரைந்த ஓவியங்கள் எல்லாம் அர்த்தமில்லாத வடிவத் தொகைகளாக இருந்தன. அரை வட்டங்களாலும் முக்கோனங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட உயரான கோபுரங்கள், கட்டிடங்கள்.
பாப்புவால் கொய்யா மரத்தின் முதல் கொப்பு வரைதான் ஏற முடியும், அதுவும் குட்டனின் உதவியுடன். குட்டனின் காதை பிடித்து தரதரவென இழுத்துவந்து அவனை ஒரு ஸ்டூல் போல நிறுத்தி பொருமையாக அவன் மீது கால்வைத்து முதல் கொப்புக்கு தாவி விடுவாள். பின்பு அங்கு நின்று கொண்டு “அஜீ மேல ஏத்தி விடூ” என்று சிணுங்குவாள். நான் ”பாப்பு இங்கல்லாம் நீ வர முடியாது, டேஞ்சர்” என்று அவளை எச்சரித்து கீழே இறுக்குவேன். உதடுகளை பிதுக்கி அமைதியாக கண்ணீர் தளும்ப சற்று நேரம் நின்றுவிட்டு வீட்டுக்குள் ஓடி செல்வாள். எப்போதுமே சத்தம் போட்டு அழுவது அவளுக்கு வழக்கமில்லை.
அன்றைய மழைநாளுக்கு பின் என்னிடம் நல்ல நண்பனாகிவிட்ட குட்டன் பாப்புவை அவனது முழுநேரப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டான். என்னிடம் எப்போதும் ஆண் நண்பர்களுக்கே உரிய விலக்கத்துடன் வலம்வரும் அவன் தங்கையை தன் செல்லக் குழந்தையாகவே கருதினான். பாப்பு அவன் வாலை பிடித்து இழுத்தாள், காதுகளைப் பிடித்து தொங்கினாள், மேலே ஏறி அமர்ந்து “என்னோட குதிரை பாத்தியா?” என்றபடி சவாரி செய்தாள், ஆனால் குட்டன் அமைதியாக “சின்னஞ் சிறுசுகள்” என்ற பாவனையில் எல்லாவற்றுக்கும் நின்று கொடுத்தான். நாங்கள் மூவரும் காலையில் அலுவலகமும் பள்ளிக்கூடமும் சென்ற பின்னர் நிஷா மாமி வீட்டில் நின்ற பாப்புவுக்கு அவன்தான் காவல். அவள் கோழிகள் கிண்டியிடும் சேற்று மண்ணில் இறங்குகையில் பின்னாலிருந்து ஃப்ராக்கை பற்றி இழுப்பான், வீட்டு எல்லையை தாண்டி சென்றால் குரைத்து நிஷா மாமியை அழைப்பான். பின்மதியம் நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் சமயத்தில் மட்டும் இருவரும் ரோட்டில் வந்து நிற்பார்கள்.
என் கொய்யா மரத்தை ஒட்டி ஒரு குரோட்டன்ஸ் செடியும், ஒரு உயரமான தென்னை மரமும் நின்றன. அந்த தென்னையில் நாங்கள் அவ்வீட்டில் குடிவந்தது முதல் நான்கைந்து ஓலைகளும் இரண்டே தேங்காயும் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். மூன்று வருடங்கள் முன்பு அதன் மீது இடி விழுந்ததாக சொன்னார்கள். அப்பா ஓலை உதிர்ந்த தடத்தை வைத்து தென்னை மரத்திற்கு வயது கண்டுபிடிக்கும் ஒரு வழியை எனக்கு சொல்லித் தந்திருந்தார். அதன்படி பார்த்தால் அந்த மரத்தின் வயது நூற்றியைம்பதையும் தாண்டி சென்றது. அவ்வளவு வயது வரை தென்னை மரங்கள் நிற்குமா என்ன? ஆனால் அது வான் நோக்கி வளைந்து வளைந்து சென்று எட்டி நிற்பதை பார்க்க மலைப்பாக இருக்கும். மெல்லிய காற்றில் கூட அதன் உச்சியும் அதில் காய்த்து தொங்கிய இரு தேங்காய்களும் அச்சமூட்டும் வகையில் முன்னும் பின்னுமாக அசைந்தாடும்.
கொய்யா மரத்தின் மேலிருந்து நிஷா மாமியின் வீட்டை முழுதாக பார்க்க முடியும். மாலையில் பள்ளி முடிந்தவுடன் அதே சீருடையில் நிஷா அக்கா ரோஸ் நிற செம்பருத்தி செடியை ஒட்டிய மதிலருகே கண்ணாடியுடன் வந்து நிற்பாள். அந்த செம்பருத்தி அவள் தலையில் வைத்துக் கொள்வதற்காக அவளே நட்டு வளர்த்தது. விடுமுறை நாட்களிலும் கூட பள்ளி சீருடை அணிந்தபடி அந்த சின்ன கண்ணாடியில் மணிக் கணக்கில் தன் முகத்தை பார்த்தபடி செலவிடுவாள். அந்த வீட்டில் அவள் பார்ப்பதற்கு அருகதையான வேறொன்றும் இல்லை என்பது போல. நிஷா அக்கா நல்ல அழகு, வெள்ளையான நீள்வட்ட முகமும், அழகிய புருவங்களும், நீளமான முடியும் அவளுக்கு இருந்தது. அவள் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். முகத்தில் பருக்கள் தோன்ற துவங்கியிருந்தன. அதுவே அவளுக்கு வாழ்க்கையின் மிகப்பெரிய கவலையாக இருந்தது, கண்ணாடியில் அதை மீள மீள பார்த்து பொருமினாள்.
வெகுநாட்கள் நான் நிஷா அக்காவை தான் அழகின் வரையரையாக வைத்திருந்தேன். எந்த பெண்ணை பார்த்தாலும் நிஷா அக்காவின் பாதி அழகு, முக்கால்வாசி அழகு என கணக்கிடுவேன். அம்மா யாருடனாவது பெண்களை நடிகைகளை பற்றி பேசினால் “நிஷா அக்கா மாறி அழகாம்மா?” என்று கேட்டு மண்டையில் குட்டு வாங்கினேன். வீட்டிலும் தோட்டத்திலும் பெரும்பகுதி அம்மணமாக அலைந்த நான் நிஷா அக்கா பள்ளிவிட்டு வருவதை கண்டால் பாய்ந்து சென்று ‘டவுசர்’ அணிந்துக்கொள்வேன்.
நிஷா அக்காவின் பெயரால்தான் நாங்கள் அவர்கள் வீட்டில் எல்லாவற்றையும் அழைத்தோம். நிஷா மாமி, நிஷா வீடு, நிஷா வீட்டு கோழி, நீஷா வீட்டு மண்வெட்டி என எல்லாவற்றிலும் அவள் பெயர் படிந்திருந்தது. நிஷா மாமியின் உண்மையான பெயர் கூட எங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அம்மா அவரை மரியாதை நிமித்தமாக ’நிஷாம்மா’ என்றே அழைத்தார், அவர் பதிலுக்கு ’அஜியம்மா’ என்று.
நிஷா அக்காதான் எங்களுக்கு செம்பருத்தி பூவின் நடுவில் உள்ள மெல்லிய நூலை பிரித்தெடுப்பதை காட்டித்தந்தார். பூவின் அடியில் விதைபோல இருந்த அந்த பகுதியில் இருந்து அதன் நுனியில் ஐந்து சிறு வெல்வெட் திரிகளாக பிரிந்து நின்ற பகுதியை இணைத்தது அந்த நூல், சற்று பலமாக ஊதினால் கூட அறுந்துவிடும் அந்த நூலை அவள் மிக திறமையாக அவளது நீண்ட நகங்களை கொண்டு பிரித்துக்காட்டினாள். அவளது முகம் அப்போது அபாரமான கூர்மையுடன் கவனத்தில் குவிந்திருக்கும். நகங்கள் அழகாக கத்தியை போல அந்த மெல்லிய நூலையும் அதை சுற்றிய இழையையும் பிரித்தெடுக்கும். அத்தனை துல்லியம். அதை காணும்போது எனக்குள் ஒருவகை அச்சம் கலந்த குறுகுறுப்பு தோன்றும். எவ்வளவு முயன்றும் என்னால் கடைசி வரை அதை பிரித்தெடுக்க முடியவில்லை.
888
பத்மநாபபுரம் என்ற அந்த சிற்றூரே மொத்தமாக ஒரு பெரிய கோட்டை மதிலுக்குள் பத்திரமாக இருந்தது. ஊருக்கு நடுவில் ஒரு மாபெரும் வெள்ளை யானை போல ராஜாவின் பழைய அரண்மனை எழுந்து நின்றது. அதன் விலாப்புறத்தில் தான் எங்கள் வீட்டுக்கு செல்லும் சாலை. ராஜா அரண்மனையில் இருந்தே தேரோட்டம் பார்ப்பதற்காக அமைக்கப்பட்ட மாடம் நேராக எங்கள் வீட்டுக்கு எதிரில் தோட்டத்தை பார்த்து திறந்திருந்ததது. அப்படி வரிசையாக அரண்மனையை சுற்றி பல மாடங்கள். காலங்களுக்கு ஏற்ப மாறி வரும் ஊரை அமைதியாக பார்த்தபடி அவை திறந்து கிடக்கும்.
மாலையில் நானும் அப்பாவும் கலை, இலக்கியம், பண்பாடு என விவாதித்து கொண்டே நீண்ட நடைகள் சென்று ஊரின் எல்லா ஊடு வழிகளையும் கண்டடைந்து தொலைந்து மீண்டோம். ஊருக்கு வெளியே நான்கு திசைகளிலும் சென்று அதன் எல்லைகளை கண்டோம். தென்கிழக்கு எல்லையில் பெரிய நீலகண்டசாமி கோவிலும், அதையொட்டி நடுவே மண்டபத்துடன் கூடிய அழகிய குளமும் உண்டு. பழைய ஊர்மக்கள் பெரும்பாலும் அங்குதான் குளித்தனர்.
வடகிழக்கே ஆளரவம் இல்லாமல் தனித்து கிடந்தது பெருமாள் குளம். அதன் கரையில் ஒரு மாபெரும் அரசமரம் ஒன்று அந்த அமைதியில் இலைகளை சிலிர்த்து முணுமுணுத்தபடி நின்றது. பெருமாள் குளத்துக்கு அப்பால் வாழைத்தோப்புகள்தான். வரப்பின் வழியாக வெகுதூரம் நடந்து கடந்தால் எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் ஊரின் கோட்டை மதில்சுவர் சுற்றிக்கொண்டு வந்து அங்கு நிற்கும். அதன் வாசல் வழியே ஏறிக் கடந்துசென்று பார்த்தால் மேலும் வாழைத்தோப்புகள். தொலைவில் எழுந்து நிற்கும் நீல மலைத்தொடர் வரை அவை விரிந்து செல்லும். எப்போதும் பலமாக வீசும் காற்றில் கண்ணெட்டும் தொலைவுவரை வாழை மரங்களின் கிழிந்த இலைகள் படபடக்கும்.
வடக்கே மருந்துக்கோட்டை என்று அழைக்கப்பட்ட மலைமேல் அமைந்த கோட்டை ஒன்று உண்டு. அங்கு நெடுந்தூரம் ஏறிச்சென்றால் முன்பு ராஜா காலத்தில் பீரங்கிகளுக்கு வெடிமருந்து செய்த இடத்தை காணலாம். செல்லும் வழியெங்கும் சப்பாத்திக்கள்ளியும் திருகுக்கள்ளியும் இருபுறமும் இரண்டாளுயரத்திற்கு வளர்ந்து நிற்கும். அவையெல்லாம் ராஜாவால் கழுவிலேற்றி கொல்லப்பட்டவர்களின் நினைவாக நடப்பட்டவை என்று அப்பா சொன்னார். வடமேற்கு மூலையிலும் அதேபோல பழமையான ஒரு முருகன் கோவிலும் அதை ஒட்டிய குளமும் தான் எல்லை.
தென்மேற்கு பகுதியில் மட்டும் கோட்டை மதிலை ஒட்டி, அதை ஒருபுறச் சுவராக கொண்ட சிறிய ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை வீடுகள் வரிசையாக நின்றன. மாலையில் நாங்கள் நடை செல்கையில் அந்த வீட்டுப்பெண்கள் சாலையோரத்திலேயே அடுப்பை மூட்டி சமைத்தனர். குழந்தைகள் மெலிந்த உடலும் சடைபிடித்த செம்பட்டை தலையுமாக காலி டப்பா, கற்கள், குச்சிகள் என கையில் கிடைத்தவற்றை வைத்து ஓசையுண்டாக்கி விளையாடினர். நாங்கள் கடந்து சென்றபோது விளையாட்டை நிறுத்தி மூக்கொழுக எங்களை வேடிக்கை பார்த்தனர்.
நாட்கள் செல்ல செல்ல ஊரின் எல்லா முகங்களும், இடங்களும் எனக்கு பழக்கமாயின. ஊரின் டீக்கடை, அரிசி மில், எண்ணைக்கடை, தேரடி எல்லாவற்றிலும் பரிச்சயமான முகங்கள் புன்னகைத்தன. சிலர் “பிள்ளே, இப்ப எல்லாம் கொள்ளாமா?” என்று பூடகமாக நலம் விசாரித்தனர். நான் “ஓ சுகந்தென்னே” என்று புன்னகையுடன் பதில் கொடுத்தேன்.
வெள்ளிகிழமை மாலைகள் நிஷா மாமி அருகில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்து செல்வார். அங்கு பெண்களும், ஓட்டைப்பல் சிறுமிகளும் எல்லாம் வரிசையாக அமர்ந்து “ராம ராம, ராம ராம, ராம ராம, பாகிமாம்” என்று திரும்ப திரும்ப பாடினார்கள், சில பெண்கள் பார்க்க அழகாக கூட இருந்தார்கள். நான் குளிர்ந்த சந்தனத்தை நெற்றியில் அணிந்துக்கொண்டு அங்கிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பேன். ‘வாய் நோக்கல்’ என்று அவர்கள் அதை அழைத்தார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் அப்பாவுடன் சென்று கோவில் குளத்தில் குளிப்பதும், மாலை அம்மா மற்றும் பாப்புவுடன் நால்வராக நெடுந்தூர நடை செல்வதும் என நாளடைவில் எங்களுக்குள் ஒரு வழக்கம் உருவானது. ஆரம்பத்தில் எங்கள் குடும்பத்தை சற்று வினோதமாக பார்த்த ஊர்மக்கள் இப்போது எங்களுக்கு வெகுவாக பழகிக்கொண்டார்கள். அம்மாவின் தயக்கமில்லாத புன்னகையும் அதற்கு ஒரு முக்கிய காரணம். அந்த பகுதி பெண்கள் அப்படி எளிதாக புன்னகைப்பதில்லை. அப்படி புன்னகைத்தால் ஒன்று அவர்கள் ஏழையாக இருக்கவேண்டும், நிஷா மாமி போல. அல்லது சற்று நினைவுப் பிசகு கொண்டவராக இருக்க வேண்டும், எங்கள் தெருமுனை வீட்டில் வசித்த தொன்னூறு வயது அம்மச்சி போல.
பழக்கமான இடங்களுக்கே உரிய மெல்லிய சோம்பலும் சலனமின்மையும் அந்த ஊரில் இருந்தது. சில சமயம் ஒரு சிறிய சலிப்பாகவும் சில சமயம் ஒரு பாதுகாப்புணர்வாகவும் நான் அதை உணரத்துவங்கினேன். பெரும்பாலான நேரங்களில் நான் கொய்யா மரத்தில் என் தனிவீட்டிலோ அல்லது ஏதாவது மரத்தடியிலோ மூலையிலோ அமர்ந்து எண்ணங்களில் கற்பனைகளில் ஆழ்ந்து இருந்தேன். நெடுநேரம் சமயம் போவது அறியாமல் அப்படியே அமர்ந்துவிட்டு இருட்டியபின் வீடு வந்து சேர்ந்தேன். அப்போதெல்லாம் அம்மா ”எங்க போயிருந்த அஜீ, எவ்ளோ நேரமா தேடுறது?” என்று பதற்றத்துடன் வினவினார்.
“எப்ப நோக்கியாலும் எந்தோ ஆலோசன தன்ன அஜியம்மா, விளிச்சாலும் விளிகேக்கில்லா” என்றார் நிஷா மாமி.
நான் பெரும்பாலும் அப்பா சொல்லும் கதைகளிலோ அல்லது நான் புகைப்படங்களில் கண்ட நிலப்பரப்புகளிலோ சஞ்சரித்து கொண்டிருந்தேன். எங்கள் தோட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக ராஜாவும் மந்திரியும் இல்லாமல் கைவிடப்பட்டது. பாப்புவுக்கு அப்போது என் விளையாட்டுத் துணை தேவையாக இருக்கவில்லை. அவளே தனியாக தோட்டத்தில் சொந்தமாக பூக்களாராய்ச்சி மண்ணாராய்ச்சி என இறங்கிவிட்டிருந்தாள். அவள் தரையில் அமர்ந்து மண்ணை கிளறி, தோண்டி, உழுது என எதை செய்து கொண்டிருந்தாலும் பத்தடி தள்ளி குட்டன் படுத்திருந்தான், ஒரு பார்வையை அவள் மீது வைத்தபடி. அவள் வண்டுகளை பிடித்து முகர்வதும், மண்ணை அள்ளி தலைக்குமேல் எறிவதும் அவனுக்கு பிடிப்பதில்லை. மெல்லிய குரைப்பில் தொலைவிலிருந்தே தன் அதிருப்தியை வெளிப்படுத்தினான். பாப்புவும் அதை கேட்டு நடந்து கொண்டாள். அதையும் மீறி சந்தேகம் எழுந்தால் அவனே எழுந்து அருகில் வந்து பார்வையிட்டான்.
பாப்பு என்னிடம் அதிகம் விளையாடாமல் ஆனதற்கு இன்னோரு காரணமும் இருந்தது. ஒருமுறை அவள் என்னை ஆர்வமாக விளையாட அழைத்தபோது ஏதோ காரணத்திற்காக நான் சற்று எரிச்சலடைந்து அவளைப் பிடித்துத் தள்ளினேன். நிலைதடுமாறி கீழே விழுந்த அவள் “நான் செத்துப்போயிட்டேன் போ” என சொல்லி கண்களை மூடி நாக்கை வெளியே துருத்திக்கொண்டு வெறும் மண்தரையில் படுத்துக்கொண்டாள். எனக்கு அக்கணம் ஏனென்றறியாமல் மேலும் கோபம் மூண்டது. “அப்படியே கெட” என்றுவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டேன். நெடுநேரம் கழித்து இருட்டியபின் அம்மா பாப்புவை தேடி குரல் கொடுத்தபோதுதான் சட்டென்று நினைவு வந்து செம்பருத்தி செடியருகே ஓடி சென்று அவளை தேடினேன். அவள் அதே இடத்தில் அதே போல் அசையாமல் தோட்டத்தின் கும்மிருட்டில் படுத்திருந்தாள். அவளது அசைவற்ற பாதங்கள் மட்டும் நிழலுக்கு வெளியே மங்கிய ஒளியில் தெரிந்தன. நான் எண்ணங்களற்று மனம்பதற அவளை நோக்கி ஓடினேன். அவள் அதே போல நாக்கை துருத்தியபடி கண்கள்மூடி கிடந்தாள்.
“ஏண்டி இங்க இப்படி கெடக்க” என்று அழுவது போல குரல் உடைய அவளை திட்டி உலுக்கினேன். அவள் அப்போதும் அசையவில்லை. நான் அவளை பற்றி எழச் செய்தபோது மெல்ல கண் திறந்தாள்.
“நீதான் என்ன எழுப்ப வரவேயில்ல” என்று அவளது உணர்ச்சியற்ற பிடிவாதமான குரலில் பதிலளித்தாள்.
அதன்பின் பல நாட்களில் பல முறையாக நான் அச்சம்பவத்திற்காக அவளிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தேன். “ஓய் என்ன எவ்வளவு வேணா எப்படி வேணா அடிச்சிக்கடீ, மன்னிச்சிரு டீ” என்பேன், அவள் பதிலுக்கு “எனக்கு கோவம்லாம் இல்ல” என்பாள், ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் ஏதோ சொல்லாமல் விடுவது போல தோன்றும். ஏன் அப்படி அன்று கிடந்தாள் என்ற கேள்விக்கு அவள் ஒன்றுமே பதில் சொன்னதில்லை. சில நேரங்களில் நான் அவளை வற்புறுத்தி என்னை அடிக்கச் செய்தேன், கைகளை பலமாக ஓங்கியபடி அருகில் வந்து பயம்காட்டி பின் மெல்ல லேசாக தோள்களில் தட்டுவாள். நான் அவளை அப்படியே சேர்த்து அணைத்துக் கொள்வேன். ஆனால் அன்று அந்த சம்பவத்திற்கு பின் இயல்பாக நாங்கள் சேர்ந்து விளையாடுவது குறைந்தது.
எங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தபோது மட்டும் மீண்டும் பழைய உற்சாகம் தோன்றியது. அவர்கள் பார்வையில் மீண்டும் எல்லாவற்றையும் காண்பது போல. அவர்களை கைப்பிடித்து அழைத்து சென்று ஒவ்வொரு அதிசயமாக காட்டினோம், கிணற்றில் பூனை விழுந்த கதை, இடிவிழுந்த தென்னைமரம், இட்லிப்பூ மரத்தில் தேன் குடிப்பது என எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.
நாங்கள் அவ்வீட்டில் குடிவந்து சில மாதங்கள் கடந்தபின் பெரும்பாலான வார இறுதிகளில் அப்பாவை சந்திக்க விருந்தினர்கள் வந்தனர். நான் பள்ளிவிட்டு வரும்போது வாசலருகிலேயே புதிய சூட்கேஸின் மணம் கிடைத்துவிடும். இஸ்திரி செய்த துணியும், ஈர டவலும், சோப்பும், கரப்பான் உருண்டையும் கலந்த ஒரு மணம் அது. “கெஸ்ட் வந்திருக்காங்களா ம்மா” என்று ஆர்வமாக துள்ளிக்குதித்து வீட்டுக்குள் நுழைவேன். எல்லா விருந்தினர்களையும் தவறாமல் பத்மநாபபுரம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றோம். பலமுறை சென்றதால் அரண்மனையின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எங்களுக்கு தெரிந்திருந்தது. பல சமயம் விருந்தினர்களை அப்பா எங்கள் இருவரிடமே ஒப்படைத்து கூட்டிச்செல்ல சொல்வார். “அவங்களுக்கு தெரியாததே இல்ல போங்க” என்பார்.
நானும் உற்சாகமாக ராஜாவின் மூலிகை கட்டில், நான்கு புறமும் திரும்பும் குதிரை தூக்குவிளக்கு முதல் கடைசியாக அந்த பாழடைந்த கிணறு வரை எல்லாவற்றையும் காட்டி, போர்வாள்களையும் சித்திரவதை கருவிகளையும் நுட்பமாக விவரித்து அழைத்து வருவேன். சில இடங்களில் நான் அவர்களை பாப்புவிடமே முழுதாக ஒப்படைத்து விடுவேன். கொலுசுகள் அணிந்த புஷ்டி கால்களை வைத்து தத்துபித்துவென ஓடி ஒரு தேர்ந்த வழிகாட்டியைப் போல அவள் அரண்மனையின் எல்லா சுவாரசியமான அம்சங்களையும் காட்டிக்கொடுப்பாள்.
“தாத்தா இங்க பாத்தியா, இதான் ராணியோட கக்கூஸ், இங்க தான் அவங்க ஆய் போவாங்க”
“இங்க பாரு இந்த ஓட்டை வழியாதான் ராஜா ராணிலாம் டேன்ஸ் அக்கா ஆடுறத வேடிக்கை பாப்பாங்க”
“இதுதான் ராஜாவோட டெஜ்ஜு ரூம், கண்ணாடி பாத்தியா?”
வார இறுதிநாட்கள் பெரும்பாலும் அவ்வாறு கழிந்தன. மற்ற நாட்களில் ஓய்வு நேரங்களில் நான் ஒரு வினோதமான பழக்கத்தை தொடங்கியிருந்தேன். கையில் கிடைக்கும் எந்த பேப்பரையும் சடசடவென மடித்து கப்பலாக செய்துவிடுவேன். அதற்கு முன்னாலும் அவ்வபோது கப்பல்கள் செய்து அங்கங்கே விட்டுச் செல்வது உண்டு என்றாலும் எப்போதோ அது ஒரு பழக்கமாக மாறியது. பல சமயங்களில் அதை நான் உணர்வதேயில்லை. பேப்பரை கையில் எடுத்த சில கணங்களுக்குள் ஏதோ சிந்தனையில் மூழ்கி இருக்கும்போதே என் கைகளுக்குள் கப்பல் ஒன்று வந்திருக்கும். சில நாட்களிலேயே இவ்வாறு செய்த கப்பல்களையெல்லாம் ஒரு ஃபைலில் போட்டு சேகரிக்க தொடங்கனேன். பின் அந்த ஃபைல்கள் ஒவ்வொன்றாக பெருகி நிறைந்தன.
“எல்லா பேப்பரையும் இப்படி கப்பல் செஞ்சி செஞ்சி போடுறான் ஜெய், பைத்தியம் பிடிச்ச மாதிரி…” என்று அம்மா சற்று அச்சத்துடன் அப்பாவிடம் புலம்பினார்.
“அவன் ஏதோ செஞ்சிட்டு போறான் விடு. யூஸ் பண்ண பேப்பர்தான எல்லாம்” என்று அப்பா சமாதானம் சொன்னார்.
ஒருநாள் அப்பா “அஜிக்குட்டி, இந்தா இதுல நீ உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் போட்டு வச்சிக்க என்ன?” என்று எனக்கு அந்த பழைய கரும்பச்சை நிற சூட்கேஸை அளித்தார்.
சொந்தமாக ஒரு சூட்கேஸ் கிடைத்ததன் பரவசம் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. அந்த சூட்கேஸுக்கு ஒரு குட்டி சாவியும் இருந்தது. எங்கு வேண்டுமானாலும் அதை பூட்டியெடுத்துக் கொண்டு போகலாம் என்பதே எனக்கு பெரும் கிளர்ச்சியை அளித்தது. ஒவ்வொரு நாளும் அதை பலமுறை திறந்து பார்த்துக்கொண்டேன். சூட்கேஸின் மூடியை ஒட்டிய மேலடுக்கில் நான் அதுவரை வரைந்த ஓவியங்களையும் எங்கள் வீட்டுக்கு வந்த விதவிதமான கிரீட்டிங் கார்டுகளையும் அடுக்கி வைத்தேன். கீழடுக்கில் முழுக்க நான் செய்த கப்பல்களால் நிரப்பினேன். அதற்குள் நூற்றுக்கணக்காக பெருகிவிட்டிருந்தன அவை. அடுத்த பெருமழையின் போது அவை அத்தனையும் புறப்படத் தயாராக இருந்தன. ஆயிரக்கணக்கான கப்பல்கள் மழைவெள்ளத்தில் ஒரே நேரம் அணிவகுத்துச் செல்லும் அந்த காட்சியை நான் எனக்குள் பலமுறை ஓட்டிப்பார்த்தேன். எங்கள் வீட்டில் தொடங்கி ஊர் முழுவதும், தொலைதூரங்களுக்கு அவை மிதந்துப் பரவி சென்றடைவதை, கோட்டை மதில்களையும் கடந்து வேளிமலை வரை.
888
அந்நாட்களில் ஒன்றில் தான் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது அந்த இளஞ்சிவப்பு நிற கிரீட்டிங் கார்ட் வீட்டில் காத்திருந்தது. கனடாவிலிருந்து அ.முத்துலிங்கம் சார் அனுப்பிய அந்த வாழ்த்து அட்டையை அன்று மதியமே அலுவலகம் விட்டு வீடு வந்திருந்த அம்மா நிஷா மாமியின் வீட்டிலிருந்து வாங்கி வைத்திருந்தார்.
”அஜி, உனக்கு கிரீட்டிங் கார்டு ஒன்னு வந்திருக்கு போய் பாரு” என்றார் சமையலறைக்குள் நுழைந்த என்னிடம் சாதாரணமாக. நான் செல்லும் போது பின்னாலிருந்து அவர் குரல் “கனடாலேருந்து…” என்று ரகசியத்தை போகிறபோக்கில் உதிர்க்கும் அவரது வழக்கமான குறும்புடன் ஒலித்தது. நான் மாடிப்படி இருட்டறை வழியாக ஓடி அப்பாவின் அறையை நோக்கி விரைந்தேன்.
முத்துலிங்கம் சார் உலகம் முழுவதும் பயணம் செய்தவர் என்று அப்பா சொல்வார், ஆப்பிரிக்காவில் பழங்குடிகளுடனும் ஆஃப்கானிஸ்தானின் பாலைவனங்களிலும் அவர் தன் வாழ்நாளை கழித்தார் என்பார். இப்போது அவர் இருந்த நாட்டின் பெயர் கனடா, அங்குதான் நயாகரா என்ற உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி உண்டு, அதன் அகலத்துக்குள் மொத்த பத்மநாபபுரத்தையே அடக்கிவிடலாம்.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டுக்கு ஒன்றும் அப்பாவின் பிறந்தநாளுக்கு ஒன்றும் என அவர் எங்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பினார். அதன் உறை மீது அவரது பெரிய கையெழுத்தும், நீல நீர்பரப்பின் மேல் ஜோடியாக பறக்கும் அன்னப்பறவைகளின் படம் போட்ட இரண்டு ஸ்டாம்புகளும் ஒட்டப்பட்டிருக்கும். உள்ளே அவரது வாழ்த்துக்குறிப்பை கொண்ட கிரீட்டிங் கார்ட். சில சமயம் உள்ளே நயாகரா அருவியின் சில புகைப்படங்களும் இருந்தன. இரண்டு கிளைகளாக பிரிந்து பொழிந்த அந்த அருவிக்கு அருகே மாபெரும் வெள்ளைத்தூன் என அருவிச்சாரல் வான் நோக்கி சுழன்றெழுந்தபடி உறைந்திருக்கும்.
அந்த வருடம் அப்பாவின் பிறந்த நாளையொட்டி அவர் அனுப்பியிருந்த அந்த வாழ்த்து அட்டை மார்ச் மாதமே எங்களை வந்தடைந்திருந்தது.
நான் பாய்ந்து சென்று அப்பாவின் வாசிப்பறை மேசை மீது வைக்கப்பட்டிருந்த அந்த பழுப்பு நிற உரையை ஸ்டாம்புகள் கிழியாத வண்ணம் கவனமாக பிரித்தேன். உள்ளே வழக்கத்தை விட சற்று கனமாக இருந்த அந்த வாழ்த்து அட்டை நடுவே சிறிய புடைப்புடன் இருந்தது. கெட்டியான முகப்பு அட்டையை பிரித்தபோது அது சன்னமான குரலில் இசையுடன் பாடத்துவங்கியது. அன்னியமான ஆங்கில உச்சரிப்பில் ’ஹாப்பி பர்த்ட்டேய்’ என்ற இரு வார்த்தைகள் மட்டும் அதன் கலவைவான ஒலியிலிருந்து என்னால் பிரித்தறிய முடிந்தது. முப்பது நொடிகள் வரை இடைவிடாது பாடி நிறைவு செய்து, சற்று நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பாட ஆரம்பித்தது. அட்டையை மூடியதும் சட்டென்று பாடுவதை நிறுத்தியது.
சமையலறையில் இருந்து அரிசியை வாயில் இட்டு மென்றபடி வந்த அம்மா “என்ன அஜி சத்தம் கேக்குது அதுலேருந்து?” என்று ஆர்வமாக கேட்டார்.
”ஆமாம்மா தொறந்தா பாடும், மூடுனா நின்னுரும். மேஜிக் கார்ட்” என்றேன் அதை பற்றி முன்கூட்டியே எல்லாம் தெரிந்தது போல.
அன்று முதல் என் சூட்கேஸின் பெருமைமிகு புது வரவாக அந்த கார்ட் இடம் பெற்றது. ஒரு வாரமாக தினமும் காலையில், மாலை பள்ளியிலிருந்து வந்தவுடன், இரவில் என மீண்டும் மீண்டும் திறந்து அதன் இசையை கேட்டேன். பள்ளியில் இருக்கும்போதும் அது தலைக்குள் புகுந்து இடைவிடாமல் ஒலித்தது.
இப்போதெல்லாம் பள்ளி இறுதி மணி அடித்ததும் நான் வழக்கமாக வரும் தேரடிப் பாதையில் அல்லாமல் சில மதில்களை ஏறித்தாவி அடர்ந்த நிழல் கொண்ட புளியந்தோப்பொன்றின் வழியாக குறுக்கு வழியில் பாய்ந்து வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் எப்போதும் அந்த கிரீட்டிங் கார்டும் கையுமாகவே அலைந்தேன். பாப்புவுக்கு ஆரம்பத்தில் அதன் மீது சற்று ஆர்வம் இருந்தாலும் பின்னர் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நான் மட்டும் தனியாக ஒவ்வொரு ரகசிய இடங்களுக்கும் சென்றமர்ந்து அந்த இசையை கேட்டபடி திரிந்தேன். என் கொய்யா மர வீட்டுக்கு அதை எடுத்து சென்று வைத்துக்கொண்டேன்.
அப்போது ஒருநாள் அம்மா போகிறபோக்கில் “அஜி சும்மா சும்மா அதை தொறந்து கேட்டா அதோட பாட்டெரி தீர்ந்து போயிடும். அது ஃபாரின் பாட்டெரி, இங்கல்லாம் கிடைக்காது பாத்துக்க” என்று ஒரு அதிர்ச்சி செய்தியை சொன்னார். அதுவரை உன்மையிலேயே அது ஏதோ ஒருவகை மேஜிக் என்றுதான் நான் எண்ணியிருந்தேன்.
அதன்பின்னர் தான் நான் அந்த அட்டையை திறந்து ஆராயத்தொடங்கினேன். முதலில் அதை மெல்ல திறந்து எந்த புள்ளியில் அது பாடத்தொடங்குகிறது என கண்டடைய முயன்றேன். மேலும் மேலும் துல்லியமாக குறுக்கி அந்த மாயப்புள்ளியை எட்டினேன். அதிலிருந்து ஒரு எறும்பின் அளவு அசைந்தாலும் சட்டென்று பாட தொடங்கும் அந்த விந்தை. பிறகு அட்டையை திறந்து அந்த சூட்சுமத்தை கண்டுபிடித்தேன். மேல் முகப்பு அட்டையில் இருந்து ஒரு சிறு துண்டு பேப்பர் இணைப்பு அந்த பாடும் மைய பகுதிக்கு சென்றது. அந்த இணைப்பு இரண்டு உலோக தகடுகளை ஒட்டவிடாமல் பிரித்து நடுவில் சென்றமர்ந்தது. கார்டை பிரிக்கும்போது அந்த பேப்பர் நகர்ந்து விலகுவதால் உலோகத் தகடுகள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்ள இசை எழுந்தது.
நான் கார்டை திறந்து அது பாடத்தொடங்கியபோது வேறொரு சிறிய துண்டு பேப்பரை கிழித்து அந்த தகடுகளுக்கு இடையில் பொருத்தினேன். இசை சட்டென்று நின்றது. ஒரு பெரிய மர்மம் அன்றுடன் முடிவுக்கு வந்தது போல தோன்றியது. ஆனால் அதன் பின் அந்த கார்ட் எனக்கு மேலும் அணுக்கமாக ஆனது. நான் சொன்னதை கேட்கும் ஒரு குழந்தை போல, ஆகவே நான் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று. இப்போது நான் அது பாடமலேயே அதன் உள்ளே திறந்து பார்க்கவும் ஆராயவும் முடிந்தது. இனி தேவையானபோது மட்டும் அவ்விசையை கேட்டுக்கொள்ளலாம்.
மெல்ல நான் வைத்த அந்த சிறிய பேப்பர் துண்டை விலக்கி இசையின் தொடக்கத்தை மட்டும் ஒலிக்கவிடுவேன், பின் உடனே மீண்டும் அதை உள்ளே பொருத்தி நிறுத்திவிட்டு மிச்சத்தை கற்பனையில் கேட்டேன். அரை நொடிக்கும் குறைவான அந்த ஒரு சிறு கணம் போதும், ஒரு ஸ்வரம். அதன்பின் அந்த சாத்தியமே போதும் என்றானதைப் போல நான் அதை கேட்பதையே விட்டு விட்டேன். என்றாவது வளர்ந்த பின், வாழ்வின் முக்கியமான தருணங்களில் அதை கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணினேன். அந்த இளஞ்சிவப்பு கிரீட்டிங் கார்ட் மௌனமாகவே என்னுடன் இருக்க தொடங்கியது.
888
பத்மநாபபுரத்தில் வெயில் காலம் ஆரம்பமானது. பசுமையான ஊரென்றாலும் வெயில் காலத்தின் உஷ்ணம் அந்த வருடம் கடும் வெக்கையாக பரவியது. ஈரப்பதம் கொண்ட காற்றில் புழுக்கம் ஏறியேறி சென்றது. உடல் எப்போதும் வியர்வையின் ஈரத்துடன் பிசுபிசுத்தது. கைகளால் முகத்தின் வியர்வையை துடைத்தபோது அது மேலும் ஈரமானதை போல தோன்றியது. மக்கள் எல்லாம், ஏழைகளும் பணக்காரர்களும், வாயால் கீழுதட்டை குவித்து முகத்தை நோக்கி காற்றை ஊதி வியர்வையை தணிக்க முயன்றனர்.
ஊரைச்சுற்றிய குளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத்தொடங்கின. நீலகண்ட சாமி கோவில் குளம் இப்போது முழுவதுமாக வற்றி பாசியடர்ந்து குளிக்கும் படியாக இல்லை. பெருமாள் குளத்தின் பாசி படிந்த மூன்றாவது நான்காவது படிகள் கூட நீர்வற்றி வெளியே தெரிய அவை வெயிலில் காய்ந்து செம்பழுப்பாகி கிடந்தன. அப்பால் குலையெடுக்கப்பட்ட வாழை வயல்களில் இலைகள் சருகாகி நின்று மேலும் சத்தத்துடன் காற்றில் படபடத்தன. கரையோரம் நின்ற அந்த மாபெரும் அரச மரம் இப்போது இலைகளை ஒவ்வொன்றாக உதிர்த்தது மொட்டை மரமாக ஆகி அமைதியானது. பெருமாள் குளத்தின் நடுவில் கடும் கோடையில் நீர்வற்றும்போது மட்டுமே தெரியும் அந்த பாறையும் இப்போது நன்றாக வெளியில் தெரிந்தது. அதில் அரைகுறையாக செதுக்கப்பட்டிருந்த ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் விஷ்ணுவின் உருவை குளத்தின் அலையடிக்கும் நீர் பரப்பு சென்று சென்று தொட்டு மிண்டது.
தொலைதூரத்தில் தெரியும் பசுமையான நீல மலைகள் கூட இப்போது மொத்தமாக புற்கள் காய்ந்து பழுப்பு நிறத்தில், அங்காங்கே பற்றியெரியும் காட்டு தீயில் புகையெழ, உடல் கருகிய பூதங்கள் போல கோரமாக காட்சியளித்தன. வடக்கிலிருந்து அவற்றின் பெருமூச்சை போல எழுந்த அனல்காற்று ஊருக்குள் புகுந்து தகித்தது. இரவில் அந்த காட்டுத்தீக்கள் கீழ்வானின் இருளில் அந்தரத்தில் மிதந்து எரிவது போல தோன்றும்.
ஊரை சுற்றிய சாலைகளில் எல்லாம் கோடைகாலத்தின் தொடக்கத்தில் களமடித்தப்பின் எஞ்சிய வைக்கோலை கொண்டு வந்து பரப்பியிருந்தனர். வாகனங்களும் காலடிகளும் பட்டு வைக்கோல்களில் இருந்து உதிரும் மிச்சம் நெல்களை கடைசியாக பெருக்கி அள்ளுவதற்காக அவ்வாறு செய்தனர். பரப்பிய வைக்கோலின் மீது நடந்து சென்றபோது சாலை எங்கிருக்கிறது என்று தெரியாததால் ஒவ்வொரு அடியும் ஏமாற்றி உள்சென்று பதிய மேகத்தில் நடப்பது போல தோன்றும். ’சரக் சரக்’ என்று சத்தம் எழ அதில் ஓடிப்பிடித்து விளையாடினோம். வியர்வையில் ஆடைகள் உடலில் நனைந்து ஒட்ட அதில் விழுந்து புரண்டோம்.
சில தினங்களிலேயே கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இலைகள் உதிர்த்து காய்கள் மட்டுமாக நின்று ஊரெல்லாம் பஞ்சுப் பிசுறுகளை பரப்பிய இலவ மரத்திடம் விடைபெற்று நான் வீடு வந்து சேர்ந்தேன். அதுதான் அப்பள்ளியில் எனது கடைசி நாள் என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.
எங்கள் வீட்டிலும் தோட்டத்திலும் கூட கோடையின் விளைவுகள் தெரிய ஆரம்பித்தன. பாதையோரத்தில் தழைத்திருக்கும் புற்களும், தொட்டால்வாடிச் செடிகளும், சின்ன பூஞ்செடிகளும் காய்ந்து கரிந்தன. தெற்கு கோவிலை ஒட்டிய சில பெரிய செடிகள் கூட நீரூற்றாமல் பட்டுப்போயின. என் கொய்யா மரத்திலும் இலைகள் சருகாகி உதிர்ந்தது. மேலே மிசுறுகள் வளைத்து கூடு பின்னியிருந்த இலைகளில் சில பச்சையாகவும், சில காய்ந்து சருகாகவும் எஞ்சின. அதிலிருந்து எறும்புக் கூட்டங்கள் அவசரமாக தங்கள் வெள்ளை முட்டைகளை எடுத்துக்கொண்டு நாள் முழுவதும் அங்கும் இங்கும் விரைந்தன.
எங்கள் கிணற்றிலும் இப்போது நீர் வற்றி ஆழத்திற்கு சென்றிருந்தது. அம்மா பல இணைப்புகளாக வாளியின் கயிற்றை சேர்த்து கட்டி நீட்டித்திருந்தார். அடியாழத்தில் சென்று வாளி விழுந்த போதும் நீரை அள்ளி மேலெழுந்த போதும் அதன் சப்தம் வினோதமாக கிணற்று சுவர்களில் வெகு நேரம் எதிரொலித்தது, அது எதையோ சொல்ல விரும்புவது போல. கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தபோது ஆழத்தில் கரிய நீர் எண்ணைபோல பிசுபிசுப்புடன் அலையடித்தது. அதன் நடுவே கிணற்றின் வாய் ஒரு சிறிய வெண்வட்டமாக பிரதிபலித்தது. சிறிய கல் ஒன்றை எறிந்தால் அந்த வட்டம் பல வெண் திவலைகளாக பிரிந்து படபடத்து பின் மெல்ல ஒவ்வொன்றாக இணைந்து அமைதியானது. கிணற்றின் சுவர்களிலெல்லாம் சிறிய ஆயிரம்கால் அட்டைகள் பிண்ணிப்பினைந்திருந்தன. சில மினுமினுக்கும் கண்களுடன் மேலே வெளிச்சம் நோக்கி நெளிந்து ஊர்ந்தன.
வெயிலின் கடுமை எல்லாரது முகங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. வழக்கமாக புன்னகையில் மலர்ந்திருந்த நிஷா மாமி கூட இப்போது சற்று சோர்வுடன் காணப்பட்டார். அடிக்கடி அடுப்படியில் இருந்து “ஈஸ்வரா” என்றபடி எழுந்து வந்து வீட்டிற்கு வெளியே சேலையின் நுனியால் முகத்தில் வீசியபடி காற்று வாங்கினார். உள்ளிக்குள் ஏதோ அனலை தணிப்பது போல வாயை குவித்து காற்றை ஊதி வெளியிட்டார். நான் என் கொய்யா மரத்தின் வீட்டிலிருந்து “நிஷா மாமீ” என்று அழைத்தபோது மட்டும் புன்னகையுடன் “வானரம் மரத்தீ கேறியா” என்று கேட்டு சிரித்தார்.
விடுமுறை நாட்களில் ஊரில் ஆண்கள் பெரும்பாலும் கையில் ஒரு வெட்டு கத்தியுடன் அலைந்தனர். கூர்மையாக உரசி தீட்டி வைத்திருந்த அதற்கு விறகு முறிப்பதும் களைகளை வெட்டுவதும் தான் வேலை என்றாலும் செல்லும் வழியெங்கும் அதை சுவர்களில் உரசி, மண்ணில் கொத்தி, மரங்களின் பட்டைகளை செதுக்கி அல்லது அதில் ஓங்கி அறைந்து நிறுத்தச் செய்து என ஏதாவது செய்தபடியே தெருக்களில் நடமாடினர். கண்ணுக்கு புலப்படாத யாரையோ அறைகூவுவது போல இருந்தன அவர்களது செயல்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஓலை விழும் சத்தம் கேட்டு நான் தூங்கியெழுந்த போது வாசலில் நின்ற அந்த இடிவிழுந்த தென்னையை நான்கைந்து ஆட்களாக சேர்ந்து முறித்து கொண்டிருந்தனர். காய்ந்து நின்ற அதன் நான்கே ஓலைகளும் நீள்வாக்கில் வற்றிச்சுருங்கி காணப்பட்ட அந்த இரு தேங்காய்களும் வெட்டி சுவரோரம் இடப்பட்டிருந்தன. மேலே உயரத்தில் ஒருவர் மொட்டையாக நின்ற மரத்திற்கு சிறிது கீழே தொற்றியமர்ந்து கோடாரியால் ஓங்கி ஒங்கி வெட்டிக்கொண்டிருந்தார்.
கீழே சற்று தள்ளி சட்டையணியாமல் முடியடர்ந்த வெள்ளை மார்பும் வழுக்கை தலையுமாக, வேட்டியை மடித்து கையில் பற்றியபடி எங்கள் வீட்டுரிமையாளர் நின்றிருந்தார். வெற்றிலைக் கறை பற்களுடன் சிரித்தபடி “அஜீ மோன் எழுந்தாச்சா? கண்டில்லே எல்லாம் பீஸ் பீஸ் ஆயிட்டு அங்கனே வெட்டி முறிச்சோண்டு வரணம்” என்றார் உற்சாகமாக. மிலிட்டரியில் பணிசெய்து ஓய்வு பெற்றிருந்த அவர் எப்போதாவது தான் வீட்டுக்கு வெளியே வருவார். தெற்கு கோவில் வழியாக எங்கள் வீட்டுக்கு பின்னால் செல்லும் தென்னதோப்பு அவருடையது தான். அங்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தேங்காய் பறிக்கும்போது மட்டுமே அவரை நான் பார்த்திருக்கிறேன்.
கீழே நின்ற வேலையாட்களை அவ்வபோது காரணமேயில்லாமல் குரல் கொடுத்து ஏசியபடி அவர் நின்றார். “அவன் எந்தருடே செய்யினான்”, “பறச்சலொக்கெ மதி ஜோலி நடக்கணம்” என்று தமிழும் மலையாளமும் கலந்து அவரிடமிருந்து கட்டளைகள் பிறந்தன. என் மீது எப்போதும் அன்பாக இருந்தாலும் எனக்கு அவரை கண்டாலெ விலக்கம் தோன்றியது. என்னை அருகில் வரும்படி சைகை காட்டிவிட்டு கால்களை ஆட்டிபடி நின்றார். அடிக்கடி வேலையாட்களிடம் “ஆவிஸ்யமில்லாத்த எல்லாம் பின்னாடி பரம்புல போட்டு எரிக்கணும் மனசிலாச்சா” என்றார்.
உயரே அந்த தென்னையின் தலையுச்சியில் இருந்து இரு கயிறுகள் கட்டப்பட்டு அதை கீழே நின்ற இருவர் சாய்ந்து இழுத்தபடி நின்றனர். மேலே இருந்தவர் வெட்ட வெட்ட இவர்களும் வலுக்கூட்டி ஒரே தாளத்தில் விட்டு விட்டு இழுத்தனர். சட்டென்று ஒரு கணத்தில் மேலே மரம் முறிபடும் சத்தம் கேட்டது, ’கடக் கடக்’ என அவ்வளவு உயரத்தில் இருந்தும் துல்லியமாக. அதை என் முதுகெலும்பில் சொடுக்கியதை போல உணர்ந்தேன். கீழே என் கொய்யா மர வீட்டில் விழுந்துவிடுமோ என்று நான் அஞ்சியபடி பார்த்துநிற்க உயரத்தில் அது உடைந்தது. கயிறை இழுத்தவர்கள் சலசலத்தபடி ஓடி விலக, ஒரு சருகைப்போல அது மெல்ல சத்தமின்றி காற்றில் பறந்துவந்து பேரொலியுடன் முற்றத்து தரையில் மோதியது. இடிபோல எழுந்த அந்த சத்தத்தில் என்னையறியாமல் நான் கத்தியலறிவிட்டேன். வீட்டுரிமையாளர் கண்களை கேலியாக சுருக்கி சிரித்தப்படி “மோன் பேடிச்சோ” என்றார். அவர் முகத்தில் ஒரு குரூர மகிழ்ச்சி தென்பட்டது. தென்னையின் மண்டை விழுந்த இடம் மண்ணில் ராட்சஸ ஒரு நகம் கீறியது போல பதிந்திருக்க, அது அருகே சற்று உருண்டு சென்றிருந்தது. கைகள் வெட்டப்பட்டு ஒரு பிண்டம் எழமுடியாது கிடந்ததை போல தோன்றியது. அப்பால் நிஷா மாமி புருவங்கள் நெரிய ஏதோ வலிகொண்டது போல முகத்தை வைத்தபடி சற்று நேரம் அவர் வீட்டின் வாசலில் நின்று பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். வீட்டுரிமையாளரின் அருகே நின்ற என்னை அவர் அப்போது பார்த்ததாக காட்டிக் கொள்ளவில்லை.
முடியற்ற கரிய உடலில் வேர்வை துளிகள் துளிர்த்து வழிய அவர்கள் வேலை செய்தார்கள். அவர்களில் சற்று வயதான ஒருவர் தன் வளைந்த அரிவாளால் தென்னையின் மண்டைக்கு நடுவே கீறி வெள்ளையாக கைமுஷ்டியின் அளவு இருந்த ஒரு சிறு பகுதியை வெட்டி ஒரு ஓலைத்தொன்னையில் எடுத்து வந்து எனக்கு அளித்தார்.
“பிள்ளே, சாப்ட்டு பாரும் தேன் போல இனிக்கும்” என்றார் சிரித்தபடி. நான் அதை வாங்கி கடித்தேன். உண்மையில் கரும்பை போல இனிமையாக அதன் சாறு எழுந்து என் வாயின் ஓரங்களில் வழிந்தது. இனிப்பின் திகட்டலில் நான் அன்னாந்து வாயை உறுஞ்சி கண்மூடி தலையை உலுக்கி கொண்டேன். கண் திறந்தபோது எதிரே தூய வெண்பற்களுடன் நகைத்தபடி அவர் நின்றிருந்தார், “எப்படி? கொள்ளாமா?” என்றார் நான் பாப்புவிடம் கேட்கும் அதே பாவனையில். நான் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை. தலையை மட்டும் இடம் வலமாக ஆட்டினேன். “ஒரு மரத்துக்கு ஒண்ணுதான், வெட்டும்ப மட்டும் தான் கெடைக்கும்” என்றார் அவர். அதற்குள் வீட்டுரிமையாளர் அவரை ஏசத் துவங்க அவர் மீண்டும் சென்று வேலையில் இறங்கினார்.
அழுது கொண்டிருந்த பாப்புவை இடுப்பில் தூக்கியபடி மதியம் அம்மா வந்து சற்று நேரம் பார்த்துநின்றார். அம்மாவை கண்டதும் வீட்டுரிமையாளர் வேட்டியை தழைத்துவிட்டு கொண்டு முகமன் கூறினார். அழும் பாப்புவை சமாதானம் செய்யும் முயற்சியில் அம்மா அரைமனதாக புன்னகைத்தார். என்னை கவனமாக நிற்க வைத்துக்கொள்ளுமாறு அவரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து உள்ளே சென்றார். உள்ளிருந்து “வேணாம் சொல்லூ” என்ற பாப்புவின் வீரிடல் மட்டும் கேட்டபடி இருந்தது. எல்லா ஞாயிற்றுகிழமைகளையும் போல அப்பா தன் வாசிப்பறையில் இருந்து நகராமல் ரஷ்யாவை பற்றிய தனது நாவலை எழுதிக்கொண்டிருந்தார்.
அன்று மாலைக்குள் அவர்கள் மரத்தை பல துண்டுகளாக வெட்டி அடுக்கிவிட்டனர். கண்ணெட்டும் தொலைவு வரை அத்தனை உயரமாக எழுந்து நின்றிருந்த அந்த மரம் எப்படி கைகளால் எண்ணிவிட முடிகிற சிறு சிறு துண்டுகளாக மாறிப்போனது என்று எனக்கு புரியவில்லை. எப்படி அந்த துண்டுகளை சேர்த்து அடுக்கினாலும் மீண்டும் அந்த பழைய உயரந்த மரத்தை அடையமுடியாது என தோன்றியது. அந்தியில் வீட்டுரிமையாளர் சென்றதும் பீடி பிடித்தபடி சுற்றி அமர்ந்திருந்த அந்த வேலையாட்கள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தது போல ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.
000
வாசலில் நின்ற தென்னையை முறித்த சில நாட்களுக்கு குட்டனை காணவில்லை. மரம் முறித்த அந்த சத்தமும் சந்தடியும் அவனை விரட்டி விட்டிருக்கலாம் என்றனர். வழக்கமாக ஒன்றிரண்டு நாட்கள் இப்படி ஓடிச்சென்றாலும் மூன்றாம் நாள் நிஷா மாமியை தேடி வீட்டுக்கு வந்து விடுவான். அதுவும் பாப்புவை அவன் பார்த்துக்கொள்ள தொடங்கியதிலிருந்து அவன் வெளியில் செல்வது மிக அரிதாகத்தான். குட்டன் சென்ற சில நாட்களாகவே நிஷா மாமி மிகவும் சோர்வுடன் இருந்தார். வழக்கமாக காலையும் மாலையும் உற்சாகமாக கேட்கும் அவரது “கோழீ பா பா பா பா” என்ற அழைப்பும் இப்போது அதிகம் கேட்கவில்லை. நெடுநேரம் வாசலோரத்தில் அந்தரத்தை வெறித்துப் பார்த்து அவர் நின்றிருப்பதை கண்டேன். மரம் முறிந்து அந்த இடம் காலியாக கிடந்ததால் நான் சில நாட்களாக என் கொய்யா மர வீட்டுக்கு செல்வதை தவிர்த்தேன்.
பின் ஒருநாள் இரவு அம்மா வாசற்படியில் வைத்து இருளில் என்னை மடியில் கிடத்தி என் தலைமுடியை கோதியபடியே நெடுநேரம் அமர்ந்துவிட்டு தாழ்ந்த குரலில் சொன்னார் “அஜீ, குட்டன் இறந்து போச்சுடா”. நான் புரியாமல் அவரைப் பார்த்தேன், அவர் முகம் தெளிவாக தெரியவில்லை, ஆனால் குரலின் சிறிய அடைப்பை துல்லியமாக கேட்டேன். “அதுக்கு வயசாயிடுச்சில்ல அதான் வெளிய போனப்ப மத்த நாயெல்லாம் சேர்த்து அத கடிச்சு போட்டிருச்சுங்க… அவன நிஷா மாமா தான் எங்கேருந்தோ கண்டுபிடுச்சி கொண்டு வந்து ஓனர் வீட்டு தொழுவத்துல போட்டிருந்தாங்க. ஏதோ மருந்தெல்லாம் போட்டு பாத்தாங்க. ஆனா அது சுத்தமா சாப்பிடுறத நிறுத்திடுச்சு. ஒரு சத்தம் கூட போடல, அதுவா செத்துப்போச்சு” என்று நிறுத்தினார். இருளில் மூச்சின் சிறு நடுக்கம் விசும்பலாக ஒலித்தது. பல நாட்கள் அம்மா தான் குட்டனுக்கு உணவு வைத்திருக்கிறார்.
எனக்கு அந்த இரவின் அமைதியில் அவையெல்லாம் உண்மையாக நடக்கிறதா என்று குழப்பமாக இருந்தது. அப்படி கண்முன் திரிந்த குட்டன் சட்டென்று ஒருநாள் மறைந்து விட முடியுமா.
“நிஷா மாமி அதான் கவலையா இருக்காங்களா?” என்றேன் மடியில் படுத்தபடியே.
“ஆமா, என்கிட்ட சொல்லும்போதே அழுதுட்டாங்க. நீ இத பாப்புக்கிட்ட சொல்லக்கூடாது சரியா? அவ கேட்டா சொல்லு. குட்டன் எங்கேயோ ஓடிப்போயிட்டான், திரும்ப வந்திருவான். என்ன?”
“ம்ம்ம்”
சற்று நேர அமைதிக்கு பின், “சரி ஒன்னும் நினைச்சுக்காம போய் படுடா செல்லம். அம்மாவோட கண்ணுல்ல” என்று என்னை எழுப்பி இறுக அணைத்து முத்தமிட்டார். இருளில் அம்மாவின் உடல் ஈரமும் தங்க சங்கலியின் குளிர்ச்சியும் இதமாக நெஞ்சில் பதித்தன.
ஆனால் நாங்கள் நினைத்ததை போல பாப்புவுக்கு அது பெரிய விஷயமாக இருக்கவில்லை. குட்டன் ஓடிபோயிட்டான் என்பதை அவள் இயல்பாக ஏற்றுக்கொண்டாள். குட்டன் ஓடிப்போச்சு, காக்கா காணாம போச்சு, எலி செத்துப்போச்சு என எல்லாவற்றையும் அவள் ஒரே போல, ஒரு சிறிய ஆர்வத்துடன் கண்டாள் என தோன்றியது. அவள் உலகில் காணாமல் போன ஒவ்வொன்றுக்கும் பதில் புதிய ஒன்று தோன்றியது, செத்துப்போனவை எல்லாம் மேலும் அழகாக மீண்டும் பிறந்தன, தீர்பவை அனைத்தும் ஓயாது நிரப்பப்பட்டன.
விடுமுறை நாட்கள் முடிவுக்கு வரும்தோறும் கோடை மேலும் மேலும் அடர்த்தியானதாக தோன்றியது. தோட்டத்தில் அலைந்த போதெல்லாம் எப்போதும் தாகமாக உணர்ந்தேன். ஊருக்குள் அம்மை பரவுவதாக சொன்னதால் பாப்புவை அம்மா இப்போதெல்லாம் வெளியில் விளையாட விடுவதில்லை. மதிய வேளைகளில் நான் வாசலில் நின்ற குரோட்டன்ஸ் செடியின் கீழ் அமர்ந்துகொண்டேன், வெயில் உச்சம் பெறும்தோறும் குறுகும் அதன் நிழலின் கீழ் மேலும் மேலும் உடலை குறுக்கியபடி, தூரத்து செடிகளின் இலைகளில் கண்கள் கூச வெயில் வந்து இறங்குவதை பார்த்தபடி அங்கிருப்பேன். அருகில் என்னுடைய இளம்சிவப்பு கிரீட்டிங் கார்டும் துணை இருக்கும், அதை கொண்டு செல்லும் இடமெல்லாம் எனது சிறிய வீடாயின. மாலையானதும் வெதுவெதுப்பான மண்ணை அளாவுவது எனக்கு பிடித்தது. காய்ச்சல் கொண்ட உடலைப்போல இருந்தது அதன் வறுபட்ட வாசம். ஆடையற்று அதில் படுத்தபோது அது உடலில் ஊர்வது போல தோன்றும், ஒவ்வொரு மண் துகளும் உடலை உள்வாங்கி அணைத்து கொள்வதை போல, நரநரவென்ற அதன் இறுக்கமும் நெகிழ்வும். கைகளால் வாரிப்பற்றி அதை நெஞ்சில் இட்டுக்கொள்வேன். மூச்சின் தாளத்தில் கனமாக நின்று பின் மெல்ல உளைந்து சரியும்.
கோடையின் கடைசி நாள் நான் மீண்டும் கொய்யா மரத்தில் ஏறினேன். சருமம் போல தோன்றும் அதன் அடிமரத்தில் உடல் சேர்த்து பற்றி ஏறி என் மூன்றாவது கொப்புக்கு சென்றமர்ந்தேன். சுற்றிலும் எங்கள் தோட்டமும் நிஷா மாமியின் வீடும் ஒரே பார்வையில் தெரிந்தது. அந்த காட்சியை அதன் கம்பீரத்தை எப்படி நான் மறந்தேன்? மீண்டும் ஒரு ராஜாவை போல அன்று என்னை உணர்ந்தேன். அன்று மாலை இருள் சாய்வது வரை அங்கேயே அமர்ந்திருந்தேன்.
888
எதிர்பாராத ஒரு கணத்தில் இரவு பேரிரைச்சலுடன் மழை தொடங்கியது. நள்ளிரவில் விழித்துக்கொண்ட நான் ஓட்டுக் கூரையில் மணலை அள்ளி கொட்டுவது போல இடையிடாது ஒலித்த அதன் சத்தத்தை கேட்டு படுத்திருந்தேன். சன்னல்கள் இல்லாத எங்கள் படுக்கையறையிலிருந்து அதன் ஒலியை மட்டுமே கேட்கமுடியும். கூரையின் மடிப்புகளில் மழைநீர் பெருக்கெடுத்து சிறு அருவிகள் போல மண்ணில் குதித்து விழுவது கேட்டது. மழையின் வாசம் வெக்கையான அறையை நிறைத்து மூச்சுமுட்ட செய்தது. அம்மா அப்பா இருவரும் அப்போது நன்றாக உறங்கிவிட்டிருந்தனர். மெல்ல அவர்களை எழுப்பாமல் நடந்து சென்று வரவேற்பறை சன்னல் வழியாக முற்றத்தை எட்டிப்பார்க்க முயன்றேன். எங்கள் வீட்டு சன்னல்களின் சாரம் அகலமாக ஓராள் அமர்ந்துகொள்வதை போல அமைந்திருக்கும்.
என் உயரத்திற்கும் ஒரு அடி மேலே மேற்பாதி மட்டும் திறந்திருந்த சன்னலிலிருந்து சிறு சிறு ஊசிமுனை துளிகள் குளிர்ச்சியாக முகத்தில் தெரித்தன. உடல் புல்லரிக்க நான் கைகளை ஊன்றி சாரத்தை பற்றியேறி நின்று இருளில் மழையை எட்டிப்பார்த்தேன். முற்றத்தில் எரிந்த சிறிய மின்விளக்கொளியில் செம்பருத்தி செடிமட்டும் மழையில் நனைவது தெரிந்தது. மேலிருந்து ஒரே சீராக கனமாக பெய்திறங்கிய மழையில் அதன் கிளைகள் தாழ்ந்து படிந்திருக்க, மீளமீள அது ஆமாம் ஆமாம் என தலையசைப்பதை போலவோ அல்லது வேண்டாம் வேண்டாம் என்று மறுப்பதை போலவோ தோன்றியது. அவ்வபோது இடியில்லாமல் வெட்டிய மின்னல் ஒளியில் தோட்டம் கணம் கணமாக தோன்றி மறைந்தது. அதன் ஒவ்வொரு பாகமாக அடுத்து வரும் மின்னலை காத்திருந்து பார்த்து பார்த்து தொகுத்துக்கொண்டேன். கடைசியாக கொய்யா மரத்தை எட்டியபோது சட்டென்று ஏதோ ஒரு திடுக்கிடல். அதன் உச்சிக்கிளையில் மிசுறுகளின் கூடு மழையிலும் காற்றிலும் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தது. முகமெல்லாம் நனைந்து உடல் நடுங்க அந்த குளிர்மழையை பார்த்தபடி தனியே இரவு வெகுநேரம் நின்றிருந்தேன்.
மறுநாள் காலை விழித்தவுடன் முதல் எண்ணமாக எழுந்தது அந்த இளம்சிவப்பு கிரீட்டிங் கார்ட் தான். தேடுவதற்கு முன்பே அது எங்கோ தொலைவிட்டது என்பதை ஆழமாக உணர்ந்தேன். ஆனாலும் வீடெங்கும் அதை தேடித்தேடி சுற்றி வந்தேன். முந்தைய நாள் இரவு ஆரம்பித்த மழை அன்று காலை ஏழு மணி வரை கடுமையாக பெய்து சற்று ஓய்ந்திருந்தது, மழைக்குள்ளேயே மழையொன்று பெய்து முடிந்ததை போல. நான் எழுந்தபோது காலை ஒன்பது மணியென்றாலும் அப்போதுதான் விடிவது போல தோன்றியது. வெளியே முந்தைய இரவின் உக்கிரம் தணிந்து செடிகள் அனைத்தும் உற்சாகமாக நீராடின. தரையில் தெளிந்த நீராக கண்ணாடிபோல ஒழுக தொடங்கியிருந்தது.
ஆனால் நான் நாள் முழுக்க பதற்றமாகவே இருந்தேன். மீண்டும் மீண்டும் ஒரே இடங்களில் சென்று தேடினேன். “எங்க போயிடும் அஜீ, இங்கதான் எங்கையாவது கிடக்கும் பாத்துக்கலாம்” என்றார் அம்மா.
“இல்லம்மா, அத காணும், எங்க தேடியும் காணும்” என்று சிணுங்கியபடி நான் வீடெங்கும் சுற்றி வந்தேன்.
சிறிது நேரம் ஓய்ந்திருந்தாலும் சட்டென்று தூக்கிவாரி போட்டது போல அது நினைவிலெழ கால் போன போக்கில் கண்களை அலையவிட்டபடி நடந்தேன். பலமுறை என் கரும்பச்சை நிற சூட்கேஸை திறந்து மேல் மூடியில் ஒவ்வொரு அறையாக தேடினேன். கீழறையில் குவிந்திருந்த கப்பல்களை கைவிட்டு துழாவினேன். பின் ஒரு கட்டத்தில் மொத்தமாக அவற்றை கொட்டிக் கவிழ்த்து தேடினேன். வீட்டின் முகப்பறை முழுவதும் கப்பல்கள் இரைந்து கிடக்க இளஞ்சிவப்பு கிரீட்டிங் கார்ட் மட்டும் கிடைக்கவில்லை. அன்று காலை முதலே கதகதப்பாக இருந்த எனக்கு மாலை காய்ச்சல் முற்றியது. இரவெல்லாம் குளிரில் நடுங்கியபடி படுத்திருக்க அம்மா அவ்வபோது வெண்ணீர் காய்ச்சி தந்தபடி இருந்தார். அடுப்பின் கரிச்சுவையுடன் அந்த நீர் தொண்டையில் இதமாக இறங்க நான் மழையை கேட்டபடி படுத்துக்கிடந்தேன். இரவு கொடுங்கனவுகள் தோன்றின. காலியான ஒரு சிறிய இருட்டறைக்குள் நான் மாட்டிக்கொண்டது போல, அங்கே என்னுடன் யாரோ இருந்துக்கொண்டிருப்பது போல. அவரது பார்வையை என்மீது உணர்ந்தேன். மூச்சொலியை கூட தெளிவாக கேட்க முடிந்தது.
மறுநாளும் மழை விடாமல் தொடர்ந்தது. அம்மா இல்லாத போது அப்பா விடுப்பெடுத்து என்னருகில் இருந்து பார்த்துகொண்டார். பகலில் இடையில் விழித்துக்கொண்ட போது நான் வாசிப்பறையில் எழுதிக்கொண்டிருக்கும் அப்பாவின் அருகில் சென்று நின்றேன். அவர் திரும்பி என்னை பார்த்து “என்னடா…தூக்கம் வரலியா” என்று அணைத்துக்கொண்டார். “செரி இங்க அப்பா கூட உக்காந்துக்கோ” என்று அங்கேயே மேசை மீது அமரச்செய்தார். அப்போது அவர் எழுதிக்கொண்டிருக்கும் பகுதியை குறித்து பேசலானார்.
மாலை அம்மா வீடு வந்ததும் என்னை கொல்லைப்புறம் அழைத்து சென்று வெண்ணீரால் துணியை முழுக்கி பிழிந்து உடலெங்கும் துவட்டி விட்டார். இரண்டு நாட்களாக விடாமல் பெய்த மழை அப்போது தான் ஓய்ந்திருந்தது. கொல்லையில் பெரிய அம்மிக்கல்லின் அருகே நிறுத்தி அவர் என்னை துவட்டிக்கொண்டிருக்கையில் தொலைவில் அதை கேட்டேன். ஒரு மெல்லிய கிழிபடும் ஒலியாக.
ஆடைகளில்லாமல் நின்ற நான் அது கேட்ட திசையை நோக்கி ஓடினேன். “அம்மா கிரீட்டிங் கார்டு, கிரீட்டிங் கார்டு” என்று கத்தியபடி தோட்டத்தை சுற்றி வந்தேன். கொய்யா மரத்தின் அருகில் தான் அந்த ஓசை கேட்டது. பின்னால் ”அஜீ மழையில நனையாத” என்றது அம்மாவின் குரல். நெஞ்சு படபடக்க கால்கள் மழைநீரிலும் சேற்றிலும் வழுக்கி துவழ நான் மரத்தை சுற்றி தேடினேன். சட்டென்று அது மரத்தை ஒட்டிய நிஷா மாமி வீட்டு மதிலின் மறுபுறம் கேட்பதாக தோன்றியது. நுழைவாயில் ஏறிக்கடந்து மறுபுறம் சென்று பார்த்த போது தொலைவில் கோழிக்கூட்டின் பின்னால் சேற்றில் அதை கண்டேன். மழையில் நிறம் வெளிறி திறந்து கிடந்த அதிலிருந்து நடுக்கத்துடன் இசை எழுந்தது. நெஞ்சதிர எனக்குள் இருந்து ஒரு கேவல் எழுந்தது, பொங்கிய விழிநீர் கண்ணை மறைக்க பதறியபடி ஓடிச்சென்று அதை கையில் எடுத்தேன். அதன் குரல் மிக மிக சன்னமாக ஒலித்தது. பதற்றத்துடன் அருகில் தேடி ஒரு காய்ந்த பலா இலையை எடுத்து அதன் இடையில் சொருகி விட்டு தன்னிச்சையாக அப்பாவின் அறைநோக்கி ஓடினேன். அழுகையில் பிதற்றிய என் குரல் அப்போது எனக்கே வினோதமாக ஒலித்தது.
”என்னடா, என்ன அஜீ” என்று சேற்றுக்கால்களுடன் உள்ளே வந்த என்னை கைகளிலெடுத்து கொண்டார். அவரிடம் நான் தேம்பியபடி சொல்லி அழுதேன், “ரெண்டு நாளா மழையிலேயே இருந்திருக்குப்பா, மழையிலேயே… நனஞ்சிட்டே இருந்திருக்கு ப்பா” இடையிடையே அழுகையில் தொண்டை பிடித்துக்கொள்ள, நிறுத்தி மூச்சை உள்ளிழுத்து தொடர்ந்தேன். “பெட்டரி எல்லாம் போயிடுச்சு. இனிமே இது எங்கையும் கெடைக்காது” என்றபோது உள்ளிருந்து ஏதோ உடைந்ததை போல உடலை உலுக்கிக்கொண்டு அழுகை வெடித்தது. கண்களிலும் மூக்கிலும் நீர் வழிய நான் கைகளை முறுக்கி உதட்டை கடித்துக் கொண்டேன். அப்பா என்னை மாரில் அணைத்து “ஒன்னுல்ல, ஒன்னுல்ல, அப்பாவோட உயிருல்ல, கண்ணுல்ல, ஒன்னுல்ல” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். என் கழுத்து நரம்புகள் இழுபட்டு இழுபட்டு வலித்தன. வார்த்தைகள் இன்றி வெறும் ஒலியாக மாறிவிட்ட அழுகையில் உடல் விம்மி விம்மி அடங்கியது. ’ஒன்றும் வேண்டாம், எனக்கு இனி எதுவும் வேண்டாம்’ என அரற்றியது உள்ளம். அப்பா என்னை மார்போடு இறுக அணைத்துக்கொண்டிருந்தார்.
வெகு நேரத்திற்குப் பின் என் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக தேம்பலாகி அடங்கியது. கண்ணீர் வற்றி உலர்ந்தபின்னும் உடல் விக்கல் வந்ததை அவ்வபோது தூக்கிவாரிப் போட்டது. முகத்தில் கண்ணிரின் தடம் தோலின் மீது ஒரு படலம் போல பிடிந்திருந்தது. அப்பா என்னை மடியில் வைத்து மார்போடு சேர்த்து அணைத்து மெல்ல முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தார். மேசை மீது இருந்த கிரீட்டிங் கார்டை பார்த்தபோது எனக்கு மீண்டும் உள்ளே எதையோ பிழிவதைப் போலத் தோன்றி கண்கள் நிறைந்து தொண்டையை அடைத்தது.
உடைந்த குரலில் “அப்பா, இனிமே என்னப்பா பண்றது? பேட்டரி தீர்ந்துபோச்சுப்பா” என்றேன்.
”இனிமே ஒன்னும் பண்ணமுடியாது அஜீ. அது முடிஞ்சது முடிஞ்சிப்போச்சு, இப்போ என்ன? ம்ம்ம், அது இருந்த வரைக்கும் எவ்ளோ சந்தோஷமா இருந்த, அதானே முக்கியம்?” சற்று நேர அமைதிக்கு பின் தொடர்ந்தார், ”எவ்ளோ மூடிவச்சாலும் அதோட பேட்டரி தீர்ந்துட்டேதான் இருக்கும். அப்படி தீராத பேட்டரினு ஒன்னு உலகத்துல உண்டா? நீ சையின்ஸ் தெரிஞ்சவன் தான?”
நான் அமைதியாக இருந்தேன். அப்பா என்னை மேலும் மடியில் ஏற்றி அமரவைத்தார். பின் என் முகத்தை திருப்பி “இங்க பாரு, அப்பா உனக்கு வேற ஒரு கிரீட்டிங் கார்ட் வாங்கித்தருவேன், ஆனா நீ இந்த மாதிரி அழுதா அப்பாக்கு கஷ்டமா இருக்கும்ல? ம்ம்ம்? அப்படி எல்லாரையும் நாம கஷ்டபடுத்தலாமா? நமக்கு பிடிச்சவங்கள, நம்மள பிடிச்சவங்கள?”
நான் மெல்ல ’இல்லை’ என்று தலையாட்டினேன்.
ஆடையற்ற என் உடலை, மார்பை, கை கால்களை அவரது வெம்மையான பெரிய கைகளால் தொட்டு வருடியபடி “நீ இப்ப வளர்ந்துட்ட, பெரிய பையன் மாதிரி தான இனிமே நீ நடந்துக்கணும், அதானே அப்பாவுக்கு பெருமை?”
“ம்ம்ம்”
“இனிமே இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுவியா? இதுன்னு இல்ல வாழ்கையில எல்லாமே சின்ன விஷயம் தான்.”
“நான் அழல”
“அப்ப சிரி பாப்போம்”
நான் மெல்ல புன்னகைத்தேன். நெடுநேரம் அழுது அடங்கியிருந்த என் நெஞ்சு அப்போது லேசாக, மிதப்பது போல இருந்தது.
“சரி, போ. போய் உங்க அம்மாவ சமாதானப்படுத்து அவ பயந்திட்டிருக்க போறா, போய் ஜாலியா விளையாடு என்ன?”
நான் அப்பாவின் அறையில் இருந்து அந்த கிரீட்டிங் கார்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். கப்பல்கள் இரைந்துகிடந்த அந்த வரவேற்பறையின் நடுவில் வைத்து அதை கடைசி முறையாக பிரித்தேன். உலோக தகடுகளுக்கு இடையில் சொருகியிருந்த அந்த பலா இலையை எடுத்தபோது அது மீண்டும் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தது. நடுங்கியபடி விட்டு விட்டு அபசுவரமாக பாடிய அது சற்று நேரத்தில் ஒரே சுவரத்தில் சென்று ’கீ’ என்று ஒலித்தபடியே நீண்டது. நான் அட்டையின் மேல் தாளை விலக்கியபோது உள்ளே கண்ணாடிபோன்ற ஒரு பிளாஸ்டிக் திரை மெல்ல அதிர்ந்தபடி இருந்தது. என் சுட்டுவிரலால் மிக லேசாக அதை தொடவும் ஓசை நிலைத்தது.
888
அந்த மழைக்காலத்திலும் ஊருக்குள் வெள்ளம் வந்தது. சென்ற வருடம் போல இல்லையென்றாலும் மழை கடுமையென்று தான் சொல்ல வேண்டும். கிணறுகள் மீண்டும் பொங்கி கையால் மொள்ளும் அளவுக்கு மேலெழுந்து வந்தன. ஆனால் நான் இம்முறை என் கப்பல்களை விடவில்லை. ஒரு மாத மழைக்கு பின் தெருவும் வீடுகளும் எல்லாம் கழுவியது போல சுத்தமாக மாறின. மேல் தோல் வழண்டு சென்றது போல மென்மையான மண் குழந்தையின் சருமம் போல ஊரெங்கும் விரிந்தது. சில பெருமரங்கள் சரிந்தாலும் ஊரில் எல்லாம் நன்றாகவே இருந்தன, மிசிறுகளின் கூடுகள் கூட பத்திரமாக இருந்தன, ஊர் மக்களும் உற்சாகமாக.
அந்த வருடம் முதல் என்னை தக்கலையின் ஹிந்து வித்யாலயம் என்ற பெரிய பள்ளியில் கொண்டு சேர்த்தனர். என் பள்ளிவாழ்க்கையின் பிரச்சனைகள் அங்கும் தொடர்ந்தாலும் அங்கு அபினேஷ், அஜய் குமார், ஷர்மா என நல்ல நன்பர்களும் கிடைத்தனர்.
மேலும் சில மாதங்களிலேயே நாங்கள் பத்மநாப்புரத்தில் இருந்து நாகர்கோவிலை ஒட்டிய பார்வதிபுரத்தில் எங்கள் புதிய வீட்டில் குடிபுகப் போவதாக அப்பா சொன்னார். ஒரு ஞாயிற்றுக்கிழமை குடும்பமாக சென்று புதுவீட்டை கண்டுவந்தோம். பத்மநாபபுரத்தில் வடக்கிலும் வடகிழக்கிலும் வளைத்து நின்ற வேளிமலை அங்கேயும் சுற்றிவந்து மேற்கிலிருந்து கிழக்கு வரை சுற்றி எழுந்து நின்றது. மலைக்காற்றும், சுண்ணாம்பு வாசமும், குளிர்ந்த நிலத்தடிநீரையும் அருந்தி திரும்பி வந்தபோது எனக்குள் புதிய வீட்டைப்பற்றிய கற்பனைகள் வளரத்தொடங்கின.
சாமான்களை ஏற்றிக்கொண்டு விடைபெரும்போது முழுக்க பாப்புவை கையிலேயே வைத்திருந்த நிஷா மாமி புறப்படும் போது அவளை குனிந்து காருக்குள் இருந்த அம்மாவிடம் கையளித்துவிட்டு “போயிட்டு வா மோனே” என்று முதல் முதலாக என் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பின்னால் நிஷா அக்கா அதைப்பார்த்து வேட்கத்தோடு புன்னகைப்பது தெரிந்தது. கோட்டை மதில்களை கடந்து காரில் சென்ற போது இனி அந்த ஊரை வாழ்நாள் முழுக்க அந்நியமாகவும் அணுக்கமாகவும் ஒரு சேர உணரப்போகிறோம் என அப்போது தெரியவில்லை.
கிளம்பும் முன் என் ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்களையும் என்ன செய்வது என்று அம்மா கேட்டார்.
“பெயிண்டிங்க்ஸ் மட்டும் போதும் ம்மா, அதெல்லாம் வேண்டாம்” என்று நான் பதிலளித்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக பத்மநாபபுரம் எங்களுக்கு தொலைதூரத்து இனிய நினைவுகளாக மாறியது. தெற்கு கோவிலில் நான் அன்று ஒருமுறை கண்ட அந்த ஓவியத்தின் கண்கள் மட்டும் என் கனவுகளில் வந்தது.
முற்றும்
அஜிதன்
அஜிதன் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ என்ற நாவலை எழுதியுள்ளார்.
தமிழ் விக்கியில்
நினைவுகளை மீட்டெடுப்பதில் பெரும்பாலானவர்களுக்கு , துக்க கரமான, அல்லது புலம்பல்வாத கூறுகளும் ஏக்கங்களும் மட்டுமே மிஞ்சிவிடும். அதில் திளைத்துக்கிடப்பவர்களும் உண்டு. ஆனால் வெகு சிலருக்கே நினைவு மீட்டல் ஒரு அழகியல் கூறாக, அர்த்தபுஷ்டியான ச்ம்பவங்களாக, ஆன்மாவை ஆசுவாசப்படுத்தும் நீண்ட ஆலபனையாக அமைகிறது. அஜிதனின் இந்த படைப்பு அத்தகைய ஒன்று. மழையும், வெயிலும், மீண்டும் மழைக்காலமும் என மூன்று காலகட்டத்தின் வாழ்க்கைச்சித்திரமும். நிஷா மாமிகளால் நிறைந்து வழியும் அன்பும், பாப்புக்களின் கள்ளமின்மையும், சிஷ்யத்துவமும் ஒருங்கே அமைந்த நட்பும். அப்பாக்களின் தீவிரத்துவ தந்தைமையும், அனைத்துக்கும் மேலாக இவை அனைத்தையும் ஊடுருவிச்செல்லக்கூடிய “சுயமும்” என கச்சிதமான வார்த்தைகளில் தன் நினைவை மீட்டி பார்த்திருக்கிறார்.. நாமும் அஜீ என உணரச்செய்யும் ஆக்கம்.
வாழ்த்துக்கள் அஜி.
உறங்கலாம் எனும் முன்னர் , கொஞ்சம் வாசிக்கலாம் என்று எடுத்தேன். முழுவதும் வாசிக்க வைத்துவிட்டார் அஜிதன்.
—
அன்றெல்லாம் எனக்கு ஏராளமான கப்பல்கள் என்று ஆரம்பித்து, அன்றெல்லாம் என்பது ஆறு வயது எனத்தெரிய முகத்தில் அரும்பும் புன்முறுவலைத் தவிர்க்கமுடியவில்லை. குழந்தையாக பார்க்கும் கிணறு, மழை, வெய்யில் , கொய்யாமரம், இரு தேங்காய்கள் மட்டும் உள்ள தென்னைமரம் – விவரணைகள். நான் படித்தவரையில் தமிழில் இவ்வளவு விவரணைகளுடன் எழுதுபவர்கள் இருவரே. ஒருவர் ஜெயமோகன். இன்னொருவர் வண்ணதாசன். புதிதாக எழுதும் நீங்கள் ஓவியம் தீற்றுவதுபோல் எழுதுவது நன்றாக உள்ளது. ஊரெல்லாம் நிறைந்தோடும் நீர் எனவும், அதில் விடும் ஆயிரக்கணக்கான கப்பல்களும் என வாசிக்க , படிக்கும் வாசகனுக்கு உடம்பெல்லாம் நீர் சொட்டும் உணர்வு.
என் கொய்யாமரம் என் கொய்யாமரம் என்று உரிமையுடன் சொல்ல சொல்ல, எத்தனை கொம்புகள் இருக்கும் என கணக்குப்போட முடிகிறது. முதல் கொம்பில் நிற்கும் அந்த பாப்புவும் அழகாக இருக்கிறாள். செத்துட்டேன் என்று சொல்லி மல்லாக்கப் படுத்து ஏமாற்றும் அந்தப் பாப்பு என்ன நடந்தாலும், முற்றும் துறந்த முனிபோல் ரியாக்ஷன் இல்லாமல் இருப்பது கதைசொல்லிக்கு நேர் எதிர். ஆறு வயதில் ஆயிரம் கப்பல் வைத்திருந்தவனோ, தென்னையை வெட்டினாலும் கவலைப்படுகிறான் . இறந்தவிட்ட குட்டனை நினைத்தும் புலம்புகிறான். சூழ் நிலையை ஒரே வீட்டில் வளரும் இரு குழந்தைகள் வெவ்வேறுவிதமாக எதிர்கொள்கின்றன. இயற்கை அப்படித்தானே !
பொது வாழ்க்கையில் மழை நீர் ஆற்றில் படகு விட்டால், விரட்டும் பெற்றோர்கள் ஒரு புறம். முழு நோட்டையும் கொடுத்து படகு செய்யச் சொல்லும் இந்த அப்பாவை எல்லோருக்கும் பிடிக்கும். அந்த அருமை அப்பாவிற்கு பள்ளியில் தனது பையனை குறை சொன்னால் வெட்டும் அளவு கோபம் வராதா என்ன?
எல்லோரையும் நிஷா அக்காவை வைத்துச் சொல்வேன் என்று நிஷா மாமி எனச் சொல்வது குழந்தையாகவே பார்க்கமுடிகின்ற கதை சொல்லியை, அப்போதைக்கு அம்மாவிற்கு 28 வயது, அப்பா ரஷ்யா பற்றி நாவல் எழுதிக்கொண்டிருந்தார் சொல்வது கொஞ்சம் குழந்தைத்தனம் இல்லாமல் போகிறது. இதை நெருடல் என எடித்துக்கொள்வதா? இல்லை குழந்தையிலேயே அந்தப் புரிதலும் உள்ளது என எடுத்துக்கொள்வதா?
தேய்வழக்கில் இல்லாத குழந்தைப் பருவத்தை சொல்லும் கதை.
படகு விட்டேன் என்று சொன்னால் சாதாரணம். ஆயிரத்துமுன்னூற்றுப் பதினான்கு எனும்போதும் , ஒரு இடத்தில் சென்று மறையும் எனும்போதும் சினிமாக் காட்சியளவு விரிவடைந்துவிடுகிறது.
பம்பரம் விடுதல் பட்டாம்பூச்சி பிடிப்பது என்றெல்லாம் இல்லாமல், இட்லிபூக்களை ஒன்றாக சேர்த்து வைத்து தேன் குடிப்பது இனிமை.
முத்துலிங்கம் அனுப்பிய கீரிட்டிங் கார்டை கதைசொல்லி பாதுகாப்பாக வைத்துக்கொண்டு விளையாடுவது போல இந்தக் கதையை இனிமையான குழந்தைப் பருவத்தை மிட்டெடுக்க ஒப்பிடுக்கொள்ள வாசகன் வைத்துக்கொள்ளலாம்.
பத்மநாபபுரம் அரண்மனையை அந்தக் குழந்தை பாப்புவை கைடாக கூட்டிச் சென்று ஒருமுறை பார்க்கவேண்டும்.
Nice
பிள்ளைபருவ ஞாபக சிதறல்கள் கோர்வையாக . தாய்தந்தையை பற்றிய புரிதல் ,தங்கையின் அன்பின் ஒட்டுதல்கள் அபராமான சொல்லும் மொழிநடை நிறைய எதிர்பார்க்கிறேன் (குட்டன்)
1314 கப்பல்கள் குறு நாவலை இருமுறை வாசித்தேன். எளிய கதை என்று நம்ப வைக்கும் ஆழமான , பல அடுக்குகள் கொண்ட கதை. பஷீருக்கு சமர்ப்பணம் செய்யப் பட எல்லாத் தகுதிகளும் கொண்டது.
கூரிய ஊசியினால் மை தொட்டு எழுதும் அழகிய ஓவியம் போல் காட்சிகள் கண்முன் விரிகின்றன. ஆனால் இது இளமைக்கால நினைவுத்தொகுப்பு அல்ல. இந்தக் கதை முழுக்க ஓடுவது சாவு என்னும் கருதான்.
இதில் எத்தனை இறப்புகள் இயல்பாக ஓடிச்செல்கின்றன. ஒரு சிறிய அழுத்தம் கொடுத்திருந்தாலும் இத்தனை அழகும்,அழுத்தமும் அவற்றுக்கு வந்திருக்குமா தெரியவில்லை. பூனையின் மரணம் அவனால் நேரடியாக பார்க்கப் படுகிறது, குட்டனின் மரணம் அவன் அம்மாவால் சொல்லப்படுகிறது. தென்னை மரத்தின் இறப்பு, அது வெட்டப்படும் சித்திரம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.. (வேணாம், சொல்லூ.. பாப்புவின் குரல் அதன் தீவிரத்தை உணர்த்துகிறது.)
பாப்பு படுத்திருக்கும் மரணத்திற்கு நிகரான தருணம். சிறு குழந்தையானாலும் அந்த நடிப்பு மரணம் வழியாக அவளுக்குள் ஒரு திருப்புமுனை நிகழ்கிறது.
கதையின் மையபடிமம் கிரீட்டிங் கார்ட் . அதன் மரணம் மரணமெனும் மாபெரும் இருப்பை நினைவுறுத்தும் ஒரு துளி. சித்தார்த்தன் மரணத்தை பார்த்த முதல் தருணத்தை எண்ணிக் கொண்டேன். ம்.
கடைசியில் அந்தக்குழந்தை சிறுவனாகும் தருணம் ஒரு வரியில் சொல்லப்பட்டிருக்கிறது[ பெயிண்டிங் மட்டும் போதும்மா, கப்பல தூக்கிப் போட்டுடலாம்) கதை நெடுக அவன் பல ரூபங்களில் தரிசித்த மரணங்கள் தான் இந்த ஒரு கண புரிதலை அவனுக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது. விரிந்து கொண்டே போகும் கதை.
சிறந்த வாசிப்புக்கு நன்றி பிரேம் குமார். ஆம், இதை நினைவு குறிப்பாக அணுகுவது இதன் கலை மதிப்பை குறைக்கும்.
இதில் உள்ள சுயசரிதை தன்மை என்பது இதன் புனைவு பாவனைகளில் ஒன்று. பஷீர் அதை சிறப்பாக பயன்படுத்திய கலைஞர். தமிழில் அ. முத்துலிங்கம் சார் அவ்வாறு எழுதியவர்.
உண்மையில் பெரும்பாலான மகத்தான இலக்கிய ஆக்கங்களில் இருப்பவை முழுமையாகவே ஆசிரியருக்கு அணுக்கமாக தெரிந்த நபர்களின் பிம்பங்களாகவே இருக்கும். முழுமையாக குணசித்திரம், கதை தருணம், உடல் மொழி, உரையாடல் உட்பட எடுத்தாளப்பட்டிருக்கும். பெயரும், கால இடமும் மட்டுமே மாற்றப்பட்டிருக்கும்.
அப்படியிருக்க ஒரு ஆசிரியர் தன் பெயரையும் கதாபாத்திரங்களின் உறவு முறையையும் மாற்றாமல் புனைவுக்குள் கொண்டு வருவது ஒருவித புனைவு யுக்தி என்றே கொள்ள வேண்டும். இன்னும் சொல்ல போனால் வடிவ யுக்தி. இது “கதையல்ல” என் வாழ்க்கையில் நிகழ்ந்தது என்று சொல்லும்போது எனக்கு இதன் வடிவமற்ற வடிவத்திற்கு ஒரு வாசக கவனத்தை பிரதயேகமாக கோர முடியும். மேலும் சுதந்திரத்துடன் என்னால் படிமங்களும் தீற்றல்களுமாக கதை சொல்ல முடியும். மற்றபடி இதில் எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் என்பது உண்மையான வாசகனுக்கு ஒரு பொருட்டல்ல.
ஒரு ஆசிரியராக நான் ‘கதைக்குள்’ இது அனைத்தும் உண்மை என்றும், ‘கதைக்கு’ வெளியே இவற்றில் மிக பெரும்பகுதி கற்பனை என்றும் சொல்வேன். ஒரே நேரத்தில் அந்த புனைவு பாவனையும் முக்கியம், புனைவுத்திறனை தெரியப்படுத்தலும் முக்கியம் என்ற நகைமுறன் நிலை.😁
அஜிதன்
Paapu kuttan maraivai yetru kolthalum marainthavai ellam pudhiya Vadivel thanidam meendum varum enbathu oru vitha thirapu tharisanam pola amainthathu . Athodu greeting card tholainthathum than priyamana Nisha akkavin veetuk paranthu sendra ajiyin mananilai pala nyabagangalai kilarugirathu. Athan thodarchiyaga ajikum appavukum ana urayadal unmaiyagave ennai poramai kola seitha nodigal. Kuttan patriya ella micro varnanaigalum arputham.
Nan avaaludan ethir nookum திரைப்பட இயக்குனர் அஜிதனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ❤️
இக்குறு நாவலை படித்ததும் முதலில் மனதில் பட்டது ” loss of innocence”
ஆயிரத்தி சொச்சக் கப்பலுக்கு அதிபதி, எப்படி கடைசியில் கப்பல்களை கை விட்டுவிட்டு வெறும் சித்திரதாள் போதும் என்று கிளம்புகிறார் என்பதில் முடிகிறது. குழந்தைப் பருவம் வேறு குழந்தைத் தன்மை வேறு என்று வெவ்வேறு புற பருவங்களை வைத்து தீட்டுகிறார்.
இதை படிப்பவர்கள் எல்லோரும் ( கிட்டத்தட்ட) சிறு புன்னகையுடன், இதேதான் நானும் இதே தான் பண்ணினேன் அப்படிங்கிற ஒரு எண்ணத்திலே படித்திருப்பார்கள்.
மிக அழகான விபரனைகள், காட்சிகளை நம் கண் முன்னே விரிக்கின்றன. உலகில் மற்ற எதை இழந்தாலும் நாம் திரும்ப பெற்றுவிடலாம் ( வேறு வடிவத்தில்) ஆனால் குழந்தைத் தன்மை இழப்பது என்பது திரும்பவும் அடைய முடியாத ஒன்று.
பஷீருக்கு தகுந்த சமர்ப்பணம் செய்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
புதிய வாசகர் சந்திப்புகளில் அடிக்கடி எடுத்துரைக்கப்படும் ஒன்று உண்டு. அது associative fallacy என்பது. உண்மையில் ஒரு படைப்பை நாம் பலவேறு இணைப்புகள் வழியாக தான் தொடர்புபடுத்தி உணர்வேற்றம் செய்து அனுபவம் ஆக்கிக்கொள்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் நம் ஆழ்மனதில் நிகழும். கதை வாசித்து முடித்த பின்னர் சில சமயம் நம் நினைவில் எழும். “ஒஹ் இவர் அவரை போல் அல்லவா இருக்கிறார், இது அந்த நிகழ்வே அல்லவா” என. அதில் பிழையில்லை. ஆழ்மன தொடற்புறுத்தல் மிகவும் அவசியமும் கூட. ஆனால் படைப்பை வாசிக்கும் போது இடையிடும் நினைவு தொடற்புறுத்தல் வாசிப்பிற்கு தடையே, அதிலும் கதையின் மைய களத்தில் இருந்து விலகும் தொடர்புபடுத்தல்கள் கூடுதல் பிழை.
இவை சில வகை படைப்புகளுக்கே அதிகமாக நிகழ்கின்றன, ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்து, குறிப்பிட்ட தொழிற்களம் சார்ந்து எழுதப்படும் படைப்புக்கு எப்போதும் அதனுடன் தொடர்புடையவர்கள் வாசிக்கும் போது இது நடக்கிறது. ஆனால் குழந்தைபருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் போன்ற மேலும் பொதுவான காலகட்டம் ஒன்றை எடுத்துக்கொள்ளும் போது அது பலருக்கும் இவ்வகை தொடற்புறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் அக்காலக்கட்டதுடன் நாம் ஒருவகை இனிமையை ஏற்றிவைத்திருப்போம். அது ஒருவகையில் மெல்லுணர்ச்சி சார்ந்தது. இலக்கியம் மெல்லுணர்ச்சிகளுக்கு எதிராக செயல்படுவது. உதாரணமாக இந்த கதையில் பல இடங்களில் குழந்தை பருவத்தின் தனிமையுணர்வும், சலிப்பும், மர்மமும், அச்சமும், அதீத பற்றும் விழைவும் பேசப்படுகிறது. அதுவே கதைக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. ஆகவே குழந்தை பருவம் என்றதும் நாம் அதன் வழியாக செல்லும் இனிமைநினைவுகள் இந்த அடுக்குகளை ஆழமாக உணர்வதே தடுத்துவிடும். அதே நேரம் உண்மையில் இதில் பேசப்பட்டு இருக்கும் உணர்ச்சிகள் (சலிப்பு, இழப்புணர்வு, தனிமை) இவை எல்லாரது குழந்தை பருவத்திலும் உணர்ந்திருப்போம். மிகவும் குறிப்பிட்ட சில விஷயங்கள் கூட மிக மானுட பொதுவானது. உதாரணமாக; ஏன் குழந்தைகள் இறந்ததை போல நடித்து பார்ப்பதை விரும்புகின்றன? இந்த அனுபவம் சிறு வயது ரமணரின் வாழ்க்கையில் கூட ஒரு முக்கியமான நிகழ்வு.
இவை போன்ற தருணங்களே படைப்பின் மையம். மற்றபடி நாம் ஏற்றிவைத்திருக்கும் இனிமை உணர்வு மேலோட்டமானதே. ஒரு கடந்த காலத்தின் துக்கங்கள் மறைந்து இனிமைகள் நினைவில் நிற்பதே வாழ்க்கையின் மாயைகளில் ஒன்று. அதுவே நம்மை ஒரு விதத்தில் நம்பிக்கையுடன் வாழச்செய்கிறது. ஆனால் எல்லா பருவத்துக்கும் அதற்கான அழுத்தங்களும் உச்ச உணர்ச்சிநிலைகளும் உண்டு. பேருந்துகளில் தெருக்களில் கதறி அழும் குழந்தைகளை பாருங்கள், அவையும் வளர்ந்த பின் அதை இனிய காலமாகவே நினைவு கொள்ளும். நாம் பின் திரும்பி பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா கடந்த காலகட்டத்தையும் இப்படி பார்க்கலாம். முதலில் வேலைக்கு சேர்ந்த காலம், மணம் முடித்த காலம், குழந்தைகள் பிறந்த காலம் என அசாத்தியமான துக்கம் நிகழாத எல்லோரும் கடந்த காலத்தை இனிமையேற்றி வைத்திருப்போம்.
ஆனால் நான் என் இப்போது இந்த காலத்தை போல நிறைவாக எப்போதும் இருந்ததில்லை, இந்த சுதந்திரமும், இந்த அறிதல்களும் முன்னர் வாய்த்ததில்லை. ஆயினும் குழந்தை பருவம் ஒரு சிறந்த பருவமே அதன் எளிமையில். அதனுள் வாழ்க்கையின் பலவித உணர்ச்சிகளை வைத்து பார்க்கும்போது அவ்வுணர்ச்சிகளுக்கு புதிய முகம் கிடைக்கிறது. இறப்பு, பிரிவு, ஏக்கம், மகிழ்ச்சி, வன்முறை என எல்லாம் புதிய பரிமாணம் கொள்கிறது. அதற்குள் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க செய்யும் படைப்பாகவே இதை உத்தேசித்தேன்.
கோட்டை சூழ்ந்த பத்மநாபபுரம் விட்டு அஜி வெளிவந்து பார்வதிபுரத்தை கண்டபோது அங்கும் அவனை சூழ்ந்து வளைத்து நின்றது இன்னும் சற்று பெரிய வேளிமலை.
அஜிதன்
பிகு: இந்த பதில் மீனாட்சி அவர்களின் comment இற்கானது அல்ல. பொதுவாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது. நன்றி
பள்ளியில் மந்த புத்திக்காரன் என முத்திரை குத்தப்பட்ட அஜிதனுக்கு தினமும் ஒரே மாதிரியான பாடம், டீச்சர், கோரசாக பாடப்படும் வாழ்த்து பாடல் என இயந்திரத்தனமாக சுழலும் வகுப்பில் இருந்து கற்றுக்கொள்ள அவனுக்கு ஒன்றுமே இருப்பதில்லை. கிடைக்கும் நேரமெல்லாம் இயற்கையுடன் சென்றுவிடுகிறான். அவன் உலகில் இலவம் மரங்கள் தன்னை மேல்நோக்கி உதிர்த்துக் கொள்கின்றன, யானைக்காது செடிகள் மழையில் நடனமிடுகின்றன, காகிதங்கள் படகென மாறி நீந்துக்கின்றன, அந்த சிறுவனின் கண்ணில் படும் ஒவ்வொரு மலரும் செடியும் பொருட்களும் தனது புதிய பெயரை தெரிந்துக் கொண்டு ‘ஆமாம் ல…’ என பூரித்து அந்த பெயரை தங்களுக்குள்ளே ஒருமுறை சொல்லிப் பார்த்து சிரிக்கின்றன.
அந்த சிறுவனின் கண்ணில் இனிமை இனிமையென விரியும் இயற்கை தனக்குள் இருக்கும் மர்மத்தையும் வெளிப்படுத்த தவறுவதில்லை. தன் வீட்டின் பரண் மேல் ஏற போடப்பட்டிருக்கும் அந்த இருண்ட படியை ஒருமுறை கூட அவனால் அச்சமின்றி கடக்க முடிவதில்லை. வீட்டருகே இருந்தும் அவன் அம்மாவாள் ஒருபோதும் கூட்டி பெருக்கப்படாத யக்ஷி கோவில் அந்த யக்ஷியின் கண்கள் அவனுக்கு மர்மமாகவும் பயத்தையும் தருகிறது. அவன் மழை வெள்ளத்தில் விட்ட காகித கப்பல்கள் கோவில் மூலையில் செல்லறித்து கிடப்பதை பார்க்கிறான்.
அதுவரை ஒவ்வொன்றும் எங்கோ சென்று மறைவதாக நினைத்திருந்த அவனுக்கு அந்த காட்சி வேறொன்றாக புலப்படுகிறது.
பெரு மழைக்கு பின் பசுமையை கொடுத்த இயற்கை கோடைக்காலத்தில் அனைத்தையும் தனக்குள்ளே இழுத்துக் கொள்கிறது. (பெருமாள் குளம் வற்றியதும் தோன்றும் விஷ்ணு, விஷ்ணுபுரம் நாவலின் பிரளயம் உண்டாக்கிய விஷ்ணுவின் mini version). ஊற்றெடுத்து பொங்கிய அவன் வீட்டு கிணறுகூட கோடையில் வற்றி வாய்பிளந்து எதற்காகவோ காத்துக் கிடக்கிறது.
குட்டனின் மரணத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தன் தங்கையை போல் அவள் நிகழ்த்தும் போலி மரணத்தை கண்டு அவன் பதற்றம் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.
இட்லி பூவை கொத்துக் கொத்தாக பறித்து சிறுதுளி தேனை இன்னும் இன்னுமென தேடி பருகியவனுக்கு வெட்டப்பட்ட தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் இனிப்பு ஒருவகை திகைப்பையே அளிக்கிறது. அந்த இனிப்பை அவன் கையில் கொடுத்தவர் “ஒரு மரத்துக்கு ஒண்ணுதான், வெட்டும்ப மட்டும் தான் கெடைக்கும்” என்று சொல்லும் வார்த்தை மரணத்தின் மீதான பார்வையையே மாற்றிவிடுகிறது. ஆனால் அதை அந்த கதை சொல்லி தனது சொல்பேச்சி கேட்கும் தனது பாதுகாப்பில் இருக்கும் கிரீட்டிங் கார்டை தொலைத்து நிர்வானமாக அலைந்த பின்னரே உணர்ந்துக் கொள்ள நேர்கிறது.
முதல் முறை வெள்ளம் வடிந்த பின் சேற்று தரையில் திட்டு திட்டான நீரின் பாதை கிழவியின் சருமம் போல் தெரிந்த அவனுக்கு அந்த கண்டடைதலின் பின் “ஒரு மாத மழைக்கு பின் தெருவும் வீடுகளும் எல்லாம் கழுவியது போல சுத்தமாக மாறின. மேல் தோல் வழண்டு சென்றது போல மென்மையான மண் குழந்தையின் சருமம் போல ஊரெங்கும் விரிந்தது.” என்பதாக மாறிவிடுகிறது. தான் உருவாக்கிய ஆயிரத்தி முன்னூற்றிப் பதினான்கு கப்பல்களையும் விட்டுவிட்டு பெயிண்டிங்க்ஸ் மட்டும் போதும் எனும் மனநிலைக்கு பக்குவப்படுத்தியிருக்கிறது.
வாழ்வையும் மரணத்தையும் விசாரணை செய்யும் இந்த கதை யானைக்காது செடிகள் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த மழைநீர் நிறைந்துவிட்ட பிறகு வளைந்து கீழே இருக்கும் இலைகளுக்கு கையளிப்பதை போன்ற நடனம் தான் இந்த வாழ்க்கை என்பதாக உணர்த்துகிறது.
குறைந்த வார்த்தைகளில் ஒரு கட்சியை கண்முன் கொண்டுவந்து விடுகிறீர்கள் அஜி. மொத்த கதையும் திரைப்படம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது 😁. Terrence Malickன் டச் 😉❤️
கதையில் வரும் பாப்பு, நிஷாமா, குட்டன் ஆகியவர்களை பற்றி பேச நிறைய இருக்கிறது. நீளம் கருதி எழுத முடியவில்லை. நேரில் நிச்சயம் பேச வேண்டும்.
முதிர்ந்த எழுத்துக்களில் இளமை நினைவுகள். மொத்த குடும்பத்துக்குமான தன் வரலாறு. அருமை. வாழ்த்துக்கள்.
Super me also remember d my childwood.congrats
”எவ்ளோ மூடிவச்சாலும் அதோட பேட்டரி தீர்ந்துட்டேதான் இருக்கும்” –
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்
அன்புள்ள அஜிதன், முதலில் வாழ்த்துக்கள். மிகவும் சுவாரசியமாக இருந்தது. நான் உங்கள் அப்பாவின் ஆக்கங்களின் நெடுநாள் வாசகி. என் வாழ்த்து மனமார்ந்த ஒன்று என தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ஏன் என்றால் எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. அரசியல் வாதியின் மகன் அரசியல் வாதியாகிறான் அவன் அப்பாவின் செல்வாக்கினால் ,, நடிகனின் மகனுக்கோ மகளுக்கோ சினிமா வாய்ப்பு கிடைக்கிறது அவர்களின் பெற்றோரால். அவர்களுக்கு அந்த துறையில் உள்ளே போவது எளிது. மற்றவர்களுக்கு கொஞ்சம் போராட்டம் அதிகம் இருக்கும் என்று நினைப்பேன்,
உங்களைப் பற்றியும் முதலில் அந்த எண்ணமே இருந்தது. கண்டிப்பாக உங்கள் அப்பாவினால் சில சுலபமாக கிடைத்திருக்கலாம். ஆனால் எழுத்தாக்கம் என்பது சரஸ்வதியின் அருள். அது உங்களுக்கும் உங்கள் அப்பாவைப் போல் அருள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது உங்கள் கதையை படித்த போது.
மேலும் கதை சொல்லிகள் வாசகர்களுக்கு ஒரு அனுபவத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அது வாசகரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அது ஒரு உணர்வு பூர்வமான அநுபவம். சுகம் தரக் கூடியது. உங்கள் க தை எனக்கு அப்படி இருந்தது.
உங்கள் அப்பாவின் வலைதளத்தில் ரம்யா எழுதியிருந்த மதுமஞ்சைரியை பட்றிய பதிவும் உணர்வு பூர்வமானது. ஒரு நல்ல ஆக்கதை படிக்கும் போது ஒரு நிறைவு ஏற்படும். அது கிடைத்தது உங்கள் கதையை படித்த போது.
அன்பும் வாழ்த்துகளும்
மாலா
It is a superb work, Ajithan. You have a natural gift for creating nostalgic feelings. Several things in the story were relatable, from thundering rains on the roof to water with a charcoal smell and greeting card collection. I felt like reliving my childhood days again. Death and change flow seamlessly in the narration. After two paragraphs, it isn’t you but we readers reliving our childhood.
Style of writing is almost similar to J sir. Nice narration with seamless flow. Keep going. Best wishes