/

தேவதச்சன் கவிதைகள்

கீறல் விழுந்த மேஜை

தெருமுனையில்

பூ விற்கும்

பூக்கார மூதாட்டி

சிலநாளாய்

அங்கு இல்லை

அவள் அமர்ந்திருக்கும்

உடைந்த நாற்காலியும்

கீறல் விழுந்த நீலநிறமேஜையும்

வர்ணம் இழந்த ப்ளாஸ்டிக் வாளியும்

அங்கு இல்லை.

இனி

எங்கு போய் வாங்குவேன்

நிரந்தரத்தின்

மலர்ச்சரத்தை

நான் ஒரு முட்டாளு

என்னைப்

பார்த்து

முட்டாள் முட்டாள்

என்கின்றன,  காலையில்

மாற்றி வைக்கப்பட்ட

சாலைகள்.

என்னைப் பார்த்து முட்டாளே

முட்டாளே

என்று  நகைக்கின்றன

நள்ளிரவில்  மாற்றி எழுதப்பட்ட

சட்டங்கள்

என்னைப் பார்த்து

முட்டாள்டா நீ என்கிறது

ஓட்டுப்பெட்டி

மெல்லிய இசையோடு

என்னைப் பார்த்து முட்டாளு

முட்டாளு முட்டாளு  என்று

முணுமுணுக்கின்றன விளம்பரங்கள்

முட்டாள்தனங்களின்

மூட்டையைச் சுமந்தபடி

சாலையோரம் 

நடந்துவருகிறேன்

ஒரு தோப்பினைத் தாண்டுகையில்

என் தோளில் வந்தமர்கிறது

ஒரு கருநிற வண்டு

அதை நான்  தட்டிவிடவில்லை

அதாவது  சற்றுநேரம்

என்கூட இருக்கட்டும்

என்  பல்லிகள்

சுவரில்

போட்டோக்களுக்குமேல்

ட்யூப்லைட் அருகில்

எட்டிப் பார்க்கும்

பல்லியே

சற்றுநேரம்

ஒளிந்து கொள்ளேன்

வீட்டிற்கு

விருந்தாளிகள் வருகிறார்கள்

சுமை

ஒளியே

யுகத்தின் சுமையற்று

எப்படி

லேசாக

எளிதாக இருக்கிறாய்.

உன்னைத் தொட்டபடி

கூட

யார்

இருக்கிறார்கள்

மயிலிறகு

நானும்

சின்னஞ்

சிறுவயதில்

மயிலிறகை

புத்தகத்திற்கு

நடுவே வைத்துக்

காத்திருந்தேன்

எவ்வளவு கனமாய் இருக்கிறது

முதுமையின்

மயிலிறகு

தேவதச்சன்

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி கவிஞர்களில் ஒருவர்.  1970களில் 'கசடதபற’ என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். ஏறத்தாழ அரை நூற்றாண்டாக கவிதைகள் எழுதி வருகிறார். "அவரவர் கை மணல்", "அத்துவான வேளை", "மர்மநபர்" உள்ளிட்ட எட்டு கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.